About Me

2020/08/22

ஆக்கந்தருமே அனுபவம்

முரண்பாடுகளின் முடிச்சினில் உடன்பாடுகள் எழுந்திடுமே/

முகங்காட்டும் பிரச்சினைகளைத் தீர்த்திடுமே அனுபவமும்/

புலன்களைத் தூண்டிவிடும் காட்சிகளே கருத்தாகும்/

புளாங்கிதத்தில் புத்தாக்கமும் புதுப்பாதைக்கு வழிகாட்டிடும்/


வெறும் ஏட்டறிவும் வெடித்தெழுமே அறியாமையாய்/

பெறுவோம் ஆற்றல்களை செயல்களுடன் கற்றே/

கற்றலில் ஐம்புலன்களும் தொடுகையினில் நீண்டால்/

வெற்றி வாழ்வும் ஆக்கங்களுடன் மலர்ந்திடுமே/


ஜன்ஸி கபூர்


ஹைக்கூ - 4

உதிர்கின்ற சருகு

உரமாகின்றது தாய் பூமிக்கு

பாசத்தின் வெளிப்பாடு


ஜன்ஸி கபூர்

2020/08/21

தொடர் கவிதைப் போட்டி - 02

ஊர்மெச்ச வாழ்ந்திடும் வாழ்வில் இன்பம்//

பேர் சொல்லும் வையகமும் என்றும்// 

சோர்ந்திடாத உழைப்பின் வலிமையே வெல்லும்//

சோகமும் சூழ்ந்திடாதே நெஞ்சமும் வருந்த//


ஜன்ஸி கபூர் - 21.08.2020



2020/08/19

உரிமைக்குரல்

இணையத்தின் பிணைப்பில் உறவுகள்

இணையாத சமாந்தரங்களாய் நகர்வுகள்

இதயங்களுக்கிடையில் ஏனோ மௌனம்

இம்சிக்கிறதே அன்பும் அமைதியாகி

இனசனம் அருகிருந்தும் அனாதையாய் 

இடைவெளி நீள்கின்றதே வலியினில்

இளைஞர்களின் எதிர்காலம் இலக்கின்றி

இன்பமோ கண்ணுக்கெட்டா தொலைவினில்

இன்னுமேனோ தாமதம் நமக்குள்

இணைந்திடுவோம் மனங்களும் விழிப்புணர்வுடன்


ஜன்ஸி கபூர் - 19.08.2020


குறிஞ்சி மலரே

 

குறிஞ்சி மலரின் தாய்மடியோ மலையும்/

மலையும் கலை வடிக்கும் பெருமிதத்தில்/

பெருமிதத்தில் குறிஞ்சித் திணை காவியமாகும்/

காவியமாகும் நீலகிரியும் பேரழகு மலர்களால்/


மலர்களால் காதலில் அலையும் தேனீக்களும்/

தேனீக்களும் சுமந்திடும் தேனையும் ருசித்தேன்/

ருசித்தேன் நானும் மலர்களின் வண்ணங்களை/

வண்ணங்களை ரசிக்கையில் மனதும் பரவசத்தில்/


பரவசத்தில் விழிகளும் ஏங்கிடுதே வருகைக்கு/

வருகைக்கு காத்திருப்பேனோ ஈராறு வருடங்கள்/

வருடங்கள் நீள்கையில் தவிப்பும் துடிப்போடு/

துடிப்போடு காத்திருக்கிறேன் மலர்ச்சியினில் குறிஞ்சி/


ஜன்ஸி கபூர்

2020/08/18

உடனடி நிவாரணம்

முடக்கு அறுக்கும் முடக்கொத்தான் நமக்கே

முடக்காதே வாழ்வினை நோயினில் வீழ்த்தி

அடங்கும் நரம்பின் பலகீனம் விரைந்தே

உடம்பின் வலியும் உடனடி கரையும்

படரும் தோல் வியாதியும் மறைந்திடும்

உடனடி நிவாரணமே தந்திடும் மூலிகையே

 

