About Me

2019/07/14

தீர்மானம் எடுத்தல்

உங்கள் நிறுவனம் சார்பாக பெறுமதியான முடிவொன்றை எடுக்கக் கூடிய சந்தர்ப்பம் ஒன்று -
Related image

பங்குபற்றல் அணுகுமுறைத் தலைமைத்துவமானது அதிபர்களுக்கு பங்குபெறு தீர்மானம் எடுக்கும் திறனை வழங்குகின்றது.  இதில் கருத்துப் பரிமாற்றம் தரும், இணைந்து தீர்மானம் எடுக்க உதவும் சிறந்த பண்புகள் காணப்படுகின்றன. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத்தினர் உள்ளிட்ட சகலரும் பங்கேற்கின்றார்கள். 
இதன் நன்மைகள்
  • உயர்ந்த தரமான தீர்மானம் 
  • சிறந்த தீர்வு 
  • தீர்மானம் எடுப்பதில் அதிகமானோர் உரிமையும், ஒத்துழைப்பும் வழங்குதல்.
  •  குழுவாக இயங்கும் ஆற்றலை வலுப்படுத்தும். 
  • அதிகமானோர் இணைந்து செயற்படுவதனால் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது இலகு.  
உங்கள் நிறுவனம் சார்பாக பெறுமதியான முடிவொன்றை எடுக்க கூடிய சந்தர்ப்பம் -
1. பாடசாலை அபிவிருத்தி குழுவின் ஊடாக செயலுபாயத்  திட்டத்தில் உள்ளடக்குவதற்காக பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டம்   தயாரிக்க  தீர்மானம் பெறல்.
அல்லது
2. பாடசாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குழுக்கள் உருவாக்கம்.
------------------------------------------------------------------------------------------
அச்சந்தர்ப்பத்தில் தீர்மானம் எடுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படிமுறைகள்  
-----------------------------------------------------------------------------------------
முகாமை என்பது அதிபர் மேற்கொள்ளும் உத்திகள் மட்டுமன்றி, பலரது கூட்டுச்செயல்களையும் குறித்து நிற்கின்றது. பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு செயல்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதனால் தீர்மானம் அவசியமாகின்றது. தீர்மானம் மூலமே செயற்றிறன் வாய்ந்த முடிவுகளைப் பெற முடிகிறது. அதனூடாகவே அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியும். 

எமது நாட்டின் தரமான கல்வியின் உயிர்ப்பூட்டும் தலைவர்களாக அதிபரே விளங்குகின்றார். அதிபரின் முக்கிய பணிகளில் ஒன்று தீர்மானம் எடுத்தல் ஆகும். உலகமயமாதலின் முக்கிய இயல்பாக தீர்மானம் எடுத்தல் காணப்படுகிறது.   சமூகத்தின் வளச்சிக்கும், மாற்றத்துக்கும் வேண்டியவராக  அதிபர்  இருப்பதனால், தினமும் பல்வேறு பெறுமதியான தீர்மானம்  எடுக்க வேண்டியவராக அவர் இருக்கின்றார். 

அதிபர் தீர்மானம் எடுக்கும் போது பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்
------------------------------------------------------------------------------------------------- 
  • அந்தத்  தீர்மானம் கல்லூரி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 
  • அந்தத் தீர்மானம் மாணவ வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 
  • அந்தத் தீர்மானம் சமகாலத்துடன் இணைய வேண்டும். 
எனவே குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கும் போது அது சம்பந்தமான அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதனை பகிர்ந்தளிப்புத் தீர்மானம் என்பார். இது ஜனநாயகத்|தன்மை வாய்ந்தது. தீர்மானம் எடுக்கும் போது அதிபர் தலைவர்களின்  தலைவராக  இருக்கின்றார்.  

சந்தர்ப்பம் -
------------------ 
 பாடசாலை அபிவிருத்தி குழுவின் ஊடாக செயலுபாயத்  திட்டத்தில் உள்ளடக்குவதற்காக பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டம்   தயாரிக்க  தீர்மானம் பெறல்.

தீர்மானம் எடுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படிமுறைகளாவன -
-----------------------------------------------------------------------------------------
1. பிரச்சினை இனம் காணுதல் 
  • ஆசிரியர் கூட்டம், முகாமைத்துவக் கூட்டம், பகுதித்தலைவர்கள் , சிரேஷ்ட  மேற்பார்வையாளர்கள் ஊடாக ஆசிரியர்களின் மிக முக்கிய தேவைப்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடி பிரச்சினைகள் கண்டறிதல். 
பிரச்சினை பகுப்பாய்வு 
  • SWOT பகுப்பாய்வு மூலம் பலம், பலகீனம், சவால், அச்சுறுத்தல் கண்டறிதல்.
  • TPS பகுப்பாய்வு ( Think , Pair , Share)
  • PMI பகுப்பாய்வு  ( Plus, Minas, Interest)
  • 6 Hats Method மூலம் பிரச்சனைகளுடன் தொடர்புடைய விடயங்கள் கண்டறியப்படும். 
  • சிரேஷ்ட ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கற்பித்தல், மேற்பார்வைகள் மூலம் ஆசிரியரிடம் அவதானிக்கப்பட்ட விடயங்களில் இருந்து பொருத்தமான விடயம்  அல்லது விடயங்கள் தெரிவு  செய்யப்படும்.
  • ஆசிரியர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு மிகவும்  தேவையான பயிற்சிகள்  கண்டறியப்படும்.  
  • பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி குழுவினருடன் கலந்துரையாடல் .
  • பாடசாலை அபிவிருத்தி குழுவினருடன் கலந்துரையாடல்.
  • இவ்வாறாக இச்செயற்பாடு ஏன் அவசியம் என்பதைப் பற்றி கலந்துரையாடப்படும். 

2. சிறப்பான தீர்வு முறைகளைத் தெரிவு செய்தல் 
  • சிந்தனைக் கிளறல்  
  • தேவையின் அடிப்படையில் பொருத்தமான விடயம் அல்லது விடயங்கள் இனம் கண்டு, அது தொடர்பாகச் சிந்தித்தல். அதாவது ஏனையவர்களுடன் இணைந்து சிந்தனைக் கிளறல் மேற்கொள்ள வேண்டும். பலரும் கூறும் கருத்துக்களில் இருந்து பொதுமையாக்கம் செய்தல் வேண்டும். 

    இவ்வாறாக ஆசிரியர்களுக்கு வழிகாட்ட வேண்டிய விடயத் தலைப்புக்கள்    கண்டறியப்படும்.


  • உதாரணமாக :-

    • தாபனவிதிக்  கோவை 
    • வகுப்பறை முகாமைத்துவம் 
    • கற்பித்தலில் இணையப் பயன்பாடு 
    • ஸ்மார்ட் வகுப்பறை  
    • கற்பித்தல் உபகரண ஆக்கம் 
    இவற்றை முன்னுரிமைப்படுத்தி பொருத்தமான தலைப்பு தெரிவு செய்யப்படும். இதனை மேற்கொள்ளத் தேவைப்படும் நிதி, வளவாளர்கள், காலம், இடம், நேரம்  பயனாளர்கள்,  வழங்கவேண்டிய வெளியீடுகள்  தொடர்பாகத் தீர்மானித்தல்.

    3. மாற்று வழிகள் தொடர்பாகவும் தீர்மானித்தல் 
    • ஒரே பாடசாலை ஆசிரியர்களின் அனுபவத் பகிர்வு.
    • ஏனைய பாடசாலைகளை தரிசித்தல் மூலமாக விடயங்களை கண்டறிதல். 
    • தனித்தனியாக வழங்குதல் அல்லது பாட ரீதியாக  அல்லது அனைவருக்கும் வழங்குதல்.
    • கையேடுகள் வழங்கல்.  
    • ஆசிரியர் கூட்டத்தின் போது அவசியமான தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக வழங்கல். 
    • ஏனைய பாடசாலை ஆசிரியர்களின் அனுபவங்களை கேட்கும் சந்தர்ப்பம் வழங்கல். 
      போன்ற மாற்று வழிகள் மூலமாகவும் கண்டறியப்படும்.
    4. ஒவ்வொரு வழிகளிலும் உள்ள அனுகூலங்கள், பிரதிகூலங்கள்              தொடர்பாகக் கண்டறிதல். 

