About Me

Showing posts with label திரையிசை. Show all posts
Showing posts with label திரையிசை. Show all posts

2021/04/26

மயிலிறகே மயிலிறகே


 காதல்

இளமைப் பருவத்தின் சொப்பனம். கனவுக் கூட்டுக்குள் தம் உணர்வுகளை நிரப்பி உல்லாசமாக பவனி வருகின்ற இரதம் இது. காதலை மையப்படுத்தி நகர்கின்ற மனங்களை சோகங்களும், கண்ணீர்த்துளிகளும் எட்டிப் பார்ப்பதில்லை. கவிதைகள் பல பிறப்பெடுக்க இந்தக் காதலே வரம்பமைத்துக் காட்டுகின்றன. 

ஒவ்வொரு பாடலைக் கேட்கும்போது கவிஞனின் கற்பனைத் திறன் நம்மை வியக்க வைக்கும். ஒவ்வொரு வரிகளும் நாம் கடந்து போனவைதான். ஆனால் நம் கண்களுக்குப் புலப்படாத அந்த கைவண்ணம் கலை உணர்வுகள் கவிஞனின் வரிகளை வசப்படுத்தும்போது நாம் ஆச்சரியத்தில் விழிகளை உயர்த்துகின்றோம்.

இந்தப் பாடலைக் கேட்கும்போது.

அதன் இசை நம்மை மானசீகமாக வருடிச் செல்கின்றது. 

அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட திருக்குறளில், மூன்றாம் பால் இன்பத்திற்குரியது என்பார்கள். இன்பத்தின் நிழலில் இதயங்களை குளிர்விக்கக் கூடிய காதலை மையப்படுத்தி இப்பாடல் எழுதப்பட்டாலும்கூட, ஒவ்வொரு வரிகளின் ஆழமான நகர்வு இப்பாடலை ரசிக்க வைக்கின்றது. 

தனது மடியில் அவனை சாய்த்து உணர்வுகளால் வருடுகின்ற பொய்கையாக அவள் மாற, அவனோ தன்னை வசீகரிக்கின்ற பொதிகைத் தென்றலாக அவளை ரசிக்கின்றான்.

காதலின் மையப் புள்ளியே இந்த இரசிப்புத்தான். ஒருவரை ஒருவர் இரசிக்கின்ற அந்த அன்பின் வருடலே சுகந்தமான உணர்வுகளுக்குள் ஒருவரை ஒருவர் தள்ளி விடுகின்றது

மயில் இறகால் வருடும்போது கிடைக்கின்ற மென்மை இந்தக் காதல் உணர்வால் ஏற்படுகின்றது போலும். உயிரும் மெய்யுமின்றி ஏது இலக்கணம். அவள் அவனுக்கு மெய்யெழுத்து. உரிமையோடு அடையாளப்படுத்துகின்ற கையெழுத்து.... 

விழிகளில் உலாவுகின்ற மழைக்கால நிலவாக அந்தக் காதல் அழகாக மாறுகின்றது. 

ஒ ...  ஆத்மார்த்தமான அந்தப் பிணைப்பிற்கு எல்லைகளின் வரையறைகள் இல்லையோ...

வரிகளை இரசிக்கின்றேன் இசை என்கிற உயிர்ப்பினையும் சேர்த்து

 ஜன்ஸி கபூர் - 26.04.2021