About Me

2019/06/28

முரண்பாடுகள்

Image result for முரண்பாடுகள்

பன்மைச் சூழலில் பல்வேறு இனங்கள் வாழும் போது அவர்களுக்கிடையில் ஏற்படக் கூடிய சிறு சிறு பிரச்சினைகள் பாரிய அழுத்தம் தரக்கடிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லெண்ணம், ஒற்றுமை, நம்பிக்கை குறைவடையும் போது முரண்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறுகின்றன. பாதிக்கப்படும் சமூகம் அடுத்த சமூகங்களின் விமர்சனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத நிகழ்வாகியுள்ளது. ஒருவரின் பலம், மற்றையவரின் பலகீனத்தை தீர்மானிக்கிறது. பாதிக்கப்படும் சமூகத்தின் கஷ்டங்களும், நஷ்டங்களும், துன்பங்களும் மற்றைய சமூகத்தின் ரசிப்பாகி போய் விடுகிறது. சந்தேகங்கள் தொடரும் போது சந்தோசங்கள் ஓடிப் போய் விடுகிறது. 

அந்த வகையில் அண்மைக் காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட அழுத்தங்களும், சவால்களும் இன்னும் முற்றுப் பெறாத பனித் தூறல்களாகவே  உள்ளன. அப்பின்னனியில் இன்று (28.06.2019)  நான் சந்தித்த இந்த அனுபவத்தையும்  பதிவிடுகிறேன்.

பணம் வைப்பில் இடுவதற்காக ................ வங்கி சென்றேன். வழமை போலவே படிவங்களையும் நிரப்பியவாறு, கவுண்டரில் வரிசையாக நின்று கொண்டிருந்தேன்.  அப்போது வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் என்னைத் தேடி வந்ததும்  எரிந்து விழுந்தார்.

"உங்களுக்கு தெரியாதா?  இங்கு கேமரா இருக்குது. தலையில் மூடி இருக்கும் சீலையைக்  கழட்டுங்கள்" என்றார்.

நான் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம்  எதுவும் கதைக்கவில்லை. "எய்தவர் யாரோ இருக்க அம்பை நோவானேன்". மனம்  கொதிநிலையில் வெந்து கொண்டிருந்தது. என் கோபத்தின் அலைவை நின்று கொண்டிருந்த அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்திடரிடம் வெளிப்படுத்தாமல், வரிசையில் இருந்து நகர்ந்தேன். என் கால்கள் வங்கி முகாமையாளர் அறையில் போய் நின்றன. அவர் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அழைக்கும் வரை பொறுமையாய் காத்து நின்றேன். 

அவர் என்னை அழைத்ததும் உட்காரச் சொன்னார். என்னை அறிமுகப்படுத்தியவாறே நடந்ததைக் கூறி   முஸ்லீம் பெண்கள் வங்கிக்கு வரும் போது தலையில் முக்காடு போடக் கூடாதா Sir?  அப்படி ஏதும்  சுற்று நிருபம்  இருக்கின்றதா? என்றேன்.  மானேஜர் அதிர்ந்தவாறே, 

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்களுக்கு யார் சொன்னது?"

என்றவாறு அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தேடி வெளியே சென்றார். நானும் அந்த பாதுகாப்பு அதிகாரியை காட்டினேன். வங்கி முகாமையாளர் அந்த ஆளைப் பெயர் சொல்லி அழைத்தார். அந்த நபர் ரூமுக்கு வந்ததும் என் முன்னிலையில் நடந்ததை விசாரித்தார்.

 "அவ முகத்தை மூடியா  வந்திருக்கிறார். முகம் தெளிவாத் தெரியுதுதானே?  எத்தனை தடவை விளக்கி சொல்லியும் இப்படி இருக்கிறீர்.  இனி இப்படி செய்தால் உம்மை இங்கே வைத்திருக்க மாட்டேன்"

 என்று  சற்றுக் கடுமையாக நியாயத்தின் பக்கம் நின்று பேசினார். ஏசினார். முகாமையாளர் தொனி உயர்ந்ததும் பா.ஊ குரல் பணிந்தது.

