About Me

Showing posts with label சிந்தனைக்கு. Show all posts
Showing posts with label சிந்தனைக்கு. Show all posts

2021/04/30

பிரச்சினைகள்


இப்படித்தான் வாழ வேண்டுமென எல்லோருக்கும் எதிர்பார்ப்புக்களும், ஆசைகளும் இருக்கும். ஆனால் எதிர்பாராத சூழ்நிலைகள் நம்மை திசை திருப்பி விடுகின்றபோது நிலைகுலைந்து போய் விடுகின்றோம். 

பிரச்சினைகள் சூழ்கையில் ஏன் பிறந்தோமென்ற தவிப்பிலும், விரக்தியிலும் மூழ்கி, நகர்கின்ற ஒவ்வொரு நாட்களும் நரக நெருப்பில் நிற்பதாக உணர்வோம். ஆனாலும் பிரச்சினைகள் நம்மைச் சூழும்போதுதான் சிந்திக்கின்றோம். அதற்குள் உருவாகின்ற புதிய பாதைகளைக் கண்டறிகின்றோம்.


ஜன்ஸி கபூர் - 30.04.2021

2021/04/26

சந்தோசம்

நம் சந்தோசம் நம் வசமே. நமது இயல்பான நடத்தைகளிலேயே அது தங்கியுள்ளது. ஆனாலும் கிடைக்கின்ற சொற்ப சந்தோசங்களையும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் வட்டத்தினுள் நம்மைச் சுழற்றி அடுத்தவர்களுக்காகவே நம்மை நம்மிடமே விட்டுக் கொடுத்து மனதின் நிம்மதியை இழந்து விடுகின்றோம்.

ஜன்ஸி கபூர்

அவசரம்

இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்ற உலகம் இயற்கையால்  சூழப்பட்டிருக்கின்றது. மண்ணில் வீழ்கின்ற வித்துக்கள் மறு விநாடியே மரம் ஆவதில்லை. கருவுக்குள் உருவாகின்ற உயிர்கள் இவ்வுலகைக் காண பத்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். பருவ மாற்றங்களோ, காலநிலையோ படிமுறைச் சுழற்சிக்கமைவாக செயற்படுகின்றன.

'மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான்' (17:11) 

என்ற திருக்குர் ஆனின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை   நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆனால்   இந்த நவீன உலகத்தில் வாழ்கின்ற மனிதர்களின் செயல்களில் காட்டப்படுகின்ற அவசரம் எனும் மாயையின் விளைவாக பல எதிர்பாரத விளைவுகள் நம்மை ஆட்கொள்கின்றன. 

நிதானமே பிரதானம் என்பார்கள். ஆனால் பொறுமை இழக்கப்படும்போது நிதானமும் காணாமற் போய்விடுகின்றது.

 ஏன் அவசரப்படுகின்றோம்?

எதற்கு அவசரப்படுகின்றோம்?

சிந்திக்கின்றோமா .....

நினைத்தவுடன் கிடைக்க வேண்டுமென்ற அவசரப் பண்பால் நமது அவசியமான சிந்தனைகள் செயலிழந்து போய் விடுகின்றன. 

பல சந்தர்ப்பங்களில் நாம் எடுக்கின்ற அவசர தீர்மானங்கள், முடிவுகள் என்பன நமது இயல்பான வாழ்வையே திசை திருப்பி விடக் கூடியன.

தற்கொலை செய்வதும் அவசர உணர்வுக் கோளாறே!

விபத்தும்கூட அவசர வேகத்தின் வேதனைப் பக்கமே!!

அவசர வார்த்தைப் பிரயோகங்கள் நம் பெறுமதியான ஆளுமையையே கேலிப்படுத்தி விடும். மன உணர்வுகளை சினம் ஆட்கொள்ளும்போது ஏற்படுகின்ற வார்த்தைப் பிரயோகத்தை அவசரமாக வெளியேற்றும்போது பிறரின் பகைமையும், குரோதங்களும் நமக்குச் சொந்தமாகின்றன.

தோல்வியில் முடிகின்ற சில காதல்கள்கூட அவரமாக எழுகின்ற எதிர்பால் கவர்ச்சியே....

அவசர அவசரமாக கொறித்து உண்பதைப் போல் ஆகாரமெடுக்கின்ற இன்றைய பலருக்கு ஆரோக்கியமும் கெட்டே போய்விடுகின்றது.

நாம் அவசரப்படும்போது பதற்றம் நம்மை அணுகுகின்றது. எதிலும் திருப்தியற்றுப் போகின்றோம். நம் நம்பிக்கை பொய்த்து விடுகின்றது. ஈற்றில் செய்யப்படுகின்ற வேலைகள் செல்லக் காசாகி விடுகின்றன.

