About Me

2020/08/29

நீர்ப்பூக்கள்

வான்முகில் வந்திட மயில்கள் ஆடிட

தேன் துளிகளின் தித்திப்பில் மனமாட


கண்ணோரம் நனைந்திடும் இயற்கையின் எழிலில்

எண்ணமும் சிறகடித்துப் பறந்திடுமே உவகையினில்


வெடித்த தரைக்குள் உயிர்த்த அரும்பும்

வெற்றிச் சிலிர்ப்பினில் புன்னகையை ஊற்றும்


பசுமைக் குடையின் ஈர்ப்பில் புவியும்

பரவசத்தில் செழிப்பினைக் காட்டும் விழிகளுக்கே


பறவைக் கூட்டத்தின் குளியலோ விண்ணில்

உறவாகுமே மழையின் இனிமையும் மனதில்


ஜன்ஸி கபூர் 

உதவும் கரங்கள்

 அழுக்கும் பழகிய அவல வாழ்வு

நழுவாமல் ஈர்க்கின்ற வறுமைப் போராட்டம்

தழுவாத உறவுகளால் உரிமையான வீதியோரம்

எழுதப்படாத விதியாக அழுத்திச் செல்கின்றதே


உணர்வுக்குள் பிசையப்பட்ட மனித நேயங்கள்

உலாவும் பூமிக்குள் புளாங்கித மழை

உதரத்தின் ஓலத்திற்கு உரமாகும் கரங்களே

உள்ளத்தின் மாண்பை  உயிர்த்திடுமே சிகரமாய்


நிலையற்ற வாழ்வுக்குள் அலைகின்ற துன்பங்களை

கலைக்கின்ற கருணையும் விலையற்ற பொக்கிஷமே

பாலைவன வெயிலையும் குளிர்த்திடும் பாசத்தினில்

சாலையோர யாசகமும் உயிர்த்திடும் தினமும்


இரக்கத்தில் இசைகின்ற மனங்களில் என்றுமே

இறைவனின் நேசமும் நிறைத்திடும் உதயத்தினை

இதயத்தின் அன்பினில் இன்னலும் கரைந்திடும்

இறந்தும் மறக்கப்படாதே உதவும் கரங்கள்


ஜன்ஸி கபூர் 

தேடினேன் தந்தது

சந்தன வாசத்தில் செந்நிற ஆதவன்

சிந்திய ஒளியினில் சிறகடிக்கிறேன் தென்றலில்

தேடினேன் தந்தது மலர்களும் மகரந்தத்தை

தேன் அமுதத்தில் மனமும் மகிழ்ந்திடவே

வான் வெளியும் பதிக்கின்றதே சுவடுகளையே   


ஜன்ஸி கபூர்

2020/08/28

அன்பு

இதயத்தின் அழகான உணர்வு மொழி

இன்னலைத் துடைத்திடும் அற்புத வழி

தேனூற்றின் சுவையினில் மனதினை நனைத்திடும்

கண்ணோரத் துடிப்பினில் கருணையாய் படர்ந்திடும்


நான் நாமாகி பொதுநலமும் உயிர்த்திடும்

நானிலத்தின் துடிப்புக்குள்ளே நற்செயலே அறமுமாகும்

வெறுப்பும் எரித்திடாத விருப்பின் மையலது

வெந்தணலிலும் பிழிந் தூற்றும் பனிச்சாரலது


கையளவு மனதுக்குள்ளே கசிந்திடும் தாய்மையும்

நம்பிக்கை தந்திடும் இடரின் வாழ்வுக்குள்ளும்

கரும்பாறையும் இளகிடும் ஆறுதல் வருடுகையில்

கரும்பின் சுவையினில் உறவுகளும் தித்திக்குமே


மேகத்தின் அன்பினில் மண்ணும் நனைந்திடுமே

மேதினி வாழ்ந்திடவே வழிகாட்டும் ஊக்கமது

அன்பின் வருடலில் சுகமாகும் என்னிதயம்


ஜன்ஸி கபூர் 






2020/08/27

துளியும் கடலும்

தரையைத் தொட்டு மீளுகின்ற அலைகளாய்

தவிக்கின்ற உன் நெஞ்சம் புரிகிறது

