About Me

Showing posts with label கவி அரங்கம். Show all posts
Showing posts with label கவி அரங்கம். Show all posts

2020/09/10

இன்றைய சூழலில் மாணவர்களுக்குத் தேவை

 பொன் -7

------------------

தலைப்பு - இன்றைய சூழலில் மாணவர்களுக்குத் தேவை

----------------------------------------------------------------

உட் தலைப்பு –

இ. தன்னம்பிக்கை

--------------------------------

தமிழ் வணக்கம்

-----------------------------

அமிர்தம் வழிந்திடும் இன்பத் தமிழே/

அகிலத்தின் மொழிகளுக்குள் முகிழ்த்தாய் முத்தாக/

தித்திக்கின்ற தமிழே வணங்கினேன் உன்னையே /

தலைமை வணக்கம்

-------------------------------------

கவிபாடி மனங்களை ஆளுகின்ற தலைவா/

கருத்தினில் நடுநிலையுடன் மொழியுடன் மணக்கின்ற/

கவியரங்கத் தலைவரே வணங்குகின்றேன் உங்களை/

அவை வணக்கம்

-------------------------------

மனங்களும் குவிக்கின்ற கருத்தினைக் கேட்டே/

மகிழ்ந்தே செவிமடுக்கின்ற இனிய சபையோரே/

மனமார்ந்த வணக்கங்கள் உங்கள் சிந்தைகளுக்கே/

இன்றைய சூழலில் மாணவர்களுக்குத் தேவை #தன்னம்பிக்கை

------------------------------------------------------------------- 

பெற்றிடும் கல்வியே பேறாகித் தொடரும்/

நற்றவ வாழ்வினில் நன்மைகளும் விளைவிக்கும்/

தற்றுணிவும் முயற்சியும் வெற்றிக்குத் துணையாம்/

தரணியில் இசைந்திட தன்னம்பிக்கையே அரணாம்/


விஞ்ஞானத்தின் விளைவுக்குள் அஞ்சாத தொற்றுக்களும்/

தஞ்சமாகி மேனிக்குள் நலத்தினை பஞ்சமாக்குகையில்/

பள்ளிகளோ உறக்கத்தில் மாணவரோ சுயகற்றலில்/

படிக்கின்ற ஆர்வத்துடன் தன்னம்பிக்கையும் வேண்டுமே/


அனுபவக்கல்விதனை முறையாக சிந்தைக்குள் ஏற்றிட/

அகற்றிடல் வேண்டுமே தடுத்திடும் தடைகளை/

மாணவர் விருப்புடன் கற்றிடும் கல்வியே/

பண்பான வாழ்வுக்குள் ஆளுமையை வளர்த்திடுமே/


நன்றி நவில்தல்

------------------------------

வாய்ப்புக் கொடுத்து கருத்தினை வளப்படுத்த/

களம் தந்த நடுவருக்கும் குழுமத்திற்கும்/

நன்றிகளை நவில்கிறேன் நெஞ்சமும் மகிழ/


ஜன்ஸி கபூர் - 10.09.2020





2020/07/18

நிலா முற்றம் கவி அரங்கம் -224

நிலா முற்றம் கவி அரங்கம் -224

தமிழ் வணக்கம்

என் உணர்வோடிசைந்து உணர்வுகளில் கலந்து அமிர்தமாய்ச் சுவைக்கும் அழகுத் தமிழுக்கு என் முதல் வணக்கம்

தலைமை வணக்கம்
கவியரங்கம் நிறுவனர் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த அன்பு வணக்கங்கள். நடுநிலை தவறாத கவியரங்கத் தலைமைக்கும் என் இதயபூர்வ நன்றிகளை மகிழ்வுடன்; முன்வைக்கிறேன்.
அவை வணக்கம்
கவியரங்கில் வாதிட களம் நிற்கும் அவையோருக்கும் என் அன்பு வணக்கங்கள்;

