About Me

2021/06/05

உன்னில் என்னைக் காண்கின்றேன்.

 

இவ்வுலகின் அற்புத சக்தியாக காதல் இருப்பதால்தான்   தமக்கிடையேயுள்ள எந்த வேறுபாடுகளையும் அது கண்டுகொள்ளாமல் அன்பை நோக்கியே பயணிக்கின்றது. உண்மையான அன்பு இதயங்களாக வாழும் இந்த சனா – தவூத் தம்பதியினரை எனக்குப் பிடித்ததால்  அவர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்துகின்றேன். நன்றி பீபீசி - தமிழ்

தவுத் சித்திக்கி  சனா முஷ்டாக் இருவரும் உறவினர்கள். சந்தித்த சந்திப்பு காதலாகப் பூக்க இருவரும் காதல் வானில் பறந்து திரிந்தார்கள். ஒரு வருடக் காதல் மகிழ்ச்சியாகக் கழிந்தது. ஒன்றாகவே இருவரும் வெளியே சுற்றுமளவிற்கு  காதலும் உறுதி பெற்றிருந்தது. இருவரும் ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை எனும் அளவிற்கு மனதாள் வலுப் பெற்றார்கள்.

தவுத் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோது உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து பாய்ந்த மின்சாரம் காரணமாக ஏற்பட்ட விபத்தால் அவனது இரண்டு கைகளும் காலும் பறிபோனது. எட்டு மணி நேர சத்திரசிகிச்சை உடல் உறுப்புக்களை இழக்கச் செய்தாலும் உயிரைக் காப்பாற்றியது. 

ஆனால் உள்ளங்கள் சம்பந்தப்பட்ட காதல் புறத்தோற்றங்களால் மாறுபடுமா? செய்தி கிடைத்ததும் சனா கலங்கியவாறு ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள். கண்ணீரில்  கரைந்த காதலால் அந்த வைத்தியசாலையும் வலி சுமந்தது.

தாவுத் நினைவு திரும்பவில்லை. ஆனாலும் சனா அவனது காதினருகே போய் முணுமுணுத்தாள். அந்த ஒலிச் சப்தம் அவனது உணர்வுகளை மெல்ல வருடியிருக்க வேண்டும். கண்களைத் திறந்தான். பூக்களாக மலர்ந்திருந்தாள் காதலி சனா.

தவுத்தோ அவள் தன்னைப் பார்க்க வருவாள் என்று நினைக்கவேயில்லை. இந்த விபத்தால் அவள் தன்னை வெறுப்பாள் என்றே எண்ணினான். இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். ஊனமுற்ற தன்னுடன் அவளை வாழக் கட்டாயப்படுத்துவது தனது அன்புக்குப் பொருத்தமில்லை என்றே எண்ணினான். அவள் பிரிவிற்கேற்ப வாழ தன்னை தயார்படுத்த நினைத்திருந்தான். 

ஆனால் அவள் அன்பு அவனைக் கைவிடவில்லை. அவனுடன் கூடவேயிருப்பதாக ஆறுதலளித்தாள். அவனது இழந்த உறுப்புகளுக்குப் பதிலாக தனது கை கால்கள் இருப்பதாகவும் அவற்றால் உதவுவதாகவும் உணர்வுபூர்வமாகக் கூறினாள். 

தவுத்திற்கு சனாவை கஷ்டப்படுத்த விருப்பமில்லை என்பதால் அந்த திருமணத்திற்கு அவன் சம்மதிக்கவில்லை. தம் பிள்ளைகளின் வருங்காலம் தொடர்பாக ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆசைகளும் கனவுகளும் இருக்கும்தானே.  உன் பெற்றோர் நன்மைக்குத்தானே சொல்கின்றார்கள். அதனால் பெற்றோர் விருப்பப்படி வாழ்க்கைத் தெரிவு செய்யும்படி கூறினான். 

விபத்தின் பின்னர் சனாவின் பெற்றோரும் இக் காதலை விரும்பவில்லை.     அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதும். அவள்; வீட்டை விட்டு வெளியேறி தனது மாமி; வீட்டில் தங்கியிருந்;தாள். தவுத்துடன் தொடர்பு கொண்டாள். உன்னுடன் வாழ்வதற்காக எல்லாவற்றையும் இழந்து வந்திருக்கின்றேன் ஏற்றுக் கொள் என்றாள். அவளது விருப்பத்திற்கு தவுத் ஆரம்பத்தில் உடன்படாவிடினும் ஈற்றில் அவளது அன்பின் பலம்; வென்றது. தனது வாழ்க்கை அவனுடன்தான் என அவள் எடுத்த முடிவு உயிர் பெற்றது. தவுத் பெற்றோர் ஆதரவுடன் அவனைத் திருமணம் செய்தாள்.

