2021/07/15
2021/07/08
2021/07/03
2021/07/01
2021/06/29
2021/06/27
2021/06/24
முரண்பாடுகளுக்குள் உடன்பாடு
மனிதர்கள் தம்முடைய சிந்தனைகளின் பொருட்டே தனித்துவமானவர்களாக மாறுகின்றார்கள். ஒவ்வொரு மனிதரினதும் கைரேகைகள் எவ்விதம் ஒத்திருப்பதில்லையோ அவ்வாறே சிந்தனைகளும் வேறுபடுகின்றன. சிந்தனைகள் ஒத்திருப்பதில்லையாதலால் முரண்பாடுகள் தோன்றுகின்றன.
வாழ்க்கை என்றால் என்ன?
அந்த வாழ்க்கை எல்லோருக்கும் சுகமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கின்றதா?
ஆனாலும் வாழ்வின் சவால்கள் போராட்டங்களுடன் போராட நம்மில் எத்தனை பேருக்கு தன்னம்பிக்கை இருக்கின்றது.?
நிறைய பேரின் மனதில் இந்த வாழ்க்கை பற்றிய சலிப்பே இருக்கின்றது.
நம் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் பொய்யாக மாறும்போது இயல்பாகவே நாம் நம்மிடமே தோற்று விடுகின்றோம். இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு எழ நமக்கு மன தைரியம் வேண்டும். நேர்ச்சிந்தனைகள் வேண்டும்.
எம்மை நாமே நம் சூழ்நிலைக்கேற்ப தயார்படுத்திக் கொண்டோமானால் நம்மைத் துரத்துகின்ற எந்த முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் சமாளித்து விடலாம்.
நம்மை எதிர்கொள்கின்ற முரண்பாடுகள் நம்மை விழுங்க நாமே அனுமதித்தால் அந்த முரண்பாடுகளிடம் நாம் நம் நிம்மதி கலந்த வாழ்வையே இழந்து விடுகின்றோம்.
வேறுபட்ட இலக்குகள் அல்லது பெறுமானங்களை கொண்டிருக்கும் இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் தோன்றக்கூடிய வெளிப்படையான இயக்கமற்ற தன்மை முரண்பாடு எனப்படும்.'
முரண்பாட்டுக்கான வரைவிலக்கணத்தை மேற்கண்டவாறு கல்வியலாளர்கள் வழங்கியுள்ளனர். அதாவது நபர்களுக்கிடையில் சிந்தனைகள் வேறுபடும்போது வெளிப்படுகின்ற ஓரு இயக்கமற்ற தன்மையாக இதனைக் கொள்ளலாம்.
நீர் சொல்வதை நான் செய்ய வேண்டுமா அல்லது நான் சொல்வதை நீர் செய்ய மாட்டீரோ என விரிந்து செல்கின்ற மனப்போக்குகளால் விட்டுக்கொடுப்பு இங்கு இடம்பெறாது.
முரண்பாடு என்பது ஒருவரிடத்தே அல்லது இருவருக்கிடையில் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோரின் கருத்து வேறுபாட்டின் அல்லது எதிர்ப்பின் பெறுபேறாகத் தோன்றுவதாகும். இந்த முரண்பாடுகள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையலோ அல்லது உறவினர்களுக்கிடையிலோ அல்லது தொழில் நிறுவனங்களிலோ ஏற்படலாம்.
முரண்பாட்டுச் சிந்தனை நமக்குள் ஏற்பட்டால் சூழ்நிலைக்கெதிரான மனநிலையைக் கொண்டிருப்போம்.
உறவுகளுக்கிடையிலான முரண்பாடுகளின் விளைவு பகைமை
கணவன் மனைவிகளுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் விவாகரத்தில் நின்றுவிடும்.
குடும்பங்களில் ஏற்படுகின்ற முரண்பாடுகளால் ஒருவருக்கொருவர் முகம் பார்க்க முடியாத பாதகநிலை.
தொழில் நிலையங்களில் சந்திக்கின்ற முரண்பாடுகள் நம் வாழ்வில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுகின்றது.
இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகின்றன. வேற்றுமைக்கு வித்திட்டு பற்பல மோதல்களுக்கு வடிகாலாக காணப்படுகின்ற இந்த முரண்பாடுகள் தோன்றாவிடில் இந்த உலகமோ அழகான அமைதிப் பூங்காவாக அல்லவா காணப்படும். மனிதர்களுக்கிடையில் சாந்தியும் சமாதானமும் சேர்ந்த நிம்மதியான வாழ்வும் கிடைக்குமே. முனம் இவ்வாறாக ஆசைப்பட்டாலும்கூட யதார்த்தநிலை நம்மை சிந்திக்க வைக்கின்றதே
மனித எண்ணங்களுக்கிடையில் காணப்படுகின்ற பல்வகைமைகளின் செல்வாக்கு அன்பெனும் உணர்வின் எல்லைகளையும் தகர்த்து விடுகின்றது.