தலைப்பு
மனதிற்கு இனிமை தருவது

துணைத் தலைப்பு
இயற்கையே

விழி இன்பம் அழகிய மொழி
விலகிடும் துன்பங்கள் இயற்கை வனப்பிலே
விண் தொடும் மேகக் கூட்டங்கள்
விருப்புடன் நனைத்திடும் நல் மழையாய்
விளைந்திடும் கனிகளும் நறுஞ் சுவையே

பழகிடும் தோழமையாய் இயற்கையும் மாறுகையில்
பாசத்தோடு தொட்டுச் செல்லும் தென்றலும்
பறந்தோடும் சோம்பலும் உற்சாகம் நமதாகும்
பசுஞ்சோலைகள் குடைகளாகி வனப்புக் காட்டுகையில்
பசியும் விட்டகன்றே மகிழ்வும் சுவையாகும்
பறவைகளின் சிறகடிப்பும் பார்க்கையில் பரவசமே

இயற்கையும் அரணாகும் புவியும் அழகாகும்
இரசனையான அனுபவங்களும் கூடிவரும் பாடங்களாய்
இலக்குகள் கற்றிடவே இங்கும் பயிற்சிகளுண்டே
இதயமும் லயித்தாடும் நீரூற்றின் குளிர்மையிலே
இன்னுயிரும் பண்பாடும் குயிலோசை ஒலிக்கையிலே
இரவின் கண்களிலே விருந்தாகும் விண்மீன்கள்

அலைகள் துடிக்கையிலே கலிகள் கரைந்தோடும்
அணைத்திடும் தென்றலுமே ஆருயிர் வருடிவிடும்
அல்லியும் முகங்காட்ட ஆனந்தம் வழிந்தோடும்
அற்புதக் காட்சிகளில் அனலும் குளிராகும்
அன்பின் உணர்வோங்க ரசிப்பும் சுகமாகும்
அகிலத்தின் இயக்கத்திலே அமைதியும் அருகாகும்

ராகங்கள் இசைபாட உந்துதல் இயற்கையே
ராத்திரி வான்நிலவும் ரசிப்பின் சொப்பனமே
ராஜாங்கப் பூமியிலே ரசனைகள் ஏராளம்
ரகஸியங்கள் அறிந்திடவே தேடல்களும் சுவையாகும்

காதலும் வசப்படும் இயற்கையின் இதயத்திலே
கருத்துக்கள் மலர்ந்திடுமே கற்பனையும் ஊற்றெடுக்கும்
கருணை பூமியிலே பதிக்கும் தடங்களெல்லாம்
கல்வெட்டாய் பதிவாகும் நினைவின் ஏட்டினிலே

வனப்பின் ஆட்சியினில் வாழ்க்கையும் வென்றிடுமே
வாழ்நாளும் போதாதே வசந்தத்தை ரசித்திடவே
இறைவனின் அற்புதமே கண் ரசிக்கும் காட்சிகளே
இயற்கையோடு வாழ்கையில் மனமே இனிதாகும்

நன்றி நவிலல்
வாய்ப்பளித்த குழுமத் தலைமைக்கும் கவியரங்கத் தலைமைக்கும் பங்கோடிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம்

ஜன்ஸி கபூர் - 18.07.2020
யாழ்ப்பாணம்





2020/07/04

தென்பொதிகைத் தென்றல்

கவியரங்கம் 222
தமிழ் வணக்கம்
--------------------------
உணர்வுகளில் அழகு சூட்டி அமிர்தமாய் இனிக்கும் என் அன்புத் தமிழே உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்

தலைமை வணக்கம்
----------------------------------
இன்றைய நிகழ்விற்கு தலைமை தாங்குகின்ற நீதி வழுவா மதிப்புமிகு தலைவருக்கு என் பணிவான வணக்கங்கள்

சபை வணக்கம்
------------------------------
தத்தம் தலைப்பிற்கே செந்தமிழ்ச் சுவையினில் எழில்க் கவியிசைக்கும் நிலாமுற்றக் கவிஞர்கயுக்கு என் அன்பான சபை வணக்கங்கள்

தலைப்பு
-------------------
தூது செல்வாய்
துணைத் தலைப்பு
------------------------------
தென்பொதிகைத் தென்றல்
-------------------------------------------

தென்பொதிகைத் தென்றலே
தெற்குத் திசையில் எந்தன் தெய்வமகள்
தெவிட்டா நினைவுகளுடனே
தொலைவான என் தேவதையிடம்
தொல்லையின்றி நீயும் தூது செல்லு 

கானமிசைத்த கானக் குயிலாள்
காந்த விழியால் கட்டிடுவாள் அன்பாலே
காணும்போதெல்லாம் தேனிடுவாள்; வார்த்தைகளில்
காணாம லின்று வலி சுமக்கிறேன்
கண்ணீருக்குள் உறைந்தே உயிர் ஏந்துறேன்

வண்டே துளைக்கா அமிர்த மவளுள்
வந்தமர்ந்ததோ வைரஸ் முட்கள்
வனப்பெல்லாம் துயரால் கரைய
வருந்தி வீழ்கிறாள் வாழ்வை வெறுத்தே
வலிக்கின்றதே எந்தன் நெஞ்சும் பிரிவால்

கொரோனா என்றனர் பிரித்தனர் எம்மை
கொளுத்தும் வெயிலால் மகுடம் சூட்டினர்
கொடி யிடையாள் ஒடிந்தே போனாள்
கெஞ்சிக் கேட்கிறேன் சேதி சொல்லு 
கெட்டி மேளம் கொட்டும் நாள் அருகென்றே

தனிமையே மருந்தாக துடிப்பவளுக்கே
தங்கையாய் நீயும் துணையாய் இரு
தடையெல்லாம் உடைந்ததும் தாவி வருவேன்
தரணியும் நலம் செழித்து வாழட்டும்
தங்கத் தென்றலே அதுவரை அன்பூற்று

ஊசித் தீண்டலுக்கும் அஞ்சும் மென்மலரில்
ஊட்டிவிடு நீயும் அன்பைக் குலைத்து
ஊரெல்லாம் மரண ஓலம்
ஊர்வசி யவளின் அச்சம் பிடுங்கி
ஊஞ்சலாட்டு நீயும் சுகம் மனதை வருடட்டும்

பல மைல் தொலைவினில் பாவை யவள்
பாதை யிருந்தும் பயணத் தடை
பறந்து செல்ல வழியுமுண்டோ
மதி யறியும் உணர்வின் முகவரி
விதிக் கொடுமையோ நுண்ணுயிர்க் காவலிது

கண்மனி காத்திருக்கிறாள் நாட்களை எண்ணியபடி
கண்ணீரை உலர்த்தவே விரைந்தோடு தென்றலே
கண்ணன் எந்தன் மனதைக் கூறிடுவாய்
கன்னிமகளும் காத்திருப்பாள் நம்பிக்கை பூக்க
காலங்கள் கூடுமெங்கள் கரங்களும் சேர

நன்றி நவிலல்
------------------------
நிலாமுற்றத்து 222 ஆம் கவியரங்கினில் கவிபாட வாய்ப்பளித்த தலைமைக்கவிஞர் அவர்கட்கும் முற்றத்து சொந்தங்களுக்கும் பெருநன்றியை மகிழ்வுடன் முன்வைக்கிறேன் கவிஞர்களுக்கு வந்தமர்ந்ததே

- ஜன்ஸி கபூர் -





2020/06/27

தமிழுக்கு மகுடம்

தமிழ் வணக்கம்
------------------------------
வளரும் பயிராக முத்தமிழ் தித்திப்புடன் முற்றம் நுழைகின்றேன். தமிழ் வார்த்தைகளாலும் சொற்களாலும் என்னை ஆட்சி செய்யும் நற்றமிழே அமிர்தமாகி நானிலம் போற்றும் உன்னை வாழ்த்தி வணங்குகின்றேன்