அடுத்தவர் உதவியின்றி நம் வேலைகளை நாமே செய்வது பெரும் அதிஷ்டம்தானே. அவனோ தான் எப்பொழுதும் பிறரை நாடி இருப்பதை எண்ணிக் கலங்கி நிற்கும்போதெல்லாம் மனைவி அவனை ஆறுதல்படுத்துகின்றாள். இறைவன் தன்னை இப்படிக் கலங்க வைத்ததை எண்ணி வேதனைப்படும்போதெல்லாம் சனா   உணர்வுகளால் தன்னம்பிக்கையூட்டுகின்றாள். உற்சாகப்படுத்துகின்றாள்.  அவனுக்காகவே அவள் பிறந்திருப்பதாக நேசத்தைப் புதுப்பிக்கின்றாள். ஒரு தாயாக தாரமாக மாறி அவனை தன் உள்ளத்தில் பதிவேற்றி வாழ்ந்து வருகின்றாள்.

 அவள் தனது சோகத்தை வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே காட்டிக் கொள்வாள்.

ஆனாலும் அவனது மனம் அவளுக்கு தான் பாரமாக இருப்பதை ஏற்கவில்லை. அவளுக்காக தானும் வாழ வேண்டுமெனும் நோக்கில் செயற்கை அவயங்களைப் பொருத்த எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் இப்புரிதலில் காதல் தினமும் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் அவளுக்குள் இன்னுமொரு வலி. அவளது பெற்றோர் தவுத்தை இனனும்; மருமகனாக ஏற்கவில்லை.

காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை. மாற்றங்களுடன் கூடியதே வாழ்க்கை. பணம் பதவி அந்தஸ்து என மாய வலைக்குள் சிக்குண்டு அல்லல்படும் பலரின் மத்தியில் இவர்களது காதல் நெஞ்சம் நமக்கு தடைகளையும் வலியினையும் கடந்து வாழ கற்றுத் தருகின்றது.

சோர்வல்ல வாழ்வு. சோகத்தையும் தூசாக்கி துணிவுடன் கடந்து போக கற்றுத் தருவது. இக்காதல் தம்பதியினரின் வாழ்க்கை வளம்பெற நாமும் வாழ்த்துவோம்.

ஜன்ஸி கபூர் - 05.06.2021

  

2021/06/02

இட்லி பாட்டி

நாகரீகத்தில் மையங் கொண்ட நவ உலகத்தில் நாலு சுவர்களுக்குள் வாழ்கின்ற பல நல்லுள்ளங்களைப் பற்றிய பார்வைகள் பலருக்குப் புரிவதில்லைதான். எந்தவொரு செயலும் நேர்மையாகச் செய்கின்றபோது நாம் பிறரின் நேசத்திற்குள் ஈர்க்கப்படுகின்றோம்.

உணர்வுகளால் ஆளப்படுகின்ற மனித மனங்கள் ஆளாளுக்கு வேறுபடுகின்றன. இப்படித்தான் வாழ வேண்டுமென சிலரும், எப்படியும் வாழலாம் என சிலரும் தமது வாழ்வை அடுத்தவர் பார்வைக்கு நகர்த்துகின்றார்கள்.

அடுத்தவர்களைச் சுரண்டி தனது பணப் பையை நிரப்புகின்ற பலரின் மத்தியில் இவரின் தயாள குணம் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இவர் ....இட்லி பாட்டி..........என செல்லமாக அழைப்போம்.

கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலயாம்பாளையம் எனும் பசும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார். நாற்பது வருடங்களாக தனது வியாபாரமாக இட்லி சுட்டு விற்கின்றார். அன்று முதன் முதலாக இட்லி விற்ற விலையான ஒரு ரூபாவையே இன்றும்  இவர் பெற்றுக் கொள்கின்றார்.

இன்றைய விலைவாசியில், உழுந்து விற்கின்ற விலையில் ஒரு ரூபாவிற்கு இட்லியா?

கேட்பவர்கள் ஆச்சரியத்தில் விழிகளை உயர்த்தும்போதும், அவரின் மெல்லிய புன்னகை உண்மையை ஒத்துக் கொள்கின்றது.

சுருங்கிய தளர்ந்த தேகம். இருந்தும் அவர் தளர்ந்து விடவில்லை. தன் வாழ்வையும், இட்லி வியாபாரத்தையும் நேர்த்தியாகவே கொண்டு செல்கின்றார். 

இன்றைய உலகியல் வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு ஆசைகளே காரணமாக அமைகின்றன. ஆனால் இப்பாட்டியின் ஆசையற்ற நடைமுறை வாழ்வியல் பலரின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

செய்கின்ற தொழில் தெய்வம் என்பார்கள். ஆனால் இப்பாட்டியின் தயாள குணத்தால் பலர் இவரைத் தெய்வமாகப் பார்க்கின்றார்கள்.

பசியுடன் தன்னை நாடி வருகின்றவர்களுக்கு ஆவி பறக்க பரிமாறும் இட்லிச் சுவையில் அன்பும் கலந்திருப்பதாக பசியாறுபவர்கள் மகிழ்வுடன் குறிப்பிடுகின்றார்கள்.