இந்த முரண்பாடு ஏன் ஏற்படுகின்றது எனப் பார்ப்போமா
• ஆளுக்காள் தோன்றுகின்ற பக்கச்சார்பு நிலை.
• தனிநபர் பிறர்மீது செலுத்துகின்ற செல்வாக்கு
• வேறுபட்ட இலட்சியங்கள்
• பொருட் தேவைகள்
• தவறான தொடர்பாடல்
• அந்தஸ்தை வெளிப்படுத்தல்
• அதிகமான வேலைச்சுமை
• ஆளுமை மோதல்
• தெளிவற்ற பொறுப்புக்கள்
• வேறுபாடான எண்ணக்கருக்கள்.
இவ்வாறாக பல காரணங்கள் காணப்படலாம்.
இந்த முரண்பாட்டுக்கும் பண்புகள் காணப்படுகின்றன.
• குறித்த நபர் அல்லது நபர்கள் தொடர்பில் வெறுப்பை வெளிப்படுதல்.
• குறை கூறல்.
• தமது கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருத்தல்.
• ஒதுக்கி வைத்தல்.
• தனித்திருத்தல்.
• பேசுவதை தவிர்த்துக் கொள்ளல்.
• கண்கள் நேருக்கு நேர் பார்த்து பேசாதிருத்தல்.
இவ்வாறாக மன அவஸ்தைகளைத் தருகின்ற முரண்பாடுகள் நமக்குத் தேவைதானா நிச்சயமாக முரண்படுகின்றபோது நமக்குள் எழுகின்ற சிந்தனைகளால் நாம் நம்மையே திரும்பிப் பார்க்கின்றோம்
முரண்பாடு மூலம் கிடைக்கும் நன்மைகள்
• புதிய கருத்துக்கள் உருவாகும்.
• இணக்கமாக வாழக் கற்றுக் கொடுக்கிறது.
• தேவைகளை நிறைவு செய்கிறது.
• நடத்தை கோலங்களை கற்றுக் கொடுக்கிறது.
• பிரச்சனைக்கான தீர்வு தேடித் தரும்.
• தொடர்பாடல் திறனுக்கான பயிற்சி.
• உணர்ச்சிவசப்படுவதை தடுக்கும்.
• வித்தியாசமான அனுபவங்களைத் தரும்.
• புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
• உண்மையான பிரச்சனை வெளிப்படும்.
• குறைபாடுகளை இனம் கண்டு கட்டுப்படுத்த முடிகிறது.
• இரு தரப்பும் இணங்கும் வெற்றிகரமான தீர்வு.
• புரிந்துணர்வு வளர்ச்சி.
முரண்பாடுகள் மூலம் கிடைக்கும் தீமைகள்
• சக்தி நேரம் வீணாகும்.
• தாமத முடிவு.
• ஆரோக்கியமற்ற சமூகம்.
• எரிச்சலூட்டுதல்.
• பின்தங்கிய நிலை.
• குழுவினர் விலகுதல்.
• குறிக்கோளை அடைய முடியாது.
ஒழுங்கமைப்பினுடாக முரண்பாட்டுக்கான தீர்வுக்காக கடைபிடிக்கப்படும் பல்வேறு உபாயங்களாவன : -
• தவிர்த்தல்.
• தீர்வொன்றை விதித்தல்.
• மிருதுவாக்குதல்.
• ஒழுங்கமைப்பின் குறிக்கோளை நிறைவுபடுத்திக் கொள்ளல்.
• பிரதிநிதியுடன் கலந்துரையாடல்.
• கட்டமைக்கப்பட்ட இடைத்தாக்கம்.
• பேச்சுவார்த்தையும் பேரம் பேசுதலும்.
• மத்தியஸ்தம்.
• பிரச்சினை தீர்த்தல்.
• ஒழுங்கமைப்பை மறுசீரமைத்தல்.
எனினும் நமக்கு தீங்கினையும் தரக்கூடிய இத்தகைய முரண்பாடுகள் எம்முள் தோற்றம் பெறுவதை நாம் அனுமதிக்கக்கூடாது.
பிரச்சினைகளை இனங்கண்டு அதனைத் தீர்த்தல் வேண்டும். இதற்கு பொறுமையும் பிறரை நேசிக்கின்ற அன்பான குணமும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்ற பக்குவமும் வேண்டும். பிறர் நலத்தின்மீது மதிப்பு வைக்கின்ற மனநிலை வேண்டும். தவறுகளைக் கண்டறிந்து களைந்தெறிதல் வேண்டும். ஒருவரும் பாதிப்படையாமல் தொடர்பாடல்கள் மூலம் குறைகளைக் களைந்தெறிந்து நல்ல விடயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
முரண்பட்டோர் கருத்துக்களை 'நேருக்கு நேர் நோக்குதல்' போன்ற நுட்ப முறைகளையும் பயன்படுத்தி பிணக்குத் தீர்க்கலாம்
ஈகோ நீக்கப்பட்டாலே பாதி முரண்பாடும் மறைந்து விடும்.
