About Me

2020/07/18

நிலா முற்றம் கவி அரங்கம் -224

நிலா முற்றம் கவி அரங்கம் -224

தமிழ் வணக்கம்

என் உணர்வோடிசைந்து உணர்வுகளில் கலந்து அமிர்தமாய்ச் சுவைக்கும் அழகுத் தமிழுக்கு என் முதல் வணக்கம்

தலைமை வணக்கம்
கவியரங்கம் நிறுவனர் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த அன்பு வணக்கங்கள். நடுநிலை தவறாத கவியரங்கத் தலைமைக்கும் என் இதயபூர்வ நன்றிகளை மகிழ்வுடன்; முன்வைக்கிறேன்.
அவை வணக்கம்
கவியரங்கில் வாதிட களம் நிற்கும் அவையோருக்கும் என் அன்பு வணக்கங்கள்;

தலைப்பு
மனதிற்கு இனிமை தருவது

துணைத் தலைப்பு
இயற்கையே

விழி இன்பம் அழகிய மொழி
விலகிடும் துன்பங்கள் இயற்கை வனப்பிலே
விண் தொடும் மேகக் கூட்டங்கள்
விருப்புடன் நனைத்திடும் நல் மழையாய்
விளைந்திடும் கனிகளும் நறுஞ் சுவையே

பழகிடும் தோழமையாய் இயற்கையும் மாறுகையில்
பாசத்தோடு தொட்டுச் செல்லும் தென்றலும்
பறந்தோடும் சோம்பலும் உற்சாகம் நமதாகும்
பசுஞ்சோலைகள் குடைகளாகி வனப்புக் காட்டுகையில்
பசியும் விட்டகன்றே மகிழ்வும் சுவையாகும்
பறவைகளின் சிறகடிப்பும் பார்க்கையில் பரவசமே

இயற்கையும் அரணாகும் புவியும் அழகாகும்
இரசனையான அனுபவங்களும் கூடிவரும் பாடங்களாய்
இலக்குகள் கற்றிடவே இங்கும் பயிற்சிகளுண்டே
இதயமும் லயித்தாடும் நீரூற்றின் குளிர்மையிலே
இன்னுயிரும் பண்பாடும் குயிலோசை ஒலிக்கையிலே
இரவின் கண்களிலே விருந்தாகும் விண்மீன்கள்

அலைகள் துடிக்கையிலே கலிகள் கரைந்தோடும்
அணைத்திடும் தென்றலுமே ஆருயிர் வருடிவிடும்
அல்லியும் முகங்காட்ட ஆனந்தம் வழிந்தோடும்
அற்புதக் காட்சிகளில் அனலும் குளிராகும்
அன்பின் உணர்வோங்க ரசிப்பும் சுகமாகும்
அகிலத்தின் இயக்கத்திலே அமைதியும் அருகாகும்

ராகங்கள் இசைபாட உந்துதல் இயற்கையே
ராத்திரி வான்நிலவும் ரசிப்பின் சொப்பனமே
ராஜாங்கப் பூமியிலே ரசனைகள் ஏராளம்
ரகஸியங்கள் அறிந்திடவே தேடல்களும் சுவையாகும்

காதலும் வசப்படும் இயற்கையின் இதயத்திலே
கருத்துக்கள் மலர்ந்திடுமே கற்பனையும் ஊற்றெடுக்கும்
கருணை பூமியிலே பதிக்கும் தடங்களெல்லாம்
கல்வெட்டாய் பதிவாகும் நினைவின் ஏட்டினிலே

வனப்பின் ஆட்சியினில் வாழ்க்கையும் வென்றிடுமே
வாழ்நாளும் போதாதே வசந்தத்தை ரசித்திடவே
இறைவனின் அற்புதமே கண் ரசிக்கும் காட்சிகளே
இயற்கையோடு வாழ்கையில் மனமே இனிதாகும்

நன்றி நவிலல்
வாய்ப்பளித்த குழுமத் தலைமைக்கும் கவியரங்கத் தலைமைக்கும் பங்கோடிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம்

ஜன்ஸி கபூர் - 18.07.2020
யாழ்ப்பாணம்





பரத நாட்டியம்

முகவழி பாவங்களும்/
கைவழி முத்திரைகளும்/
சலங்கை ஒலியினில் ஜதியாக/
அழகிய நடனமும் விருந்தாகும்/
 

நயன விழிகள் அசைகையில்/
நவரசங்கள் கண்டேன்/
இசையுடன் ஜதியும் இசைகையில்/         
சிற்பமாய் நின்றேன்/

ஜன்ஸி கபூர் 


வான் சிறப்பு


குறள் 11

வானின்றி உலகம் வழங்கி வருதலால்/
தானமிர்தம் என்றுணரற் பாற்று/
 

வான்மழையும் தடையின்றித் தொடர்ந்து பொழிவதால் 
வையகமும் நிலைத்தே வாழ்கிறது அழிவின்றி
அகிலத்தில் வாழும் உயிர்களின் நிலவுகையை
அமிழ்தமாகி காத்து நிற்கிறதே இம்மழையும்
 
குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


மழை பருகி தளிர்க்கும் பயிர்களால்
மண்ணுலகமும் சிறந்தே உயிர்களும் வாழும்
தண்ணீராய் மாறி தாகமும் உடைக்கும்
உன்னத மழை உயிர்களைக்; காக்கும்

 
குறள் 13

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி

வான்மழையின் பொழிகை தடைபட்டுப் போனால்
கண்ணீராகும் கடலைச் சுற்றிய உலகும்
புண்ணாகி வருத்தும் கொடும் பசியால்
மண்ணுலகில் வாழும் உயிர்களும் இறக்கும்

ஜன்ஸி கபூர் 


2020/07/17

உனக்குள் உன்னையே தேடு


ஏழையின் அன்பு மனமே மகிழ்ந்திடு/
உழைக்கும் பாதைகளைத் தெரிந்து கொண்டால்/
உலகத்தின் அடையாளமாய் உயர்வாய் நீயும்/
உழைப்பின் பெறுமதியில்  நொருங்கும் வறுமையும்/
உனக்குள் உன்னையே நீயும் தேடு/
உனக்கும் உதவ காத்திருக்கிறதே மனிதம்/

ஜன்ஸி கபூர்  
  •  

காவிய மாலை – 07

கானகம் மீண்ட பாண்டுவின் கரங்கள்/
கொன்றன கலவியி லிணைந்த மான்களை/
கொடுங் குற்றமோ முனிவர் சாபமும்/
தடுத்து நிறுத்தியது சந்ததிப் பெருக்கத்தை/

வனமும் சென்ற மன்னனும் குந்தி தேவி/  
வரத்தால் பெற்றான் உயர்பண்பு முத்துக்களை/ 
தருமன் வீமன் அருச்சுனன் நாமத்துடன்/
மாத்திரியும் ஈன்றாள் நகுலன் சகாதேவனையும்/

பொங்கியே அழித்த காந்தாரியின் பிண்டமும்/
பெற்ற வரத்தால்  நூற்றவராய் தளிர்த்தது/
பிறப்பெடுத்தான் துரியோதனன் கெட்ட சகுனத்திலோ/
பிழம்புத் தீயுடன் யுத்தங்களும் மூண்டனவே/

ஜன்ஸி கபூர் 

மரணத்தில் வீழ்ந்தெழுந்த கணங்கள்

 இறப்பும் பிறப்புமாய் உருண்டோடும் வாழ்வில்
இதய வலியின் ஓலங்களோ ஆழ்திரையில்

நாளென்பதோ யந்திரச் சுழற்சியின் விசையாக
வாழ்நாளின் ஓய்வளவும் பணிச்சுமையால் சுருங்க
காலையெழுந்தே கடுகதியானேன் வேலைத்தளத்திற்கே
தலைமை நானே முகாமைப் பணியோ கண்முன்னே

விரைகிறேன் அருகிலுள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கே
விருட்டென்று வந்ததொன்று உறைந்தே நின்றது
விரைந்தேற சப்தமிட்டார் பேரூந்தின் நடத்துனர்
விருப்பின்றி சனங்களும் அடைக்கப்பட்டனர் மூச்சுத்திணறலுடன்

ஏறமுயன்றேன் கால்களோ அந்தரத்தில் - இடர்
கூற முன்னர் உருண்டது விரைவாய் - நானோ
எறியப்பட்டேன் வெளியே கழுத்தோ சக்கரங்களுக்கிடையில்
மரண நெடிக்குள் வீழ்ந்த மனசும்
உதிரக் கசிவும் வலியோடு உறைந்தன 

விபரீதம் உணர்ந்ததும் நிறுத்தினர் பேரூந்தை
விளைந்த தவறுக்கு வருந்தி நின்றனர்
மன்னிப்பும்; சிறந்த அறமென்றே நானும்
மருத்துவம் பெற்றே வலியும் துடைத்தேன்

 ஜன்ஸி கபூர்    07.07.2020



தாலாட்டும் தென்றல்


மேகமாய் குவிந்தே மோகிக்கும் தென்றலே
தேகம் நனைகையில் தேன்மல்லி வாசமே
மோதும் வெப்பத்தையும் மெல்லப் பிழிந்தே
மோகன பூமிக்குள் மெல்ல  ஊற்றுகிறாய்

என்றும் இளமையிற் துள்ளிடும் பூங்காற்றே
மனசள்ளிப் போகின்றாய் தென்பொதிகைப் பாசமாய்
தேனைக் குளிர்த்தி அனலுக்குள் வீசி
எண்ணங்களைக் குளிர்த்துகின்றாய் புன்னகையை ரசித்தபடி

முற்றத்து மலர்கள் திரைதனை நீக்க
முத்தத்தில் நனைத்தே ரசிக்கிறாய் வெட்கத்தை
முட்டி மயிலின் இறக்கையும் மறித்தே
மூச்சின் உயிர்ப்புக்குள் உறைகிறாய்  அமிர்தமாய்

