About Me

Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

2021/04/20

To Sir with love

 திரைப்படம் பற்றிய என் பார்வை  

இந்தத் திரைப்படமானது ஈ ஆர் ப்ரைத்வைட்டின் 1959 ஆம் ஆண்டின் சுயசரிதை நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் 1967 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் நாடகத் திரைப்படமாகும். இது ஒரு உள் நகர பள்ளியில் சமூக மற்றும் இனப்பிரச்சினைகளை கையாளுகிறது. இதில் பிரதானமான பாத்திரமான தாக்கராக சிட்னி போய்ட்டியர் நடித்துள்ளார். இவருடன் கிறிஸ்டியன் ராபர்ட் ஸ், கீசன் சுசி கெண்டல் மற்றும் பாடகர் லுலு இணைந்துள்ளனர். ஜேம்ஸ் கிளாவெல் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படமானது எண்டர்டெயின்மென்ட் வீக்லியின் 50 சிறந்த உயர்நிலைப் பள்ளித் திரைப்படங்களின் பட்டியலில் 27 வது இடத்தைப் பிடித்தது. இது அமெரிக்காவில் அதிக வசூல் செய்த எட்டாவது திரைப்படமாகும்.   

இந்தத் திரைப்படத்தில் ............... 

பொறியியலாளராக வர வேண்டுமென்ற தனது எதிர்பார்ப்பை நிறைவேற்ற பிரிட்டிஷ் கயானாவிலிருந்து கலிபோர்னியா வழியாக பிரிட்டனுக்கு குடிபெயர்கின்றார் மார்க் தாக்கரே. அவரே இப்படத்தின் கதாநாயகன். எனினும் அவர் எதிர்பார்த்த தொழில் உடனடியாகக் கிடைக்கவில்லை. அது கிடைக்கும்வரை தற்காலிகமாக லண்டன் கிழக்கு முனையிலுள்ள நார்த் க்வே மேல்நிலைப் பள்ளியில் கற்பித்தல் பணியில் தன்னை இணைத்துக் கொள்கின்றார். ஏனைய பாடசாலைகளிலிருந்து நிராகரிக்கப்பட்ட மாணவர்களே இப்பாடசாலையில் கல்வி கற்பதனால் அவர்களின் நடத்தைகள் ஆசிரியர்களுக்கு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவே எல்லோரும் தமது வேலையை ராஜினாமா செய்தனர். பேர்ட் டென்ஹாம் மற்றும் பமீலா டேர் தலைமையில் இத்தகைய வெறுக்கத்தக்க குறும்புகளைச் செய்யும் மாணவர்களுக்கே மார்க் தாக்கரே கற்பித்தல் பணியை மேற்கொள்கின்றார். அவர்களின் பலவிதமான குறும்புகளையும் தார்க்கரே அமைதியாக எதிர்கொள்கின்றார். இருந்தும் சில நேரங்களில் மாணவர்களின் சில நடத்தைகள் அவரைக் கோபப்பட வைக்கின்றன. மாணவர்களின்  நடத்தைகள் பற்றி தார்க்கரே சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவராக தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்கின்றார். அவர்கள் இனி பாடப்புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே தமது கற்றல் காலத்தில் பெரியவர்கள் தொடர்பான எந்த விடயங்களையும் தன்னிடம் விவாதிக்க வழிப்படுத்தினார்.   மாணவர்களும் உறவுகள்,  திருமணம்,  தொழில் உள்ளிட்ட பல விடயங்களைக் கேட்டறிந்தனர். தமக்குள் எழுந்த பிரச்சினைகளைத் தீர்த்தனர். டென்காமைத் தவிர ஏனைய அனைத்து மாணவர்களின் மனதையும் தாக்கரே வென்றார். 

 ஸ்தாக்கரே அருங்காட்சியகத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யும்போது  

  ஜிம் ஆசிரியரான மிஸ்டர் பெலுக்  பாட்டருக்கிடையில்  வன்முறை ஏற்படுகின்றது. தாக்கரே அதனைத் தடுக்கிறார். பெல்லிடம் தவறு காணப்பட்டாலும்கூட மிஸ்டர் பெலுக் பாட்டர் தன்னிடம் மன்னிப்புக் கோர வேண்டுமெனக் கூறுகின்றார். இவ்வாறான சூழ்நிலையில் சில மாணவர்களின் ஆதரவை தாக்கரே இழக்கின்றார். அவர்கள், அவரை வகுப்பு நடனத்திற்கு அழைக்க மறுக்கின்றார்கள். சீலஸின் தாய் இறந்தபோது தாக்கரேயின் நன்கொடையை ஏற்க மறுக்கின்றார்கள். 

இந்நிலையில் .......

பள்ளி தலைமை ஆசிரியரோ 'வயது வந்தோர் அணுகுமுறை தோல்வியுற்றதாகவும், வகுப்புப் பயணங்கள் ரத்துச் செய்யப்படுவதாகவும் அறிவிக்கின்றார். இப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வு கிடைக்கும்வரை தாக்கரேயே ஜிம் வகுப்பினை எடுக்க வேண்டுமெனவும் தலைமை ஆசிரியர் கூறுகின்றார். அத்தகைய சூழ்நிலையில் தாக்கரேக்கு விண்ணப்பித்திருந்த பொறியிலாளர் பதவி கிடைக்கின்றது. 

ஒரு சந்தர்ப்பத்தில் ஜிம் வகுப்பில் தாக்கரேயைக் குத்துச் சண்டைப் போட்டிக்கு வருமாறு சவால் விடும் டென்ஹாமின் திறனைப் பாராட்டும் தாக்கரே, அவனை இளைய மாணவர்களுக்கு குத்துச் சண்டை கற்பிக்குமாறு அறிவுறுத்துகின்றார். இச்செயற்பாட்டில் மாணவர்களின் திறன்களை இனங்கண்டு ஊக்குவிப்பவராக மாறுவதுடன் சில நடத்தைகளையும் மாற்றியமைக்கின்றார். அதன்பின்னர் டென்ஹாம் சக மாணவர்களிடம் தாக்கரே மீதான தனது மதிப்பை வெளிப்படுத்துவதுடன் அவர்மீதான காழ்ப்புணர்ச்சியையும் குறைக்கின்றான். தாக்கரே மீண்டும் மாணவர்களின் மதிப்பினைப் பெறுகின்றார். வகுப்பு நடனம், நன்கொடை நிகழ்வுகள் என முன்னர் மறுக்கப்பட்ட விடயங்கள் மீண்டும் மரியாதையுடன் அவரைத் தேடி வருகின்றது. பமீலா 'லேடிஸ் சாய்ஸ்' நடனத்தில் தன்னுடன் இணைந்தாட தாக்கரேயை தெரிவு செய்கின்றார்.

இவ்வாறாக தாக்கரே மாணவர்களின் உளமறிந்து தனது செயற்பாடுகளை பொறுமையுடன் நகர்த்தி குழப்பமான கேவலமான நடத்தைகளை கொண்டிருந்த மாணவர்களின் மனதை வென்றெடுத்தவராக வகுப்பறை கற்பித்தலிலிருந்து ஓய்வு பெறுகின்றார். 

ஆசான் ஒரு சிற்பி. பொருத்தமான அணுகுமுறைப் பிரயோகங்களினூடாக மாணவர்களின் உளங்களை வென்றெடுக்க முடியும் என்பதை தாக்கரே நிருபித்திருக்கின்றார்.

தாக்கரே வகுப்பறையை விட்டு வெளியேறும்போது இரண்டு இளம் மாணவர்கள் உள்ளே வந்து பரிசளிக்கின்றனர். அதில் டேங்கார்ட் மற்றும் அட்டை 'ஐயா அன்புடன்' என சிரிக்கின்றது. 

அடுத்த வருடம் 'இந்த இளம் மாணவர்களும் இவரது வகுப்பில் இருப்பார்கள்' என்ற சக ஆசான்கள் இருவரின்  கேலி வார்த்தைகளை செவியில் ஏந்திய தாக்கரே மாணவர்கள் தன்மீது கொண்ட அன்பினைக் கண்டு கண்ணீர் சிந்தியவாறு, தனது பொறியியல் தொழிலுக்கான அழைப்பிதழை கிழித்தெறிந்தவராக தனது கற்பித்தல் பணியை முன்னெடுக்கின்றார். 

இங்கு தோலின் நிறம் கடந்த மனிதம் பேசுகின்றது. இந்தப் படத்தில் வருகின்ற மாணவர்களின் நடத்தைகளையுடைய பல மாணவர்களை நாமும் காண்கின்றோம். ஆனால் தாக்கரே போன்று மாணவர்பால் தமது முழுக் கவனத்தினையும் செலுத்தி அவர்களின் உளப்போக்கிற்கேற்ப தமது அணுகுமுறைகளை மாற்றி வழிப்படுத்துபவரே என்றும் காலத்தை வென்று நிற்கின்றார். 

அந்த யதார்த்தத்தை இப்படம் மெய்ப்பிக்கின்றது.

ஈற்றில்..................    

தாக்கரே ............

மாணவர்களின் மனதை வென்றார்....!

இந்த மென்மையான கதைகளினூடாக எமது மனங்களையும் தொட்டார்.!!

தாக்கரே ஆசான்களுக்கெல்லாம் முன்னுதாரணமான கதாபாத்திரம். வகுப்பில் மோதல்கள் ஏற்படும்போதெல்லாம் தன்னைக் கட்டுப்படுத்தி சரியான விதத்தில் மாணவர்களை வழிப்படுத்தியுள்ளார்.  

சுருங்கக்கூறினால் இத்திரைப்படத்தில் ஆசான் பற்றிய கதாபாத்திரம் ஒழுக்கம், மரியாதை, ஒருமைப்பாடு உள்ளிட்ட சகல பண்புகளையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கி வாழ முயற்சிக்கின்ற ஒரு நிர்வாகி.

இந்த திரைப்படம் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களை நோக்கினால் திரு.போய்ட்டியர் கூறுவதைப் போல இது விவேகத்துடன் விளையாடப்படுகின்ற சிறிய கதை என்கின்றார். இங்கு இனம் பற்றிய பிரச்சினைகள் எழவில்லை. வகுப்பில் தோன்றும் பதற்றங்களும் தணிக்கப்படுகின்றன. 

டைம் அவுட் ஃபிலிம் கையேடு இது 'எங்களுக்குத் தெரிந்தபடி பள்ளி வாழ்க்கையுடன் எந்த ஒற்றுமையையும் கொண்டிருக்கவில்லை' எனக் கூறுகின்றது.

 ஹல்லிவெல்லின் திரைப்படம் மற்றும் வீடியோ கையேடு இதனை 'செண்டிமென்ட் அல்லாத யதார்த்தம்' எனக் கூறுகின்றது.

சிறந்த பாடல்கள், கதை, நடிப்பு என பல பரிமாணங்களிலும் பல விருதுகளை வென்ற இத்திரைப்படம், கற்றல் சார்பான பல விடயங்களை முன்வைக்கின்றது. சூழல் மாற்றங்களால் உளத்தாக்கம் ஏற்படுகின்ற இளம் சந்ததியினர் உரிய விதத்தில் வழிப்படுத்தப்பட்டால் சமூகப் பரிமாணமுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் மாற்றப்படுவார்கள் எனும் உண்மையை இத்திரைப்படம் உரக்கச் சொல்லி நிற்கின்றது. 

ஜன்ஸி கபூர்  - 20.04.2021






2019/05/23

தொடர் நாடகங்கள்

Related image

வாழ்க்கையின் நகர்வு சலிப்புத்தட்டாமல் செல்வதற்கு பொழுது போக்கு அம்சங்கள் துணை நிற்கின்றன. இன்று மக்களின் இயந்திரமான வாழ்வின் முக்கிய தரிப்பிடங்களில் ஒன்றாக சின்னத்திரை காணப்படுகிறது. அதிலும் தொலைக்காட்சி நாடகங்கள் கற்பனை எனும் எல்லையையும் தாண்டி  வீட்டின் முக்கிய நிகழ்வாக மாறிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலாரின் குறிப்பாக பெண்களின் குறித்த நேரங்கள் சின்னத்திரைக்காக ஒதுக்கப் படுகின்றது. சீரியல்களில் சீவியம் நடத்தும் காலத்தில் நாம் வாழ்வதால் நாடகங்களின் கதாபாத்திரங்கள் கற்பனை என்ற அளவீடுகளையும் தாண்டி நம் நிஜ வாழ்விலும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக மாறி விட்டது. இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் நான் பார்க்கும் சின்னத்திரை நாடகங்களில் என்னை சலிப்பூட்டிய சில பெண் கதாபாத்திரங்கள் பற்றி இங்கு கூறப்போகிறேன் .