கரையினில் உடைகின்ற அலைகளாய் உன்னாசைகளும்

மனதினில் துடிப்பது எனக்கும் புரிகின்றது

இருந்தும் புரியாதவனாய் நழுவுகின்றேன் அடிக்கடி


வீசுகின்ற காற்றுக்குள் நிரப்புகின்றாய் சோகங்களை

மரத் துடிப்பினில் வீழ்கின்ற இலைகள்

நினைவூட்டுகின்றது உன்னை எனக்குள் எப்பொழுதும்

நானின்றி வெறும் சருகாய் உருமாறுகின்ற

உன்னைக் கண்டும்கூட கடந்துதானே செல்கின்றேன்.


உன் சாய்விற்கு என் தோள்கள்

உன் ஆசைகள் என்னைத் துரத்துகின்றன

நான் முற்றும் துறந்தவனா இல்லையே

உன் அன்பு புரிந்தும் ஊமையாகின்றேன்

யாருக்காகவோ உன்னைத் தனிமைப்படுத்துவதாகவே நினைக்கிறேன்

 

இசை எனக்குப் பிடிக்கும் இசைப்பேன்

மூங்கில் துளைகளை அருட்டுகையில் விழுகின்றது

பொங்கும் உணர்வுகளுடன் போராடும் உன்னினைவு

இருந்தும் தயங்குகின்றேன் உன்னைத் தாங்கிட

உன் அருகாமை என்னை உடைத்திடுமோ

 

காதல் உணர்வல்ல வாழும் வாழ்க்கை

காதலை நான் கற்கும் வரைக்கும்

நமது விம்பங்கள் மோதுவதை விரும்பவில்லை

நம்மை நாம் புரிந்து கொள்ளும்வரை

தள்ளியே நிற்கின்றேன் உறுதி மனதில்தான்

சந்திப்பு வேண்டாம் உறுதியுரைக்கு என்னாச்சு

உன் உருவைக் கண்டதும் உராய்கின்றது

உந்தன் விழியோரம் செருகியிருக்கும் நீர்

எந்தன் மனசுக்குள் பாய்கின்றது தாராளமாக


நாம் பேசியிருக்கிறோம் நிறைய ரசித்திருக்கிறோம்

காதல் சாயமில்லா நட்புத்தானே அது

அப்படித்தானே நினைத்துப் பழகினேன் உன்னோடு

அருகிலிருந்தால் உந்தன் அமைதியை ரசிக்கிறேன்

உரு மறைந்தால் உறுத்துகிறதே இதயமும்

இருவரின் பேச்சிலும் வாழ்வியல்தானே நிறைந்திருக்கின்றது

இருந்தும் நமது தோழமைக்குள் காதலா

கண்டுபிடிக்க காத்திருக்க வேண்டும் நாம்தான்

 

உனது நீட்சிக்குள் நானென்ற எல்லையை

எனது மனம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது

உன் துயரங்களுக்கு காது கொடுக்கிறேன்

விழி நீரையும் துடைக்கிறேன் தாயாகி

இன்பத்திலும் துன்பத்திலும் ஒருங்கிசைகின்றோம் நேர்கோட்டில்

இருந்தும் சேமிக்கின்றாய் துடிப்புக்களை என்னுள்ளே


நான் வாசிக்கையில் வீழ்கின்றாய் வரிகளாக

உன் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன்

நம் அன்பின் எல்லையை உணரும்வரை

தள்ளியே நிற்கிறேன் முல்லைக் கொடியே


நீயும் விடுவதாக இல்லை தொடர்கிறாய்

உந்தன் சோகங்களை என்னிடம் கொட்டுகையில்

கண்களின் வேதனையைப் படிக்கின்றேன் 

கன்னக் கதுப்பில் உறைந்திடும் உனதீரத்தில்

உள்ளம் நனைந்து விடுகின்றது தானாய்

உந்தன் இமையோரம் வடியும் நீர்த்துளிகள்

எனக்குள் அல்லவா கடலாகப் பெருகின்றது.