இரவுத் தனிமையை மெல்லிசையால் உடைத்தே
இனிதாய் கரைக்கிறாய் இதய சோகங்களை
இடர் தணித்தே இன்பங்களால் ரசிப்பூட்டி
இதமாய்த் தாலாட்டுகிறாய் என்னைத் தாய்மையுடன்

ஜன்ஸி கபூர்    - 16.07.2020


நாளைய வாழ்விற்காய்


விரலுக்குள்ளோ விஞ்ஞானம் பழமையோ விலகியோடும்
விவசாயப் பற்றின்றி வரட்சியோடு வயலோரம்
மாற்றம் கண்டாலே முன்னேற்றங்கள் வென்றெழும்
ஏற்றங் காணவே வயலுழும் சிறார்களிங்கே

மழை வாசம் மண்ணோடு குலைந்திருக்க
மனசெல்லாம் சிறகடிக்கும் நாற்றும் தழுவ
தொற்றுக்கள் தந்த விடுமுறையி லிப்போ
பற்றுடன் பஞ்சம் தீர்க்கும் முயற்சியோ

சின்ன விழிகள் வீழ்த்தும் கனவுகள்
சிதையாமல் வளர்த்திடுமே புதுத் தொழினுட்பமும்
உழவுத் தொழிலை வந்தனை செய்தால்
வாழும் வாழ்க்கையும் என்றும் வசந்தமே

ஜன்ஸி கபூர் - 16.07.2020


2020/07/16

வாழ்வும் வசப்படும்


உண்மை உரைத்தலால் உள்ளங்கள் ஊறாகாதே//
எண்ணங்கள் மகிழும் குற்றங்கள் தவிர்த்தே//
புண்ணிய நலனும் அறமாகிக் கூடும்//
மண்ணின் வாழ்வுதனை வையகமும் போற்றும்//

ஜன்ஸி கபூர் 


வாழ்க்கைக்கல்வி

கற்போம் அறிவுடன் திறன் அனுபவங்களை
விற்போம் வாழ்விற் குதவாக் கல்வியை
ஏற்போம் இயற்கையுடன் இசைந்து வாழ்தலை
நிற்போம் நீடித்துத் தொடரும் வாழ்க்கைக்கல்வியில்
சொற்கள் மாத்திரமல்ல செயலும் வாழ்வாக
வெற்றி பெறத் திறம்படக் கற்பிப்போம்

ஜன்ஸி கபூர்  


மகிழ்ச்சிப் பயணம்

தங்கமாக ஜொலித்துக் கொண்டிருந்த பூரண நிலவின் முகம் யன்னல் கண்ணாடிக்குள் கசிந்து கொண்டிருந்தது. உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் ஜனனி எனும் ஏழு வயதுச் சிறுமி. 

'நள்ளிரவில் காணும் கனவுகள் பலிக்குமென்று அம்மா சொன்னாவே! ஒருவேளை இந்தக் கனவும் பலித்து விட்டால் '

அச்சமும்இ ஆர்வமும் பிசைந்த கலவையாக மனமும் இறுகிக் கொண்டது. சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் மணி இரண்டு என்பதை உணர்த்திக்; கொண்டிருந்தது. பக்கத்தில் அம்மா தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவும் இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டார். ஆர்வம் அவளைத் தைரியபபடுத்தியது. யாருமறியாமல் வீட்டு முன்வாசல் கதவைத் திறந்தாள். குளிர்மையான தென்றல் காற்றில் உடல் விறைப்பதைப் போன்ற பிரமை. 

அங்கே.............!

கனவில் கண்ட அதே வெள்ளைக் குதிரை வாசலில் இவளுக்காகக் காத்திருந்தது. ஆர்வத்தில் அருகில் சென்று குதிரையைத் தொட்டாள். கண்ணிமைக்கும் நொடிக்குள் குதிரைக்குள் இரண்டு இறக்கைகள் முளைத்தன.

 'பயப்படாமல் சீக்கிரம் என்மீது ஏறு. உனக்கொரு அதிசயம் காட்டுகிறேன்' 

எனக் குதிரை சொன்னதும் வேகமாக மறுத்தாள்.

'வீட்டுக்குத் தெரிஞ்சா ஏசுவாங்க ............. நான் வரல நீ போ' 

என்றாள். மனம் போக விரும்பினாலும் உதடுகள் மறுப்பை வெளிப்படுத்தின. 

ஆனாலும் குதிரை அவளை விட்டு நகரவேயில்லை. திடீரென்று மரங்களைச் சுழற்றியவாறு வேகமான காற்று வீசத் தொடங்கியது. ஜனனிக்குள் மயக்கம் வருவதைப் போன்ற பிரமை. தன்னையுமறியாமல் மந்திரத்தில் கட்டுப்பட்டவளாக   குதிரையில் ஏறி அமர்ந்தாள். எல்லாம் கனவுபோல் சுழலத் தொடங்கியது. குதிரையும் வேகமாகப் பறக்கத் தொடங்கியது. ஓரிடத்தை அடைந்ததும் குதிரை தனது பயணத்தை நிறுத்தியது. இறங்கினாள் மெதுவாக.