பெரும்பாலான நாடகங்களில் வில்லி  பெண்களே நம் மனங்களில் எரிச்சலை விதைத்து செல்கின்றனர். பொறுமையின் இலக்கணம் பெண்மை. ஆனால் அந்த புனிதம் பெற வேண்டிய தாய்மை, அச்சம் தரும் நெருப்பாக மாறி ரசிகர்களின் ரசனைக்குள் அனலை விசிறி விடுகின்றனர்.  பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் கூட இருந்து குழி பறிக்கும் இந்தப் பெண்ணுக்குள் பொறாமையும். வஞ்சமும் இறங்கிக்கொண்டிருக்கிறது. நம்பிக்கைத்துரோகம் அவள் ஆயுதமாக சித்தரிக்கப்படுகிறது. தன்  குடும்பம், தன்  சுயநலம் எனும் வட்டமே அவள் உலகமாக சுருங்கிக் கொண்டிருக்கிறது. 
தற்போதுள்ள நாடகங்களில் இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக சண்டை இடும் அவலம் காணப்படுகிறது. உயிரிலும் உணர்வாகும் உண்மைக்  காதல்,  பணத்திற்கு வேஷம் போடும் துரோகக் கூட்டங்கள் என  நாடகங்கள் திணிக்கும் சிந்தனைகளை இறுக்கிப்  பிடிக்கத்  தயாராகி உள்ள இளம் சந்ததியினர்,

தான் காட்சி பெறும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுழல்கின்றனர். பணம் பத்தும் செய்யும் எனும் நியதிக்கேற்ப பணத்தால் எதனையும் விலை கொடுத்து வாங்கும் பணக்கார திமிர் பிடித்த பெண்கள் ஒவ்வொரு நாடகங்களிலும் முதன்மை வில்லிகளாக வலம் வருகின்றனர். கெடுதல் செய்வோரின் ராஜபோகம் முடிவிலியின்றி நீள்கிறது. .நாட்களை நீடிக்கும் பொருட்டு கதை சித்தரிப்பும் நீளும் போது நாடகத்தின் சுவாரஸ்யம் குன்றி விடுகிறது. தவறுகளை நியாயப்படுத்தவும், குற்றங்களை தமக்கு இசைவாக பயன்படுத்தவும் நாடகங்கள் கற்றுக்  கொடுக்கின்றது. அத்துடன் எவ்வளவு விசுவாசம் காட்டினாலும் தன் வேலையாள் எனும் எல்லைபுள்ளி தாண்டாத கம்பீரமான எஜமானி, முதலாளித்துவத்தின் குறியாக தன்னை இனம் காட்டுகிறார். அத்துடன் குட்ட, குட்ட குனிய தெரியாத அப்பாவி கதாநாயகிகளுடன் பிணைந்து செல்லும் கதை அமைப்பு நேரத்தை நகர்த்திச் செல்கிறது .

விரட்டும் வில்லிகளிலிருந்து கடவுளால் காப்பாற்றப்படும் அப்பாவி நாயகிகளின்  கடவுள் நம்பிக்கை ஒவ்வொரு அத்தியாயத்தின் மைல்  கல்லாகும். .எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற போராடும் கதாநாயகிகளின் போராட்டம் நீண்டது. பல தூரம் பயணிக்க வேண்டியது. ஒரு சராசரி பெண்ணோடு விளையாடும் வில்லர் கூட்டத்தினரின் திரு விளையாடல்களை பார்க்கும் போது எரிச்சலும், கோபமும் நம்மை விராண்டுகிறது, சுவேதா, தீபிகா,  நந்தினி எனும் சூறாவளியால்  தினம் ஆட்டம் காணும்......  பூங்கொடி, வென்னிலா, பார்வதி, சக்தி என நீளும் மலர்கள் உதிராமல்  நிஜ வாழ்விலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனும் உணர்வுகளை உள்வாங்கியவாறு நாமும் தினமும் நாடகங்கள் சிலவற்றுடன் பயணிக்கிறோம் .

கற்பனை அருமையாக கதையை நகர்த்தி சென்றாலும் கூட, இந்த வில்லர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. 


-Jancy Caffoor-
  22.05.2019

2014/09/21

துடிப்பு - 2

துடிப்பு - 2 (இலக்கிய வௌியீடு)
-----------------------------------------------------

எழுதுகோல்கள் எழுத ஆரம்பிக்கும்போதுதான் சமுகங்கள் விழித்துக் கொள்கின்றன. சமுகப்பின்னடைவுகளும் முடிச்சவிழ்க்கின்றன. அந்த வகையில் அவ்வவ்போது பிரசவிக்கப்படுகின்ற இலக்கியச் சஞ்சிகைகள் கல்வி மற்றும் மானுட சீர்படுத்தலுக்குச் சிறப்பாக துணை போகின்றன...அதனாற்றான் கல்விசார் நிறுவனங்களும் பல்வேறு இலக்கியப் படைப்புக்களை சமூக அரங்கிற்குள் அடையாளப்படுத்த ஆர்வப்படுகின்றன...
அந்தவகையில் கடந்த சனிக்கிழமை 13. 09.2014 ல் பதியப்பட்ட இன்னொரு அடையாளம்தான்..........

துடிப்பு - 2 (இலக்கிய வௌியீடு)

இதனை MEDCA வௌியிட்டுள்ளது. இது ரஜரட பல்கலைக்கழக மருத்துவபீட முஸ்லிம் மாணவர்களின் இலக்கிய, கல்வி பிரசவிப்பு

துடிப்பு - 2 

ஜவஹர்ஷா சேர் மூலம் கிடைக்கப் பெற்றேன்..நன்றி சேர்

இம்மலரிற்கு MEDCA தலைவர், CTC குழும நிறுவனத் தலைவர், கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேர் போன்றோர் வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்துள்ளார்கள்..
.
மனித வாழ்வைப் பதியமாக்குபவற்றின் உருவங்களால் பொறிக்கப்பட்ட முகப்பட்டையைப் பார்த்தவுடனே இது மருத்துவபீட மாணவர்களின் ஆளுகை என்பது வௌிப்படையாகின்றது.
.
மருத்துவபீட மாணவர்களின் இலக்கிய வௌியீடென்றவுடன் இதில் பெரும்பாலும் மருத்துவக்கட்டுரைகளே இருக்கலாம் எனும் எடுகோளுடன் புத்தக இதழ்களை விரித்தால், சற்று நாம் ஏமாற்றப்படுகின்றோம். ஏனெனில் அங்கு மருத்துவம், சமுகம், சமயம் சார்பான பலவகையான விடயங்களைத் தழுவிய பிரசுரிப்புக்களே இடம்பெற்றிருந்தன.
.
மருத்துவ மாணவர்களின் உணர்ச்சியேற்றத்தின் விளைவான கவிதைகள் கட்டுரைகள், கதைகளில் யதார்த்தத்தின் சாயல் பரவிக் கிடப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்...
.
கலைப்பிரிவில் கற்கும் மாணவர்களுக்கே இலக்கியம் எனும் நிலைப்பாடு நீங்கி. இன்று விஞ்ஞான, மருத்துவத் துறை சார்பானோரும் எழுத்துக்களைப் பதிவிப்பது ஆரோக்கியமான நிகழ்வே!
.
எழுத்துக்களால் ஆளுக்காள் சொல்லப்படும் விடயம், விதங்களின் பரிமாணங்கள் வேறுபடலாம். அவற்றின் ஆழங்களின் வீச்சிலும் வித்தியாசங்கள் தென்படலாம். ஆனால் இம்மலரில் எழுத்தணிகள் பேசப்படும் நளினங்கள் , அதற்கேற்ற படங்கள் என்பன ரசிக்கும்படியாக இருக்கின்றன.
.
மாணவர் பெயர்ப் பட்டியல்கள், புகைப்படங்கள், கல்வி, அறிவியல், ஆன்மீகம், மருத்துவம் சார்பான கட்டுரைகள், கவிதைகள், கதைகள் காத்திரமானதாக எழுத்துக்களைப் பிரசவித்திருந்தன. எனினும் ஆக்கங்களை எழுதியோரின் பெயர்களை தௌிவான எழுத்து வடிவத்தில் பதித்திருக்கலாம்.
இந்நூலின் உள்ளடக்கத்தில் பார்வையைச் செலுத்தினால்.....

பெண்களுக்கான மார்பகப்புற்று நோய் தொடர்பான கட்டுரை ,இஸ்லாத்தின் பார்வையில் இன்சுலீனின் நிலைப்பாடு போன்ற மருத்துவத் தகவல்களின் பதிப்பு ஆழமான விடயங்களை முன்வைக்கின்றன.

அவ்வாறே மருத்துவ மறுமலர்ச்சியில் முஸ்லிம்களின் வகிபாகம், இஸ்லாத்தின் பார்வையில் நோயும் மருந்தும், முஸ்லிம் சமுகத்தின் எழுச்சி போன்ற கட்டுரைகள் முஸ்லிம்களின் கல்வி, கலாச்சாரம், ஆரோக்கியம் சார்பான பார்வையை முன்வைக்கின்றது.

முகநூல் சாதித்தவையும், பாதித்தவையும் விமர்சனமும் சிந்தனைக்குரியது..
மருத்துவபீட மாணவர்களின் கலை, இலக்கிய ஆற்றலை மங்கச் செய்யாமல் இவ்வாறான வௌியீடுகள் வௌிவருவது பாராட்டக்கூடியதே.......
வாழ்த்துக்கள்!

- ஜன்ஸி கபூர் -

தங்கமீன்கள்

தங்கமீன்கள் - விமர்சனம்
-----------------------------------------


நீண்டநாட்களின் பின்னர் நல்ல திரைப்படமொன்றை பார்த்த திருப்தி, மனநிறைவு...இது அப்பா, மகளுக்கிடையே உள்ள பாசப் போராட்டத்தை விளக்கும் படம்.
.
 தன் பாசமிகு மகளை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே உள்ளூரில் கிடைத்த ஈயம் பூசும் வேலையை குறைவான சம்பளத்துக்குப் பார்க்கும் அப்பா கல்யாணி (ராம்), தன்மீது பாசம் வைத்திருக்கும்  தந்தையின் பணப் பிரச்சினைகளுக்கு தானே காரணம் எனப் புரிந்து குளத்தில் மூழ்கி இறந்து தங்கமீனாய்ப் போகவும் தயாராகும் மகள் செல்லம்மா...

இந்த இருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள்தான் தங்க மீன்கள்.

தந்தையின் அளவற்ற பாசம், தனியார் பள்ளியின் கொடுமை, பொருளாதார நெருக்கடி எனும் பின்புலத்தில் நகர்கின்றது தங்கமீன்கள்.

மகளின் பள்ளிக் கட்டணம் கட்ட எவரெவரிடமோ கையேந்தி அவமானப்படும் ராம், வசதியான சொந்தத் தந்தை தரும் பணத்தை வாங்க மறுக்கின்றார். சுயகௌரவம் இங்கே ஆழமாக முக்காடிடுகின்றது. தந்தையுடன் அப்படி என்னதான் ஈகோவோ?

 'கல்யாணி, அதான் உன் பெண்ணுக்குத்தான் ஒரு அம்மா இருக்காளேடா.. நீ வேற எதுக்கு இன்னொரு அம்மா மாதிரி உன் பொண்ணு பின்னாலயே சுத்தற... போய் வேல வெட்டி பார்த்து நாலு காசு சம்பாதிச்சு எல்லோரும் மதிக்கிற மாதிரி நடந்துக்க,"

என ராமின் அப்பா திட்டும்போது  ஏற்பட்ட பிரச்சனையில் தனது மனைவி, மகளை விட்டுவிட்டு கொச்சிக்கு செல்லும் ராம், அங்கேயே வேலை பார்க்கின்றார். அவருடைய மகளோ அவரிடத்தில் வோடபோன் நாய் குட்டி வேண்டும் என்று கேட்கிறார்.  அதன் விலை 25000 ரூபாய் . ஆனால் அவரிடம் அதை வாங்குமளவிற்குப் பணமில்லை. அந்த நாய்க்குட்டியை வாங்கப் போராடுகின்றார்.

ஆனால் மகளோ  தனது அப்பா, வோடபோன் நாய் குட்டியை வாங்கி வர மாட்டார் என்று நினைத்து, குளத்தில் குதித்து இறந்து தங்க மீனாகிவிடலாம் என்று  முடிவு செய்கிறாள்.



தெருக்களில் குழந்தைகளை தனியாக அனுப்ப யோசனை செய்யும் இக்காலத்தில்,  தமது பாச மகளை  ராமும் அவர் குடும்பமும் அவள் இஷ்டத்துக்கு வீதியில் திரிய விடுகிறார்கள். அதனால் அவளோ தங்க மீன்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி ஆபத்தான குளத்தில் இறங்குவதும் வீட்டார் செல்லம்மாவைக் காணவில்லை எனத் தேடுவதும் க்ளைக்மாக்ஸ் வரை தொடர்கின்றது.

அவள் தங்க மீனாக ஆனாளா அல்லது ராம் அவளை மீட்டு வந்தாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

சிறு குழந்தைகளின் மனதில் பதிக்கப்படும் எண்ணங்கள் அவர்களின் செயல்களுக்கு காரணமாகின்றன என்பது கதையின் கிளைமாக்ஸின் உயிர்நாடி........

இயக்குனர் ராம் அப்பாவாக, கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோருக்கு வெகு இயல்பான வேடம். மகளாக நடித்திருக்கும் சிறுமி சாதனாவின் நடிப்பு மெச்சும்படியாக இருந்தது. பாடல்கள், யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை எல்லாமே ரசிக்க வைக்கின்றன

தனது மகளிடம் இருக்கும் குறைகளை யெல்லாம்  நிறையாக எண்ணி, தனது மகளுக்காக ஒவ்வொரு இடத்திலும்  போராடும்  ராம், பிள்ளைகளுக்காக உருகும் அப்பாக்களுக்காக இப்படத்தை சமர்ப்பித்திருக்கின்றார். ஆனால் மறுபுறம் ஒரு தந்தை தன் மகளை எப்படி வளர்க்கக் கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகின்றது மறைமுகமாக..........


பல இடங்களில் நெகிழ்வான இயல்பான கதையோட்டம். ஒரு குடும்பத்தை அருகிலிருந்து தரிசித்த உணர்வு...

தங்கமீன்கள் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய திரைப்படம்...


சைவம்



சைவம் - திரைவிமர்சனம்
-----------------------------------------
வெறும் பொழுதுபோக்குக்குத்தான் சினிமா எனும் பாணியில் செல்லும் தற்போதைய சினிமாக்களில் இடைக்கிடையே குடும்பத்தினருடன் சேர்ந்து பார்க்கக்கூடிய நல்ல படங்களும் வருகின்றன. 