காரணம் புரியாமல் நானும் தவிக்கிறேன்


உன் அண்மையை ரசிக்கிறேன் எப்பொழுதும்

உனக்காகப் பிரார்த்திக்கிறேன் சோகங்களைப் பிடுங்க

உந்தன் கரங்களைப் பற்றிக் கொஞ்சிட

உள்ளத்தில் மெல்ல ஆவல் முளைக்கிறது

விலகலே நலன் என்கிறது மனசு

விலகினாலும் இணையத் துடிக்கின்றது அன்பு


என் விலகலில் நீ மௌனிக்கிறாய்

அப்பொழுதெல்லாம் அனலாகின்ற  தவிப்பும் கடலாகின்றது

நீ உதிர்க்கின்ற கண்ணீர்த் துளிகளை

சேமிக்கின்ற மனதுக்குள் எப்பொழுது சுனாமிதானே

பொங்குகின்ற கடலை ஏக்கம் தகர்க்கின்றது

உந்தன் உருவுக்குள்ளே ஒன்றிக்கிடக்கும் என்னைப்

பத்திரப்படுத்து வந்திடுவேன் நானும் உன்னிடத்தில்


ஜன்ஸி கபூர் - 29.08.2020

Kesavadhas

 

ஜன்ஸி கபூர் தன் உளக்கிடக்கையை ஒரு நாடகத் தனிமொழிபோல் உரைக்கும் லாவகம் மிக்க அழகு!

உன் அன்பின் எல்லையை உணரும் வரை தள்ளியே நிற்கிறேன்!

என் விலகலில் நீ மௌனிக்கிறாய்!

அதுதான் புதிரான புதிர்!

என்னை உனக்குள் பத்திரப் படுத்திக் கொள்!

ஆனால் அவள் மனம்...

உன் கண்ணீரால் என்மனக்கடல் உருவானது..

அங்கு எப்பொழுதும் சுனாமியே!

நல்ல உவமங்கள் படிமங்கள் அங்கங்கே விளையாடுகின்றன!

வாழ்த்துகள்!

*****





2020/08/26

நா(ண)ளைய உலகம்

விருட்சத்தின் விருந்தோம்பலாய் பூமிக்குள் பசுமை/

விரும்பியே வளர்த்திடலாம் மரங்களை வரமாக/

பருவ மழையின் விளைச்சலாய் குளிர்மையும்/

தருமே மகத்துவமான வாழ்வினை நமக்கே/


வேரறுப்பின் வலியில் துளையிடுமே வான்படையும்/

ஊரோரம் தனலாகுமே வெய்யோன் கதிர்களும்/

வறட்சி ரேகைக்குள்ளே உருமாறிடும் மண்வளமும்/

இறப்பின் எச்சங்களாய் சிறப்பின்றி மாறிடுமே/


அழகும் கரைந்தோட நீரோடைகள் வற்றுமே /

அகிலத்தின் உயிர்ப்பும் மூச்சறுந்தே வீழ்ந்திடுமே/

அற்புத பூமிக்குள்ளே அவலம்தானே செயற்கையும்/

ஆரோக்கியமாகட்டும் உயிர்களும் அணைத்திடுவோம் இயற்கையை/


ஜன்ஸி கபூர்  

 


குருதிப்பூக்கள்



விடியல் தேடும் அன்றில்களாய் நாம்/

துடித்திடும் வலிக்குள் தொலைத்திட்டோம் சிறகினை/

உணர்வுகளின் தன்மானம் தடுக்கி விழுகையில்/

உயிருக்குள்ளும் அடிமையின் கோஷத்தின் ஓலம்/

போரின் கீற்றில் பொசுங்கிய வாழ்வையும்/

போர்த்தியதே குருதிப்பூக்களின்; சோக வாசம்/


ஜன்ஸி கபூர் - 26.08.2020



இரக்கத்தின் இதயம்

அன்னைதிரேசா அன்பின் சுடரானார் அகிலத்தினில்/

அரவணைத்தாரே அனாதைகளையும் பரிவுள்ள தாய்மையால்/

இரக்கத்தின் இதயமாய் ஒளியிட்டார் ஏழைகளுக்கும்/

இறந்தும் வாழ்கின்றாரே அற்புத அன்னையாக/


ஜன்ஸி கபூர் - 26.08.2020




அந்தாதி கவிதை - 4

அன்னை தெரெசா அன்பின் பண்பாளர்/

பண்பாளர் நெஞ்சத்தினில் கருணையும் பேரொளியாய்/

பேரொளியாய் திழ்ந்ததனால் நல்வாழ்வில் பலருமே/ 

பலருமே போற்றிடும் மனிதநேயத்தின் அன்னை/  

 