'இது எந்த இடம்........:'

பாதி மயக்கத்திலிருந்து விழித்தவளாக கேட்டாள்.

அவளைப் பார்த்து மாயக் குதிரையும் சிரிக்கத் தொடங்கியது. 'குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்த மாயக்குதிரை திடீரென தன் சிரிப்பை நிறுத்தியதும்இ அவள் திகைத்துப்போய் திரும்பிப் பார்க்க அங்கே...'

ஒளி பிம்பமொன்று  அவளருகில் வந்து நின்றது.  ஆச்சரியத்தில் ஜனனியின் கண்கள் விரிந்தன. இத்தனை நாட்களாக தனது வீட்ட முற்றத்திலிருந்து பார்த்துப் பார்த்து ரசித்த பௌர்ணமி நிலாவின் அருகிலா அவள்? நம்பவே முடியவில்லை. மாயக்குதிரையின் இறக்கைகளை பௌர்ணமி வருடிக் கொண்டிருந்தாள்.

' நீ சின்னக் குழந்தையாக இருக்கும்போதே என்னைக் காட்டி சோறு ஊட்டினாத்தான் நீயும் சாப்பிடுவே. அப்போ உனக்கு ஐந்து வயதிருக்கும். ஒருநாள் என்னைக் கூட்டிக் கொண்டு வரும்படி உங்க அம்மாக்கிட்ட சொல்லி ரொம்ப நேரமா அழுதே. அப்பவே உன்னை இங்கே கூட்டிக் கொண்டு வரணுமென்று நினைச்சேன். ஆனால் ஒரு குறித்த நாளில்தான் என்னுடைய ஒளியும் வெப்பமும் மனிதர்களுக்கு தீங்கு செய்யாது.   அந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன். இன்றுதான் அந்த நாள். வா வானத்தைச் சுற்றிப் பார்க்கலாம்'

என்றதும் ஜனனிக்குள்ளும் இறக்கை முளைத்த உணர்வு. மாயக் குதிரையும் பௌணமிச் சந்திரனும் விடியும் வரை வானத்தை சுற்றிக் காட்டி மகிழ்வூட்டினார்கள். 

விடியல் ஆரம்பிக்கும் நேரம் மாயக்குதிரை யாருமறியாமல் ஜனனியை வீட்டில் இறக்கி விட்டது. அவளும் எதுவும் நடக்காததைப் போல் அம்மாவுக்கு அருகில் உறங்குவதுபோல் பாவனை செய்யத் தொடங்கினாள்.

ஜன்ஸி கபூர்  




தாயின் மடியில்

அமிர்தமாய் இனித்திடும் தாயின் நிழலினுள்/
அடங்கிக் கிடத்தலும் பெருஞ் சுகமே/
அருஞ்சுவைப் பாலதை உதிரத்தில் பிழிந்தே/
அன்போடு ஊட்டுகையில் ஆட்கொள்ளுதே ஆனந்தமும்/

ஈன்றவன் நெஞ்சின் ஈரச் சுவடுகள்/
ஈர்ப்போடிசைந்தே தொடர்கிறதே கருணையாய்/
ஈந்திட்ட பொழுதெல்லாம் தன்னலம் பாராமல்/
ஈடில்லா உறவாகிச் சுமக்கிறதே அழகாய்/

இடுக்கன் களைந்தே இன்ப மூற்றி/
இதயத்தின் அலைவுகளில் மூச்சாகும் தாய்மை/
பொருந்திட்ட அன்பினாலே பெருந்துயர் துடைத்தே/
பொல்லாத நோய்க்கும் மருந்தாகிக் காக்கும்/

உணர்வோடு உடலையும் பிழிந்தூற்றி பூரிப்பில்/
உயிர்த்தெழுகின்ற உன்னத தாயின் காலடியில்/
உறைந்திருக்கும் சொர்க்கத'தை தினம் கண்டேனே/
உலகமே அடைக்கலமே தாயின் மடியில்/

ஜன்ஸி கபூர் 

ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்

சிறைக்குள்ளே ஒளியிழந்தாள் சீதையும்- கானகத்
திரைக்குள்ளோ இன்னலுற்றான் இராமனும்
சீதையை விடுவிக்கும் சிந்தையுடன் விபீடணனும்
வதை செய்யும் இராவணனிடம் சொல்லுரைத்தான்

மறுக்காதே யண்ணா பலசாலி இராமனே
அறுத்திட்டான் இரணியனை திருமால் அவதாரமாய்
சீதை விடுவித்தலே நலமெமக்கு  என்றதும்
வெஞ்சினத்தால் விரட்டிவிட்டான் இராவணனு மவனை

இணைந்திட்ட மந்திரி நால்வருடன் விபீடணனும்
இராமன் நிழல் ஒதுங்கினான் அன்புடனே
இராமனின் மனமோ ஐயத்துடன் அலைவுற
இராவணன் சபைக் கூற்றுணர்த்தினான் அனுமானும்

