About Me

2013/04/13

சித்ரா பௌர்ணமி


சித்ரா பௌர்ணமி!
சிரிப்பாள் என் தோட்டத்தில்
அழகாய்  நாளை!

மல்லிகை மொட்டுக்களாய்
விரிந்து கிடக்கும் நட்சத்திரக் குவியலுக்குள்
மயங்கிக் கிடக்கும் மணப்பெண்ணாய் அவள்!

ஒளி நீரூற்றுக்களை என்னுள் விசிறி
அவளென் கன்னம் கிள்ளுகையில்
கிறங்கிப் போவேன்
கவிகளை கிறுக்கியபடி!

பவ்வியமாய் சிரித்து - என்
மனசு கௌவும் அவள் வரும் வரை
இன்னும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்
என்னுடன் சேர்ந்து நீங்களும்!


-Jancy Caffoor -

2013/04/12

வயசுக்கு வந்திட்டேனாம்



நான் வயசுக்கு வந்திட்டேனாம்!

பக்கத்து வீட்டத்தை
பக்குவமாய் நெஞ்சில் அறைந்தே
அம்மாவிடம் என்னை சிறை வைத்த போது
மனசு பதைபதைத்தது!

என் பாவாடைக் கரைகளில்
பூத்திருந்த ரத்தக் கறைகள்
மிரட்டிக் கொண்டிருந்தன
என்னை மற்றோர்களிடமிருந்து தனிமைப்படுத்தி!

வயிற்றுத் தசைகளின் பிரட்டலில்
வாலிப்பான உடலெங்கும் வலியெடுக்க
நடுங்கும் கரங்களுடன் அச்சம் இறுகி
தரையமர்ந்தேன் உணர்வின்றி!

அயலாளர் யார் யாரோ
என்னை எட்டிப் பார்த்தே கிசுகிசுத்தனர்
சடங்கு வைக்கும் வரை அசையாதேயென்று
சிறைப்படுத்தினர் வீட்டோரம்!

"ஏய் பெரிய மனுஷி"
நண்பிகளின் கேலிகளில்.என் வருங்காலச்
சுதந்திரம் நசுங்கிய போது
சுடும் கண்ணீருருகி கன்னம் தெறித்தது!

நேற்று வரை சிட்டாய்ப் பறந்தவென்
இறகறுத்த பருவம்
பறைசாட்டி முரசறைந்தது ஊர் முழுதும்
என் வாலிப இரகஸியங்களை!

ஆண் துணையில்லா எம் கூட்டில்- இனி
வட்டமிடும் வல்லுறுக்கள்
காமத் தீ வார்க்குமென்று
பாவம் அம்மாவும் அஞ்சிக் கிடந்தாள்
மனசுக்குள் முட்களைப் பதியமாக்கி!

தாய்மைக்கு அங்கீகாரமாம்
என் பெண்மை!
பாட்டி பத்தியங் காக்க ஏதேதோ தந்தாள்
வாய்க் கசப்பையும் மறுத்தபடி!


பதினாறின் செழுமையில்
தேகம் பூத்துக் குலுங்கியதில்
அம்மாவின் சேமிப்பும்  கரைய
தாய் மாமன் நாளும் குறித்தான்
தன் மகனுக்காய் என்னை!


"நான் வயசுக்கு வந்திட்டேனாம்"
என்னைச் சுற்றி
ஆரவாரங்களும் கொண்டாட்டங்களும்
குதூகலிக்கின்றன - என்
 கனவோரங்களில் பூத்திருந்த
சாம்பர் மேட்டைக் கவனிக்காமலே!

நேற்று வரை நெருங்கிப் பழகிய
நண்பர்களுக்கு
அண்ணன் மிரட்டல் கொடுக்கிறான்
என் நட்பை தணிக்கையாக்கி!

"பெரிய மனுஷி நானென்ற"
அறிவிப்புப் பதாதைகளுடன்
யாரு மறியாமலே என்னைக்
கரைத்துச் செல்கின்றது
கண்ணீர்த்துளிகள் !

- Jancy Caffoor-
     12.04.2013







தவறுகள் உணரப்படும் போது



ஞாயிற்றுக்கிழமை பொதுவாக எல்லோருக்கும் விடுமுறைதான்...

ஆனால் அனுஜாவுக்கு............

மனசின் வலிப்புடன் உடலும் லேசாய் அலுத்தது. வீட்டுவேலை எல்லாம் அவள் தலையில் மலை போல குவிந்து கிடந்தது. முன் ஹாலில் அன்றைய வாரப் பத்திரிகையை சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து மனது கொதித்தது.