அந்தவகையில் சைவம்...........
.
குடும்ப உறவுகளைப் பேணி நிற்கும் நல்லதொரு திரைக்கதை!
.
இன்று இயந்திரமயமான குடும்ப வாழ்க்கைப் போக்கில் கூட்டுக்குடும்பம் தன் செல்வாக்கினையிழந்து நின்றாலும், சில வீடுகளில் அது தன் செல்வாக்கினைப் பேணி நிற்கின்றது.
.
 செட்டிநாடு அன்பு, பாசம், உறவுகளின் அருமை ஆகியவற்றைப் பெரிதாக நினைப்பதும், உறவுகளுக்காக நிறைய விட்டுக் கொடுப்பதுமான மண் வாசனையை இழந்து விடவில்லை. அந்த மண் வாசனையுடன் வந்திருக்கும் படம்தான் இயக்குநர் விஜய்யின் சைவம்.
.
செட்டிநாட்டின் ஒரு பகுதியான கோட்டையூரில் வசித்துவரும் கதிரேசன் (நாசர்) என்ற பெரியவரின் குடும்பத்தினர் பல இடங்களில் பிரிந்து வாழ்ந்தாலும் விடுமுறைக்காக சொந்த ஊரில் ஒன்று கூடி மகிழ்வை வௌிப்படுத்துவார்கள்..அவர்களின் சந்தோச நாட்களிடையே திடீரென ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை, சாமிக்கு செய்யாமல் விடப்பட்ட நேர்த்திக்கடன்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் என நம்பி , சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல்.
.
ஆனால் பலி கொடுக்கப்பட வேண்டிய அந்தச் சேவல் தொலைந்துபோகிறது. சேவல் கிடைத்தால்தான் குடும்பத்தின் மகிழ்ச்சி திரும்பும் என்ற சூழ்நிலையில் அந்தச் சேவலைத் தேடுகின்றார்கள்.
.
அந்தச் சேவல் கிடைத்ததா? அதனை யார் ஔித்து வைத்தார்கள்? சாமிக்கு பலி கொடுக்கப்பட்டதா? அமைதியிழந்து தவித்த உறவுகள் இறுதியில் என்ன செய்தார்கள்? ஒவ்வொருவரின் பிரச்சினைகளும் தீர்ந்ததா?
.
இதுதான் கதையின் இறுதிநகர்வு.

தவறு செய்பவர்கள் தம் தவறுக்கு மன்னிப்பு கேட்கும் விதம் நெகிழ்வின் நெருடல்...சேவலைத் தேடும்போது ஏற்படும் பரபரப்பு........சேவலைத் தேடும் போது வரும் சண்டைகள் ..........சேவலைப் பலிகொடுக்கப் பூசாரி கத்தியை ஓங்கும்போது ஒவ்வொருவராய் தமது தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கும் விதம்...நாசர் மகன் லுத்ஃபுதீன் பாஷாவின் துரு துரு நடிப்பு..

படத்தின் மையப் பாத்திரமாக நடித்துள்ள குழந்தை சாராவின் நடிப்பு..
.
காதல், சண்டை, குட்டீஸ் அட்டகாசம், பாசம் என திரைக்கதை ஒவ்வொரு வடிவங்களிலும் இயல்பாக நடமாடுகின்றது. ரசிக்கும்படி இருக்கின்றன. சகல கதாபாத்திரங்களையும் விஜய்  அவரவர் இயல்பில் நடமாட விட்டிருக்கிறார். நாசர் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.  இசை, பாடல்கள் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது.

ஆனால்..........
.
இது குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம். படத்தின் பெயரை ஏன் சைவம் என வைத்தார்கள்? புரியவில்லை.


2014/09/20

படிகள்

பத்தாண்டு சிறப்பிதழ் - விமர்சனமும் நிகழ்வு பற்றிய பார்வையும்
---------------------------------------------------------------------------------------

இலக்கியமென்பது இரசனை மட்டுமல்ல தாகமிகு உணர்வுகளைத் தொகுக்கும் கலை..அந்தவகையில் ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் போக்கின் படிகளில் சிறு இலக்கிய  இதழ்களும் அவ்வவ்போது பங்களிப்புச் செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது...

எல். வஸீம் அக்ரமை ஆசிரியராகக் கொண்டு அநுராதபுரத்திலிருந்து வௌிவரும் "படிகள்" எனும் இரு மாத 34வது இலக்கிய  இதழ் தனது பத்தாவது ஆண்டின் சிறப்பிதழாக கடந்த 14 செப்ரெம்பர் 2014 ந்திகதியன்று அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழுவினரால் வௌியிடப்பட்டது..

Water Garden Hotel வரவேற்பு மண்டபத்தில் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு வௌியீட்டு மலர் மற்றும் இலக்கிய ஆய்வரங்கில் பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

எந்தவொரு நூலினதும் உள்ளடக்கத்தின் கனாதியை பிரதிபலிப்பது அதன் முகப்பட்டைதான்..இவ்விதழிலும் மயான தேசத்தில் இரை தேடும் காகமொன்றின் பிம்பமாய் முகப்பட்டை நெய்யப்பட்டுள்ளது இதனை வறட்சிப் பின்னணியிலும் ஆழமான தேடலின் ஒலிப்பாகவே நான் கருதுகின்றேன்..

தமிழ்பேசும் மக்கள் குறைந்தளவில் வாழும் அநுராதபுரத்திலிருந்து மொழியாகும் இவ் இலக்கிய இதழின் சகல ஆக்கங்களும் தனது ஆழமான உட்கிடக்கையை எளிய சொற் பதங்களால் யாரும் விளங்கிக் கொள்ளும் விதமாக தன்னகத்தை கொண்டுள்ளமையானது நமது ஆரோக்கியமான எதிர்பார்ப்பின் அடையாளங்களாக மிளிர்கின்றதென்றால் மிகையில்லை..

நூலாசிரியரின் "படிகள் தொடர்பான கடந்து வந்த ஆழ்மன யாத்திரை", அன்பு ஜவஹர்ஷா சேரின் "அநுராதபுர மாவட்ட கலை இலக்கியப் பதிவுகள்", பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்களின் நேர்காணல் எம். சீ ரஸ்மினின் "பால்நிலை சமத்துவம்" எனும் ஆய்வுக்கட்டுரை, கெகிராவை சுலைஹாவின் "இரு மொழிபெயர்ப்புக் கவிதைகள்", எம்.எஸ் றஹ்மத்நிஸாவின் " பிரதான பாட அடைவுகளில் தாய்மொழியின் செல்வாக்குப் பற்றிய இலக்கிய மீளாய்வு", சி. ரமேஷின் ஈழத்து குறுங்கதைகள், கலாபூஷணம் வைத்திய கலாநிதி தாஸிம் அகமதின் "தென்கிழக்கிழங்கை முஸ்லிம் தேசத்தார் மாண்பு",முருகபூபதியின் "பாரதியின் காதலி", மேமன் கவி அவர்களின் "தோல் நிற அரசியலும் இரு ஆவண குறும்படங்களும்" மன்சூர் ஏ காதரின் "கூட்டுப்பிரக்ஞையின்மை பற்றிய வாக்குமூலம்"  போன்ற தரமான பதிவுகளுக்கிடையே யதார்த்த கவிதைகளும் சிறுகதைகளும் படிகளை நிரப்பமாக அலங்கரித்திருந்தன..

இவற்றுக்கும் மேலாக இவ்விதழில் எனது "நட்பே நீ" எனும் கவிதையும் இடம்பெற்றிருந்தது. பிரசுரித்தமைக்கு நன்றிகள் பற்பல...

மேலும் இந்நிகழ்வானது
  • அநு.வை. நாகராஜன் அரங்கு (படிகள் 10வது ஆண்டு இதழ் வௌியீடு)
  • அன்புதாசன் அரங்கு  (இலக்கிய அரங்கு)
  • அமீர் சுல்தான் அரங்கு  (பால்நிலை சமத்துவம் , இஸ்லாமிய நோக்கு தொடர்பான கலந்துரையாடல்)
என அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன.

மேலும் இவ்விதழ் வௌியீட்டு நிகழ்வில் 

மொழிபெயர்ப்புத் துறையில் சிறு சஞ்சிகைகளின் பங்கு தொடர்பான  கெகிராவ சுலைஹாவின் ஆய்வுரையும், 

2008ற்குப் பிந்திய அநுராதபுர மாவட்ட கவிதைப் போக்குத் தொடர்பான  நாச்சியாதீவு பர்வீனின் ஆய்வுரையும்சிறப்பாக முன்வைக்கப்பட்டன.

அவ்வாறே கிண்ணியா நஸ்புள்ளா . எழுத்துக்களையும் வார்த்தைகளையும் காதலில் நனைத்தவாறே அழகான புதுக்கவிதையொன்றையும் ரசிக்கும்படியாக உலாவவிட்டார்..

எம்.பி நௌபர் வரவேற்புரையையும் நேகம பஸான் நன்றியுரையும் முன்வைத்தனர்.

நிகழ்வின் இறுதியம்சமாய் எம். சி. ரஸ்மினின் பால்நிலை சமத்துவம் தொடர்பான இஸ்லாமிய நோக்கு பற்றிய குழுக்கலந்துரையாடல் நடைபெற்றது. பெண்கள் தொடர்பான குடும்பம், கல்வி, திருமணம், தொழில் உட்பட பல சமுகத்தின் அன்றாட நிகழ்வுகள் மூல ஆதாரங்களுடன் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்தது. பத்துப் பக்கத்தினையும் மீறக்கூடிய கனமான விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பான விமர்சனங்க ளுக்காக  ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டது ஓர் குறைபாடே. ஏனெனில் மேலோட்டமான வாசிப்பு சிறப்பான விமர்சனத்தை முன்வைக்க முடியாது.​

இந்நிகழ்வில் தேனீர் உபசாரம், மதிய உணவும் பரிமாறப்பட்டது.

இனிவரும் ஆண்டுகளிலும் படிகள் இன்னும் பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி காலத்தின் சுவடுகளில் தன்னை சிகரமாக நிலைப்படுத்த வாழ்த்துகின்றேன்..

- ஜன்ஸி கபூர் -

படிகள் வௌியீட்டின்போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள்
                                 
                                                              கௌரவ அதிதிகள்


அன்பு ஜவஹர்ஷா சேர்  தலைமையுரை 


நூலாசிரியர் வஸீம் அக்ரம் படிகள் வௌியீட்டு உரை


மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் அவர்கள்
இலக்கிய ஆய்வரங்கின்  ஆரம்ப வுரையாற்றும்போது


எழுத்தாளர் அ.யேசுராசா  அவர்கள் 
அலை,கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களின் அனுபவங்கள் தொடர்பான ஆய்வுரை 


ஈழத்து இதழ்கள் வரிசையில் படிகளின் பங்கு பற்றி 
டொக்டர் தாஸிம் அகமது  அவர்கள் 


நாச்சியாதீவு பர்வீன், கிண்ணியா நஸ்புல்லா, ரஹ்மத்துல்லா  உட்பட
சபையோரின் ஒரு பகுதி


கெகிராவ சுலைஹா, கெகிராவ சஹானா உட்பட
சபையோரின் ஒரு பகுதி


முதற்பிரதி வழங்கும்போது



நூலின் விலை - 250

தொடர்புகளுக்கு- 

படிகள் பதிப்பகம்
அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழு
52, துருக்குராகம
கஹட்டகஸ்திகிலிய
50320



என்ன சத்தம் இந்த நேரம்



என்ன சத்தம் இந்த நேரம்...திரை விமர்சனம்
----------------------------------------------------------------------

நான் பார்த்து ரசித்த திரைப்படத்தில் இதுவுமொன்று!

அடடா....தலைப்பே ஒரு திரிலா இருக்கே..அப்போ படம் வித்தியாசமாகத்தான் இருக்குமோ?

மனசு எதையோ எதிர்பார்க்க...

கணனி காட்சிகளை உருட்டுகின்றது கண்ணுக்குள்!

4 ஒரே சூல் குழந்தைகள்...

கண்களை உருட்டி சிரிப்பூக்களை உதிர்க்கும் வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைக் கதாபாத்திரங்கள் அவை!

நம்மை திரும்பிப் பார்க்க வைக்கின்றனர்......

அதிதி, அக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி என்கிற  பேசும் திறன்கொண்ட  இந்த நான்கு பேரும் மாற்றுத்திறனாளிகளாக தங்களது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெயம் ராஜா, மானு தம்பதிகளுக்கு காது கேட்காத , வாய்பேச முடியாத ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த 4 குழந்தைகள்..!

இக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை உழைப்பதில் ஆர்வப்படும் கணவனை விவாகரத்து செய்து விட தீர்மானிக்கின்றார் மனைவி மானு..

 தனது காதலனை அன்றைய தினம் 3 மணிக்கு பெற்றோர் அறியாமல் களவாய் திருமணம் செய்ய தீர்மானித்திருக்கும்  மாளவிகா ரீச்சர் தலைமையில் மானு தனது 4 குழந்தைகளையும் அருகிலிருக்கும் உயிரியல் பூங்காவிற்கு கல்விச்சுற்றுலா அனுப்பி வைக்கின்றார் .

அங்கு பணிபுரியும் இமான் அண்ணாச்சி, நிதின் சத்யாவின் அலட்சியத்தால் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று கூண்டிலிருந்து தப்பித்து வெளியே வந்துவிடுகிறது. அதனைக் கண்டதும் பதற்றத்துடன் எல்லோரும் பூங்காவை விட்டு வௌியே ஓடி வரும்போது அந்த நான்கு குழந்தைகளும் மலைப்பாம்பு ஊர்ந்து திரியும் பிரதேசத்தில் சிக்கி விடுகின்றனர்.