திட்டமிடலுடன் கூடிய தீர்மானம் நமக்குள் இருந்தால் நாம் எதற்கும் அவசரப்படமாட்டோம்.

எனவே அவசியமான வாழ்வில் அவசரம் தவிர்த்து வாழ்வோம்

ஜன்ஸி கபூர் - 26.04.2021

 


வெற்றியைத் தேடி

சாதனையாளர்களின் சரித்திரப் பக்கங்களை வாசிக்கையில் எந்தவொரு சாதனைகளும் இலேசில் கிடைப்பதில்லையெனத் தோன்றும். அந்த வெற்றியாளனின் வாழ்க்கைக்குள் இருக்கின்ற கடினமான உழைப்பு நம் கண்களுக்குள் தெரியும்.   மானசீகமாக உழைக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் வெற்றியைத் தேடுகின்ற நம்பிக்கை இருக்குமாயின் கிடைக்கின்ற ஒவ்வொரு சிறு வெற்றிகளுமே நமது      வாழ்வையே மாற்றியமைக்கின்ற சக்திகளாக மாறி விடுகின்றன.

உயரப் பறக்கின்ற பறவையின் முதல் அடி கூட மெல்லிய தத்தித் தத்திப் பறப்பதற்கான முயற்சிதான். நம்பிக்கையுடனான அந்தப் பயிற்சிதான் நீண்ட வானில் சுதந்திரமான உலாவுகைக்கான உத்வேகமாக மாறுகின்றது. நாமும் சாதனையாளர்களாக மாறுவோம்.

ஜன்ஸி கபூர் - 26.04.2021


2021/04/25

ஒவ்வொரு விடியலும்

 

ஒவ்வொரு விடியலும் எல்லோருக்கும் நம்பிக்கைக்கான ஒளி விளக்குதான். மனதிலே தேங்கிக் கிடக்கின்ற நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள் இன்றாவது நிறைவேறுமென மீள எதிர்பார்த்து காத்திருக்க வைக்கின்றது. நினைத்த எண்ணங்கள் மீள ஏமாற்றமாகி சோர்ந்து விழுகையில் நாளைய விடியலாவது விடை தருமென மீள மனதில் புதிய நம்பிக்கையுடன் வாழ்தல் தோல்வியை வாழ்விலிருந்து நகர்த்தி விடுகின்றது.

இலவசமாகக் கிடைக்கின்ற கற்பனைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் காலம் இலேசில் பதில் தருவதில்லை. சோர்வான மனங்கள் சோபை இழக்கையில் விரக்தி நம்மைச் சூழ்ந்து விடுகின்றது. எனவே கிடைக்கின்ற தோல்விகளை உதிர்க்கின்ற வரையில் நம்பிக்கையுடன் வாழ்வோம்.

Jancy Caffoor - 25.4.2021


2021/04/24

இயலாமை

இயலாமை என்பது தோற்றுப் போகின்ற வாழ்விற்கான அடையாளம்தான். நம்மிடையே காணப்படுகின்ற பலகீனங்களை கண்டறிந்து, அவற்றை பலமாக்க முயற்சி செய்யாதவரை இயலாமையும் நம்மை மோப்பம் பிடித்துக் கொண்டே இருக்கும். 

இயலும் எனும் மந்திரச் சொல்லால் போராட்ட வாழ்வில்கூட, மகிழ்வின் வாசம் வீசிக் கொண்டேயிருக்கும். நமது பாதையில் குறுக்காகிக் காணப்படுகின்ற தடைகளைப் பார்த்து  தயங்கி நிற்கின்ற இயலாமையை கசக்கி வீசியெறிந்து விட்டு தடைகளைத் தகர்க்கின்ற வழிகளைக் கண்டறிதல் வெற்றியின் பக்கத்தில் நம்மை நிறுத்தும்.

ஜன்ஸி கபூர் - 24.04.2021


2021/04/23

வசந்தமும் ஒரு நாள்

அழகான பட்டாம்பூச்சியொன்று சில நாட்களாக அந்தப் பூக்களைச் சுற்றி சுற்றி வருகின்றது. காற்றோடு உரசுகின்ற அதன் சிறகுகள்   அமுதத்தின் போதை நினைப்பில் ஆசையுடன் உராய்கின்றன.

நாட்கள் செல்லச் செல்ல ஈர்க்கப்பட்ட புற அழகின் கவர்ச்சி படிப்படியாகக் குறைய,

 ஒரு நாள் அந்த மலரின் பார்வையிலிருந்து நீங்கி விட்டது அந்தப் பூச்சியும்.....