ஜன்ஸி கபூர்

2020/08/25

வீரபாண்டிய கட்டபொம்மன்



வீரமே சிம்மாசனமாய் வீற்றிருந்த மாவீரன்/

வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டான் ஆங்கிலேயரை/

நாயக்கர் குலத்தின் வீரிய வம்சமிவர்/

நற்பரிசாம் முன்னோர்க்கு பாஞ்சாலங் குறிச்சியே/


அகத்தினில் அச்சமேது கெட்டிபொம்மு பெயரிலும்தான்/

அகவை முப்பதில் அரசேறினார் பாளையக்காரராக/

பதினெட்டாம் நூற்றாண்டு பாருமே வியந்திட/

பக்குவமாய் ஆண்டரே பண்பின் வழியினில்/


வெள்ளையரும் வெருட்டினர் உள்ளமதை வருத்தித்தான்/

கொள்ளை இலாபம் அள்ளினர் வரியினில்/ 

ஆதரிக்கா வீரனாய் எதிர்த்தே நின்றார்/

அகிலத்தின் பார்வைக்குள் அதிசயத்தில் பூத்தார்/


ஜாக்சன்துரை தலைமையிற் தொடுத்தனர் போரை/

ஜாதிமல்லிப் பூவாய் காத்திட்டார் மண்ணை/

ஜாக்சன் துரை தீட்டிய தந்திரமெல்லாம் / 

முறியடித்தார் கட்டபொம்மன் முகவரியுமானார் பாஞ்சாலங்குறிச்சியினில்/


ஆலோசித்தனரே வஞ்சகத்தில் மன்னனை வென்றிடவே/

கட்டபொம்மனும் காலத்தின் வலிமையில் தோற்றாரே/

பானெர்மன் தலைமையில் பெரும்படை திரண்டதுவே/

பாசிசங்கள் வலியினில் வெளியேறினார் மன்னருமே/


முற்றுகையின் வலிமையில் சிதைந்ததே கோட்டையும் /

உறுதிக் கோட்டையும் இறுதியில் தோற்கவே/

வெளியேறினார் கட்டபொம்மனும் கைதானார் விஜய ரகுநாதனால் /

வென்றனர் எதிரிகளும் கொன்றனர் வீரத்தினை/


வஞ்சக வெற்றியால் அஞ்சாத மாமலையும்/

நெஞ்சம் துடிக்க தூக்கிலடப்பட்டாரே வெள்ளையரால்/

மனசுக்குள்ளே நிறைந்த மங்காப் புகழோன்/

மண்ணுக்குள்ளே எருவானான் கண்ணுக்குள்ளே சோகமே/


ஜன்ஸி கபூர் 




 