உயிரியல் பூங்காவிற்கு வௌியே காவல் துறையினருடன் பொது மக்கள் பெற்றோர்கள் மீடியாக்கள் எல்லோரும் பதற்றத்துடன் போராடிக் கொண்டிருக்க, ரீச்சர் மாளவிகாவோ, காவல்காரர் நிதின் சத்யாவுடன் சேர்ந்து உயிரியல் பூங்காவினுள் குழந்தைகளைத் தேட ஆரம்பித்து விடுகின்றார்..

அங்கே.......

குழிக்குள் வீழ்ந்த குட்டியை, மற்ற குட்டீஸ் காப்பாற்றி பூங்காவை விட்டு வௌியேற வழி தேடிக் கொண்டிருக்கும் நேரம்

 மலைப்பாம்போ வெறியுடன் ஊர்ந்து ஊர்ந்து இவர்களை விரட்டுகின்றது..

விஷயம் தெரிந்து ஜெயம் ராஜாவும் காவல் துறையினரின் அனுமதியுடன் தனது வாகனத்திலேயே உயிரியல் பூங்காவிற்குள் நுழைந்து தன் மகள்களை காப்பாற்றப் போராடுகின்றார்...

 அந்த இறுதிக்கட்டக்காட்சிகள் விறுவிறுப்பானவை..

இப்படத்தில் லேசான காதல், விறுவிறுப்பான மோதல், தந்தையின் அன்புக்கு ஏங்கும் குழந்தைகள், கொஞ்சம் சிரிக்க வைக்கும் காமடி என திரைப்படம் நகர்கின்றது...

குழந்தைகளின் பெற்றோர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?
மாளவிகா தனது காதல் கணவனுடன் ஒன்று சேர்ந்தாரா..
பாம்பு இறந்ததா...
என்பதுதான் விறுவிறுப்பான மீதிக்கதை?

நான்கு குழந்தைகளும் மிகப்பெரிய ஒரு கிராபிக்ஸ் பாம்பும் இருப்பதால் இத்திரைப்படம் நம்மை விரும்பிப் பார்க்க வைக்கின்றது..

 ‘என்ன சத்தம் இந்த நேரம்’ –

இது பாம்போட சத்தமா
இல்லை குட்டீஸ்களின் குறும்பு சத்தமா
அல்லது தற்கொலை செய்ய முயற்சித்து அடி வாங்கும் நிதின் சத்யாவின் அலறல் சத்தமா....
மாளவிகா ரீச்சரோட காதல் டூயட் சத்தமா..
பெற்றோரின் சண்டைச் சத்தமா....

நடிகர் : ஜெயம் ராஜா
நடிகை : மானு
இயக்குனர் : குரு ரமேஷ்
இசை : நாகா
ஓளிப்பதிவு : சஞ்சய் லோகநாத்

படம் பார்த்திட்டு நீங்களே முடிவு பண்ணுங்கள்..

- ஜன்ஸி-


அப்சரஸ்



அப்சரஸ் - திரைவிமர்சனம்
---------------------------------------

ஓவியர் ரவிவர்மன்!

வாழ்க்கை வரலாற்றை ஆவலுடன் பார்ப்பதற்காக அப்சரஸூக்குள் நுழைந்தேன்..

ஓவியராய் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்...

அமைதியான பொருத்தமான தோற்றம்.

காதல் வசப்படும்போதும், ஓவியம் வரைதலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தும்போதும் உணர்ச்சி ரேகைகளின் குத்தகை அவர் அங்க அசைவுகளில்!

பிரபல ஓவியர் ரவிவர்மனின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதிதான் அப்சரஸின் கதை. ரவிவர்மன் அழகின் நயங்களை யதார்த்தமாக வரையக்கூடிய மிகச் சிறந்த ஓவியர்.

உண்மையில் ஓவியமானது உள்ளத்துணர்வுகளை உருவங்களாக்கி பரவசம் கொள்ளச் செய்யக்கூடியது.அந்தவகையில். ரவிவர்மனின் ஓவியக்கலையின் ஈர்ப்பானது பல பெண்களின் மனதை ஊடுருவிச் செல்லக்கூடியது. இதனால் ஓவியம் வரைவதற்காக வரும் மாடல் பெண்களை, தன் வசீகரத்துள் வீழ்த்தி அவர்களை ஓவியங்களாக்குவதில்  அவர் கைதேர்ந்தவர்.

அவ்வாறு வரும் மாடலழகிகளுள் ஒருத்திதான் நித்யாமேனன். அவர் வரைந்த ஓவியங்களை பார்த்த நித்யாமேனன் அவர்மேல் ஈர்ப்பு கொண்டு அவருடனேயே மானசீகமாக வாழத்தொடங்குகிறார். அவ்வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தான் ரவிவர்மன் மீதான காதல்..

காதல்........

உணர்வுகளின் சங்கமம். ஈர்மனங்களின் உற்சாகக்கூவல். அன்பின் அலையடிப்பை இருதயத்துடிப்புக்களில் சுமக்கும் அற்புத அலைவு.

ஆனால் ....

ஓவியருக்கோ நித்யாமேனனின் அன்பு பொருட்டாகத் தெரியவில்லை. அழகை ரசித்தார். அவரது கரங்களும் தூரிகைகளும் அவளின் மென்னுடலை ஸ்பரித்துச் சென்றதே தவிர , அவளின் அன்பை ஸ்பரித்துச் செல்லவில்லை. தன்னைக் கணவனாகமனதிலிருத்தி வாழும் அவளை, அவனோ  தனது தேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தும் பாண்டமாகவே கருதினான்.

விளைவு....

வேதனை உணர்ச்சிக் கொந்தளிப்புக்களின் பிராவகம் அலையடிக்க ...
அவளோ சோகத்தில் இறந்து விடுகின்றாள்.

பின்னர் .....

ரவிவர்மன்,  கார்த்திகாவை தற்செயலாக பார்க்கிறார். அவளின் அழகின் ஈர்ப்பில் மயங்கி,  கற்பனையால் தனது தூரிகையை உயிர்ப்பாக்கி பல ஓவியங்களை வரைகின்றார். தான் வரைந்த ஓவியங்களை கார்த்திகாவுக்கு காட்டும்போது, தனது மேனியை நிர்வாணப்படுத்தும் ஓவியத்தை அவள் கண்டதும் கோபத்தில் கொதித்துப் போகின்றாள்..

அவளின் கொதிப்பை ஓவியரோ பல புராணக்கதைகளைக்கூறி சமாதானப்படுத்த  ஈற்றில் இருவருக்கிடையிலும் மெல்லிய காதல் நூலிலழையோடுகின்றது.

இந்நிலையில் .....

அப்பாவி பெண்களை மயக்கி நிர்வாணப் படம் வரைந்து விற்பனை செய்வதாகவும், வேசி பெண்களின் மாடல்களைப் பயன்படுத்தி கடவுள்களின் உருவங்களை வரைந்து விற்பனை செய்வதாகவும் அவர்மீது போலீஸில் புகார் செய்யப்படுகிறது.

கூறப்பட்ட புகாரில் இருந்து சந்தோஷ் சிவன் தப்பித்தாரா?
காதலி கார்த்திகாவை கைப்பிடித்தாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஓவியருக்குரிய அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை சந்தோஷ் சிவனுக்கு வௌிப்படுத்த, மறுபுறமோ கார்த்திகாவின் கவர்ச்சி அதிரடி!

எனினும் ஓவியத்திற்கு போஸ் கொடுக்கும்போது கார்த்திகா தரும் முகபாவனைகள் ரசிக்கும்படி உள்ளது.

இது ரவிவர்மனின் கதைதான்  எனும் எதிர்பார்ப்பில் விழிகள் திரைப்படத்தை மேயும்போதுதான் நாம் ஏமாற்றப்படுவதை உணர்கின்றோம்...

ஏனெனில் .....

கதையை விட கவர்ச்சியின் பின்னனியில்தான் கதை நகர்கின்றது என்பதை இயக்குனர் லெனின் ராஜேந்திரன்மறைமுகமாகச் சொன்னாலும்கூட,
மது அம்பாட்டின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்!

அப்சரஸ்...

ஓவியப் பெண்களின் மேனியழகை ஆண்கள் மனதில்  கொளுத்தும் வெடி !
ஆண்களை அசர வைக்கும் கவர்ச்சி அதிரடி!

- ஜன்ஸி-

2012/12/07

தென்றல்


அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களின் வெளியீடான தென்றலை, கவிதாயினி உள்வாங்கிக் கொள்கின்றது விமர்சனமாய்.......!

சஞ்சிகையின் பெயர் - தென்றல்
சஞ்சிகை ஆசிரியர் - நேகம பஸான்
விலை - 200 ரூபா
பக்கங்களின் எண்ணிக்கை 58

உணர்வுகளின் ஆளுகையை வெளிப்படுத்துவது மனம். அந்த மனதின் அருட்டல்கள் வரிவடிவமாகும் போது , அவையே இலக்கியத்தின் அஸ்திவாரக் கற்களாக மாற்றப்படுகின்றன. அந்தவகையில்  பேசப்படும் இலக்கியங்களே காலத்தையும் வென்று நிற்கின்றன என்பது கண்கூடு.

"தென்றல்" சஞ்சிகை .............!

மாணவர்களின் உணர்வுகள் சங்கமிக்கப்பட்ட தளம்.........

கன்னிச் சஞ்சிகை..........மாணவர்களுக்கான முன்னோடிச் சஞ்சிகை! அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட முதல் கனவு..................இலக்கிய வருடல்!

எப்போதும் நம் எல்லோர் மனங்களையும் "தென்றல்" நனைத்துச் செல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பில்,  சஞ்சிகையின் நாமம் தென்றலாகி , நம்மை எட்டிப்பார்க்கின்றது. 

முகப்பட்டையை பார்க்கும் போது, கடற்கரையோரமொன்றில்  வளைந்து நிற்கும் தென்னை மரமொன்று, மானசீகமாக தென்றலை உறிஞ்சி மகிழ்வோடு இலயித்துக் கொண்டிருப்பதைப் போன்ற  பிரமிப்பு நமக்குள் முகிழ்க்கின்றது...........

என்னையுமறியாமல் மாணவர் ஆக்கங்களை விழிகளுக்கு விழ வைக்கும் எதிர்பார்ப்புடன் தென்றலின் ஒவ்வொரு பக்கங்களையும் மெதுவாகப் புரட்டுகின்றேன். அடடா.......கனாதியான வரிகள்........அழகான சிந்தனைப் புரட்டல்கள். தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களின் கலை அறுவடைகளலல்லவா அவை!

பாடசாலை அதிபர், பிரதி அதிபர், இதழாசிரியர் நேகம பஸான், விடுதி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எல்.மிஸ்கீன் ஆசிரியர் ஆகியோரின் ஆசிச் செய்திகளுடன் தனது கன்னி, இலக்கியப் பயணத்தை ஆரம்பிக்கும் தென்றல், தனது இறுதிப் பக்கத்தில் தன்னுடன் ஒட்டியுறவாடிய விடுதி மாணவர்களின் பெயர் விபரங்களை இணைப்புச் செய்துள்ளது.

கவிதைகள், கட்டுரைகள், நம் சிந்தனையைத் தொட்டு நிற்கக் கூடிய தகவல்கள், உரையாடல்கள், வரலாற்றுத் தகவல்கள்,சிறுகதை, மருத்துவத் தகவல் போன்ற மகுடங்களில் நிமிர்ந்து நிற்கும் மாணவ ஆக்கங்கள்  தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிகளோடு உறவாடிக் கொண்டிருந்தன.

கட்டுரைகளும் நம் சிந்தனையோட்டத்துக்கு வாய்க்கால் நீட்டுகின்றன."உலக ரீதியில் முஸ்லிம்களின் நிலை", "இளைஞர்கள்","விண்வெளிப் பயணங்களின் பலாபலன்கள்", "மருத்துவத்தில் முஸ்லிம்களின் பங்கு", "அறிவியலும் குர்ஆனும்", "கல்வி" எனும் தலைப்புக்களில் தலைகாட்டும் பதிவுகள் சிறந்த கருத்துக்களை நம்முள் தூவி நிற்கின்றன.

மாணவர்களின் சிந்தனைத் தூண்டல்கள் பெரும்பாலும் கல்வியைச் சுற்றி நிற்பது ஆரோக்கியமான விடயமே. அவர்கள் வித்தியாசமான பார்வைகளில், கோணங்களில் கல்வி பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

"இரகஸியம்" உரைநடைச் சிறுகதை வித்தியாசமான கதையமைப்பு.

"நட்புக்காக ஒரு நண்பன்"  எனும் தலைப்பின் கீழ் பதிவாகியுள்ள இந்த வரிகளின் ஆழத்தைப் பாருங்கள்.

 "மனிதன் திகதி குறிக்கப்பட்ட மரண தண்டனை கைதியாவான், ஆதலால் உன் வாழ்வை இம்மைக்காக செலவிடுவதோடு நின்று விடாமல், மறுமைக்காகவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்.."

உயர்தரம் கலைப் பிரிவில் கற்கும் இம் மாணவனின் சிந்தனையின் உயிர்ப்போட்டம் ஆழ்மனதை லேசாய் வருடிச் செல்கின்றது.

கல்வி, தாய்மை, இயற்கை, யதார்த்தமான வாழ்வியலின் படிநிலைகள் போன்ற அம்சங்கள் கருக்கட்டப்பட்டுள்ளன கவிதைகளுக்காக

"தாயின் துயரம்" எனத் தலைப்பிட்டு, அன்னையின்  நிகரற்ற பாசத்தைக் கவி யாத்த ரஸ்மியின் கவியுடன் , தென்றல் தன் பக்கங்களை மெதுவாக வருட ஆரம்பிக்கின்றது.

