About Me

2014/10/29

24 வருடங்கள்

எங்கள் அகதி வாழ்விற்கு வயது
24.......
.
இதய மின்னும் இற்றுப் போய்த்தான்
இருக்கின்றது....
இரண்டு மணி நேர இனச் சுத்திகரிப்பின்
வீரியத்தில்!
.
நவீனத்தின் பற்றுதலோடு
சுற்றிச் செல்லும் இப் பூமியின் எச்சமாய்
இன்னும்
இடிந்த கட்டிடங்களும்
உருக்குலைந்த மனிதங்களும்
அகதிச் சரிதத்தின்
முகப்புக்களாய் முகங்காட்டித்தான்
கிடக்கின்றன!
.
களமிறங்கும் அரசியல்கள்
கச்சிதமாய் வேட்டுக்களை ஏப்பமிட்டும்
இன்னும் திரும்பிப் பார்க்கவேயில்லை
இருண்ட எம் தாயத்தை!
.
யுத்தம் சப்பிய ஆன்மாக்கள்
நாமாய்...
விரட்டப்பட்டும் மிரட்டப்பட்டும்...
அவலத்தின் சந்ததியாய்- இவ்
அவனிக்கும் பாரமாய்
அந்ததரித்துக் கிடக்கின்றோம்!
.
நிவாரணங்கள் நிர்க்கதியானதில்...
தேய்ந்து போன தாயத் தெருக்கள்
எம் சுவடுகளின்றி
இன்னும்...
குற்றுயிராகத்தான் கிடக்கின்றன!
.
ஆகாயம் வெறித்துக் கிடக்க
அலை புரளும் கடலும்
வியர்த்துக் கிடக்க.........
பனையும் தென்னையும் உரசும்
யாழ்க் காற்றில்..............எம்
மூச்சும் கோர்த்துக் கிடக்கு
மந்தக் காலம் மட்டும்
ஏனோ.......
இன்னும் விடை தரா வினாவாக!
----------------------------------------------------------------------------------------

(30.10.2014 அன்று நாம் யாழ் மண்ணிலிருந்து விரட்டப்பட்டு 24 வருடங்கள் ..............
காலங்கள் ஓடலாம்- ஆனால் எம் ஞாபகச் சுவர்களின் அந்தக் கண்ணீர்த்துளிகள் நாம் மரணிக்கும் வரை ஈரம் உலர்த்தாது.........

உண்மையில்.............

வீடு தேடி அலையும்போதுதான் அகதி வாழ்வின் விரக்திச் சுமை மனதை வருத்தும் அரக்கனாக மாற்றுகின்றது.

முஹர்ரம்


ஒவ்வொரு மனிதரைச் சூழவும் அவர் அண்டி நிற்கும் சமூக, சமய, கலாசார உணர்வுகள் அவர்களது அடையாளங்களாக நிற்கின்றன. அந்த வகையில் முஸ்லிம் மக்கள் முஹர்ரம் எனும் தமது புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளனர்.

ஹிஜ்ரி வருடம் 1436 ன் புதுப் பிரவேசத்தில் பிரவேசிக்கப் போகும் நிலையில் நாம்!

நாட்கள் எவ்வளவு வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. நாமோ ஆமை வேகத்தில் நமது செயல்களுடன் பயணிக்கின்றோம்.

இருந்தும் இதோ நமது புதுவருடத்தின் நிழலில் அண்மித்தவர்களாக நாமிப்போது!

அல்லாஹ் கூறுகிறான் :

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 9:36)

முஹர்ரம் மாதத்தின் முதலாம் நாள் முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகை கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை சீஆக்களால் நினைவுகூரப்படுகிறது.

10 வது தினத்தில் நோற்கப்படும் ஆசுரா நோன்பானது ,
தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக நோற்கப்படுவதாகும்.

வரலாற்றில் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். 
"இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். யூதர்கள் ”இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ”உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 2004.

ஆஷூரா நாள் நோன்பின் சிறப்பை நோக்கினால் -

”ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி 2006

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நாள் நோன்பு முந்தைய ஒரு வருட தவறுகளுக்கு பரிகாரமாகும் என்று நான் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்கின்றேன்.
நூல் : முஸ்லிம் 1976

இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் முஹர்ரம் தொடர்பான கணக்கெடுப்பு பின்வருமாறு கணக்கெடுக்கப்படுகின்றது.
(இன்ஷா அல்லாஹ்)
முஹர்ரம் ஆரம்பம் 25 அக்டோபர் 2014 ----.........இறுதி 22 நவம்பர் 2014

எனவே முஹர்ரம் ..............!

