About Me

2012/07/14

பரீட்சை !



சூரிய உதயத்தின்
இரகஸியங்களை அம்பலப்படுத்தும்
கைபேசி அழைப்புக்களாய் 
சிரிக்கும் சிட்டுக்களின் குரலேனோ
இன்னும் 
ரசிக்கவேயில்லை !

விரல்களின் ஸ்பரிசத்திலே
துவண்டிருக்கும் 
புத்தகங்களின் சிலிர்ப்பேனோ
இன்னும் 
சிந்தைக்குள் குவியவுமில்லை!

வண்ணத்தியின் சிறகுடைத்தே
கைப்பற்றும் 
அறிவின் மனனத்திற்காய்
அலையும் மனசின் அங்கலாய்ப்பும்
இன்னும் 
தணியவேயில்லை!

உணர்வுகள் களைந்த
இயந்திரமாய்
உருமாறிய மனதும்  
பாட வரிகளுள் இளைப்பாறிக்
கிடக்கும் ஒலியலைகளும்
இன்னும் 
தொலைவாகிப் போகவேயில்லை!

விழிக்குள் சுருண்ட கனவெல்லாம்
வில்லத்தனத்தோடு
பரீட்சையாய் முறைக்கையில் 
உதடுகளின் மௌனித்தலில்
கிறங்கிய பாட ங்களின் இறக்கம்
இன்னும் 
இறக்கவேயில்லை ஞாபகம் விட்டு!

என் உணர்வு தேசத்தின்
அறிவிப்புக்களெல்லாம்
பரீட்சையில் விழுந்து கிடக்க 
நாட்களோ 
நாடியறுத்து
மனவழுத்தத்தின் வீரியத்தை
இன்னும் 
நெஞ்சிலே பரப்பத்தான் செய்கிறது!

மனமோ வெற்றி யுத்தத்திற்காய்
பரீட்சைக் களத்தில் போராட 
பல 
நம்பிக்கை எதிர்வுகூறலில்
இரவும் பகலும் நசிந்து கிடக்கின்றன
தோல்வியின் மீட்சிக்காய்!

ஒளி விரல்களில்- என்
சுபீட்சம் பூட்டி 
விடைத்தாள்களின் தடத்தில் 
பயணிக்கும் என் பேனாச் சுவடுகளால்
நாளை 
என் இலட்சியங்கள் பேசப்படலாம்
நம்பிக்கைதனை உள்வாங்கியபடி!

ஜன்ஸி கபூர் 







2012/07/11

பெருமிதம்


ஒவ்வொரு பொழுதுகளும் அழகாகத்தான் விடிகின்றன. குருவிகளின் இசைச் சுரங்களின் இனிமையில் மனம் வீழ்ந்திடத்தான் துடிக்கின்றது.இருந்தும் அந்தக் கொடுப்பனையில்லாத பாவி மகளாய் இந்தப் புவிப் பரப்புக்குள் வீழ்ந்து கிடக்கின்றேனே!.

பாசம் தர உறவிருந்தும் சிறகறுந்த சின்னச் சிட்டாய் சோக முற்றத்தில் விளையாடிடும் கண்ணீர் வாழ்வின் மொத்த உருவமாய் நான்!

" அப்பா"

எனக்குள் ஓர் உருவமும் உயிரும் கொடுக்கக் காரணமாய் இருந்தவர். எல்லாப் பிள்ளைகளைப் போல் எனக்கும் ஓர் அன்பான அப்பா இருக்கிறார். மனசு சொல்லத் துடித்த கணங்கள் பற்பல. ஆனால் ஏனோ வார்த்தைகள் சிறைப்பட்டு வெளியேற மறுக்கின்றது.

நான் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டதே அவரிடமிருந்துதான்..எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் தந்த அனுபவங்களே என்னைச் செதுக்கியிருக்கின்றன. என் வயதை விட அனுபவச் செறிவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதனாலோ என்னவோ நானும் சராசரி பெண்ணாய் இல்லாமல் இன்னும் இன்னும் வாழ்வின் தன்மையைப் படிக்க பல தேடலுக்குள் உள்ளிறங்கித் தேடுகின்றேன்..

அப்பா........!

இப்புவியில் உங்கள் பிள்ளையாய் நான் பிறந்ததால் என் வயதையொத்த பெண்கள் தொலைத்த எல்லாவற்றையும் என்னுள் நிரப்பி அதிசய பெண்ணாய் அடுத்தவர் என்மீது வீசும் புதிர்ப் பார்வையையும் சுமந்தபடி விதி வழியே போகின்றேன்.....