மேலும் சப்ரான்,

"மறை தந்த இறைதூதர் குறையிலா நபி நாதர்
உலகெல்லாம் புகழ் பாடும் நிகரில்லாப் பணியாளர்
எம் பெருமான் முஹம்மது நபி"

என நபி (ஸல்) அவர்களின் புகழ்  பாடுகின்றார்.

தொடர்ந்து வருகின்ற சில கவிதைகளில் என் பார்வையைச் செலுத்திய போது, பின்வருவன என கருத்துக்களாக இங்கு உறைந்து நிற்கின்றன..

இந்த மாணவ மனங்களை பாலஸ்தீனக் கதறல்களும் உலுக்கியுள்ளன என்பதை "பாலஸ்தீனுக்கான உனது அர்ப்பணிப்பு என்ன" எனும் கவிதை வலிப் போடு பின்வருமாறு ஒலிக்கின்றது.

"இஸ்லாமிய இளைஞனே- இனி
               பாலஸ்தீனுக்கு விடிவு பிறக்க - உன்னால்
ஆயுதம் எந்த முடியவல்லை- தினம்
               இரு கை ஏந்தியவாறு பிரார்த்தித்து விடு!"

 "விரும்பிச் செயலாற்று" எனும் தலைப்பிலிடம் பெற்ற ஹாகாசின் சிந்தனையோட்டம்...இவ்வாறு அலைகின்றது நம்முள் !

" நாளும் வாழ்ந்திட நீ விரும்பு
                  நாட்டில் நீயொரு செங்கரும்பு
காலம் என்பதை பொன்னாக்கி
                  கல்வி என்பதை பொருளாக்கி"

மப்ராஸ் எனும் மாணவனின் கல்வி பற்றிய கவிதையில், காணப்படும் இவ்வரிகளும் என்னைக் கவர்ந்தன.

"திரையிட்டு இருந்த - என்
திரையைக் கிழித்து
சமூகத்தினுள் என்னையும்
பூச்சியாய் மாற்றியது
இப் புனித கல்வியே!"

தமிழை நேசிக்கின்ற, வாசிக்கின்ற அனைவருமே இலக்கியம் புனைந்து மனம் மகிழ துடிக்கின்றவர்கள். அந்த வகையில் " விடியலை நோக்கிய விவரணம்" எனும் தலைப்பில் விடியலை புது விதமாய் நிரோஷ்கான் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.

" காலை தரிசனத்தில்
பறவைகளின் முத்தம்
பிழிந்து
எச்சங்களின் மிச்சம்
பனித்துளிகளின் மேல்
பாயின்றி படுத்துக் கிடக்கும்"

(விடியலை  நோக்கிய விவரணம், சிரம் தாழ்த்துவோம் எனும் இரண்டு கவிதைகளும் 49ம் பக்கத்திலும் 53ம் பக்கத்திலும் தவறுதலாக இடம் பிடித்து விட்டன . இயற்கை எனும் கவிதையும் இரண்டு பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது.)

இந்த பதினாறு வயது மாணவனின் புதுக்கவிதையாற்றல் மன மகிழ்வு தருகின்றது.

கல்லூரிக் காலமென்பது யாவருக்கும் மறக்க முடியாத இனிய காலம். அதிலும் விடுதி வாழ்க்கையென்பது அலுப்பும், சலிப்பும், குறைகளும் கூட குதுகலமாக, வேடிக்கையாக மாற்றப்படுகின்ற காலமென்பதை அர்ஷாத் எனும் மாணவன் தனது "வீடா? விடுதியா" எனும் கவிதையில் பதிவிட்டுக் காட்டுகின்றார்.

இவ்வாறு பல மாணவர் ஆக்கங்கள். அவற்றுள் இவை சிறு துளிகளே!

இவை மாணவர் ஆக்கங்கள்.......அவர்களது ஆர்வத்தின் உந்தமே இப்படைப்புக்கள். சகல ஆக்கங்களிலும்  இங்கு இலக்கிய வரம்புகளைத் தேடுவது பொறுத்தமற்றது. எனினும் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் நம்மை மறைந்தும், முகம் காட்டியும் எட்டிப் பார்க்கின்றன. எதிர்காலங்களில் இவ் வெழுத்துப்பிழைகளைத் தவிர்ப்பது நலம்..மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதனால், இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் அதிகரித்து வருவதை நாம் காணலாம்.

மிகச் சிறப்பான முயற்சியே இச் சஞ்சிகை.....ஆனால் இனிவரும் வெளியீடுகளில் படங்களை சிறிதாக்கி, பதிவுகளின் எழுத்துக்களின் அளவை சற்று அதிகரியுங்கள். இது தென்றலின்  செழுமையை சற்று குறைத்து விடலாம் என்பது என் பார்வை...

குறுகிய காலத்தினுள், நிறைவுடன் வெளி வர முயற்சித்த தென்றலே, காலப்போக்கில் நீ சிறு சிறு கீறல்களைக் கலைந்து நிறைவு பெறுவாய் என்பது என் நம்பிக்கை.......வாழ்த்துக்கள் விடுதி மாணவர்களுக்கும் சஞ்சிகை ஆசிரியருக்கும்! !

தென்றல் ஆசிரியர் பதிப்பித்த என் விமர்சனம் காண


2012/08/29

அநுராதபுரத்தின் முதுசொம்


அநுராதபுரத்தில் சேவை செய்து, ஓய்வுபெற்ற அரச ஊழியர்களை கௌரவிக்கும் விழாவில் (25.08.2012) வெளியிடப்பட்ட  விழா மலரே " அநுராதபுரத்தின் முதுசொம்" ஆகும்.

"முதுசொம் " எனும் சொல்லின் அர்த்தம் எனக்குப் புரியாத நிலையில், இது தொடர்பாக மலராசிரியர் ஜவஹர்ஷா சேரிடமே வினவினேன். அதற்கவர் "பரம்பரைச் சொத்து" எனும் பொருள்படுவதாகக் கூறினார்.

"முதுசொம்" எனும் மிகப் பொருத்தமான மலர்த் தலைப்புடன் , அநுராதபுர நகர மக்களின் பரம்பரைச் சொத்துக்களான கலை, இலக்கிய, பண்பாடு, அரசியல் , சமூகம், ஆன்மிகம் தொடர்பான தகவல்களை முன்வைக்கின்ற, கடந்த கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பரிணமிக்கின்ற இம் மலர் பல விடயங்களைத் தன்னத்தே பதித்துள்ளதென்பது வெள்ளிடைமலை! இம் மலரானது, அதன் செலவில் மட்டுமல்ல, அதன் உள்ளடக்கத்திலும் கனாதியானது. மிகப் பெறுமதியானது.

இது காலத்தால் அழிவுறாத ஆவணமாகையால், மலராசிரியர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் அநுராதபுர நகரின் வரலாறு தொடர்பான ஒவ்வொரு நுணுக்கமான தேடலும்,  இம் மலரின் பதிவுகளின் ஒவ்வொரு வரிகளிலும் கலக்கப்பட்டு, வரலாற்றின் தெளிவான வெளிப்பாடாகி, எம்மை பிரமிக்க வைக்கின்றது.

சில அரிய புகைப்படங்களை தன்னகத்தே கொண்ட முகப்பட்டையே இங்கு நுழைவாயிலாகி,   எம்மையும் இம் மலரின் பயணப் பாதையில் சுவடுபதிக்க அழைத்துச் செல்கின்றது.

மலரை விரித்ததும் உள்ளே முதற்பக்கத்தில்  விழா ஒழுங்குக் குழுவினரின் புகைப்படமும், விழாக் குழுவினரின் விபரமும் அதனைத் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

பிரதம அதிதி வைத்தியக் கலாநிதி முஸ்தபா ரயிஸ் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், " இப்பிரதேசத்தின் மகத்தான பணிகள் புரிந்த பலரை தற்போதைய, எதிர்கால சந்ததியினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஆவணமாகவும் முதுசொம் மிளிரும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழுத் தலைவரான அல்ஹாஜ் எச். எஸ். ஏ.முத்தலிப் ஜேபி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், "தாய்மொழியையும் தமது கலாசாரத்தையும் படித்துக் கொடுத்து, கல்விக்கு வித்திட்ட கல்விமான்களையும், ஆங்காங்கே மஸ்ஜித்துக்களையும் குர்ஆன் மத்ரஸாக்களையும் அரும்பாடுபட்டு அமைத்து, மார்க்கத்தை வளமுடன் நிகழச்செய்த சன்மார்க்க சீலர்களையும், சமூகத்தின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது உழைத்த திணைக்கள, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களையும் வாழ வாழ்த்தி கண்ணியப்படுத்துதல் கடனும் கடமையும் பொறுப்பாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழு செயலாளர் எம்.ஏ.எம்.டில்ஷான் தனது வாழ்த்துச் செய்தியில்,

 "ஒவ்வொரு  பிரதேசங்களிலும் இதுபோன்ற கௌரவிப்புக்கள் நடைபெறுவதானது, கல்வி ரீதியாக நாம் எவ்வளவு பண்பட்டுள்ளவர்களென்பதையும்,  அரசாங்கத்திற்கு எந்தளவு எம் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம் என்பதையும் விளக்குவதோடு எதிர்கால நம் சந்ததிகளுக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டுமாகவும் இருக்கும்"  

என்று குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழு பொருளாளர் வடமத்திய மாகாண தமிழ்ப்பிரிவு கல்விப்பணிப்பாளர் ஜனாப்  ஈ. பீர்முஹமட்  Sir , அவர்கள் , தனது வாழ்த்துச் செய்தியில் "ஒரு இனத்தின் வளர்ச்சியையும், நாகரீகத்தையும் அறிந்து கொள்வதற்கு உதவியாய் அமைவது அவர்களின் வரலாற்றுப் பதிவாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பாசிரியர் அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்கள் , தனது செய்தியில் " ஓய்வு பெற்றவர்களை கௌரவிக்கும் இந்த கௌரவிப்பு விழா மலருக்கு "அநுராதபுரத்தின் முதுசொம்" என்று தலைப்பிட்டமைக்குக் காரணம், இவர்களின் தகவல்களோடு கிடைக்கக்க;டியதாக சில ஆவணங்களையும், எதிர்கால வரலாற்றுத் தேவைகளுக்காக ஆவணமாக்கி உள்ளபடியால் இந்நூலின் உள்ளடக்கத்திற்காகவே இவ்வாறு தலைப்பிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கூறப்பட்ட வாழ்த்துச் செய்திகளில் 'முதுசொம்' மலரின் முக்கியத்துவமும், இக்கௌரவிப்பு விழாவின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

வாழ்த்துரைகளைத் தொடர்ந்து , பல்வேறு திணைக்களங்களில் சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ள அல்லது மரணித்த எண்பத்தேழு அரச சேவையாளர்களின் பெயர்ப்பட்டியலொன்றும் , அவர்களின் புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய சுருக்கமான அறிமுகமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1992 ஆண்டு இங்கு நிகழ்த்தப்பட்ட தேசிய மீலாத்விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட  மீலாத் மலரில் பிரசுரமாகியிருந்த இரண்டு கட்டுரைகள், இம் மலரில் மீள ஞாபகப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்று திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட போதனாசிரியர் ஏ.பி.எம்.ஹூசைன் அவர்களின் "அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்" எனும் கட்டுரையாகும்.

கி.மு 6ம் நூற்றாண்டில் விஜயனின் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே , இலங்கையில் அராபியர், பாரசீகர், எகிப்தியர் எனும் முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள்  வாழ்ந்ததற்கான , வர்த்தக நோக்கத்திற்காக பயணத்ததிற்கான சான்றுகள் உள்ளன எனக் கூறி, அச்சான்றுகளையும் இவர் இக்கட்டுரையினூடாக முன்வைத்துள்ளார். முஸ்லிம்கள் அநுராதபுர நகரின் திசாவெவகம, பொன்னாரங்குளம், கும்பிச்சங் குளம், ஆமன்னரத்மல, நாச்சியாதுவ ஆகிய பிரதேசங்களில் தமது ஆரம்ப குடியிருப்புக்களை நிறுவினர் எனத் தொடரும் இவரது  கட்டுரை இன்னும் பல விடயங்களை முன்வைக்கின்றது.

மேலும் அநுராதபுரத்தை ஆண்ட  பண்டுகாபய மன்னன் தொடக்கம் பல மன்னர்கள் அரேபியர்களுடன் கொண்டுள்ள வர்த்தக தொடர்புகள் பற்றியும் இக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. அக் கால கட்டத்தில் கச்சுத்தோட்டம், இசுறுமுனி, வெஸ்ஸகிரிய, ஒட்டுப்பள்ளம், திசாவெவகம, மிரிசுவெட்டி போன்ற இடங்கள் முஸ்லிம்களின் குடியிருப்புக்களாக விளங்கின. சிங்கள மன்னரின் கீழ் "விதானை"யாக சேவையாற்றிய "முத்து விதானை அசனார் " என்பவரின் வீட்டிலுள்ள இரு கற்றூணில் அவரது பெயர் முதலெழுத்துக்களைக் குறிக்கும்  "மு.அ" எனும் தமிழ் ஈர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அரசனின் முகாந்திரமாக அநுராதபுரத்தைச் சேர்ந்த "பிச்சைத் தம்பி" என்பவர் கடமையாற்றியுள்ளார். அரசரால் இவருக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை இடைவாள், அரண்மனைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ள கௌரவ வாள் என்பன இன்னமும் இவரது பரம்பரையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன எனும் செய்தியும் கட்டுரையாசிரியரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இச் சீருடை, வாள் என்பவற்றின் புகைப்படங்களும் இம் மலரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அன்று அநுராதபுரத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஐந்து குடும்பப் பெயர்களுடன் வாழ்ந்து வந்ததாகவும், இவர்களை வரலாற்றாசிரியர்கள் "பஞ்சகூட்டத்தினர்" எனக் குறிப்பிடுவதாகவும் அவரது தகவல் மேலும் சுட்டிக்காட்டுகின்றது. 

