About Me

2020/09/19

காற்றின் புழுக்கம்

காற்றுச் சிறகினில் துளையிட்டதோ இயற்கை

தணலின் கலவைக்குள் முணங்குகின்றதே மூச்சும்

மனப் பெருவெளியில் வீசுகின்ற தடுமாற்றத்தில்

சினம் கொஞ்சம் கலக்கிறது அமைதிக்குள்


புலன்களின் வெம்மைக்குள் உரிகின்ற சுகத்தின்

அனல் வாடை ஆகாயத்தையும் துளைக்கிறதே

அசைவில்லாத மரங்களின் பயத்தின் வீரியங்கள்

அலைகின்றது காற்றின் அதிர்வுகளில் ஒளிந்து


காற்றின் புழுக்கத்தில் தொலைக்கின்ற இதத்தை

தேடுகின்ற பயணத்தில் வெந்நீர்க் குளியல்

அசைவற்ற காற்றுக்குள் ஆசையற்ற கனவுகள்

இசைவில்லாத வாழ்க்கையும் ஏனோதானோ


பிரகாசமான இயற்கைக்குள் பின்னலிடும் அமைதியை

பிடுங்கிய எறிகின்றதோ காற்றின் விரல்கள்

பசியின் குமுறலைப் பிடுங்கி யெறியாத

பரிதவிப்பில் தடுமாறுகின்றதோ காற்றின் அணுக்கள்


பெருஞ் சத்தத்தை உமிழ்கின்ற காற்றில்;

அரும்புகின்ற வியர்வையில் வெம்மையும் கரைந்திடுமோ



காற்றின் புழுக்கம்
---------------------------------

காற்றுச் சிறகில் துளையிட்டதோ இயற்கை/
வெற்று வெளிச் சிறைக்குள் பசுமை/
தணலின் கலவைக்குள் முணங்குகின்றதே மூச்சும்/
புலன்கள் அனலுக்குள் கரைக்கிறதே சுகத்தை/
புழுக்கம் தீர்ந்திட புவியைக் காத்திடுவோம்/

ஜன்ஸி கபூர்- 2020.09.19


துணைக்காகக் காத்திரு

இருண்ட வாழ்வும் ஒளிர்ந்திட வேண்டும்

வெறுமை மனதுக்குள் உறவே இன்பம்

உன்னையே நேசிக்கும் துணைக்காகக் காத்திரு

தனிமையின் ஏக்கமே சீக்கிரம் தணியுமே

இனிய எதிர்காலம் பெற்றிடுவாய் வரமாக


ஜன்ஸி கபூர்  




முயற்சியின் வெற்றி

 

 பழமொழி - எறும்பூரக் கல்லும் தேயும்

----------------------------------------------------------- 

துல்லிய கண்கள் எண்ணியதைச் செய்யும்/

துலங்கும் சுறுசுறுப்பு இலக்கினை நோக்கும்/


வலிதான கல்லும் பலம் குன்றுமே/

நுண்ணிய எறும்பின் முயற்சியும் வெல்லுமே/

   