    5. சிறந்த தீர்வினை த் தெரிவு செய்தல். 
    •  அதிக அனுகூலங்களைத்  தரும் வழிகளைத் தெரிவு செய்தல். 
    • இவ்வாறாக தீர்மானம் எடுக்கும் குழுவினரின் கருத்துக்கள் பகிரங்கப் படுத்தப்படும். பெறப்பட்ட தீர்மானம்  தொடர்பாக பாடசாலை அபிவிருத்திக்கு குழு மற்றும் பாடசாலை சமூகத்திற்கு அறியச் செய்தல்.
    • இற்றைப்படுத்தப்பட்ட சரியான தகவல்கள், அறிக்கைகள் மற்றும் சான்றுகளை முன்னிலைப்படுத்தி எல்லோருடனும்  தீர்மானத்தை பற்றி கலந்துரையாடல்.  
    • இவ்வாறாகப் பெறப்பட்ட ஆசிரியர் பயிற்சி சார் மிக அவசியமான தீர்மானங்களை பாடசாலையின் வருடாந்த செயலுபாயத் திட்டத்தில் இணைத்தல். 
    • ஏனைய பயிற்சி சார் தீர்மானங்களை ஐந்தாண்டுத் திட்டத்தில்  இணைத்தல்.  
    6. அச் சிறந்த வழியை நடைமுறைப்படுத்தல். 
    தீர்மானம் பெறுவதினுடாக கிடைத்த பொருத்தமான நிதி வளம், பௌதிக வளம், மனித வளம், நேரம், தொழில் நுட்ப  வளம், தகவல் வளம் என்பவற்றை சிறப்பாகப் பயன்படுத்தி, பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி இனை பாடசாலையில் மேற்கொள்ளல். 

    7. தீர்வு பெறல். விளைவுகளை மதிப்பிடல் 
    மீண்டும் கற்பித்தல் மேற்பார்வைகள், அவதானங்கள்,  கருத்துக்கள் மூலமாக ஏற்கனவே காணப்பட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு முன்னேற்றம் காணப்படுகின்றதா என்பதை மதிப்பீடு செய்தல்.  இதனூடே ஆசிரியர்களின் செயற்றிறனை அதிகரித்து, அதனூடாக மாணவர்களின் தரமான கல்வியை மேம்படுத்த முடியும்.

    தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த வருடம் வேறு உபாயங்களைக் கையாண்டு மீண்டும் இதனை செயற்படுத்தி தீர்வு பெற முயற்சித்தல்.

    அதிபர் இவ்வாறாக தீர்மானம் எடுக்கும் வகிபாகம் வகிக்கும் போது, அவர் முயற்சியாண்மையாளராகவும்
    பிரச்சினையை கையாள்பவராகவும்
    வள ஒதுக்கீட்டாளராகவும்
    பேசித் தீர்ப்பவராகவும் செயற்பட்டு பாடசாலையை வினைத்திறன் வாய்ந்த சமூக நிறுவனமாக மாற்றி அமைக்கின்றார். 

    Related image


    Ms. A.C.Jancy
    Principal
    J/Kadeeja Ladies College,
    Jaffna

    2019/07/13

    ஊக்குவித்தல் நுட்பங்கள்

    Related image

    ஊக்குவித்தல் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம்  நிறுவன பணியாளர்களால் வினைத்திறனான வெளியீடுகளைப் பெறலாம் .
    -----------------------------------------------------------------------------

    ஊக்கல்  சில வரைவிலக்கணங்கள் 

    • 'ஊக்கல்' என்பது கேட்பவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை அல்லது தேவைகளை அவரது சூழலில் காணப்படும் பொருள்களின்பால் வெளிப்படுத்தும் ஒரு செயன்முறையாகும்"  - G.M.Blair & Othersd (1947)

    • "அது யாதேனும் பெறுபேற்றை பெறுவதற்காக ஆட்களை வழிப்படுத்தும்,  உந்தும் போக்காகும்" - J.W.Atkinson (1966)

    எனவே ஊக்கல் என்பது யாதேனும் நடத்தைக்கு சக்தி வழங்குகின்ற உந்து சக்தியாகும். இதனை  விரும்பிய  இலக்கை அடைவதற்காக தனியாட்களை தூண்டும் செயல் முறையாகவும்,  நிறுவனத்தின் இலக்குகள் சார்ந்து உயர் மட்டத்திலான முயற்சியை எடுப்பதற்கான விருப்பமாகவும் கொள்ளலாம்.

    ஒருவரை உடலியல் மற்றும் உளவியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம் ஒருவருடைய தேவைகளையும், விருப்பத்தையும் பூர்த்தி செய்கின்ற செயல் ஊக்குவித்தல் எனப்படுகிறது. 

    கிடைக்கும் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்துவதுடன், அதிபர்- நிறுவனப் பணியாளர்களின் தொடர்பு, போதனைசார் செயற்பாடுகளின் மேற்பார்வை மற்றும் மதிப்பீடு, ஆசிரியர்களது பன்மைத்துவ விருத்தி, குழு விருத்தி, செயற்பாட்டு ஆராய்ச்சி, ஒரு நேர் கணியப் பாடசாலைச் சூழல் போன்ற அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புபட்டதாகவும், சமநிலை உள்ளதாகவும் பேணப்படும் போதே  பாடசாலையிலும் வினைத்திறன்மிக்க அபிவிருத்தியானது  ஏற்படுகிறது. எனவே நிறுவனப் பணியாளர்களிடம் கடமைகளையும், பொறுப்புகளையும் பொருத்தமாகப் பகிர்ந்து கொள்வதுடன், அவர்களைப் பாடசாலை இலக்குகளை நோக்கி முறையாக வழிப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலமே  பாடசாலையை சக்திமிக்க நிறுவனமாக மாற்ற முடிகிறது.

    பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள், ஊழியர்களின் தேவைகள் வேறுபாடானவை.  எனவே அவர்களின் தேவை,  விருப்புகளை அறிந்து அந்த நிறைவுத் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான ஊக்கலை வழங்க வேண்டும். ஊக்குவித்தலானது தேவை, உந்துதல், இலக்கு, தூண்டு விசை எனும்  நடத்தையின் பல்வேறு பகுதிகளைக்  கொண்டுள்ளது.

    வேலையாள் ஒருவர் உயர்மட்டத்திலான வினையாற்றலை வெளிப்படுத்துவதற்கு மிகவும் அவசியமான காரணிகளாக பின்வருவன காணப்படுகின்றன :-
    • சாதனை 
    • அங்கீகாரம் 
    • பொறுப்பு
    • வேலையில் உயர் அடைவதற்கான வாய்ப்பு 
    • தனிப்பட்ட வளர்ச்சி 

    இவற்றை ஊக்குவித்தல் வழங்கும். இவ் ஊக்குவித்தலானது ஒரு உள்ளார்ந்த உணர்வாகவும், ஒரு உளவியல் செயன்முறையாகவும் இருப்பதனால் திருப்தி உணர்வு ஏற்படுகின்றது. இதன் மூலம்  நிறுவன பணியாளர்களின் உள்ளார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அவர்களும் நிறுவனத்தின் இலக்கு நோக்கி நகர்கின்றார்கள்.

    ஊக்குவித்தலானது சகலரையும் நிறுவனச் செயற்பாடுகளில் பங்கெடுக்கச் செய்வதால், சகலரும் தீர்மானம் எடுத்தலில் பங்குபற்றுகின்றார்கள்.  இத்தகைய  ஜனநாயகச் சூழ்நிலையின் வெளிப்படுத்துகை  மூலம்  இவர்களிற்கிடையில் "தாமே உரித்துடையவர்" என்ற உணர்வு  ஏற்படும்.  இது பாடசாலை தொடர்பான இலக்குகளை அடைவதற்கு உந்துசக்தியாக  காணப்படுகின்றது.

    உயர்மட்டத்தில் ஊக்குவித்தலை வழங்கும்போது பெறப்படும் உந்துசக்தியானது சமநிலை அடைந்து பொருத்தமான நடத்தையைத் தீர்மானிக்கிறது. இதனால் குறைபாடுகள் குறைவாகக் காணப்படும்.  முரண்பாடுகள்  காணப்படாத    உன்னதமான  நிலை    ஏற்படும். 