"மன்னியுங்க  Sir"

 என்றவாறு பாதுகாப்பு ஊழியர் வங்கி முகாமையாளரிடம் மன்னிப்புக் கேட்டதும், மனேஜரோ "என்னிடம் சொல்லாமல் அவரிடம் கேளும்" என என்னைச் சுட்டிக் காட்டினார்.

 நானும்  அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கலாச்சாரம் பற்றியும் கொஞ்சம் சூடாக சற்றுக் கோபமாக கதைத்தேன். முகாமையாளர் எதுவும் சொல்லாமல் என் வார்த்தைகளை அங்கீகரித்துக் கொண்டிருந்தார்.

"இது எனக்காக மட்டும் இல்லை. இங்கே வாற ஏனைய முஸ்லிம் பெண்களுக்கும் சேர்த்துத்தான் கதைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கட கலாச்சாரத்தை நாங்க அவமதிச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்.  நானும் இந்த ஊர்தானே?  துவேசம் காட்டாதீங்க."

பா.ஊ தலையை குனிந்து கொண்டிருந்தார். முகாமையாளர் முஸ்லிம் பெண்கள் ஆடை தொடர்பாக நன்கு விளக்கியும் கூட, கீழ்நிலை உத்தியோகத்தர்கள் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளாத நிலையே இந்த சம்பவத்தின் பின்னனி !

என் முறைப்பாட்டுக்கு உடன் தீர்வு தந்த அந்த  மேலதிகாரி மீது எனக்கு மதிப்பு ஏற்படவே, இதனை மேலும் பிரச்சினை ஆக்காமல் அந்த தடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன். இங்கு வாழும் என் சமூகப் பெண்களுக்காக  நானும் ஏதோ சிறு துளியாவது செய்திருக்கிறேன் எனும் மன நிறைவு எனக்குள்!

- ஜன்ஸி கபூர் -
   28.06.2019

2019/06/25

அவசர வாழ்க்கை

அழகான வாழ்க்கை இறைவனால் மனிதனுக்கு கிடைத்த பொக்கிஷம். அந்த வாழ்க்கையைப் பெறுமதியுள்ளதாக மாற்றுவது நமது கடமையாகிறது. கிடைத்த வாழ்வை வசந்தமாக்குவதும், பாழாக்குவதும் நாம் வாழ்க்கையை அணுகும் விதத்திலும், செயற்பாட்டிலும் தங்கியுள்ளது.   வாழ்க்கை என்பது நீண்ட பயணம். அந்தப் பயணத்தில் நாம் பல தரிப்பிடங்களை நம் குணங்களால் அடையாளம் காண்கிறோம் 

மனித மனங்கள் பல்வேறு குணங்களின் சேர்க்கை மையம். அக்குணங்களில் ஒன்றுதான் அவசரம். ஆனாலும் மனிதனின் விரும்பாத, தகாத குணம்தான் இந்த அவசரம்.

"மனிதன் அவசரக் குணத்துடன் படைக்கப்பட்டுள்ளான்" 
அல் குர்ஆனில்  கூறப்பட்டுள்ள இவ் வசனம் அவசரத்தை வெறுத்து விடுகின்ற இஸ்லாம் நன்மையான காரியங்களை செய்யச் சொல்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

"ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு"
"ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது"
 இப் பழமொழிகள்  அவசரத்தின்   பண்பை கோடிட்டுக் காட்டுகின்றது.   

இன்றைய நவீன உலகமானது ஒவ்வொரு நொடிகளில் மிக வேகமான நகர்வுகளைக் கொண்டிருக்கிறது. இதனால் மனிதராகிய நாம் நமது தேவைகளை தக்க வைக்க அவசரமாக இயங்குகிறோம். அவசரம் என்பது விவேகமானது அல்ல. அது நமது சிந்தனையை மிக வேகமாக  இயக்கி, சறுக்கி விடுகிறது. இங்கே "கீழே விழுதல்" என்பது நமது பலமான சக்திமிக்க எண்ணத்தில் இருந்து நாம் விலகி நிற்பதாகும். "அவசரமான குணம்" நமது வெற்றி வாய்ப்புக்களை பின்னோக்கி நகர்த்தி விடுகின்றது.