"சே..........இன்னைக்கு ஒரு நாளாவது கொஞ்சம் உதவி செய்யலாம்தானே, நேரத்துக்கு தின்ன மட்டும் வாங்க"

புறுபுறுத்தாள் அனுஜா....

"அநு .................என்ன ஏதோ பேசுற மாதிரி இருக்கு, எனக்கா"

கணவன் கேட்ட போது ஆத்திரத்தில் உதடு துடித்தது. உண்மையை சொல்லப் போக, அவனும் கொஞ்சம் கோபக்காரன் கையை நீட்டினானென்றால், அப்புறம் அக்கம்பக்க மனுஷங்க கிட்ட இந்த வீட்டு மானம் கப்பலேறி போய் விடும்" மௌனம் காத்தாள்.

"அநு" நான் கேட்டதற்கு பதில் இன்னும் வரல............"

அவனும் விடுவதாக இல்லை.

"இவரு பெரிய்ய்ய்ய ஜட்ஜ்.....தீர்ப்புச் சொல்லப் போறாராம்..." 

மீண்டும் முணுமுணுத்தாள்........

"என்னோட தலைவிதிய நெனைச்சு பொழம்புற, உங்கள காதலிச்சு கல்யாணம் முடிச்சதற்குப் பதிலாய விறகுக் கட்டைய முடிச்சிருக்கலாம். கறி சமைக்கவாவது உதவும்"

மனசு கண்ணீருடன் கரைந்திருக்கும் நேரம், வீட்டின் ஹாலிங் பெல் அடித்த போது, கணவன் வெளியே எட்டிப் பார்த்து, உற்சாகமாகக் கூவினான்..

"வாவ்.......மச்சான், என்னடா இந்தப் பக்கம், அநு.அநு......இன்னைக்கு மச்சானுக்கு நம்ம வீட்டிலதான் சாப்பாடு"

நண்பனின் மீதுள்ள பாசம் கட்டளையாக இறுக்க, திணறிப் போனாள். 

"தனியொருத்தியாக வீட்டுவேலை செய்ய முடியாம புலம்பிக் கொண்டு இருக்கிறன், அதுக்குள்ள விருந்தோம்பல்"

எரிச்சல் ஆத்திரமாக மாற, அது அவள் செய்யும் வேலைகளில் பட்டுத் தெறித்தது. சமையல் பாத்திரங்கள் ஓசை எழுப்பின.

"மச்சான், உன் பொண்டாட்டி ரொம்ப சூடா இருக்கிறாள் போல, கொஞ்சம் ஹெல்ப் பண்ணிக் குடுக்கலாம்ல"

நண்பன் ஆதங்கப்பட்ட போது, மெல்லிய சுவாசத்துடன் அவள் கணவன் மறுதலித்தான் .

" அட....போடா....நீ ஒன்னு .....இந்த வீட்டு வேலைங்க எல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம்..அப்புறம் நம்ம கணக்கெடுக்க மாட்டாள்களடா...நான் அவளுக்கு இன்னைக்கு பாவம் பார்த்து ஹெல்ப் பண்ணப் போனால், டெய்லி எனக்கு ஏதாவது வேல வைப்பாள்டா....படிச்ச பொண்டாட்டின்னா கொழுப்பு ஜாஸ்திடா....நீ கல்யாணம் முடிச்ச பொறகு விளங்கும் பொண்ணாட்டின்னா எப்படியிருப்பான்னு"

அவன் சொல்லி முடிப்பதற்குள் மகள் சிந்துஜா அழும் சப்தம், அக் ஹோலை நிறைத்தது.

"அநு............ஏன் கொழந்தய அடிக்கிறே" சற்று குரலை இறுக்கினான்..

"உங்க மாதிரித்தான் உங்க பொண்ணும், இங்க வந்து பாருங்க, அடுக்கி வைச்ச எல்லாச் சாமான்களையும் இழுத்து கீழ போட்டு அசிங்கப்படுத்துறாள்"

கணவன் மீதுள்ள ஆத்திரத்தை தனது ஆறு வயது மகளிடம் அனுஜா காட்ட, மகளின் அழுகைச் சத்தம் வீதி வரை பரவியது.............

அவர்களது குடும்ப விவகாரம் உச்சக் கட்டமடையும் நிலையில், நண்பனோ நாசூக்காக வெளியேறினான்...

"சொறீடா மச்சான், நான் வந்த நேரம் சரியில்லைன்னு நெனைக்கிறன். இன்னுமொரு நாளைக்கு வாரேன்டா"

வெளியேறினான்..

அப்பொழுதும் அனுஜாவின் ஆத்திரம் அடங்கவில்லை. கைகள் பலமடைந்ததைப் போன்ற உணர்வில், மகளின் முதுகில் கைவிரல்கள் வேகமாகப் பதியத் தொடங்கின.

