About Me

2014/09/27

கற்றல் பெறுபேறு B. Ed

கடந்த 25.09.2014 அன்று எனது கல்விமானிப் பட்டப் பரீட்சை இறுதி வருடப்​பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

அல்ஹம்துலில்லாஹ்!

இப்பெறுபேறுகள் எனக்குக் கிடைக்க  ஆசியளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு முதல் நன்றியைப் பகிர்ந்தவளாய், கற்றலுக்கு ஊக்கமளித்த குடும்பத்தார், வழிகாட்டல் தந்த ஆசான்கள் மற்றும் என்னுடன் கற்றலில் இணந்த வவுனியா கற்கை நிலைய ஆசிரிய நட்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்  உரித்தாகட்டும்




2014/09/26

மனசின் வரிகள்


அந்தகாரத்தில் அந்தரங்கமாய்
கார்கொன்றல் பிழிந்த சில சொட்டுக்கள்............
மண்வாசனை நுகர்ந்ததில்
வெட்கப்பட்டு நனைகின்றது 
இருள்!
------------------------------------------------------------------------------------


மாற்றங்கள் வேண்டும் வாழ்வினில்......
அப்பொழுதுதான்....
உளச்சீற்றங்கள் தணிந்து நம்மை நாமேயாளும்
கொற்றனாய்.....
ஏற்றங் காணமுடியும்!

--------------------------------------------------------------------------------------------------

இரவுகள் சுய விசாரணை செய்கின்றன
என்னில்................
பகலிலே சூழ்நிலைகள் பொருத்திய முகமூடிகளை!
மென்மையின் ஸ்பரிசங்களில்
வீழ்ந்துகிடக்கத் துடிக்கும் மனம்........
இப்போதெல்லாம் .......
வன்மையின் வீச்சுக்குள் - தன்னைத்
தொலைத்துக் கொண்டிருக்கின்றது !


------------------------------------------------------------------------------

நா.......
.
சுதந்திரமாக அலைவதால்தான்...
வார்த்தைகள் கோபத்தின் அடிமையாகின்றன.
அடுத்தவர் மன முருக்கும் கோபத்தைத் தடுத்துக் கொள்ள நாம் போராடுவதுகூட , பிறர் நம்மீது வைத்திருக்கும் மதிப்பைக் காப்பாற்றும் ஓர் அடையாளம்தான்!
.
ஆனால் ..........
.
எத்தனை பேரால்தான் தமது அடையாளத்தைப் பேண முடிகின்றது..............














மொஹமட் ஸல்மான்



அஸ்ஸலாமு அலைக்கும்,


உலகளாவிய ரீதியலி்ல் காலத்திற்குக் காலம் மனிதர்களால் பல்வேறு சாதனைகள் புரியப்பட்டு அவை சாசனங்களில் பதியப்பட்டு வருகின்றன.

ஆனால் ..........

எவ்வித உலகாயுத நன்மைகள், பதவிகள் என்பவற்றை எதிர்பாராது , இறை திருப்தியை மாத்திரம் மனதிலிருத்தி புரியப்படுகின்ற அல்குர்ஆன் மனனமிடல் எனும் இந்த நினைவாற்றல் சாதனை ....உலக நிறைவு வரை நிகழ்த்தப்படும் ஆன்மீகச் சாதனையாகும்...இது பால், அந்தஸ்து, வயது வேறுபாடின்றி அவரவர் முயற்சிக்கேற்றபடி வெவ்வேறு கால இடைவௌியில் நிகழ்த்தப்படும் ஒன்றாகும்..

அல்குர்ஆன் மனனமிடலென்பதும் அல்லாஹ்வின் ஏற்பாடே...

ஏனெனில் அல்குர்ஆன் (87 :6) வசனம் பின்வருமாறு கூறுகின்றது..

"நாம் ஓதக் கற்பிப்போம். நீர் அதனை மறக்கமாட்டீர்' ஆக கற்றுக் கொடுக்கும் பொறுப்பையும் மனத்தில் இருத்தும் பொறுப்பையும் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹ வத ஆலா ஏற்றுக் கொண்டுள்ளான்.."

பொதுவாக அல்குர்ஆன் வசனங்கள் மிக இலகுவாக ஓதும் பொருட்டும் மனனமிடும் பொருட்டும் , எதுகை, மோனை, சொல்லாட்சி, ஓசை போன்ற பண்புகளையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன.