இவ்வாறு அநுராதபுர மக்களின் இருப்பை, வாழ்வியலை கட்டுரையாசிரியர் பல கோணங்களினூடாக ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார்.

ஆன்மீகப் பணிக்காக இந்தியாவிலிருந்து வந்து அநுராதபுரத்தில் இறையடியெய்திய சிக்கந்தர் வொலியுள்ளாஹ் அவர்களின் ஒட்டுப்பள்ளித் தர்கா, நாச்சியாதுவ, நேகம, இக்கிரிகொல்லாவ போன்ற கிராமங்களின் புராதன தொடர்பும், மன்னர்களின் குளப்புனரமைப்புக்கள் காரணமாக வேறிடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களின் குடிப்பெயர்ச்சி பற்றிய தகவல்களும்,  காதல் கொண்ட மன்னன் எனும் தலைப்பில் சிங்கள மன்னன் காதலுற்றதால் தன்னுயிரை நீத்த முஸ்லிம் மந்திரியின் மகளின் சோக வரலாறும் ஆசிரியரால்  ஆராயப்பட்டுள்ளது.

ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிகானின் "மறை(று)க்கப்படும் வரலாறு எனும் கட்டுரையில்,  சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் அரசின் நடவடிக்கையின் பயனாக, முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்புக்கள் பற்றிய தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களை முன்வைப்பனவாக உள்ளன. இக் கட்டுரையை வாசிக்கும் போது பல வரலாற்று உண்மை விடயங்கள் நம்மை அழுத்துகின்றன. எனினும் அவர்களின் ஆட்சிப்பலத்தின் முன்னிலையில் சிறுபான்மையினரின் பல சரித்திர உண்மைகள்  சாதுரியமாக மறைக்கப்பட்டுவிட்டன.

"முஸ்லிம்கள் பூர்வீகக் குடிகளல்லர், பிரித்தானியர் காலத்தில் கொண்டு வரப்பட்டவர்கள்"  எனும் போலிப் பிரச்சாரத்தினூடாக , தாம் மட்டுமே இப் பிரதேசத்தின் பிரதான பூர்வீக உரித்தாளிகள் எனும் கருத்தை ஆட்சியாளர்கள் அவ்வவ்போது தம்மின மக்கள் மனங்களில் விதைக்க முற்படுகின்றனர் எனும் எண்ண உள்வாங்கல்  இக்கட்டுரையை வாசித்த பின்னர் எம் மனதில் நிழலாடுகின்றது.

அநுராதபுர நகரின் முஸ்லிம்களின் இருப்பு தொடர்பான பல விடயங்களை இக்கட்டுரையும் விரிவாக ஆராய்ந்து பல உண்மைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

"அநுராதபுரம் முஸ்லிம்கள் பல்வேறு பதிவுகள் "எனும் தலைப்பில் மலராசிரியர் ஜவஹர்ஷா சேர் அவர்கள் இந்நகரத்தின் முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் பல்வேறு சிறப்புக்களையும், முஸ்லிம்களாற்றிய சேவைகளைப் பற்றியும் சமயம், கல்வி, அரசியல், கலை இலக்கியம், விளையாட்டு, முஸ்லிம் மாதர்கள், அஹதிய்யா பாடசாலை, பொது எனும் தலைப்பின் கீழ் ஆராய்கிறார். நிச்சயம் இவ்வாராய்வுக்கான அவரின் தேடல் மிக நீண்டிருக்க வேண்டும். வரலாற்றுத் தொகுப்புக்களை வெளிவிடும் போது மிகவும்  ஆதாரபூர்வமான தகவல்களைக் கவனமாகப் பதிவிட வேண்டியுள்ளது. இங்கும் தகவல்கள் அந்தத் தனித்துவத்தைப் பேணி நுட்பமான முறையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. சமய, கலை , கலாசார, பொருளாதாரப் பின்னணிகளுடன் இச்சமுகத்தின் வரலாற்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1870 ம் ஆண்டு திசாவெவ குளத்தின் மத்தியில் காணப்பட்ட பள்ளிவாசல் உள்ளிட்ட பௌத்த மத வணக்கஸ்தலம் அல்லாத மத வழிப்பாட்டுத் தளங்கள் அகற்றப்பட்டன எனும் செய்தியொன்றும் இப் பதிவில் காணப்படுகின்றது. இவற்றுடன் அநுராதபுர பள்ளிவாசல்கள் ஒட்டுப்பள்ளம் தர்கா உள்ளிட்ட தற்போதைய பள்ளிவாசல் நிர்மாணம் பற்றிய தகவல்களையும் , அவற்றுடன் தொடர்புடைய பின்னணித் தகவல்களையும், மத்ரஸா, தக்கியா, அரபுக் கல்லூரிகளுட்பட்ட மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட  ஈமானிய முயற்சிகளையும் ஆதாரபூர்வமாக இவர் முன்வைத்துள்ளார்.

இம் மண்ணில் கலை இலக்கியச் சுவடு பதித்தவர்களின் பெயர்களும், அவர்கள் பற்றிய சிறு ஞாபகக் குறிப்புக்களும் தடம் பதித்துள்ளமை சிறப்பானதொரு அம்சமாகும். ஏனெனில் இலக்கியம் என்பது மனித வாழ்வியலின், பண்பாட்டின் கண்ணாடியாகும். இதனடிப்படையில் இலக்கிய கர்த்தாக்களான முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு, ஆ.லெ. உமர்லெப்பை ஆலிம் சாய்பு , அன்பு ஜவஹர்ஷா, எப். ஆர் பரீட்ஹ், எப்.எப். சப்ரினா,  ஜன்ஸி கபூர்,  எம். வஸீம் அக்ரம், மர்ஹூம் எஸ்.எச். எம் .ஸஹீர் சட்டத்தரணி போன்ற பலரின் எழுத்துப்பணிகளும் அடையாளப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன.

அநுராதபுரத்திலிருந்து வெளிவந்த, வரும் சஞ்சிகைகள் பற்றிய குறிப்புக்களும் காட்டப்பட்டுள்ளன. அவையாவன:-

  • சிக்கந்தர் மகத்துவக்கும்மி (1928 -முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
  • விதி-அறிவு-விளக்கம் (1938-முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
  • கைபுட்சிக மாலை (உமர்லெப்பை ஆலிம் சாய்பு - அநுராதபுரத்தில் ​வெளியீடு)
  • தமிழ்மணி கையெழுத்துச் சஞ்சிகை (எம்.எஸ்.ஹூசைன்)
  • இளைஞர் குரல் (இரு ஆசிரியர்களுள் ஒருவர் மர்ஹூம் அமீர் சுல்தான்)
  • மாணவர் குரல் ( அண்டன் ஞானராஜா)
  • தமிழ்ச்சுடர் (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • புத்தொளி (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • வீரத் தமிழன் ( மர்ஹூம் எஸ்.எச். எம் .ஸஹீர் )
  • தேன்துளி ( மர்ஹூம் எஸ்.எம். ஸாலிஹ்)
  • பிறையொளி பாடசாலைச் சஞ்சிகை (அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • பொறிகள் ( அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • காவிகளும் ஒட்டுண்ணிகளும் -அன்பு ஜவஹர்ஷா சேர் 
  • அன்னை (எப். ஆர் பரீட்ஹ்)
  • அல் மதீனா (எப். ஆர் பரீட்ஹ்)
  • தொலைச்சுடர் ( ஜன்ஸி கபூர் )
  • அநுராகம் (ஜன்ஸி கபூர் , எப். ஆர் பரீட்ஹ், ஏ.பி.எம். அன்சார் )
  • படிகள் (எம். வஸீம் அக்ரம் )
1853 ம் ஆண்டில் இங்கு  பாடசாலைகள் 3 மாத்திரமே இருந்ததென்ற செய்தியுடன்  இவரது கல்வி பற்றிய பார்வை தொடர்கின்றது.  முதன் முதலாக எஸ்.எஸ்.சி சித்தியடைந்த மாணவர் எம்.எஸ். ஹூசைன் என்றும்,  முதல் பல்கலைக்கழக நுழைவு அவரது புதல்வி நூர் நிஹார் என்றும் தகவல்கள் இங்கு சுட்டி நிற்கின்றன. மேலும் மொஹம்மதியன் கொலேஜ், முஸ்லிம் வாலிபர் சங்கம் உருவாக்கம், அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலயம் உருவாக்கம் என்பவற்றின் பின்னணி பற்றியும்  நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் அநுராதபுரம் முஸ்லிம் சமுகத்திற்கு சேவையாற்றிய அல்ஹாஜ் யூ. அபூசாலி , அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்திற்கு கட்டிடம் வழங்கல் மூலம் அளப்பரிய சேவையாற்றிய மர்ஹூம் அல்ஹாஜ் மொஹிதீன் தம்பி அமீர் சுல்தான் ( பாடசாலை விடுதி ), அல்ஹாஜ் அனஸ்தீன் (சிறுவர் நூலகம்) என்பவர்கள் நினைவூட்டப்பட்டதுடன், சீ.பி முகம்மது அவர்களின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்ட கட்டடம், பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஆசிரியர் விடுதி , சிற்றுண்டிச்சாலை, மஸ்ஜிதுஸ் ஸாஹிரா பள்ளிவாசல் , பாடசாலை முன் முகப்பு என்பவற்றின் உருவாக்கப் பின்னணியில் உழைத்த பெருந்தகைகள் பற்றியும் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம், அநுராதபுரம் முஸ்லிம் கல்வி, கலாசார அபிவிருத்தி அமைப்பு , அநுராதபுரம் முஸ்லிம் கல்வி அமைப்பு ,அல் இஸ்லாஹ் பாலர் பாடசாலை, பிரிசம் (சமூக அபிவிருத்தி அமைப்பு) , அநுராதபுரம் சுதந்திர இயக்கம் (AIM) உள்ளிட்ட இம் மண்ணில் உருவாக்கப்பட்டு, இம் மக்களுக்கு சேவையாற்றிய, சேவையாற்றும் பல்வேறு அரசியல் , சமூக நிலையங்களும், சமூகப் பணியாளர்களும் பெயர் குறிப்பிடப்பட்டு  நினைவூட்டப்பட்டுள்ளனர்.

இம் மண்ணின் முதல் வைத்தியர் ரீ.எம். அஸ்மி , முதல் நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஓ.எல். அஷ்ரப் என்போரும் வரிகளில் அமர்ந்து கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் இல்லாமல் எந்தச் சமூகமுமில்லை என்ற முன்னுரையுடன், இவரின் அரசியல் பார்வை தொடர்கின்றது. காதர் சாய்பு செய்யது அஹமட், எல்.ஏ. மஜீத் (ஜே.பி) , அப்துல் ரவூப் (ஜேபி) , சட்டத்தரணி எஸ். நடராஜா, திரு ஆர். வி. கந்தசாமி, அப்துல் வாஹித் அப்துல் சலாம் , மொஹமட் அன்சார் (ஜே.பி) , ஏ.சி ராவுத்தர் நெயினா முஹமட் போன்றோரும், அவர்கள் சமுகத்திற்கு ஆற்றிய சேவைகளும் இக் கட்டுரை வாயிலாக நினைவுபடுத்தப்பட்டுள்ளன.

எழுத்துத் துறையில் மட்டுமல்ல நாடகம், ஊடகம் போன்ற துறைகளிலும் அநுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களுள் நாடகத் துறையில் மர்ஹூம் அமீர் சுல்தான் அவர்களும் , ஊடகவியலாளராக அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்களும் ITN தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், நாடகக் கலைஞராகவும் செயற்பட்ட உவைஷ் ஷெரீப் அவர்களும் சிரச ஊடகவியலாளருமான எம்.எம். றிஸ்வி அவர்களும் மர்ஹூம் ரிஸ்மி மஹ்ரூப் அவர்களும் ஊடகவியலாளர் ஆர். எம். தாரீக் அவர்களும் முதன்மைப்படுத்தப்படுபவர்களாவார்கள்.

இவர்களைப் போலவே சமூகத்திற்கு பங்களிப்புச் செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாதர்களும், விளையாட்டுத் துறையினரும் இம் மலரின் தடத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மார்க்க அறிவை சிறார்களுக்கு வழங்கும் அஹதிய்யாப் பாடசாலையின் சேவையும், அவற்றின் பின்புலத்திற்கான காரணங்களின் ஆராய்வும் இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான நீண்ட தேடல்களின் பின்னணியில் பெறப்பட்ட தகவல்களை "அநுராதபுரம் முஸ்லிம்கள் பல்வேறு பதிவுகள்" எனும் பதிவினூடாக அன்பு ஜவஹர்ஷா சேர் அழகாகவும் சிறப்பாகவும் பதிவித்து, நமக்கொரு சிறந்த வரலாற்று ஆவணத்தை தந்திருக்கின்றார். தர முயற்சித்திருக்கின்றார்.