"அம்மா......................"

குழந்தை விடாமல் உரத்து அழுதாள் ........................கதறினாள்...

மகள் மீதுள்ள அன்பும், நண்பனின் வெளியேற்றமும் மனைவி மீது கோபத்தை தாராளமாக இறைக்க, விருட்டென்று உள் நுழைந்து அனுஜாவின் கன்னத்தில் பலமான அறைகளை இறக்கினான்

"இது வீடா.....இல்ல சுடுகாடா......எப்ப பார்த்தாலும் புலம்பல்"

அவன் மேலும் அவளை அடிக்க முனைந்த போது மகள் தடுத்தவாறே கதறினாள்...

"அப்பா.....வேணாம்பா.....அம்மாவ அடிக்காதீங்கப்பா.........அம்மா பாவம்"

தன் வேதனை, வலியை விட பெத்தவள் துன்பப்படுவாளென்று கதறும் தன் மகளை மார்போடணைத்தவாறு அனுஜா கண்ணீர் சிந்தினாள்...

"சொறீடா...செல்லம், அம்மா இனி உன்னை அடிக்க மாட்டன்"

தன் குழந்தையை ஆரத் தழுவி முத்தமிட்டு அணைத்த அனுஜா நிமிர்ந்த போது கணவன் எதிரே நின்றான். அவசரமாய் அவன் மீது குத்திட்டு நின்ற தனது பார்வையை வேறு திசையை நோக்கி நகர்த்த முற்பட்ட போதும்,

அவன் பாய்ந்து வந்து அனுஜாவையும், மகளையும் ஆரத் தழுவினான்......

"சொறீடி செல்லம், நானும் உனக்கு அவசரப்பட்டு அடித்திருக்கக் கூடாது"

அவனது குரலும் தழுதழுத்தது. மகளறியாமல் மனைவியின் கன்னத்தை தனது முத்தத்தை இரகஸியமாகப் பதிக்கத் தொடங்கினான் அவன்..

(குடும்பம் என்றால் இப்படித்தாங்க......அடிச்சுக்குவாங்க, அப்புறம் கட்டிப் பிடிச்சுக்குவாங்க...என்ன நான் சொல்லுறது சரிதானே........கோபம் வாறது தப்பில்லீங்க, கோபம் வந்தாத்தான் அவன் மனுஷன். ஆனா அந்த கோபம் குறைஞ்ச பிறகு தன் தவற உணராம இருக்கிறாங்க பாருங்க அதுதான் தவறு)

பிர் அவுன்



தொல் பொருள் ஆய்விற்காக எகிப்திலிருந்து பிரான்ஸிற்கு கொண்டு செல்லப்பட்ட பிர் அவுனின் உடல்
------------------------------------------------------
பிர் அவுன் எவ்வாறு இறந்தான் என்பதைக் கண்டுபிடிப்பதே ஆய்வின் நோக்கம். இவனின் உடலில் காணப்பட்ட  உப்புப் படிவுகள் இவன் கடலில் மூழ்கி இறந்ததை சான்று பகிர்கின்றன. அதுமாத்திரமின்றி இவனின் கடலினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமையும், பின்னர் வெளியே எடுக்கப்பட்டமையும் ஆச்சரியமான விடயமென ஆய்வுகளுக்காக தலைமை வகிக்கும் சத்திரசிகிச்சைக் குழு தலைவர்  Prof:Maurice Bucaille குறிப்பிடுகின்றார்.
இவ் ஆய்வின் முடிவில் Prof:Maurice Bucaille இஸ்லாத்தை தழுவிக் கொண்டார்.

( எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)

- Ms.A.C.Jancy -

நற்சிந்தனைகள்


நபி மொழிகள்
---------------------------



மோதிரம் அணிதல்
-------------------------------
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆகி இருந்தது. அதன் மேல் குமிழும்  வெள்ளியால் ஆகி இருந்தது,
                                                                                                                 (புகாரி)

அப்துல்லாஹ் பின் ஜ பர் (ரலி) அறிவிக்கின்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வலது கரத்தில் மோதிரம் அணிபவர்களாக இருந்தார்கள்.....
                                                                                                                (இப்னு மாஜா)

இந்த ஹதீஸ்கள் முஸ்லிம் ஆண்களின் வெள்ளி மோதிர அணிகைக்கு ஆதாரமாக அமைந்துள்ளது..
------------------------------------------------------------------------------------------------