தலைமை வணக்கம்
-----------------------------------
கவியரங்கின் நாயகராம் நீதி வழுவாமற் அரங்கை நகர்த்திச் செல்லும் தமிழ்ப் புலமைக்கு எனது இனிய கோடான கோடி வணக்கங்கள்

அவை வணக்கம்
------------------------------
தத்தமது தலைப்பிற்கே சொல் கோர்த்து அழகு தமிழில் கவி வார்த்துப் பாடுகின்ற வாதிடும் கவிப் புலமைகளுக்கும் அரங்கினைத் தொட்டுச் செல்கின்ற அனைவருக்கும் எனது அன்பு கனிந்த வணக்கங்கள்

தலைப்பு
நிலாமுற்றம்

துணைத் தலைப்பு
தமிழுக்கு மகுடம்

இணையக் குழுமங்கள் பல இங்குமங்கும்/
இரகஸியமாய் தலைகாட்டி மறையும்/
இதயம்கலந்தே பலர் நினைவேற்றி மகிழும்/
இரசிப்பின் தரிசிப்பாம் நிலாமுற்றத்தில்/
இரவு பகலாய் தடம்பதித்தே மகிழும்/
இனிய தென்றலாய் மெல்ல மீட்டுகின்றேன்/
இனிய தமிழ் ஏடெடுத்து வழியும் செழுமையினை/
இரசித்தே கவியெழுதுகின்றேன் நிலாமுற்றச் சிகரமேறி/
இரவைத் துரத்திக் கொண்டிருக்கும் வானில்/
இனிய நிலாவோ முற்றத்தில் கனவுகள் சுமந்து ஒய்யாரமாய்/
இளமைத் துள்ளலுடன் காத்து நிற்கிறது/
இனிமைத் தமிழ்ச்சாறின் பா அருந்த/
இன்முகம் காட்டும் பலருள் நானும் ஒருத்தியாய்/
இங்கு கவியில் நனைந்தே இதம் காண்கின்றேன்/
இயலாதோறும் இங்கு வந்தால் கவி புனைவார்/
இரகஸியம் என்னவோ மனமே புதிர் அவிழ்/
இனிமை தெவிட்டாத தமிழ்ப்பால் என்றும் உவப்பால் கட்டி/
இழுக்குமே இரம்மியம் நமக்குள் வார்த்தபடி/

குழுமங்கள் பலவாம் இணையத்தின் முகவரிகளாம்/
குழாவித் திரிகின்றன இரவும் பகலுமாய்/
குத்துவிளக்கின் மங்கலமாய் பிற மொழிக் கலப்பின்றி/
குவலயத்தின் ஒளி நிலமாய் தெளிவான வழிகாட்டலுடன்/
குறைகளின்றி ஒளிர்கின்றதே நிலாமுற்றம் நிறைவோடு/
குழுவினரின் தமிழ்ப்புலமையும் கூட்டுறவும் அறநெறியும்/
குன்றின் ஆதவனாய் உற்சாக ஒளியெடுத்தே/
குடியிருக்கும் மொழி வளத்தால் அழகு பெறுகின்றது/

தமிழைச் சுவாசித்து தமிழாய் வாழ்ந்து/
தங்கத்தமிழைப் பிழிந்தூற்றி கற்கச் செய்து/
தரணியிலே தடம்பதிக்கும் வண்ணத்/
தமிழ் கூடமாய் தன்னை யுயர்த்தி/
தனித் தமிழிலே பா இசைத்தால்/
தடவிக் கொடுக்கும் பின்னூட்டங்களும் கைதட்டல்களும்/
தன்னம்பிக்கையுடன் கவியெழுதத் தூண்டும்/
தலைநிமிர்ந்தே கவிஞர் என்றுரைக்கும் நாமம் சூட்டி மகிழும்/