ஆசையிலோர் கடிதம்

 கடிதத்தின் இதழ்களில் ஒற்றினேனே இதயத்தினை

மடியில் சாய்கின்றன உந்தன் நினைவுகளும்

துடிக்கின்றதே எந்தன் விழிகளும் சுகத்துடன்

படிக்கின்றதே அன்பும் நம்மையும் ரசித்தே

விடிகின்ற பொழுதெல்லாம் காதல் மொழியினில்

வடிகின்ற கவியிலும் வீழ்கின்றாயே வார்த்தைகளாய்  


ஜன்ஸி கபூர் - 28.08.2020

யாழ்ப்பாணம் 



காதல் சங்கீதமே

விழி மொட்டுக்களின் வாசத்தில் காதல்/

விழுகின்றதே சுகத்துடன் உணர்வினைப் பிசைந்து/

தழுவுகின்றாய் உயிருக்குள்ளே உன்னையே விதைத்து/

நழுவுகின்றதே நாணத்தால் எந்தன் நிழல்தானே/


காத்திருப்பின் அலைவரிசைக்குள் மொழியின்றதே வசந்தமும்/

போத்தியிருக்கும் பெண்மைக்குள்ளும்; புளாங்கிதத்தின் தூறல்கள்/

காத்திருப்பின் சுகத்தினில் ஆள்கின்றாயே நினைவுகளால்/

காதல் சங்கீதமே இசைக்கின்றாயே எனையே/


பிறை நுதலில் விரலின் விம்பங்கள்/

சிறைபிடிக்கிறதே சந்தனத்தைக் குலைத்து குதூகலமாய்/

சிறகடிக்கும் வண்ணத்தில் மகிழ்வின் ரேகைகள்/

உறவாகி இணைந்திருப்போம் ஆனந்தத்தின் அழகோடு/


திலகமிடும் கரங்களை நீயும் பற்றுகையில்/

தித்திக்கிறதே இதயமும் உந்தன் அருகாமையில்/

இல்லற சுகத்தினில் ஆயுளும் நீண்டிடட்டும்/

இன்பத்து வானில் பறந்திடுவோம் அன்றில்களாய்/


ஜன்ஸி கபூர் 

ஏர் பிடித்து உழுவோம்

ஏர் பிடித்து உழுவோம் நாமே/

சுற்றமும் உயிர்க்கும் இயற்கை வாசத்தினில்/

ஏற்றம் காணும் வாழ்வோடு இணைவோமே/

பற்றுமே விளைவும் வாழ்வையும் உயர்த்தி/


கழனிக்குள் புதைத்திடும் நெல்லின் சுவாசத்தினில்/

தழுவுகின்றதே மனமும் மகிழ்வைச் சுமந்து/

உழுதிடும் நிலத்தினில் பயிர்களின் சிரிப்பு/

வாழ்ந்திடலாம் தினமும் மண்வாசத்தை நுகர்ந்தே/


கலப்பையின் கலகலப்பில் நாற்றுக்கள் ஆடும்/

கவலையின் துடிப்பும் தென்றலில் கரையும்/

வழிகின்ற வியர்வைக்குள் உழைப்பும் குவியும்/

வரம்பெல்லாம் வரமாய் நெல்மணிகள் விளையும்/


காய்ந்திட்ட மண்ணுக்குள் ஏரினைப் பூட்டி/

கருணை பூமிக்குள் நீரினைப் பாய்ச்சி/

பருவ விதைகளால் உழவும் செய்தே/

விரும்பும் பூமியாய் உலகையே மாற்றுவோம்/


ஜன்ஸி கபூர்  

 

 