    ஊக்குவித்தலை  பாடசாலையில் நடைமுறைப் படுத்தும் விதம்.  
    ------------------------------------------------------------------------------
    • பங்கேற்பு - 
    சுதந்திரமான கருத்து வெளிப்படுதல்,  ஜனநாயகத் தன்மையான சூழல்   ஏற்படுத்தும்.
    • தொடர்பாடல் -  
    அடையப்பட்ட வெற்றிகள், இலக்குகள் பற்றி சகலரும் அறியச் செய்தல். இருவழித் தொடர்பாடல், கவனத்துடன் செவிமடுத்தல், தகவல் பகிர்வு, நேர்மையும் விசுவாசமும்  ஏற்பட்டு   ஆசிரியர்களை ஊக்குவிக்கும்.
    • அங்கீகாரம் - 
    ஒருவரின் தனித்த தன்மையை அங்கீகரிக்கும் போதும்,  மதிக்கும்  போதும்  அவர் உள்ளார்ந்த திருப்தி அடைவர். இதனால் பாடசாலை அபிவிருத்திக்கு உதவுவர்.
    • அதிகார பகிர்வு - 
    ஒருவரின் பதவி உயர்த்தப்படுமானால், அது திட்டமிட்ட அபிவிருத்திக்கு வழி வகுக்கும். எனவே தகுதியானவர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்து அவர்களை சிறந்த தீர்மானம் எடுக்க ஊக்குவிக்கும் போது பாடசாலை வினைத்திறனான செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுக்கும். அதிகார பகிர்வு கடமைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தும். 

    பிறரால் ஏற்கப்படல், பிறரால் பாராட்டப்படல், பிறரோடு இணைந்து வாழல்  போன்ற  பண்புகள் நிறுவன பணியாளர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும்.

    இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நிறுவன பணியாளர்களால் வினைத்திறனான வெளியீடுகளைப் பெறுவதற்காக ஊக்குவித்தல் நுட்பங்களைப் பயன்படுத்த முடியும். 
    --------------------------------------------------------------------------------------
    பாடசாலை அதிபர் ஒருவர் தனது ஆசிரியர்களையும், சக பணியாளர்களையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்   
    ---------------------------------------------------------------------------------------
    அதிபரானவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் திருப்தி ஏற்படுத்தும் விடயங்கள், அதிருப்தி ஏற்படுத்தாத  விடயங்கள்  தொடர்பில்  அறிந்து வைத்திருத்தல் வேண்டும். அப்பொழுதே பணியாட்களின்   தன்னடைவுத் தேவைகளை அடைந்து கொள்வதற்குரிய தடைகளை அதிபரால் அகற்ற   முடியும்.  இதனால்  பணியாள்  மன அழுத்தம்  குறைந்த  சூழ்நிலையில்  நிறுவனத்தின்  இலக்கு நோக்கி பயணிக்கலாம்.

    பின்வரும் ஊக்குவித்தல் உத்திக்களைப்  பிரயோகித்தல்.
    • பாராட்டும், பரிசும் சரியான முறையில், சரியான நபருக்கு வழங்குதல்.
    • ஒரு செயலை செய்து முடிப்பதற்கான செயல் திறமை, நடத்தை பற்றித்  தெளிவாகக் கூறல்.
    • தங்கள் கூறிய கருத்துக்கள் மாற்றவர்களால்  வரவேற்கப்பட்டதாகவும், மற்றவர் உறுதுணையாய் நிற்பதாகவும் உணரச் செய்தல்.
    • அவர்களுக்கு எழும் வினாக்களுக்கு நேர் பதில் வழங்கி பாராட்டுதல்.
    • கடினமான செயல்களை சிறு, சிறு செயல்களாக செய்யப் பழக்குதல்.
    • எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்ய   வழிப்படுத்தல்.
    • வேலைகளை உடனுக்குடன் மதிப்பிடல்.
    • மற்றவருடன் ஒப்பிடாமல் அவரவர் திறமைக்கு ஏற்ப மதிப்பிடல்.
    • ஒவ்வொருவரின் தனித்தன்மையை இனம் கண்டு ஊக்குவித்தல்.
    • புதிய அறிவு கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் புதிய, புதிய செயல் திட்டங்களில் ஈடுபடுத்துதல். 
    • பாடசாலை மட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
    • தொலைவிலிருந்து பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.
    • மேலதிக கற்றலில் ஈடுபடும் ஆசிரியர்களை ஆசிரியர் கூட்டங்கள், விளம்பர பலகைகளில் வெளிப்படுத்தி ஊக்குவித்தல்.
    • பெற்றோர் தரவட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதனூடு ஆசிரியர்-  பெற்றோர் இடையே சீரான தொடர்புகளைப் பேண உதவுதல்.
    • பயனுறுதிமிக்க தொடர்பாடல்  மூலம் உற்சாகப்படுத்தல்.
    • கூட்டுணர்வுள்ள ஒன்றிணைந்த செயற்பாடுகளில்  ஈடுபடுத்தல்.
    • போதிய வளங்களை பெற்றுக் கொடுத்து கற்றல் -  கற்பித்தலை மேற்கொள்ள வழிப்படுத்தல்.
    • பாடசாலைச் சூழலை மகிழ்ச்சி மிக்கதாக மாற்றுதல். 
    • பாடசாலையில் ஏற்படும் உளநெருக்கீடுகளையும், முரண்பாடுகளையும் குறைத்தல்.
    • அனைவரின் திறமைகளுக்கு ஏற்றவாறு பொறுப்புகளை பகிந்தளித்தல். 
    • அவற்றை முறையாக மேற்பார்வை செய்தல், ஊக்கப்படுத்தல், சிறப்பான   வெளிப்படுத்தலூக்காக பரிசு வழங்கல். 
    • கற்றல் - கற்பித்தல் செயன்முறை  போட்டிகளை ஆசிரியர்களுக்கிடையில் நிகழ்த்தி   பரிசு வாங்க, பாராட்டுப்  பெற ஊக்குவித்தல்.
    • கற்றல் - கற்பித்தல் உபகரணங்களை புத்தாக்கத்துடன் தயாரித்து, கற்பிக்க ஊக்குவித்தல்.
    • கற்பித்தல் துணை சாதனங்களாக  கட்புல, செவிப்பு புல சாதனங்களை பயன்படுத்த ஊக்குவித்தல்.
    • தாம் செய்யும் செயல் மூலம் கிடைக்கும் பயன்கள் பற்றிய விளக்கத்தையும், கற்பித்தலின் தன்மை பற்றியும், கற்பித்தல் மேற்பார்வை மூலமாக ஆளணியினருக்கு உணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தம்மை தாமே மதிப்பிட்டு தமது செயல்களில் ஆர்வத்துடன் செயற்படும் சூழ்நிலையை உருவாக்குதல்.
    • அழுத்தங்கள் ஏற்படாமல் ஊழியர்களை வழிப்படுத்தல்.
    • ஆசிரியர் கற்பித்தல் செயன்முறையில் காட்டும் முன்னேற்றங்களை உடனுக்குடன் அவர்களுக்கு தெரியப்படுத்தல்.
    • சிறப்பான அதிபர் - ஆசிரியர் அல்லது ஆளணியினர் தொடர்பினை பேணல். 
    • வாண்மைத்துவம் சார்ந்த அனுபவப் பகிர்வினை குழுச்செயன்முறைகள்  மூலம் மேற்கொள்ளல்.
    • விரைவான தீர்மானம் இயற்றும் ஆற்றல், படைப்பாற்றல் திறன்,  அர்ப்பணிப்பு என்பவற்றை அதிகரித்தல். 
    • வளங்களைப் பெற்றுக் கொடுத்தல்.
    • சிறந்த தொடர்பாடல் திறன்களை பிரயோகித்தல்.
    • செவிமடுத்தல், புரிந்து கொள்ளுதல் போன்ற சமூகத் திறன்களை பிரயோகித்தல்.
    • பணியாளர் நலம் பேணல்.
    • முக மலர்ச்சியுடனும், நகைச்சுவையுடனும் செயலாற்றும் சூழல் உருவாக்கல்.
    • நிறுவனப் பணியாளர்களின் முக்கியத்துவத்தை வெளிப்படையாக அங்கீகரித்தல் அவர்களின் தரம் உயரக் காரணமாக  அமையும். 
    • ஆசிரியர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும் போதே மாணவர்களின் கல்வித்தரமும் அதிகரிக்கும். எனவே ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் கல்வித் தகைமை, தொழில் தகைமை அதிகரிக்க அதிபர் வழி காட்ட வேண்டும்.  உயர் தகைமை அடையும் போது பாராட்ட வேண்டும்.
    • உரிய நிறுவனங்களில் தொடர்பு கொண்டு, பொருத்தமான தகவல்களைப் பெற்று ஆசிரியர்களின் தொழில் உயர்ச்சிக்கான விடயங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். 
    • பணியாளரின் சுயமரியாதையை ஏற்றல். 
    • அவர்களின் தன்னம்பிக்கையை மதித்தல். 
    • வலுவூட்டுதல் - புன்னகை,  தலை அசைப்பு   செயல்கள் மூலம்
    • வெற்றியைப் பற்றிய நம்பிக்கை ஊட்டல். 
    • கவலையைக் குறைத்தல். 
    • நல்லுறவு பேணுதல் - இதனால் மேம்பட்ட உறவு பேணப்படும்.
    • தனியாள் எதிர்பார்ப்புகளை நிர்ணயித்தல். 
    • ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை  உருவாக்குதல்.
    • ஆர்வத்தை எழுச்சியுறச் செய்தல். 
    • செய்யும் செயலில் கவனத்தை ஏற்படுத்தல். 
    • ஒருவருக்கு விருப்பத்தை ஏற்படுத்தும் ஊக்கிகளை அவருடைய இயற்கையான உந்துதலோடு இணைத்தல்.
              போன்ற நடவடிக்கைகளை  மேற்கொள்ளலாம்

