About Me

2020/08/01

அன்புக்குப் பஞ்சமில்லை

 

'என்னப்பா....செய்யுது.......காய்ச்சல் காயுதே.......இந்த இரவுல ஆசுபத்திரிக்கு எப்படி போறது......எனக்கென்டா ஒன்னுமே புரியல'

கண்கலங்கிய சாரதாவை ஆறுதல்படுத்தினார் மணி.

'இங்க........பார் புள்ள எனக்கு ஒன்னுமில்ல லேசான காய்ச்சல்தான். நாளைக்குப் பார்க்கலாம்'

என்றவரை மீண்டும் இடைமறித்தாள் மனைவி சாரதா. 

'சொன்னா கேப்பியளோ.........ஒங்களுக்கென்ன மழயில நனைஞ்சிட்டு சும்மா இருமிட்டு இருப்பீங்க. என்ர மனுசு படுற வேதனை ஒங்களுக்குத் தெரியுமா' 

தான் அணிந்திருந்த சேலைத் தலைப்பால் தனது மூக்கை உறிஞ்சித் துடைத்தாள் அவள்.

'புரியுது சாரு........ஒனக்கு நான்........எனக்கு நீயுன்னு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அன்ப ஆண்டவன் உடைப்பான்னு நெனைக்கிறியா. பேசாம தூங்கும்மா...நாளைக்குப் பார்க்கலாம்'

என்றவரை கவலையுடன் பார்த்தாள் மனைவி. 

'சரி இந்த மாத்திரைகளையாவது குடிச்சிட்டுப் படுங்கோ என்னப்பா' 

என்றவாறு மனைவி கொடுத்த மாத்திரைகளை வாங்கி விழுங்கினார் மணி.

மணி சாரதா தம்பதியினருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. யாரிடம்  குறையிருக்கிறது என்பதை அவர்கள் தேடிப் பார்க்கவுமில்லை. மணி ஓய்வு பெற்ற அரச ஊழியர். அந்த ஊரில் நடைபெறும் எல்லா   விடயங்களிலும் அவரைக் காணலாம். 'மாஸ்டர் சுகமோ' என காண்பவர்களெல்லாம் கேட்டு விட்டே செல்வார்கள். அவரின் மனைவி சாரதா அவருக்கு முறைப்பெண் என்பதால் அன்புப் பொருத்தத்தை தவிர வேறெந்த பொருத்தத்தையும் குடும்பத்தார் பாராமலே  திருமணத்தில் இணைத்து வைத்தார்கள்.
  
'என்னங்க....இப்ப எப்படி இருக்குது'

இருளையும் துளைத்துக் கொண்டு வந்த அவளின் குரல் அவரை மெதுவாக உசுப்பியது. அவளைப் போல அவரும் தூங்காமல் தன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

'இப்ப பரவாயில்ல தூங்கு புள்ள'

அவரின் வார்த்தைகளில் நம்பிக்கையில்லாதவளாக அவரின் உடலைத் தொட்டுப் பார்த்தாள். மனசு லேசான உணர்வு. நிம்மதியாக உறங்கப் போனாள்.

இந்த உலகத்தில் சிறு துன்பம் வந்தாலே நெடுந் துயர் கொண்டு வருந்துகின்ற அன்புள்ளங்களை சம்பாதிப்பதே மிகப் பெரும் சேமிப்பு. அந்த இனிய தம்பதிகளின் அன்புக்குத்தான் பஞ்சமேது....ஆனந்த உலகம் அவர்களுக்காக விரிந்து கொண்டிருக்கிறது அழகாக.

ஜன்ஸி கபூர்  
 



 

விரிவாக்கமும் விளைச்சலும்


விரிந்திடும் அபிவிருத்தி விரட்டுது மாந்தரை/
விரித்திடும் வலையிலும் சிக்கவும் வைக்குது/
அரித்திடும் கறையானாய் வேரினைப் பிடுங்குது/
அழகென்ற பெயரினில் அவலமும் ஊட்டுதே/

விரிவாக்கம் செய்கையில் சுருங்கிடுமே வளங்களும்/
வியப்பூட்டும் வீதிகள் கண்ணீரிலே நனைந்தோடும்/
கண்ணை விற்றே வாங்கிடும் அழகால்/
பண்ணை வயல்களின் உயிர்த்துடிப்பும் அறுந்திடும்/