அடுத்தவரின் உணர்வுகள் தேவைகளைப் புரிந்து கொண்டாலே முரண்பாட்டுக்கான பாதைகளும் மறைந்து விடும்.
விட்டுக்கொடுங்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வுலகின் உயர்ந்த மனிதப் பிறவிகள் சமாதானத்தின் மிகச்சிறந்த அடையாளங்களாக மாற்றம் பெறுவார்கள்.
அடுத்தவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பின்தொடர பலர் முன்வருவார்கள்.
பிறரின் குறைகளைக் கண்டுகொள்ளாதீர்கள். உங்கள் நிறைகள் பிறரால் பாராட்டப்படும்.
ஒவ்வொருவரும் தம்மை அடுத்தவர்களை நேசிக்கின்ற மனிதர்களாக மாற்றும்போது இப்பிரபஞ்சத்தின் அன்பின் செழுமைக்கும் குறைவுதான் ஏது.
அன்பு ஆட்சி செய்கின்ற மனிதர்கள் வாழ்கின்ற இப்பூமி மயானங்களல்ல. சொர்க்கத்தின் சுவடுகளால் பாதைகள் செய்யப்பட்ட அழகான பூமியாக மாறும்.
நாமும் மாறுவோம். மற்றவர்களையும் மாற்றுவோம். மாற்றங்களாலேயே வாழ்வில் ஏற்றம் பெறலாம்.
ஜன்ஸி கபூர் - 24.06.2021
2021/06/22
2021/06/15
வெற்றி(யின் இ)லை
உலகினை கொரோனா எனும் நோய் தன் பிடிக்குள் சிக்க வைத்து வாழ்வைக் கசக்கிப் பிழிகின்ற நேரம், அன்றாடம் உழைத்து உண்ணும் பலர் பசியுடன் போராடி வருகின்றனர். ஊதியம் கிடைக்கின்ற வழி உழைப்புத்தானே. நேர்மையான வழியில் உழைக்கின்ற எல்லாத் தொழில்களும் சிறந்தவைதான்.
சென்ற வருடம் கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் விடுமுறை விடப்பட்டிருந்தன. வீட்டில் இருக்கின்ற அந்நாட்களைப் பிரயோசனப்படுத்துவதற்காக வீட்டுத்தோட்டத்தில் நாட்டம் செலுத்தினேன். அதன் விளைவாகச் சிரிக்கின்றது வெற்றிலைச் செடி.
சில வீடுகளின் சுவர்களில் இவ்வெற்றிலைச் செடி பரந்து வளர்கையில் அதனை ரசிப்பேன். ஏனோ வெற்றிலைச் செடி வளர்ப்பதென்றால் எனக்கு கொள்ளை ஆசைதான்.
இந்த வெற்றிலையைப் பற்றித்தான் இந்த வீடியோவில் கொஞ்சம் கதைக்கப் போகின்றேன்.
• மலேசியாவில் தோன்றிய இச்செடி மருத்துவ மூலிகையாகும். அத்துடன் இந்துக்களின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளமாகவும் திகழ்கின்றது. வயிற்றுக்கோளாறு நீங்கவும் வெற்றிலை பயன்படுத்தப்படுகின்றது. இது மிளகுக் குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். வெற்றிலையை பாக்குடன் மென்றோ அல்லது பீடாவாகவோ சாப்பிடுவார்கள். சிலர் வெற்றிலை ரசம் வைத்துச் சாப்பிடுகின்றார்.
• தாய்ப்பால் சுரப்பிற்கும் வெற்றிலை பயன்படுகின்றது. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வெள்ளை வெற்றிலை காரம் இல்லாததும், வெளிர்ப்பச்சை நிறமாகவும் இருக்கும். கருப்பு வெற்றிலை காரம் உள்ளதாகவும், நல்ல பச்சை நிறமாகவும் இருக்கும். வெற்றிலையில் நடுக்காம்பிலிருந்து ஒரு புள்ளியில் இருந்து நரம்புகள் பிரிந்து இருந்தால் ஆண் என்றும், பல புள்ளிகளில் இருந்து பிரிந்து வந்தால் பெண் என்றும் கூறப்படுகிறது.
• வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது.
• வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள் வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள்.
• வெற்றிலையும், பாக்கும் ஒற்றுமைக்கு உகந்தது. ஒன்றோடு ஒன்றை இணைத்துதான் கொடுக்க வேண்டும். 'வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை' என்பது பழமொழி.
• வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி ஆகியவற்றை சேர்த்து வாய் மணக்கஇ மணக்க தாம்பூலம் தரிப்பது தமிழர்களின் வழக்கம்.
இவ்வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
- உடல் பருமனை குறைக்கும் மருந்து
2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.