அல்குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் அவற்றில் சரித்திரம், இயற்கை வினோதம், சட்டம், பொருளாதாரம், தர்மம், உரிமைகள், யுத்தம்  லொகீக வாழ்க்கை  உள்ளிட்ட  உடல், உள, தொழில் வாழ்க்கை தொடர்பான சகல விடயங்களும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதானால் அல்குர்ஆன் ஆன்மிக மற்றும் சிந்தனைப் புரட்சிக்கான ஏடு. இதனை ஓதுவோரும், மனனனமிடுவோரும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இன்றைய நாட்களிலே.......

கடந்தவாரம் ...........

எமது பாடசாலையிலும்  அல்குர்ஆன் மனனமிட்டு ஹாபிஸாக ஓர் மாணவர் வௌியேறியுள்ளார்... அல்ஹம்துலில்லாஹ்!

அம்மாணவனுக்கும் நான் கடந்த சில வருடங்களாகப் பாடமெடுத்தவேளையில் அவர் வௌிப்படுத்தியிருந்த நடத்தைப் பண்புகளை லேசாக இன்று நினைவிலிருத்துகின்றேன்..........

அமைதி, அடக்கம், புன்னகை, ஆன்மீகம் போன்ற பல பண்புகள் அவரணியும் அடையாளங்கள்!

அம்மாணவர்!

பாடசாலை மாணவர்களிடையே நான் கண்ட ஒழுக்க முத்து........

ஆசிரியர்களை எப்போதும் கனம் பண்ணும் அந்தப் பண்பின் அறுவடையாளர்
ஜயந்தி மாவத்தை , அநுராதபுரத்தில் வசித்து வரும்.............
மொஹமட் சல்மான் எனும் மாணவனே! தரம் 9 B (2014)

ஆர்ப்பாட்டத்துடன் அலையுமிந்த மாணவப் பருவத்தில் எப்போதும் இவரிடம் அமைதி  அடக்கத்தையே  கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்..

அந்த ஆச்சரியம்.....இன்று பலரின் வாழ்த்தாக மாறியுள்ளது!

பெரியோரைக் கனம் பண்ணும் ஒழுக்கமுள்ள மாணவர், பிறர் பாராட்டும், நேசிக்கும் பண்பாட்டைப் பெறுகின்றார் எனும் கூற்றுக்கு இவரும் சான்றாகியுள்ளார்.

அல்குர்ஆனை மனனமிட்டு ஹாபிஸாகும் இந்த சிறந்த செயலுக்கு அல்லாஹ்வின் கிருபை, இம்மாணவர் முயற்சி, பொருத்தமான வீட்டுச்சூழல், ஆன்மீகச் சமுதாயத்திற்கு வழிகாட்டும் பெற்றோர் தூண்களாகின்றார்கள். இவர்களுடன் சிறந்த கற்றல் ஒழுக்கத்தை வழங்கும் மதரஸாக்களின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

 ஏனெனில் ஒழுக்கமிகு சமூகக் கட்டமைப்பின் அடித்தளமிட இம்மதரஸாக்களும் பங்களிப்புச் செய்கின்றன!

அல்குர்ஆனை நன்கு மனனமிட்டு ஹாபிஸாக மாறியுள்ள மொஹமட் சல்மானிடம் இது தொடர்பாக நான் வினவியபோது, அம்மாணவரும் மனந் திறக்கின்றார் இவ்வாறு!

நான் அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டிருக்கும் போதே அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்டுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்!

அல்குர்ஆனை மனனமிடுவது சற்று கடினமான விடயந்தான் என்றாலும்கூட, அல்லாஹ்வின் கிருபையினால் அது சாத்தியமாகியுள்ளது. இதற்காக நான் மூன்று வருடங்களை எடுத்துள்ளேன். நான் அநுராதபுரத்திலுள்ள ஈமானியா அரபுக்கல்லூரியிலேயே அல்குர்ஆனை மனனமாக்கியுள்ளேன். ஈமானியா அரபுக்கல்லூரியில் நான் இரண்டாவது ஹாபிஸ்...

குர்ஆன் ஓதுவதிலும், கல்வி கற்பதிலும் நான் அதிக நாட்டம் கொண்டுள்ளேன். எனது தந்தையும் ஒரு ஹாபிஸ்..எனது சகோதரியும் மாவனல்லை ஆஇஷா ஸித்தீக்கா எனும் அரபுக் கல்லூரியில் கல்வி கற்கின்றார்.

எனது இலட்சியம் குர்ஆனை மறக்காமலும் பிழையின்றியும் என்றும் நினைவில் வைத்துக் கொள்வதாகும். அவ்வாறே கல்வியிலும் நாட்டம் செலுத்தி மௌலவி ஆசிரியராக எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதாகும்...