இப் பதிவுகள் நீங்கலாக சில தகவல்களும் புகைப்படங்களும் பின்னிணைப்புச் செய்யப்பட்டுள்ளன. 1950ம் ஆண்டு வரை அநுராதபுர புனித வளனார் கல்லூரி, அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் கல்லூரி, ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் கற்றவர்கள் பெயர் விபரங்களும், அக்காலங்களைச் சுட்டும் சில பிறப்பத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளும், அநுராதபுரத்தில் முஸ்லிம் குடியிருப்புக்களைக் காட்டும் இட அமைவு வரைபும், சில மலர்களின் முகப்பட்டைகளும் உள்ளிட்ட பல நிகழ்வுகளின் அரிய ஆவணப் பதிவுகளின் நிழல்படங்களும் புகைப்படங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

அநுராதபுர முஸ்லிம்களின் வரலாற்றை சிறப்பாகத் தொகுத்துத் தரும் சிறப்பான பதிவே  இவ் "அநுராதபுரத்தின் முதுசொம்"  என்றால் மிகையில்லை. எனினும் ஓரிரு இடங்களில் அச்சுப் பிசாசின் எழுத்துப் பிழைகளும் அவதானிக்கப்பட்டாலும் கூட, அவை தவிர்க்கமுடியாதவை. குறைகளல்ல..இந் நல்ல முயற்சியை பலகீனப்படுத்தும் எந்தக் குறைபாடுகளையும் நான் அவதானிக்கவில்லை. சிறப்பும், நிறைவுமே என் கண்முன்னில் விமர்சனமாகி வீழ்கின்றன.

தனி மனித வாழ்வில் பிறப்பிடம், இருப்பிடம் எனும் இருதாங்கல் மிக முக்கியமானதாகும். அந்த வகையில் நான் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் கூட, இரு தசாப்தங்களுக்கு மேலாக எம்மையும் இருப்பிடமாகித் தாங்கி நிற்கும் இவ் அநுராதபுர பூமியினதும், முஸ்லிம் மக்களினதும் சிறப்புக்களை நானும் மிக நேசத்துடனும், அக்கறையுடனும் உள்வாங்கியவளாக எனது மலர் பற்றிய பார்வையை நிறைவு செய்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்!

Jancy Caffoor









                                                                                                                   

2012/07/28

மீண்டு வந்த நாட்கள்


கவிஞர்  வதிரி சி ரவீந்திரன் அவர்களின்  முதலாவது கவிதைத் தொகுதியான "மீண்டு வந்த நாட்கள்" கவிதைத் தொகுதி தொடர்பான எனது பார்வையிது..............!

என் முகநூலில் ஏற்கனவே இடப்பட்டிருந்த இக் கட்டுரையை இன்று இணைய வலைப்பூவில் பதிவு செய்கின்றேன் மகிழ்வுடன்............


இலக்கியவுலகில் தனக்கென  தனி முத்திரை பதித்தவர்களுள், புதியவர்களை ஆர்வத்துடன் வரவேற்பவர்கள் ஒரு சிலரே...! அவர்களுள் இவரும் ஒருவர்.!


"மீண்டு வந்த நாட்கள்"

தன் தாய் மண்ணின் காலடியில் வாஞ்சையோடு வீழ்ந்து கிடக்கத் துடிக்கும் துடிப்பே முகப்பட்டையாக முகங்காட்ட, 80  பக்கங்களுடன் கனமான கவிதைகளை ஏந்திக்கொண்டிருக்கும் காத்திரமான கவிதைத் தொகுதியான இதனை அவர் தன் பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்கின்றார்.

தெனியான் அவர்கள் தன் அணிந்துரையில் குறிப்பிட்டவாறு இக் கவிதைத்தொகுதி ஈழத்துக் கவிதை இலக்கியத்தில் இவர் பெயர் பொதித்து , அவரைத் தொடர்ந்தெழுத ஊக்குவிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தலைப்பைக் கண்ணுற்றதும் அனைத்துக் கவிதைகளிலும் யுத்த வாடை வீசும் எனும் எண்ண வார்ப்புடனேயே இதழ்களைப் புரட்டத் தொடங்கினேன்...

ஆனால் பல கருப்பொருட்களும் அவற்றினை அடையாளப்படுத்தும் தலைப்புக்களுமாக கவிதைகள் சிதறிக் கிடக்கின்றன. இப் பரிமாண விசாலிப்பு கவிதைத் தொகுதியின் சிறப்பாகி எம் மனதையும் நிறைத்து நிற்கின்றது........

ஏழ்மை, சாதியொழிப்பு, பொய்மை, உறவுகள், ஏக்கங்கள் , எதிர்பார்ப்புக்கள், யுத்தம் என நீளும் உணர்ச்சிச் சிதறல்கள் அழகான தமிழ்க் கட்டுக்குள் அடுக்கப்பட்டு, யாவரும் புரிந்து கொள்ளும் விதமாக பகிரப்பட்டுள்ளன. அவ்வவ்போது வார்த்தைகளில் யாழ் மண்ணின் வாசமும் கலந்து வருவது கூட சிறப்பே!

தினபதி, யாதும், வீரகேசரி, மல்லிகை, தினக்குரல்,ஞானம்,ஐீவநதி, நீங்களும் எழுதலாம், பொறிகள், தினகரன், அக்னி என்பவற்றில் வெளிவந்த இவரது கவிதைகள் "மீண்டு வந்த நாட்கள்" கவித்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவரது முப்பத்தெட்டு வருட புதுக்கவியாக்கத்தின் ஆளுமைச் செழுமையை பறைசாற்றும் விதமாக முப்பத்தொன்பது கவிதைகளும், பத்தொன்பது துளிக்கவிதைகளும், ஐந்து மெல்லிசைப்பாடல்களும் இக் கவித்தொகுப்பில் உட்பதிக்கப்பட்டு நம்முள் அழகாய், அர்த்தத்தோடு சிரிக்கின்றன...


யுத்தமானது நிமிடங்களை யுகங்களாக மாற்றக்கூடியது. ஒவ்வொருவரினதும் வாழ்வியல் அனுபவங்களை , கவிஞர்களும் தம் பேனா முனைக்குள் ஏந்தும் போது முரண்பாடு காணாத கருத்தியல்கள் ஒத்துப்போய் இலக்கியத்தில் உயிர்ப்புத்தன்மையை தக்க வைக்கின்றது.


தேசம் தொலைத்து நேசம் துறந்து செல்லும் ஆயிரமாயிரம் இதயங்களைச் சுமந்தவாறே மனப்புகையைக் கக்கிச் செல்லும் "அந்த ரயில் போகிறது" எனும் தொடக்க கவிதையே என் நெஞ்சை நிறைத்து நிற்கின்றது..

ஒவ்வொருவரும் தன் பிறப்பிடம் விரட்டப்படும் போது அவிழ்க்கப்படாத சோகங்களும், நிறைவேற்றப்பட முடியாத எதிர்பார்ப்புக்களும் ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றன..அவ்வாறான மனத்திரைக்குள் மௌனித்துக் கிடக்கும் ஊமைக்காயங்களை "மனத்திரைக்குள்" உணர்த்துகின்றது..

சேரியின் சகதி வாழ்வை "பாதை" யும், "முற்றத்து மல்லிகை" யின் அழகில் கிறங்கிக் கிடக்கும் உவமைச் செழுமையும், அடிமைத்தனத்தை அறுத்தெறியும் முனைப்புடன் களமிறங்கிய நயினாரை "புதிய கதை பிறக்கிறது" கவிதையிலும் , "போலிகளை இங்கு தேடுது பார்" கவிதையில் வேஷமிடும் மனிதர்களின் முகமூடிகளையும் கவிஞர் நமக்கு அழகாகத் தொட்டுக் காட்டுகின்றார்.

ஒவ்வொரு ஜீவனின் உற்பத்தியில் தாய்மைப் பற்றோடு மடி தரும் பூமியே பிறப்பிடமாகும். ஷெல்லடி உறிஞ்சிய ஊர் வனப்பையும், சிதைவையும் "சாவு வந்ததே "கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது."எலும்புக்கூடாய் செத்துக்கிடக்கும் சந்தை" எனும் வரிகள் முழுச் சிதைவின் மொத்தவுருவாய் நம்முன் வீழ்ந்து கிடக்கின்றது..

அவ்வவ்போது மனதுக்குள் ஒத்திகை பார்க்கப்படும் உள்ளத்தாசைகளை நிறைவு செய்ய காத்திருக்கும் எதிர்பார்ப்பு  "வள்ளம் வர வேண்டும் " எனும் கவிதையிலும், "முளையிலே கிள்ளல்" மூலம் நாளைய வரலாறு நசுக்கப்பட்ட துயரத்தையும் கவிஞர் நம் முன்னால் யதார்த்தம் சிதையாமல் நிலைநிறுத்துகின்றார்.

"இயல்பு நிலை", "கையடக்க தொலைபேசி", "உள்ளக்குமுறல்" , "புரியாமையும் புரியும்", "நயந்துரை", எனது ஆல்பம்" இக்கவிதைகள் ஒவ்வொன்றும் புலப்படுத்தும் உணர்வுகள் மனதை இறுக்கிக் கௌவிப்பிடித்து, கவிஞரின் சொல்லாடல், வரி வார்ப்பின் அழகு என்பவற்றை நமக்குள் உணர்த்தி நிற்கின்றது.

புலப்பெயர்வென்பது மறுக்கமுடியாத தேவையாகி விட்ட இன்றைய காலப் பொழுதில், ஒவ்வொருவரினதும் அந்தரிப்புக்களை "புலம் பெயர்ந்தவனின் கடிதம்" வாசித்துச் சொல்கின்றது..

இவ்வாறு இங்கு பதிவாகியுள்ள ஒவ்வொரு கவிதைகளும்  கவிஞரின் கவித்துவ செழுமையைப் பறை சாட்டிக் கொண்டிருக்கின்றதென்றால் மிகையில்லை.

மெல்லிசைப்பாடல்களின் வரிகளோ சங்கீத சந்தத்துடன் இசையேதுமின்றி நம் செவிக்குள் இனிய பாடலை நுழைத்துத் தரும் பிரமிப்போடு நம்முள் கரைந்து கிடக்கின்றன.

இக் கவிதைத் தொகுப்பின் ஈற்றுப்பக்கங்களில் "வதிரி ரவி நேச நினைவுகள்" எனும் தலைப்பில் அவரின் கலையுலகோடு சங்கமித்திருந்த கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் நாற்பது வருட கால இலக்கிய சில நினைவுகளை மீட்டுகின்றார்....வதிரி சேர் அவர்கள் கவிஞராக, எழுத்தாளராக மட்டுமல்ல நல்ல நடிகராக, விளையாட்டு வீரராக, நகைச்சுவையாளராக  வகித்த வகிபாகங்களையும் நாமறியச் செய்கின்றார்.........

விவாக பதிவாளராக தொழிலாற்றும் அவரின் மறுபுறத்தில் கலைகளின் விளைநிலம் பெரிஞ்செல்வாகி அவர் பெயர், புகழை நாற்றிசையிலும் பரப்பிக்கொண்டிருக்கின்றது.

வதிரி சேரின் எண்ண வார்ப்புக்கள் எக்காலமும் பொருந்திக் கிடப்பதே அவரது இந்தக் கவித்துவத்தின் வெற்றியாக நான் கருதுகின்றேன்.

"மீண்டு வந்த நாட்கள்" ........!
நாம் மெச்சுகின்ற நாட்கள் !!

அவரது முதல் தொகுப்பே நம் மனதில் மானசிக நிறைவைத் தந்து நிற்கின்றது வாசிப்பின் இறுதியில்..!

இன்னும் அவர் பல தொகுதிகள் வெளியிட வாழ்த்துகின்றேன்....

அவரின் கையெழுத்துடன் கூடிய (06.08.2011) அவரது கவித்தொகுப்பை எனக்கும் அனுப்பி வைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்...................





- Jancy Caffoor -




2012/06/09

அடையாளம்

சஞ்சிகை விமர்சனம்
-----------------------------



ஒரு மனிதரின் அல்லது (பிர) தேசத்தின் தனித்தன்மையைச் சிறப்பிக்கும் அடையாளங்கள் பல காணப்படும். அந்த வகையில் இலங்கையின் வடமத்தியில் அமைந்துள்ள அநுராதபுரத்தின் கல்விச்சிறப்பையும் அதன் சாதனைகளையும் தகவல்களாகவும் தரவுகளாகவும் முனைப்போடு வெளிப்படுத்தும் விதத்தில் "அடையாளம் " எனும் அநுராதபுரப் பிராந்தியம் சார் கல்விச்செய்திகளை தன்னகத்துள் அடக்கும் சஞ்சிகையொன்று மே மாதம் முதல் தன் பிரசவிப்பை முன்வைத்துள்ளது. அடையாளம் சஞ்சிகை யின் விலை 10 ரூபா மாத்திரமே!

இதன் ஆசிரியர்களாக எம் .சி. சபூர்தீனும், துணையாசிரியராக ஏ.ஏ.பஸானும் செயற்படுகின்றனர். இது படிகள் பதிப்பகத்தின் வெளியீடாகும்.

அநுராதபுர மாவட்டத்தின் கல்வி சாரா செய்திகளைப் பகிரவும் , மாகாண, வலய கல்விக்காரியாலங்களின் செயற்பாடுகளை ஆவணப்படுத்தவும் பாடசாலைகளின் வரலாறு ,சாதனைகளை ஆவணப்படுத்தவுமே இவ் அடையாளம் தன் முகம் காட்டுகின்றது என ஆசிரியர் உரை சுட்டிக்காட்டுகின்றது.

அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் இன்றைய கல்விநிலை எனும் தலைப்பில் இம் மாவட்ட கல்விநிலை தொடர்பான பார்வை செலுத்தல் முதல் ஆக்கமாக எட்டிப் பார்க்கின்றது.