உங்களில் ஒருவர் ஒரு சகோதரரைச் சந்தித்து அவரிடம் அமருவாரானால், அவரிடம் அனுமதி பெறும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வேண்டாம்,
                                                                                                                    (தைலமீ)
-----------------------------------------------------------------------------------------------



நபியவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். ஒட்டகம் பருகுவது போன்று (ஒரே மூச்சில்) பருகாதீர்கள்!எனினும் (இடையிடையே மூச்சு விட்டு) இரண்டு மூன்று விடுத்தமாகப் பருகுங்கள்! நீங்கள் பருகத் துவங்கினால், அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள்! நீங்கள் தண்ணீர்ப்பாத்திரத்தை நீக்கினால் (குடித்து முடித்து விட்டால் ,"அல்ஹம்துலில்லாஹ்" எனக் கூறி) அல்லாஹ்வைப் புகழுங்கள்!
                                                                                            (திர்மிதி , புகாரி, முஸ்லிம்)

-------------------------------------------------------------------------------------------------



ஒருவர் தும்மினால், மூன்று தும்மல்கள் வரை, அருகிலுள்ளவர் "யர்ஹமுக்கல்லாஹ்" என அவருக்கு பதில் அளிப்பது வாஜிப் படமை, அல்லது தும்மினால், பதில் அளிப்பதும், அளிக்காததும், அதனைக் கூறுபவரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். எனினும் அப்பொழுதும் பதிலளிப்பது முஸ்தஹப் ஆகும்.
                                                      ( மிர்காத்)


2013/04/11

குறத்தி மகன்



சென்ற மாதம் ஒரு நாள் , காலை நேரம்...........

இடம் : வவுனியா பேரூந்து நிலையம், இலங்கை

பிச்சை எடுப்பதை தன் தொழிலாகக் கொண்ட குறவர்க் கூட்டமும் அந்த பகுதியிலுள்ள பிரபல்ய ஹோட்டலொன்றுக்கு அருகிலுள்ள தரையொன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக பதினைந்துக்கும் மேற்பட்ட தலைகள்..............!

பெண் குறத்திகள் , தமது முதுகில் தொங்க விடப்பட்டிருந்த சேலைத் துணியை நிலத்தில் பரப்பி, தாம் பிச்சையெடுத்த சில்லறைக் காசுகளை அதில் கொட்டி விட்டு மீண்டும் தமது சிறு குழந்தைகளை இடுப்பில் செருகியவாறு பிச்சைத் தொழிலுக்குத் திரும்ப, கணவன்மார்கள் அந்தச் சில்லறைகளை எண்ணி எண்ணி தமது பைகளுக்குள் நிறைத்தார்கள்.

நானோ, அவர்கள் அறியாமல் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். எனது கல்லூரிக்குப் போக வேண்டிய முச்சக்கர வண்டியின் தாமதம் எனக்கு வசதியானது.

எல்லாப் பணமும் எண்ணி முடிந்ததும், அவ் ஐந்து ஆண்களும் தமது மனைவிமார் கொடுத்த பொற்காசுகளுடன், அப் பஸ் நிலையத்திற்கு எதிராகவுள்ள கடையொன்றை நோக்கி வேகமாகச் சென்றார்கள்....


அந்தக் கடை "சாராயக் கடை"

இவனுகளுக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி, குட்டி குடும்பம்....................நானாக இருந்தால் காசு கொடுத்திருக்க மாட்டேன். தலையைச் சீவி காக்காக்கு போட்டிருப்பன்..

உழைப்பறியாத மாக்கள் இப்படித்தான் பணத்தைச் சீரழித்து நாசமாகிப் போவார்கள் போல!





உளிகள்



மன எண்ணங்கள் வேறுபடும்போது முரண்பாடுகள் தோன்றி எதிரிகளாக உருவாக்கப்படுகின்றனர்.

எதிரிகளை நாம் சமாளிக்கும் போது, வாழ்வில் பல சவால்களை எதிர்கொள்ளும் அனுபவங்கள் கிட்டும்.
--------------------------------------------------------------------------------------------

பனை உரசும் காற்றின் சுகந்தத்தில் பால்யம் கரைத்த மங்கை நான்

--------------------------------------------------------------------------------------------



அன்புக்கு முன்னால் அறிவியல் கூட தோற்றுப் போய் விடுகின்றது.

காந்தத்தின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளும் என்பது அறிவியல் உண்மை. இது நான் கற்றது. கற்றுக் கொடுப்பது!

ஆனால் ............!

ஒத்த மன எண்ணமுடையோர் ......................