- நரம்புகளை பலப்படுத்தும் மருந்து
- மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
- மூச்சுதிணறல், நெஞ்சக சளியை போக்கும் மேல்பூச்சு மருந்து
- நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது
ஆனாலும் நன்மையின் மறுபக்கமாக தீமையும் உள்ளது. வெற்றிலை மென்று சிலர் வழி வழியே துப்பும்போது சூழலின் அழகு கெடுகின்றது. அது மாத்திரமல்ல தொடர்ந்து மெல்லும்போது பற்களில் கறைகளும், புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.
இருந்தபோதும் மங்களகரமான அச்செடியை வீட்டில் வளர்த்து மன சந்தோசம் பெறுவோமாக!
உங்கள் அன்பின் ஜன்ஸி கபூர் - 14.06.2021
2021/06/12
2021/06/11
2021/06/05
உன்னில் என்னைக் காண்கின்றேன்.
இவ்வுலகின் அற்புத சக்தியாக காதல் இருப்பதால்தான் தமக்கிடையேயுள்ள எந்த வேறுபாடுகளையும் அது கண்டுகொள்ளாமல் அன்பை நோக்கியே பயணிக்கின்றது. உண்மையான அன்பு இதயங்களாக வாழும் இந்த சனா – தவூத் தம்பதியினரை எனக்குப் பிடித்ததால் அவர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்துகின்றேன். நன்றி பீபீசி - தமிழ்
தவுத் சித்திக்கி சனா முஷ்டாக் இருவரும் உறவினர்கள். சந்தித்த சந்திப்பு காதலாகப் பூக்க இருவரும் காதல் வானில் பறந்து திரிந்தார்கள். ஒரு வருடக் காதல் மகிழ்ச்சியாகக் கழிந்தது. ஒன்றாகவே இருவரும் வெளியே சுற்றுமளவிற்கு காதலும் உறுதி பெற்றிருந்தது. இருவரும் ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை எனும் அளவிற்கு மனதாள் வலுப் பெற்றார்கள்.
தவுத் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோது உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து பாய்ந்த மின்சாரம் காரணமாக ஏற்பட்ட விபத்தால் அவனது இரண்டு கைகளும் காலும் பறிபோனது. எட்டு மணி நேர சத்திரசிகிச்சை உடல் உறுப்புக்களை இழக்கச் செய்தாலும் உயிரைக் காப்பாற்றியது.
ஆனால் உள்ளங்கள் சம்பந்தப்பட்ட காதல் புறத்தோற்றங்களால் மாறுபடுமா? செய்தி கிடைத்ததும் சனா கலங்கியவாறு ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள். கண்ணீரில் கரைந்த காதலால் அந்த வைத்தியசாலையும் வலி சுமந்தது.
தாவுத் நினைவு திரும்பவில்லை. ஆனாலும் சனா அவனது காதினருகே போய் முணுமுணுத்தாள். அந்த ஒலிச் சப்தம் அவனது உணர்வுகளை மெல்ல வருடியிருக்க வேண்டும். கண்களைத் திறந்தான். பூக்களாக மலர்ந்திருந்தாள் காதலி சனா.
தவுத்தோ அவள் தன்னைப் பார்க்க வருவாள் என்று நினைக்கவேயில்லை. இந்த விபத்தால் அவள் தன்னை வெறுப்பாள் என்றே எண்ணினான். இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். ஊனமுற்ற தன்னுடன் அவளை வாழக் கட்டாயப்படுத்துவது தனது அன்புக்குப் பொருத்தமில்லை என்றே எண்ணினான். அவள் பிரிவிற்கேற்ப வாழ தன்னை தயார்படுத்த நினைத்திருந்தான்.
ஆனால் அவள் அன்பு அவனைக் கைவிடவில்லை. அவனுடன் கூடவேயிருப்பதாக ஆறுதலளித்தாள். அவனது இழந்த உறுப்புகளுக்குப் பதிலாக தனது கை கால்கள் இருப்பதாகவும் அவற்றால் உதவுவதாகவும் உணர்வுபூர்வமாகக் கூறினாள்.
தவுத்திற்கு சனாவை கஷ்டப்படுத்த விருப்பமில்லை என்பதால் அந்த திருமணத்திற்கு அவன் சம்மதிக்கவில்லை. தம் பிள்ளைகளின் வருங்காலம் தொடர்பாக ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆசைகளும் கனவுகளும் இருக்கும்தானே. உன் பெற்றோர் நன்மைக்குத்தானே சொல்கின்றார்கள். அதனால் பெற்றோர் விருப்பப்படி வாழ்க்கைத் தெரிவு செய்யும்படி கூறினான்.
விபத்தின் பின்னர் சனாவின் பெற்றோரும் இக் காதலை விரும்பவில்லை. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதும். அவள்; வீட்டை விட்டு வெளியேறி தனது மாமி; வீட்டில் தங்கியிருந்;தாள். தவுத்துடன் தொடர்பு கொண்டாள். உன்னுடன் வாழ்வதற்காக எல்லாவற்றையும் இழந்து வந்திருக்கின்றேன் ஏற்றுக் கொள் என்றாள். அவளது விருப்பத்திற்கு தவுத் ஆரம்பத்தில் உடன்படாவிடினும் ஈற்றில் அவளது அன்பின் பலம்; வென்றது. தனது வாழ்க்கை அவனுடன்தான் என அவள் எடுத்த முடிவு உயிர் பெற்றது. தவுத் பெற்றோர் ஆதரவுடன் அவனைத் திருமணம் செய்தாள்.