சூரியன் முற்றத்தை முத்தமிடுகின்ற அந்த அதிகாலைப் பொழுதிலே அடுப்பில் விறகேற்றி பசியெனும் இருளை விரட்டுகின்ற பாட்டியின் கடுமையான உழைப்பால் பல வயிறுகள் சுவை காண்கின்றன.

கையில் காசு இல்லாதவர்களுக்கு கூட அழைத்து இட்லி பரிமாறுகின்றார். காசு கையில வரும்போது தரும்படி கூறுகின்ற அவரின் அன்பு மனம் கொடுத்த இட்லிகளை கணக்குப் பார்த்து கடதாசிகளில் குறித்து வைப்பதில்லை.

முதுமையின் தோற்றத்தை உடல் பெற்றாலும்கூட சுறுசுறுப்பாக தானே உழைத்து தன்னைக் காக்கின்ற உழைப்பும் அடுத்தவர்களை மனிதாபிமானமாக நோக்கும் பண்பும் இப்பாட்டியின் சிறப்பான அடையாளங்கள்.

உண்ண வருகின்றவர்களுக்கு பாட்டியின் அன்பான உபசரிப்பு  வயிற்றுடன் மனதையும் நிறைக்கின்றது.

பசுமையான மனதின் பிரதிபலிப்புத்தானே இது!

தேடி வருகின்ற பசியாளிக்கு இல்லையென்று சொல்லாமல் பசியாற்றுகின்றார். கொடுக்கும் இட்லிக்கு கணக்குப் பார்ப்பதில்லை. கொடுக்கும் பணத்தை மனதாரப் பெற்றுக் கொள்கின்றார்.

பசித்தவன்  புசிக்க இலவசமாக உணவளிக்கும் தர்மத்தையும் செய்கின்றார்.

கலப்பமிடமில்லாத சுவையான இட்லி இவரது கைப் பக்குவம்தான்.

சுவையான இட்லியென உண்பவர் வாயாரப் புகழும் வார்த்தைகள் இவரின் மனதை  நிறைக்கின்றன.

இணையத்தில் கண்டெடுத்த பாட்டியின் இட்லிகள் எனது வரிகளில் இங்கு பரிமாறப்படுகின்றன.

ஜன்ஸி கபூர் - 02.06.2021


MV X- Press Pearl

                                       

தற்போது இலங்கையில் பேசப்படுகின்ற விடயம் MV X- Press Pearl  எனும் சிங்கப்பூர் கப்பலைப் பற்றியதாகவே இருக்கின்றது. இது சுமார் 186 மீற்றர் நீளமானது. இது 2021 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இயக்கப்பட்டது. இக்கப்பல்   எக்ஸ் பிரஸ் பீடர் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 
 
இது போர்ட் கிளாங் துறைமுகத்திலிருந்து (மலேசியாவிலிருந்து) சிங்கப்பூர் வழியாக ஜெபல் அலி (UAE) மற்றும் போர்ட் ஹமாத் (கத்தார்), துபாய் வரை மத்திய கிழக்கு சேவைக் கப்பலாக அனுப்பப்பட்டது. 

இது 30 நாள் சுற்றுப் பயணத்தின் பின்னர், திரும்புகையில் ஹசீரா (இந்தியா) கொழும்பு (இலங்கை) வழியாக மீண்டும் மலேசியாவை சென்றடைய வேண்டும். 

நைத்திரிக்கமிலத்தின் கொள்கலன் கசிவு காரணமாக கப்பலை கத்தார், இந்தியா துறைமுகத்தில் நிறுத்த முயற்சித்தபோது, கசிகின்ற அமிலத்தைப் பராமரிக்க வசதியில்லை எனும் காரணத்தினால் குறித்த கொள்கலனை இறக்குவதற்கு அனுமதி கிடைக்காததால் கப்பலை கொழும்பு வழியாக செலுத்தியதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இக்கப்பல் 25 தொன் நைத்திரிக்கமிலம், பிற இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் நிறைந்த 1468 கொள்கலன்களுடன் 2021 மே 2 ஆம் திகதி இந்தியா ஹசிரா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, மே 19 ஆம் திகதி கொழும்பை அடைந்தது. 

மே 20 கொழும்பு துறைமுகத்தின் வடமேற்கே 17.6 கி.மீ தூரத்தில் கப்பல் இருக்கையில் தீ பிடித்தது. இக்கப்பலில் காணப்பட்ட கொள்கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த இரசாயனப் பொருட்களின் தாக்கத்தினாலேயே இத்தீ பரவல் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக தீப்பரவல் அதிகரித்தது. தீப்பற்றிய கப்பலில், கப்பலின் உரிமையாளரும் ஆபரேட்டருமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் உள்ளிட்ட பன்னிரெண்டு பணிக்குழுவினர் மற்றும் 12 தீயணைப்பு படையினர் உள்ளிட்ட 25 பேர் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

21 மே 2021 அன்று, இலங்கை கடற்படை, இரண்டு கடல் ரோந்து கப்பல்கள்,  சாகரா மற்றும் சிந்துராலா போன்ற கடற்படைக் கப்பல்களையும், தீயணைப்பு மீட்புப் பணிகளில் ஒரு விமானத்தையும் அனுப்பியது.  