( அவர்கள் காதலராக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி )

வாழ்வில் ஒருபோதும் வேறுபடாமல் பிரியால் இணைந்தே இருக்கின்றனர். இவர்களுக்கிடையிலான வலிமையான அன்புசார் கவர்ச்சி விசைகள் காலவெளியில் ஒருபோதும் விரயமாவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------


உன் அருகாமையில் உறைந்திருக்கும் ஒவ்வொரு நொடிகளுமே, புதிதாய்ப் பிறப்பெடுக்கின்றேன். உன் பேரை மட்டும் உச்சரிக்கும் உன்னவளாய்!
-------------------------------------------------------------------------------------------------

நீ பூவையென்பதால்..........
தினமுன்னை பூக்களால் அர்ஜிக்கவா!

நீ பாவை என்பதால்.........
தினமுன்னை பாக்களால் பரவசமூட்டவா!
--------------------------------------------------------------------------------------------


காதல் செய்து ஊடல் தந்தே
காக்க வைத்தவர் காணாமல் போய்
தாமதித்து நம்முன் வருகையில்......!!

அடடா...........

ஆத்திரம் கூட அழகான அன்புதான்.........!!
----------------------------------------------------------------------------------------

மறதிதான் கவலைகளுக்கான மருந்து


- Ms. Jancy Caffoor -

2013/04/10

பவகேசன்

திருமண வாழ்த்து
2013.04.11



 எமது   ஸாஹிராச் சமூகத்தைச் சேர்ந்த  யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியங்காட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் பவகேசன் நாளை வியாழக்கிழமை (2013.04.11) திருமண பந்தத்தில் இணையவுள்ள பவகேசன், பிரகாசினி தம்பதியினர் தம் இல்லறத்தை நல்லறமாக்கி, குடும்பம் தளிர்த்து பல்லாண்டு வாழ  வாழ்த்துகின்றேன்.






முகநூல் பயணம்

முகநூல்!

நவீனத்தும் போஷிக்கும்
இயந்திரம்!

ஒரு நொடியில்
உலகம் தொட்டு வர - நமக்கு
அனுமதிக்கப்பட்ட விசா!

விண்ணப்பிக்கும் முகங்களை
தெரிவு செய்ய வுதவும்
தேர்வு மையம்!

படிக்கப் படிக்க
அலுக்காத புத்தகம்!

இங்கே!

தொலை நிழல்கள் கூட
நிஜங்களாய்
வார்த்தை பேசிச் செல்லும்
பாசத்துடன்!

நட்பு
காதல்
பொழுதுபோக்கு
போராட்டம்
பகைமை

என எல்லாமே கிடைக்கும் தாராளமாய்
இலவசமாய்!

இங்கு
உணர்வுகள்தான் பேனா மொழி!
கிண்டல்களும் பாசங்களும்
போதனா மொழி!

வாருங்கள் இங்கே!

இலக்கியம் வளர்க்கலாம்
புதுமைகள் பகிரலாம்
பழகிப் போகும் உள்ளங்களுடன்
அன்பைச் செலுத்தி
பொழுதையும் நகர்த்தலாம்!

முகவரிகளும்
முகமூடிகளும்
வேள்வி நடத்தும் இவ் யாகத்தில்

புத்திசாலிகள் பிழைத்துப் போவார்!
அப்பாவிகள்
அழிந்தும் போவார்!

முகநூல் பாதுகாப்புக் கடவையில்
தரித்து நின்று
பின்னூட்டங்களும் விருப்புக்களும்
படைப்புக்களில் சேகரித்துக் கொள்ள

இதோ கணனிப்
 பயணம்!

வாருங்கள் கை கோர்ப்போம்
நல்ல நண்பர்களாய்!

- Jancy Caffoor-
     10.04.2013

ஒரு காதல் கடிதம்


அன்புள்ள......................!

நான் உன்ன நேசிக்கிறது உனக்கு தெரிஞ்சும் கூட ஏன்டி என்னக் காயப்படுத்துற. உன் மேல எவ்வளவு ஆச வைச்சிருக்கிறேன். உனக்காக உசிரய தருவேன்டி அது உனக்கு தெரிஞ்சும் உன் மௌனத்தால கொல்றீயடி.....சத்தியமாச் சொல்றன்.....நீயெனக்கு கெடக்கலைன்னா செத்துப் போய்டுவேன்டீ"

இப்படிக்கு ..........................

இது எனக்கு நேற்று கிடைத்த காதல் கடிதமொன்று......

(அட.....வெயிட்.....எனக்கல்லப்பா....மொறைக்காதீங்க)

இத எழுதினது 16 வயது மாணவன், (தரம் 1 1) எங்க ஸ்கூல்தான் படிக்கிறான். அவனுக்கு நான் சயன்ஸ் பாடம் படிப்பிக்கிறேன். ரவுடித்தனத்தில பர்ஸ்ட்.. படிப்பில சத்தியமா அவனுக்கு மண்டைல ஒன்னுமே ஏறாது. தினம் தினம் என்னட்ட ஏச்சு வாங்கும் போது மண்டைய மண்டைய ஆட்டுவானே தவிர அதில ஒன்னுமே ஏறாது.