வண்டுகள் மொய்த்திடும் வண்ணமாலை அணிபவனே
வஞ்சக மனமதை மறைத்திடல் சாத்தியமோ
வஞ்சகர் அடைக்கலமாகார் உம் வசமே
நெஞ்சத் தன்புடனே நாம் வந்தோ மென்றதும்

அகம லர்ந்தே அணைத்தான் ராமனும்
முகமதை நோக்கி யுரைத்தான் விபீடணனிடம்
அன்பின் சகோதர்கள் நாங்கள் நால்வராவோம்
பின்னர் குகனோடி ணைந்தே ஐவரானோம்

மேருமலை சுற்றிவரும் சூரியன் மகனாம்
சுக்ரீவன் இணைந்ததும் அறுவரானோம் இப்போ
நீயுமி ணைந்தாய் எழுவரானோம் என்றே அணைக்க
விபீடணனும் மகிழ்ந்தே இராமன் திருவடி தொழுதான்

 Jancy Caffoor




மழை இன்பம்


விண்மீது முகிலோட்டம் நீரள்ளி யூற்றும்/
மண்ணோடு மழைநீரும் மனசொன்றிப் போகும்/
எண்ணங்கள் குளித்திட கன்னங்களும் குளிர்ந்திடும்/
வண்ணப்பூக்கள் மழையள்ளிப் போகின்றன மகிழ்வோடு/

வெள்ளாடைக்குள் சகதிப் பூக்களின் கும்மாளம்/
வெட்க மறியாத சிட்டுக்களின் உலகமோ சிரிப்புக்குள்/
வெட்டும் மின்னல் கொட்டும்போது அச்சமும்/
முட்டுமே மனதினில் தேகமும் மறைவுக்குள்/

பள்ளி போகும் பாதித் தூரம்/
துள்ளி வழியும் தூற்றல் மழை/
வாழையிலைக் குடையு மாடும் குதூகலத்தில்/
பிள்ளைக் கின்பம் ஊட்டுதிந்த மழை/

ஜன்ஸி கபூர்  



கல்லாமை நீக்கிய கடவுள்

 

கருப்புக் காந்தியாய் செல்லச் சொல்லெடுத்த
விரும்பும் மனிதராய் விலாசமும் கண்டவர்
அறிவியல் தேடலுக்குள் தொழினுட்பமும் புகுத்தவே 
வறிய மாணவரும் பகுத்தறிவு கொண்டனர்

உள்ளத் துயர்விலே பள்ளிகள் மிளிர்ந்திட
ஊக்குவிப்புத் திட்டங்களும் பல வகுத்தே
இல்லாமை ஒழித்தே இன்னல்கள் துடைக்க
கல்விக் கண்ணதை திறக்கச் செய்தார்

வகுப்பறைகள் உறங்கின மாணவர் குறைவுடன்
வறுமையை அகற்றவே தந்திட்டார் சத்துணவை
வெறுங் கதிரைகள் நிரம்பின மாணவர்களுடன்
கற்றனர் கல்வியும் நிலைத்தது வாழ்வினில்

கல்லாமை நீங்கவே உள்ளமும் உருகவே
எல்லோரும் படித்திடும் கனவும் வென்றார்
இன்னல்கள் ஒழிந்தே மகிழ்வுடன் வாழ்ந்திட
இதயங்கள் போற்றும் கல்விக் கடவுளுமானார்

ஜன்ஸி கபூர்  

நட்பின் பரிமாற்றம்

சந்திப்பு வேளையில் பரிமாற்றிடும் எண்ணங்கள்/
சிந்தையைத் தொடுகையில் சுகமாய் வருடிடுமே/
வந்திட்ட நேசங்கள் தீர்த்திடும் இன்னல்கள்/
சந்திர ஒளியாய் மனமதையும் மாற்றிடும்/

ஜன்ஸி கபூர்  


2020/07/15

பாட்டி வைத்தியம்



நவீன மருத்துவ சேவைக்குள்ளும் சிறப்பாம்/
நலம் காட்டும் பாட்டி வைத்தியம்//

-ஜன்ஸி கபூர் -

காமராசர்

மனம் மதிக்கும் மாண்பாள னாய்
மாநிலம் ஆண்டார் தலைவ னாய்
கனவதும் மெய்ப்பட கருத்திட்டம் வகுத்தே
காலத்தின் நினைவிலே நீண்டார்
கல்லாமை ஒழித்தே கல்வியைப் புகட்டியே
காவிய நாயகனாகவே உயர்ந்தார்
இல்லாத பிள்ளையர்க்கே இன்னல் களைந்திட
ஈகையாய் சத்துணவையுமே தந்திட்டார்
தன மில்லாப்  பிள்ளை யரும்
தானமாக் கொண்டனரே உணவினை
தினம் தீட்டினார் நலவாழ்வு தனை
தியாகச் சுடரு மானாரே



ஜன்ஸி கபூர்   


வானம்பாடிகள்

பள்ளி வாழ்வின் அற்புத தருணங்களாய்
உள்ளம் அள்ளும் நட்பின் வாசம்
துள்ளியாடும் குறும்புச் சுவையினில் மெய்மறந்தே
அள்ளி யணைக்கும் இயற்கையின் பசுமைக்குள்