அந்தப் பூச்சிதான் மனதோ.....

வாழ்க்கையில் எதுவும், எந்த உணர்ச்சியும் யாருக்கும் நிரந்தரமில்லை. இயல்பான வாழ்வில் மனம் போராடும்போது, புற மாயைகளிலிருந்து நீங்கி விடுகின்றது. ஆசையும், அதிசயமும் கலவையாகி ஜொலித்த ஒவ்வொன்றும்  அந்நியமாகி விடுகின்றன.

இதைத்தான் இரசித்தோமா 

ஆச்சரியம் நம்மை விழுங்கி விடுகின்றது.

மனதில் ஊற்றெடுத்த ஆசைகள் மங்கிப் போக,   மறுதலையாக ஏமாற்றமும் அலுப்பும்   ஒன்றன்பின் ஒன்றாக நம்மைத் துரத்த ஆரம்பிக்கின்றன. 

ஒரு குறித்த காலத்தின் பின்னர் நாம் ஆசைப்பட்ட விடயங்களை அசை போட்டுப் பார்ப்போமாயின், அவை சாதாரண விடயங்கள்போல் நம்மை விட்டுக் கடந்து போயிருக்கும். நம்மைப் பற்றிய சுய விசாரணையின்போது அட இதற்குத்தான் இப்படி முக்கியத்துவம் கொடுத்தோமா என நம்மையே நாம் திருப்பிக் கேட்போம். ஏனெனில் அன்பைத் தவிர அனைத்துமே காலவோட்டத்தில் காணாமல் போய்விடுகின்றன.

ஜன்ஸி கபூர்

2021/04/22

வெற்றி

 

சிறு புள்ளிதான் ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஆரம்பம். அது சிதைவதும், சீராகுவதும் நமது மனோபலம், முயற்சி, விருப்பில் தங்கியுள்ளது. செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அர்ப்பணிப்பான தொடக்கமொன்று இருக்குமாயின், அச்செயலின் வெற்றிக்குள் நமது நிழலும் மகிழ்ந்து கொண்டிருக்கும்.

ஜன்ஸி கபூர்

2021/04/21

வாழ்க்கை

 

வாழ்க்கை என்பது எதிர்பார்ப்புக்களின் தொகுப்பு. நிதர்சனத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான தொங்கு பாலமாகவே காணப்படுகின்றது. ஒவ்வொரு விடியலும் விரிக்கின்ற ஆசைகள் சில நிறைவேற பல மறைந்து விடுகின்றன. இன்றைய இழப்புக்களை நாளைய நம்பிக்கைகள் நிறைவேற்றும் எனக் காத்திருந்து காத்திருந்து பல காலாவதியாகி விடுகின்றன. ஆனாலும் அடிமனதில் யாரும் அறிந்திராமல் படிந்திருக்கின்ற ஏமாற்றங்களும் வலியின் சுவடுகளும் நம்மைக் கடந்து செல்லும் நொடிகளை கசக்கி விடுகின்றன. வசந்தத்தை எதிர்பார்க்கின்ற வாழ்வியல் எதிர்பாராத மாற்றங்களால் தன் சோபையை இழந்து விடுகின்றது என்பதே யதார்த்தமாகும்.  

ஜன்ஸி கபூர் - 21.04.2021

2020/07/20

மனிதர்கள் ஏன் மகிழ்ச்சியே நோக்கி மட்டும் பயணிக்க விரும்புகிறார்கள்

வாழ்க்கை என்பது நீண்ட தேடல். ஓவ்வொருவரும் தமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் வெற்றி பெற வேண்டுமென்றே எதிர்பார்ப்புடனே பயணிப்பதால் மகிழ்ச்சியை அடிமனம் விரும்புகின்றது. மகிழ்ச்சியும் ஒரு ஊக்கம் தருகின்ற உணர்வுகளே. மகிழ்வான மனநிறைவில் செயல்களை விருப்புடன் செய்வதால் இலகுவாகவும் தவறின்றியும் செய்ய முடிகின்றது. ஏனெனில் மகிழ்வு உற்சாகத்தின் உந்தலாகும். ஒரு மனிதன் தன்னை உற்சாகமாகத் தேடி அனைத்துக் காரியங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு   மகிழ்ச்சி அவசியமாகின்றது.

அகமகிழ்வின் ஆற்றல் வெற்றியில் குவிகிறது என்பது திண்ணம்

ஜன்ஸி கபூர் 

2020/04/08

கொரொனா.....!