    Ms. A.C.Jancy,
    S.L.P.S -3
    J/ Kadeeja Ladies College, 
    Jaffna









    2019/07/12

    பாடசாலை முரண்பாட்டு முகாமைத்துவம்

    முகாமைத்துவ செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது பாடசாலையில் எதிர் கொள்ளும் முரண்பாடுகள் 
    ---------------------------------------------------------------------------------------------------

    Image result for முரண்பாடு
    ஏதோ ஒரு இலக்கினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நம்  வாழ்வில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். சிலர் நினைவில் நின்று விடுவார்கள். சிலர் வெறுப்போடு மறைந்து போவார்கள். வெறுப்போடு  மறையும்  காரணங்களில் ஒன்று முரண்பாடு. 

    "வேறுபட்ட இலக்குகள் அல்லது பெறுமானங்களை கொண்டிருக்கும் இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் தோன்றக்கூடிய வெளிப்படையான இயக்கமற்ற தன்மை முரண்பாடு எனப்படும்."

    முரண்பாடு என்பது ஒருவரிடத்தே அல்லது இருவருக்கிடையில் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோரின் கருத்து வேறுபாட்டின் அல்லது எதிர்ப்பின் பெறுபேறாகத் தோன்றுவதாகும். சுருங்கக் கூறின் வேலையிடத்தில் தனது கடமைக்கும், மனசாட்சிக்கும் இடையிலான எதிர்ப்பு நிலையை இது அடையாளப்படுத்துகின்றது.

    முரண்பாடுகளுக்கான சில பண்புகள் 
    • குறித்த நபர் அல்லது நபர்கள் தொடர்பில் வெறுப்பை வெளிப்படுதல்.
    • குறை கூறல்.
    • தமது கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருத்தல். 
    • ஒதுக்கி வைத்தல். 
    • தனித்திருத்தல். 
    • பேசுவதை தவிர்த்துக் கொள்ளல். 
    • கண்கள் நேருக்கு நேர் பார்த்து பேசாதிருத்தல். 
    முரண்பாட்டுக்கான காரணங்கள் 
    • பக்கச்சார்பு. 
    • தனிநபர் ஆளுமை.
    • புலனுணர்வில் வேறுபாடு. 
    • வேறுபட்ட இலக்கு. 
    • வரையறுக்கப்பட்ட வளம். 
    • தவறான தொடர்பாடல். 
    • அந்தஸ்து பேணப்படல். 
    • பகுதியாக்கல். 
    • தெளிவற்ற பொறுப்புக்கள். 
    • ஆளுமை மோதல். 
    • அதிகப்படியான வேலைச்சுமை. 
    • வேறுபாடான எண்ணக்கருக்கள். 
    முரண்பாடு மூலம் கிடைக்கும் நன்மைகள் 
    • புதிய கருத்துக்கள் உருவாகும். 
    • இணக்கமாக வாழக் கற்றுக் கொடுக்கிறது. 
    • தேவைகளை நிறைவு செய்கிறது. 
    • நடத்தை கோலங்களை கற்றுக் கொடுக்கிறது. 
    • பிரச்சனைக்கான தீர்வு தேடித் தரும். 
    • தொடர்பாடல் திறனுக்கான பயிற்சி. 
    • உணர்ச்சிவசப்படுவதை தடுக்கும். 
    • வித்தியாசமான அனுபவங்களைத் தரும். 
    • புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும். 
    • உண்மையான பிரச்சனை வெளிப்படும்.
    • குறைபாடுகளை இனம் கண்டு கட்டுப்படுத்த முடிகிறது. 
    • இரு தரப்பும் இணங்கும் வெற்றிகரமான தீர்வு. 
    • புரிந்துணர்வு வளர்ச்சி. 
    முரண்பாடுகள் மூலம் கிடைக்கும் தீமைகள் 
    • சக்தி நேரம் வீணாகும். 
    • தாமத முடிவு. 
    • ஆரோக்கியமற்ற சமூகம். 
    • எரிச்சலூட்டுதல். 
    • பின்தங்கிய நிலை. 
    • குழுவினர் விலகுதல். 
    • குறிக்கோளை அடைய முடியாது. 
    முரண்பாட்டின் வகைகள் 
    • கட்டமைப்பு ரீதியிலானது. 
    • அமைப்பு ரீதியிலானது. 
    கட்டமைப்பு ரீதியிலானது.
     அதிபர்  -  ஆசிரியர் தொடர்பு (செங்குத்து வடிவம் )
    -----------------------------------------------
    • தொலைவிலிருந்து பாடசாலை வரும் ஆசிரியர் அதிக லீவு எடுத்தல். 
    • தாமதமாகி வந்த ஆசிரியருக்கு சிவப்பு கோடு இடல். 
    ஆசிரியர்  -  ஆசிரியர் தொடர்பு (கிடை மட்டம் )
    -----------------------------------------------
    • ஆசிரியர் ஒருவர் அதிபரின் வேண்டுகோளின் படி இன்னுமொரு ஆசிரியரால்  கற்பித்தல் மேற்பார்வை செய்யப்படும் போது அதனை எதிர்த்தல், ஒத்துழைப்பு வழங்காமை, விமர்சித்தல். 
    ஆசிரியர்  -  மாணவர் தொடர்பு
    ------------------------------------------------
    • குழப்படி செய்யும் மாணவரை ஆசிரியர் தண்டித்தல். 
    அதிபர்  -  பிற பாடசாலை அதிபர் 
    ------------------------------------------------------
    • ஒரே வளவுக்குள் இரு பாடசாலைகள் இயங்குதல்.
    நிரந்தரக் கட்டிடம் உள்ள அதிபர்,  அதே பாடசாலையில் தற்கலிகமாக இயங்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மன அழுத்தத்துக்குள்ளாக்குதல்

     அம் முரண்பாடுகளை வினைத்திறனாக தீர்த்துக் கொள்வதற்கு தங்கள் கடைபிடிக்கும் படிமுறைகளை விளக்குக 
    ---------------------------------------------------------------------------------------
    முரண்பாடுகள் முடிவடைவதில் நன்கு அடிப்படை விதங்கள் உள்ளன. 
    • வெற்றி    -  தோல்வி 
    • தோல்வி  -  வெற்றி 
    • தோல்வி   - தோல்வி 
    • வெற்றி   -  வெற்றி 
    இவற்றுள் வெற்றி  -  வெற்றித் தீர்வு முறை மிகச் சிறந்ததாகும்.