நம்மால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு காரியங்களும் இலக்கு நோக்கி நகரும். இலக்குகள் வெற்றி பெற்றால் சிறப்பான விளைவு எட்டப்படும். இந்த சிறப்பான காரியங்கள் தவறினை நோக்கி போவதற்கு அவசரம் காரணமாகின்றது.  அவசரம் மனித வாழ்வின் பெறுமதியான கணங்களை விழுங்கும் அரக்கன்.  நம் மிகச்சிறந்த சிந்தனைகளைக் கூட இவ் அவசரமான செயற்பாடுகள்   வீணாக்கி விடுகின்றன.

நமது பலகீனமான குணங்களில் அவசரமும் ஒன்றே! அவசர புத்திக்காரன் தனது செயல்களை நிதானத்துடன் செய்வதில்லை. அவனது பார்வையில் பதற்றம் முக்கிய புள்ளியாகக் காணப்படுகிறது. அவசரம் எனும் இயற்கைக்  குணத்தை மாற்றுதல் என்பது கல்லில் நாருரிப்பது  போல்தான். 

தவறுகளின் வாசட் படியாகவும் இந்த அவசரத்தை கருதலாம். நாம் நமது காரியங்களைத் திட்டமிட்டுச் செய்யும் போது நேரம் போதிய அவகாசம் தரும். அக்காரியங்கள் தொடர்பாக நன்கு சிந்திக்க முடியும். நல்ல விடயங்களின் பால் மனம் நகரும். பக்குவம் நம் வசமாகும். நேர்ச்சிந்தனை வயப்பட்ட நிலையில் நமக்கு சாதகமான விடயங்களை மட்டும் நாம் நினைக்க முடியும்.  
மறுதலையாக மனம் ஒன்றாமலோ அல்லது கடைசி நேரத்திலோ காரியங்களை அவசர அவசரமாகச் செய்யும் போது அவை சிதறி விடுகின்றன. 

சிலர் வார்த்தைகளையும் அவசர, அவசரமா வெளிப்படுத்துவார்கள். இவ்வாறாக கருத்துச்செறிவில்லாத, பெறுமதி அற்ற வார்த்தைகள் வெளிப்பட்டு, அவை பிறரிடத்தில் நமது பெறுமதியைக் குறைத்து விடுகின்றன. அதுமாத்திரமின்றி அடுத்தவருடனான முரண்பாடுகளையும், கோபதாபங்களையும்  இயல்பாகவே ஏற்படுத்துகின்றன.

எனவே சூழ்நிலைகளை அனுசரித்து அவசரமின்றி, நேரத்தையும் செயல்களையும் திட்டமிட்டுச் செய்யும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும். 

ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது!

- Jancy Caffoor-
 25.06.2019 

2019/06/23

கனவு தேவதையே




நட்சத்திர கீறல்கள்
வீழ்ந்தன புன்னகையாய்!

புல் நுனி கழுவும்  பனியோ
தள்ளாடி வீழ்ந்தன  கன்னவோரம்!

வியர்வையின் ஈர வீரியம் கண்டு
அயர்ந்தன மேனி யிதழ்கள் துவண்டு!

வானவில்லின் சாயம் கரைந்து
வழிந்தது இடை நெருக்கும் மெல்லாடையாய்  !

நறுமணம் பூசும் தென்றல் கெஞ்சும்
சுவாசம் கொஞ்சிப் பேச!

இமையோரம் வெட்கிக் குனியும்
விழியின் சிறகடிப்பின் மோகம் கண்டு!

விரல் வருடும் ரேகை கழன்று
வரிகள் வரையும் உனை நினைந்து!

காதல் தேவதை யுனக்காய் என் தேசம்
காத்திருக்கும் ஏக்கங்கள் பல சூடி!

உன்னால்



நட்சத்திரம் விழித்திருக்கும்
பால்வெளியில்............
விழிகளைத் தாக்கும்
ஒளி வருடலாய் நீ!