ஓய்வினைக் கண்டுவிட்டால் ஓடிப்போகும் கால்களும்
ஒன்றுகூடி வயலோரம் விளையாட்டில் ரசித்திருக்க
காற்றும் தலையசைத்தே நாற்றும் கரமசைக்க
சேறும் பிடித்திருக்க உயர்ந்திருக்கு மரப்பாலம்

மிதிவண்டி சாகசமோ நீரோட்டச் சாதனையோ
மிளிரும் சிரிப்பினில் அகம் தெய்வீகமாகும்
குவளை நீரூற்றி களித்திடும் மனமெல்லாம்
குதூகல கீதங்களை இசைத்திடும் வானம்பாடிகள்

ஜன்ஸி கபூர்   



2020/07/14

வாழ்க்கை எனும் ஓடம்

அலைகளின் சிறு துடிப்பே துடுப்பாக/
அசைந்தோடும் ஓடம் தணிப்பதில்லை வேகம்/
மலைப்பாகும் பேரிடர்கள் மறுத்தாலும் பயணம்/
தளர்வதில்லை தன் இலக்கதனை மறப்பதில்லை/

பயமிருந்தால் கடலசைவும் காவுகொள்ளும் வாழ்வை/
துணிவிருந்தால் போகும்வழி முட்களெல்லாம் பூக்களே/
துரத்தி வரும் வறுமைக்குள் தூங்கிவிடாதே/
தூரத்து விளக்கும் ஒளியாகும் விடிவுக்கு/

கனிந்திடும் கனவுக்குள்ளும் திரையிடும் வறுமை/
கலங்கிடாமல்; தடையுடைத்தே முன்னேறத் தயங்காதே/
வசைபாடியே மூச்சடைப்பார் வம்பர்கள் கூட்டம்/
வருந்தாதே முறைத்திடு எதிர்ப்பிலும் ஏற்றமுண்டே/

தோல்விகள் கேலியல்ல வெற்றியின் வலிமை/
தேடிச்சென்றே முயற்சி தொடு வீரத்துடன்/
ஓடிவிடும் வாட்டமெல்லாம் ஒளிந்துவிடும் சோம்பலெல்லாம்/
நாடிச்செல்லும் நம்பிக்கையில் மாற்றங்களுடன் எதிர்காலம்/

ஜன்ஸி கபூர் 


  •  
     

வாழ்க்கைத் தத்துவம்

 காற்றிலாடும் கூடொன்று தென்றலிடம் முரணாகி/
சிதைந்தே போனதில் சிதறின குஞ்சுகள்/
வருந்திய தாயுமே வனப்பின்றி பறந்தது/
பருந்தொன்று கண்டதால் விதியும் மாறியதே/
இசைந்தே வாழ்ந்திட்டால் அழிவும் தானேது/
வளைந்தே கொடுத்தேதான் உயிர்க்கிறது நாணல்/

ஜன்ஸி கபூர்  


சமூக இசைவு

 ஒற்றுமை கொண்டால் பெற்றிடலாம் பலத்தை/
வேற்றுமைத் தீதும் வேரறுந்தே போகும்/
உற்ற துணையாய் சூழ்ந்திடுவார் நல்லோர்/
பெற்றிடலாம் நாமும் அழகிய சமூகத்தை/

ஜன்ஸி கபூர்  

தாயின் மடியில்

அமிர்தமாய் இனித்திடும் தாயின் நிழலினிலே
அடங்கிக் கிடத்தலும் பெருஞ் சுகமே
அருஞ்சுவைப் பாலதை உதிரத்தில் பிழிந்தே
அன்போடு ஊட்டிடுகையில் ஆட்கொள்ளுதே ஆனந்தமும்

ஈன்றவள் நெஞ்சின் ஈரச் சுவடுகள்
ஈர்ப்போ டிசைந்தே தொடர்கிறதே கருணையாய்
ஈந்திட்ட பொழுதெல்லாம் தன்னலம் பாராமல்
ஈடில்லா உறவாகி சுமக்கின்றதே   அழகாய்

இடுக்கண் களைந்தே இன்ப மூற்றி
இதயத்தின் அலைவுகளில் மூச்சாகும் தாய்மை
பொருந்திட்ட அன்பினாலே பெருந்துயர் துடைத்தே
பொல்லாத நோய்க்கும் மருந்தாகிக் காக்கும்

உணர்வோடு உடலையும் பிழிந்தூற்றி பூரிப்பில்
உயிர்த்தெழுகின்ற உன்னத தாயின் காலடியில்
உறைந்திருக்கும் சொர்க்கத்தை தினம் கண்டேனே
உலகமே அடைக்கலமே தாயின் மடியினிலே

ஜன்ஸி கபூர்  

நலமோடு வாழ

பறக்குது காற்றிலே கொரோனாக் கொடி
பதறித் துடிக்குது பாரும் நோய்முற்றி
உதறுது ஆரோக்கியம் உயிரை வருத்தியபடி
உழைப்போ ஏதுமின்றி உறங்குது ஊரடங்கில்

உன்னத மனிதமும் உறவின் அருமையும்
உணர்த்திய பாடங்களாம் உருண்டன நெஞ்சோடு
இறுமாப்பில் நிமிர்ந்தோரும் இன்னலுடன் தலைகுனிந்தே
வறுமைச்சுவை தானறிந்தே வாழ்வையும் புரிந்தனரே

முகக்கவசம் மூச்சுக்காற்றின் முத்தமாய்  அலைந்ததுவே
அகக்கண்ணிலோ அச்சம் மொத்தமாய் வீழ்ந்ததுவே
முத்திரையாம் கைக்கவசமும் இடைவெளியும் நலமாகும்
முடிவுரையாய் ஆரோக்கியப் பயிற்சியும் நமதாகும்

ஜன்ஸி கபூர் 


2020/07/13

பசுமை நினைவுகள்

வகுப்பறை இருக்கைகளுக்குள் ஒளிந்திருக்கும் இதயங்கள்
தவிப்புடனே துடித்திருக்கும் கனவுகளையும் சுமந்தபடி
அறுத்தெறிந்த குறும்புகள் தெறித்தோடிய சுவடுகள்
காலத் தேய்விலும் கரையாக் கற்கண்டுகளே

உயிரற்ற கூட்டுக்குள் உயிர்த்தெழுந்த நினைவுகள்
உறவாடிச் சுகம் காட்டும் வயதேற்றத்திலும்
உயிர் நட்புக்களின் பசுமைச் சுவையுமே
உணர்வின்றி ஒடுங்குமோ வாழ்க்கைப் போரினில்

ஆசான் அன்புடனே ஆய்ந்தறிந்து கற்றவற்றை
அமிர்தச் சுவையுடனே பிழிந் தூற்றுகையில்
மூச்சைத்தான் உடைத்தேதான் வலியாக்கும்  கொரோனாவால்
முகங்கள் தொலைத்தே தனித்திருக்கு எங்களறை

ஜன்ஸி கபூர்

மனதின் வலி

வயிற்றுப்பசி தீர்;க்கும் நல்லோர் கருணையால்/
வாழுதே மனிதமும் வையகம் போற்ற/
உண்ணும் உணவினை வீணாக்கிச் சிதைப்போர்/
எண்ணிடுக ஏழ்மைத் துடிப்பின் வலியை/


ஜன்ஸி கபூர் 

பணிச்சிறப்பு

பதவி வந்தால் பணிவும் அழகே/
கற்ற கல்விக்கும் அதுவே பெருமை/
பணி செய்வோம் பிறரும்; போற்ற/
படைத்தவனையும் நினைவிருத்தி துதித்திடுவோம் தினமும்/

ஜன்ஸி கபூர் 

வாழ வைப்போம்

வெட்டவெளியும் கொதிக்கிறதே அனலுமிங்கே பாலைவனமாய்/
வெம்மைக்கதிர் தணிக்கதான் கரமேந்தும் குடையைத்தான்/
வெட்கப்படு மனிதா வெட்டுகிறாய் மரங்களைத்தான்/
வேரோடும் உயிரிக்குள்ளே வேதனைதானே இறைவா/

வரமான மரங்களெல்லாம் வனப்பான வளங்கள்தானே/
வேரறுத்தே வீழ்த்துகின்றோம் வறட்சியை விதைத்தபடி/
நலனுக்கேற்ற விருட்சக்குடை நமக்கிருக்கு நிழலுக்காக/
அலைந்தோடுகிறோம் வெப்பம் தணிக்க நோயேந்தி/

மொய்க்கின்ற மழையும் மோதுகிற காற்றும்/
பெயர்த்துவிடும் மண்ணைத்தான் பூமியையும் நகர்த்தியபடி/
பசுமையைக் காத்திடவே விதைகளை வளர்த்தெடுப்போம்/
இயற்கைக்குள் இதயங்களை இணைத்தேதான் மகிழ்ந்திடுவோம்

ஜன்ஸி கபூர்

2020/07/12

நியாயத் தராசு


நீதி தேவதையின் நியாயத் தராசே/
சாதி பேதமின்றி வழங்கிடு நீதியை/
வாதங்கள் வெடிக்கும் பூவும் புயலுமாய்/
அக்கிரமத்தின்  எடையை உடைத்திடு துணிந்து/

ஆணவமும் அநீதியும் கேட்டின் கண்கள்/
ஆணையிட்டே அறுத்தெறியட்டும் உனது வாளும்/
வன்புணர்வும் வன்முறையும் வக்கிரச் சூழ்ச்சியாம்/
தண்டிக்கத் தயங்காதே கரமேந்திய தர்மத்தால்  /

நிமிர்ந்தே சொல் நியாயம் வெல்லட்டும்/
நிம்மதி பூத்தே மானுடமும் மகிழட்டும் /
தீயோரைக் கொழுத்திடும் தீயும் நீயே/
தீன்சுவை தடவும் அமிர்தமும் நீயே/