    ஒழுங்கமைப்பினுடாக முரண்பாட்டுக்கான தீர்வுக்காக  கடைபிடிக்கப்படும் பல்வேறு உபாயங்களாவன : -
    • தவிர்த்தல். 
    • தீர்வொன்றை விதித்தல். 
    • மிருதுவாக்குதல். 
    • ஒழுங்கமைப்பின் குறிக்கோளை நிறைவுபடுத்திக்  கொள்ளல். 
    • பிரதிநிதியுடன் கலந்துரையாடல்.
    • கட்டமைக்கப்பட்ட இடைத்தாக்கம். 
    • பேச்சுவார்த்தையும் பேரம் பேசுதலும். 
    • மத்தியஸ்தம். 
    • பிரச்சினை தீர்த்தல். 
    • ஒழுங்கமைப்பை மறுசீரமைத்தல். 
    தீர்வு காணும் உத்திகளுக்கான அணுகுமுறைகள் 
    1. பகுப்பாய்வு அணுகுமுறை 
    2. தொகுப்பு அணுகுமுறை 
    இவற்றுள்
    1. பகுப்பாய்வு அணுகுமுறை மூலமாக பிரச்சினை சிறு, சிறு கூறுகளாகக்  பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கூறுகளும் தீர்வு காணுதல் ஆகும். இதன் மூலம் சிறந்த தீர்வு காண முரண்பாட்டுப் படம், மாற்று வழிகளைத் தோற்றுவித்தல் உதவுகின்றது. விடய ஆய்வின் மூலம் மாற்றுவழி தீர்வு உதவும் .

    2. கோட்பாட்டு முறை மூலமாக உடன்பாடு காணச் செய்தல் .இதன் மூலமாக தத்துவ ரீதியில் அதிபருடன் ஆசிரியரையும் இணங்கச் செய்தல்.

    இதன் அடிப்படையில் மேற்குறித்த பிரச்சினைகள் பகுப்பாய்வு செய்யப்படும் 
    மேற்கூறப்பட்ட  முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக தெரிவு செய்யும் நுட்பம் பிரச்சினை தீர்த்தல் ஆகும். பிரச்சினை தீர்த்தல் நுட்பத்தின் படி முறைகள் ஆவன:- 

    1. பிரச்சினை 
    1. தவறு எங்கே உள்ளது?  அவை யாவை? 
    2. காணக்கூடிய பண்புகள் யாவை? 
    3. அவற்றினால்  நட்டம்,  தீங்கு என்பவற்றை ஏற்படுத்துபவை யாவை? 
    இதன் அடிப்படையில்   மேற்காட்டப்பட்டுள்ள  பிரச்சினை பகுத்து ஆராயப்படும். அத்துடன் சம்பந்தப்படும் பிரச்சினைகள் தொடர்பாக பகுப்பாய்வு அணுகுமுறையின் முரண்பாட்டுப்படம் தயாரிக்கப்பட்டு காணப்பட்ட  பிரச்சினைகளுக்கு பெயர்கள்  இடப்படும்.

    தொலைவிலிருந்து பாடசாலை வரும் ஆசிரியர் அதிக லீவு எடுத்தல்.
    பெயர் இடல்  -அதிக லீவு  பெறல் 

    தாமதமாகி வந்த ஆசிரியருக்கு சிவப்பு கோடு இடல். 
    பெயர் இடல் - தாமத லீவு பெறல் 

    ஆசிரியர் ஒருவர் அதிபரின் வேண்டுகோளின் படி இன்னுமொரு ஆசிரியரால்  கற்பித்தல் மேற்பார்வை செய்யப்படும் போது அதனை எதிர்த்தல், ஒத்துழைப்பு வழங்காமை, விமர்சித்தல்.
    பெயர் இடல் - தன்னிச்சையான தீர்மானம்.

    குழப்படி செய்யும் மாணவரை ஆசிரியர் தண்டித்தல். 
    பெயர் இடல் - தண்டனை பெறல். 

    ஒரே வளவுக்குள் இரு பாடசாலைகள் இயங்குதல்.
    நிரந்தரக் கட்டிடம் உள்ள அதிபர்,  அதே பாடசாலையில் தற்கலிகமாக இயங்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மன அழுத்தத்துக்குள்ளாக்குதல்
    பெயர் இடல் -  ஒத்துழைக்காமை. 

    2. பகுப்பாய்வு 
    1. பண்புகளை வகைப்படுத்தி பார்த்தல். 
    2. காரணங்களை இனம் காணுதல் 
    3. குறைபாடுகளை அவதானித்தல் 
    4. பிரச்சினைகளின் தீர்வுக்கு தடையாக இருப்பவற்றை கண்டறிதல் 
     இவ்வாறே முரண்பாட்டுப்படம் அடிப்படையில் முரண்பாட்டுடன் தொடர்புள்ளவர்களை இனம் காணுதல்  வேண்டும். 

    சம்பவம் 1

    தொலைவிலிருந்து பாடசாலை வரும் ஆசிரியர் அதிக லீவு எடுத்தல்.
    அதிபர்  ,   ஆசிரியர் 

    சம்பவம் 2
    தாமதமாகி வந்த ஆசிரியருக்கு சிவப்பு கோடு இடல். 
    அதிபர்  ,   ஆசிரியர் 

    சம்பவம் 3
    குழப்படி செய்யும் மாணவரை ஆசிரியர் தண்டித்தல். 
    ஆசிரியர்,    மாணவர் 

    சம்பவம் 4
    ஆசிரியர் ஒருவர் அதிபரின் (எனது) வேண்டுகோளின் படி இன்னுமொரு ஆசிரியரால்  கற்பித்தல் மேற்பார்வை செய்யப்படும் போது அதனை எதிர்த்தல், ஒத்துழைப்பு வழங்காமை, விமர்சித்தல். 
    ஆசிரியர் , ஆசிரியர் 


    3. பிரவேசம் 

    தீர்வுகளை பிரயோகிக்கக்கூடிய உபாயங்கள்  யாவை ?

    தீர்வுக்கு வழி  காட்டும் விதிகள் யாவை? 

    தீர்க்கக் கூடிய வழி பற்றிய விரிவான கருத்தை எடுத்துக் காட்டுதல். 


    அத்துடன் முரண்பாட்டுப்படம் அடிப்படையில் தரப்பினரின் தேவைகளையும், ஐயப்பாடுகளையும் இனம்கண்டு பட்டியல்படுத்த வேண்டும். 

    சம்பவம் 1
    தேவைகள் : - மனிதத் தேவை, அனுகூலம், சுய கெளரவம் , தொடர்பாடல் 

    சம்பவம் 2
    தேவைகள் : - பாதிப்பு அடையாமை, தொடர்பாடல்  

    சம்பவம் 3
    தேவைகள் : - பாதிப்பு அடையாமை , மனிதத் தேவை, உணர்ச்சி கட்டுப்பாடு  தொடர்பாடல் 

    சம்பவம் 4
    தேவைகள் : - சிறப்பான மனிதத் தொடர்பு , தொடர்பாடல் 

    அவர்களின் தேவைகளை அவர்களிடம் நேரடியாகவோ அன்றி நண்பர்கள் மூலமாகவோ அன்றி நமது அவதானத்தின் அடிப்படையிலோ கண்டறியலாம். 

    இவ்வாறாக பிரச்சினை தொடர்பாக பகுப்பாய்வு செய்து தகவல்களை திரட்டிக் கொள்ளுதல் வேண்டும். 