எண்ணற்ற தெருக்கள் புண்ணாக்கும் வயல்களை/
எண்ணங்களில் சோகம் வார்த்திடும் அகோரமாய்/
ஊரையே அழித்திடும் நவீனத்தின் ஓட்டத்தால்/
உயிர்களின் சாபமே பெரும் விளைச்சலாகும்/

ஜன்ஸி கபூர்  



 

ஹஜ் பெருநாள் கவிதை

பத்தாம் பிறைமுனைப் பேனாவில் துளிர்க்கும் தியாகத்தின் பிரகாசம் - 

துல்ஹஜ் பத்தில் முழங்கிடும் தக்பீரும்
துணிந்திட்ட தியாகமதை நமக்குள் திருநாளாக்கும்
அணிந்திட்ட புத்தாடையும் இசைந்திடும் நறுமணமாய்
இனித்திடும் பலகாரம் கனிந்திடும் உறவெனவே
சூழ்ந்திடும் மனதைத்தான் பள்ளியும் தானழைக்கும்

தீனொளிச் சுவைதனில் தீதுக்கள் கரைந்திடவே
தீட்டிடுவோம் நன்மைதனை துரத்திடுவோம் முரண்களையே
எட்டுத்திக்கெங்கும் இப்றாகிம் நபியவரின் 
இறையன்பில் வியந்து நிற்க
கொட்டிடுமே  மாண்புகளும் ஈகையேந்தும் அழகினிலே

கனவுக் கட்டளையும் கருத்தை நிறைத்ததனால்
கல்பின் வெளியெல்லாம் உயிர்த்திடுமே தியாகம்தான்
புத்தாடை புனைந்தே புதுப் பாதை அமைத்திடவே
பக்குவமாய் நாமும் வாழு 
நமக்குள்ளும் உரைத்திடுமே தியாகத்தை

பிறை ஒன்பதிலே அரபா நோன்பும்
பிரார்த்தனைகளுடன் குர்பானும்
இறையன்பை வருடும் நமக்குள்
இதயங்களையும் இணைக்கும் உறவாய்

இறையன்பின் ஆழமும் சிகரமென உயர
இணைந்திட்டோம் நாமே சாந்தி நெறியினில்
இறை பள்ளியில் மறை ஓதிடும் நெறி வாழ்வுதனில்
இதயமும் நனைந்தே வாழட்டும் தினம்

ஈதுல் அழ்காவின் ஈகையழகை ஈர்த்திடும்
ஈகையாளரின் மாண்புகளும் உவப்பேறி போகுமே
சுங்கை பொருந்திய திருநாளில் சமூக 
இடைவெளி நாம் பேணி
இல்லாதொழிப்போம் தொற்றுக்களை
வல்லோனின் ஆசி பெற்று
வையகத்தினில் வாழ்ந்திடுவோம் நலமாக

ஜன்ஸி கபூர்

01.08.2020 ஆம் திகதியன்று இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 
கவிதா சாளரம் விசேட நிகழ்வில் ஒலிபரப்பான எனது கவிதை
 

இல்லறத் தாய்


நாகரிகத் தேடலும் 
மௌனித்துக் கிடக்கும்/

நவீனத்து வாழ்வின் 
நளாயினியைக் கண்டே/

நினைவில் வந்தவன் 
பெருநோய் கொண்டதனால்/

நீங்கிடுமோ மெய்க்காதலும் 
பாசமும் துறந்தே/

நுகர்ந்திட்ட காதலும் 
வலிதனை மறந்து/

நெஞ்சத்தில் ஏந்திடும் 
இல்லறச் சுவைதனை/

வறுமையும் முதுமையும் 
துரத்திடும் போதிலும்/

வலிமை கொண்டே 
காத்திடும் அன்பிது/

ஜன்ஸி கபூர் 
 





2020/07/31

உறங்காத உண்மைகள்

முழுமதி முற்றத்திலே பறந்திடும் கவிகள்/
வழுக் காணா அற்புதப் படைப்புக்களே/
தழுவி யணைக்கையில் மணக்கும் செந்தமிழே/
முழுமையும் பெற்றதே சிறந்த குழுமமாய்/

ஜன்ஸி கபூர்  


நீ நான் குடை மற்றும் காதல்

 

காதல்!
நமக்குள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது!