ஒற்றுமை இறுக்கத்தில் ஒழியும் தொல்லையே/

கற்கலாம் பாடங்கள் வாழ்வின் வெற்றிக்கே/


ஜன்ஸி கபூர் - 19.09.20





ஹைக்கூ

 இருண்ட வானுக்கு/

ஓளி பரப்புகின்றது மின்னல்/

விழுகின்றது நீர்வீழ்ச்சி/ 


ஜன்ஸி கபூர் - 19.09.2020





குழந்தை தொழிலாளி முறை



அரை வயிறு தினமும் நனைத்திட/

அனலுக்குள் வீழ்கின்றதே குழந்தை மனதும்/

அறியாத எதிர்காலமும் ஏழ்மைச் சுவட்டினில்/

அந்தரிக்கின்றதே தினமும் திசை யறியாமலே/ 


மொட்டின்  வாசத்தில் வறுமைக் கோஷம்/

மெல்லப் பிழிகின்றதே பசியை ஆக்ரோஷத்தில்/

உள்ளத் துயர் உழைப்புடன் இசைகையில்/

உடைகின்றதே வாழ்க்கைக்குள் கண்ணீர்த் துளிகள்/


கல்வி கற்றிடும் வயதோ சுமைக்குள்/

அல்லல் பூத்திடும் அக்கினிக்குள் சிறகுகள்/ 

துள்ளி யெழுகின்ற பள்ளிப் பருவமும்/

தூணாகிக் காக்கின்றதே குடும்பத்தின் வாழ்வை/


தனமும் தேடுகையில் தளர்கின்றதே தேகமும்/

தினமும் உழைக்கையில் வீழ்கின்றதே சோர்வுக்குள்/

சிறுவர் உரிமையை அனுபவிக்காத வலிக்குள்/

சிந்துகின்றன இரணத்தை செந்நிற இரேகைகளே/


ஜன்ஸி கபூர்  








கண்ணீர்

 


கவலையின் வலி/

கண்ணீரில் கரைகின்றதே/

வஞ்சியரின் நெஞ்சத்து அழுகை/

கொஞ்சம் அழகுதான்/


ஜன்ஸி கபூர்  





வழி கூறும் பட்டாம்பூச்சி

 


அசைகின்ற காற்றில் தடுமாறுகின்ற மலர்களை

அனுதாபத்துடன் பார்க்கின்றேன் இயற்கைக்குள் இசையாவிட்டால்

துடிதுடித்து வீழுமே இதழ்களும் மெல்ல

தரையைத் தொட்ட சிறகுகளாகப் பறந்திடுமே


மலரின் அமைதி பற்றிக் கவலைப்படாத

பட்டாம்பூச்சிகளை இரசித்துப் பார்க்கின்றேன் நானும்

தன் படபடப்பால் மலருக்குள் துடிப்பேற்றும்

தேன் உண்ணும் தீவிரவாதத்திலும் வியக்கின்றேன்


வானவில்லும் உடைந்து பறக்கின்றதோ தரையில்

வனப்பான சிறு உயிரின் துடிப்பில்

மனதும் ஒன்றித்துப் போகின்றதே  அடிக்கடி

மகிழ்வின் உச்சத்தில் உறைந்து போகின்றேன்


வாசத்தை வளியில் பிழிந்தூற்றி வனப்புடனே

பூத்திருக்கின்ற மலர்களை நோக்குகின்றேன் புளாங்கிதத்தில்

காத்திருக்கின்றதோ தவிப்புடனே அமைதியும் அலைய

காதலில் படபடக்கின்ற பட்டாம்பூச்சிக்கான அழைப்பிது

அறிந்ததால் ஏந்தினேன் அதனசைவை எனக்குள்


தன் ஊசித்துளை உறிஞ்சியால் தினமும்

ஊனம் ஏற்றாத மென்னிதழ்களைக் கசக்காத

உயர்ந்த ஒழுக்கத்தினை எங்கு கற்றதோ

உராய்ந்து மகரந்தம் அள்ளும் பணியும்

உயிரோடும் இசைகின்ற மேலான தாய்மைதானே

உருவாகின்ற ஒவ்வொரு பிறப்பிற்கும் வழிகாட்டும்

உத்தம குணம் கண்டு வியக்கின்றேன்.


