About Me

2019/05/18

வழி தெரியா வலி

நாகரீகம் விண் முகடு தொட எத்தனிக்கும் போதெல்லாம் பல மனிதர்கள் இங்கு மனிதம் துறந்து கீழ்நிலை புள்ளியாகி விடுகிறார்கள். மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகள் முதன்மை நிலையில் பேசுபொருளாக மாறிவிடுகின்றது காலம் அனுபவங்கள் மூலமாக  வாழ்க்கையை கற்று  தந்து கொண்டிருந்தாலும் கூட  நாமோ அனுபவங்களை புற உறிஞ்சி பாடங்கள் கற்றுக் கொள்ளாமல் வெறுமனே வெளிப்படுத்தும் நிழல்களாவே மாறி வருகின்றோம்



 தான் எனும் அகங்காரம்  மனிதர்களின்  மனிதத்தை உறிஞ்சி விட்டதா ? குருதி நிறம் மறந்து வேற்று வாசிகள் போல் நடந்து கொள்ளும்  கொடுமை எல்லாம் இந்த பூமியில் வேரூண்டி வருகின்றது. இன்று பல மனித மனங்களை சுயநலம் எனும் போர்வை ஆக்கிரமித்து அடுத்தவர்களின் வெறுப்பாளர்களாக  மாற்றிக்  கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் மனசில் இனம் புரியாத வலியை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகள் உருவாக்கி கொண்டிருக்கிறன. சொந்த பூமியில் சோக வாழ்க்கையே தலை விதியாக நம்மை புடம் போட்டுக் கொண்டிருக்கிறன.    வாழ்க்கையே தோற்று போன பிரமை. வறண்டு போன பூமியின் எச்சமாய் போனதோ மனசு. ஈரலிப்பு இன்றி சோர்ந்து போய் துவண்டு கிடக்கிறது. 
.
வாழ்க்கை போராட்டங்களால் சிதைந்து போன மக்கள் மனங்களில் இன்று புன்னகை மறைந்து விட்டது. பிறப்பிடம் அந்நியமான பிரமை . விடியலும், இருளும் வந்து போகும் காலச்சக்கரத்தில் வாழ்க்கை வெறும் நிகழ்வாக மாறி கொண்டிருக்கிறது. உணர்வுகள் எல்லாம் வெறும் சம்பிரதாயங்களாக மனதோடு ஒட்டி கொண்டிருக்கிறதே தவிர உணர்வூட்டங்களாக இல்லை. நிச்சயமற்ற வாழ்வில் நம்மை கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியற்று மாறி விடுகின்றது . 
.
நாம் இறக்கும் வரை வாழத்தான் வேண்டும். வாழ்க்கை நமக்கு இப்போதெல்லாம் வெறும் பேசு பொருளாக மாறி விட்டதே தவிர மானசீகமான உணர்வு அல்ல .
.
-Jancy Caffoor-
18.05.2019