அடுத்தவர் உதவியின்றி நம் வேலைகளை நாமே செய்வது பெரும் அதிஷ்டம்தானே. அவனோ தான் எப்பொழுதும் பிறரை நாடி இருப்பதை எண்ணிக் கலங்கி நிற்கும்போதெல்லாம் மனைவி அவனை ஆறுதல்படுத்துகின்றாள். இறைவன் தன்னை இப்படிக் கலங்க வைத்ததை எண்ணி வேதனைப்படும்போதெல்லாம் சனா உணர்வுகளால் தன்னம்பிக்கையூட்டுகின்றாள். உற்சாகப்படுத்துகின்றாள். அவனுக்காகவே அவள் பிறந்திருப்பதாக நேசத்தைப் புதுப்பிக்கின்றாள். ஒரு தாயாக தாரமாக மாறி அவனை தன் உள்ளத்தில் பதிவேற்றி வாழ்ந்து வருகின்றாள்.
அவள் தனது சோகத்தை வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே காட்டிக் கொள்வாள்.
ஆனாலும் அவனது மனம் அவளுக்கு தான் பாரமாக இருப்பதை ஏற்கவில்லை. அவளுக்காக தானும் வாழ வேண்டுமெனும் நோக்கில் செயற்கை அவயங்களைப் பொருத்த எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் இப்புரிதலில் காதல் தினமும் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் அவளுக்குள் இன்னுமொரு வலி. அவளது பெற்றோர் தவுத்தை இனனும்; மருமகனாக ஏற்கவில்லை.
காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை. மாற்றங்களுடன் கூடியதே வாழ்க்கை. பணம் பதவி அந்தஸ்து என மாய வலைக்குள் சிக்குண்டு அல்லல்படும் பலரின் மத்தியில் இவர்களது காதல் நெஞ்சம் நமக்கு தடைகளையும் வலியினையும் கடந்து வாழ கற்றுத் தருகின்றது.
சோர்வல்ல வாழ்வு. சோகத்தையும் தூசாக்கி துணிவுடன் கடந்து போக கற்றுத் தருவது. இக்காதல் தம்பதியினரின் வாழ்க்கை வளம்பெற நாமும் வாழ்த்துவோம்.
ஜன்ஸி கபூர் - 05.06.2021
2021/06/02
MV X- Press Pearl
யாழ்ப்பாண நூலகம்
2021/06/01
தொட்டுவிடும் தூரம்தான்
ஆற்றல்களும், திறமைகளும் மனிதனுக்கு இறைவன் அளித்த பொக்கிசங்கள்தான். ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கின்ற அறிவினை தானே இனங்கண்டு, பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை பிரயோகிக்கையில் சாதனையாளர் என்கின்ற கௌரவம் அவரது அடையாளமாகின்றது.
அந்தவகையில் இன்று பேசப்படுகின்ற சாதனையாளன் பிரதீப்
இந்தியா கர்நாடகா குக்கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்த இவர், இன்று உலகமே திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு சாதித்துள்ளார்.
மாணவ பருவத்தில், கல்லூரியில் கற்கின்ற காலத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்துறையிலும் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பே!
இவருக்கும் எலக்ரோனிக்ஸ் துறையில் ஈர்ப்பு ஏற்படவே, +2 படித்துக் கொண்டே, அத்துறையிலும் தனது ஆர்வத்தை, தேடலை, ஆற்றலை வளர்த்துள்ளார். தனது சந்தேகங்களை Scientist id emailக்கு அனுப்பி தெளிவு பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல மின்னஞ்சல் அனுப்பினால்தான் ஒன்றுக்காவது பதில் கிடைக்குமென்ற ஆதங்கம்.
பொறியியல் கல்லூரியில் கற்க ஆசைப்பட்டாலும் தனது வறுமை காராணமாக BSc Physicsல் இணைந்து கற்கின்றார். மூன்றாம் வருடம் மைசூரில் கற்கின்ற வாய்ப்புக் கிடைத்தபோது, அறியாத ஊரில் தெருவோரமே இருப்பிடமாகின்றது. ரியூசன் மூலம் சம்பாதிக்கின்ற சொற்ப பணம் அடிப்படைச் செலவுகளுக்கு போதுமாகின்றது.
இத்தகைய வறுமையிலும் இந்த இளைஞனின் இலட்சிய வேட்கை தீரவில்லை. குறைந்த செலவில் பறக்கின்ற இயந்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவரது வலியெல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்கின்றது.