அவள் தரம் 9 படிக்கும் மாணவி. கெட்டித்தனம், அழகு, அமைதி, செல்வம் எல்லாம் ஒரே இடத்தில குவிந்திருக்கும் பிள்ளைதான் .. இவன் தொடர்ந்து 2 வருஷமா அவளை ட்ரை பண்ணிட்டு வாறன்,. அவளோ அவனத் திரும்பிக் கூடப் பார்க்கல. கடைசில அவர் பொறுமை இழந்தவராக தன் நண்பியிடம் இக் கடிதத்தைக் கொடுத்து தூதனுப்ப, அவள் இதை வாங்க மறுத்து வீசியெறிய.................

அக்கடிதம் ஆல் ரவுண்டராகி கடைசியில் அந்தப் பெண் பிள்ளையின் வகுப்பாசிரியையான என்னிடமே திரும்பி வந்து சேர்ந்தது. விசாரணையை நான் தொடங்கி விட்ட போது, அந்தப் பிள்ளை தனக்கு நடந்ததை சொல்லி அழ, அவனைத் தேடினேன்.

எப்படியாவது ............ அவன் திங்கட்கிழமை என்னிடம் மாட்டுவான்தானே .அப்ப இருக்கு..........!

இதுகள் எல்லாம் லவ் பண்ணி........கருமம் கருமம்....

படிக்கிற வயசில நாசமாக போகத் துடிக்கிறவன அடி கூடத் திருத்தாது!







தளிர்கள் - 7


உனக்குப் பிடிக்குமென்பதற்காகவே
கவிதைகள் புனைகின்றேன்
இருந்தும்
நீயென் ரசிகனாய் இல்லை!
கடந்து செல்கின்றாய்
என்னுள் தனிமைகளை நிரப்பி தாராளமாய்!
 

நேற்றைய தீர்மானங்கள்
இன்று மாற்றப்படலாம்!
இன்றைய எண்ணங்கள்
நாளை புதுப்பிக்கப்படலாம்

மாற்றங்களுடன் கூடியதே வாழ்க்கை!

உண்மையை ஏற்போர் தடைகளைச் சந்திக்காமல் வாழ்வில் வெற்றி பெறுகின்றார்.
 

வருந்தாதே!
நிறுத்தி விடுகின்றேன் - உன்
காதலை அல்ல
உன்னுடனான சந்திப்பை!


- Jancy Caffoor-
     10.04.2013






நம் பூமி



சூரியனை யின்னும் கீழ்வான்
விரட்டவேயில்லை
இருந்தும் விடியல் மறுக்கப்பட்ட
கைதிகள் இவர்கள்!

கனவுகளால் நெய்யப்பட்ட
வாழ்க்கைக் கூடாரங்கள்
தரிக்கப்பட்டன அரக்கர்களால்
திட்டமிடப்பட்டு!

இவர்களின் பூமியிலேனோ
விதைக்கப்படாத மனிதாபிமானம்
விட்டுச் செல்கின்றது இறப்புக்களை!

உறக்கத்திற்காக தாழிடப்படும்
விழிகளினி
திறக்கவே போவதில்லை
கண்ணிமைகளை வருடியபடி!

இங்கே
ஆயுத விளைச்சல்களின் அறுவடைகள்
தாராளமாய்
ஊற்றிக் கொண்டிருக்கின்றன
இறப்புக்களை!

மூடிவிடுங்கள் யுத்தக் குழிகளை
பிணங்களால்
ரணமாகாமலிருக்கட்டும் நம் பூமி!

- Jancy Caffoor-
     10.04.2013

தளிர்கள் - 6




விளங்கவேயில்லை - உன்
விழிகளில் விலங்கிட்டு
வீழ்த்தினாய் என்னை !
இதுதான் காதலோ!

-----------------------------------------------------------------------------------------



இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கின்றேன்....
உன்னில் தொலைத்த என்னை!

------------------------------------------------------------------------------------------




தனிமை...............
துணிந்து சொல்லும்
நம்மைவிட்டுச் சென்றோரின்
அன்பை!
------------------------------------------------------------------------------------------


உன் வழிப் பாதைக்காய்
என் விழிப் பார்வைகள்!
நீ..............
உடைத்துச் சென்ற மனசின்
ஒவ்வொரு துண்டுகளும்........
உனைக் காட்டும் கண்ணாடிகளாய்
என்னுள்!
-----------------------------------------------------------------------------------


அழகாய் இருப்பது இறைவன் தந்த வரம்...........!