வாழ்வின் அழகிய பருவம் மழலைப் பருவம்....அம்மா அடிக்கடி சொல்வார்....தாங்கள் திருமணமாகி பல வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளையாம் நான்... என்னுள் தந்தையின் முகச் சாயல் அதிகமாய் இருப்பதால்  அப்பாக்கு என் மீது கொள்ளைப் பிரியமாம்........பல நாட்கள் என்னைத் தோளிலிட்டு பாட்டுப் படித்து நீங்கள் தூங்க வைத்ததும் சின்னச் சின்ன ஞாபகங்களாக இன்னும் நெஞ்சக் குழியில் இறங்கிக் கிடக்கின்றன..

நான் சின்னவளாய் உங்கள் நெஞ்சை உதைத்த போது கோபங் கொள்ளாமல் ரசித்த சராசரித் தந்தையாகவும் இருந்ததை எண்ணி என்னுயிர்க் கணுக்கள் ஒரு கணம் மகிழ்வோடு தம்மை மறந்து உணர்ச்சிவசப்படுகின்றன....

அப்பா

உங்களை நான் நல்ல பாடசாலை அதிபராக, கலைஞனாக, எழுத்தாளனாக , சிறந்த ஓவியனாக கண்டு ரசித்துள்ளேன். ஒரு மருத்துவனாக, தொழினுட்பவியலாளனாக, பொறியியலாளராக, நல்ல ஆலோசகராகவும் கண்டு பெருமிதப்பட்டுள்ளேன். யாருக்கிந்த கொடுப்பனை கிடைக்கும். நீங்கள் பல் துறை வேந்தர். 

கல்வி கற்றவர்கள் கூட உங்கள் ஆங்கிலப்புலமை கண்டு மெச்சாத நாள் உங்கள் வாழ்க்கையில் குறைவென்று தான் சொல்லுவேன். உங்கள் அந்தத் திறமைகள் தான் பாரம்பரீய வழியாக என்னையும் ஆட்கொண்டு நானும் ஏதோ கல்வித் துறைக்குள் என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். நன்றி தந்தையே !

 
 
ஜன்ஸி கபூர் 
  



2012/07/10

சிப்பிக்குள் முத்து!


என்.........
வாழ்க்கைச் சாலையில்
அவன்............
பயணிப்பெல்லா மிப்போது
முகங்காட்டுகின்றன நேசச் சுவடுகளாய் !

விண் சுற்றும் மேகங்களில்............
பவ்வியமாய் தனையொளித்தே
எட்டிப் பார்ப்பவன்............
நனைந்தே கிடக்கின்றான்
மழைத்தூறல்களாய்.............
என் வீட்டுமுற்றங்களில்!

தோற்றுப் போகும் வாழ்விலும்
நேற்று முளைத்த காளானாய்- என்
மனப்பூமி வெம்மையெல்லாம்
உறிஞசியவனாய்...........
விட்டுச் செல்கின்றான் தன்
சரிதங்களை!

தரிசனங்கள் மறுக்கப்பட்ட
எம் பக்கங்களின்...................
முன்னுரையாய்
வீழ்ந்து கிடக்கின்றது
அவன் முகவரி!

அன்புத் துடிப்போடு...........
அலையு மெங்கள் நாட்காட்டியில்.........
வலைப்பின்னலின் வருடல்
தகவலாகின்றன தினமும் எங்கள்
வாசிப்புக்களைச் சுமந்த படி!

அவன் புன்னகைச் சாறைப்
பிழிந்தெடுத்தே.............
என் தோட்டத்துப் பூக்களெல்லாம்
சாயம் பூசிக் கொள்கின்றன
தம் மழகைப் பறைசாட்ட!



காற்றின் மௌனம்
தொலைக்கும் அவன் குரலலைகள்.......
நினைவகத்தின் நரம்புகளில்
நசிந்து கிடக்கின்றன
நினைவுகளாய் !
.
"அக்கா"வென்பான் அடிக்கடி.........
அவன் பெருமிதம் கண்டு
ஆகாயம் குடைபிடிக்க
சமுத்திரங்கள் தரைக்குள் ஒடுங்கி
பாசவேலிக்குள் தனை
முடிந்து கொள்ளும்!

கனவுகள் புல்லரித்துக் கிடக்க
விரல் தருகின்றான்- என்
கன்னப் பருக்களாய் வீழ்ந்து கிடக்கும்
கண்ணீர் கழற்றி
தன்னுள் ஒற்றிக்கொள்ளவே!

நம்பிக்கையிருக்கின்றது!
நாளை..............
என் மூச்சின் வேரறுக்கப்பட்டாலும்
கண்ணீரஞ்சலி தரும்
பாச விழிகளாய் அவன்................
ஊடுறுவிக் கிடப்பான் ஆத்ம சரீரத்துள்!