ஜன்ஸி கபூர்  


இயற்கை வரங்கள்

மரங்கள் இயற்கை பெற்ற வரங்களே/

உரங்கள் தானே மண்ணும் செழிக்கவே/

கரமது கொடுப்போம் சூழலும் உயிர்க்கவே/

சிரமும் தாழ்த்தி வளர்த்திடுவோம் வையகத்தினில்/


ஜன்ஸி கபூர் - 18.08.2020



2020/08/17

கையளவு மனசு

கையளவு மனசுக்குள்ளே அடங்கக்கூடிய ஆசைகளே/
நம்பிக்கையான எதிர்காலம்
நமதாகும் என்றும் /
நிலையற்ற வாழ்வுக்குள்ளே அலைகின்ற ஆசைகள்/
கலைத்திடுமே நிம்மதியை புத்தரும் சொன்னாரே/
அன்பில் மனமிருந்தால் ஆரத்தழுவிடும் உறவுகளே/
இன்ப வெளிக்குள் ஈகையையும் நனைத்திடுமே/
உள்ளப் புரிந்துணர்வால் ஊரும் அணைத்திடவே/
எண்ணத்தின் சிறப்பினிலே ஏற்றமாகும் எதிர்காலம்/
தாவியோடும் மனதுக்குள்ளே
தவிப்புக்களைச் சுமக்காது/
மேவியே வாழ்ந்திடலாம் நிலையற்ற வாழ்வினில்/
ஜன்ஸி கபூர் - 17.08.2020
யாழ்ப்பாணம்

 

எனை மீட்டும் காதலே

 சலனப்படாத இரவின் மடியும் உயிர்க்கிறது

சந்தோஷம் பிழிந்தூற்றும் உந்தன் அன்பினாலே

சத்தம் மொழியாத விழித் துடிப்புக்குள்ளே

முத்தம் மறைக்கிறாய் முழுதாய் நனைகிறேன்


வெட்க மடிப்புக்குள் உனைச் சுற்றியே

கட்டியணைக்கிறாய் காதலும் சுவையில் மயங்கவே 

சிட்டின் சிறைக்குள்ளே உயிர்த்திடும் மெட்டுக்குள்ளே

தொட்டுக் கொள்ளவா தொடர்ந்திடவா உனக்குள்


கருவிழி ஜாடையினில்  கலந்திட்ட நிழலே

பருவத்தின் எழிலில் நினைவுகள் மோதிட

இரு உயிர்களும் துடிக்குதடி மௌனத்தில்

அருகினில் நீயென்றால் ஆயுளும் நீளுமடி


எனை மீட்டும் காதலே வா

ஏங்க வைத்தே அருட்டுகின்றாய் உணர்வுகளை

மங்காத அன்போடு வாழ்வுக்குள் நாமிணைய

தூங்காமல் காத்திருக்கிறேன் இசையாகி வந்துவிடு


ஜன்ஸி கபூர் 

 

