About Me

2012/06/23

மனசெல்லாம் !


மனசெல்லாம் நீயே உருகிறேன் என்னுயிரே!

என் நெஞ்சில் படர்ந்த துடிப்பொலியே 
என் ஞாபகத் தேசத்தின் பொன்முடியே
உருகிறேன் என்னுள் நானே மருகிறேன்
கரைகிறேன் மெழுகாய் நானும் உறைகிறேன்
சிலிர்க்கிறேன் மெல்ல உன்னில் நனைகிறேன்

வெயிலில் கரைந்த பனித்துளியானோம்
வானவில் பிழிந்த ஞாபகங்களானோம்
விரல் பேசும் வீணைகளானோம்
என்னுயிரே என்னுயிரே

என் விழியில் உனை நட்டிப் போகின்றாய்
காதலில் உயிர் நனைத்துக் கொல்கின்றாய்
நாணத்தில் ஒவியமும் வரைகின்றாய்
என்னுயிரே என்னுயிரே 
என் மனசெங்கும் உந்தன் வாசமே
என்னிழலெங்கும் உந்தன் பூவாசமே


இதழில் மின்னலைத் தைத்தவனே
காற்றை கூந்தலில் முடித்தவனே
தேகத்தில் தங்கம் எடுத்தவனே
என்னுயிரே என்னுயிரே
என் மனசெங்கும் உன்தன் வாசம் கோர்க்கிறேன்
என் நெஞ்சில் உன் பாசம் சேர்க்கிறேன்
என்னுயிரே என்னுயிரே

என்னை வார்த்தையால் செதுக்கும் சிற்பியே
என்தன் நிழலுள் வீழ்ந்திட்ட சொப்பனமே
பனிக்குள்ளே உறைந்திட்ட தென்றலே
பறக்கின்றேன் உன்தன் விரல் நனைத்தே
விண் மொட்டில் கோலம் போடத் துடிக்கிறேன்
துடிக்கிறேன் என் தேகம் வேர்த்தே
சிரிக்கிறேன் நானும் சிலிர்க்கிறேன்!

உன் வெள்ளிக் கொலுசின் நாதங்களாய்
என்றும் நாமும் சிரித்திடலாம்
உறையும் பனிக்குள் பதுங்கி நாம்
காதல் தேகம் சிலிர்த்திடலாம்
என்னுயிரே என்னுயிரே
உன்தன நிழலாய் நானும் படர்வேன்
அருகில் வாவா எந்தன் ஜீவனே

விண்ணில் பறக்கலாம் இறக்கை கட்டி
அந்த நிலவை உடைத்தும் வாழ்ந்திடலாம்
மண்ணில் மின்னலை நட்டிடலாம்
என் பொன்னுலடலில் பூவைக் கோர்த்திடலாம்
என்னுயிரே என்னுயிரே
உன்தன் மனம் எங்கும் உந்தன் வாசமே

வெயிலில் கரையும் தங்கச் சிட்டே
கார்க்கூந்தலில் மறையும் வண்ணநிலவே
என்னுயிரே என்னுயிரே
நீயின்றி வாழ்வதும் சாத்தியமோ
உன்னுள் உறைந்திட்ட பாறையும் நானே
என்னுள் வீழ்ந்திட்ட பார்வையும் நீயே
என்னை பிரிப்பதும் சாத்தியமோ
என்னுயிரே என்னுயிரே
என் மனசெங்கும் உந்தன் வாசமே

காதலில் வீழ்ந்தோம் சரித்திரமாய்
இரவிலே அமிழ்ந்தோம் கனவுகளாய்
அடைக்கலமுமானோம் ஆத்மாவினில்
என்னுயிரே என்னுயிரே
என் விழியில் உனை நட்டிப் போகின்றாய்
மனசெங்கும் தென்றலை விட்டுப் போகின்றாய்
என்னுயிரே என்னுயிரே
உன்னை மறப்பதும் சாத்தியமோ
என்னுயிரே என்னுயிரே

ஜன்ஸி கபூர் 


மாற்றம்




என்னுள் தினசரி இறக்கை விரிக்கும்
உன் கனவுகளை 
கத்தரித்தது நீதான்!

முக்காட்டுக்குள் மறைந்திருந்த
என்னுயிருள் 
அமிலம் வார்த்தாய் இன்றேனோ!

அன்றோ 
கல்புல் விரல் தொட்டு
கனவுள் உரு தந்து
காட்சிப் பிழம்பில் நிழல் கலந்து
நெஞ்சில் வளர்ந்தாய் நெடுமரமாய்!

இன்றோ 
அன்பில் கல்லெறிந்து - நீ
காணாமல் போன போது 
இடறி வீழ்ந்த சோகங்களை
உறிஞ்சியெடுத்தேன் கண்ணீருக்குள்!
நாளை 
என் கண்கள் மீண்டுமுன்னிடம்
ஏமாறாமலிருக்க!

புவிச்சுழற்சி வீச்சைப் போல்
என்னுள் வீழ்ந்து கிடந்தவுன்னை
அவிழ்த்து விட்டேனின்று 
பறந்து விடு
உன் சுதந்திர பூமி தேடி!

உன் வாசலில் வீழ்ந்து கிடந்த
என் காலடித் தடங்களை
பெயர்த்து விடு!
நாளை அவை
சாட்சி சொல்லக் கூடும்
நம்மை
உன்னவளிடம்!

ஜன்ஸி கபூர்