காற்றின் விரல்களாய்
மாறிக் கொண்டிருக்கிறாய் நீயும்!
நானோ
வெட்கத்தில் வெடிக்கிறேன் 

இறுக்கிக் கொள்கிறதே மழையும்
உந்தன் குறும்பாய் 
நானோ  
கரைகிறேன் ஈரத்துளிகளின் சுவைதனில்!

வெட்டும் மின்னல்கள் தொட்டிடுமோ என்னையுமே 
கட்டியணைக்கிறாய் உந்தன் காதலால்
வானும் முறைக்க!

தூரத்திலே  
தூங்கிடா கார்மேகங்கள் 
மௌனிக்கிறதே நம் மோனக் காதல் கண்டே!
உந்தன் கரங்களும் 
என்னுள் காதலைப் பின்னிடுகையில்
மின்னலாய் வெடித்தே ரசித்திடும்!

எந்தன் நெற்றி முத்துக்களை உடைக்கும்
உந்தன் பார்வை கண்டே 
சிறகு விரிக்கும் வண்ணக் குடையும்
உறவாகி எனைத் தழுவும் உனைப் போல!

அடடா 

இருளை நசித்தே 
மெல்லிய மேகத் துளிகள்
நமை வாசிக்கத் தொடங்கி விட்டனவே ஆவலாய்!

நாமோ 
யாத்துக் கொண்டிருக்கிறோம்
புதுக் காதல் இலக்கணத்தை!
நீ_நான்_குடை_மற்றும்_காதல்

ஜன்ஸி கபூர்  
 



  
 
 
 

வாழ்க பல்லாண்டு

நிலவொளி அசைவினில் 
நித்திலமே அழகே/
நிமிடங்கள் கரைவதோ 
நினைவினில் எழாதே/

விழிகளும் துடிக்குதே 
விழுந்திட உன்னில்/ 
வியப்பின் பேரொளியாய் 
விளைந்திடும் கவிகளும்/

உலாவிடும் பாரினில் 
உன்னதப் படைப்புக்களாய்/
உவகையுடன் வாழ்த்துகிறேன் 
வாழ்க பல்லாண்டு/

ஜன்ஸி கபூர்  - 31.07.2020

 
  •  

2020/07/29

அற்புத வரமாய் நீ

 

இறைவனாலும்  பெறமுடியாத அற்புத வரம்
கருவறை சுமந்திடும் மழலையின் உயிர்ப்பே

துருவப் பனியில் செதுக்கிய சிற்பமே
திருமணப் பொக்கிசத்தில் உயிர்த்திட்ட நிலவே

கருவிலே உதைக்கும்  குறும்பினைப் பிசைந்தே
அருமைச் செல்வமாய் உயிர்த்தாய் உயிரினில்

திருமுக எழிலினில் விழிகளும் அழகே
இருளிலும் உந்தன் மழலையும் அமுதே

கருவாயி கண்டெடுத்த அற்புத வைரமே
திருநாள்தான் நீயெனக்கே வந்திட்டாய் அருகே

ஜன்ஸி கபூர்
 



முற்றத்தின் அழகு

முற்றம் கூடியோர் சுற்றம் போற்றவே
நற்கவி  இயற்றியே பொற்கவி ஆகினர்
தோற்றப் பொழிவுடன் நிலா முற்றமாம்
கொற்றவன் ஆயினார் நிறுவனர் மாறனார்

ஜன்ஸி கபூர் - 29.07.2020

 

அகவை வாழ்த்து

அகவை ஆறினில் பதித்திட்ட தளத்தில்/
ஆனந்தக் கீற்றுக்கள் தேனூற்றி மகிழும்/
அகம் நுழையு முந்தன் கவிதனில்/
அமிர்தச் சுவையூற்றாய் தமிழும் நனையும்/