பனி படர்ந்த போர்வையில்
முத்தென............
முத்துமிட்டுச் செல்லும் வியர்வைத்துளிகளாய்
உன் நினைவுகள்!

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி
உன் ஞாபக வரிகளை
வாசிக்கும் போது ..............
காயமாகின்றன என் விழிகள்!

என் விரல்களைப் பார்......
உனக்கு கடிதங்கள் எழுதி எழுதியே
ரேகைகள்
காணாமற் போயின!

உன் நினைவுப் பேரலையில்
வீழ்ந்து தவிக்கையில்
சுவாசம் கரைக்கின்றேன் - என்
வாசத்தை விற்றவளாய்!

கொல்லாதே- எனை
அணுவணுவாய் கொல்லாதே!
எஞ்சிய காலத்திலாவது
கொஞ்சம் வாழ வரம் கொடு!......

உன்னை இப்பொழுதெல்லாம்
யாசிக்கின்றேன் ..........
அனுமதிப்பாயா...........
அவசரமாய் உன் ஞாபகங்களை
பெயர்த்தெடுக்க!

கொஞ்சம் பொறு



கொஞ்சம் பொறு......
உன்
சிரிப்பை பெயர்த்து
சலங்கையாக்கப் போகின்றேன்!

கொஞ்சம் பொறு.......
உன்
பார்வையைத் திண்மமாக்கி
பனிக்கட்டியாத்
தூவுகின்றேன்!

கொஞ்சம் பொறு.......
உன் குரலலையின்
அதிர்வை
காற்றினில் கோர்க்கின்றேன்
மெல்லிசையாய்!

கொஞ்சம் பொறு........
உன் நிறத்தைப்
பிரதியெடுத்து
நிலாவை முலாமிடப் போகின்றேன்!

கொஞ்சம் பொறு......
சிப்பிகள் சினக்கின்றன- தம்
முத்துக்கள்
உன் னுதட்டினில்
சிறை வைக்கப்பட்டிருப்பதாய்!

சொல்லி விட்டுப் போ...........
உன் சுவாசத்திலும்
பூவாசம் - நீ
பூவை என்பதாலா!

திருமணம்



வாழ்க்கைப் பாதைக்காக
தீர்மானிக்கப்பட்ட பயணம்!

கருவறைத் தரிப்புக்களுக்காய்
வழங்கப்பட்ட அனுமதி!

தனிமைச் சாளரம் தாழ்பாளிட
ஈர் மனந் திறக்கும் மங்களச் சாவி!

சரீரம் வருடி சாரீரம் தொடும்
இன்னிசை!

தாலியால் வேலியிடப்படும்
உறவுச்சாலை!

சம்பிரதாயங்களின் முகவுரையோடு
எழுதப்படும் காவியம்!

ரொக்கத்தின் கனத்தில்
இருவரிணையும் சங்கமம்!

வழித்தோன்றலின் வழிவிடலுக்காய்
வாழ்த்துத் தூவும் பூமாலை!

ஆயுள் மன்றத்தில் ஓர்முறையே
அரங்கேற்றப்படும் ஈர் மனக் கவிதை

கண்ணீரும் வெந்நீரும் பன்னீரும்
வழிந்தோடும் நீரோடை!

வாலிப வித்தைகளைக்
கட்டிப் போடும் கடிவாளம்!

கனவுச் சிறகறுத்து மனசை
நனவுக்குள் வீழ்த்தும் தேர்வுமையம்!

நான் நீயாகி........நீ நானாகும்
மனசின் மந்திரப் பிரகடனம்

இதோ



இருளின் ரகஸியத்தில் இப்போதெல்லாம்
வீழ்ந்து கிடக்கின்றது நம் பனிப்போர்!

நினைவுச் சாவி திறந்துன்னை.........
களவாய்  ரசிக்கையில்
கன்னம் வைக்கின்றாய் மெல்ல - என்
கன்னம் சிவக்க!