கொரொனா.....!
இந்த நாமத்தை உச்சரித்துக் கொண்டே வலி மிகுந்த நாட்களுடன் நாம் அனைவரும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். மரண பயத்தையும் புறந்தள்ளியவாறு பலருக்கும் வாழ்க்கைப் பயம் பீறிட்டுப் பாய்கின்றது. அன்றாடம் உழைத்து வாழும் பலருக்கு வறுமைத் தாக்கம் முறுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் வெறும் ஏக்கப் பெருமூச்சுக்களே முகடுகளைத் தொட்டு நிற்கின்றன. 

  பாடசாலை மாணவர்களின் பல பெற்றோர்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். வறுமைச்சூழலில் வாழ்பவர்கள். தற்போதைய சூழ்நிலையில் சொல்லெணாத் துயரங்களுடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கண்ணீர்த்துளிகளில் சிலவற்றையாவது உலர்த்தி விட மனம் துடிக்கின்றது. இருந்தும் என் கரங்களில் தற்போது வெறுமை....

அத்தகைய வறுமையில் வாடும் பெற்றோர்களுக்கு பாடசாலை சமூகம்சார்பில் உதவிகளை வழங்குவது மனிதாபிமானக் கடமையாகின்றது. இன்றைய சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பழைய மாணவிகள் மற்றும் நலன்விரும்பிகள் எம்முடன் இணையுங்கள்.

இதனை வெறும் தகவலாகக் கடந்து செல்லாமல் இரக்கத்துடன் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் எனது உள்பெட்டியில் இணையுங்கள். உங்கள் உதவிகளை அப்பெற்றோர்களுக்கு சேர்த்து விடுகின்றோம்.

"உரிய நேரங்களில் கிடைக்கின்ற ஒவ்வொரு உதவியும் மிகப் பெரிய பெறுமானமுள்ளவை."

2019/06/25

அவசர வாழ்க்கை

அழகான வாழ்க்கை இறைவனால் மனிதனுக்கு கிடைத்த பொக்கிஷம். அந்த வாழ்க்கையைப் பெறுமதியுள்ளதாக மாற்றுவது நமது கடமையாகிறது. கிடைத்த வாழ்வை வசந்தமாக்குவதும், பாழாக்குவதும் நாம் வாழ்க்கையை அணுகும் விதத்திலும், செயற்பாட்டிலும் தங்கியுள்ளது.   வாழ்க்கை என்பது நீண்ட பயணம். அந்தப் பயணத்தில் நாம் பல தரிப்பிடங்களை நம் குணங்களால் அடையாளம் காண்கிறோம் 

மனித மனங்கள் பல்வேறு குணங்களின் சேர்க்கை மையம். அக்குணங்களில் ஒன்றுதான் அவசரம். ஆனாலும் மனிதனின் விரும்பாத, தகாத குணம்தான் இந்த அவசரம்.

"மனிதன் அவசரக் குணத்துடன் படைக்கப்பட்டுள்ளான்" 
அல் குர்ஆனில்  கூறப்பட்டுள்ள இவ் வசனம் அவசரத்தை வெறுத்து விடுகின்ற இஸ்லாம் நன்மையான காரியங்களை செய்யச் சொல்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

"ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு"
"ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது"
 இப் பழமொழிகள்  அவசரத்தின்   பண்பை கோடிட்டுக் காட்டுகின்றது.   

இன்றைய நவீன உலகமானது ஒவ்வொரு நொடிகளில் மிக வேகமான நகர்வுகளைக் கொண்டிருக்கிறது. இதனால் மனிதராகிய நாம் நமது தேவைகளை தக்க வைக்க அவசரமாக இயங்குகிறோம். அவசரம் என்பது விவேகமானது அல்ல. அது நமது சிந்தனையை மிக வேகமாக  இயக்கி, சறுக்கி விடுகிறது. இங்கே "கீழே விழுதல்" என்பது நமது பலமான சக்திமிக்க எண்ணத்தில் இருந்து நாம் விலகி நிற்பதாகும். "அவசரமான குணம்" நமது வெற்றி வாய்ப்புக்களை பின்னோக்கி நகர்த்தி விடுகின்றது.

நம்மால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு காரியங்களும் இலக்கு நோக்கி நகரும். இலக்குகள் வெற்றி பெற்றால் சிறப்பான விளைவு எட்டப்படும். இந்த சிறப்பான காரியங்கள் தவறினை நோக்கி போவதற்கு அவசரம் காரணமாகின்றது.  அவசரம் மனித வாழ்வின் பெறுமதியான கணங்களை விழுங்கும் அரக்கன்.  நம் மிகச்சிறந்த சிந்தனைகளைக் கூட இவ் அவசரமான செயற்பாடுகள்   வீணாக்கி விடுகின்றன.