நீ வருவாயென

மனதின் வலியும் உதைக்கிறதே மலையாகி/

கனவின் வனப்பும் சுற்றுகின்றதே அனலோடு/

நினைவின் ஈர்ப்பும் நீளுகின்றதே உன்னோடு/

வனப்பான வாழ்வும் கிழிகின்றதே சோகங்களாய்/


எட்டுத் திசைகளும் விரித்தனவே சிறகினை/

ஏக்கத் துடிப்பினில் அலைகின்றேன் தினமதில்/

பூத்திருந்த விழிகளும் வியர்க்கின்றனவே கண்ணீரில்/

பார்த்திருக்கும் பாதைக்குள்ளே காணவில்லையே உனையே/


சொத்தாய் கொண்டேனே உனையே உயிருக்குள்/

காத்திருக்கிறதே நெஞ்சும் நீ வருவாயென/


ஜன்ஸி கபூர் 

2020/08/24

தீராத சோகங்கள்

தீராத சோகங்கள் ஆறாத வடுக்கள்/

தீயாய் பொசுக்குமே நிம்மதியையும் விரட்டி/

தீர்ந்திடுமே குறைகளும் துணிவுடன் முயன்றால்/

தீட்டிடும் இலக்கினில் உறுதியும் உயர்வானால்/

ஈட்டிடுமே வெற்றியும் ஓடிடுமே சோர்வும்/

ஈகைக் கரங்களும் சிவந்திடும் அழகாய்/


ஜன்ஸி கபூர் - 24.08.2020


அன்பே சிறப்பு

உருவம் பார்த்தே மதித்திடும் பண்பு/

மாறிட வேண்டும் மாந்தரின் சிந்தையினில்/

அறிந்திடாரோ அகத்தின் அன்பே உயர்ந்ததென்று/

புரிந்திட்டோர் வாழ்வுக்குள் புளாங்கிதம் கோடி/


ஜன்ஸி கபூர் - 24.08.2020

யாழ்ப்பாணம்


அகலிது ஆக வனைமோ

இரு மனம் இணைந்திட்ட திருமணத்தில்/ 

விருப்போடு இணைந்தவன் நிழல் போலானேன்/

திரு வுயிருக்குள் எனையே இணைத்தவன்/

வருவானே நீண்டிடும் வாழ்நாளில் என்றிருந்தேனே/


ஊர் நீங்கிச் செல்கையில் துளைத்ததுவே/

போரும் துணை யவன் உயிரினையும்/

சிந்தையில் காதலை சிந்தியே காத்திட்டவன்/

வெந்திட்டானே மரணத்துள் எனையும் நீங்கி/


சந்தனக் கட்டையவன் விளையும் பூமிக்குள்/

எந்தன் உடலும் இணைந்திடல் வேண்டுமே/

என்ற துடிப்பினில் அலைகின்றதே விழிகளும்/

மண்ணையும் உயிர்க்கும் குயவனைத் தேடி/


கண்டேனே குயவனையும் கண்ணீரில் கரைந்தேனே/

விண்ணேவிய கணவனுக்கு வேண்டுமே தாழியும்/

வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப்/

பற்றிக்கொண்டு வந்த வெண்பல்லியைப் போல/


ஒத்திசைந்து வாழ்ந்தேனே இல்லறமும் இனித்திட/

ஒன்றாய் வாழ்ந்தவன் இன்றில்லை என்னோடு/

அவனின்றி வாழ்ந்திடாதே எந்தன் உயிரும்/

அவனிக்குள் தனித்திராதே இனித்திட்ட வாழ்வும்/


அவனுடன் நானும் உறைந்திட வேண்டும்/

அகலமான தாழியினை அமைக்கவே உதவிடு/

உடன்கட்டை ஏறிடும் ஒழுக்கத்தினில் வாழ்ந்திட/

உடன்படுமே எந்தன் மாங்கல்ய வரமும்/


ஜன்ஸி கபூர்  

பின்னூட்டம்

Kesavadhas

ஜன்ஸி கபூர் இயல்பான தென்றலென வருடும் நடை சோகச்செய்தியையும் கம்பீரமாகச் சொல்கிறது!

ஆன்றனி இறந்து கிடக்கிறான்;

சீசர் பார்க்கிறான்;

உறைந்து கிடக்கும் இவனது மரணத்திலும் ஒரு பேரொழுங்கு உள்ளது என்பான்(High order of great solemnity in his death)

அதைப் போன்ற ஒரு சூழலை கவிதாயினி யின் எழுத்து காட்டுகிறது!

திருவுயிருக்குள் எனையே இணைத்தவர்

சிந்தையில் காதலைச் சிந்தியவன் வெந்திட்டான்

மண்ணையும் உயிர்க்கும் குயவன்..

என்ன ஒரு வார்த்தை மண்ணுக்கே உயிர் கொடுக்கிறான்!

அருமை!

விண்ணேவிய கணவனுக்கு வேண்டுமே தாழியும்

அவலச் சுவைக்கே அங்கீகாரம் அளிக்கும் கவிதை!

மிகவும் அழகு!

வாழ்த்துகள் கவிஞரே!