ஆக்கமும் ஊக்கமும் எமக்களிக்கும் நிலா முற்றமே/
ஆற்றலுடன் வளர்கின்றாய் அன்னைக் குழுமமாய்/
ஆர்வத்துடன் உனை செதுக்கிய நிறுவனர்க்கும்/
அழகாய்  உனக்குள் உயிரூட்டும் குழுமத்திற்கும்/

அழகு சான்றிதழ்களும் அணைத்திட/
அற்புதத் தளமானாய் எம் பயணத்திற்கே/
அன்பான வாழ்த்துக்கள் அகம் மகிழ/
ஆயிரம் வருடங்கள் ஒளிர்ந்திடு அகிலத்தினுள்/


- ஜன்ஸி கபூர் - 28.07.2020

2020/07/28

வாழ்க்கை

வறுமையும் தொலைத்ததோ குறும்பின் குறுநகை
சிறகடிக்கும் விழிகளிலோ பசித் துடிப்பு
சிறு ரூபாய்க்குள் முடங்குகின்றதே வாழ்க்கை         

ஜன்ஸி கபூர் -28.07.2020





 



 

கவிப் பயணம்

நிலாவில் கவி வடித்தேன் நித்தமும்
உலாவியே நனைந்தேன் அமிர்தத் தமிழில்
கனவுக்குள்ளும் உணர்வு பிழியும் கவியுமானேன்
கற்பனைச் சாரலுக்குள்ளும் காதல் நனைத்தேன்
சொற் சுவைதனில் சிந்தையும் மகிழ
அற்புதத் தளமாம் முற்றத்தில்  பயணிப்போம்

ஜன்ஸி கபூர்  
 



தூளியிலே ஆட வந்த நிலா

தூளியிலே ஆட வந்த நிலாவே/
தூங்கவிடாமல் தூண்டியிழுக்கிறே உந்தன் அன்பாலே/
பொங்கும் புதுப்புனலாக உரசுகின்றாய் உயிருக்குள்ளே/
மங்காப் புகழ் வருடும் மனசுமாகின்றாய்/

நித்தில மடிதனில் செந்தமிழ் சிந்திடும்/
முத்தின் சுடரொளியே கண்ணுறங்கு/
எத்திசையு மறிந்திடும் உந்தன் கலைப்பணி/
முத்துப்பேட்டை மாறனார்   வார்த்திட்ட தமிழ்ப்பணி/

வண்ணங்கள் பிழிந்தூற்றும் அழகெல்லாம் தலைப்பாகும்/
எண்ணங்கள் உரசிடும் விரலெல்லாம் எழுதுகோலாகும்/
கண்களும் கசிந்திடுமே மொழிக் காதலால்/
விண்ணும் வியந்திடுமே உந்தன் பேரழகால்/

ஆறின் அகவைக்குள் உயிர்க்கின்ற நிலாவே/
ஆனந்தமாக உதித்திடு ஆயுளெல்லாம் நீண்டிடு/
ஆரோக்கியமாய் வளர்ந்திடுவாய் அகிலமும் உன்னோடு/
ஆரத்தழுவுகிறேன் நிலாவே வாழ்ந்திடு பல்லாண்டு/

ஜன்ஸி கபூர்
 

 















2020/07/27

வெற்றிப் பரிசு


சான்றிதழ் கிடைக்கையில் சாதித்த திருப்தி/
சரித்திரம் படைத்திட தருமது ஊக்கம்/
சந்ததிகளும் அறிந்திடுவார் சாதனையின் வீச்சை/
எந்நாளும் ரசிக்கையில் தித்திக்குமே மனசும்/

ஜன்ஸி கபூர் 




வலி

சேயவள் முன்னாடி பெத்தவளும் பேயாக
வைகின்றாள் வார்த்தைகளால் பிஞ்சும் வெம்மிடவே
மெய்யினை மொய்க்கும் விரல் தழும்புகளுமே
பொய்யான வாழ்வின் சோகங்களோ குழந்தாய்

படித்திடென்றே அடிக்கின்றனர் ரசிக்கின்றனர் கண்ணீர்
துடிக்காத தாய்மை வெடிக்கின்றதே நெருப்பாய்
அழுதிடதே குழந்தாய் பழுதுமில்லா வாழ்க்கை
அன்பும் கொண்டேன் துடிக்கின்றேனுன் வலியில்