Courceல் சேருவதற்கு பணம் கிடையாது என்ற காரணத்தினால் C++ Java Core Python Adobe Cloud Computing போன்ற Softwareகளை எல்லாம் சுயமாகக் கற்று, அவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். பின் Bombay, Visakappattinam போன்ற ஊர்களில் மலைமலையாக குவிக்கப்பட்டிருந்த eWaste Scrap yardல் தேடி அலைந்தார். இப்படியாக தனது Drone Project க்கு ஆகும் செலவை குறைத்துள்ளார். ஏகப்பட்ட முறை முயன்று தோல்வி அடைந்து பின் மனம் தளராது, தனது முயற்சியில் வெற்றி பெற்றார்.
IIT நடத்தும் ஒரு Drone Competitionல் கலந்து கொள்வதற்காக புது தில்லி செல்கின்றார். 3 நாள் இரயில் பயணம். வறுமையின் ஆக்கிரமிப்பின் மத்தியிலும் அப்போட்டியில் கிடைத்த இரண்டாம் பரிசு மாபெரும் உந்து சக்தியாக விளங்குகின்றது. நம்பிக்கை இன்னும் ஆழமாக தன் ஆற்றலை வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கையில்,
அந்நாளும் அண்மிக்கின்றது.
அது....................
ஜப்பானில் நடைபெறுகின்ற போட்டி.
தனது கல்வி பெறுபேற்றுச் சான்றிதழ்களை அடமானம் வைத்தும், தாயாரின் தாலிக்கொடியை விற்று,ம் அறிந்த சிலரின் இரக்க குணத்தின் உதவியாலும் ஜப்பான் செல்ல ஆயத்தமாகின்றார்.
இடையில் சிறு விடயமொன்று இவரைக் குழப்புகின்றது.
அது...............!
ஜப்பானில் நடக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு Professor Phd யிடம் இவரது Project Report எல்லாம் சமர்ப்பித்து Approval வாங்க வேண்டும்.
கையிலோ முந்நூறு ரூபா. சென்னைப் பயணத்திற்கு இது போதுமா?
ஆனாலும் மனந் தளரவில்லை. வீதியில் உறங்கி, வறுமையின் நெருக்கீட்டைக் குறைத்து, தன் முயற்சியில் வெற்றி பெற வலியுடான போராட்டம் அந்த மாணவனுக்கு.
அந்தப் பேராசிரியரின் கையெழுத்தினைப் பெற பல நாட்கள் காத்திருப்பு.
ஈற்றில் வறுமையையும் வென்று விடுகின்றது தன்னம்பிக்கைப் போராட்டம்.
இரக்க மனங்கள் இருக்கின்ற வரையில் ஏழ்மை இதயங்களின் வலி கொஞ்சம் குறைகின்றதுதானே..
அம்மாணவனின் முயற்சியின் பலனாக ஜப்பான் டோக்கியோ கண்காட்சியில் அவன் தயாரித்த பறக்கின்ற இயந்திரமும் காட்சிக்கு வைக்கப்படுகின்றது. அது 120 நாடுகள் பங்குபற்றுகின்ற எக்ஸ்போ கண்காட்சி.
பலத்த போட்டிக்கு மத்தியில் தன்னம்பிக்கையுடன் ஏதாவது ஆறுதல் பரிசென ஓரிடம் கிடைக்கும் எனக் காத்திருந்தவனுக்கு ........................
அந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கின்றது.
தன்னையே நம்பாதவனாக மீள அவ்வறிவிப்பை அசைபோடுகின்றான் தனக்குள்.
வெற்றியாளராக அவன் பெயர் அறிவிக்கப்படுகின்றது.
முதலாமிடம்!
அவனோ மகிழ்ச்சியின் உச்சத்தில். தாயின் முகம் கண்முன்னால் நிழலாடுகின்றது.
ஒரு ரூபா பணத்திற்காக கஷ்டப்பட்டவன், தன் ஆற்றலால், இலட்சத்தியத்தால் உலகின் கண்களுக்கு சாதனையாளனாக உயர்ந்து நிற்கின்றான்.
ஊரிலேயே அவனைத் திரும்பிப் பார்க்காதோர், விரும்பி இரசிக்கின்றனர் அவன் திறமையை.
உலக நாடுகளின் அழைப்புக்கு மத்தியில், இச்சாதனையாளன் தன் நாட்டில் தானாற்றப் போகின்ற சேவைகளுக்காக கனாக் காண்கின்றான் இன்னுமொரு அப்துல் கலாமாக!
வாழ்த்துவோம் வாழ்வில் இன்னும் வெற்றிகள் குவியட்டும்!
நமது முயற்சிக்கும் வெற்றிக்கும் வறுமை தடையல்ல!
(முகநூலில் அறிந்த தகவல்களை எனது வரிகளில் தந்துள்ளேன்.)
ஜன்ஸி கபூர் - 01.06.2021
எலான் மஸ்க்
பணம் மனித வாழ்வின் போக்கினையே தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக விளங்குகின்றது. செல்வம் கொண்டோர் மனித சமூகத்தின் கௌரவ அடையாளமாகப் பார்க்கின்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.