நமது பலகீனமான குணங்களில் அவசரமும் ஒன்றே! அவசர புத்திக்காரன் தனது செயல்களை நிதானத்துடன் செய்வதில்லை. அவனது பார்வையில் பதற்றம் முக்கிய புள்ளியாகக் காணப்படுகிறது. அவசரம் எனும் இயற்கைக்  குணத்தை மாற்றுதல் என்பது கல்லில் நாருரிப்பது  போல்தான். 

தவறுகளின் வாசட் படியாகவும் இந்த அவசரத்தை கருதலாம். நாம் நமது காரியங்களைத் திட்டமிட்டுச் செய்யும் போது நேரம் போதிய அவகாசம் தரும். அக்காரியங்கள் தொடர்பாக நன்கு சிந்திக்க முடியும். நல்ல விடயங்களின் பால் மனம் நகரும். பக்குவம் நம் வசமாகும். நேர்ச்சிந்தனை வயப்பட்ட நிலையில் நமக்கு சாதகமான விடயங்களை மட்டும் நாம் நினைக்க முடியும்.  
மறுதலையாக மனம் ஒன்றாமலோ அல்லது கடைசி நேரத்திலோ காரியங்களை அவசர அவசரமாகச் செய்யும் போது அவை சிதறி விடுகின்றன. 

சிலர் வார்த்தைகளையும் அவசர, அவசரமா வெளிப்படுத்துவார்கள். இவ்வாறாக கருத்துச்செறிவில்லாத, பெறுமதி அற்ற வார்த்தைகள் வெளிப்பட்டு, அவை பிறரிடத்தில் நமது பெறுமதியைக் குறைத்து விடுகின்றன. அதுமாத்திரமின்றி அடுத்தவருடனான முரண்பாடுகளையும், கோபதாபங்களையும்  இயல்பாகவே ஏற்படுத்துகின்றன.

எனவே சூழ்நிலைகளை அனுசரித்து அவசரமின்றி, நேரத்தையும் செயல்களையும் திட்டமிட்டுச் செய்யும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும். 

ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது!

- Jancy Caffoor-
 25.06.2019 

2019/06/23

விருப்பம்

Image result for விருப்பம்

ஒரு விடயம் தேவை என்று எண்ணும் எண்ணமே விருப்பத்துக்கு வித்திடுவதாக உளவியல் மற்றும் சமூகவியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.  விருப்பம் என்பது மனதில் படிந்துள்ள ஆசைகளின் படிமம் ஆகும். உள்ளத்தின் எதிர்பார்ப்புக்கள்.  இதனை உள்ளத்தின் ஈர்ப்பு மையமாகமாகவும் கருதலாம். விருப்பம்  மனிதர்களுக்கிடையில் வேறுபடுவதால்தான் ஆசைகளின் அளவுகளும் வேறுபட்டு முரண்பாடுகள் தோன்றக் காரணமாகின்றன. ஆழ்மனதினை தொட்ட விருப்பங்கள் மாறுவதில்லை.  நம்மை தங்கி நிற்கும் மனதை போசிக்கக் கூடியது விருப்பு.  கால மாற்றத்தின் வேகத்திற்கு இது ஈடு கொடுக்கக் கூடியது.  

விருப்பு ஏற்படும் செயல்கள் நமக்குள் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அந்த ஆர்வ நிலையானது செய்யும் செயல்களில் தொய்வு ஏற்படாமல் தடுக்கின்றன.  விருப்போடு செய்கின்ற செயல்களுக்கு சக்தி அதிகம். எனவே அவை மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியவை. மனித வாழ்வில் ஒவ்வொரு வயதுக் கட்டமைப்பிலும் விருப்பங்களின் தன்மை மாறுபடுகின்றன.

ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு பொருத்தமான ஒன்றை அடைய வேண்டும் என்ற உணர்வே விருப்பம் எனப்படுகிறது. உறவுகளில் ஏற்படுகின்ற விருப்பம் அன்பாக மாற்றப்படுகிறது. ஒன்றின் மீது ஏற்படும்  விருப்பத்தினால் மனம் முழுமையாக ஈர்க்கப்பட்டால் அவ்விருப்பின் எல்லையில் இருந்து விலகாமல் தன் விருப்பத்தை நிலை நாட்ட மனம் முழுமையாகப்   போராடும்.  

இன்று இந்த பூகோளத்தின் பல சவால்களுக்கும் மனிதன் தனது விருப்பினால் இயற்கையை வசியப்படுத்த எடுக்கும் முயற்சிகளே காரணமாக இருக்கின்றன. அளவுக்கதிகமான விருப்பு அழிவின் வாசற்படி  என்பதை பலர் காலம் கடந்தே உணர்கின்றார்கள். 