அரிதாரம் பூசப்படும்  கனவுகளுக்காய்
கர்ப்பம் தரிக்கும் நம் காதல்.......
இப்போதெல்லாம் - சில
பிடிவாதங்களின் ஆளுகைக்குள்
பிரவேசிக்கின்றது
ஊடலைத் தெறித்தபடி!

அடுத்தவருக்காய் என்னை நீ
விட்டுக் கொடுக்கப் போவதுமில்லை.........
என்னிடம்  தோற்கப் போவதுமில்லை!......

காத்திரு ...............
கணப்பொழுதில்
தாவி வருகின்றேனுன்னைத் தழுவி நிற்க!

தீனின் ஒளியாய்



இப்ராஹீம் நபியவர்கள் இறைஞ்சுதல்கள்
இறை சந்நிதானத்தில் வலு சேர்க்கவே.........
ரபியுல் அவ்வல் பிறை பனிரெண்டில்
தரணிக்குள் தடம் பதித்தா ரெம் பெருமானார்!

பிரபஞ்ச இருள் வெளிக் கீற்றுக்களில்
பிரவேசித்த வைரமாய் எம் பெருமானார். ...........
நல்லறங்கள்  பல விட்டுச் சென்றார்- பல
உள்ளங்கள் இஸ்லாத்தைத் தொழவும் செய்தார்!

விண்ணகர் மலக்கொளிகள் வாழ்த்தி நிற்க
மண்ணக அறியாமை கறையகற்றி.........
தீன் வழிச் சுவட்டோரம் நடைபயின்றே
வாழ்ந்தும் காட்டினா ரெம் பெருமானார்!

அன்னை ஆமினா உதிரம் நனைந்தே
இன்முகம் காட்டும் நனி பூவானார் ............
தந்தை அப்துல் முத்தலிப் லயிப்பில் தான்
தரணிக்குள் தரித்தும் நின்றா ரெம் பெருமானார்!

அருந்தவப் புதல்வரா யன்னையவர்
கருவறை தங்கிய வெம் கோமகன்......
பெருந்தவப் பேறாய் பேருலகில் தீனைப் பரப்பி
பொக்கிஷமாய் திருமறையையும் தந்தே நின்றார் ........

அரபிச் சுவரோர அறியாமைப் படிவுகள்
குற்றங்களாய் மனித மனங்களில் நீட்சி பெற்றே...............
இன்னல்களாய்  தீப்பற்றி எரிகையில்..........
அன லுறிஞ்சும்  புனிதமுமானார்
அஹமதெனும் எம் பெருமானார்!

பாலையூற்றுக்களின் பாவக் கறைகள் நீங்கி
சோலைவெளிகளாய் இப்பிரபஞ்சம் நிரம்பிட...........
பிரவேசித்தா ரெம் பெருமானார்
பிரகாசித்தார் அரபுத் தேசம் சிறப்புப் பெற!

சமுதாயப் பேரேடுகளில் சாந்தி வரையும் 
சரித்திரமுமானார் பலர் தரித்திரங்களும் நீக்கி.......
சன்மார்க்க போதனைகளில் எம் சிந்தைகளை  நிறைத்திட
விட்டும் சென்றார் வழிமுறைகளாம் .....
அல்-ஹதீஸையும் ஸூன்னாவையும்!

விண்ணகம் இறக்கித் தந்த தீன்நெறியால்
இன்னல் களையும் வழியும் தந்தார்!
மண்ணக சேமிப்போரங்களெல்லாம்..........
எண்ணற்ற அருளையும் சேர்க்கச் செய்தார் -எம்
அண்ணல் நபியவர்கள்!

வானின் பௌர்ணமி எழிலொளியாய்
வையகத்தில் வந்திறங்கினார் எம் பெருமானார்!
நன்மையின் விளைவகம் நாமாக...........
தீனை உணர்விலும் தந்து நின்றார்!

கஷ்டங்கள் பல கண்டனுபவித்தும்
இஷ்டத்துடன் இறை தொழுதே நின்று........
இஸ்லாமெனும்  தூணில் உலகைப் பொருத்தி
பெருமையும் கண்டார் எம் பெருமானார்!