உறங்காத நினைவுகள்

துயில் கொண்டேன் நீள்கிறாய் கனவாகி

துரத்துகின்றாய் நினைவுகளில் இன்பம் வழிந்தோட

துள்ளும் உள்ளமோ கள்ளுறும் உன்னன்பில்

துணையாகி தித்திக்கிறதே காதல் தேசத்தினில்  


ஜன்ஸி கபூர் 



2020/08/16

தெய்வீக உறவு

கதவோரம் சாய்ந்து காத்திருக்கும் விழியினில்/

கண்ணாளன் நினைவு ஒட்டியிருக்கு பார்வையாக/

கருத்தோடு இசைந்தே கனிந்த இல்லறத்தில்/

கறையில்லாக் காதலும் ஆயுளுடன் நீளுமே/


தளர்ந்த மேனியில் தொய்வில்லா அன்பும்/

தள்ளாடும் நடையினில் உள்ளத்துப் புரிந்துணர்வும்/

தன் னிழலுக்குள் ஈர்த்திடும் பிணைப்பும்/

தலைமுறை அருகிருக்க தளிர்க்கிறதே குறைவுமின்றி/


இருமனம் கலந்திடும் திருமண வாழ்வும்/

விரும்பிடுமே நல்லறமாக காலமெல்லாம் வாழ்வதற்கே/

அரும்பிடும் விட்டுக்கொடுப்பால் பற்றிடும் உறவும்/

கரும்புச் சுவையினில் மாங்கல்யம் நனைத்திடுமே/


நரையின் திரைக்குள்ளும் இழந்திடாப் பரிவு/

நாடித் துடிப்புடன் குலாவியே அலைந்திடும்/

முரண்படா நெஞ்சத்தின் முதுமைக் காதல்/

முழுதாய் நனைந்திடுமே தெய்வீக உறவுக்குள்/


ஜன்ஸி கபூர் 


 

    •  


ஹைக்கூ - 3

 மஞ்சள் வயல்

விளைந்து கிடக்கிறது நெல்மணி

விலைவாசி


ஜன்ஸி கபூர் - 16.08.2020

யாழ்ப்பாணம்


 

ஹைக்கூ - 2

மஞ்சள் தெளிக்கிறது/

அதிகாலை கிழக்கு வானம்/

சுமங்கலிப் பெண்/


ஜன்ஸி கபூர் - 16.08.2020

யாழ்ப்பாணம்



ஹைக்கூ - 1

குதூகலிக்கிறான் சிறுவன்/

காற்றில் அசைகிறது தேசியகொடி/

நாட்டின் எதிர்காலம்/


ஜன்ஸி கபூர் 

 

ஊசலாடும் வாழ்க்கை

ஆயிரம் விழிகள் ஆச்சரியத்தில் விரிய/

அந்தரத்தில் ஆடுதே வாழ்வின் அவலம்/

உதரப் பசியின் துடிப்புக்களை அடக்க/

உயரத்தில் அலையுதே நாடித் துடிப்பும்/


கயிற்றுப் பயணத்தில் உயிரும் இணைய/

கரையும் துன்பத்தில் வறுமையும் நனையும்/

தலையில் கரகம் தன்னம்பிக்கையில் மனம்/

உலையும் வெந்திட உழைக்கும் வாழ்விது/


ஜன்ஸி கபூர் 

சுதந்திரம் என்பது

சுதந்திரம் என்பது நமக்கான அங்கீகாரம்/

சுபீட்சமான வாழ்வுக்கான கட்டுப்பாடற்ற நகர்வு/

பிறர் உணர்வுகளை மதிக்கும் சமத்துவத்தால் /

திறக்கின்றன நமக்குமான உரிமைத் தளம்/


வாழுகின்ற சூழலுக்குள் ஒத்திசைவு கண்டாலே/

பாழும் துன்பந்தான் உறுத்தாதே மனதினில்/

அடிபணியும் இழுக்கும் அறுத்தே தன்மானத்துடன்/

அகிலத்தில் வாழ வேண்டுமே சுதந்திரம்தான்/


ஜன்ஸி கபூர்

சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்

வரங்களாய் பெற்றிட்ட வனங்கள் யாவுமே/

மரங்களைக் காத்தே மண்வளம் உயர்த்திடும்/

இறந்திட்ட இலைகளும் இயற்கையைக் காத்திட/

பறந்திடும் மாசும் பசுமையும் உயிர்க்கும்; /

சுற்றுச் சூழலும் சுகமுறும்/

பெற்றிடும் நன்மை பெருமிதமும் நமக்கே /


ஜன்ஸி கபூர்  

 

---------------------------------------------------------------------

சுற்றுச் சூழல் சுத்தம் பேணுவோம்/

தொற்றும் மாசும் தொற்றிடா திருக்க/

வரங்கள் நமக்கு வந்தூற்றும் மழை/

மரங்கள் வளர்த்து மண்ணைக் காப்போம்/

சுற்றம் வாழும் சுகமாக/

பற்றுடன் இசைந்து பசுமை வளர்ப்போமே/