மே 22 அன்று, இலங்கை விமானப்படை மீட்புப் பணிகளில் பெல் 212 ஹெலிகாப்டரை நிறுத்தியது.
  
அமிலக் கசிவினில் ஏற்பட்ட   கட்டுப்படுத்தப்பட முடியாத தீயின் காரணமாக மே 25 ஆம் திகதி கப்பலில் வெடிப்பு ஏற்பட்டது. அப்பொழுது இரு இந்தியக் குழு வீரர்கள் காயமடைந்ததால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஏனையோர் பாதுகாக்கப்பட்டனர். 

கொள்கலன்கள் கடலில் விழுந்தன.  தீயணைப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு கடலோர காவல்படை கப்பல்கள், ஒரு இழுபறி மற்றும் டோர்னியர் கடல்சார் உளவு விமானம் ஆகியவற்றை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா அனுப்பியது. 
 
மே 29 அன்று, எக்ஸ்-பிரஸ் முத்தில்  தீப்பிழம்புகள் குறைந்தாலும், கப்பல் புகைத்துக் கொண்டேயிருந்தது. கடல் பாதுகாப்பு ஆணையத்தால் மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். எண்ணெய்க் கசிவுடன் கலக்கப்பட்ட கடல் சுற்றுப்புறம் மாசடைந்துள்ளதால் நைத்திரிக் ஒட்சைட்டு வளியுடன் கலந்து அமில மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரிகள் இறந்துள்ளனர். குறித்த பகுதிக்கு மீனவர்கள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கரையொதுங்கின்ற பொருட்களை கடற்படையினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்துகின்றனர். 


 மே 27, 26,000 கிலோ எடையுள்ள மூன்று பிளாஸ்ரிக் கொள்கலன்களிலிருந்து    பிளாஸ்ரிக் பொருட்கள் கடலில் சிந்தப்பட்டு கரையொதுங்கியுள்ளன. இத்தகைய மாசுக்கள் கடலின் அழகை குறைத்துள்ளன. இப்பேரழிவால் மில்லியன் கணக்கான கடல்வாழ் உயிரினங்களும், பவளப்பாறைகளும் அழிந்துள்ளன என்பது வலி தருகின்ற விடயமாகின்றன. ஒரு பவளப்பாறை  மூன்று அங்குலம் வளர ஒரு வருடம் தேவை. அப்படியாயின் இப்பவளப்பாறைகள் மீள உருப்பெற இன்னும் எத்தனை வருடங்கள் செல்லுமோ?

                               

ஐரோப்பாவிலிருந்து  தருவிக்கப்பட்ட தீயணைப்பு உபகரணங்கள் உள்ளிட்ட இலங்கை அரசின் கடற்படை, விமானப்படையினரின் பெரும் முயற்சியின் பின்னர் கப்பலின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 


கொழும்பு துறைமுகத்திலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் கப்பலானது இழுத்துச் செல்லப்பட்டது. சேதத்தின் தன்மை மற்றும் கடல் வளத்தின் பாதிப்பு பற்றி தற்போது ஆராயப்படுகின்றது. கடலின் மரணம், இயற்கை வள அழிவுக்கான சோகம். கப்பலிருந்து பெறப்படுகின்ற கறுப்பு பெட்டியின் தகவல்கள் விசாரணைகளுக்கு உதவக்கூடும்.

தற்போது இக்கப்பல் கௌரவ ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடுக்கடலில் விடப்படவுள்ளது.

பேரழிவின் அளவு மற்றும் இலங்கை கடலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முறையான சுற்றுச்சூழல் சேத மதிப்பீட்டைப் பெற குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என்று தேசிய திட்டத்தின் நிறுவனர் டாக்டர் அஜந்தா  கூறியுள்ளார்.


தற்போது கப்பலில் இருந்து 80 கிலோமீட்டர் பகுதியில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

கப்பலிலிருந்து வெளியாகியுள்ள மாசானது கற்பிட்டியிலிருந்து காலி கடல் போன்ற நீண்ட தூரங்களுக்கு பரவி, கடல்வளத்தை சேதப்படுத்தியுள்ளது. எதிர்பாராமல் ஏற்படுகின்ற இத்தகைய விபத்துக்களால் இயற்கை வளங்கள் மட்டுமல்ல, நாமும் தீதால் சூழப்படுகின்றோம்.

ஜன்ஸி கபூர் - 02.06.2021


 

யாழ்ப்பாண நூலகம்

 



அறிவினைத் தேடுகின்ற சமூகமே கலாசார பண்பாட்டு ரீதியிலான சிறந்த விழுமியக் கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அறிவின் தளம் புத்தகங்கள். புத்தகங்கள் அணைந்திருக்கின்ற களம் நூலகம். சிந்தனை விருத்திக்குரிய பல தரப்பட்டுள்ள நூல்களை தன்னகத்தே தேக்கி வைத்திருக்கின்ற நூலகங்களை பாதுகாப்பது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கொப்பானது. ஏனெனில் மனிதர்களின் சிந்தனையை வளர்த்தெடுக்கின்ற கூடமாக அதுவே உள்ளது. 