சாப வினைகள்  நீக்கத்தான்
சத்திய நெறிகள் போதிக்கத்தான்........
வந்துதித்தார் நித்திய வுலகின் அச்சாணியாய் - எம்
முகம்மது நபி (ஸல்) அவர்கள் !

வறுமை விரட்டும் மருந்துமானார்.........
சிறுமை களையும் அன்புமானார்..........
மறுமை வாழ்வுக்கும் வழியும் தந்தார்.........
இறுதித் தூதுவர் அவருமானார்!

மீலாத் தினமின்று பல மாண்புகளும்
மீட்சிகளும் இறையருளும் நாம் பெற்றிடவே .........
பெருமளவில் ஸலாம் சொல்வோம்- முகம்மத்
பெருமானார் திருமொழி நவின்றே!




கவிதை நீயாகி



என் விடியல்கள்
முகங் கழுவிக் கொள்கின்றன
தினமும்
உன் நினைவுகளில்!

இருளின் இம்சைக்குள்
தொலைய மறுத்த உறக்கமேனோ.........
உன் விழிக்குள் பார்வையாய்
உறங்கத் துடிக்கின்றது!

அறிவாயா.....
நீ யென்னைக் கடந்து செல்லும்
ஒவ்வொரு கணங்களும்
இறக்கை நெய்கின்றேன் காற்றோரம்
சுவாசமாய் உன்னுள் வீழ!

கவிதை நீ காதல் சொன்னபோது



காற்றுக்குள்ளும் உருவம் முளைத்தது
நீ காதல் தந்தபோது!

முகிற் கூட்டங்கள் மெல்லவுடைந்து
கற்கண்டாய் தரை தொட்டன!

வேருக்குள்ளும் வியர்வை வடிந்தது
உன் பார்வையென்னுள் வீழ்ந்த போது!

என் தாய்மொழி விழி பிதுங்கின
உன் மௌன மொழியிறக்கம் கண்டு!

உன் சிற்ப மேனி வர்ணமாய் வடிந்தென்
கற்பனைக் கொடிகளின் அசைவுகளாய் ஆனது!

ஆசை ஜூவாலைகள் உனை வளைத்தே
களவாய் காவு கொண்டன என்னருகில்!

வாலிப வீரியத்தில் உன்னிளமை
வலிந்தே போதையை நிரப்பிச் செல்கின்றது மெல்ல!

மூங்கில் துளையேந்தி நெஞ்சை வருடுமுன்
விரல்களில் பிணைந்தே கிடக்கின்றேன் ரேகையாய்!

உன் புன்னகை  என்னைக் கடக்கையில்............
பொறிக்கின்றே னுன்னை என் இதழோரம்!

வசியமாகின்றேன்



விழுந்தன மயிலிறகுகள் - உன்
வார்த்தைகளில் பிசையப்பட்டு
வசியமானேன் உன்னுள்!

மொழியிழந்த நானோ - உன்னுள்
இலக்கணம் தேடுகின்றேன்
நம்மைப் பகிரும் அன்பின் வரிகளுக்காய்!

இரவின் ரகஸியத்தில்
நிரந்தரமாகும் நம் பரிமாற்றங்கள்
இப்பொழுதெல்லாம்
வேவு பார்க்கின்றன நம் கனவை!

இயல்பாய் பேசுமுன் வார்த்தைகளோ
இப்போதடிக்கடி
இடறுகின்றன என் விழிச் சாளரத்தில் சிக்கி
வீம்பாய்!

உவப்போடு நீ சிந்தும் பாடல்களால்
உதிர்கின்றன பூவிதழ்கள் என்னுள்.......
உன்னருகாமையை என்னுள் சிதறியபடி!

சொற்களை அழகாய் நீவி - என்னுள்
நீ கவியாய் சிறகடிக்கையில்..............
என் கரங்கள் குவலயமாய் விரிந்துன்னை
அணைத்துக் கொள்கின்றன அழகாய்!