உறிஞ்சிய தேனைக் காற்றும் உலர்த்தவில்லை

வருத்தத்தில் இதழ்கள் சிவக்கவும் இல்லை

அரு உயிர் கடத்திடும் பணிக்காக

விருப்பும் கொண்டதோ சிறு இதழ்களசைத்து

மறுப்பில்லாத அமைதிக்குள் அலங்கார மலர்களும் 

மயக்கத்தின் தித்திப்பில் பட்டாம்பூச்சியும் சூழ்கின்றதே


உருக்களில் பல வண்ணங்கள் ஏந்தி

உற்சாகமாகப் பறக்கின்ற பட்டுடலைத் தொட்டுவிட

காற்றையும் துரத்துகின்ற சிறுவர்களின் மனதாக

உருமாறுகின்றேன் நானும் பட்டாம்பூச்சியை தொட்டுவிட


விண் நோக்கி நீண்டிருக்கும் பூவுக்குள்

இன்பம் துளைக்குதோ பட்டாம் பூச்சியும்

மலரைப் பற்றிய சிந்தனை இல்லாக்

காமத்தின் சூத்திரம் இதுவாக இருக்கலாம்

ஒவ்வொரு பூக்களாக நுகர்ந்திடும் சேர்க்கைக்குள்

கொஞ்சம் கற்பினையும் கற்றுக் கொடுத்திருக்கலாம்


அமைதியான மலர்களுக்குள் பரபரப்பை ஊற்றுகின்ற

அழகான பட்டாம்பூச்சியின் சுறுசுறுப்பும் ஈர்க்கின்றது 

நானும் அந்த ரசிப்பினில் உறைகின்றேன்

நானிலத்தின் உயிர்ப்பிற்கும் கருதானே இவ்வுருவும்


குவிந்த இதழ்களின் விரல் நீட்டத்தில்

குதூகலகமாகப் பற்றுகின்ற பட்டாம்பூச்சியின் துடிப்புக்குள்

கலக்கின்றதோ உற்சாகமும் விடியலைத் துடைத்தவாறு

விரைவினைக் கற்றுக் கொள்ளும் நேரமிது


பட்டாம்பூச்சியின் பக்குவ முட்டைக்குள் நெளிகின்ற

முட்களைக் கொண்ட கம்பளிப்பூச்சியை விரும்புவாரோ

தொடுகையில் தெளிக்கின்ற விடத்தினை வெறுக்கின்றோம்

தீயதினைத் துரத்திடும் வேட்கையில் ஒதுங்கியே

நசுக்கிக் கொல்கின்றோம் பறந்திட முன்னரே

தீயோராகி துன்பத்தினை நுகர்கின்றதே பாவம்


ஆனாலும் பட்டாம்பூச்சியாக துளிர்க்கையில் துள்ளும்

மனதால் அள்ளுகின்றோம் அழகினை ஆசையாக

வெறுப்பும் விருப்பும் வாழ்வின் பக்கங்களாய்

வாழ்கின்றதே நம் எதிரில் பூச்சியாக

                                                                                                                                                                            ஜன்ஸி கபூர் - 18.09.2020


 
Kesavadhas
ஜன்ஸி கபூர் இமைத்தால் ஏதாவது வரி படிக்காமல் விட்டுவிடுமோ எனப் பயந்து பயந்து விழி இமைக்காது படிக்க வைக்கும் அழகான வரிகள்!
இஃது புகழ்ச்சி அல்ல!
அசையும் காற்றில் தடுமாறும் மலர்கள்
இயறகைக்கு இசையாது இழியும் இதழ்கள்
தரையைத் தொடும் மலரின் சிறகுகள்
தேன் உண்ணும் தீவிரவாதம்
வானவில் உடைந்து பறக்கிறதோ தரையில்-
இந்த நான்கு சொற்கள் போதும்!
இஃது கவிதையெனச் சான்றிட!
வாசத்தை வளியில் பிழிந்தூற்றி வனப்புடனே பூத்திருக்கும் மலர்கள்...
இங்கு வரை வீசுகிறது வாசம்!
அமைதியும் அலைய காதலில் படபடக்கின்ற பட்டாம்பூச்சிக்கான அழைப்பு!
அதனசைவை என்னுள் ஏந்தினேன்!
கவிஞருக்கே சாத்தியம்!
ஊனம் ஏற்றாத ஊசித்துளை உறிஞ்சி
மென்னிதழ்கள் கசங்க வில்லை!
உராய்விலும் காயத்தில் காயமில்லை!
காற்றுலர்த்தாத தேன்
மறுப்பில்லாத அமைதி
மயக்கத்தின் தித்திப்பு
சிறுவனாக மாறுகிறது மனம் பட்டுடல் தொட்டிட!
இது எவ்வகையினும் துன்பம் தராத காமசூத்திரம்!
வாத்ஸாயாயனர் இதைக் கண்டுதான் சூத்திரம் எழுதினாரோ?
நுகரும் சேர்க்கையில் கொஞ்சம் கற்பினையும் கற்றிருக்கலாம்
இந்த பட்டாம்பூச்சிகள்!
அமைதியான மலருக்குள் சுரந்த தேனை உறிஞ்சிக் கறந்து பரபரப்பை ஊற்றுகிறது பட்டாம்பூச்சி!
ரசிப்பில் உறைந்தேன்!
நானும்!
பட்டாம்பூச்சியின் பக்குவ முட்டைக்குள் நெளியும் முட்களுள்ள கமபளிப்பூச்சி!
தெளிப்பு விடம்!
தீயதை வெறுத்து துரத்துகிறோம்!
பட்டாம்பூச்சியாய் துளிர்க்கையில் அள்ளுகிறோம் ஆசையில்!
தலைப்பிற்கு முழுமையாக நியாயம் சொன்ன கவிதை!
வாழ்த்துகள்!