 


 

கழிப்பறைத் தேவை

 கழிவுகள் தேங்கினால் உடலுக்குள் நஞ்சே/

அழிவுக்குள் சுழலுமே ஆரோக்கிய வாழ்வும்/

மரமது உயிர்க்கும் மண்வெளியினில் கழிவகற்றல்/

அறமாகுமோ இயற்கையின் வனப்பும் சிதைவுறமே/

ஆறறிவு மனிதா நாறுமோ நானிலமே/

அமைத்திட்டால் கழிப்பறையை அழகாகுமே வீடுகளுமே/


ஜன்ஸி கபூர் - 24.08.2020

யாழ்ப்பாணம்


தென்றலே நீ பேசு

மனதுக்குள் தூறலாய் வருடுகிறாய் என்னை/

கனவுக்குள்ளும் விழிக்கிறாய் உணர்வினைப் பிழிந்தே/

நனவின் உயிர்ப்பினில் இசைந்துவிட்ட தென்றலே/ 

இனிமையைப் பூசவே இதமாகத் தழுவு/


நீள்கின்றதே தனிமையும் நீயின்றி நிஜமாக/

ஆள்கின்றாய் என்னையே சுவாசத்திலும் சுகமாக/

தேள் வதையே நீயில்லாப் பொழுதெல்லாம்/

தேன் அமுதாய்  உந்தன் வார்த்தைகளே/


தேடுகின்றேன் தினமும் உந்தன் நிழலினை/  

நாடுகின்றேன் உன்னை எந்தன் வாழ்வுக்குள்ளே/

வாடுகின்றேன் நீயின்றி வேரறுந்த வலியினில்/


மெல்லப் பூத்திருக்கும் நாணத்தின் அழகினில்/

மெல்லிய கன்னத்திலும் செந்நிறப் பிறையோ/

வெள்ளிக் கொலுசொலிக்குள் எந்தன் துடிப்பொலியே/

உள்ளத்தின் தென்றலே நீ பேசு/


ஜன்ஸி கபூர்  

 



குறளோடு கவிபாடு

குறள்:-605

 

' நெடுநீர்_மறவி_மடிதுயில்_நான்கும்  கெடுநீரார்_காமக்_கலன் 

 