தேவைகளின் அடிப்படையில் இயற்கை பரிமாணம் அடைந்துள்ளது. ஒருவரின் தேவைகளை நாம் இனங்கண்டு நிறைவேற்றும்போது  அவர் நம் மீது விருப்பம் கொண்டிருப்பார். அவரின் பற்றுதல் அன்பாக மாறும். இதனால் இருவரின் உறவுகளும் உறுதியாகி  இறுக்கமான தொடர்பைப் பேணும்.

உணர்ச்சிமிகுந்த சுயநல நாட்டத்தின் காரணமாக ஏற்படும் விருப்பமானது பல திசை உறவுகளையும்  ஈர்த்து வைத்திருக்கின்றது. நமது மனம் பிடிக்காதவர் கள் எது சொன்னாலும் அவர்கள் கருத்துக்களை நாம் உள்வாங்கிக் கொள்வதில்லை.  முரண்பாடுகள் பிசைந்து   விலகிக் கொள்கின்றோம். காரணம் நமது மனம் விரும்பாத ஒன்றின் மீது ஆர்வமோ பற்றோ ஏற்படுவதில்லை. 

- Jancy Caffoor -
   23.06.2019


2019/05/18

வழி தெரியா வலி

நாகரீகம் விண் முகடு தொட எத்தனிக்கும் போதெல்லாம் பல மனிதர்கள் இங்கு மனிதம் துறந்து கீழ்நிலை புள்ளியாகி விடுகிறார்கள். மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகள் முதன்மை நிலையில் பேசுபொருளாக மாறிவிடுகின்றது காலம் அனுபவங்கள் மூலமாக  வாழ்க்கையை கற்று  தந்து கொண்டிருந்தாலும் கூட  நாமோ அனுபவங்களை புற உறிஞ்சி பாடங்கள் கற்றுக் கொள்ளாமல் வெறுமனே வெளிப்படுத்தும் நிழல்களாவே மாறி வருகின்றோம்



 தான் எனும் அகங்காரம்  மனிதர்களின்  மனிதத்தை உறிஞ்சி விட்டதா ? குருதி நிறம் மறந்து வேற்று வாசிகள் போல் நடந்து கொள்ளும்  கொடுமை எல்லாம் இந்த பூமியில் வேரூண்டி வருகின்றது. இன்று பல மனித மனங்களை சுயநலம் எனும் போர்வை ஆக்கிரமித்து அடுத்தவர்களின் வெறுப்பாளர்களாக  மாற்றிக்  கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் மனசில் இனம் புரியாத வலியை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகள் உருவாக்கி கொண்டிருக்கிறன. சொந்த பூமியில் சோக வாழ்க்கையே தலை விதியாக நம்மை புடம் போட்டுக் கொண்டிருக்கிறன.    வாழ்க்கையே தோற்று போன பிரமை. வறண்டு போன பூமியின் எச்சமாய் போனதோ மனசு. ஈரலிப்பு இன்றி சோர்ந்து போய் துவண்டு கிடக்கிறது. 
.
வாழ்க்கை போராட்டங்களால் சிதைந்து போன மக்கள் மனங்களில் இன்று புன்னகை மறைந்து விட்டது. பிறப்பிடம் அந்நியமான பிரமை . விடியலும், இருளும் வந்து போகும் காலச்சக்கரத்தில் வாழ்க்கை வெறும் நிகழ்வாக மாறி கொண்டிருக்கிறது. உணர்வுகள் எல்லாம் வெறும் சம்பிரதாயங்களாக மனதோடு ஒட்டி கொண்டிருக்கிறதே தவிர உணர்வூட்டங்களாக இல்லை. நிச்சயமற்ற வாழ்வில் நம்மை கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியற்று மாறி விடுகின்றது . 
.
நாம் இறக்கும் வரை வாழத்தான் வேண்டும். வாழ்க்கை நமக்கு இப்போதெல்லாம் வெறும் பேசு பொருளாக மாறி விட்டதே தவிர மானசீகமான உணர்வு அல்ல .
.
-Jancy Caffoor-
18.05.2019

2012/08/08

ஐ லவ் யூ சொன்னால்....


இப்பொழுதெல்லாம் .  வீதியோரங்களில் அநாவசியமாக   வீசியெறிப்படுகின்ற உணர்வே காதலாகி விட்டது. காதலாகி கசிந்து மனமுருகி உணர்வுகளை வார்க்க வேண்டிய இந்தக் காதல், இன்று நாகரீகவுலகில் அதன் அர்த்தம் தெரியாமல் அலைமோதுகின்றது.