ஜன்ஸி கபூர்

நினைவினில் நிறைந்தவனே

 
நெஞ்சில் நிறைந்தவனே நெசமாகத்தான் உன்னன்பில்/
தஞ்சமாகிப் போனேனே செவ்விதழும் தேனூற்ற/
அஞ்சவில்லை உந்தன் நிழலுமெனைக் காக்கும்/
பஞ்சமில்லை வாழ்வில் வசந்தமே நீயாய்/

நித்தம் என்னுள் துயிலைத் துகிலுரித்தவனே/
சித்தம் ரசிக்கும் உன்னைக் கண்டாலே/
சத்தமிடுகின்றதே வெட்கமும் உயிரைப் பிசைந்தே/
மொத்தமாய் உருகுதே தனிமையும் இனிமையாய்/

பறந்திடும் நொடிகளால் துறந்திடுமோ மெய்க்காதல்/
உறங்கிடும் இரவிலும் துணையுன் நினைவுகளே/
நறவாகிக் கசியுதே உன்னால் பொழுதெல்லாம்/
நல்லறமாய் இனித்தே நல் வரமுமானாய் /

பெண்மை போற்றிடும் உந்தன் பண்பாலே/
எண்ணம் உயர்த்தினேன் சிகரமும் தொட்டிடவே/
கண்டேன் உன்னில் அறமாய்க் காதல்/
கண்ணாளா வாழ்ந்திடலாம் காலமெல்லாம்  ஒன்றாகி/


ஜன்ஸி கபூர் 



சாதனை நாயகன்



அலைகள் கொஞ்சும் இராமேசுவர மடியும்/
தலைசிறந்த பொக்கிசமே தலைவனைச் சுமந்ததால்/
நிலையற்ற வாழ்வில் இமயமாய் வறுமை/
மலைத்திடத் துயரும் உயர்ந்திட்டார் கல்வியால்/

விருதுக் கிரீடங்களால் கலைகளும் ஒளிர/
கரும்புச்சுவையை பிழிந்தூற்றிய அக்கினிச் சிறகும்/
பருவ வயதினர் வாழ்க்கையை வெல்ல/
பாதைகள் வகுத்திட்டார் கனவுகளும் இலட்சியமாய்/

அறிவு விரல்கள் ஆராய்ந்தன விண்ணை/
ஆற்றலின் உச்சத்தில் தந்தையுமானார் ஏவுகணைக்கே/
ஆளுமைத் தளம் நீண்டதே குடியரசில்/
அகிலமே வியந்திட்ட  அன்புக்குள்ளும்  நின்றார்/

இலட்சிய வேட்கையால் உதிர்ந்தன  உறுதிமொழிகள்/
இன்னல் உறுஞ்சிடும் பொன்னான திட்டங்கள்/
இமயமாய் உயர்ந்திட்ட சாதனை நாயகன்/
இதயங்களில் வாழ்கின்றார் இறவாமல் உயிர்த்தே/

ஜன்ஸி கபூர்
யாழ்ப்பாணம்




2020/07/26

சிந்தையில் வேண்டும் சிறப்பு


உள்ளத்தி லன்பும் உறவாடப் பெற்றாலே /
கள்ளத்தில் நீங்காக் கபடங்கள் நெஞ்சினில் /
நிந்திப்போர் நம்மை நினைத்தேதான் வாழ்ந்திடச் /
சிந்தையில் நீயும் சிறப்பு /


ஜன்ஸி கபூர் 

வாழ்வில் மாற்றம்


ஏமாற்றம் வலியுடன் வலிமையும் தருமே
ஏய்த்திட்டார் குணமதை மனமது அறியும்
பொய்க்குள் மேனியைப் பொருத்திய  மாந்தரும்
சாய்ப்பார் நம்மை வெற்றிப் பக்கமே

ஜன்ஸி கபூர் 


துளிப்பா


வழிகிறது வானவில்/
நழுவுகிறது  கடல்நீர்/
பூஞ்சோலை மலர்கள்/


ஜன்ஸி கபூர்  
 


கார்கில் போர்

பனிமலைப் போரின் வெற்றி முரசொலி/
துணிந்திட்ட வீரர்களின்  வலிமை முழக்கமே/
இன்னுயிர் நீத்தே செய்திட்ட பணியால்/
இறைமை கண்டதே கார்கில் மீண்டதே/