    பின்னர் அதிபர் குறித்த தரப்பினருடன் சிறந்த முறையில் தொடர்பாடலைப் பேண வேண்டும்

    உதாரணம்: - 
    • "இவ்வாறான செயல்கள் பாடசாலையின் பெயருக்கு களங்கம் தரும்" என்று பாடசாலை குறிக்கோளினை நிறைவுபடுத்திக்க கொள்ளலாம். இதனால் அவர்கள் சுமுகமாகலாம்.
    • சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்வுக்கு வழி தேடலாம்.
    • அதிபர் நிறுவனம் தொடர்பான தகவல்கள் சுற்று நிருபங்கள் கருத்துக்களை சகலரும் அறியும் விதத்தில் பரிமாறலாம்.
    • சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தலாம். 
    • ஆளணியினரின் திறன்கள், குணப்போக்குகளை கண்டறிந்து அதற்கேற்ப பொறுப்புகளை ஒப்படைத்தல். அத்துடன் அவர்கள் பாடசாலைக்கு வரும் விதம், குடும்ப தன்மை, தனியாள் வேறுபாடுகள் என்பவற்றையும் கண்டறிந்து அதற்கேற்ப அவர்களுக்கு பொறுப்புகளை ஒப்படைக்கலாம். 
    அவ்வாறே
    • பாடசாலை சமூகத்துடன் மன ஒருமைப்பாட்டுடன் சிறந்த செவிமடுத்தல் திறனை வளர்க்க வேண்டும் இதன் மூலம் சிறந்த மனிதத் தொடர்பு கட்டி எழுப்பப்படுகிறது.
    • அவ்வாறே செவிமடுத்த விடயங்களை அன்புடன் மீளக் கூறும் போது முரண்பாடுகள் மறைந்து போக்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
    • குறித்த ஆசிரியர், பிற பாடசாலை அதிபர்  என்போரின்  குறைகளை அவர்களே உணரச் செய்தல் வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். ஒருவர் செய்யும் குறைகளை பொதுப்படையாக கூறும் போதும் அவர் தனது குறைகள் தொடர்பாக தன்னை மதிப்பிட முடியும்.
    • அவ்வாறே அவர் தவறுகளை மனம் நோகாமல் மெல்லச் சுட்டிக் காட்டலாம்.  
    • நேரடியாக  ஆசிரியர்களை சுட்டிக் காட்டி (நேர காலத்துடன் பாடசாலை வரும் ஆசிரியர்கள்) நேரடித் துலங்கள் காட்டலாம்.
    • முரண்பாடுடன் சம்பந்தப் பட்டவர்களை பேச்சு வார்த்தைக்கு வரவழைத்து தீர்வு காணச் செய்யலாம் (சம்பவம் 3, 4 ) 
     சம்பவம் 4
    அதிபர்  மத்தியஸ்தம் வகித்து, சிரேஷ்ட மற்றும் தொழில் அனுபவங்கள் கல்வித் தகைமைகள் என்பவற்றை அடிப்டையாகக் கொண்டு பிரச்சினையில் சமரசமும், ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் உருவாக்கலாம். 

    இவ்வாறாக முரண்பாட்டுக்குள் உள்ளானோர் பின்னணியினை ஆராய்ந்து, அதிகாரத் தோரணை இன்றி அவர்களின் நம்பிக்கையினை கட்டியெழுப்பி தாம் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய, அவர்களாகவே ஒரு முடிவு காணக்கூடிய தக்க தீர்வை கொடுக்கும் போது அதிபர் எனும் வகையில் என் நிறுவனம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும். அதுமாத்திரமின்றி முரண்பட்டோர் கருத்துக்களை "நேருக்கு நேர் நோக்குதல்" போன்ற நுட்ப முறைகளையும் பயன்படுத்தி பிணக்குத் தீர்க்கலாம்.

    இவற்றுடன் சம்பந்தப்பட்டோரின் சிந்தையை கிளறச் செய்து, ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை முன்வைத்து அதன் மூலமாக நியாயமான தீர்வினை கொடுப்பதுடன்  நிறுவனத்தில்  ஏற்படும் முரண்பாடுகளை சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம்.

    - Ms.A.C.Jancy-
       SLPS -3
    J/Kadeeja Ladies College,
    Jaffna


    2019/06/28

    முரண்பாடுகள்

    Image result for முரண்பாடுகள்

    பன்மைச் சூழலில் பல்வேறு இனங்கள் வாழும் போது அவர்களுக்கிடையில் ஏற்படக் கூடிய சிறு சிறு பிரச்சினைகள் பாரிய அழுத்தம் தரக்கடிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லெண்ணம், ஒற்றுமை, நம்பிக்கை குறைவடையும் போது முரண்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறுகின்றன. பாதிக்கப்படும் சமூகம் அடுத்த சமூகங்களின் விமர்சனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத நிகழ்வாகியுள்ளது. ஒருவரின் பலம், மற்றையவரின் பலகீனத்தை தீர்மானிக்கிறது. பாதிக்கப்படும் சமூகத்தின் கஷ்டங்களும், நஷ்டங்களும், துன்பங்களும் மற்றைய சமூகத்தின் ரசிப்பாகி போய் விடுகிறது. சந்தேகங்கள் தொடரும் போது சந்தோசங்கள் ஓடிப் போய் விடுகிறது. 

    அந்த வகையில் அண்மைக் காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட அழுத்தங்களும், சவால்களும் இன்னும் முற்றுப் பெறாத பனித் தூறல்களாகவே  உள்ளன. அப்பின்னனியில் இன்று (28.06.2019)  நான் சந்தித்த இந்த அனுபவத்தையும்  பதிவிடுகிறேன்.

    பணம் வைப்பில் இடுவதற்காக ................ வங்கி சென்றேன். வழமை போலவே படிவங்களையும் நிரப்பியவாறு, கவுண்டரில் வரிசையாக நின்று கொண்டிருந்தேன்.  அப்போது வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் என்னைத் தேடி வந்ததும்  எரிந்து விழுந்தார்.

    "உங்களுக்கு தெரியாதா?  இங்கு கேமரா இருக்குது. தலையில் மூடி இருக்கும் சீலையைக்  கழட்டுங்கள்" என்றார்.

    நான் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம்  எதுவும் கதைக்கவில்லை. "எய்தவர் யாரோ இருக்க அம்பை நோவானேன்". மனம்  கொதிநிலையில் வெந்து கொண்டிருந்தது. என் கோபத்தின் அலைவை நின்று கொண்டிருந்த அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்திடரிடம் வெளிப்படுத்தாமல், வரிசையில் இருந்து நகர்ந்தேன். என் கால்கள் வங்கி முகாமையாளர் அறையில் போய் நின்றன. அவர் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அழைக்கும் வரை பொறுமையாய் காத்து நின்றேன். 

    அவர் என்னை அழைத்ததும் உட்காரச் சொன்னார். என்னை அறிமுகப்படுத்தியவாறே நடந்ததைக் கூறி   முஸ்லீம் பெண்கள் வங்கிக்கு வரும் போது தலையில் முக்காடு போடக் கூடாதா Sir?  அப்படி ஏதும்  சுற்று நிருபம்  இருக்கின்றதா? என்றேன்.  மானேஜர் அதிர்ந்தவாறே, 

    "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்களுக்கு யார் சொன்னது?"

    என்றவாறு அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தேடி வெளியே சென்றார். நானும் அந்த பாதுகாப்பு அதிகாரியை காட்டினேன். வங்கி முகாமையாளர் அந்த ஆளைப் பெயர் சொல்லி அழைத்தார். அந்த நபர் ரூமுக்கு வந்ததும் என் முன்னிலையில் நடந்ததை விசாரித்தார்.

     "அவ முகத்தை மூடியா  வந்திருக்கிறார். முகம் தெளிவாத் தெரியுதுதானே?  எத்தனை தடவை விளக்கி சொல்லியும் இப்படி இருக்கிறீர்.  இனி இப்படி செய்தால் உம்மை இங்கே வைத்திருக்க மாட்டேன்"

     என்று  சற்றுக் கடுமையாக நியாயத்தின் பக்கம் நின்று பேசினார். ஏசினார். முகாமையாளர் தொனி உயர்ந்ததும் பா.ஊ குரல் பணிந்தது.

    "மன்னியுங்க  Sir"

     என்றவாறு பாதுகாப்பு ஊழியர் வங்கி முகாமையாளரிடம் மன்னிப்புக் கேட்டதும், மனேஜரோ "என்னிடம் சொல்லாமல் அவரிடம் கேளும்" என என்னைச் சுட்டிக் காட்டினார்.

     நானும்  அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கலாச்சாரம் பற்றியும் கொஞ்சம் சூடாக சற்றுக் கோபமாக கதைத்தேன். முகாமையாளர் எதுவும் சொல்லாமல் என் வார்த்தைகளை அங்கீகரித்துக் கொண்டிருந்தார்.