எனது இலட்சியம் நிறைவேற அல்லாஹ் த ஆலா துணைபுரிவானாக!
நீங்களும் துஆ செய்யுங்கள்......

என  தனது புன்னகை மாறா முகத்துடன் மன எண்ணங்களைப் பதிவாக்குகின்ற ஸல்மானுக்காக நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்!


2014/09/24

நிலா மோனா



இராக்களில்
கண்களில் கவிழ்ந்து கிடக்கின்றன
உன் கனவுகள் !

பகலிலோ
மூடிய விழிகளைத் திறக்கின்றேன்
நினைவுகளில் உன் முகம்!

காதல் அன்பான அவஸ்தை!
-------------------------------------------------------------------------------

வாழ்க்கையை உன் னன்பில் கற்றுக் கொண்டேன்
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்
நிழலாய் தொடரும் உன் ஞாபகங்களுடன்!
------------------------------------------------------------------------------

ஒவ்வொரு முறையும் உன்னை என்னிடம் விட்டுச் செல்கின்றாய்
முத்தங்களாய்!
------------------------------------------------------------------------------

இந்த உலகத்தில் ரொம்ப பாக்கியசாலி உண்மையான அன்பு கிடைத்தவர்கள்தான். அந்த அன்பை உணரும் இதயத்தின் துடிப்பொலிகள் மகிழ்ச்சியின் அலைவரிசை! ஏனெனில் அந்த அன்பை வார்த்தைகள் அளவிடாது!

என்னவனே!

நீ எனக்குக் கிடைத்த இனிய வரம்டா!
------------------------------------------------------------------------------

வெட்கப்பட்டுக் கிடக்கின்றேன் - நீயென்
பக்கம் வந்து நின்றதால்
பட்டுக் கன்னங்கள் சிவந்தும் நின்றேன் - நீ
தொட்டுச் சென்ற நினைவுகளைச் சிந்தி!
-------------------------------------------------------------------------------

காதல்
உனக்கான என் பரிசு!
இந்த உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஒலிக்கும் காதலின் உச்சரிப்புக்களும், காதலுக்கான பிரார்த்தனைகளும் நம் அன்புக்கான அடையாளங்கள்!
-------------------------------------------------------------------------------

பெருமழை கைக்குட்டை தாங்குமோ
பனிக்குளிரை மெழுகனல் தடுக்குமோ
உன் மௌன முணர்த்தும் பிரிவுத் துயரில்
என் வலி யாறுமோ
அன்பே சொல்!
------------------------------------------------------------------------------

இட்ட மணலையும் தாண்டி தலை நீட்டும் செடிபோல்
கட்டிளங் காளையுன் பார்வையென்னில் படர்கையில்....
நாணம் அவிழ்ந்து விழி விரிக்கின்றேனடா - உன்
அன்பி லென்றும் கரைந்திருக்க!
-------------------------------------------------------------------------------

காலம்தான் மனக்காயத்தின் மருந்து!
சில துன்பம் சீக்கிரம் கரைந்து விடும்
சில துன்பம் நம்மை அரித்து விடும்
------------------------------------------------------------------------------

துன்பம் நெஞ்சைக் கரைக்கும்போதெல்லாம்
கைக்குட்டையாய் நீ!
வலி தீர்க்கும் உன் அன்பால் - என்
வாழ்வின் கற்கள்கூட பூக்களாய் மாறும் அதிசயம் பார்!
------------------------------------------------------------------------------

உன் பார்வை ஒன்றே போதுமே
என் கண்ணீர் ஒற்றிக் கொள்ள!
------------------------------------------------------------------------------

நீ பேசாத பொழுதுகளில்
வானம் கரைந்தோடுகின்றது
எனக்காக!

நீ அருகிலிருக்கும்போது
அந்த வானமே குடையாகின்றது
-----------------------------------------------------------------------------

நீ சூடும் முத்தப்பூக்களை நுகர்வதற்காய்...
ஒவ்வொரு இரவுகளிலும்
உன் னருகில் நான்...
கனவாக!
------------------------------------------------------------------------------

களவாய் கனவில் வந்து
கன்னம் கடிக்கும் கள்வனடா நீ!

அழகாய் சிரித்து
ஆழமாய் உள்ளமிறங்கும் அன்பனடா நீ!