பல போலிக்காதல்கள் சிறு சலன தூறல்களில் காளான்களாகி கண்காணும் இடங்களிலெல்லாம் பூத்திருக்க, உண்மைக் காதல்களும் உயிர் தளிர்த்து  கண்களை குளிர்ச்சிப்படுத்துகின்றன.

இத்தகைய இயல்புமிகு இக் காதலை என் பார்வையின்று "ஐ லவ் யூ" எனக் குதூகலிக்கும்  அசையும் படங்களினூடாக ரசிக்கின்றது. இப்பதிவைக் கண்டதும் சிலர் ரசிக்கலாம். சிலர் முகம் சுளிக்கலாம். 

வார்த்தை "தீ"யென்று உச்சரிக்கும் போது நா சுடுவதில்லை. காதலைப் பற்றி சொல்பவர்கள் எல்லாம் காதல் அனுபவம் கொண்டவர்கள் அல்ல.

இந்த முன்னுரையோடு உங்களுக்கும் "ஐ லவ் யூ " சில விசயங்களை ரகஸியமாகச் சொல்லப் போகின்றது.


வாலிபப் பருவமென்பது வசந்தங்களைத் தேடியழைக்கும் பருவம். சுடுகின்ற யதார்த்தங்களை விட சுகமான கனவுகளை நாடிக் கிடக்கும் பருவம். உள்ளம் ரகஸியமாய்த் தேடும் சுகந்தமான உணர்வின் அறைகூவலில் எதிர்பாலினர் தொடர்பான இரசாயனமாற்றங்கள் அதிகளவில் கசிந்து பொசிந்து கலவையாகும் போது தூதுக்கள் மன்மத அம்புகளாகி குறித்த இதயத்தின் காலடி தேடி ஓடும்.

ஏற்றுக் கொள்ளப்படும் காதல்கள் முத்தத்தை மொத்தமாய் கொள்வனவு செய்ய, நிராகரிக்கப்படும் காதல் தூது தன் வாழ்வை சோகத்துள் நனைத்து நிற்கும்.குறித்த இருவரிடத்தில் பற்றுதல் கூடுதலாகி ஈர் இதயங்களும் கிறக்கத்தில் ஓரிதயமாய் வீழ்ந்து தமக்கிடையே தம் உயிர்சாசனத்தில் காதல் ஒப்பந்தத்தை எழுதிவிடுகின்றனர். மன்மதன்களின் கூடலிலே பல ரதிக்கள் மயங்கிக் கிடக்க காதல் வரலாறு அவர்களுக்குள் ஆனந்த புன்னகையை விசிறியவாறு எழுதப்படத் தொடங்குகின்றது.



மனித மனங்களை நந்தவனங்களாக்குவதும், மயானங்களாக்குவதும் இந்தக் காதல்தான். காதல் என்பது இதயவேலிகளில் நாட்டப்படும் முள்வேலி என்பதால் பிறரின் காதல் தூதுக்களை  உள்ளே நுழைய விடாமல் தடுக்கின்றது. கற்பனைகளின் அரங்கேற்றம் காதல் மனங்களிலேயே பெரும்பாலும் ஒத்திகை பார்க்கப்படும் போது காதல் வயப்பட்ட இருவரும் ஒருவரையொருவர் தமக்குள் ஆபரணங்களாய் அணிந்து தம் காதல் உறவுக்குள் வலிமை சேர்க்கின்றனர். அவர்கள் எந்நேரம் உச்சரிக்கும் மந்திரம் "ஐ லவ் யூ " தான்.



கண்கள் வழியாக இறங்கும் காதல் கருத்துக்களில் படிந்து இதயத்தில் சங்கமித்து உணர்வாகி உயிராகும் போது திருமணம் எனும் சடங்கால் அந்தஸ்து பெற முனைகின்றது. மனங்களால் ஒன்றித்தவர்கள் தங்கள் கனவுகளை உயிர்ப்பிக்கும் வரை நிஜம் தொலையும் கற்பனை உலகில் கலந்து கிடக்கின்றனர். அவர்கள் இதயம் இடமாறிக் கொள்ள, விழிகளும் அவர்களைச் சுற்றியே படர்கின்றது. அவர்கள் இதயம் சங்கமிக்கும் உலகில் அவர்களது காதல் நினைவுகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. பிறர் பற்றிய பார்வைகளை அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.