பணம் சம்பாதிப்பதும், அதனை சேமிப்பதும், பாதுகாப்பதும் ஒரு கலைதான். இக்கலை நுட்பம் அறிந்தவர்களை இன்று உலகமும் பெருஞ் செல்வந்தர்களாக பிரமித்துப் பார்க்கின்றது.
"பணம் பாதாளம் வரை பாயும்" என்பார்கள். அந்தப் பணத்தைத் திரட்டுகின்ற வாழ்க்கைப் போராட்டத்தால் பலரது கனவுகளும், சந்தோசங்களும், இளமையுமே காணாமல் போய் விடுகின்றன.
உலகின் ஓர் மூலையை வறுமை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, மறுமுனையிலே செல்வத்தின் உச்சக் கட்டம் இமயம் வரை எட்டி நிற்கின்றது.
இன்றைய வாழ்வினைத் தீர்மானிக்கின்ற மையப் புள்ளியான செல்வத்தை ஆள்கின்ற செல்வந்தர்களுள், முதல் பத்து வரிசையில் இடம்பெற்ற ஒருவரே எலான் மஸ்க்.
இவர் 1971 ஜூன் 28, அன்று கனேடிய தாயிற்கும், தென்னாபிரிக்க தந்தைக்கும் பிறந்தவர். இவர் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் வளர்ந்தார்.
பன்னிரெண்டு வயதாக இருக்கும்போதே, தமது வீடியோ விளையாட்டுக்கு அவரே குறியீடுகளை எழுதி விற்று, பணம் சம்பாதித்த இளம் வயது முயற்சியாளன்.
கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும்,
பின்னர்
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார்.
பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் படிப்பை அங்குத் தொடரவில்லை.
இவர் டெஸ்லோ நிறுவனத் தலைவர். கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர். இவரது சொத்து மதிப்பு 202 பில்லியன் டாலர்களாம்.
அடடா..... ஆச்சரியத்தில் என் விழிகளும் விரிந்து நிற்கின்றன.
- 1999 இல் பேபால் என்ற ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்.
- ஜிப் 2 ஐ தனது சகோதரர் கிம்பலுடன் இணைந்து நிறுவி சில காலம் கழித்து விற்றார்.
- 1999 இல் எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை தொடங்கினார்.
- 2002 ஆம் ஆண்டில் மஸ்க் விண்வெளி உற்பத்தியாளர் மற்றும் விண்வெளி போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.
- 2004 ஆம் ஆண்டில் அவர் மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா மோட்டார்ஸ் இன்க் இல் தலைவராகவும் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் சேர்ந்தார்.
- பிறருடன் இணைந்து இவர் உருவாக்கிய டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சார மகிழுந்துகள் ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்தையும் விஞ்சிவிட்டது என 2017 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.
- 2008 இல் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார்.
- 2016 இல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார்.
- 2016 ஆம் ஆண்டில் நியூராலிங்க் என்ற நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தை அவர் இணைந்து நிறுவினார்.
- மேலும் சுரங்கப்பாதை கட்டுமான நிறுவனமான "தி போரிங்" நிறுவனத்தை நிறுவினார்.
- ஓபன் AI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் நியுராலிங்க் என்ற அமைப்பில், மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் எலான் மஸ்க் முனைப்பாக இருக்கிறார்.
அதுமாத்திரமல்ல 2024 ஆம் ஆண்டில் மனிதர்களை செவ்வாய்க்கிரகத்தில் குடியமர்த்தும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்.
சினோபார்ம் தடுப்பூசியும் நாமும்
யாழ்ப்பாணத்தில் தற்போது கொரோனா தடுப்பூசியான சினோபார்ம் கிராம சேவையாளர் மட்டத்தில் தற்போது ஏற்றப்பட்டு வருகின்றது. உண்மையில் இது இம்மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். பல வருட கால யுத்த வலியில் அல்லல்பட்ட மக்கள் அண்மைக் காலமாக இந்நோயின் பாதிப்பினாலும்; அவதியுறுகின்றார்கள். கடந்த சில நாட்களாக சிறு வயதினருக்கும் இந்நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.
எனவே வீரியமிக்க கொரோனாத் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இத்தடுப்பூசி அவசியமாகின்றது. எதிர்வரும் நாட்களில் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
உடலில் நோய் எதிர்க்கின்ற சக்தி குறைவடைகின்றபோதே எந்த நோயும் நம்மை ஆக்கிரமிக்கின்றது. இது ஆளுக்காள் வேறுபடக்கூடியது.
நோய் எதிர்ப்பு சக்தி என்பது யாது?
உடலை நோயிலிருந்து காக்கின்ற தன்மை என சுருக்கமாகக் குறிப்பிடலாம். நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது கலங்கள், இழையங்கள், உடலுறுப்புக்களால் ஆக்கப்பட்ட நமது உடலைப் பாதுகாக்கின்ற கட்டமைப்பாகும். நமது குருதியிலுள்ள வெண்குருதி சிறுதுணிக்கைகளே நம்மை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றன.