    "இது எனக்காக மட்டும் இல்லை. இங்கே வாற ஏனைய முஸ்லிம் பெண்களுக்கும் சேர்த்துத்தான் கதைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கட கலாச்சாரத்தை நாங்க அவமதிச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்.  நானும் இந்த ஊர்தானே?  துவேசம் காட்டாதீங்க."

    பா.ஊ தலையை குனிந்து கொண்டிருந்தார். முகாமையாளர் முஸ்லிம் பெண்கள் ஆடை தொடர்பாக நன்கு விளக்கியும் கூட, கீழ்நிலை உத்தியோகத்தர்கள் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளாத நிலையே இந்த சம்பவத்தின் பின்னனி !

    என் முறைப்பாட்டுக்கு உடன் தீர்வு தந்த அந்த  மேலதிகாரி மீது எனக்கு மதிப்பு ஏற்படவே, இதனை மேலும் பிரச்சினை ஆக்காமல் அந்த தடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன். இங்கு வாழும் என் சமூகப் பெண்களுக்காக  நானும் ஏதோ சிறு துளியாவது செய்திருக்கிறேன் எனும் மன நிறைவு எனக்குள்!

    - ஜன்ஸி கபூர் -
       28.06.2019

    2019/06/25

    அவசர வாழ்க்கை

    அழகான வாழ்க்கை இறைவனால் மனிதனுக்கு கிடைத்த பொக்கிஷம். அந்த வாழ்க்கையைப் பெறுமதியுள்ளதாக மாற்றுவது நமது கடமையாகிறது. கிடைத்த வாழ்வை வசந்தமாக்குவதும், பாழாக்குவதும் நாம் வாழ்க்கையை அணுகும் விதத்திலும், செயற்பாட்டிலும் தங்கியுள்ளது.   வாழ்க்கை என்பது நீண்ட பயணம். அந்தப் பயணத்தில் நாம் பல தரிப்பிடங்களை நம் குணங்களால் அடையாளம் காண்கிறோம் 

    மனித மனங்கள் பல்வேறு குணங்களின் சேர்க்கை மையம். அக்குணங்களில் ஒன்றுதான் அவசரம். ஆனாலும் மனிதனின் விரும்பாத, தகாத குணம்தான் இந்த அவசரம்.

    "மனிதன் அவசரக் குணத்துடன் படைக்கப்பட்டுள்ளான்" 
    அல் குர்ஆனில்  கூறப்பட்டுள்ள இவ் வசனம் அவசரத்தை வெறுத்து விடுகின்ற இஸ்லாம் நன்மையான காரியங்களை செய்யச் சொல்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

    "ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு"
    "ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது"
     இப் பழமொழிகள்  அவசரத்தின்   பண்பை கோடிட்டுக் காட்டுகின்றது.   

    இன்றைய நவீன உலகமானது ஒவ்வொரு நொடிகளில் மிக வேகமான நகர்வுகளைக் கொண்டிருக்கிறது. இதனால் மனிதராகிய நாம் நமது தேவைகளை தக்க வைக்க அவசரமாக இயங்குகிறோம். அவசரம் என்பது விவேகமானது அல்ல. அது நமது சிந்தனையை மிக வேகமாக  இயக்கி, சறுக்கி விடுகிறது. இங்கே "கீழே விழுதல்" என்பது நமது பலமான சக்திமிக்க எண்ணத்தில் இருந்து நாம் விலகி நிற்பதாகும். "அவசரமான குணம்" நமது வெற்றி வாய்ப்புக்களை பின்னோக்கி நகர்த்தி விடுகின்றது.

    நம்மால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு காரியங்களும் இலக்கு நோக்கி நகரும். இலக்குகள் வெற்றி பெற்றால் சிறப்பான விளைவு எட்டப்படும். இந்த சிறப்பான காரியங்கள் தவறினை நோக்கி போவதற்கு அவசரம் காரணமாகின்றது.  அவசரம் மனித வாழ்வின் பெறுமதியான கணங்களை விழுங்கும் அரக்கன்.  நம் மிகச்சிறந்த சிந்தனைகளைக் கூட இவ் அவசரமான செயற்பாடுகள்   வீணாக்கி விடுகின்றன.

    நமது பலகீனமான குணங்களில் அவசரமும் ஒன்றே! அவசர புத்திக்காரன் தனது செயல்களை நிதானத்துடன் செய்வதில்லை. அவனது பார்வையில் பதற்றம் முக்கிய புள்ளியாகக் காணப்படுகிறது. அவசரம் எனும் இயற்கைக்  குணத்தை மாற்றுதல் என்பது கல்லில் நாருரிப்பது  போல்தான். 

    தவறுகளின் வாசட் படியாகவும் இந்த அவசரத்தை கருதலாம். நாம் நமது காரியங்களைத் திட்டமிட்டுச் செய்யும் போது நேரம் போதிய அவகாசம் தரும். அக்காரியங்கள் தொடர்பாக நன்கு சிந்திக்க முடியும். நல்ல விடயங்களின் பால் மனம் நகரும். பக்குவம் நம் வசமாகும். நேர்ச்சிந்தனை வயப்பட்ட நிலையில் நமக்கு சாதகமான விடயங்களை மட்டும் நாம் நினைக்க முடியும்.  
    மறுதலையாக மனம் ஒன்றாமலோ அல்லது கடைசி நேரத்திலோ காரியங்களை அவசர அவசரமாகச் செய்யும் போது அவை சிதறி விடுகின்றன. 

    சிலர் வார்த்தைகளையும் அவசர, அவசரமா வெளிப்படுத்துவார்கள். இவ்வாறாக கருத்துச்செறிவில்லாத, பெறுமதி அற்ற வார்த்தைகள் வெளிப்பட்டு, அவை பிறரிடத்தில் நமது பெறுமதியைக் குறைத்து விடுகின்றன. அதுமாத்திரமின்றி அடுத்தவருடனான முரண்பாடுகளையும், கோபதாபங்களையும்  இயல்பாகவே ஏற்படுத்துகின்றன.

    எனவே சூழ்நிலைகளை அனுசரித்து அவசரமின்றி, நேரத்தையும் செயல்களையும் திட்டமிட்டுச் செய்யும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும். 

    ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது!

    - Jancy Caffoor-
     25.06.2019 

    2019/06/23

    கனவு தேவதையே




    நட்சத்திர கீறல்கள்
    வீழ்ந்தன புன்னகையாய்!

    புல் நுனி கழுவும்  பனியோ
    தள்ளாடி வீழ்ந்தன  கன்னவோரம்!

    வியர்வையின் ஈர வீரியம் கண்டு
    அயர்ந்தன மேனி யிதழ்கள் துவண்டு!

    வானவில்லின் சாயம் கரைந்து
    வழிந்தது இடை நெருக்கும் மெல்லாடையாய்  !

    நறுமணம் பூசும் தென்றல் கெஞ்சும்
    சுவாசம் கொஞ்சிப் பேச!

    இமையோரம் வெட்கிக் குனியும்
    விழியின் சிறகடிப்பின் மோகம் கண்டு!

    விரல் வருடும் ரேகை கழன்று
    வரிகள் வரையும் உனை நினைந்து!

    காதல் தேவதை யுனக்காய் என் தேசம்
    காத்திருக்கும் ஏக்கங்கள் பல சூடி!

    உன்னால்



    நட்சத்திரம் விழித்திருக்கும்
    பால்வெளியில்............
    விழிகளைத் தாக்கும்
    ஒளி வருடலாய் நீ!

    பனி படர்ந்த போர்வையில்
    முத்தென............
    முத்துமிட்டுச் செல்லும் வியர்வைத்துளிகளாய்
    உன் நினைவுகள்!

    இப்பொழுதெல்லாம்
    அடிக்கடி
    உன் ஞாபக வரிகளை
    வாசிக்கும் போது ..............
    காயமாகின்றன என் விழிகள்!

    என் விரல்களைப் பார்......
    உனக்கு கடிதங்கள் எழுதி எழுதியே
    ரேகைகள்
    காணாமற் போயின!

    உன் நினைவுப் பேரலையில்
    வீழ்ந்து தவிக்கையில்
    சுவாசம் கரைக்கின்றேன் - என்
    வாசத்தை விற்றவளாய்!

    கொல்லாதே- எனை
    அணுவணுவாய் கொல்லாதே!
    எஞ்சிய காலத்திலாவது
    கொஞ்சம் வாழ வரம் கொடு!......