காற்றிலே யுதிர்க்கும்
உன் குரல் ஸ்பரிசங்களால்.........
குவிந்து கிடக்கும் நேசமெல்லாம்
வீழ்கின்றன சரனடைந்தே!

காதலா.........
அன்பா............
நட்பா...........
ஏதோவொன்று
நம்மைக் கடந்து செல்கையில் மட்டும்
முறைக்கின்றாய் நிமிடங்களோடு
பிரிவின் வலிக்கஞ்சி!

தாவணி



வாலிப தேசம் கண்டெடுத்த
வண்ணக்கொடி!

மலை முகடுகளை மறைத்தோடும்
நீர்வீழ்ச்சி!

இளமை ரகஸியங்களை
காற்றிலுதிர்க்கும் உளவாளி!

பருவத்து அலைவரிசைக்காய்
விரும்பப்படும் ஒலிபரப்பு!

பாவடைக் குடைக்காய்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னாடை!

இடை நெரிக்கப் படையெடுக்கும்
நூற்படை!

குமரப் பருவத்தை அங்கீகரிக்கும்
ஒப்பந்தக் காகிதம்!

கவிதை அறிவாயோ



தேவதை என்றாய் - என்
வாழ்வின் தேள்வதை யறியாமல்!

கண்மணி என்றாய் - தினம்
கண்ணீருக்குள் அழுகும் விம்ப மறியாது!

உதிரும் புன்னகை அழகென்றாய்
என் ரணங்களின் ஆழ மறியாது!

உன் கனவுகள் நானென்றாய்
வெட்டப்படும் பலியாடு நானென்பதை யறியாது!

நிம்மதி நானென்றாய் - நிதம்
நிம்மதி தேடும் ஆத்மா நானென்பதை யறியாது!

எரியூற்றப்படும் எனக்காய்
ஏக்கங்கள் வளர்க்கு முனக்காய்

அனுதாப அலைகள் அனுப்பி விட்டே ன்
 மன்னித்து விடென்னை  மானசீகமாய்......

விடுதலை வேட்கைக்காய் விண்ணப்பித்த
மரணக் கைதியிவள்!

அன்பின் புன்னகை



அன்பின் புன்னகையில்
அடங்கிக் கிடக்கின்ற தென்னுலகம்!

அறியாமைத் தீ யனல்கள்
அணைந்து போகத் துடிக்கின்றன!

இதயவெளிச் சுவரெங்கும் வருடி
முகாமிட்டு கொள்கின்றது காற்றும் தென்றலாய்!

ஈடேற்றத்தின் தலை வருடலால் வாழ்வொன்றும்
கண் முன்னால் விரிகின்றது விசாலமாய்!

உறவின் நறுமணங் கண்டு உருவாகும் மொழியொன்று
 உதடு குவிகின்றது 'அம்மா' வென்றே!

ஊரின் திருஷ்டிக் கஞ்சி முகத்தை யன்னை கரம்
முந்தானைத்  திரையிட்டு மறைத்துக் கொள்கின்றது!

எட்டுத் திக்கெங்கும் என் பெயரொளி வீச
ஏக்கம் சுமந்த உணர்வொன்று தாய்மையாய்
வருடுகின்ற திங்கே!

ஐயமகற்றும் கற்றலின் நிழலாய் கண் முன்
விரிகின்றது தாயின் அறிவகம் ஆழமாய்!

சூரிய தேசத்தின் வெம்மைக் குடை யெல்லாம் சரிந்து
திரையிட்டு கொள்கின்றன பசுமையைப் பூட்ட!

சிப்பிக்குள்ளிருந்த வெண்முத்தும் புன்னகைத்தே
முத்தமிட்டு கொள்கின்றது அன்னை விரல் பற்றி!

காற்றசைக்கா கருங்கல் மெல்ல
இளகிக் கிடக்கின்றன யவர் கருணைப் பார்வை கண்டு!

சுவர்க்கமொன்று சுரங்கம் தந்தே வழிவிடுகின்றது
சுகந்தம் மணக்கும் தாயின் பூவடிக்காய்!

இத்தனைக்கும்............
என் தாய்க்கீடேது இத் தரணியில்!