ஒரு மைக்ரோ லீற்றர் இரத்தத்தில் 4000 தொடக்கம் 11000 வரையிலான வெண்குருதி சிறுதுணிக்கைகள் காணப்படுகின்றன. இக்கூறுகள் குறைந்தால் உடலில் நோயை எதிர்க்கின்ற தன்மையும் குறைந்து விடுகின்றது.
சரி...... இத்தடுப்பூசியின் தன்மையை இனிப் பார்ப்போம்.
COVID-19 நோயை உருவாக்கும் வைரஸ் SARS-CoV-2 இனைக் கட்டுப்படுத்துவதற்காக இது சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான சினோபார்ம் என்ற நிறுவனம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இத்தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் திரிபடைந்த வைரஸூகளுக்கு எதிராகவும் இது பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6வது தடுப்பூசி இதுவாகும். 22 இற்கும் மேற்பட்ட நாடுகள் இதனைப் பயன்படுத்தியுள்ளன எனும் தகவலை அறியக்கூடியதாக உள்ளது.
இது 80 சத வீதம் செயற்றிறன்மிக்கதாம். அதாவது இவ்வூசி பெற்றுக் கொண்டோரில் 80 சதவீதமானோருக்கு கொரோனாத் தொற்று ஏற்படாதாம். ஆனாலும் ஏனையோருக்கு தொற்று ஏற்பட்டாலும்கூட அது பாதிப்பின்றிக் காணப்படும்.
'நோய் எதிர்ப்பு ஆற்றல் செயல்பாட்டில் உங்கள் உடலை முழுக்க புதிய வகையான செயல்பாட்டுக்குத் தயார் செய்வதற்காக இரண்டாவது முறையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்'' என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நோய் தொற்று சிகிச்சைத் துறை பேராசிரியர் டேன்னி ஆல்ட்மன் தெரிவித்தார்.
SAGE BIBP தடுப்பூசியை 2 அளவுகளாக (0.5 மில்லி) பயன்படுத்த WHO பரிந்துரைக்கிறது.
எனவே 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும். முதலாவது டோஸ் ஏற்றப்பட்டு 4 வார இடைவெளியின் பின்னர் இரண்டாவது டோஸ் ஏற்றப்படவேண்டும்.
முதலில் யாருக்கு தடுப்பூசி போட வேண்டும்?
18 வயதுக்கு மேற்பட்ட அதிக ஆபத்து உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- அத்துடன் தொற்றா நோய் உள்ளவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகம். எனவே நீரிழிவு, இருதய நோய், குருதி அமுக்கம் போன்ற தொற்றா நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி ஏற்றவேண்டும்.
- எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் அது கட்டுப்பாட்டில் இருக்கும்போது இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியும்.
- பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுப்பாடில்லை

- மேலும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதற்கான மருந்து எடுப்பவர்களும் குருதி உறைதல் பிரச்சினை உள்ளவர்களும் கடும் ஒவ்வாமை உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று இத்தடுப்பூசியை செலுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கொரோனாத் தொற்று உள்ள ஒருவர் இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியாது. தொற்று மாறிய பின்னர் அதாவது இரு வாரங்கள் கழித்து அவர்கள் தடுப்பூசியைப் போட முடியும்.
- கர்ப்பம் தரிப்பதற்கு எதிர்பார்ப்பவர்களும் கர்ப்பிணித் தாய்மாரும் இந்தத் தடுப்பூசியை ஏற்றக் கூடாது.

- 38.5ºC க்கு மேல் உடல் வெப்பநிலை உள்ள எவருக்கும் காய்ச்சல் வராத வரை தடுப்பூசியை ஒத்திவைக்க வேண்டும்.
இந்தத் தடுப்பூசி உடலில் சென்று செயற்படத் தொடங்கும்போது தலையிடி, காய்ச்சல், உடம்பு நோ போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.
தடுப்பூசி நம்மை பாதுகாக்கின்ற ஒரு அரணே தவிர முழுமையான தீர்வல்ல. எனவே தடுப்பூசி ஏற்றிய பின்னரும்
முகக்கவசம் அணிதல்,
சமூக இடைவெளி பேணுதல்,
கைகளை அடிக்கடி கழுவுதல்
போன்ற செயற்பாடுகளைத் தொடரவேண்டும். ஏனெனில் தடுப்பூசி ஏற்றியவருக்கு கொரோனாத் தொற்றால் பாதிப்பு ஏற்படாதபோதும், அவர் கொரோனாக் காவியாக இருக்கலாம். அவர் ஊடாக தடுப்பூசி ஏற்றாத ஒருவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே ஊசி ஏற்றப்படுகின்ற சந்தர்ப்பங்களை அரசு நமக்கு வழங்கினால் நிச்சயம் நாம் அதன் மூலமாக நமது பாதுகாப்பினையும் நம்மைச் சூழவுள்ளோரின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஜன்ஸி கபூர் - 01.06.2021