நீ
என் செல்லமடா
-------------------------------------------------------------------------------

உன் உதடுகள்  மௌனம் பிழிந்தால்
என் பார்வைகள்
என்றுமினி தனிமைக்குள் மொய்க்கும்
யாருமின்றி!
-------------------------------------------------------------------------------

எனை மறந்து போனாய்
மனதில் வலி வார்த்து

உயிரறுந்து போகின்றேன்
உனைப் பிரிந்ததில

இருந்தும்
உனக்காய் பிரார்த்திக்கின்றேன்

நிம்மதி தேடும் உன் மனதிற்குள்
இறைவன் அமைதி தருவானாக!
------------------------------------------------------------------------------

உன் முத்தச் சத்தத்தில்தான் - என்
ஒவ்வொரு விடியலும்
சோம்பல் முறித்துக் கொள்கின்றது
என் அன்பே!
------------------------------------------------------------------------------

காதல்!

ஓர் அழகான உணர்வுதான் மறுக்கவில்லை. ஆனால் அந்தக் காதலின் ஒவ்வொரு உணர்வும் அன்பால் எழுதப்படும்போது எழுகின்ற ஏக்கம், தவிப்பு, கூடல், ஊடல், ஆசைகள் எனப் பல மெதுவாக மனதில் ஊர்ந்து அதை அருட்டுமே! அப்போது எழுகின்ற வலி கலந்த சுகம். அதனை வர்ணிக்க வார்த்தைகளேது!
----------------------------------------------------------------------------------

என் கருவிழியில் படரும் விம்பமாய் நீயானதில்
என் நடைபாதையெங்கும் உன் பாதச் சுவடுகள்தானடா!
-----------------------------------------------------------------------------------

உன்னை தினமும் மனப்பாடம் செய்ததில்
என்னையே மறந்துவிட்டேன்
--------------------------------------------------------------------------------------

நாம் தினம் சண்டையிடுவோம்
அப்பொழுதுதான்...........
உன் முத்தங்களும் கொஞ்சல்களும்
அதிகமாக கிடைக்கும் !
---------------------------------------------------------------------------------------

தினம் சண்டையிட்டுக் கொண்டுதானி ருக்கின்றோம்
இருந்தும்.....
உன்னை நானும்
என்னை நீயும்
யாருக்கும் விட்டுக் கொடுப்பதாயில்லை!
என்னவனே...
இதுதான் காதலின் குணமோ!
----------------------------------------------------------------------------------------

காதல்......!

நம்மை ஸ்பரித்துச் செல்லும்போதெல்லாம்

கூடலும்
ஊடலும்

நம் விதி நெய்யும்
ஆயுள் ரேகையாய்!

என்னவனே
அன்பை உன்னிடம்தானே  கற்றுக் கொண்டேன்.!

காற்றும் நுழையா நம் நெருக்கத்தின்
சாட்சியாய் என்றும் நம் நினைவுகள்!
------------------------------------------------------------------------------------
நாம் மௌனிக்கும்போதெல்லாம்
உரத்துப் பேசி விடுகின்றது நம் முத்தம்!

நாம் சண்டையிடும் போதெல்லாம்
நம்மை அமைதிப்படுத்தி விடுகின்றது நம் முத்தம்!

முத்தங்களின் தித்திப்புக்கூட
காதலுக்குச் சுவைதானோ என் அன்பே!
--------------------------------------------------------------------------------------

உன்னை நானும்
என்னை நீயும்
மனதில் சுமந்து
மகிழ்ச்சியாய் மணிக்கணக்காய் பேசுகின்றோம்!

என்ன பேசுகின்றோம்
எதுவுமே புரியவில்லை

இருந்தும்

பேச்சை நிறுத்தும்போதல்லவா - என்
சுவாச மூச்சு திணறுகின்றது!
-------------------------------------------------------------------------------------
உன்னை மறந்துவிட்டு உறங்குவதாய்
திட்டுகின்றாய் இப்போதெல்லாம்

அட

என்னவனே

கனவுகளில் உன் கரம்பற்றி உலாவ வல்லவோ
இவ்வுறக்கம்!
------------------------------------------------------------------------------------
வான்குடை கவிழ்த்து தேன்துளி சிந்தும்
தருணம்
சாரலாய் மெல்லத்தழுவியென்
ஈரமுறிஞ்சும் வண்டாய் உன்னிதழ்கள்!
-----------------------------------------------------------------------------------

மௌனமுடைத்து
நீ
பேசும்போதெல்லாம்
ஆசைகள் வெட்கம் துறந்து
அரவணைத்துக் கொள்கின்றன
உன்னைச் சுற்றியே!
---------------------------------------------------------------------------------
அகிலத்தின் உயிர்ப்போட்டத்திற்கு இயக்கமாக இருக்கும் உன்னதமான உறவே காதல்..