2020/09/18

மழைத் தோரணங்கள்

 மழைத் தோரணங்கள் அழகின் ஆபரணங்கள்;

தவழுதே தரணிப் பந்தலின் அலங்காரங்களாய்

பருகிடும் விழிகளில் எழிலின் கலவை

பரவசத் துடிப்பினில் ஈரத்தின் சாயல்

இன்ப ரசிப்பினில் களிக்கின்ற விரல்களும்

இதமாக அசையட்டுமே இங்கு கவியாத்திட

காத்திருக்கின்றோம் உங்கள் கற்பனைக்குள் ஊற்றெடுக்கின்ற

அனுபவங்களையும் சுவைத்திடவே 

வாருங்கள் கவியுறவுகளே கவியெழுதலாம் அழகாக

18.09.2020




அன்பின் ஆளுகை

 

மாற்றம் செய்தால் பழமைக்குள் புதுமையே/

ஏற்ற வாழ்வுக்குள் சுற்றிடுமே நம்முலகும்/

சீற்றம் காணாத இயற்கையைக் காத்திடவே/

சுற்றத்தின் கரங்களை பற்றுவோம் வலுவோடு/

ஆற்றலுடன் பிணைந்த அன்பின் ஆளுகையால்/

அவனிக்குள் நாமும் சாதனைகளை நிகழ்த்தலாமே/


ஜன்ஸி கபூர்  





2020/09/17

என்னவளே

 

ஏந்துகின்றேன் உனையே எந்தன் ஆசைக்குள்ளே/

ஏக்கங்கள் வெடிக்கின்றதே உனையே காண்கையிலே/

ஏந்திழை உனையே உயிருக்குள் உருக்குகையில்/

எனையும் தொடுகின்றதே உந்தன் புன்னகையும்/

 

உந்தன் விழிகளில் மொய்த்திடும் கனவுகளை/

எந்தன் மனமும் உரசி ரசித்திடவே/

பருவத்தின் நூலிழையில் பறக்கின்றேன் உன்னோடு/

கரும்பைப் பிழிந்தூற்றி நனைக்கின்றாய் என்னுயிரையே /  


இதழ்களின் விருந்தோம்பலில் சிலிர்க்கின்ற தேகமும்/

இதயத் துடிப்பினில் வருடுகின்றதே தித்திப்பை/

மையிடும் கண்களும் சந்தனத் தேகமும்/

பொய்யில்லா அன்புக்குள் வெட்கத்தில் சிவக்குதே/


உந்தன் தரிசனத்தினை நுகர்ந்திடும் பார்வைக்குள்/

உரிமை பெறுகின்றதே வனப்பான அன்பும்/

உறங்கிடாத நினைவுகளும் அலைகின்றதே நிழலாக/

உணர்ச்சியின் மையத்தில் வீற்றிருக்கின்றாய் இராணியாக/


எந்தன் சுவாசத்தினுள் விட்டுச் செல்கின்றாயே/

உன் அழகான வாசனையைக் கவிதையாக/

என்னையும் மொழிபெயர்க்கின்றேன் தினமும் தனிமைக்குள்/

எனக்குள் என்னையே அடையாளமிடுகின்றாய் அன்பினாலே/


ஜன்ஸி கபூர் - 17.09.2020

 