விதியின் பாதையில் எழுதப்படும் பொய்கள்/
விரண்டோடட்டும் சட்டக் கோப்பின் யாப்புக்கண்டே/
மிரண்டோடட்டும் கயவரும், கலியுலக மன்னர்களும்/
கரமிரண்டும் காத்து நிற்கட்டும் நீதியைத்தான்/

ஜன்ஸி கபூர்  

தனிமை



தூரத்து நிலவும்////
தூங்காத விண்மீன்களும் துணையிருக்கும்////
விடியாத இருட்டும் அருகிருக்க////
மனதுக்குள் ஏது தனிமை////


ஜன்ஸி கபூர் - 12.07.2020

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


அத்தி மரப் பூவே நித்திலத்தின் அற்புதமே
சித்திரமே சிந்தையினிக்கும் இனிய செல்லமே
முத்தேயுன் நகையழகில்; மயங்கித்தான் போனேனடி

மாதுளம் பூச்சாற்றில் ஊறிய உதட்டோரம்
மழலைத் தமிழெடுத்தே மயக்குவாய் பல பேரை
மங்காத குறும்புகளால் மனசைத்தான் கிள்ளிடுவாய்
நீங்காத நினைவோட்டத்தின் நினைவும் நீயாய்

குறுநகை சிந்தி குதூகலித்த  வதனம்
குதூகலம் சிந்தி பலரை ஈர்க்கும்
குயிலின் நாதமாய் ஒலிரும் குரலாலே
பழகும் மாந்தரும் சொக்கித்தான் போவாரடி

சிட்டாய்ப் பறக்கும் குட்டியே
எட்டு வயதோ உனக்குள்
பட்டுப் பூக்களால் தூவியுன்னை வாழ்த்துகிறேன்
கட்டிப் போடும் அன்போடு பல்லாண்டு வாழ்கவே

இத்தனை அழகோடு இன்றைய நாளினில்
இனிதாய் பூத்திட்ட இனிய நிலா சஹ்ரிஸிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உமம்மா குடும்பத்தினர் - (ஜன்ஸி கபூர்) - 12.07.2020







துள்ளும் அழகுப் பிள்ளை நிலா

அத்தியின் மொட்டே நித்திலத்தின் அற்புதமே//
பத்துத் திங்கள் பக்குவத்தில் விளைந்த உசுரே//
சித்திரமே சிந்தையினிக்கும் இல்லறத் தவமே//
முத்தேயுன் நகையழகில்; நசுங்குதே ஏழ்மையும்//

குறுநகை சிந்தி குதூகலித்தது வதனமும்//
குயிலின் நாதமாய் ஒலிர்ந்ததே குரலும்//
விழிகளும் மயக்கிடும் விடிவிளக்காய் ஆனதில்//
பழகும் மாந்தரும் சொக்குவர் இவள் அன்பாலே//

மாமரத்து தூளியிலுனை மாமன் ஆட்டிடுகையில்//
வேப்ப மரக்காற்றும் தாலாட்டும் தாய்போல//
தேன் வழியும் சொல்லெடுத்து அழுதிடும்போது//
வான்மகளும் திரை விரிப்பாள் ஈரத்தோடு//

மாதுளம் பூச்சாறு ஊற்றிய உதட்டோரம்//
மழலைத் தமிழும் கசிந்திடும் எழிலாக//
மங்கலமாய் உதித்த வெண்ணிலா இவள்//
மனங்களின் மெல்லிசையாய் வாட்டம் தீர்த்தாளே//

ஜன்ஸி கபூர்  


சோலைவனத்திலே மாலைநேரக் குயில்கள்

சோலைவனக்குயிலே சோடியென் மயிலே/
சோதனை வேண்டாமடி சேர்ந்திட வாடி புள்ள/
ஓலைக் குடிசைக்குள்ளும் அழகாய்; காதல்/
வாலைக்குமரியே வந்தாடு வாழ்க்கை நாமாகவே/

நாதமிசைத்தே நெஞ்சுக்குள்ள நாணி ஓடுகிறாய்
வேதம் நீதானே வேண்டும்; மதியே நீயெனக்கு
மோகம் நெய்தாய் உசுரைப் பிழிந்தே
மோதும் காற்றிலே வெட்கம் கலக்கிறாய்

செந்தமிழாய் வாழ்வோ டிணைந்தாய்
சந்தனமாய் மூச்சுக்காற்றில் உறைந்தாய்
வந்தாய் விழியின் ஈர்ப்பில் புள்ளே
எந்நாளும் எனையே நீயும் ஆண்டாய்

மருதாணிச் சாறாய் உந்தன் உதடு புள்ள
பருவ நிலா  உந்தன் மேனியின் எழிலாய்
கரும்பும் கூட சுவைக்கவில்லை
இரும்பு மனசுக்குள் நீதான் இனிமை

நாடி வந்தேன் அன்பால்தான்
நாமும் சேர்ந்தால் நலமேதான்
வாழும் வாழ்க்கை வசந்தமாய்ப் பூக்கட்டும்
பாலும் பழமாய் இணைந்திட வாடி புள்ள

-ஜன்ஸி கபூர்