தெற்காசியாவின் சிறந்த நூலகமாகவும் பண்பாடு, கலாசாரம், கல்வி என்பவற்றை பறைசாட்டி நிமிர்ந்து நின்ற அறிவின் அடையாளமுமான  யாழ்ப்பாண நூலகத்தின்பால் எனது பார்வையினைச்   செலுத்துகின்றேன். 

ஒவ்வொரு தனி மனித  முயற்சி, சிந்தனைகள் பிற்காலத்தில் உலகம் பேசுகின்ற அடையாளங்களாகின்றன என்பதை மெய்ப்பிப்பதைப் போல் யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த கனகசபை .முதலித்தம்பி செல்லப்பா எனும் ஆர்வலரே நமது யாழ்ப்பாண நூல் நிலைய தோற்றத்திற்கு வித்திட்டார். 1933.11.11 ஆம் ஆண்டில் தனது வீட்டில் காணப்பட்ட சில நூல்களைக் கொண்டு நூல்நிலையமொன்றை  நிறுவினார்.


 பின்னர் அச்சிந்தனை வலுப்பெற்றதால், 1934.06.09 ஆம் திகதி யாழ்ப்பாண மத்திய கல்லூரி மண்டபத்தில் ஐசக் தம்பையா அவர்களின் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் பொது நூலகமொன்று அமைக்க வேண்டிய தேவை உணரப்பட்டு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

க.மு. செல்லப்பா அவர்களால் திரட்டப்பட்ட 184 ரூபா 22 சதம் மூலதனமாக முன்வைக்கப்பட்டது. பல மக்களின் ஒத்துழைப்பினால் 1934.08.01 ஆம் திகதி யாழ்ப்பாண ஆஸ்பத்திரி வீதி வாடகை அறையொன்றில் சிறிய நூலகம் அமைக்கப்பட்டது. வாசகர்களுக்காக 844 நூல்களும்,  34 பருவ இதழ்களும் பயன்பாட்டிலிருந்தன.

1936 ஆம் ஆண்டின் பின்னர் நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கருகே புதிதாக கட்டப்பட்ட நகர மண்டபத்திற்கு அண்மையில் அது இடமாற்றம் செய்யப்பட்டது.

யாழ் நூலகத்தை நவீனப்படுத்தும் தீர்மானத்திற்கேற்ப பலரது   ஒத்துழைப்பினால், 1953 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. சென்னை அரசின் கட்டிடக்கலை நிபுணர் கே.நரசிம்மன் அவர்களின் வரைபட
 


வடிவமைப்பிற்கேற்ப திராவிட கட்டிடக்கலைப் பாணியைத் தழுவிய இரண்டு தளங்களைக் கொண்ட அழகிய கட்டிடமாக 1959 ஆம் ஆண்டில் நூலகத்தின் பெரும் பகுதிகள் உருப்பெற்றன. எனினும் கட்டிட வேலைகள் முற்றாக முடிய முன்னர், அன்றைய யாழ்ப்பாண மேஜர் அல்பிரட் துரையப்பா அவர்களினால்

 1959.10.11 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. நூலகர் உட்பட 33 பேர் அதில் கடமையாற்றினார்கள். 

 பின்னாளில் எனக்கு நன்கு நினைவிருக்கின்றது. நானும் அதில் அங்கத்தவராக இருந்திருக்கின்றேன். எனது அங்கத்துவ இல 1967. அன்றைய காலகட்டத்தில் நூலக கட்டிடத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றியிருக்கின்றேன். அம்புலிமாமா, நட்சத்திரமாமா கதைப்புத்தகங்கள் உள்ளிட்ட பல நூல்கள் என் கண்களுக்கு விருந்தாகின.

மன உணர்வுகளுள் முரண்பாடுகள் எழுகையில் அங்கு பலவிதமான மோதல்களும்,  சமூக குரோதங்களும் முளைவிடுகின்றன. 1981 ஆம் ஆண்டில் மோதி வெடித்த தமிழ் விரோத இனக் கலவரங்களின் வெடிப்பின் பிம்பமாக யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அறிவுக் கோபுரம் இரவோடு இரவாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 


அந்நாள் 1981.05.31 ஆம் திகதி யாழ்ப்பாண வரலாற்றுச் சுவடுகளில் கறைபடிந்த நாள். 


அக்கினிச் சங்கமத்தில் 1800 ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட விலைமதிக்க முடியாத 97000 நூல்கள் சாம்பராகின. 

இலக்கியம், மொழி, சமயம், தத்துவம் உள்ளிட்ட 6000 பண்டைய யாழ்ப்பாணம் முத்துத்தம்பியின் அபிதான கோசம் மற்றும் அபிதான சிந்தாமணி, சித்த வைத்திய ஓலைச்சுவடிகள் போன்ற  பல அரிதான பொக்கிசங்களை தீ நாக்குகள் விழுங்கின.