கல்லறையின் ஈரலிப்பில்

 கவிதாஞ்சலி வடிக்கையில் வழிகின்றதே கண்ணீரும்

கலங்கிய விழிகளின் ஈரலிப்பில் கல்லறையும்

உயிர்த்திடுமோ அன்பின் நினைவுகளையும் சுமந்தே

உணர்வும் துடிக்கின்றதே ஆத்மா சாந்திக்காக


ஜன்ஸி கபூர் - 17.09.20




இரட்டைக்கிளவி

மாணவன் மடமடவென பாடங்களை எழுதிட/

ஆசிரியர் கடகடவென பாடங் கற்பித்தார்/


இடைக்கிடையே விறுவிறுப்பான கதைகளும் சொல்லுகையில்/

வெடவெடவென நடுங்கியதே  தேகமும் எனக்குள்/


தரதரவென கதிரையை இழுத்தேன் நானும்/

நறுக்நறுக்கென பற்களைக் கடித்தாரே ஆசிரியரும்/


மன்றத்தில் தோழியின் கலகலப்பான பேச்சும்/

தைதை ஆட்டமும் கவர்ந்ததால் ரசித்தேனே/


இடைவேளை வந்ததும் மொறுமொறு முறுக்கினை/

மொச்சுமொச்சுவென சாப்பிட்டேனே பசியையும் தணிய/


கசகசவென தேகம் ஊறிய வியர்வையும்/

சிலுசிலுவென வீசிய காற்றில் கரைந்ததே/


ஜன்ஸி கபூர்





ஏழையின் குடிசையில் ஒளி விளக்கு

ஞானத்தை வழங்கிடும் நற் கல்வியை

ஞாலத்திலும் தடுத்திடுமோ வறுமை இருளும்

அறியாமை அகற்றியே அறிவினை ஏற்றிடவே

அனைவரும் கற்பது உரிமையே அகிலத்தில்


ஏழ்மைத் தணலும் வீழ்த்திடும் மனங்களும்

ஏக்கத்தினில் நொறுங்கி வருந்துதல் சாபமோ

ஏற்றத்தை வாழ்வில் ஏற்றிடும் ஒளியாக

எல்லோர் எண்ணத்திலும் இசைந்திடுமே கல்வியும்


உதரம் துடித்தாலும் உணர்வும் ஏந்திடும்

உயர்வான திறன்களை உருவாக்குமே கல்வியும்

உன்னத எதிர்காலம் உதயமாகுமே திறமையால்

உயர்வுக்கும் என்றுமே தடையில்லையே வறுமையும்


கற்பதற்கு ஆர்வமும் முயற்சியும் இருக்கையிலே

ஆற்றலும் ஆளுமே நம் வசமே

ஏழைக் குடிசையின் ஒளி விளக்காக

ஏற்றிடும் கல்வியால் எதிர்காலமும் சிறக்குமே


ஜன்ஸி கபூர்  








குவளை கவிழ்ந்து நிலனோக்கும்

 