இது  மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்த ஒர் உணர்வு, தாம் நேசிக்கின்றவர், தன்னை நேசிக்கின்றவர் எனும் வட்டத்தின் சுழற்சியின் அச்சாணி. தன் நினைவுகளுள் புரண்டு உயிரோடிணைந்து உயிரை வருடும் தன் நேசிப்பின் நெருடலோடு ஆயுள் முழுதும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற ஆசை. இந்த அன்பு போராட்டத்தின் முதற்படியாகத் தொடங்கினாலும் இறுதியின் உச்சக்கட்டம் ரம்மியமான நினைவுகளின் சுகம்.
காதல் வெற்றி பெறலாம், தோற்றுப் போகலாம். ஆனால் அதன் நினைவுகள் மரணம்கூட பிரிக்க முடியாதது!
-------------------------------------------------------------------------------------
நீ எனும் ஒற்றைச் சொல். என்
வாழ்வின் முடிவுப்புள்ளி!
-------------------------------------------------------------------------------------
என்னிதயத்தை நினைந்து பெருமைப்படுகின்றேன்.
ஏனெனில்
கண்ணீர் கசியும் துன்பம், ஏமாற்றம், சோதனை எல்லாம் என்னை வருத்தும் போதெல்லாம் துடிப்பது இதயம்தானே!
-------------------------------------------------------------------------------------------
தனிமை இனிமையானதுதான் ஆனால் அதைவிட இனிமையானது - தினமும்
அன்பானவர்களால் சூழ்ந்திருப்பது!
------------------------------------------------------------------------------------------------
அன்பை வருடித் தந்தாய்.
உன்னில் உணர்ந்தேன் தாய்மையையும் தூய்மையையும்!
-----------------------------------------------------------------------------------------------
நிசப்தத்தின் இம்சையில் - நீ
விட்டுச் செல்லும் மௌனமே
இனி யென் கவிதையாய்!
----------------------------------------------------------------
மேகங்கள் தீண்டா நிலாப்பெண் நானடா
இருந்தும்
உன்
விரல்கள் தீண்டும் கவிதையாய்
பிறப்பெடுக்கின்றேன்  உன் ஞாபகத்துள் நசிந்தபடி!
----------------------------------------------------------------------------
தோல்வி என்பது அனுபவங்கள் பெற்றுத் தரும் களமேடை

எனவே 

தோல்வியற்ற வாழ்வு கிடைக்கும்போது நாம் நம் அனுபவங்களை இழந்து விடுகின்றோம்......

-  Jancy Caffoor -

2014/09/21

துடிப்பு - 2

துடிப்பு - 2 (இலக்கிய வௌியீடு)
-----------------------------------------------------

எழுதுகோல்கள் எழுத ஆரம்பிக்கும்போதுதான் சமுகங்கள் விழித்துக் கொள்கின்றன. சமுகப்பின்னடைவுகளும் முடிச்சவிழ்க்கின்றன. அந்த வகையில் அவ்வவ்போது பிரசவிக்கப்படுகின்ற இலக்கியச் சஞ்சிகைகள் கல்வி மற்றும் மானுட சீர்படுத்தலுக்குச் சிறப்பாக துணை போகின்றன...அதனாற்றான் கல்விசார் நிறுவனங்களும் பல்வேறு இலக்கியப் படைப்புக்களை சமூக அரங்கிற்குள் அடையாளப்படுத்த ஆர்வப்படுகின்றன...
அந்தவகையில் கடந்த சனிக்கிழமை 13. 09.2014 ல் பதியப்பட்ட இன்னொரு அடையாளம்தான்..........

துடிப்பு - 2 (இலக்கிய வௌியீடு)

இதனை MEDCA வௌியிட்டுள்ளது. இது ரஜரட பல்கலைக்கழக மருத்துவபீட முஸ்லிம் மாணவர்களின் இலக்கிய, கல்வி பிரசவிப்பு