    உன்னை இப்பொழுதெல்லாம்
    யாசிக்கின்றேன் ..........
    அனுமதிப்பாயா...........
    அவசரமாய் உன் ஞாபகங்களை
    பெயர்த்தெடுக்க!

    கொஞ்சம் பொறு



    கொஞ்சம் பொறு......
    உன்
    சிரிப்பை பெயர்த்து
    சலங்கையாக்கப் போகின்றேன்!

    கொஞ்சம் பொறு.......
    உன்
    பார்வையைத் திண்மமாக்கி
    பனிக்கட்டியாத்
    தூவுகின்றேன்!

    கொஞ்சம் பொறு.......
    உன் குரலலையின்
    அதிர்வை
    காற்றினில் கோர்க்கின்றேன்
    மெல்லிசையாய்!

    கொஞ்சம் பொறு........
    உன் நிறத்தைப்
    பிரதியெடுத்து
    நிலாவை முலாமிடப் போகின்றேன்!

    கொஞ்சம் பொறு......
    சிப்பிகள் சினக்கின்றன- தம்
    முத்துக்கள்
    உன் னுதட்டினில்
    சிறை வைக்கப்பட்டிருப்பதாய்!

    சொல்லி விட்டுப் போ...........
    உன் சுவாசத்திலும்
    பூவாசம் - நீ
    பூவை என்பதாலா!

    திருமணம்



    வாழ்க்கைப் பாதைக்காக
    தீர்மானிக்கப்பட்ட பயணம்!

    கருவறைத் தரிப்புக்களுக்காய்
    வழங்கப்பட்ட அனுமதி!

    தனிமைச் சாளரம் தாழ்பாளிட
    ஈர் மனந் திறக்கும் மங்களச் சாவி!

    சரீரம் வருடி சாரீரம் தொடும்
    இன்னிசை!

    தாலியால் வேலியிடப்படும்
    உறவுச்சாலை!

    சம்பிரதாயங்களின் முகவுரையோடு
    எழுதப்படும் காவியம்!

    ரொக்கத்தின் கனத்தில்
    இருவரிணையும் சங்கமம்!

    வழித்தோன்றலின் வழிவிடலுக்காய்
    வாழ்த்துத் தூவும் பூமாலை!

    ஆயுள் மன்றத்தில் ஓர்முறையே
    அரங்கேற்றப்படும் ஈர் மனக் கவிதை

    கண்ணீரும் வெந்நீரும் பன்னீரும்
    வழிந்தோடும் நீரோடை!

    வாலிப வித்தைகளைக்
    கட்டிப் போடும் கடிவாளம்!

    கனவுச் சிறகறுத்து மனசை
    நனவுக்குள் வீழ்த்தும் தேர்வுமையம்!

    நான் நீயாகி........நீ நானாகும்
    மனசின் மந்திரப் பிரகடனம்

    இதோ



    இருளின் ரகஸியத்தில் இப்போதெல்லாம்
    வீழ்ந்து கிடக்கின்றது நம் பனிப்போர்!

    நினைவுச் சாவி திறந்துன்னை.........
    களவாய்  ரசிக்கையில்
    கன்னம் வைக்கின்றாய் மெல்ல - என்
    கன்னம் சிவக்க!

    அரிதாரம் பூசப்படும்  கனவுகளுக்காய்
    கர்ப்பம் தரிக்கும் நம் காதல்.......
    இப்போதெல்லாம் - சில
    பிடிவாதங்களின் ஆளுகைக்குள்
    பிரவேசிக்கின்றது
    ஊடலைத் தெறித்தபடி!

    அடுத்தவருக்காய் என்னை நீ
    விட்டுக் கொடுக்கப் போவதுமில்லை.........
    என்னிடம்  தோற்கப் போவதுமில்லை!......

    காத்திரு ...............
    கணப்பொழுதில்
    தாவி வருகின்றேனுன்னைத் தழுவி நிற்க!

    தீனின் ஒளியாய்



    இப்ராஹீம் நபியவர்கள் இறைஞ்சுதல்கள்
    இறை சந்நிதானத்தில் வலு சேர்க்கவே.........
    ரபியுல் அவ்வல் பிறை பனிரெண்டில்
    தரணிக்குள் தடம் பதித்தா ரெம் பெருமானார்!

    பிரபஞ்ச இருள் வெளிக் கீற்றுக்களில்
    பிரவேசித்த வைரமாய் எம் பெருமானார். ...........
    நல்லறங்கள்  பல விட்டுச் சென்றார்- பல
    உள்ளங்கள் இஸ்லாத்தைத் தொழவும் செய்தார்!

    விண்ணகர் மலக்கொளிகள் வாழ்த்தி நிற்க
    மண்ணக அறியாமை கறையகற்றி.........
    தீன் வழிச் சுவட்டோரம் நடைபயின்றே
    வாழ்ந்தும் காட்டினா ரெம் பெருமானார்!

    அன்னை ஆமினா உதிரம் நனைந்தே
    இன்முகம் காட்டும் நனி பூவானார் ............
    தந்தை அப்துல் முத்தலிப் லயிப்பில் தான்
    தரணிக்குள் தரித்தும் நின்றா ரெம் பெருமானார்!

    அருந்தவப் புதல்வரா யன்னையவர்
    கருவறை தங்கிய வெம் கோமகன்......
    பெருந்தவப் பேறாய் பேருலகில் தீனைப் பரப்பி
    பொக்கிஷமாய் திருமறையையும் தந்தே நின்றார் ........

    அரபிச் சுவரோர அறியாமைப் படிவுகள்
    குற்றங்களாய் மனித மனங்களில் நீட்சி பெற்றே...............
    இன்னல்களாய்  தீப்பற்றி எரிகையில்..........
    அன லுறிஞ்சும்  புனிதமுமானார்
    அஹமதெனும் எம் பெருமானார்!

    பாலையூற்றுக்களின் பாவக் கறைகள் நீங்கி
    சோலைவெளிகளாய் இப்பிரபஞ்சம் நிரம்பிட...........
    பிரவேசித்தா ரெம் பெருமானார்
    பிரகாசித்தார் அரபுத் தேசம் சிறப்புப் பெற!

    சமுதாயப் பேரேடுகளில் சாந்தி வரையும் 
    சரித்திரமுமானார் பலர் தரித்திரங்களும் நீக்கி.......
    சன்மார்க்க போதனைகளில் எம் சிந்தைகளை  நிறைத்திட
    விட்டும் சென்றார் வழிமுறைகளாம் .....
    அல்-ஹதீஸையும் ஸூன்னாவையும்!

    விண்ணகம் இறக்கித் தந்த தீன்நெறியால்
    இன்னல் களையும் வழியும் தந்தார்!
    மண்ணக சேமிப்போரங்களெல்லாம்..........
    எண்ணற்ற அருளையும் சேர்க்கச் செய்தார் -எம்
    அண்ணல் நபியவர்கள்!

    வானின் பௌர்ணமி எழிலொளியாய்
    வையகத்தில் வந்திறங்கினார் எம் பெருமானார்!
    நன்மையின் விளைவகம் நாமாக...........
    தீனை உணர்விலும் தந்து நின்றார்!

    கஷ்டங்கள் பல கண்டனுபவித்தும்
    இஷ்டத்துடன் இறை தொழுதே நின்று........
    இஸ்லாமெனும்  தூணில் உலகைப் பொருத்தி
    பெருமையும் கண்டார் எம் பெருமானார்!

    சாப வினைகள்  நீக்கத்தான்
    சத்திய நெறிகள் போதிக்கத்தான்........
    வந்துதித்தார் நித்திய வுலகின் அச்சாணியாய் - எம்
    முகம்மது நபி (ஸல்) அவர்கள் !

    வறுமை விரட்டும் மருந்துமானார்.........
    சிறுமை களையும் அன்புமானார்..........
    மறுமை வாழ்வுக்கும் வழியும் தந்தார்.........
    இறுதித் தூதுவர் அவருமானார்!

    மீலாத் தினமின்று பல மாண்புகளும்
    மீட்சிகளும் இறையருளும் நாம் பெற்றிடவே .........
    பெருமளவில் ஸலாம் சொல்வோம்- முகம்மத்
    பெருமானார் திருமொழி நவின்றே!