மெய் யின்பம் உருக்கும் மேனிக்குள்/

சாய்க்கின்ற அற்புதக் காதலினை நுகர்ந்த/

தலைவன் நினைவுக்குள்ளே உயிர்க்கின்றாள் தலைவியும்/

அலைகின்ற உணர்வுக்குள் திகழ்கின்றாள் பேரழியாக/


நேச விழிகளின் இரசிப்பில் உறைந்திட்ட/

நெஞ்சக் காதலனும் காண்கின்றான் குவளையை/

அஞ்சாது விண்ணோக்கி நிமிர்ந்திடும் மலரிது/ 

மிஞ்சிடுமோ என்னவள் விழி அழகினில்/   


பல்லிதழ் விரிந்திருக்கும் நீல அல்லியே/

பார்க்கவில்லையே என்னவள் கூர்விழியை நீயும்தான்/

உனக்கும் பார்க்கும் திறனிருந்தால் உணர்ந்திடுவாய்/

உயிர்க்கும் விழிகளும் ஏந்தியிருக்கும் அழகினை/


நிமிர்ந்த நின் இதழ்களும் நாணியே/

தலைசாய்க்குமே தோல்விக்குள் உனையும் வீழ்த்திடுமே/

அறிவாயோ தலைவியின் விழி எழிலை/ 

அவனியும் வியந்திடவே எடுத்துரைத்தான் தலைவனும்/


ஜன்ஸி கபூர் - 17.09.2020




 