அச்சாம்பர் முகடுக்குள் மனித உணர்வுகளின் ஓலங்கள் புதைக்கப்பட்டன. கல்வியை நேசித்தவர்களின் கதறல் ஒலியானது, யாழ்நகரைச் சூழ்ந்த அந்தக் கரும்புகைக்குள் கரைந்துதான் போயின.  அறிவுக்கண்களில் இரத்தக் கண்ணீர் வழிந்தோடின. ஓர் இனவழிப்பின் உச்சக் கட்ட அகோரத்தின் அரங்கேற்றம் மறக்கப்படாத நிகழ்வாக மனதினுள் உறைந்துதான் கிடக்கின்றது.

உருச்சிதைந்து கிடந்த யாழ்ப்பாண நூலகத்தை மீள புனரமைக்கும் சிந்தனைகள் 1984 ஆம் ஆண்டின் பின்னர் தோற்றம் பெறலாயிற்று. 


எனினும் 1997 ஆம் ஆண்டில் அரசியல் பிரமுகர் மங்கள சமரவீர அவர்களின் வெள்ளைத் தாமரை அமைப்பின் Book & Brick  வேலைத்திட்டத்தின்கீழ்  லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களின் ஒத்துழைப்புடன், முன்னர் கட்டிடம் இருந்த அதே இடத்தில் மீளக் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. 2001 இல் மீள மறுசீரமைக்கப்பட்டு தற்போதை தோற்றத்துடன் விளங்குகின்றது. 


தீயில் எரிந்த புத்தகங்களை இங்கு சேகரிக்க முடியாமல் போனாலும் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.நவீன தொழில்நுட்ப அறிவினைப் பயன்படுத்தி புத்தக விபரங்கள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய டிஜிட்டல் உலகில் புத்தகங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவது ஒரு ஆறுதல். 

 வாசிப்புப் பகுதி, இரவல் கொடுக்கும் பகுதி போன்ற பல பகுதிகள் தனித்துவம் பெற்றுள்ளன. நூலகத்தின் உட்கட்டமைப்பில் புத்தக விபரங்கள் நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  


.இழப்பின் வலி அனுபவித்தவர்களுக்கே புரியும் என்பார்கள். சாம்பருக்குள் மூழ்கிய அரிய புத்தக பொக்கிசங்கள் மீளக் கிடைக்குமோ? அன்று நெருப்பில் வெந்த 97000 ஏடுகளும் இன்றிருந்தால் ஒரு பிரதேசத்தின் அறிவின் எழுச்சி சூரியோதயமாக மின்னிக் கொண்டிருக்கும். காகிதங்களுடாக எரியூட்டப்பட்ட சமூகங்களின் உணர்வின் திரட்சி, முழு உலகின் பார்வைக்குள் வீழ்ந்திருக்கும். 

நல்ல நூல்களுடனான நமது நேசிப்பை வளர்ப்பதுடன், நூலகங்களையும் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் தார்மீக பொறுப்பென்றால் மிகையில்லை.

ஜன்ஸி கபூர் - 02.06.2021 

2021/06/01

தொட்டுவிடும் தூரம்தான்

ஆற்றல்களும், திறமைகளும் மனிதனுக்கு இறைவன் அளித்த பொக்கிசங்கள்தான். ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கின்ற அறிவினை தானே இனங்கண்டு, பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை பிரயோகிக்கையில் சாதனையாளர் என்கின்ற கௌரவம் அவரது அடையாளமாகின்றது.

அந்தவகையில் இன்று பேசப்படுகின்ற சாதனையாளன் பிரதீப்

இந்தியா கர்நாடகா குக்கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்த இவர், இன்று உலகமே திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு சாதித்துள்ளார்.

மாணவ பருவத்தில், கல்லூரியில் கற்கின்ற காலத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்துறையிலும் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பே!

இவருக்கும் எலக்ரோனிக்ஸ் துறையில் ஈர்ப்பு ஏற்படவே, +2 படித்துக் கொண்டே, அத்துறையிலும் தனது ஆர்வத்தை, தேடலை, ஆற்றலை வளர்த்துள்ளார். தனது சந்தேகங்களை Scientist id emailக்கு அனுப்பி தெளிவு பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல மின்னஞ்சல் அனுப்பினால்தான் ஒன்றுக்காவது பதில் கிடைக்குமென்ற ஆதங்கம்.

பொறியியல் கல்லூரியில் கற்க ஆசைப்பட்டாலும் தனது வறுமை காராணமாக BSc Physicsல்  இணைந்து கற்கின்றார். மூன்றாம் வருடம் மைசூரில் கற்கின்ற வாய்ப்புக் கிடைத்தபோது, அறியாத ஊரில் தெருவோரமே இருப்பிடமாகின்றது.   ரியூசன் மூலம் சம்பாதிக்கின்ற சொற்ப பணம் அடிப்படைச் செலவுகளுக்கு போதுமாகின்றது.