ஜன்ஸி கபூர்

கையில் மிதக்கும் கனவே



பட்டுச்சேலைச் சிறகும் இதமாய் வருடும்
கட்டுடலும் பிழியும் கரும்புச் சுவையும்
வெட்கப்பட்டே துடிக்கும் மென்னுடல் சிலிர்ப்பும்
தொட்டவன் எந்தன் கைச்சிறைக்குள் சுகமாக

உந்தன் கொஞ்சும் விழிகள் அசைகையில்
எந்தன் மனமும் இசைந்திடுதே உன்னோடு
சந்தன மலருன் துடிக்கு மிடையும்
காந்தமாக ஈர்க்குதடி எந்தன்  மனசைத்தான்

கண்ணில் அமுதமும் இதழில் மையலுமாய்
என்னை மயக்கியே ஆளுறே பொழுதைத்தான்
உன்னைக் காணாத என்னிழலும் அனலாய்
உருகித் தேடுமடி உந்தன் அன்பைத்தான்

காதல் பிழிந்தே மிதந்தாய் அமுதாய்
காத்திருக்கும் பொழுதும் உருகும் துடிப்பாலே
கையில் மிதக்கும் கனவே கற்கண்டே
மெய்யன்போடு வாழ்ந்திடலாம் சுகமாய் நாமும்

ஜன்ஸி கபூர்  



சிந்தனை செய் மனமே



சிந்தனை செய் மனமே நித்திலமே/
வந்துன்னை வாழ்த்தும் பணி செய்திடவே/
தந்திர மாந்தரும் தோன்றிடுவார் முன்னாடி/
சிந்தித்தே திட்டமும் வகுத்திடு வாழ்ந்திட/

பகையும் மறந்து  புகையும் துறந்தே/
வாகை சூடிடும் இலக்குடன் பயணித்திடு/
நாடும் வீடும் முன்னேற உழைத்திடு/
தேடிடு நல்லுறவுகளுடன் நலமான வாழ்வையும்தான்/

ஜன்ஸி கபூர்
 
  •   


தாலாட்டு


ஆராரோ ஆரிவரோ கண்ணே நீயுறங்கு
நீயுறங்கு செல்வமே அன்னையின் அன்பாலே
அன்பாலே அணைத்திடுவேன் என்னவனும் நீதானே
நீதானே என்னுயிர்  நிம்மதியாய் கண்ணுறங்கு

- ஜன்ஸி கபூர் -

பூத்துக் குலுங்கும் பொன்னியிவள்

 

குண்டுமல்லி தேனூற்றும் கூந்தல் அலைவில்/ 
வண்ணப்பூச்சிகள் மொய்த்து விழும் விழிகள்/
தீண்டும் மருதாணிச் சாற்றிலுரசும் இதழ்கள்/
வண்ண நிலாவின் உருத்தானோ பொன்னியிவள்/

பட்டுச்சேலை மோதி யுடைக்கும் தென்றலைத்தான்/
பட்டுவிரலும் தொட்டாலோ விரியும் மொட்டுக்களும்தான்/   
கட்டுடம்பும் கருவாய் இசைந்திடும் கவிக்கே/
எட்டுத்திக்கும் பிழிந்திடும் அமிர்தமே பொன்னியவள்/

ஓத்தையடிப் பாதையிலே காத்திருக்கும் மச்சானும்/
நெத்திமுடி வருட வெடித்திடுவாள் வெட்கத்தில்/
ஆத்தங்கரையோரம் அயிரை மீன் வாசத்தை/
ஆசையாய் ஊட்டிடக் காத்திருக்கும் பொன்னியிவள்/

ஆசைகள் பல்லாயிரம் நெஞ்சில் மோதலுற/
ஆழ் துயிலிலும் கனவாய்த் தளிர்க்கும்/
ஆசை மச்சானுடன் ஆயுள்வரை சேர்ந்திடவே/
ஆவலுடன் பூப்பறிக்கின்றாள் இறையன்பும் வென்றிடவே/

ஜன்ஸி கபூர்