கவியாடு தளத்தினிலே கருக்கள் பல தந்தே/
களிப்போடு பாக்கள் இசைக்க உணர்வசைத்து/
கவிச் சந்தத்தில் சிந்துகளும் இசைத்து/
கரகோஷ ஆரவாரத்தில் வெற்றித் திலக முமிட்டு/
கண்குளிரும் சான்றிதழ்கள் அழகுத் தமிழாய்/
கனிவோடு வழங்கும் செழுமையில் சுந்தரத் தமிழும்/
கண்ணோரம் கருக்கட்டும் கனவுகளும் தமிழ்க்/
கருத்தாகி மணக்கும் முற்றத்தின் மன்றலில்/
கண்ணின் மணியாய் தமிழ் வாழ்கின்றது வளமாயிங்கு/
கன்னித்தமிழ் வளர்ப்போரும் கடலாய் தமிழ் ஆள்பவரும்/
கரம் சேர்த்தே மகிழும் குன்றமிது ஆரோக்கிய மன்றம்/
காலமெல்லாம் வளர்ந்து தளிர்க்கும் முத்தமிழ் அரங்கு/

முகநூலின் முற்றமுமாய் முழு உலகின் சொத்துமாய்/
முகங் காட்டும் பலரது புலமையிங்கு புதுமைதான்/
முத்தமிழின் வாசத்தினில் கவிகளை அற்புதமாய்/
முத்திரையிடும் கவிகள் கரம் தொடுவதுமிங்கேதான்/
முழு மூச்சாய் வண்ணத் தமிழ் கொய்து/
முழு நிறைவாய் புலமைகள் ஆளுமிங்கே/
முகத்திரை யேதுமின்றி அனைவோரின் சிந்தைகளுமே கூடுமே/
முற்றத்து நிலா என்றும்  தமிழ் வாழ்த்துக் கூட்டில்/
முத்துப்பேட்டை நாயனாரின் சிந்தை தொட்ட யுக்தியிங்கு/
முறுவலித்தே புன்னகைக்கின்றதே  தமிழையும் வளர்த்தே/

நிலாமுற்றம் தனித்துவம் தமிழ்க்களம் என்றுரைக்கும்/
நினைவுகள் நீங்காத வரம் கொண்டே/
நித்திலத்தில் பொற்கிழியாய் நீடூழி வாழ்ந்திடுமே/
நிலாவிலே கவியோட்டம் அழகோட்டம்/
நிதர்சனமாய் மொழி வளர்க்கும் கலைக்கூடம்/
நினதும் எனதும் புகழ் வளர்க்கும் உயிர்க்கூடம்/
நல்லோர்கள் உயிர் மூச்சில் இன்பமதை நெய்தே/
நன்னிலத்தில் தமிழ்பாடி உயிரூற்றும் நிலாமுற்றம்/
நீண்ட காலம் தமிழ் வளர்க்கும் மொழிக்கூடம் இது/
நிமிர்ந்த பார்வையில் மகுடம் சிரிக்கின்றது தன்னடக்கமாய்/

நன்றி நவிலல்
----------------------
முத்தான முற்றத்தின் சொத்தாகிய 221 ஆம் கவியரங்கின் தலைவர் உள்ளிட்ட குழுமம் பெருந்தகைகளுக்கும் பெரு நன்றிகளும் பெரு வாழ்த்துக்களும் பெரு மனதுடன்
தமிழ் வளர்க நிலாமுற்ற அரங்கும்

ஜன்ஸி கபூர்



  • badge icon

     அருமையான தொடக்கம் வாழ்த்துகள்



    •  ஆற்றுவெள்ளம் பொலெழுந்து ஓடி வரும் பாட்டு
      அருமை எனச் சொல்லிவரும்
      முற்றத்திலும் பாட்டு
      வாழ்த்துகள்


       