அந்த அழகினை மேலும் மெருகூட்டுவது நாம் பிறர் மீது வைத்திருக்கும் அன்பேயாகும்!
----------------------------------------------------------------------------------------


ஓர் ஆணிண் அன்பில் பூவாக மலரும் பெண்.........
அவன் அடக்குமுறையில் வீணாய் உதிர்க்கப்படுகின்றாள்......!

ஒவ்வொரு குடும்பத்தின் அத்திவாரமும் ஆணின் கரங்களிலேயே திணிக்கப்படுகின்றது! பெண் மென்மையுணர்ந்து அவள் உணர்வுகளை மதியுங்கள்...

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒளிந்திருக்கும் தாய்மைதான் ஆண்களைச் சுமந்திருக்கும்.
அவன் வருங்கால கருவையும் சுமக்கவிருக்கும்!
-------------------------------------------------------------------------------------------


மனசை கொஞ்சம் திறந்து விடு
உன்னில் நான் காதல் செய்ய வேண்டும்!

உன் கவலையை என்னில் சிந்தி விடு
என் கண்ணீரில் உன் அன்பைக் குலைக்க வேண்டும்!

உன் மகிழ்வை என்னில் பூசி விடு
உன் னுதட்டில் என் புன்னகை பதிக்க வேண்டும்!

உன் விழிகளை லேசாய் மூடி விடு
கனவாய் உன்னில் நான் மூழ்க வேண்டும்!
----------------------------------------------------------------------------------------


காதல் வலி தரும்.!
இருந்தும்...................
நினைவுகளைத் தூவிச் செல்லும் அதன் வழி
அழகானது!





---------------------------------------------------------------------------------------


தாய் கருவறை தந்தாள் தானமாய்......
நீயோ..........
மணவறை தந்தாய் மானசீகமாய்!
மனதுக்குள் இறக்கை கட்டி
பறக்கின்றேன் .......
என் வான் உன்னில்..........!
-----------------------------------------------------------------------------------------


அடி மனதின் ஆழ் நினைவுகளே கனவுகளாக கருக்கட்டப்படுகின்றன. 
ஒவ்வொரு கனவுகளும் நனவாக ................
தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சியைத் தானமாக்குங்கள்!
----------------------------------------------------------------------------------------


பூக்களாய் பூத்திருந்தேன்
முகவரி தந்தன தென்றல்........

உன் பாக்களில் வார்த்தைகளானேன்
காதல் இலக்கியமானாய் நீ!......

எதுகையும் மோனையும் நானறியேன்
ஏடறியா என்னிடம் மோதிச் சென்றாய் நீ!.....

இருந்தும்...........

இப்போதெல்லாம் மயங்கி நிற்கின்றேன் - உன்
அருகாமைக் கணங்களின் லயிப்பினில் நசிந்து!

-------------------------------------------------------------------------------------


தொலை தூர வானில்
அலையும் முகிற் காகிதங்களுக்கிடையில்......

விழி திறந்து கிடக்கும் நிலாக் கீறலாய்
ஒளி கசியும் உன் ஞாபகங்கள்...........!

நேற்று வரை நான் நானாகத்தான் இருந்தேன்
இன்றோ.................
என் எதிர்காலத்தின் கைரேகைகளில்
உன்னை பச்சை குத்திக் கொண்டாய் 
ஆக்ரோஷமாய்!

இப்பொழுதெல்லாம்.............
என்னுள் ஊடுறுவும் தனிமையில்
கல்லெறிந்து.....
கள்ளமின்றி சிரிக்கின்றாய் காதலுடன்!

உன் வில்லத்தனமும்
குழந்தைத்தனமும்.........
காதலும்...................

என்னுள் முத்தமாகி கசிகையில்
ஏக்கத்துள் வீழ்ந்து தொலைகின்றேன்
பக்கமில்லாத உன் நிழல் தேடி!
------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு குடும்பத்தையும் அழகாக உருவாக்குபவள் பெண். அந்தப் பெண்ணைப் பாதுகாப்பது அவளைச் சார்ந்துள்ள ஒவ்வொரு ஆணிணதும் கடமையாகும்.
--------------------------------------------------------------------------------------------


அம்மா............!

அச்சேற்றிக் கொண்டிருக்கின்றேன்
புதுமைப் பெண்களை!
உங்கள் கண்ணீர் ஈரத்தை மறைத்தபடி!