சிந்தைக்குள் விரிந்திடும் சிந்தனைகளின் தொழிற்பாடு

சந்தர்ப்பங்கள் இழக்கின்றனவே காலத் தாமதிப்பினால்

விந்தை யுலகின் விளைச்சலில் இன்புறவே

மாந்தருக்கும் வேண்டுமே நேரத்திற்கான செயலூக்கம்


செய்கின்ற காரியங்கள் செயலிழக்கும் சோம்பலினால்

சாய்ந்திடலாமே  நாமும் சுறுசுறுப்பின் உழைப்பினில்

நினைவுகள் உதிர்கையில் மறதியும் நீளுமே

நினைவாற்றல் வளர்கையில் பேராற்றல் வாழ்வினில்


சுகமிழக்கும் தூக்கமே தூக்குமேடை ஆரோக்கியத்திற்கு

சுகமழிக்கும் தீயவற்றை களைகையில் பேரின்பமே


ஜன்ஸி கபூர் 

இணைய மோகம்

தொலைபேசி அலைவினால் கைக்குள் உலகம்/

தொல்லையே மூலதனமாய் மெய்க்குள் அவலம்/

தொடர்ந்திடும் இணையத்தின் துடிப்பலை நகர்வில்/

தொய்வின்றி கழிக்கின்றதே வாழ்வியல் நடப்பும்/


இணையத்தின் தவிப்பினில் இளைப்பாறிய கருவும்/

இணைந்திடுதே இப்போதெல்லாம் இரவு பகலறியாது/


உறவுகள் தொலைவினில் உள்ளங்களோ தனிமையினில்/

நறவு வாழ்வுக்குள்ளும் போதையாய் வலைத்தளங்கள்/

உலக விரிபரப்பின் தொழினுட்பச் சுருக்கம்/

அவலத்தின் அறைகூவலுடன் தரிசாக்கும் தளிர்களையும்/


ஜன்ஸி கபூர் - 23.08.2020



2020/08/23

இன்ப அவஸ்தை

 காதல் விழிகள் பேசிடும் மொழி/

காத்திருப்பின் நகர்வினில் அவஸ்தையின் வலி/

பூத்திருக்கும் கனவுக்குள்ளும் வருடலின் ஒலி/

உயிருடன் உணர்வுகளையும் கலந்திடும் வழி/

ஜன்ஸி கபூர் - 23.08.2020


இலக்கின் வெற்றி

உணர்வின் துடிப்பினில் தொழிலின் மாண்பு

பிணக்கின்றியே மோதுகின்றனர் ஈர் துருவங்களாகி

இலக்கின் குறியினில் பதிந்திட்ட விழிகள்

கலங்கிடுமோ அச்சமும் விரட்ட இருந்தும்


மரணமும் அஞ்சிடும் புகைப்பிடிப்பாளன் துணிவினில்

வீரத் துப்பாக்கியின் வெஞ்சினமும் மௌனித்ததோ

எழுதுகோலின் முனையில் விழுதாகும் புதுமைகளைத்

தழுவிடக் காத்திருக்கிறதே அகிலமும் ஆர்வத்தினில்


ஜன்ஸி கபூர் 

காதோரம் பேசுகையில்

 


விழிகளின் காதலும் மொழியினை மறந்திட

அழகிய தனிமைக்குள் உருகுகின்ற இதயங்கள்

இழுத் தணைக்கும் அவன் சுவாசத்தில்

இதழுக்குள்ளும் உறைந்திடுதே வெட்கப் புன்னகை    


தழுவிக்கிடக்கும் காதலும் பிழிந்தூற்றுகிறது மயக்கத்தினை

வருடுகின்ற தென்றலவன் கன்னத்தில் விதைக்கும்

பருவத்தின் துடிப்புக்களோ மெல்லிய காமத்தினுள்

இரு மனங்களும் ஏக்கத்தின் பிழம்புகளாக


இடை நசித்து இடமாறும் சுகங்கள்

காதோரம் பேசுகின்றன தித்திப்பின் சுவையோடு


ஜன்ஸி கபூர் 0 22.08.2020

யாழ்ப்பாணம்



விரிகதை



உணர்வுகள் வடிக்கின்ற எழுதுகோல் மனம்தானே

அவளுக்கு இன்றாவது எழுதிவிட நினைக்கிறேன்

அவள் தூரத்து உறவுப் பெண்

மணம் கண்டும் வாடிக் கிடக்கின்றாள்

தன்னை நிராகரித்த அவனுக்காக பேதலிக்கிறாள்

முட்டாள் பெண்ணே சினம் எனக்குள்ளேறுகிறது.   

வெள்ளைக் கடதாசிகளை பற்றுகின்றன கரங்கள்

இன்றாவது சில வரிகள் அவளுக்காக.


சிந்தையை சீர்படுத்த முன்றலுக்குள் ஒன்றிக்கொண்டேன்

கலகலத்தன சிட்டுக்குருவிகள் படபடத்தன சிறகுகள்

அவள்மீதான கோபம் கொஞ்சம் கரைந்தது.

சிட்டுக்களின் குரலொலி கைபேசி அழைப்புமணியாயிற்றே

பட்டென்று சிந்தைக்குள் அது உரைத்தது.


வைத்தியரின் மருத்துவ சந்திப்புக்கான நாள் குறித்தல்

கைபேசி இலக்கங்களைச் சுழற்றும் நேரம்

வாசல் மணி உரப்புடன் அழைத்தது.

செயலும் அற விரைகின்றேன் வாசலோரம்.


குறுக்கே அம்மா தேநீரை நீட்டியபடி

நீராவி  சுவாசித்த தேநீர் ருசியினை

உறிஞ்சிட முனைகையில் மகளின் சிணுங்கல்


நடைபெறவுள்ள பரீட்சைக்கான ஆயத்தப்படுத்தலுக்கான அழைப்பது

சிந்தனைகள் அறுகின்றன முழுமையின்றி எனக்குள்


அவள் மீண்டும் நாளையாகி தொலைவாகின்றாள்

கைகள் பற்றிருந்த காகிதங்களோ பட்டங்களாக

நானும் சற்றுத் தள்ளாடித்தான் போனேன்.


ஜன்ஸி கபூர் -22.08.2020

யாழ்ப்பாணம்.