மாட்டுவண்டிப் பயணம்

மாட்டுவண்டிப் பயணம்
-------------------------------------------

 அழகிய கிராமத்தின் ஆனந்தச் சுவடுகளில்/

அலைகின்றதே மாட்டுவண்டிப் பயணமும் பரவசத்தில்/

துள்ளுகின்ற மனங்களும் வண்டியோட்டத்தில் இசைய/

தூவுகின்ற புன்னகைகள்  இயற்கைக்கும் அழகே/


ஜன்ஸி கபூர் - 17.09.2020






2020/09/16

புல்லல் ஓம்பு என்றது உடையாரே

 இலக்கியப்பிருந்தாவனம்

புல்லல் ஓம்பு என்றது உடையாரே

--------------------------------------------------------

காதலில் இசைந்த தலைவனும் தலைவியும்

களவில் கனிந்தனர் விழிகளோ இன்பத்தில்

கண்டனரே பெற்றோரும் சினத்திலே பொங்கினர்

கலங்கியதே நெஞ்சங்களும் ஈரமும் அனலில்


வெந்த மனதில் விரக்தி பிழம்புகள்

வெடித்த பொழுதினில் உடைந்தாள் தலைவியும்

இடிந்த இதயமும் இறக்கியதே வார்த்தைகளை

இரசித்த காதலுக்குள் இரணங்களின் சேர்க்கையே


சந்தித்த தலைவனை நிந்தித்தாளோ தலைவியும்

சிந்தையை நிறைத்தவள் சிதறினாள் வார்த்தைகளை

அந்நியமானாள் அடுத்தவர் தலையீட்டின் உச்சத்தினால்

அவலத்தின் சுவைக்குள் விழிநீரும் விழுந்திடவே


விட்டுவிடு என்றவளை தொட்டணைக்கத் துடித்தானே

விலகிடும் காதலோ இது என்றானே

உருகும் காமமும் காதலில் நனைந்திட

உணர்வும் உறவாடத் துடித்ததே தவிப்புடன்


மறுப்புரைத்தான் மனதுக்குள் நிறைந்திருந்த தலைவிக்கு

மனம் கவர்ந்தவளே மறுக்கிறேன் பிரிவிற்கே

உந்தன் இருண்ட கூந்தலுக்குள் அலைகின்ற

எந்தன் இரசிப்பினை உடைக்காதே கண்ணே


என் முன்னே பேசிடாதே என்றுரைத்தாரே

அன்றி தழுவிட மறுத்துரைத்தாரோ பெண்ணே

இன்பத்தின் சுவைதனை மென்றிட வேண்டும்

உன் பற்களை மெல்லக் கடித்தே

என்னவளே மெல்லத் தழுவிக்கொள் என்றானே


தலைவனின் கூற்றினை செவிகளும் தாங்கிட

தலைவியின் சிந்தையும் மொழிந்தது உணர்வினை

தனக்குள்ளே எண்ணினாள் தவிப்பினில் உறைந்திட்டாள்

அவன் உரைப்பில் மெய் இருப்பின்

அக அன்பினால் வாழ்க்கைக்குள் இணைவேன்


அன்றில் பொய்யுரைப்பின் கருகுமே மாலையும்

அலைந்திடும் நெஞ்சமும் ஏக்க வெம்மையில்

அழுதிடும் விழிகளை ஆற்றாத தோள்களும்

ஆற்றாத் துயரில் வாடிடுமே என்றும்


அதுவும் அழகுதானே எனும் நெஞ்சின்

அவதியின் அதிர்வினை உணர்ந்த தலைவனும

அகம் மகிழ்ந்தானே தலைவியின் இசைவையெண்ணி 


விலையுயர்ந்த காதலின் மெய்யன்பை மெல்ல

தலைவியே தலைவனும் உம்மைத் தழுவாவிடில்  

தவழ்ந்திடும் நெஞ்சத்து மாலையும் கருகுமே

தனலாய் கொதித்திடும் ஏக்கத்தின் தாக்கத்தில்

தவிக்கின்ற உன் விழிகளின் சோர்வும்

தோள்களின் வாட்டமும் அழகைப் பறித்தாலும்


உனக்கு அதுவும் அழகே என்றாளே

நெஞ்ச அதிர்வினைத் தனக்குள் பகிர்கையில்

தன்னுடன் இசைகிறாள் என்றெண்ணி மகிழ்ந்தானே

தலைவனும் காதல் அன்பினைச் சுவைத்தவனாக

ஜன்ஸி கபூர் - 06.09.2020




படரும் பந்தம்

படரும் பந்தம் பாசத்தில் கலந்தே/

பாட்டி பேத்தியாய் உறவுக்குள் இணைகிறதே/

பாருக்கும் சுமையல்ல அன்பின் தித்திப்பு/ 

பரவசத்தில் ஆளுமே நெஞ்சத்து நினைவுகள்/


சுருக்கத் தேகத்துக்குள்ளும் சுகமான தலைமுறை/

விருப்போடு அணைக்கையில் விலகுதே இடருமே/

தனிமை நெருப்பினை அணைத்திடும் இனிமையும்/

தழுவுதே உணர்வுக்குள் அழகிய உறவுகளாக/


ஜன்ஸி கபூர் - 16.09.2020






வல்வில் ஓரி

 


கடையெழு வள்ளல்களுள் மாவீரன் ஓரி

கவர்ந்திட்டான் நல்லாட்சியால் கொல்லிமலை நாட்டினை

கருணையும் அன்பும் மனதின் மொழிகளாம்

களம் ஆண்டான் காண்போர் புகழவே


கொல்லிமலைக் கொற்றவனாம் உவந்தளிக்கும் வள்ளலாம்

இல்லாதவர் இதயங்களை ஆண்ட நல்லோனாம்

வல்வில் ஓரியானார் வில்லின் வாண்மையால்

வில் வீரெனப் புகழ்ந்தாரே வன்பரணரும்


வரலாறும் புகழ்ந்திடும் மன்னனின் பொற்காலத்தை

வாழ்த்துவர் புலவரும் போற்றிடும் புலமைக்கே

வறுமைத் தணலுக்குள் வீழ்ந்திடும் மனங்களை

வாரியணைத்திடும் வள்ளன்மையே புகழ்ந்திடுமே வையகமும்


ஓரியின் கொடைத்திறன் மொழிந்திடும் புறநானூறும்

ஓடையின் இதத்தில் குளிர்ந்திடுவார் சூழ்ந்தோரும்

அரசன் ஆளுகையில் நாடுகள் பதினெட்டும்

வளத்தில் செழித்தன வானும் வணங்கியதே


பரி மொழி அறிந்திட்ட வீரனிவன்

பரிவோடு செலுத்திடுவான் குதிரைகளின் மீதேறி

பற்றும் பாசமும் கொண்ட குணத்துள்;

பற்றியதே வில்வித்தை நுட்பங்களும் திறனோடு


ஒப்புமை இல்லாதவன் பொருளுக்குள் பெயரும்

ஒத்திசைந்தான் வீர தீர ஈரத்தில்

ஓர் நாளில் வண்பரணரும் கண்டாரே

ஓரியின் வேட்டுவத் திறனின் ஆளுகையை


வில்லினை வளைத்தே எய்த அம்பும்

விண்ணில் பறந்து வேழம் வீழ்த்தி

விரைந்து நுழைந்தது புலியின் வாயிலுக்குள்ளும்;