    •  


      நிலாமுற்றத்தின்
      பெருமைக்குறிய 221-வது கவியரங்கத்தில்,
      வரலாற்று சிறப்பு மிக்க
      இவ்வரங்கத்தில்
      எண்ணத்தில் வண்ணமும்
      வான்மேகத்தில்
      கவியாரமும் செய்து
      # தமிழுக்கே மகுடம்
      என்று
      பூஞ்சோலையில்
      இரும் மலர்கள்போல்
      எழில் கொஞ்சும்
      வார்த்தைகள் நெய்து
      அந்தியில் எழும்
      சந்திரன் ஒளியாய்
      அற்புதம் செய்யும்
      கவி வரிகள் தந்த
      கவிப்பெரியோர்க்கு நன்றி
      உங்கள் தமிழ்ப்பணி மேலும்
      உயர்வடைய கோடி வாழ்த்துகள்
      கூறி மகிழ்கிறோம்

2020/06/20

அனுபவக்கல்வியே தேவை

தன்னை  யறிதல் கல்வியென்றார் ஆன்றோர்/  
விண்  மண் இடைவினைப் புரிதலில்/
எண்ணும் எழுத்துக்களும் ஏடுகளை நிரப்ப/
கண் ஒளியில் அறியாமை  இறக்கும்/

அறிவால் கற்பவை வெறும் சொற்ககளே/
வெற்றிடங்களில் வீழும் விதைகள் போல/
வெறுமனே பயனற்றுப் போகும் செயலின்றி/
அறுந்த மணிகளாய் சிதறிக் கிடக்கும்/

சிரசோடு பொருந்தும் அறிவில் உயிர்ப்பில்லை/
கரமும் இதயமும் இணைந்திட்டால் செயலாகும்/
காந்தியும் சொன்னார் இயற்கையும் அழைக்கின்றதே/
காலத்தின் கல்வெட்டில் பதிவாகுமே அனுபவக்கல்வி/

பயன் குன்றிய கல்வி நமக்கெதற்கு/
பாரதியின் முழக்கத்திலும் மெய் யுண்டே/  
சந்ததி வழிக் கல்வி விழுமியங்களே/
சமூகத்தின் அச்சாணியாம் என்றும் தாங்கும்/

சூழும் கல்வியே சமுகத்தின் தேவைகளாம்/
வாழ்க்கையே கல்வி என்றே மொழிந்தார் ரூயி/
தொடர்கல்வியாய் தொடர்கின்ற அனுபவங்களே/
தொல்லையின்றி நம்மைக் காக்கும் தொழிற்கல்வியாம்/

இயற்கைச்சூழல் கற்றுத் தரும் இசைவாக/
இரசனையால் ஐம்புலனில் விரியுமே அனுபவங்கள்/  
தரிசனங்கள் காட்சிகளால் பிள்ளைகள் மனமும்/
கரிசனையுடன் விரும்பிக் கற்குமே எந்நாட்களும்/

ஞானத்துடன் வாழ்க்கையையும் கற்றிடவே/
அனுபவக்கல்வியே சிறந்ததென்றே/ 
நிறைவு செய்கின்றேன் தலைப்பினை/

ஜன்ஸி கபூர் - 19.06.2020

 கல்விப் புலத்தில் கனிந்த பழத்தின் கருத்து.
அனுபவக் கல்விக்கு ஆதாரம் அழகாகத் தருகின்றார்.
இந்தக் கருத்துகளை எடுத்து நோக்குவோம்.
நிலாமுற்றத்தில் முதல் கவியரங்குவென தலை நிமிர்ந்து பகிர்ந்தாலும் தக்க கருத்துப் பகிர்ந்தார்.
வாழ்த்துகள் கவிஞரே வருகைக்கும் பகிர்வுக்கும் வாழ்த்துகள்

நிலாமுற்றத்தின்
220 - வது
கவியரங்கத்தில்
அனுபவக்
கல்வியே சிறந்து என்று
கவிதையில் ஆயிரம்
சான்றுரைத்து
தாங்கள்
படைத்திட்ட கவிதைக்கு
நன்றி
வாழ்க தமிழ்
வாழ்க உங்கள்
தமிழ்பணி என்றே
வாழ்த்தி மகிழ்கிறது
நிலாமுற்றம்