துடிப்பு - 2 

ஜவஹர்ஷா சேர் மூலம் கிடைக்கப் பெற்றேன்..நன்றி சேர்

இம்மலரிற்கு MEDCA தலைவர், CTC குழும நிறுவனத் தலைவர், கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேர் போன்றோர் வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்துள்ளார்கள்..
.
மனித வாழ்வைப் பதியமாக்குபவற்றின் உருவங்களால் பொறிக்கப்பட்ட முகப்பட்டையைப் பார்த்தவுடனே இது மருத்துவபீட மாணவர்களின் ஆளுகை என்பது வௌிப்படையாகின்றது.
.
மருத்துவபீட மாணவர்களின் இலக்கிய வௌியீடென்றவுடன் இதில் பெரும்பாலும் மருத்துவக்கட்டுரைகளே இருக்கலாம் எனும் எடுகோளுடன் புத்தக இதழ்களை விரித்தால், சற்று நாம் ஏமாற்றப்படுகின்றோம். ஏனெனில் அங்கு மருத்துவம், சமுகம், சமயம் சார்பான பலவகையான விடயங்களைத் தழுவிய பிரசுரிப்புக்களே இடம்பெற்றிருந்தன.
.
மருத்துவ மாணவர்களின் உணர்ச்சியேற்றத்தின் விளைவான கவிதைகள் கட்டுரைகள், கதைகளில் யதார்த்தத்தின் சாயல் பரவிக் கிடப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்...
.
கலைப்பிரிவில் கற்கும் மாணவர்களுக்கே இலக்கியம் எனும் நிலைப்பாடு நீங்கி. இன்று விஞ்ஞான, மருத்துவத் துறை சார்பானோரும் எழுத்துக்களைப் பதிவிப்பது ஆரோக்கியமான நிகழ்வே!
.
எழுத்துக்களால் ஆளுக்காள் சொல்லப்படும் விடயம், விதங்களின் பரிமாணங்கள் வேறுபடலாம். அவற்றின் ஆழங்களின் வீச்சிலும் வித்தியாசங்கள் தென்படலாம். ஆனால் இம்மலரில் எழுத்தணிகள் பேசப்படும் நளினங்கள் , அதற்கேற்ற படங்கள் என்பன ரசிக்கும்படியாக இருக்கின்றன.
.
மாணவர் பெயர்ப் பட்டியல்கள், புகைப்படங்கள், கல்வி, அறிவியல், ஆன்மீகம், மருத்துவம் சார்பான கட்டுரைகள், கவிதைகள், கதைகள் காத்திரமானதாக எழுத்துக்களைப் பிரசவித்திருந்தன. எனினும் ஆக்கங்களை எழுதியோரின் பெயர்களை தௌிவான எழுத்து வடிவத்தில் பதித்திருக்கலாம்.
இந்நூலின் உள்ளடக்கத்தில் பார்வையைச் செலுத்தினால்.....

பெண்களுக்கான மார்பகப்புற்று நோய் தொடர்பான கட்டுரை ,இஸ்லாத்தின் பார்வையில் இன்சுலீனின் நிலைப்பாடு போன்ற மருத்துவத் தகவல்களின் பதிப்பு ஆழமான விடயங்களை முன்வைக்கின்றன.

அவ்வாறே மருத்துவ மறுமலர்ச்சியில் முஸ்லிம்களின் வகிபாகம், இஸ்லாத்தின் பார்வையில் நோயும் மருந்தும், முஸ்லிம் சமுகத்தின் எழுச்சி போன்ற கட்டுரைகள் முஸ்லிம்களின் கல்வி, கலாச்சாரம், ஆரோக்கியம் சார்பான பார்வையை முன்வைக்கின்றது.

முகநூல் சாதித்தவையும், பாதித்தவையும் விமர்சனமும் சிந்தனைக்குரியது..
மருத்துவபீட மாணவர்களின் கலை, இலக்கிய ஆற்றலை மங்கச் செய்யாமல் இவ்வாறான வௌியீடுகள் வௌிவருவது பாராட்டக்கூடியதே.......
வாழ்த்துக்கள்!

- ஜன்ஸி கபூர் -

தங்கமீன்கள்

தங்கமீன்கள் - விமர்சனம்
-----------------------------------------


நீண்டநாட்களின் பின்னர் நல்ல திரைப்படமொன்றை பார்த்த திருப்தி, மனநிறைவு...இது அப்பா, மகளுக்கிடையே உள்ள பாசப் போராட்டத்தை விளக்கும் படம்.
.
 தன் பாசமிகு மகளை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே உள்ளூரில் கிடைத்த ஈயம் பூசும் வேலையை குறைவான சம்பளத்துக்குப் பார்க்கும் அப்பா கல்யாணி (ராம்), தன்மீது பாசம் வைத்திருக்கும்  தந்தையின் பணப் பிரச்சினைகளுக்கு தானே காரணம் எனப் புரிந்து குளத்தில் மூழ்கி இறந்து தங்கமீனாய்ப் போகவும் தயாராகும் மகள் செல்லம்மா...

இந்த இருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள்தான் தங்க மீன்கள்.