தங்களுக்குள் நிதம் நிதம் நிரம்பும் கனவுகளுக்கு உருவேற்றி, அக் கனவுகளின் சிலிர்ப்புக்குள் தன் அன்பானவர்களையும் அடக்கி விடத் துடிப்பார்கள். உணர்வுகள் ஏந்தும் ஆசைகள், கனவுகளை மையாக்கி, அவர்களின் மென் கரங்களைச் சூடேற்றி மோகத்தில்  தவிக்கும் காதல் கடிதங்களாய் மாற்றி, தன் துணையின்  முகம் தரித்திருக்கும் முகவரிக்குள் கடிதங்களைச் நுழைத்து விட காதல் மனங்கள் துடிக்கின்றன.  அக் கடிதத்தின் அழைப்பு மணி "ஐ லவ' யூ' என கோஷித்துக் கொண்டேயிருக்கும் அடுத்த கடிதம் காணும் வரை!


 எதிர்காலம் அவர்கள் கண்முன் விரிய  அக் கடிதங்களில் பல முறை பார்வையைப் பதித்து  அடிக்கடி தம் நிஜ வாழ்விலிருந்து விலகி, கற்பனை ராஜாங்கத்தின் சிம்மாசனத்தில் இருவருமே ஏறியமர்ந்து  முடி சூடிக் கொள்கின்றனர்.காதலர் கரம் சேரும் கடிதங்களும், அவர்களின் நேச அன்பளிப்புக்கும், உயிர்ப்பான வார்த்தைகளின் ஞாபகங்களுமே இவர்களின் ஆயுட்கால ஆவணங்களாய் உயிருக்குள் ஏறி உட்கார்ந்து கொள்ளும் காலம் முழுதும்!

காதல் ஒரு போதையாகவும், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாகவும் விளங்குவதால் காதல் வயப்பட்டவர்கள் மகிழ்ச்சியூற்றுக்களில்  நிதம் தம்மை நனைத்து துன்பமிகு யதார்த்தங்களிலிருந்தும் விலகி விடுகின்றனர்.  சிறகடிக்கும் அழகிய வண்ணத்துப்பூச்சிகளாய் இருவரும் தம்முலகில் பறக்க முயற்சிப்பதால் புறவுலகை அவர்கள் மறந்து பிறரின் பார்வையில் வெறும் கண்காட்சிப் பொருட்களாய் மாறி விமர்சனத்துக்குள்ளும் வீழ்ந்து விடுகின்றனர் சிறு பிள்ளைத்தனமாய்!


புகையைப் போல காதலையும் மறைக்க முடியாதென்பார். இருவர் மனப்பூர்வமாக ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து வாழ முயற்சிக்கையில் அவர்களையுமறியாமற் காதல் மோகத் தீயை அடுத்தவர் கண்களுக்குள் விசிறி விடுகின்றனர்.அவனும் நோக்க அவளும் நோக்க அவர்களிருவரையும் ஊரார் நோக்க உள்ளத்தில் மோகித்து சுடர் விட்டெரியும் காதலொளி பிறர் பார்வையில் தீப்பந்தமாய் வெளியே எட்டிப் பார்க்கின்றது. ஊர் பார்வைக்குள் உருளும் காதல்களில் சில  திருமண முழக்கத்தில் மனம் மகிழலாம். சில பெரியவர்கள்  எதிர்ப்பில் முறிந்தும் போகலாம்.


அழகு ஒரு கவர்ச்சியான ஊக்கியாகவிருந்தாலும் கூட  பல காதல் முக வழகு தேடாது அகத்தின் இருப்பில் படிந்திருக்கும் மெய் யன்பின் எதிர்பார்ப்பிலேயே குறி வைத்திறங்குகின்றன. நண்பர்கள் துணை நிற்க தம் எதிர்பார்ப்புக்களை வாழ்க்கையாக்க பல மனங்கள் போராட்டத்தில் களம் குதித்தாலும், சில மனங்களோ எதிர்ப்பின்றி இல்லற பந்தத்தில் பெரியோர் ஆசியுடன் நுழைந்து வாழ்வைத் தொடங்கி விடுகின்றனர்.



வாழ்த்துவோம் நாமும் காதலர்களை!

அவர்களின்  அன்பு தாலியாய் பெண் கழுத்தில் மங்கள நாண் பூட்ட, அவர்கள் தடங்கள் பயணிக்கும் வாழ்க்கை யோரங்களில் வீழ்ந்து கிடக்கும் முட்களெல்லாம் மென்மலர்களாய் உருமாறி அவர்களை ஏந்திக் கொள்ளட்டும் கால முழுவதும் !


இனி அவர்கள் மௌன வுலகில் நமக்குள் அனுமதியில்லை.  அவர்கள் உலகில் அவர்களே தனித்திருக்கட்டும் தம் கனவுகளைப் பரிமாறிக் கொள்ள !


-Jancy Caffoor-