இத்தகைய வறுமையிலும் இந்த இளைஞனின் இலட்சிய வேட்கை தீரவில்லை. குறைந்த செலவில் பறக்கின்ற இயந்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவரது வலியெல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்கின்றது.  

Courceல் சேருவதற்கு பணம் கிடையாது என்ற காரணத்தினால் C++ Java Core Python Adobe Cloud Computing போன்ற Softwareகளை எல்லாம் சுயமாகக் கற்று, அவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். பின் Bombay, Visakappattinam     போன்ற ஊர்களில் மலைமலையாக குவிக்கப்பட்டிருந்த eWaste Scrap yardல் தேடி அலைந்தார். இப்படியாக தனது Drone Project க்கு ஆகும் செலவை  குறைத்துள்ளார். ஏகப்பட்ட முறை முயன்று தோல்வி அடைந்து பின் மனம் தளராது, தனது   முயற்சியில் வெற்றி பெற்றார்.

IIT நடத்தும் ஒரு Drone Competitionல் கலந்து  கொள்வதற்காக புது தில்லி செல்கின்றார். 3 நாள் இரயில் பயணம். வறுமையின் ஆக்கிரமிப்பின் மத்தியிலும் அப்போட்டியில் கிடைத்த இரண்டாம் பரிசு மாபெரும் உந்து சக்தியாக விளங்குகின்றது. நம்பிக்கை இன்னும் ஆழமாக தன் ஆற்றலை வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கையில்,

அந்நாளும் அண்மிக்கின்றது.

அது....................

ஜப்பானில் நடைபெறுகின்ற போட்டி.

தனது கல்வி பெறுபேற்றுச் சான்றிதழ்களை அடமானம் வைத்தும், தாயாரின் தாலிக்கொடியை விற்று,ம் அறிந்த சிலரின்   இரக்க குணத்தின் உதவியாலும் ஜப்பான் செல்ல ஆயத்தமாகின்றார்.

இடையில் சிறு விடயமொன்று இவரைக் குழப்புகின்றது.

அது...............!

ஜப்பானில் நடக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு Professor Phd  யிடம் இவரது Project Report எல்லாம் சமர்ப்பித்து Approval  வாங்க வேண்டும்.        

கையிலோ முந்நூறு ரூபா. சென்னைப் பயணத்திற்கு இது போதுமா?

ஆனாலும் மனந் தளரவில்லை. வீதியில் உறங்கி, வறுமையின் நெருக்கீட்டைக் குறைத்து, தன் முயற்சியில் வெற்றி பெற வலியுடான போராட்டம் அந்த மாணவனுக்கு.

அந்தப் பேராசிரியரின் கையெழுத்தினைப் பெற பல நாட்கள் காத்திருப்பு.

ஈற்றில் வறுமையையும் வென்று விடுகின்றது தன்னம்பிக்கைப் போராட்டம்.

இரக்க மனங்கள் இருக்கின்ற வரையில் ஏழ்மை இதயங்களின் வலி கொஞ்சம் குறைகின்றதுதானே..

அம்மாணவனின் முயற்சியின் பலனாக ஜப்பான் டோக்கியோ கண்காட்சியில் அவன் தயாரித்த பறக்கின்ற இயந்திரமும் காட்சிக்கு வைக்கப்படுகின்றது. அது 120 நாடுகள் பங்குபற்றுகின்ற எக்ஸ்போ கண்காட்சி.

பலத்த போட்டிக்கு மத்தியில் தன்னம்பிக்கையுடன் ஏதாவது ஆறுதல் பரிசென ஓரிடம் கிடைக்கும் எனக் காத்திருந்தவனுக்கு ........................

அந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கின்றது.

தன்னையே நம்பாதவனாக மீள அவ்வறிவிப்பை அசைபோடுகின்றான் தனக்குள்.

வெற்றியாளராக அவன் பெயர் அறிவிக்கப்படுகின்றது.

முதலாமிடம்!

அவனோ மகிழ்ச்சியின் உச்சத்தில். தாயின் முகம் கண்முன்னால் நிழலாடுகின்றது.

ஒரு ரூபா பணத்திற்காக கஷ்டப்பட்டவன், தன் ஆற்றலால், இலட்சத்தியத்தால் உலகின் கண்களுக்கு சாதனையாளனாக உயர்ந்து நிற்கின்றான்.

ஊரிலேயே அவனைத் திரும்பிப் பார்க்காதோர், விரும்பி இரசிக்கின்றனர் அவன் திறமையை.

உலக நாடுகளின் அழைப்புக்கு மத்தியில், இச்சாதனையாளன் தன் நாட்டில் தானாற்றப் போகின்ற சேவைகளுக்காக கனாக் காண்கின்றான் இன்னுமொரு அப்துல் கலாமாக!

வாழ்த்துவோம் வாழ்வில் இன்னும் வெற்றிகள் குவியட்டும்!

நமது முயற்சிக்கும் வெற்றிக்கும் வறுமை தடையல்ல!