தந்தையின் அளவற்ற பாசம், தனியார் பள்ளியின் கொடுமை, பொருளாதார நெருக்கடி எனும் பின்புலத்தில் நகர்கின்றது தங்கமீன்கள்.

மகளின் பள்ளிக் கட்டணம் கட்ட எவரெவரிடமோ கையேந்தி அவமானப்படும் ராம், வசதியான சொந்தத் தந்தை தரும் பணத்தை வாங்க மறுக்கின்றார். சுயகௌரவம் இங்கே ஆழமாக முக்காடிடுகின்றது. தந்தையுடன் அப்படி என்னதான் ஈகோவோ?

 'கல்யாணி, அதான் உன் பெண்ணுக்குத்தான் ஒரு அம்மா இருக்காளேடா.. நீ வேற எதுக்கு இன்னொரு அம்மா மாதிரி உன் பொண்ணு பின்னாலயே சுத்தற... போய் வேல வெட்டி பார்த்து நாலு காசு சம்பாதிச்சு எல்லோரும் மதிக்கிற மாதிரி நடந்துக்க,"

என ராமின் அப்பா திட்டும்போது  ஏற்பட்ட பிரச்சனையில் தனது மனைவி, மகளை விட்டுவிட்டு கொச்சிக்கு செல்லும் ராம், அங்கேயே வேலை பார்க்கின்றார். அவருடைய மகளோ அவரிடத்தில் வோடபோன் நாய் குட்டி வேண்டும் என்று கேட்கிறார்.  அதன் விலை 25000 ரூபாய் . ஆனால் அவரிடம் அதை வாங்குமளவிற்குப் பணமில்லை. அந்த நாய்க்குட்டியை வாங்கப் போராடுகின்றார்.

ஆனால் மகளோ  தனது அப்பா, வோடபோன் நாய் குட்டியை வாங்கி வர மாட்டார் என்று நினைத்து, குளத்தில் குதித்து இறந்து தங்க மீனாகிவிடலாம் என்று  முடிவு செய்கிறாள்.



தெருக்களில் குழந்தைகளை தனியாக அனுப்ப யோசனை செய்யும் இக்காலத்தில்,  தமது பாச மகளை  ராமும் அவர் குடும்பமும் அவள் இஷ்டத்துக்கு வீதியில் திரிய விடுகிறார்கள். அதனால் அவளோ தங்க மீன்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி ஆபத்தான குளத்தில் இறங்குவதும் வீட்டார் செல்லம்மாவைக் காணவில்லை எனத் தேடுவதும் க்ளைக்மாக்ஸ் வரை தொடர்கின்றது.

அவள் தங்க மீனாக ஆனாளா அல்லது ராம் அவளை மீட்டு வந்தாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

சிறு குழந்தைகளின் மனதில் பதிக்கப்படும் எண்ணங்கள் அவர்களின் செயல்களுக்கு காரணமாகின்றன என்பது கதையின் கிளைமாக்ஸின் உயிர்நாடி........

இயக்குனர் ராம் அப்பாவாக, கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோருக்கு வெகு இயல்பான வேடம். மகளாக நடித்திருக்கும் சிறுமி சாதனாவின் நடிப்பு மெச்சும்படியாக இருந்தது. பாடல்கள், யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை எல்லாமே ரசிக்க வைக்கின்றன

தனது மகளிடம் இருக்கும் குறைகளை யெல்லாம்  நிறையாக எண்ணி, தனது மகளுக்காக ஒவ்வொரு இடத்திலும்  போராடும்  ராம், பிள்ளைகளுக்காக உருகும் அப்பாக்களுக்காக இப்படத்தை சமர்ப்பித்திருக்கின்றார். ஆனால் மறுபுறம் ஒரு தந்தை தன் மகளை எப்படி வளர்க்கக் கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகின்றது மறைமுகமாக..........


பல இடங்களில் நெகிழ்வான இயல்பான கதையோட்டம். ஒரு குடும்பத்தை அருகிலிருந்து தரிசித்த உணர்வு...

தங்கமீன்கள் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய திரைப்படம்...


சைவம்



சைவம் - திரைவிமர்சனம்
-----------------------------------------
வெறும் பொழுதுபோக்குக்குத்தான் சினிமா எனும் பாணியில் செல்லும் தற்போதைய சினிமாக்களில் இடைக்கிடையே குடும்பத்தினருடன் சேர்ந்து பார்க்கக்கூடிய நல்ல படங்களும் வருகின்றன. 