ரோசாவின் வாசங்களால் 
சுவாசம் நிறைத்துக் கொண்டிருக்கின்றேன்.......
நீங்கள் சூடியிருக்கும் முட்களை
மறைத்தபடி!

பாசத்தால் வேலியிடப்பட்ட
உங்கள் கருவறைக்குள் 
கல்லறை வார்ப்போரோடு பேரம் பேசுகின்றேன்
என் இரத்த உறவென!

நீங்கள் சிரித்திருப்பீர்களா.........
ஓர் துளியைத்தான் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றேன்
ஞாபகங்களை குலைத்தபடி!

தாயே..........

தரணியின்று துதிக்கின்றது உங்களை....
நீங்கள் அறையப்பட்டிருக்கும்
சிலுவையை புரிந்து கொள்ளாமல்!






தளிர்கள் - 5


பனித்துளியாய் படர்ந்திருக்கின்றாய்
என்னுள்........................
பரிசுத்தவுன் அன்பே - என்னை
உயிர்ப்பிக்கும் சுவாசமாய் கால முழுதும்!

-----------------------------------------------------------------------------------------

இணையத்தின் வாரிசுகளிவர்கள்.......!
சினக்காதீர்கள் ........
எதிர்காலமே 'சட்' தானென்று
சரித்திரமெழுதும் குடும்பமிதுவோ!
----------------------------------------------------------------------------------------


பூக்களாய் உதிரும் உன்
புன்னகையில்............
காணாமல் போனேனடி அடிக்கடி.......
மழலையின் சுகத்திலே - தினம்
குலைந்துதான் போனேனடி மலரே!

-----------------------------------------------------------------------------------


முத்தம்................!
நமது மொழி!
ஒவ்வொரு இரவும் மீட்டிச் செல்கின்றது
நம்மை!
----------------------------------------------------------------------------------------


என்னுள் விட்டுச் செல்லும்
உன்னை.................
கண்களுக்குள் மறைத்துக் கொள்கின்றேன்
என் பார்வையாய்!

---------------------------------------------------------------------------------------


கனவுகள் கற்றுக் கொடுத்தன காதலை
காதல் கற்றுக் கொடுத்தது வாழ்க்கையை
வாழ்க்கை கற்றுக் கொடுத்தது உன்னை!
நீ கற்றுக் கொடுத்தாய் அன்பை!

------------------------------------------------------------------------------------------


மழைத்தூறல்களாய் மேனி தொட்டாய்
மனசுக்குள் ஈரம் நனைத்தாய்...............
விழியோரம் உன்னை நிறைத்தாய்
பழி சொல்லுமோ ஊர் 
நாம் காதலரென்று!!
----------------------------------------------------------------------------------------


அப்பிள் சாப்பிட்டால்
இதயம் பலமாகும்!

இதயம் பலமானால் - அதனுள்
ஒளிந்திருக்கும் காதல் உணர்வுகளும்
அழகாகும்!!

மனம் அழகானால் - நாம்
காணும் புறமெல்லாம் நம் ரசனையில்
வீழும்!

ரசனைகள் நம் வசமானால்
இனிமையான கவிதைகள் - நம்
பேனா தொடும்!!!
----------------------------------------------------------------------------------------


வெட்கித்து நிற்கின்றேன்
பட்டாம் பூச்சியின் வருடலாய்
என் மீது விழும் ....
உன் நினைவுகளின் தழுவலில்!

--------------------------------------------------------------------------------------------


கனவுக்குள் முகங் கொடுத்தாய்
அடிக்கடி.............
நானோ
என் மன ஊஞ்சலிலல்லவா உன்னை
ஆட்டிக் கொண்டிருக்கின்றேன் 
எப்பொழுதும்!

-----------------------------------------------------------------------------------


உன் கன்னக் கல்வெட்டில்
என்னைப் பொறிக்கின்றேன்
இரகஸியமாய்!
உறவானதும் உரிமையுடன் தந்துவிடு
என்னை....
என் மொத்தப் பக்கங்களெல்லாம் - உன்
முத்தங்களை நிறைத்து!
-----------------------------------------------------------------------------------------


வாழ்க்கை..............!
நம்பிக்கையின் விளை நிலம்!!

எப்பொழுதும் 
தன்னம்பிக்கையில் தன்னைப் பிணைத்து
செயலாற்றுவோர்க்கு மட்டும்!!!!

-----------------------------------------------------------------------------------------


நான் நீயாகும் போது..........
நீ .......நானாகும் போது.......
நாமாய் கவிதைகள்
காதல் சொல்லும் பாருக்கு!

------------------------------------------------------------------------------------------


இனிய வார்த்தைகள் நம் வசமானால்........
உலகத்தின் நேச வாசத்தில் நாம்!