எனும் போர் செய்யத் தடை செய்யப்பட்டுள்ள இப்புனித மாதத்தில் சகல முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் நேர்வழி ஏற்பட்டு அதனூடாக சாந்தி, சுபீட்சம், அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமை ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை புரிவானாக!

                                                                                                                               
- Jancy Caffoor-

ஆசிரியர் தினம்


கடந்த 6.10.2014 உலக ஆசிரியர் தினம் பாடசாலையில் நடைபெற்றபோது தரம் 8 பீ அயாஸ் இப்ராஹிம் எனும் மாணவன் எனக்களித்த அன்பளிப்பு கைக்கடிகாரம்....
.
பொதுவாகவே தமக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாத்திரமே மதிப்பும் கௌரவமுமளிக்கும் மாணவர்களின் நடைமுறையிலிருந்து விலகி, இம்மாணவன் எனக்களித்த இந்த அன்பளிப்பை உயர்ந்த கௌரவமாகவே கருதுகின்றேன்..

தீபாவளி


பட்டாசு வெடிக்கின்றது
இங்கும்.....
வீட்டுத் திக்கெங்கும் அக்னி பிரளயம்....!
வார்த்தை ஞாலங்களின் மோதல்கள்
எரிபொருளாகி...வெறுப்புத்
தீபங்கள் எரிகின்றன தினமும்
ஆனால்.....
அசுரன் அழிந்ததாகத் தெரியவில்லை!



ஆஹா


புகழை தனக்குள் அடிமைப்படுத்தாதவர்.........
ௐருபோதும்.........
 பிறரால் இகழப்படுவதில்லை

--------------------------------------------------------------------------------------------------
தோல்விகள்தான் நமக்குப் பாடங்களைப் புகட்டிக் கொண்டிருக்கின்றன.
ஏனெனில்   தோல்விகள் ஏற்படும்போதுதான் நாம் நமது குறைகளைத் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்கின்றோம்!
--------------------------------------------------------------------------------------


புறம் நோக்கும் நம்  கண்கள் கொஞ்சம் 
அகமும் நோக்கட்டுமே
அப்பொழுதுதான்
அடுத்தவர் நம்மைக் கணிக்கும் எடையை 
நாமே பார்வையிட முடியும்!
--------------------------------------------------------------------------------------------


குளிரோடு சேரும்
உன் நெஞ்சின் பாசம்
பனித்துகள்களாய் உருகி - நம்
நினைவுகளை 
உலர விடாமல் காக்கும்!
ஆனால்
அழகான இந்த இரவில்
நம்மை ரசிக்க
பௌர்ணமியும் இருந்துவிட்டால்!
-------------------------------------------------------------------------------------------


அழகான பூக்களுக்கு
முட்கள்தான் பாதுகாப்பென்றால்
அருமையான வாழ்வுக்குள்ளும்
அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளும் அவசியம்!
-------------------------------------------------------------------------------------------

நேரம் என்பது!
வெறும் கடிகார முட்களலல்ல. நாம் பயணிக்கப் போகும் செயல்களின் வெற்றித் தன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டிய காட்டி!
---------------------------------------------------------------------------------------------------


யாரை அதிகமாகப் பிடிக்கின்றதோ
அவர்களிடம் தோற்றுத்தான் போகின்றோம்
 எமது எதிர்பார்ப்புக்கள்
அவர்களால் நிராகரிக்கப்படும்போது
தோற்றுத்தான் போகின்றோம்!

ஆனால்

தோற்றுப் போகும்போது கிடைக்கும் ஒவ்வொரு அடியும்
நம்மையும் செதுக்கின்றது - நம்
வாழ்வைப் புரிந்து
வாழப் பழகிக்கொள்வதற்கு!
-----------------------------------------------------------------------------

தாய்நாடு நமக்கொரு அடையாளம்.......
நம்மைப் பராமரித்து அடை காக்கும் குருவிக்கூடு!

----------------------------------------------------------------------------------------

ௐரூவரை விரும்ப ௐர் காரணம்
அன்பு.....
வெறுக்க பல காரணங்கள்

-  Jancy Caffoor -