அந்தவகையில் சைவம்...........
.
குடும்ப உறவுகளைப் பேணி நிற்கும் நல்லதொரு திரைக்கதை!
.
இன்று இயந்திரமயமான குடும்ப வாழ்க்கைப் போக்கில் கூட்டுக்குடும்பம் தன் செல்வாக்கினையிழந்து நின்றாலும், சில வீடுகளில் அது தன் செல்வாக்கினைப் பேணி நிற்கின்றது.
.
 செட்டிநாடு அன்பு, பாசம், உறவுகளின் அருமை ஆகியவற்றைப் பெரிதாக நினைப்பதும், உறவுகளுக்காக நிறைய விட்டுக் கொடுப்பதுமான மண் வாசனையை இழந்து விடவில்லை. அந்த மண் வாசனையுடன் வந்திருக்கும் படம்தான் இயக்குநர் விஜய்யின் சைவம்.
.
செட்டிநாட்டின் ஒரு பகுதியான கோட்டையூரில் வசித்துவரும் கதிரேசன் (நாசர்) என்ற பெரியவரின் குடும்பத்தினர் பல இடங்களில் பிரிந்து வாழ்ந்தாலும் விடுமுறைக்காக சொந்த ஊரில் ஒன்று கூடி மகிழ்வை வௌிப்படுத்துவார்கள்..அவர்களின் சந்தோச நாட்களிடையே திடீரென ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை, சாமிக்கு செய்யாமல் விடப்பட்ட நேர்த்திக்கடன்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் என நம்பி , சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல்.
.
ஆனால் பலி கொடுக்கப்பட வேண்டிய அந்தச் சேவல் தொலைந்துபோகிறது. சேவல் கிடைத்தால்தான் குடும்பத்தின் மகிழ்ச்சி திரும்பும் என்ற சூழ்நிலையில் அந்தச் சேவலைத் தேடுகின்றார்கள்.
.
அந்தச் சேவல் கிடைத்ததா? அதனை யார் ஔித்து வைத்தார்கள்? சாமிக்கு பலி கொடுக்கப்பட்டதா? அமைதியிழந்து தவித்த உறவுகள் இறுதியில் என்ன செய்தார்கள்? ஒவ்வொருவரின் பிரச்சினைகளும் தீர்ந்ததா?
.
இதுதான் கதையின் இறுதிநகர்வு.

தவறு செய்பவர்கள் தம் தவறுக்கு மன்னிப்பு கேட்கும் விதம் நெகிழ்வின் நெருடல்...சேவலைத் தேடும்போது ஏற்படும் பரபரப்பு........சேவலைத் தேடும் போது வரும் சண்டைகள் ..........சேவலைப் பலிகொடுக்கப் பூசாரி கத்தியை ஓங்கும்போது ஒவ்வொருவராய் தமது தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கும் விதம்...நாசர் மகன் லுத்ஃபுதீன் பாஷாவின் துரு துரு நடிப்பு..

படத்தின் மையப் பாத்திரமாக நடித்துள்ள குழந்தை சாராவின் நடிப்பு..
.
காதல், சண்டை, குட்டீஸ் அட்டகாசம், பாசம் என திரைக்கதை ஒவ்வொரு வடிவங்களிலும் இயல்பாக நடமாடுகின்றது. ரசிக்கும்படி இருக்கின்றன. சகல கதாபாத்திரங்களையும் விஜய்  அவரவர் இயல்பில் நடமாட விட்டிருக்கிறார். நாசர் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.  இசை, பாடல்கள் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது.

ஆனால்..........
.
இது குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம். படத்தின் பெயரை ஏன் சைவம் என வைத்தார்கள்? புரியவில்லை.


அன்பு


தாயிடமிருந்து கிடைக்கும் அன்பை இவ்வுலகில் யாரிடமுமிருந்தும் நாம் பெற முடியாது..அந்தத் தாய்மையின் ஸ்பரிசம் நமக்குக் கற்றுத் தந்த இவ்வன்பை , நம் மனதின் முகவரியாக்கினால் பண்பான வாழ்க்கை நமக்குச் சொந்தமாகும்....

அன்பு பற்றியதான சில ஹதீஸ்கள்..
--------------------------------------------------------
‘மனிதர்களுக்கு அன்பு காட்டாதவருக்கு அல்லாஹ் அன்பு காட்டமாட்டான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
-------------------------------------------------------------------------------------------------------
"இரு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் (அன்புடன்) கை குலுக்கிக் கொள்வார்களானால், அவர்கள் இருவரும் பிரிந்து செல்வதற்கு முன் அந்த இருவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்"  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(அறிவிப்பவர்: பராஃ (ரலி) அவர்கள், அபூதாவூத்).