(முகநூலில் அறிந்த தகவல்களை எனது வரிகளில் தந்துள்ளேன்.)

ஜன்ஸி கபூர் - 01.06.2021


எலான் மஸ்க்


பணம் மனித வாழ்வின் போக்கினையே தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக விளங்குகின்றது. செல்வம் கொண்டோர் மனித சமூகத்தின் கௌரவ அடையாளமாகப் பார்க்கின்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

பணம் சம்பாதிப்பதும், அதனை சேமிப்பதும், பாதுகாப்பதும் ஒரு கலைதான். இக்கலை நுட்பம் அறிந்தவர்களை இன்று உலகமும் பெருஞ் செல்வந்தர்களாக பிரமித்துப் பார்க்கின்றது.

"பணம் பாதாளம் வரை பாயும்" என்பார்கள். அந்தப் பணத்தைத் திரட்டுகின்ற வாழ்க்கைப் போராட்டத்தால் பலரது கனவுகளும், சந்தோசங்களும், இளமையுமே காணாமல் போய் விடுகின்றன.

உலகின் ஓர் மூலையை வறுமை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, மறுமுனையிலே செல்வத்தின் உச்சக் கட்டம் இமயம் வரை எட்டி நிற்கின்றது.

இன்றைய வாழ்வினைத் தீர்மானிக்கின்ற மையப் புள்ளியான செல்வத்தை ஆள்கின்ற செல்வந்தர்களுள், முதல் பத்து வரிசையில் இடம்பெற்ற ஒருவரே எலான் மஸ்க்.

இவர் 1971 ஜூன் 28, அன்று கனேடிய தாயிற்கும், தென்னாபிரிக்க தந்தைக்கும் பிறந்தவர். இவர் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் வளர்ந்தார். 

பன்னிரெண்டு வயதாக இருக்கும்போதே, தமது வீடியோ விளையாட்டுக்கு அவரே குறியீடுகளை எழுதி விற்று, பணம் சம்பாதித்த இளம் வயது முயற்சியாளன்.

கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும்,


பின்னர் 


பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். 

பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் படிப்பை அங்குத் தொடரவில்லை.

இவர் டெஸ்லோ நிறுவனத் தலைவர். கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும்  முதலீட்டாளர்.  இவரது சொத்து மதிப்பு 202  பில்லியன் டாலர்களாம். 

அடடா..... ஆச்சரியத்தில் என் விழிகளும் விரிந்து நிற்கின்றன. 

  • 1999 இல் பேபால் என்ற ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்.

  • ஜிப் 2 ஐ தனது சகோதரர் கிம்பலுடன் இணைந்து நிறுவி சில காலம் கழித்து விற்றார். 
  • 1999 இல் எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை  தொடங்கினார்.
  • 2002 ஆம் ஆண்டில்  மஸ்க் விண்வெளி உற்பத்தியாளர் மற்றும் விண்வெளி போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். 

  • 2004 ஆம் ஆண்டில்  அவர் மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா மோட்டார்ஸ் இன்க்  இல் தலைவராகவும் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் சேர்ந்தார். 
  • பிறருடன் இணைந்து இவர் உருவாக்கிய  டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சார மகிழுந்துகள்     ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்தையும் விஞ்சிவிட்டது என 2017 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.

  • 2008 இல் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார். 
  • 2016 இல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார்.
  • 2016 ஆம் ஆண்டில்  நியூராலிங்க் என்ற நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தை அவர் இணைந்து நிறுவினார்.
  • மேலும் சுரங்கப்பாதை கட்டுமான நிறுவனமான "தி போரிங்" நிறுவனத்தை நிறுவினார்.  
  • ஓபன் AI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் நியுராலிங்க் என்ற அமைப்பில், மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் எலான் மஸ்க் முனைப்பாக இருக்கிறார்.
அடடா இவரது சொத்துக்களின் பட்டியல் இவ்வாறு நீண்டு கொண்டே செல்கின்றது. இவ்வாறாக மலை போல குவிந்து கிடக்கின்ற இந்த செல்வத்தின் சொந்தக்காரர் வயது 49 என்றால் வியப்பாகத்தானே உள்ளது.

ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் பெறுமதியான இலட்சியக் கனவுகள் இருக்கும். அவற்றின் உயிர்ப்பிற்காக ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் அயராது உழைக்கின்றார்கள். வணிக நோக்கில் விண்வெளிக் கலங்களை உருவாக்கி, விண்வெளி சுற்றுப் பிரயாணத்தினை நடைமுறைப்படுத்துகின்ற கனவில், முயற்சியில் இருக்கின்றார். 

அதுமாத்திரமல்ல 2024 ஆம் ஆண்டில் மனிதர்களை செவ்வாய்க்கிரகத்தில் குடியமர்த்தும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்.

                                                 

இவரின் நம்பிக்கை பலிக்குமா?
காலம் பதில் சொல்லட்டும்!

ஜன்ஸி கபூர் - 01.06.2021