வித்தை யிதுவோ கலைமானும் காட்டுப்பன்றியும்


உடும்பும் விண்ணேறியதே வில்லாளன் வலிமையில்

ஓர் இலக்கிற்கு எறிந்திடும் அம்பும்

துளைத்திடுமே பல பொருளையும் வீரத்தினால்

துதித்திடுவார் வண்பரணரும் வல்வில்லின் பெருமையை


இசைவாணர்கள் இசைத்தனர் ஓரியின் புகழினை

இசையால் மயங்கியே மன்னனும் மகிழ்ந்தானே

இதயமோ பெருமிதத்தில் இரசனையும் மனதினில்

வாரி வழங்கினான் அன்புடன் தானமதை 


கொடையாளி ஓரியின்மீது படையெடுத்தனரே அழுக்காற்றால்

கொடும் குணம் கொண்ட காரியும்

கொற்றவன் சேரனும் கொன்றொழிக்கும் தீவிரத்தில்

நட்டனரே ஓரியின் உயிரை மண்ணுக்குள்


போர் வல்லமை கொண்ட காரியின்

போராற்றல் படையினரும் வென்றனரே ஓரியை

போர்க்களத்தில் வீழ்ந்தாலும் மன்னன் ஓரி

போற்றப்படுகின்றான் மக்கள் மனங்களை வென்றவனாகி


அபார ஞானத்தில் பாண்டவர்  நகுலனும்

அயர்வில்லாத விஜயனுக்கும் இணையாகிப்  போற்றப்பட

அகிலத்தின் பார்வையும் அண்ணார்ந்தே பார்த்திடுமே

அதிசய வீரனானே ஆதன் ஓரியை


ஜன்ஸி கபூர் - 16.09.2020









2020/09/13

கிராமத்துச் சாரல்

 இயற்கையின் பசுமைக்குள் உயிர்க்கின்றதே கிராமமும்

இதயங்களின் சங்கமத்தில் உறவாடுகின்றதே பண்பாடும்

இன்பத்தின் கலவைக்குள் விழிக்கின்ற விடியலுக்குள்

இலயிக்கின்ற அமைதியும் சிறகடிக்குமே உணர்வினில் 


முற்றங்களில் வரைகின்ற கோலங்களின் ஈர்ப்பினில்

சுற்றிடுமே தென்றலும் வசீகரத்தில் நனைந்தே

சுற்றத்தின் அன்பினில் சுகமாகும் வாழ்வுக்குள்

ஏற்றமும் கண்டிடுவார் எளிமையின் முகவரிக்குள்


வயலின் புன்சிரிப்பில் குலுங்கிடுமே மணிகள்

அயராத உழைப்பினிலே இசைந்திடுமே மனமும்

பயன் மரங்களெல்லாம் அழகின் செழுமையினில்

படர்கின்றதே கலப்படமில்லாத எழில் வாழ்வும்


கிராமத்துச் சாரலின் இயற்கை அழகினை

இரசிக்கின்ற விழிகளுக்குள் கோடி இன்பமே

வீசுகின்ற தென்றலில் சாய்கின்ற பயிர்களெல்லாம்

இசைக்கின்ற நாதமும் செவிக்குள் நல்லிசையே


ஜன்ஸி கபூர் 





தொடர் கவிதைப் போட்டி

 அண்ணா  எனும் ஆளுமைக்குள் கவிதையும்/

எண்ணத்தில் நிறைந்ததே இலக்கியத் தமிழில்/

காண்போர் வியந்திடுவாரே பேச்சின் ஆற்றலில்/

அறிவுலக மேதையாக முத்திரையும் பதித்தாரே/ 

ஜன்ஸி கபூர்  


தேர்வு

 தேர்வு

-------------

தேர்வும் ஒரு யுத்தமே வாழ்வில்/

தேடிய அறிவினைப் பரீட்சிக்கும் பொழுதெல்லாம்/

ஆயுதமாகக் கரம் தொடுகின்றது பேனா/


ஜன்ஸி கபூர் - 13.09.2020