வடமத்திய மாகாண கல்விப் பணிமனையின் தமிழ்ப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஈ. பீர்முஹம்மட் அவர்களின் செவ்வியொன்றும் இங்கே தரப்பட்டுள்ளது. " அநுராதபுரம் மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்கள் சிறந்த அடைவுகளைப் பெற்று பெருமை சேர்க்கின்றனர் " எனும் தலைப்பினாலான அச் செவ்வி மூலம் பல தரப்பட்டுள்ள பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

மேலும் அநுராதபுரம் சுதந்திர இயக்கத்தின் இரத்த தான நிகழ்வு,  அல்- இஸ்லாஹ் முன்பள்ளி நிலையத்தின் விளையாட்டுப் போட்டி, உள்ளிட்ட நாச்சியாதீவு, ஹொரவபொதான, கஹடகஸ்திகிலிய பிரதேசங்களின் கல்வி அபிவிருத்தி சார் பிராந்திய செய்திகள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மின்னும் தாரகைகள் எனும் மகுடத்தின் கீழ் கற்றல் உலகோடு தொடர்புடைய இரண்டு சர்வதேச செய்திகள் தரப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அநுராதபுர மாவட்ட செய்திகளை இப் பக்கத்திற்காக ஒதுக்குவது சிறப்பாக இருக்கும். ஏனெனில் பத்திரிகைத் தலைப்பிற்கும் இதற்கும் பொருத்தப்பாடின்மை காணப்படுவதாக நான் எண்ணுகின்றேன்.

அநுராதபுர மாவட்டத்தில் விஞ்ஞானக் கல்லூரியொன்றை உருவாக்கும் முயற்சி தொடர்பான செய்தியின் அடிக்கோட்டின் கீழ் விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சி தொடர்பாக கண்ணோட்டம் செலுத்தப்பட்டுள்ளது.

பின்புற அட்டையானது கடந்த வருட கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைப் பெறுபேற்றின் வீதங்களைச் சுட்டிக்காட்டும் ஆய்வுப் பார்வையும் மாவட்ட சிறந்த சாதனை படைத்த மாணவர்களையும் தாங்கி நிற்கின்றது

இவ் அடையாள சஞ்சிகையின் சிந்தனையாக பெற்றோர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. " ஞாயிறு தினங்களில் நடைபெறும் டியூஷன்களை நிறுத்தி அஹதிய்யா பாடசாலை போன்ற மதக் கல்வி பெற மாணவர்களுக்கு வழி விடுங்கள் என்ற முன்வைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது உரியவர்கள் செவிகளை எட்டுமா......காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....

எட்டுப் பக்கங்களைக் கொண்ட சஞ்சிகையாக அடையாளம் இருந்தாலும் காத்திரமான தகவல்களோடு அது தன்னை இனங்காட்டுகின்றது. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி இன்னும் மெருகூட்டப்படும் என நம்பலாம் !
வாழ்த்துக்கள் !

- Jancy Caffoor -

2012/06/06

"வேர் அறுதலின் வலி" - விமர்சனப் பார்வை!


(கவிதைத் தொகுப்பு நூல் விமர்சனம்)
----------------------------------------------------

இலக்கியங்கள் காலத்தை வென்றும், நின்றும் பேசப்படக்கூடியவை. அவை வாழ்வியல் அனுபவங்களுடன் ஒன்றித்து நிற்கும் போதே மேற்கூறிய யதார்த்தம் மெய்ப்படுகின்றது. வேர் அறுதலின் வலியும் இக் கட்டுக்கோப்புக்குள் தன்னைத் தொட்டு நிற்கின்றது.

"வேர் அறுதலின் வலி"

இது தாயகத்தின் இருப்பை வலுக்கட்டாயமாகப் பறித்தெடுத்த ஓர் சமூகத்தின் வலி! 1990 ஒக்டோபர் 30 ந்திகதி 2 மணி நேரத்தில் தம் பாரம்பரிய பூமியிலிருந்து விடுதலைப்புலிகளால் பலாத்காரமாக விரட்டியடிக்கப்பட்டு இன்னும் அகதி வாழ்விலிருந்து மீளமுடியாத சோகத்தில் புரண்டு கொண்டிருக்கும் எம் சமூகத்தின் கண்ணீர்.....அவலம்!

எம்மவர்களின் அவலம் வெளியுலகிற்குள் அதிகளவில் பரவிக்கிடக்காத சூழ்நிலையில் யாழ் முஸ்லிம் இணையத்தளம் அந்த சோகங்களின் பிரதிபலிப்புக்களை உலகறியச் செய்வதில் வெற்றி கண்டது. அந்த வெற்றியின் ஓர் அடையாளமாக இக் கவித் தொகுப்பினைக் கருதலாம். இவ் வெற்றியின் பின்புலமாகச் செயற்பட்ட சகோதரர் அன்ஸிரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு வீணாக கழிந்து விட்ட 21 ஆண்டின் நிறைவாக நடத்திய கவிதைப் போட்டிக்காக குவிக்கப்பட்ட மன உணர்வுகளின் சங்கமிப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 55 கவிதைகள் "வேர் அறுதலின் வலி" யுடன் சங்கமித்துக் கிடக்கின்றது.
                     
 யாழின் மகுடங்களாக உயர்ந்து கிடப்பவை பனை மரங்களே...அந்தப் பிண்ணனியை புலப்படுத்தும் பனைமரங்களுடன் கூடிய முகப்பட்டை.................அழகான தலைப்பு!

உள்ளே இருக்கக்கூடிய கனாதியான கவிதைகளை நம் எதிர்பார்ப்பில் வீழ்த்தக்கூடியதாக இக் கவித்தொகுப்பு காணப்படுகின்றது.
சொந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்ட மனித ஆத்மாக்களுக்காக, அவ் ஆத்மாக்களின் பிரதிபலிப்புக்களாக விளங்கும் இக்கவிதைகளை யாழ் முஸ்லிம் இணையத்தளம் 1990ல் விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளது.

 ஈழத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்விலும், வரலாற்றிலும் அதிக அக்கறையுள்ளவர் கவிஞர் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் அவர்கள்.அவர்களின் முன்னுரையோடு இக் கவித்தொகுப்பு பயணிக்க ஆரம்பிக்கின்றது. ஜெயபாலன் அவர்களின் முன்னுரையில் "இம் மக்களின் துன்பத்திற்கான பிரயாச்சித்தம் மேற்கொள்ளப்படவேண்டுமென்ற "ஆதங்கம் இழையோடிக் கிடக்கின்றது.

"பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளியிட சிறந்த சாதனம் கவிதைகளாகும்" என ஆசிரியரும் எழுத்தாளருமான எம்.எஸ்.ஏ.ரஹீம் ஆசிரியர் அவர்கள் தனது ஆசிச் செய்தியினூடாக இக் கவிப்பயணத்தின் நகர்வுக்கு கையசைக்கின்றார்.
                        தனித்து துணிந்தியங்கி யாழ் முஸ்லிம்களின் இருட்டடிக்கப்பட்ட வாழ்வை உலகின் கண்முன் நிறுத்திக் கொண்டிருக்கும் அன்ஸிரின் இம் முயற்சிக்கான பாராட்டுக்கள் அல்ஹாஜ் எம் .எம். குத்தூஸ் (முன்னாள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர்) அவர்களின் ஆசியுரையோடு கலந்துள்ளது.

அவ்வாறே இவ் வேர் அறுதலின் வலியின் பிரசவம் பற்றி சகோதரர் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் தனது அணிந்துரையில் மனந் திறந்து பேசுகின்றார். நம் உள்ளத்தையும் தொட்டு நிற்கின்றார்.

  "கறைபடிந்த வரலாற்றை கண்ணீரால் வாசிக்கும்"  கிண்ணியா ஏ.எம்.எம்.அலி அவர்களின் வேதனையின் வருடல்களோடு இக் கவிதைத் தொகுதியின் கவிப்பயணம் நடைபோட ஆரம்பிக்கின்றது.

                                                     இரண்டாவது கவிதை அநுராதபுரம் ஜன்ஸி கபூரின் "பிறப்பிட நிழலிலே" முகங் காட்டி நிற்கின்றது. பல வருடங்கள் கழிந்தாலும் கூட மறக்கப்பட முடியாத ஞாபகங்களும், வலி தரும் ரணங்களும் இக் கவிதையாய் நிமிர்ந்து நிற்கின்றன.

 ஈர் தசாப்தம் உதிர்ந்தாலும் கூட அன்றைய ஞாபகப் பொழுதுகளின் ஈரம் இன்னும் உலர்த்தப்படாத தன்மையை சகல கவிதைகளும் தொட்டு நிற்கின்றன. வயதின் ஏற்றங்களோ, கவித்துவ அந்தஸ்தோ மன உணர்வுகளைப் பாட இங்கே தடையாகவில்லை..ஒருவரின் மனவெளிப்பாடுகள் எவ்வித திருத்தமின்றி அவர் குரலாகவே ஒலிப்பது இங்கே சிறப்பு.ஏனெனில் செம்மைப்படுத்தலுக்காக அரிதாரம் பூசும் போது அவர் அனுபவித்த அனுபவங்கள் தம் எடையைக் குறைக்கின்றன.ஏனெனில் ஒருவர் தன் அனுபவங்களை தான் மாத்திரமே உணரலாம் அனுபவிக்கலாம்.

தத்தமது கவித்திறமைக்கேற்ப பேனாக்கள் புதுக்கவிதைகளாகவோ, மரபுக் கவிதைகளாகவோ பேசுகின்றன இவ்விதழில்! சில கவிஞர்கள் தம் தலைப்புக்களை சுருக்கமாக, அழகாக வைத்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. பத்திற்குமேற்பட்ட கவித்தலைப்புக்கள் சற்று நீளமாக காணப்பட்டன. இருந்தும் அவற்றின் கவியடக்கம் தன் கனதியைக் குறைக்கவில்லை......

ஒவ்வொரு கவிதைகளின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப எழுத்துக்களின் வடிவம் மாற்றப்பட்டிருப்பது கூட சிறப்பே! இந்தக் கவிதைகளுக்குப் பொருத்தமான சித்திரங்களை இணைத்திருப்பின் அதன் அழகு மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும் என்பதை என் பார்வை எனக்குள் தொட்டுச் சொல்கின்றது. ஏனெனில் ஏனைய கவிதைப் பக்கங்களை விட "கண்ணீர் கரையும் " எனும் கவிப்பக்கத்தின் ஈர்ப்பில் விழி இன்னும் மொய்த்துக் கிடக்கின்றது அந்த விழியின் சித்திரத்தில் ஈர்க்கப்பட்டு!

கண்ணீரின் ஏக்கத்துடன் தொடங்கப்பட்ட இக் கவிப்பயணம் கடைசியில் "வசந்த காலம் வருமோ, வாழ்வின் நிலை மாறுமோ" எனும் கவியோடு முற்றுப் பெறுகின்றது..வசந்தத்திற்கான ஏக்கம் ஒவ்வொரு மனங்களின் எதிர்பார்ப்பாக ஊடுறுவிக் கிடப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஐம்பத்தைந்து பேரின் எண்ண வார்ப்புக்கள் இவை...எனவே ஒவ்வொரு கவி தொடர்பான பார்வையை நுணுக்கமாக படரவிட முடியவில்லை..இருந்தும் ஒரு சொல்லில் சொல்வதாயின் இவை யாவும் காலத்தை வென்றும் நின்றும் பேசப்படக்கூடியவை..இங்கு பதிவிட்டவர்கள் யாவரும் கவிப்புலமையில் வென்றவர்கள் அல்லர் என்பதால் சிற்சில இடங்களில் கவி வார்ப்புக்களில் சற்றுத் தொய்வு காணப்படுகின்றது. எனினும் அவை குறைகள் அல்ல......பிரமிப்பூட்டக்கூடிய வியப்புக்கள்...எங்கள் சமுகத்தின் இலக்கிய வார்ப்புக்கள் அவை.........அவை தலை காட்ட முயற்சிக்கும் போது விமர்சனங்களால் அவற்றை வேரறுப்பது தகுந்ததல்ல.

                   கவித் தொகுப்பட்டையின் பின்புறம் கவிஞர் அல்லாமா இக்பால் சிரிக்கின்றார்.அவர் புன்னகைச் சிந்தலின் ஓர் துளியிது,,,,

"நித்திய வாழ்க்கை நீ வாழ விரும்பின்
உன் இறந்த காலத்தை
நிகழ்காலத்திலிருந்தும்
எதிர்காலத்திலிருந்தும் துண்டித்து விடாதே"

                  ஆம் கடந்த காலங்களில் நாம் பெற்ற கசப்பான அனுபவங்களிலிருந்து, மீண்டும் நமக்கான வசந்தத்தை தேடிப் பயணிப்பதற்கான பாதையை நம்பிக்கையோடு வகுப்போம் எனும் எதிர்வுகூறலாய் அது அமைந்துள்ளது.

 " வேர் அறுதலின் வலி" யாழ் முஸ்லிம்களின் அவலங்களை, அனுபவங்களை, நம்பிக்கைகளை , வாழ்வியலை சேமித்து வைத்திருக்கும் சிறந்த ஆவணம். இம் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துள்ள யாழ் இணையத்தளம் சகோரர் அன்ஸிருக்கு மீண்டும் என் நன்றி உரித்தாகட்டும்!

சகதிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எம் சமுகத்தின் சோர்வை உதறி நம்பிக்கைதனை வார்த்து அவர்களின் விடியலுக்காய் கொடி பிடிக்கும் நல்ல உள்ளங்கள் இன்னும் இன்னும் தம்மை வெளிப்படுத்த வேண்டும்.

போனது போகட்டும் இனி நாம் பயணிக்கவுள்ள நற்பாதையில் இறைவனின் துணையுடன் வசந்தங்கள் வந்தமரட்டும். அல்லல் வாழ்விலிருந்து துகிலுரிக்கப்பட்டு எம் மனங்களின் அமைதி நிறைக்கட்டும் !!

எனக்கு யாழ் முஸ்லிம் இணையத்தளம் வழங்கிய விருது
தருபவர் அமைச்சர் ரிசாட் பதியூத்தின் அவர்கள்




நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதிகள்