About Me

2012/06/09

அடையாளம்

சஞ்சிகை விமர்சனம்
-----------------------------



ஒரு மனிதரின் அல்லது (பிர) தேசத்தின் தனித்தன்மையைச் சிறப்பிக்கும் அடையாளங்கள் பல காணப்படும். அந்த வகையில் இலங்கையின் வடமத்தியில் அமைந்துள்ள அநுராதபுரத்தின் கல்விச்சிறப்பையும் அதன் சாதனைகளையும் தகவல்களாகவும் தரவுகளாகவும் முனைப்போடு வெளிப்படுத்தும் விதத்தில் "அடையாளம் " எனும் அநுராதபுரப் பிராந்தியம் சார் கல்விச்செய்திகளை தன்னகத்துள் அடக்கும் சஞ்சிகையொன்று மே மாதம் முதல் தன் பிரசவிப்பை முன்வைத்துள்ளது. அடையாளம் சஞ்சிகை யின் விலை 10 ரூபா மாத்திரமே!

இதன் ஆசிரியர்களாக எம் .சி. சபூர்தீனும், துணையாசிரியராக ஏ.ஏ.பஸானும் செயற்படுகின்றனர். இது படிகள் பதிப்பகத்தின் வெளியீடாகும்.

அநுராதபுர மாவட்டத்தின் கல்வி சாரா செய்திகளைப் பகிரவும் , மாகாண, வலய கல்விக்காரியாலங்களின் செயற்பாடுகளை ஆவணப்படுத்தவும் பாடசாலைகளின் வரலாறு ,சாதனைகளை ஆவணப்படுத்தவுமே இவ் அடையாளம் தன் முகம் காட்டுகின்றது என ஆசிரியர் உரை சுட்டிக்காட்டுகின்றது.

அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் இன்றைய கல்விநிலை எனும் தலைப்பில் இம் மாவட்ட கல்விநிலை தொடர்பான பார்வை செலுத்தல் முதல் ஆக்கமாக எட்டிப் பார்க்கின்றது.

வடமத்திய மாகாண கல்விப் பணிமனையின் தமிழ்ப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஈ. பீர்முஹம்மட் அவர்களின் செவ்வியொன்றும் இங்கே தரப்பட்டுள்ளது. " அநுராதபுரம் மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்கள் சிறந்த அடைவுகளைப் பெற்று பெருமை சேர்க்கின்றனர் " எனும் தலைப்பினாலான அச் செவ்வி மூலம் பல தரப்பட்டுள்ள பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

மேலும் அநுராதபுரம் சுதந்திர இயக்கத்தின் இரத்த தான நிகழ்வு,  அல்- இஸ்லாஹ் முன்பள்ளி நிலையத்தின் விளையாட்டுப் போட்டி, உள்ளிட்ட நாச்சியாதீவு, ஹொரவபொதான, கஹடகஸ்திகிலிய பிரதேசங்களின் கல்வி அபிவிருத்தி சார் பிராந்திய செய்திகள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மின்னும் தாரகைகள் எனும் மகுடத்தின் கீழ் கற்றல் உலகோடு தொடர்புடைய இரண்டு சர்வதேச செய்திகள் தரப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அநுராதபுர மாவட்ட செய்திகளை இப் பக்கத்திற்காக ஒதுக்குவது சிறப்பாக இருக்கும். ஏனெனில் பத்திரிகைத் தலைப்பிற்கும் இதற்கும் பொருத்தப்பாடின்மை காணப்படுவதாக நான் எண்ணுகின்றேன்.

அநுராதபுர மாவட்டத்தில் விஞ்ஞானக் கல்லூரியொன்றை உருவாக்கும் முயற்சி தொடர்பான செய்தியின் அடிக்கோட்டின் கீழ் விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சி தொடர்பாக கண்ணோட்டம் செலுத்தப்பட்டுள்ளது.

பின்புற அட்டையானது கடந்த வருட கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைப் பெறுபேற்றின் வீதங்களைச் சுட்டிக்காட்டும் ஆய்வுப் பார்வையும் மாவட்ட சிறந்த சாதனை படைத்த மாணவர்களையும் தாங்கி நிற்கின்றது

இவ் அடையாள சஞ்சிகையின் சிந்தனையாக பெற்றோர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. " ஞாயிறு தினங்களில் நடைபெறும் டியூஷன்களை நிறுத்தி அஹதிய்யா பாடசாலை போன்ற மதக் கல்வி பெற மாணவர்களுக்கு வழி விடுங்கள் என்ற முன்வைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது உரியவர்கள் செவிகளை எட்டுமா......காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....

எட்டுப் பக்கங்களைக் கொண்ட சஞ்சிகையாக அடையாளம் இருந்தாலும் காத்திரமான தகவல்களோடு அது தன்னை இனங்காட்டுகின்றது. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி இன்னும் மெருகூட்டப்படும் என நம்பலாம் !
வாழ்த்துக்கள் !

- Jancy Caffoor -

விடியல்



(சிறுகதை)
-----------------------------
வானத்தைத் துண்டாக்கும் வக்கிரத்தில் இடி காதைப் பிளந்து கொண்டிருந்தது.

"யா அல்லாஹ்"

அச்சத்தின் நாடிப்பிடிப்போடு சஹானாவின் உதடுகள் குவிந்து மடிந்தன. இயற்கையின் அக்கிரமத்தைக் கண்டும் சிறிதளவும் அஞ்சாதவனாய் சோகத்தில் வான் விட்டத்தை அளந்து கொண்டிருக்கும் தன் கணவனை வலியோடு பார்த்தாள்.

"உங்களுக்கு பயமில்லையா உள்ள வாங்கோ"

அவள் குரல் கேட்டு அவன் சிரித்தான்.

" சஹா............இன்னும் நாம வாழணும் என்று நினைக்கிறீயா"

அவன் கேட்டபோது அவள் நெஞ்சு பிளந்தது. அவனைக் கட்டித் தழுவி வெம்மினாள்.

"தெரியலீங்க..........வாழ வழி தெரியலீங்க"

அமிலம் சுரக்கும் விழிகளை கண்ணீரால் கழுவினார்கள் இருவரும்.

"வெட்ட வெளிகளில் இடிகொட்டும் போது நிற்பது ஆபத்து..."

மனவெளிகளில் எப்போதோ சொன்ன விஞ்ஞான ஆசிரியை வந்து போனார். வாழ்க்கையில் நிரப்பப்படும் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகும் போது கனவுகள் மட்டுமல்ல வாழ்க்கையின் பிடிப்புக்களும் கூட அற்றுப் போய் விடுகின்றதே!மரணம் கூட அச்சப்படாத ஒன்றாக மாற்றப்பட்டு வலிமைகள் எளிமையாகி விடுகின்றன.

எங்கோ தொலைவில் ஒலித்த அதான் ஓசை அவளை வசப்படுத்திய போது கண்கள் பனித்தது. கணவன் அறியாமல் துடைத்துக் கொண்டாள்.

"சஹா...அழுகிறீயா" 

அவன் கேட்டபோது அவசரமாக மறுப்புத் தெரிவிக்க முயன்றவள் தோற்றுப் போனாள். நெஞ்சம் விம்மியது. எத்தனை முறைதான் அவர்கள் மாறி மாறி இந்த அழுகையை அழுவதும் அடக்குவதுமாக இருப்பார்கள். எப்படித்தான் மனதை கல்லாக்கி இறுக்கினாலும் பாசத்தை உடைத்தெறிய முடியவில்லை. உம்மா, வாப்பா, அழகான தங்கச்சி பாத்திமா அடுக்கடுக்காய் மனதை நிறைத்துப் போனார்கள்.

வசந்தம் அறுக்கப்பட்ட பொழுதுகள் ஏன் அவர்களுக்கு மட்டும் அனல் பொழுதாக மாறியது. இத்தனைக்கும் அவள் செய்த தவறுதான் என்ன.......
காதலிப்பது தவறா......இல்லை அவள் காதல் தவறா!

இந்த ஆறு மாதங்களாக விடை காணமுடியாத பல வினாக்கள் மட்டுமே அவளுக்குள் சொந்தமாகிக் கொண்டிருக்கின்றன அவனைப் போல!

எல்லாமே நேற்றுப் போலிருக்கின்றது..உதிர்ந்து விட்ட ஞாபகங்கள் மட்டும் தான் அவர்களுக்குள் உயிர்ப்பாக இருக்கின்ற சொந்தம்.

அவனைச் சந்தித்த அந்த முதல் சந்திப்பு இன்னும் நெஞ்சுக்குள் சிலிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றது.....

"கெதர கௌத இன்னே"

உரத்த குரலில் வீட்டுத் தெருக் கதவு படபடக்கும் சப்தத்தில் அவள் விறைத்துப் போனாள். அவள் தங்கையைத் தவிர வீட்டில் யாருமே இல்லை.....பீதிப் பட்டாம் பூச்சிகள் அவளுக்குள் சுதந்திரமாக சிறகடிக்க ஆரம்பித்தாலும் கதவு தட்டப்படும் ஓசை விடுவதாக இல்லை.கதவை மெதுவாகத் திறந்து குரலை மட்டும் வெளியே அனுப்பினாள்.

"கௌத"

" பண்டா.............இன்னவத"

".இங்க அப்படி யாருமில்ல........நீங்க தவறா வந்திட்டீங்க....ப்ளீஸ் போயிடுங்க"

சிங்களத்தில் பதில் வார்த்தைகள் அவளிடமிருந்து உதிர்ந்தன. அவள் குரல் பதற்றப்பட்ட போதும் அவன் அவளை ரசித்திருக்க வேண்டும். ஆணி அடித்தாற் போல் அதே இடத்தில் நின்றிருந்தான்..

"சீக்கிரம் போங்க. யாராவது வந்தா தப்பா நெனைப்பாங்க"

அலறிய அவளின் அப்பாவித்தனத்தை அவன் ரசித்தான்.

"நான் ஒன்னும் உங்கள விழுங்க மாட்டேன். பயப்படாதீங்க. என் ப்ரெண்ட தேடி வந்தேன். கொஞ்சம் குடிக்க தண்ணீ தாரீங்களா "

"ம் ம்"

அப்போதுதான் அவனை அவளும், அவளை அவனும் பார்த்தார்கள். மின்னல் பார்வை. ஓர் நொடியில் நெஞ்சில் ஆணியடித்தது. ஆண்களைக் கண்டால் அலறும் அவளா அவனிடம் மோகித்தாள். இதுதான் கண்டதும் காதலா .விதியின் கோர விளையாட்டா...

தனக்குள் சிரித்தாள். அந்தச் சிரிப்பே அவனுக்குள் இரசாயன மாற்றத்தை தந்தது. புன்னகைகள் இடமாறின. ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். கூடவே அவனது தொலைபேசி இலக்கத்தையும் அவள் ரகஸியமாகப் பொத்திக் கொண்டாள்....

மாதங்கள் எவ்வளவு வேகமாகப் பறக்கின்றன. அவள் கனணிக் கற்கை படிக்கும் இடத்திலேயே அவனும் கற்க ஆரம்பித்தான். காதல் நீரோட்டம் யாருமேயறியாது ரகஸியமாய் பசுமையாக அவர்களை வருடத் தொடங்கியது. ஒரு வருட ரகஸியக் காதலால் அவள் அவனிடம் முழுமையாகவே தன்னை ஒப்படைத்திருந்தாள்.

காதலையும் புகையையும் மறைக்க முடியாது என்பார்களே. அவளுள் ஏற்பட்ட மாற்றம் வீட்டில் பதற்றமானது......

"ஏய்....உண்மையைச் சொல்லு.........அவன்கூட உனக்கென்ன பேச்சு, யாரடி அவன் "

தகப்பன் வார்த்தைகளால் சுட்டெறித்த போது,  தாய் வாய் விட்டுப் புலம்பினாள். திட்டினாள்...

"பாவி.....படுபாவி..........மானத்தை இப்படி குழிதோண்டி புதைச்சிட்டீயே! போயும் போயும் ஒரு சிங்களவன் கூட........ச்சீ......உன்ன புள்ளன்னு சொல்லவே வெட்கமா இருக்கு அவன் கூடவே போய்த் தொலையடீ.....எங்க முகத்தில முழிக்காம போ"

அவன் நேசிப்பால் அவள் குடும்பம் அவளை சித்திரவதை செய்தது. தந்தை அவசர அவசரமாக உறவுக்குள் ஓர் மாப்பிளையைத் தேடிப் பிடித்தார். அவசர அவசரமாக நாளும் குறித்தனர். சஹானா துடித்தாள். ரஞ்சித் இல்லாத வாழ்வை கற்பனை பண்ணக் கூட அவளால் முடியவில்லை. அவள் வீட்டுக் கட்டுக்காவலை மீறி அவனைச் சந்திக்க முடியவில்லை. துரும்பாகிப் போனாள். அவள் கல்யாண வேலைகளில் பெற்றோர் தம்மை மறந்த ஓர் பொழுதில் தன் சிறைக்கூடத்தை பிய்த்து வெளியே பறந்தாள்.

"ரஞ்சித் உங்களப் பிரிந்து என்னால வாழ முடியாது"

"சஹா உனக்குப் பைத்தியமா........நான் மட்டும் என்னவாம், வா....நாம எங்க வீட்டுக்குப் போகலாம். அம்மாட்ட சொல்லுறேன். அவங்க நம்ம அன்ப புரிஞ்சுக்குவாங்க"

நம்பிக்கையூட்டினான். யார் கண்ணிலும் படாமல் ரஞ்சித் தன் வீட்டுக்கு அவளோடு போன போது அங்கும் போராட்டம் வெடித்தது. இறைவன் சேர்த்து வைத்த உறவை, அன்பை பிரிக்க மனிதர்கள் போராடினார்கள்.

"சஹாவ என்னால மறக்க முடியாது அம்மா"

ரஞ்சித் அழுதான். தாய் அனலானாள். ஊரையும் தன் மதப் பெரியவர்களையும் அழைத்து அவன் இறந்து விட்டானென மரணச் சடங்குகளை நடாத்தினர்.....

ரஞ்சித் உயிரோடு உணர்வுகளால் கொளுத்தப்பட்டான். இருவரும் ஊரை விட்டு வெளியேறினார்கள்....எங்கே போவது....யாரிடம் போவது...........

குடும்பம் காப்பாற்ற தொழிலோ வயதோ அனுபவமோ இல்லாதபோது எப்படி எங்கே வாழ்வைத் தொடங்குவது...........

புதிருக்குள் இருவரும் பதுங்கிக் கொண்டனர். நடோடிப் பயணமாய் ஒவ்வொரு ஊராய் இருப்பிடம் தேடி அலைந்ததில் முழுசாய் மூன்று மாதங்கள் கழிந்தன. அவனிடமிருந்த சொற்ப சேமிப்பு, அவளிடம் ஒட்டியிருந்த நகைநட்டுக்கள் எல்லாம் கரைந்த போதுதான் வாழ்க்கை பற்றிய அச்சம் அவர்களைப் பிண்ணத் தொடங்கியது. தாமாகவே தமக்குள் கணவன் மனைவியாக வாழ்வைப் பகிர்ந்ததில் அவள் வயிறு ஊதிப் பெருத்தது. தாய்மையின் செழிப்பைக் கண்டு ரஞ்சித்தால் பூரிக்கமுடியவில்லை. வறுமை அவர்கள் சந்தோஷத்தை விழுங்கியது. அறிந்தவர் அனுதாபப்பட்டோர் நண்பர்கள் தயவில் சுருண்டு கொண்ட இந்த நாடோடி வாழ்வுக்கும் முடிவு காலம் நெருங்கிய போது ரஞ்சித் அச்சப்பட்டான்.

"சஹா எனக்குப் பயமா இருக்கு. இந்தப் போராட்டத்தில நாம தோத்துடுவோமோன்னு பயமா இருக்கு"

அவன் நம்பிக்கையிழந்த போது அவள் அவனுக்குள் தெம்பூட்டினாள்.

"ரஞ்சித் நாம இப்படி இருக்கிறது நம்மட எதிர்காலத்துக்கு நல்லமில்ல. சட்டப்படி கல்யாணம் செய்யணும். நீங்க எங்க மதத்திற்கு வரணும்"

அவன் அவளின் ஆசைகளை நிராகரிக்க வில்லை. அந்த நல்ல நாளுக்காக காத்திருந்த போதுதான் எதிர்பாராதவிதமாக காதர் மாஸ்டர் அவர்களுக்குள் அறிமுகமானார்.

"தங்கச்சி.......இன்னும் ரெண்டு நாளைக்குள்ள உங்க கல்யாணத்த நம்ம மதப்படி செய்யணும். அதுக்கு முன்னர் தம்பிய நம்ம மதத்திற்கு மாற்றணும். எல்லாம் நல்லபடியா நடக்கும். ஒருபிரச்சினையும் வராம நான் முன்னுக்கு நின்னு உங்க கல்யாணத்த செய்ஞ்சு வைக்கிறன். நடந்தது நடந்து போச்சி. எனக்குத் தெரிஞ்ச நண்பர் வீட்டில உங்கள ரெண்டு நாள் தங்க வைக்கிறன். அப்புறம் மத்தத யோசிப்பம்"

காதர் மாஸ்டரின் வார்த்தைகள் அவள் கண்ணுக்குள்ளிருந்து கண்ணீரைப் பிழிந்தது. முன்பின் அறியாத இந்த சகோதரனை படைத்தவன் தான் வழிகாட்ட அனுப்பி வைத்ததாக நினைத்து உருகி நின்றாள்...

காதர் மாஸ்டர் தான் சொன்னபடியே அவர்களை தன் நண்பர் வீட்டில் தங்க வைத்தார்.

புது சூழல்,  புதிய மனிதர்கள். தாங்கள் குற்றம் செய்ததாக எண்ணி விமர்சனப் பார்வையால் தம்மைத் துளைக்கும் அயலாளர்களை வெட்கத்துடன் தவிர்த்தாள். தவிர்த்தார்கள் !

"டீ......கொழுப்பு பிடிச்சு சிங்களவன் கூட ஓடி வந்திட்டாளாம், மானங் கெட்டதுகள்.....தூ, .......இத விட செத்து போயிருக்கலாம்"

யார் யாரோ அவர்களை சபித்த போது மௌனமாய் அழத்தான் முடிந்தது...

அவர்களைப் பொறுத்தவரை இந்தக் காதல் சமூகக் குற்றம். மதத்திற்கு செய்யும் மகா துரோகம்! சபிக்கிறார்கள். உடுத்த உடுப்புமின்றி, பசிக்கு உணவுமின்றி இருக்கும் போது உதவாதோர் எல்லாம் விமர்சிக்கின்றார்கள்..

"எங்கள் அன்பை, அவர் எனக்காக தன் மதத்தைத் துறக்கும் அந்த அன்பை யாருமே புரிந்து கொள்ளவில்லை . புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
வேண்டாம் எங்களுக்கு யாருமே. காதர் மாஸ்டர் போல் வாழும் ஒரு சிலருள்ள உலகம் எங்களுக்குப் போதும்"

அவள் உணர்வுகள் கொதித்தன.

"தங்கச்சி...........நாளை காலைலதான் உங்களுக்கு சடங்கு செய்யப் போறாங்க.தம்பி நீ பதற்றப்படாம அவங்களுக்கு ஒத்துழைக்கணும் "

வீட்டுக்கார நோனா ராத்தா பழகிய ஒருநாள் பாசத்தை பரிவோடு பரிமாறினார். நாளை ரஞ்சித்துக்கு "சுன்னத்" எடுப்பார்கள். அவனை நினைத்து தனக்குள் சிரித்தாள். அன்பின் முன்னால் அந்த வலியெல்லாம் அவனுக்கு சாதாரணம். அவளுக்கு அது தெரியும். பெருமையோடு பார்த்தாள். அவன் அவளுக்கு இன்னும் அழகாகத் தெரிந்தான்.

விடிந்தால்.................அவர்கள் மீது பூசப்பட்டிருக்கும் கறை ஓரளாவது அகற்றப்படும். ரஞ்சித்தை நேசத்தோடு பார்த்தாள். நாளை அவன் அவளுக்கு சட்டபூர்வ கணவன். இனி அவர்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. மற்றவர்களைப் போல் அவர்களும் சந்தோஷமாக வாழலாம். அவளுக்காக எல்லாவற்றையும் துறந்து இன்று அவன் மட்டுமே அவள் உலகமாகி..............அந்த உலகம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

அவள் மேனிபட்டு தெறித்த மழையில் சிந்தனை கழன்றது. அவனும் மழை பெய்வது தெரியாமல் தூவாணத்தில் நனைந்து கொண்டிருந்தான்.....

" உள்ளுக்கு வாங்க.........." 

அவள் கையைப் பற்றியிழுத்த போது அவன் லேசாக முறுவலித்தான்...

"பயந்துட்டீயா சஹா......நான் செத்திடுவேனென்று......நம்ம நிராகரிக்கிறவங்க முன்னால நாம வாழ்ந்து காட்டுற வரை உன்ன விட்டு போகமாட்டேன்டா"

அவன் சொல்லச் சொல்ல சிறுகுழந்தையாய் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். கண்கள் பனித்தன.

அவளுக்கு அவன்........அவனுக்கு அவள்.............அவர்களுக்கு அவர்கள் பிள்ளை.

இந்த வாழ்வை அவர்கள் சந்தோஷமாக தீர்மானித்து விட்டார்கள். ஆனால் யதார்த்த வாழ்வில் வாழ்வைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி பணமாச்சே!

இந்தச் சின்ன வயதில் ஆயிரங் கனவுகளை மனதில் தேக்கி மற்றவர்கள் போல் அவர்களும் வாழ நினைத்தும் அந்த ஆசைகளை விதி அறுத்தெறிந்ததால் இன்று அடுத்தவர் பார்வைக்குள் வேடிக்கைப் பொருளாக மாறியல்லவா வெந்து கொண்டிருக்கின்றார்கள்.

தன் போராட்டக் காதலை ஜெயித்து விட்ட திருப்தியில் அவன் தலைமுடியை கைகளால் மெதுவாகக் கோதி விடுகின்றாள்......

"ஸஹ்ரான் "

அவள் இதழ் ஆசையாய் குவிந்து மூடிய போது ரஞ்சித்தின் உதட்டோரம் லேசான புன்னகைக் கீறல்கள் !

"சஹானா....ம் ம்......நீ எனக்கு வைச்ச பெயர் ரொம்ப அழகா இருக்கு"

கணவன் கண்ணில் மிதக்கும் ஆச்சரியங்களையும் பெருமிதத்தையும் சேமித்தவளாய் தன் கவலைகளை உதிர்த்து நீண்ட நாட்களின் பின் அழகாய் சிரிக்கின்றாள் அவள்.....

அவர்களின் குற்றங்குறைகள் பெய்யும் மழையில் கழுவப்பட்டு புதிதாய் பூக்கும் நாளைய விடியல் தேடி அந்தக் காதல் சிட்டுக்கள் பறக்க தங்களை தயார்படுத்தத் தொடங்கினார்கள்


(வெறும் கற்பனையல்ல இது.........யதார்த்தம் பொறுக்கியெடுத்த நேசத்துடிப்புக்ளின் கரையேற்றம் !)

(2012.06.13 இன்று இந்த காதல் ஜோடியை நாம் இருக்கும் வீட்டில் சந்தித்தேன். முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்ட அவ்விளைஞன் அழகிய மார்க்க பற்றுள்ள இளைஞனாகக் காட்சியளித்தான். அக்குறணையிலுள்ள சில நல்ல முஸ்லிம் மார்க்கச் சகோதரர்களின் உதவியால் அவர்கள் கௌரவமான வாழ்க்கைக்குள் இணைவதற்காக சட்டப்படி திருமணம் செய்யப்பட்டு அவள் பெற்றோரிடம் இருவரும் சேர்க்கப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.............!
அவர்களின் வாழ்க்கையில் இனி என்றும் வசந்தங்கள் நிறையட்டும். வாழ்க்கையில் பிரச்சினை வந்தபோது தற்கொலை எனும்  கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல் தைரியமாகச் செயற்பட்டமைக்கு அவர்கள் தன்னம்பிக்கையே காரணமாகும் )
         

வழி மாறும் பயணம்



மரங்களை உலுக்கியபடி பலத்த காற்று வீசிக் கொண்டிருக்க நானும் வீட்டின் முற்றத்துக்குள் இறங்கிக் கொண்டிருக்கின்றேன். ஏனோ நான் குடியிருக்கும் பகுதியில் சிறுசலசலப்பு சில மணி நேரமாய் தன் அசைவைக் காட்டிக் கொண்டிருந்தது. புது மனிதமுகங்கள் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அக் கூட்டத்தினிடையே ஏற்பட்ட சிறு இடைவெளிகளினூடாக என் பார்வையை அங்கே பதிக்கின்றேன்.

அங்கே...........!

இளம் காதல் ஜோடியொன்று குற்றவாளிகளாக மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தினரின் கேலி, சோக, அனுதாபப் பார்வைகளை அவர்கள் உள்வாங்கி வெம்மிக் கொண்டிருப்பது புரிகிறது.

அவர்கள் நான் குடியிருக்கும் பகுதியில் இருப்பிடம் தேடி வந்த காதல் அனாதைகள். அவள் இருபத்தைந்துக்குள் இருப்பாள். சற்று கரிய நிறம். அழகென்று சொல்லாவிட்டாலும் கூட ஏதோ கவர்ச்சியான வறுமைப்பட்ட தேகத்தின் சொந்தக்காரியவள். அவன் அவளை விட ஓரிரு வயது இளையவனாக இருக்க வேண்டும். அழகானவன். காதலுக்கு அழகு முக்கியமல்ல...அவர்கள் அதனை நிருபித்துக் கொண்டிருந்தார்கள்..

அந்தக் கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் அவன் அவளை அணைத்துக் கொண்டிருந்தான். அந்த அணைப்பின் அன்பில் அவள் தன் சோகங்களைக் கழற்றட்டும் எனும் எதிர்பார்ப்போ புரியவில்லை.

மனமோ அவர்களுடன் பேச துடித்தது. இருந்தும் எனக்குள் தடைவேலியாய் தந்தையின் குரல்........

" அவங்களோட பேச்சு வைச்சுக் கொள்ள வேணாம், அவங்க நல்லமில்ல..."

நான் அவர்களுடன் பேச வேண்டுமென்று நினைத்த என் மனவோட்டத்தை தந்தை எப்படியறிந்தார்.... தந்தையின் அதிகாரக்குரல் என்னை மிரட்டவே, எனக்குள் ஒடுங்கிக் கொள்கின்றேன்.

இத்தனைக்கும் அவர்கள் செய்த தவறென்ன........காதல்!

ஜாதி ,பேதம் ,அந்தஸ்து ,மொழி, மதம் எனும் எல்லைகளைத் துறந்து மனம் இணைந்தது ஒருவேளை தவறோ...

 அவள் முஸ்லிம் , அவனோ பெரும்பான்மையைச் சேர்ந்தவன். பௌத்தன். இராணுவ வீரன். அவர்கள் மாத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அந்தக் காதல் பிணைப்பால் இருவருமே தம் பெற்றோரை இழந்து அனாதையாக இருப்பிடம் தேடி ஊர் ஊராய் அலைந்து கடைசியில் நான் குடியிருக்கும் பகுதிக்குள் வந்துள்ளார்கள். ஆறு மாதமாக அலையும் இந்த நாடோடி வாழ்க்கைக்குள் அவள் தன் வயிற்றை மட்டுமே நிரப்பிக் கொண்டிருந்தாள். ஊதிப் பெருத்த வயிறு அவளின் தாய்மை நிலையை ஊருக்கு பறைசாட்டிக் கொண்டிருந்தது.

இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களின் தொகை மூன்றாகும் போது அந்த வாழ்க்கைச் சுமையில் வெற்றி காண்பார்களா.....மாற்று உடுப்போ அவர்கள் கையில் ஐந்து சதமோ இன்றி வறுமைப்பட்டுக் கிடக்கும் இந்த வாழ்க்கை செழிக்குமா....... மனசேனோ வலித்தது...

அவன் இஸ்லாம் மதத்தை ஏற்க ஆயத்தமாக இருந்தான். ஆனால் எம் மதத்துள் ஓர் வேற்று மத ஆண் உள்நுழைவதற்கான முதல் தகுதி 'கத்னா' எனப்படும் சுன்னத் செய்வதிலேயே தங்கியுள்ளது. ஏனோ அவன் இராணுவ வீரனாக இருப்பதால் தன் கடமை நிமித்தம் அந்தச் சடங்கை தள்ளிக் கொண்டே வந்ததில் அவர்களுக்கு இன்னும் திருமணம் நடைபெறாமலே அவள் அவன் வாரிசை சுமந்து நிற்கின்றாள். அவள் கர்ப்பமாக இருப்பதால் அவளுக்கு வழங்கப்படும் மதத் தண்டனையை நிறைவேற்றி திருமணத்தை எழுதமுடியாத அங்கலாயிப்பில் காலம் சிலிர்த்தது.

ஏனோ எம்மவர்களின் பார்வையில் அந்தச் சிங்களப் பெடியனே குற்றவாளி...எல்லோரும் அவன் மீது குற்றப் பத்திரிகை வாசிக்க,... என் மனமோ அவன் மீதான அனுதாபத்தில் கரைந்தது. அவன் நினைத்தால் அவளை தன் மதத்துக்குள் மத மாற்றம் செய்திருக்க முடியும். ஏதோ வெறும் பாலியல் ஈர்ப்பில் காதல் போதையில் உளறுபவர்கள் திருமணம் என்றவுடன் விழிப்படைந்து புறமுதுகு காட்டியோடும் போது, தான் காதலித்தவளுக்காக தன் இன,சன உறவுகளை அறுத்தெறிந்து விட்டு அவளுக்காக காத்திருக்கும் அந்த வாலிபன் என்னுள் உயர்ந்துதான் நின்றான்.

நாளை மறுநாள் அவன் தன் இராணுவப் பணிக் கடமைக்குத் திரும்ப வேண்டும்.

 அவளை அவன் கடமைமுகாமிற்கு அழைத்துச் செல்ல முடியாதே
அவள் கதி!அவளைப் பொறுப்பெடுக்க இரு சமூகத்திலும் யாரும் முன்வராத நிலையில் அவள் எதிர்காலம்............?
அவளுக்கு அவன்........அவனுக்கு அவள்.............அவர்களுக்கு அவர்கள் பிள்ளை.
இந்த வாழ்வை அவர்கள் சந்தோஷமாக தீர்மானித்து விட்டார்கள்...ஆனால் யதார்த்த வாழ்வில் வாழ்வைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி பணமாச்சே!

இவர்கள் அவசரப்பட்டு தங்கள் வாழ்வை வீணடித்து விட்டார்களா அல்லது மதம் துறந்து காதலித்தது தவறா...............நாளை இவர்களால் இந்த வாழ்க்கை யுத்தத்தில் ஜெயிக்க முடியுமா? அல்லது சமுகங்களின் சாபங்களால் ஒழுக்கங்கெட்டவர்கள் எனும் களங்கத்தை தங்கள் சந்ததிக்கு கடத்தப் போகின்றார்களா ..அல்லது நாளை இந்தக் காதல் போதை கலைந்து அவர்கள் தங்கள் உறவுகளைத் தேட ஆரம்பித்து இல்வாழ்வை சலிப்புக்களால் நிரப்புவார்களா...

என்னுள் பல வினாக்கள் தொக்கிக் கிடக்க அவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் என் கன்னத்தை நனைக்கின்றது....

இந்தச் சின்ன வயதில் ஆயிரங் கனவுகளை மனதில் தேக்கி மற்றவர்கள் போல் அவர்களும் வாழ நினைக்கின்ற ஆசைகளை விதி அறுத்தெறிந்ததால் இன்று அடுத்தவர் பார்வைக்குள் வேடிக்கைப் பொருளாக மாறி வெந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் வயது நிகழ்காலத்தை மட்டுமே தீர்மானிக்கக்கூடியது எதிர்காலத்தை வழிநடத்தும் மனோபலம் வர இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும். அதுவரை வாழ்வை எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள்.அவர்கள் மீது அனுதாபப்படுவோர் தயவில் இன்னும் எத்தனை நாட்கள் தான் அவர்கள் வாழ்க்கை நகரப்போகின்றது.........வாழ்க்கைப் புதிருக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சிறு புள்ளிக்காக என் மனம் கசியத் தொடங்கியது.

இறைவா............!

அவர்கள் குற்றங்களை மன்னித்து அவர்கள் வாழ வழி காட்டு எனும் பிரார்த்தனையை மானசீகமாக வழங்கத்தான் என்னால் முடிகிறது...
ஒவ்வொருவர் வாழ்க்கையும் மற்றவர்களுக்குப் பாடங்கள்....
இதையுணர்ந்தால் எம் அனுபவங்கள் சிறந்ததாக மாற்றப்படும்...

அவர்களின் இந்த சுதந்திரமான வாழ்க்கைத் தெரிவிற்காக நாம் இனி சபிப்பதால் பயனென்ன.........திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நதிகளை வழிப்படுத்துங்கள்..இல்லையென்றால் நம் மதத்துள் இன்று அடங்கிக் கிடக்கத் துடிக்கும் துடிப்புக்கள் நாளை விரக்தியால் வேறு திசை நோக்கி நகர்த்தப்படலாம்....!

இவ்வாறான சம்பவங்களின் போது உணர்வுபூர்வமாக ஆத்திரப்படுவதை விட, அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். சகல தடைகளையும் உடைத்தெறியும் மகா சக்தி அன்பு.......அந்த நதியை அணைக கட்ட முடியாது. ஆனால் நதி பிராவகிக்க முன்னர் முளையிலேயே கிள்ளியெறியலாம். ...........!





போ நீ போ



பூக்களாய் உதிரும் விண்மீன் பொறுக்கி
பூமிக்குள் சரமாக்கும் கவிதைக் காரா !

பல கவியுத்தத்தில் புரண்டெழுந்து
இதழ் முத்தமாய் நொருங்கிக் கிடந்தாய் என்னுள்!

அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்
அழகாய்ச் சொன்னாய் வலி தந்தபடி!

நம் மெட்டுக்களெல்லாம் - உன்
மொட்டைமாடியிலல்லவா சிதறிக்கிடக்கின்றன!

நான் சிரித்ததாய் ஞாபகமில்லை
சில்லறைக் குறும்புகளால் நீயென்னைச் சீண்டும் வரை!

யாருக்காகவோ நீ புனையும் கவிகளில்
ஆணவமாய் நானே உட்கார்வதாய் பிரமிப்பு!

நடு இரவின் பனி சொட்டுகையில் 
கூதல் காற்றாய் எனை இறுக்கும் உன் வில்லத்தனம்!

நீயென்னைக் கடந்து செல்கையில்
வீம்பாய் பிடித்திழுக்கும் உன் நினைவுகள் !

உன் கவிமயக்கங்கள் கண்டு
நிலா மெல்லிறங்கி கிறங்கிக் கிடப்பாள் என்னுள்!

நம் நள்ளிரவுக் காதலைக் கிள்ளியெறியும்
கொடுங்கோலனா நீ வியப்புக்குறியென்னுள்!

நாம் காகிதமல்ல நினைத்தவுடன் கசக்கி வீச
புரிகிறது அன்பால் நெய்யப்பட்ட அழகுவேலி!

உனக்கு கொடுக்க என்னிடமினி எதுவுமேயில்லை
நீ தந்த என் கண்ணீரைத் தவிர!

அஞ்சுகின்றேன் கூடல் தந்த சிறு மோதல்
தொலைத்திடுமோ என் விலாசமதை உன்னுள்!

எந்தன் நெஞ்சின் வலிதனை நீ உணர்ந்தால்
பல நடு இரவினிலே புலம்ப வைப்பாயா 

என்னுணர்வுகளை மிதித்து கனவுகளை அறுத்து
உன்னால்  பயணிக்க முடிகிறதா!

போ நீ போ !
உன்னிலுள்ள என்னைத் தந்து விட்டு!


ஜன்ஸி கபூர் 










































2012/06/08

வெளிநாட்டு வாழ்க்கை


பண வரவுக்காய்
அன்பைச் செலவளித்தே 
இளைப்பாறிக் கிடக்கின்றோம்
ஏக்க நிழலில்!

கையேந்தும் வெள்ளிக்காய்
துள்ளியோடும் வசந்தங்கள் 
மீள வரா(து)!
தெரிந்தும் கூட
தொலைந்து போகின்றோம்
வெளி நாட்டிற்கே!

கிலி கொள்ளும் வெளிநாட்டை
பலி சொல்லப் போனால்
தொழிலேதுமின்றி - எம்முள்
வலியே வாழ்வாய் ஆகும் !

உறவுகளை பணயம் வைத்து
இதயமதை இரும்புமாக்கி
கண்ணீரில் கரைந்தே நாம்
பணம் சேர்க்கின்றோம்
சொந்த மண் துறந்து!

கனவு வாழ்க்கைக்காய்
கல்லறை தேடித் தேடியே 
அனலிட்ட மெழுகாய்
அகிலமெங்கும் சுற்றுகின்றோம்!

ஆகாய மாளிகைகளும்
ஆடம்பர வாழ்வின் எச்சங்களும்
அந்நிய பாஷைகளும்
வெந்நீர் தடவும் பாலையும் சொத்தாக
தொலைந்துதான் போகின்றோம்
தொலைதூர மண்வாசத்தில்!

வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள- எங்கள்
வாலிபம் தியாகமாகும்!
வெறுத்துப் போன தனிமைக்குள்
வேரறுந்து துடிக்கும் மனசோரம்!

ஜன்ஸி கபூர் 




நோபல் பரிசு




சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் 1833 அக்டோபர் 21 ல் பிறந்த ஆல்பிரட் நோபல் என்பவரே நோபல் பரிசின் தந்தையாவார். இவர் சிறந்த கண்டுபிடிப்பாளராகவும் வேதியாளராகவும் பொறியியலாளராகவும் விளங்கினார். நோபல் தன் வாழ்வில் பெருமளவான செல்வத்தைச் சேர்த்தார். அவர் வருமானத்தில் பெரும்பகுதி 355 கண்டுபிடிப்புக்களால் பெறப்பட்டது. டைனமோட் அவர் கண்டுபிடிப்புக்களில் முக்கியமானது.

நோபல் தான் இறந்த பிறகும் மக்களால் நினைவுகூறப்பட வேண்டுமென விரும்பினார். அதனடிப்படையில் தனது சொத்தின் பெரும்பகுதி மனித இனத்திற்கு முன்னேற்றமளித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கூடாக வழங்கப்படவேண்டுமென 1895 நவம்பர் 27ல் உயில் எழுதியவராய் 1895 திசம்பர் 10 ல் காலமானார்.  அப்பொழுது அவருக்கு வயது 63......

நோபல் பரிசு வழங்கலுக்கான நிதி மூலங்கள், அதன் நிர்வாகம் என்பவற்றை மேற்பார்வை செய்ய 1900 ஜூன் 29ல் நோபல் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதனூடாக அவரது பரிசு வழங்கும் கனவு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1901 ம் ஆண்டு மன்னர் ஆஸ்கர்11 இனால் நோபல் பரிசு வழங்கல் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசினை நோர்வேயும் ஏனைய பரிசு வழங்கலை சுவீடனும் வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதனை தற்போதும் நடைமுறைப்படுத்துகின்றன.

முதல் வேதியல் வெப்ப இயக்கவியலுக்கான பரிசு யாகோபசு வான் காவுக்கும், முதல் இயக்கவியல் பரிசு சல்லி புருதோமைக்கும், முதல் இலக்கியத்திற்கான பரிசு விக்டோரிய கவிக்கும் முதல் மருத்துவத்திற்கான பரிசு எரிக் வான் பெரிங் குக்கும் (இவரே டிப்தீரியாவுக்கான பிறபொருளெதிரியைக் கண்டறிந்தார்) வழங்கப்பட்டது.

எனினும் இரண்டாம் உலகப்போர் காரணமாக இப்பரிசு வழங்கலில் சற்று தளர்வு காணப்பட்டது. அதிக தடவைகள் அமைதிக்கான பரிசு வழங்கல் தவிர்க்கப்பட்டது.

1969 ம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300 வது வருட கொண்டாட்டத்தின் நினைவாக பெருந்தொகைப் பணத்தை நோபல் அறக்கட்டளைக்கு வழங்கி பொருளாதார அறிவியல் பரிசு வழங்கும் நடைமுறையை ஏற்படுத்தியது. இப்பரிசினை வென்ற முதலாவது நபர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் பிரிச் ஆவார்கள். இதனை சுவீடனே வழங்குகிறது. எனினும் இனி புதிய பரிசுகளை வழங்குவதில்லையென அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.

300 பேர் பரிந்துரைக்கப்பட்டு அவர்களிலிருந்து பரிசுக்குரியவர் தெரிவு செய்யப்படுகின்றார்.  வருடந்தோறும் நோபல் நினைவு தினமாகிய டிசம்பர் 10 ந் திகதி அமைதிக்கான நோபல் பரிசு தவிர ஏனையவற்றுக்கான பரிசுகள் சுவீடனிலுள்ள ஸ்டோக்ஹோம் நகர்த்தில் வழங்கப்படுகின்றது. அதே தினம் அமைதிக்கான பரிசு நோர்வோயிலுள்ள ஒஸ்லோவில் வழங்கப்படுகின்றது. இப் பரிசுவழங்கும் விழாவில் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் இடம்பெறும். நோபல் பரிசுத் தொகை 1 மில்லியன் டாலராகும்.

அதிக நோபல் பரிசுகளை வென்றெடுத்த நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இந்தியா நான்கு நோபல் பரிசாளர்களை உருவாக்கியுள்ளது. அவர்களுள் 1903ல் இலக்கியத்திற்காக ரவீந்திரநாத் தாகூர் அவர்களும் இயற்பியலுக்காக 1930 ல் சர் சி.வி. ராமன் அவர்களும் 1979ல் அன்னை தெரேசா அவர்கள் சமாதானத்திற்காகவும் 1998ல் பொருளாதாரத்திற்காக அமர்தியா சென் அவர்களும் பெற்றுள்ளார்கள்

உயர்ந்த சேவைக்காக வழங்கப்படும் இவ் உயரிய பரிசு சமூக சேவைக்கான சிறந்த அர்ப்பணமாகும். இப் பரிசு வழங்கலினூடாக ஆல்பிரட் நோபல் அவர்கள் இப்புவி நிலைத்திருக்கும் வரை ஞாபகங்களால் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.


- Ms. Jancy Caffoor -









முகநூலும் நானும்





நான் முகநூல் எனும் சமூக வலைத்தளத்தில் கால் பதித்து 18 மாதங்களே (08.06.2012) கடந்திருக்கின்றன. இன்று பலரை நட்பால் ,அன்பால் , மனித நேயத்தால் பிணைத்திருக்கும் இந்த முகநூல் எனும் மாபெரும் சக்தியானது ஓர் நொடியில் அகிலத்தின் பல திக்குகளையும் தொடச் செய்கின்றது.

ஒத்தக் கருத்து உடையவர்களை தேடி நட்புக் கொள்ளவும், பிரிந்த நண்பர்களுடன் இணையம் வழியாக இணைந்திருக்கவும் உருவாக்கப் பட்டதுதான் ஃபேஸ்புக் சமூக வலைதளம்.

எல்லாவற்றிற்கும் ஈர் பக்கங்கள் உண்டு. அடுத்தவர் மகிழ்ச்சி, வளர்ச்சியில் திருப்தி காணாத மனநோயாளிகளே முகநூலில் நம் பெயருக்குள் களங்கம் விளைவிக்கின்றனர். முயல்கின்றனர். முகநூல் பாதுகாப்பற்றது. ஏனெனில் யார் வேண்டுமானாலும் என்ன பெயரிலும் எத்தனை முகநூல்பக்கங்களையும் கணக்கின்றி உருவாக்கலாம் எனும் நிலைப்பாடுள்ளது. இந்த வசதி வாய்ப்புக்கள்தான் பலருக்கு தீங்கு விளைவிக்கும் முகநூல் எதிரிகளை உருவாக்குகின்றது. எனினும் நாம் நல்லவற்றிற்காக முகநூல் பக்கங்களை பயன்படுத்தும் போது அதன் மூலம் கிடைக்கும் திருப்தி, மகிழ்வு  வார்த்தைக்குள் கட்டுப்படாதது.

அதுமட்டுமல்ல வீணாகக் கழியும் நம் பொழுதுகளை நாம் முகநூலுக்குள் சுருக்குவதால் பிறருடனான வீண் வார்த்தையாடல்களையும் தவிர்க்க முடிகின்றது.. நம்மைச்சூழ விரிக்கப்படும் மெளனங்களும் நிசப்தங்களும் பிறருடனான முரண்பாடுகளைத் தவிர்க்க உதவுகின்றது.

முகநூல் சிறந்த தொடர்பு சாதனம்....வயது, பால் , மத, அந்தஸ்து போன்ற எவ்வித வேறுபாடின்றி ...நட்பை , அன்பை, தாம் பெற்ற அனுபவங்களை , தமது திறமைகளைப் பரிமாறிக் கொள்ளவுதவும் சிறந்த முற்றமது.....!

இருந்தும் அதிக அன்பு தரும் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத ஏமாற்றங்கள்,  ஏக்கங்கள், காதல் தொடர்புகள் ஏற்படுத்தும் தோல்விகள் ,நினைத்தவுடன் எவ்விதத் தணிக்கையுமின்றி எமது விமர்சனங்களை வெளிப்படுத்துவதால் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், கண்டனங்கள் , சுதந்திரமான நமது வெளிப்பாட்டில் பொறாமை கொண்டெழும் எதிரிக் கூட்டங்களும் அவர்களின் முறைகேடான தாக்குதல்களும் போன்ற செயல்கள் யாவுமே நம்மைச்சூழவுள்ள பாதகங்களே!

முகநூலில் நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு அசைவும் நுணுக்கமாக அடுத்தவரால் அவதானிக்கப்படுவதை பலர் மறந்தே விடுவதால்தான் சில சந்தர்ப்பங்களில் நட்பின் ஒழுக்கம் விலகி பிரச்சினைகள் எட்டிப்பார்க்கின்றன அடுத்தவரின் கேலிப் பார்வைக்குள்ளும் நாம் வீழ்கின்றோம்..

 முகநூல் என்பது பெரும்பாலும் முகமறியாதவர்களுக்காக நாம் உருவாக்கும் இராஜ்ஜியம். இங்கு வருபவர்கள் பற்றியும் நம் நட்பு வட்டத்தில் இணைவோர் பற்றியும் நம்மால் எவ்வித உத்தரவாதமும் பெறமுடியாது. ஏனெனில் அவர்களால் முன்வைக்கப்படும் தகவல்களே நாம் நம்பும் ஆதாரங்கள். மனிதர் முகங்களைப் போல் குணங்களும் மாறலாம் .எல்லோரையும் ஒரே எடையில் வைத்துப் பார்க்க , கணிக்க முடியாது. முகநூலினுள் நாம் மகிழ்வாக உலா வர வேண்டுமானால் ஒவ்வொரு நகர்வையும் அவதானமாகவே இடவேண்டும். அதற்காக நான் பின்பற்றும் சில நடைமுறைகள் இவைதான்...........

நண்பர் இணைவுக்கான அனுமதி வரும் போது  (Friend request) நான் அந் நண்பர்களுடன் தொடர்புடைய என் நண்பர்கள் யார் (Mutual friend) என்பதையே முதலில் பார்ப்பேன். அவர்களின் முகப்புப் பக்கத்தையும் ஆராய்வேன். அவ்வாறு பார்த்து திருப்தியுற்ற பின்னரே சம்மதம் கொடுப்பேன்.அப்பொழுதே அந் நட்பு நிலைக்கும், பயனுள்ள கருத்துப்பரிமாற்றங்களுடன் தாவி நிற்கும். .ஏனெனில் முகநூல் பிரவேசமானது பெண்களுக்கு கத்தி விளிம்பில் நடப்பதற்கு ஒப்பானது. இத் தளத்தில் எற்படும் சிறு சறுக்கலும் நம்முள் நிரந்தர இடர்பாட்டை, அவமானங்களைத் தோற்றுவித்து விடும்.

அத்துடன் நாம் பதியும் சுய விவரங்களை குறைவாகப் பதிய வேண்டும். பெயர் , பிறந்த திகதி, தொழில், நாடு அல்லது ஊர் இருந்தால் போதும். மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் தொலைபேசி எண்களைப் பரிமாறக்கூடாது.

பொதுவாக நாமிடும் பதிவுகள் சகலருக்கும் பொருத்தமுள்ளதாகவும், சிந்தனையை வளப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். 'மெஸேஜ்" எனும் பகுதிக்குள் பதியப்பட வேண்டிய தனிப்பட்ட , குறித்த நண்பர் மட்டும் பார்க்க வேண்டிய செய்திகளை பலர் பொதுப்படையாக பரிமாறுவது ஆரோக்கியமல்ல. பெண்களை ப் பொறுத்தவரை இந் நடைமுறை நிறுத்தப்பட வேண்டிய தொன்று. ஆண் நண்பர்களால் பரிமாறப்படும் வெளிப்படையான செய்திகளுக்கு தேவைப்படின் பெண் நண்பிகள் அவர்களின் மெஸேஜ் பகுதிக்குள் தம் கருத்துக்களைப் பகிரலாம்.

என்னைப் பொறுத்தவரை செய்திப்பரிமாற்றங்கள், chat தொடர்பாடல் என்பவற்றை அதிகளவு மேற்கொள்ளாது தவிர்க்க வேண்டும். சிலரின் பார்வை நாம் பதிவிடும் விடயங்கள் தொடர்பாக இல்லாமல், மெஸேஜ் பகுதிகளினூடான வீணாண தொடர்பாடலிலேயே இருக்கும். இது எனக்குப் பிடிக்காததும் கூட..........ஆனால் நாம் நமது நண்பர்களாக உறுதிப்படுத்தியவருடன் அதிகம் தொடர்பாடுவது தவறல்ல..ஆனால் அவ்வாறான தொடர்பாடலை நட்பை, நம்மை புரிந்து கொண்டவர்களுடன் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்..

முகநூலில் நல்ல நண்பர்களாக இனங்கண்டவர்களை அடிக்கடி பெயர் சொல்லி விளியுங்கள். ஏனெனில் பெயர் குறித்தல் மனதை இதப்படுத்தி நம்முள் தலைகாட்டும் வேறுபாடுகளைக் களைந்து நம் மனதை அன்பின் பால் ஈர்க்கும்.

முகநூலில் நாம் பதிவிடும் புகைப்படங்களை நமக்கு தெரியாமல் யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் (download) செய்து தவறாக பயன்படுத்தலாம்  பெண்களின் புகைப்படங்களை கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் உலவ விடும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. எனவே பெண்கள் தமது புகைப்படங்களை வலைவேற்றம்  (upload) செய்யக்கூடாது . தேவைப்பட்டால் குறித்த நம்பிக்கையான நண்பர்கள் மட்டும் பார்வையிடச் செய்யலாம்.

அவ்வாறே போலிப் பெயர்களில் உலாவுவோருடனும் நட்பு கொள்வதை தவிருங்கள். ஏனெனில் இடப்படும் முகமூடி தவறுகளின் பக்கங்களில் நம்மைத் தள்ளிவிடும்..நல்ல நண்பர்கள் நிச்சயம் தமது சொந்தப் பெயர்களில் மட்டுமே தொடர்பு கொள்வார்கள்

முகநூலில் நாம் பதிவிடும் விடயங்களை நண்பர்கள் மட்டுமே பார்வையிடச் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல நல்ல விடயங்களை மட்டும் பகிர வேண்டும். பின்னூட்டங்களை( Comment)  வழங்கும் போது பிறர் நம்மை மதிக்கக்கூடியவாறு பண்புள்ள நல்ல வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். அவ்வாறே நண்பர்கள் தானே என்று அவர்களிடும் சகல பதிவுகளுக்கும் விருப்பிட்டு (Like)  வம்பில் மாட்டிக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். நாமிடும் விருப்புக்களும் பின்னூட்டங்களும் பதிவுகளுமே அடுத்தவர் மத்தியில் நம் இருப்பின் கௌரவத்தை உறுதிப்படுத்தக் கூடியவை.

அவ்வாறே நம்முள் அதிகம் பரிச்சயமில்லாதவர்களுடன் அளவுக்கதிகமாக உரையாடி காதல் போதையில் களிப்பதும் தவறு. ஏனெனில் முகநூல் காதல் பெரும்பாலும் பொய்யான வலைவிரிப்பு. சொற்ப நேர சந்தோஷ உணர்வுப் பரிமாற்றங்களால் பெண்கள் கற்பையே பறிகொடுத்து அல்லல்பட்ட சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

இருந்தும் என்னைப் பொறுத்த வரை விரல்விட்டெண்ணக்கூடிய நல்ல நட்புக்களை நான் முகநூலில் பெற்றுள்ளேன். அந்த நட்புக்கள் என் ஆயுட் கால வாழ்வுவரை தொடரவேண்டுமென்பதே என் எதிர்பார்ப்பாகும்.

ஈற்றில் முகநூல் நிலவரங்களை உணர்ந்து நாம் களமிறங்கினால் நம் சமூக அந்தஸ்தும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுவதுடன் பாசக்கார நட்புக்களும் நம்மைச் சூழ்ந்திருக்கும்.











2012/06/07

நான் வரைந்தவை

என் மனம் தனிமைக்குள் சிறைப்படுகையில், எழுதுகோல் மட்டுமல்ல தூரிகையும் என் நேசமாய் என்னுணர்வுகளை தன்னுள் ஏந்தும்.......







- Ms. Jancy Caffoor -

ஊடலேனோ



தொலைவில் !
வானைத் தொட்டு விடும் மேகங்களாய்
உனை எனுள் நிரப்ப
உயிரேந்திக் காத்திருக்கின்றேன் நிதமும்!

உன் ஞாபகங்களால் நெய்யப்பட்ட
என் மனக்குடியிருப்பு  
உன் நிழலின்றி பாழடைந்துதான்
போனது பல நாட்களாய் !

மெலிதான கடலோசையில்
புரண்டெழும் மணற்றரையாய்- மங்கையென்
விழிகளும் ஆர்ப்பரிக்கின்றன
கண்ணீரைச் சுமந்தபடி !

வெந்நீருள் சாமரம் வீசி- என்
செந்நீருள் இன்னல் நிரப்பி- இன்னும்
வந்தமரா வசந்தமாய்  நீ
எனை அவஸ்தையில் வாட்டுவதுமேனோ!

தென்றல் சிறகாடையில் - தம்
தேகம் உலர்த்தும் சின்னஞ்சிட்டாய் 
உன்னுள் என் மேனி துவைக்க
உருகித் துடிக்கின்றேன் வெம்மையோடு!

கால் புதையும் வெண்மணலில்- என்
கால் சீண்டும் சிறு நண்டாய் 
உன் குறும்பில் நானும் நொறுங்க
கண்ணா காத்திருக்கின்றேன்  கனநாளாய்!

எதிர்பார்ப்பில் விழிகளைச் செருகி
எட்டுத் திக்கும் பார்வை பாய்ச்சி
வெட்டவெளியின் வெறுமைக்குள்ளும் - இந்த
கட்டிளமை உன்னிழல்தான் தேடிக்கிடக்கும்!

பாதச்சுவட்டில் மோதும் கற்கள் கூட
உந்தன் பெயரை உச்சரித்தே கிடக்கும்!!
மலரை மோதும் வண்டுகள் கூட - என்
நெஞ்சிலூர்ந்து உன் ஞாபகங்கள் சுவைக்கும் !

காற்றில் கலையும் கருங்கூந்தல்
காதல் கொண்டு தவித்து மாளும் !- அது
சாதலில் வீழ்ந்திட துடிக்குமெந்தன்
சரித்திரம் நீயென சாட்சியும் பகரும்!

என் ஆறடி தேகம் உந்தன் தேசம்- என்
பார்வைப்புலத்தில் உந்தன் விம்பம்!- நீ
இன்னல் தந்து மறைந்ததுமேனோ
இன்னும் உன்னுள் ஊடல்தானோ!


ஜன்ஸி கபூர் 



2012/06/06

வருவாரோ..........




தாயே !

மனசேனோ இன்று நெருடலில்
வெம்பிக் கிடக்கின்றது
பல மணியாய்!

இறுகிப் போன உணர்வுகளின்
ஓலத்தில் 
ஒளிந்து கொண்ட சோகங்கள்- என்
விழியைப் பிய்த்தெறிகின்றது!

தொலைவில் அலைந்து கொண்டிருக்கும்
பனிப் புகாரில் 
உங்கள் முகம் கலைந்து கொண்டிருக்கின்றது
சுய இருப்பைத் தொலைத்தபடியே!

கண்ணீரில் கரையும் கன்னங்கள்
 ரணமாகி என்னுள்
சிவந்து மிரட்டுகிறது
செந்தணல் குவியலாய்!

நம்முள் எழுதப்பட்ட .நீண்டகால 
தொப்புள் ஒப்பந்தம்
காலாவதியாவதில் ஏன் உடன்பாடு கண்டீர்
அன்னையே!

மண்ணோரமென்னைச் செதுக்கியெடுத்து
சுவாசத்துள் சிறகும் நெய்தும் 
பாசம் தந்த என் அகிலமே- நீங்கள்
பேச மறந்ததேனோ நிரந்தரமாய்!

வெள்ளிப் பாலூட்டி- என்
வேதனை பல கிள்ளியெறிந்து
சாதனைகள் கண்டு புன்னகையுதிர்த்த
அன்னையின்று அருகிலில்லையே
என் செய்வேன்!

வெளியோரம் சுவடு பதித்து
வழிகாட்டி பயணம் தந்து - என்
மனவெளிக்குள் அன்பும் தந்த
அன்னையின்று எங்கு சென்றாரோ!

இதயமென்ன இரும்பரனோ 
துருப்பிடித்து இற்றுப் போக!- என்
அருகாமை தொலைத்த உங்களுக்காய்
காத்திருக்கின்றேன் சிறுபிள்ளையாய் !

அன்பால் வேலி நெய்து - என்
அகிலமாய் பிரகடனம் தந்து 
புன்னகைத் தேசத்துள் எனை நிரப்பி
பரிவாய் உருகி நின்ற அன்னையே !

இன்றேனோ உங்கள் பிரிவு கண்டு 
சிதைந்து வீழ்கின்றேன் மண்ணில்
அரவணைப்பார் யாருமின்றி - என்
ஆயுள் முழுதும் விரக்தி சுமந்தபடி!



 ஜன்ஸி கபூர் 














சூரியனும் வெள்ளியும் சந்தித்தால்



இப் பிரபஞ்சம் பற்றியும் இப் பூமியின் இயக்கம் பற்றியும் அழகாய் கற்றுத்தரும் அறிவியலின் இயக்கச சாவியே விஞ்ஞானம். இந்த விஞ்ஞானத்தின் பரந்த பகுத்தறிவுக்குள்ளடங்கும் தேடல் சுவாரஸியமானது.......



அந்த வகையில் இன்று 2012 ஜூன் 06 ந் திகதி விண்வெளியில் சூரியனும் வெள்ளிக்கிரகமும் சந்தித்துக் கொண்ட காட்சியும் பல விழிகளை நிறைத்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

சுக்கிரன், விடிவெள்ளி, மாலைவெள்ளி என அழைக்கப்படும் வெள்ளிக் கிரகத்தின் வளி மண்டலம் நம் பூமியின் வளிமண்டலத்தை விட 93 மடங்கு அடர்த்தியானது. அதில் ஏறக்குறைய 96 சதவீதம் காபனீரொட்சைட்டு வாயு நிறைந்திருப்பதால் வெப்பநிலையின் வீச்சும் 460 பாகை செல்சியஸை விட அதிகமானதாகவே காணப்படும். மிகச் சிறிய கோளாகிய சூரியனுக்கு அருகிலமைந்துள்ள புதன் கிரகத்தின் வெப்பநிலையை விட வெள்ளியின் வெப்பநிலை 60 பாகை அதிகமாகும்.

வெள்ளிக்கிரகம் தன்னை ஒருமுறை சுற்றி வர 243 நாட்களும் சூரியனைச் சுற்றி வர 225 நாட்களும் எடுக்கின்றன. நாம் 2 வருடங்களைக் கழிக்கும் போது வெள்ளிக் கிரகம் 3 நாட் பயணத்தில் மாத்திரமே அலைக்கழிந்திருக்கும். வெள்ளியின் அச்சு 177 பாகை சரிவில் இருப்பதனால் அது தலைகீழாகச் சுற்றும். எனவே சூரியன் மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும்.

வெள்ளி சூரியனைக் கடந்து செல்லும் இந்த நிகழ்வை வெள்ளி ட்ரான்சிட் நகர்வு என்பார்கள். வெள்ளிக்கிரகமானது சூரியனுக்கும் பூமிக்குமிடையே நேர்கோட்டில் வரும் இந்நிகழ்வானது 105 வருடங்களுக்கு ஒருமுறையே நிகழும். இதனை நேரில் (நேரடியாக அல்ல....கறுப்புக் கண்ணாடி அல்லது தொலைநோக்கி மூலம் மிகப் பாதுகாப்பான முறையில்) இன்று பார்த்தவர்கள் அதிஷ்டசாலிகளே! ஏனெனில் மீண்டும் இது தோன்றுவது 2117 டிசம்பர் 6 ஆக இருக்கும்.

வெள்ளி தன்னை விட 100 மடங்கான சூரியனைக் கடந்து செல்லும் போது சிறு புள்ளி போல் தோற்றமளிக்கும்.இவ்வாறு கடந்து செல்ல சுமார் 7 மணித்தியாலங்கள் எடுக்கும். இதனை வெள்ளி இடைநகர்வு, வெள்ளி நகர்வு, வெள்ளிக் கடத்தல், வெள்ளி மறைப்பு, வெள்ளி உலா எனும் பல பெயர்களால் அழைக்கின்றார்கள்..இந்த வெள்ளி உலாவுக்கான நேரம் காலை 6 மணி தொடக்கம் 10 .22 மணி வரையாகும். எனினும் இலங்கை மக்கள் சுமார் 7 மணியளவில் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த அரிய நிகழ்வை மக்கள் பார்வையிட திருனோணமலை , கொழும்பு மாவட்டங்களில் விசேட உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அத்துடன் இதன் நகர்வை நேரடியாக இணையத்தள முகவரியினூடாக கண்டு களிக்கவும் வசதி செய்தனர்.. இதனடிப்படையில் கொழும்பு பல்கலைக்கழக வான சாஸ்திர சங்கத்தின் இணையத்தளமான www.uocmas.info , மற்றும் ஆதர்சி கிளார்க் நிலைய இணையத்தளமான www.accimt.ac.lk லும் பார்வையிட வசதி யளிக்கப்பட்டிருந்தது

இன்று இவ் அரிய நிகழ்வின் நகர்வை கண்டு வியந்த அதிஷ்டம் பெற்றவரா நீங்கள்..................?? வாழ்த்துக்கள் !!




நவீனத்துவம்


விண்ணுக்குள் கோலமிட்டு
கோள்களைப் பிய்த்தெறிய
துடிக்கின்றன - நவீனத்துவ
நாசாவின் விரல்கள்!

பூமி மார்புக் கூட்டினை கிழித்து
தலை நிமிரும் மாடமாளிகைகள்....தம்
முகம் பார்க்கத் துடிக்கின்றன
ஆகாயக் கண்ணாடியினில்!

மேகங்களை பிய்த்தெறிந்து
சாகசம் செய்யும் யந்திரப்பறவைகள்
எச்சமிட்டே ஏக்களமிடுகின்றன - நம்
சூழலின் கற்பைக் கெடுத்தவாறே!

பசுமைகளை கரைத்துவிட்டு 
வெம்மைக்குள் முறைத்துக் கிடக்கும்
வெட்ட வெளிகள் 
நா வறண்டு மயங்கி வீழ்கின்றன!

பாய்ந்தோடும் கடலீரத்தில்
கால் நனைக்கா வீதிகளுக்காய்
காத்திருக்கும் பாலங்கள் - வாகன
நெரிசல்களால் வாந்தியெடுக்கின்றன பலமாய்!

இயந்திரக் கைகலப்பில்- மனித
இதயங்கள் மௌனித்துக் கிடக்கையில்!
ஆலைகள் வீரியங்கள் கொண்டு - மனித
சாலைகளின் உழைப்பை உறிஞ்சியெடுக்கும்!

ரோபோக்களுக்குள் ரேகை நுழைக்க
வீறாப்பாய் காத்திருக்கும் விஞ்ஞானம் மனித
மனங்களுக்குள் முரணை அரணாக்கி
ஈனப்பிறவியாய் வேவும் பார்க்கின்றது!

கைபேசிகள் கண்ணடிக்கும்- மனித
கரங்கள் கணனிக்குள் மொழி பேசும்!
உறவுகளும் நட்புக்களும் ஊமையாக
உலகமே கைக்குள் சுருங்கிக் கிடக்கும்!

நவீனத்துவத்தின் காலனித்துவத்தில்
கல்லடிபட்டுக்கிடக்கும் பழைமைகள் 
தள்ளாடி வீழ்கின்றன - சிலர்
எள்ளி நகையாடல்களுடன்!


ஜன்ஸி கபூர் 







"வேர் அறுதலின் வலி" - விமர்சனப் பார்வை!


(கவிதைத் தொகுப்பு நூல் விமர்சனம்)
----------------------------------------------------

இலக்கியங்கள் காலத்தை வென்றும், நின்றும் பேசப்படக்கூடியவை. அவை வாழ்வியல் அனுபவங்களுடன் ஒன்றித்து நிற்கும் போதே மேற்கூறிய யதார்த்தம் மெய்ப்படுகின்றது. வேர் அறுதலின் வலியும் இக் கட்டுக்கோப்புக்குள் தன்னைத் தொட்டு நிற்கின்றது.

"வேர் அறுதலின் வலி"

இது தாயகத்தின் இருப்பை வலுக்கட்டாயமாகப் பறித்தெடுத்த ஓர் சமூகத்தின் வலி! 1990 ஒக்டோபர் 30 ந்திகதி 2 மணி நேரத்தில் தம் பாரம்பரிய பூமியிலிருந்து விடுதலைப்புலிகளால் பலாத்காரமாக விரட்டியடிக்கப்பட்டு இன்னும் அகதி வாழ்விலிருந்து மீளமுடியாத சோகத்தில் புரண்டு கொண்டிருக்கும் எம் சமூகத்தின் கண்ணீர்.....அவலம்!

எம்மவர்களின் அவலம் வெளியுலகிற்குள் அதிகளவில் பரவிக்கிடக்காத சூழ்நிலையில் யாழ் முஸ்லிம் இணையத்தளம் அந்த சோகங்களின் பிரதிபலிப்புக்களை உலகறியச் செய்வதில் வெற்றி கண்டது. அந்த வெற்றியின் ஓர் அடையாளமாக இக் கவித் தொகுப்பினைக் கருதலாம். இவ் வெற்றியின் பின்புலமாகச் செயற்பட்ட சகோதரர் அன்ஸிரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு வீணாக கழிந்து விட்ட 21 ஆண்டின் நிறைவாக நடத்திய கவிதைப் போட்டிக்காக குவிக்கப்பட்ட மன உணர்வுகளின் சங்கமிப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 55 கவிதைகள் "வேர் அறுதலின் வலி" யுடன் சங்கமித்துக் கிடக்கின்றது.
                     
 யாழின் மகுடங்களாக உயர்ந்து கிடப்பவை பனை மரங்களே...அந்தப் பிண்ணனியை புலப்படுத்தும் பனைமரங்களுடன் கூடிய முகப்பட்டை.................அழகான தலைப்பு!

உள்ளே இருக்கக்கூடிய கனாதியான கவிதைகளை நம் எதிர்பார்ப்பில் வீழ்த்தக்கூடியதாக இக் கவித்தொகுப்பு காணப்படுகின்றது.
சொந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்ட மனித ஆத்மாக்களுக்காக, அவ் ஆத்மாக்களின் பிரதிபலிப்புக்களாக விளங்கும் இக்கவிதைகளை யாழ் முஸ்லிம் இணையத்தளம் 1990ல் விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளது.

 ஈழத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்விலும், வரலாற்றிலும் அதிக அக்கறையுள்ளவர் கவிஞர் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் அவர்கள்.அவர்களின் முன்னுரையோடு இக் கவித்தொகுப்பு பயணிக்க ஆரம்பிக்கின்றது. ஜெயபாலன் அவர்களின் முன்னுரையில் "இம் மக்களின் துன்பத்திற்கான பிரயாச்சித்தம் மேற்கொள்ளப்படவேண்டுமென்ற "ஆதங்கம் இழையோடிக் கிடக்கின்றது.

"பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளியிட சிறந்த சாதனம் கவிதைகளாகும்" என ஆசிரியரும் எழுத்தாளருமான எம்.எஸ்.ஏ.ரஹீம் ஆசிரியர் அவர்கள் தனது ஆசிச் செய்தியினூடாக இக் கவிப்பயணத்தின் நகர்வுக்கு கையசைக்கின்றார்.
                        தனித்து துணிந்தியங்கி யாழ் முஸ்லிம்களின் இருட்டடிக்கப்பட்ட வாழ்வை உலகின் கண்முன் நிறுத்திக் கொண்டிருக்கும் அன்ஸிரின் இம் முயற்சிக்கான பாராட்டுக்கள் அல்ஹாஜ் எம் .எம். குத்தூஸ் (முன்னாள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர்) அவர்களின் ஆசியுரையோடு கலந்துள்ளது.

அவ்வாறே இவ் வேர் அறுதலின் வலியின் பிரசவம் பற்றி சகோதரர் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் தனது அணிந்துரையில் மனந் திறந்து பேசுகின்றார். நம் உள்ளத்தையும் தொட்டு நிற்கின்றார்.

  "கறைபடிந்த வரலாற்றை கண்ணீரால் வாசிக்கும்"  கிண்ணியா ஏ.எம்.எம்.அலி அவர்களின் வேதனையின் வருடல்களோடு இக் கவிதைத் தொகுதியின் கவிப்பயணம் நடைபோட ஆரம்பிக்கின்றது.

                                                     இரண்டாவது கவிதை அநுராதபுரம் ஜன்ஸி கபூரின் "பிறப்பிட நிழலிலே" முகங் காட்டி நிற்கின்றது. பல வருடங்கள் கழிந்தாலும் கூட மறக்கப்பட முடியாத ஞாபகங்களும், வலி தரும் ரணங்களும் இக் கவிதையாய் நிமிர்ந்து நிற்கின்றன.

 ஈர் தசாப்தம் உதிர்ந்தாலும் கூட அன்றைய ஞாபகப் பொழுதுகளின் ஈரம் இன்னும் உலர்த்தப்படாத தன்மையை சகல கவிதைகளும் தொட்டு நிற்கின்றன. வயதின் ஏற்றங்களோ, கவித்துவ அந்தஸ்தோ மன உணர்வுகளைப் பாட இங்கே தடையாகவில்லை..ஒருவரின் மனவெளிப்பாடுகள் எவ்வித திருத்தமின்றி அவர் குரலாகவே ஒலிப்பது இங்கே சிறப்பு.ஏனெனில் செம்மைப்படுத்தலுக்காக அரிதாரம் பூசும் போது அவர் அனுபவித்த அனுபவங்கள் தம் எடையைக் குறைக்கின்றன.ஏனெனில் ஒருவர் தன் அனுபவங்களை தான் மாத்திரமே உணரலாம் அனுபவிக்கலாம்.

தத்தமது கவித்திறமைக்கேற்ப பேனாக்கள் புதுக்கவிதைகளாகவோ, மரபுக் கவிதைகளாகவோ பேசுகின்றன இவ்விதழில்! சில கவிஞர்கள் தம் தலைப்புக்களை சுருக்கமாக, அழகாக வைத்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. பத்திற்குமேற்பட்ட கவித்தலைப்புக்கள் சற்று நீளமாக காணப்பட்டன. இருந்தும் அவற்றின் கவியடக்கம் தன் கனதியைக் குறைக்கவில்லை......

ஒவ்வொரு கவிதைகளின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப எழுத்துக்களின் வடிவம் மாற்றப்பட்டிருப்பது கூட சிறப்பே! இந்தக் கவிதைகளுக்குப் பொருத்தமான சித்திரங்களை இணைத்திருப்பின் அதன் அழகு மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும் என்பதை என் பார்வை எனக்குள் தொட்டுச் சொல்கின்றது. ஏனெனில் ஏனைய கவிதைப் பக்கங்களை விட "கண்ணீர் கரையும் " எனும் கவிப்பக்கத்தின் ஈர்ப்பில் விழி இன்னும் மொய்த்துக் கிடக்கின்றது அந்த விழியின் சித்திரத்தில் ஈர்க்கப்பட்டு!

கண்ணீரின் ஏக்கத்துடன் தொடங்கப்பட்ட இக் கவிப்பயணம் கடைசியில் "வசந்த காலம் வருமோ, வாழ்வின் நிலை மாறுமோ" எனும் கவியோடு முற்றுப் பெறுகின்றது..வசந்தத்திற்கான ஏக்கம் ஒவ்வொரு மனங்களின் எதிர்பார்ப்பாக ஊடுறுவிக் கிடப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஐம்பத்தைந்து பேரின் எண்ண வார்ப்புக்கள் இவை...எனவே ஒவ்வொரு கவி தொடர்பான பார்வையை நுணுக்கமாக படரவிட முடியவில்லை..இருந்தும் ஒரு சொல்லில் சொல்வதாயின் இவை யாவும் காலத்தை வென்றும் நின்றும் பேசப்படக்கூடியவை..இங்கு பதிவிட்டவர்கள் யாவரும் கவிப்புலமையில் வென்றவர்கள் அல்லர் என்பதால் சிற்சில இடங்களில் கவி வார்ப்புக்களில் சற்றுத் தொய்வு காணப்படுகின்றது. எனினும் அவை குறைகள் அல்ல......பிரமிப்பூட்டக்கூடிய வியப்புக்கள்...எங்கள் சமுகத்தின் இலக்கிய வார்ப்புக்கள் அவை.........அவை தலை காட்ட முயற்சிக்கும் போது விமர்சனங்களால் அவற்றை வேரறுப்பது தகுந்ததல்ல.

                   கவித் தொகுப்பட்டையின் பின்புறம் கவிஞர் அல்லாமா இக்பால் சிரிக்கின்றார்.அவர் புன்னகைச் சிந்தலின் ஓர் துளியிது,,,,

"நித்திய வாழ்க்கை நீ வாழ விரும்பின்
உன் இறந்த காலத்தை
நிகழ்காலத்திலிருந்தும்
எதிர்காலத்திலிருந்தும் துண்டித்து விடாதே"

                  ஆம் கடந்த காலங்களில் நாம் பெற்ற கசப்பான அனுபவங்களிலிருந்து, மீண்டும் நமக்கான வசந்தத்தை தேடிப் பயணிப்பதற்கான பாதையை நம்பிக்கையோடு வகுப்போம் எனும் எதிர்வுகூறலாய் அது அமைந்துள்ளது.

 " வேர் அறுதலின் வலி" யாழ் முஸ்லிம்களின் அவலங்களை, அனுபவங்களை, நம்பிக்கைகளை , வாழ்வியலை சேமித்து வைத்திருக்கும் சிறந்த ஆவணம். இம் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துள்ள யாழ் இணையத்தளம் சகோரர் அன்ஸிருக்கு மீண்டும் என் நன்றி உரித்தாகட்டும்!

சகதிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எம் சமுகத்தின் சோர்வை உதறி நம்பிக்கைதனை வார்த்து அவர்களின் விடியலுக்காய் கொடி பிடிக்கும் நல்ல உள்ளங்கள் இன்னும் இன்னும் தம்மை வெளிப்படுத்த வேண்டும்.

போனது போகட்டும் இனி நாம் பயணிக்கவுள்ள நற்பாதையில் இறைவனின் துணையுடன் வசந்தங்கள் வந்தமரட்டும். அல்லல் வாழ்விலிருந்து துகிலுரிக்கப்பட்டு எம் மனங்களின் அமைதி நிறைக்கட்டும் !!

எனக்கு யாழ் முஸ்லிம் இணையத்தளம் வழங்கிய விருது
தருபவர் அமைச்சர் ரிசாட் பதியூத்தின் அவர்கள்




நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதிகள்


வலி



வழியேதுமுண்டோ - பல்
வலி விலகியோட!
முள்வேலிப் படுக்கையிலின்று
தொல்லைகளோடு நான்!

முரசுக்குள் ஊசி நுழைத்து
வேரறுத்த பின்புமேனோ
வதைக்குதிந்த வலி 
சதை கிழிக்கும் கதறலோடு!

வீக்கம் கண்ட கன்னங்கள்
சோகத்தில் தோய்ந்து கிடக்கும்!
வலி முணுமுணுப்புக்கள்
வேலி சாத்தும் உணர்வோரம்!

குருதி வாடையால் 
குசலம் விசாரிக்கும் மூச்சுக்காற்றும்
மெல்ல செவி நரம்பைச் சீண்டி
கள்ளத்தனமாய் முறைத்துக் கிடக்கும்!

பற் சபாவின் ஆட்குறைப்பால்
பரிதவிக்கும் நாவும் 
உணவு மறுப்புப் போராட்டத்தில்
களமிறங்கி அதிர்ந்து கிடக்கும்!

விறைத்துப் போன மனசோ
மௌனிக்கச் செய்யும் வார்த்தைகளை!
தியானித்துக் கிடக்கும் கனவுகள்
நெருப்பில் வெந்து மடியும்!

நலமிழந்த என் தேகம்
அழகிழந்து கதறும் பலமாய்!
களையிழந்த புன்னகை யாவும்
மிரளும் வலியின் வில்லத்தனத்தில்!

இயல்பு வாழ்வை நச்சரித்து 
பயணப்பாதையை அச்சுறுத்தி 
தடம் பதிக்கும் பல்வலி - என்னை
உயிரறுக்கும் ஆட்கொல்லி !!


ஜன்ஸி கபூர் 

ரகஸியமாய்



முகிழும் இராச் சிணுங்கலில் 
நம் மூச்சுக்களின் சப்தம்
நிசப்தத்தைக் கிழிக்கும்!

பனித்துளிகளின் புல்லரிப்பில்
தேக உஷ்ணம் விறைத்துக் கிடக்கும்
மயக்கத்தில் தோய்ந்தபடி!

நட்சத்திரக் கிசுகிசுப்புக்களால்
மௌனம் துறக்கும் காற்று - நம்முள்
காதலை வார்த்துச் செல்லும்!

என்னுள் நீ ஒற்றும்-உன்
ஒற்றைப் பார்வையின் சேமிப்பில்
மனசு நெகிழ்ந்து தவிக்கும்!

இதழ்களின் தவிப்பில்
முத்தமொன்று மெலிதாய் - நம்
உணர்வினைத் தழுவிச் செல்லும்!

இதயங்களின் வெற்றுக்கூடுகளின்
நல விசாரிப்பில் 
சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள்
மெல்ல நம்முள் குந்திக் கொல்லும்!

நாம் தனித்திருக்கும் அந்த
நீண்ட இரவில் - நம்
உணர்வறுக்கும் ஓசைகள்
நொருங்கிக் கிடக்கும் முத்தமாய்!


ஜன்ஸி கபூர் 






காத்திருப்பு



இருள் சந்தங்களில் சிந்தப்படும்
நம் கவியீர்ப்பில் 

வெண்ணிலவின் நாணம்
சந்தனம் குலைத்துத் தரும்!

உன் விரல் நெருடலில் நெளியும்
என் 
கணையாழி ஸ்பரிசம்
மெல்லிசையாய்
நெஞ்சில் கோடு கிழிக்கும்!

உன் விழியோரங்களில்
எனை நீ நட்டி 
மோகித்து வேரறுக்கும் நேரம்
உறக்கம் கூட தொலைந்து போகும் - நம்
ஞாபகங்களை நீராட்டியபடி!

காரிருள் பூத்ததும் 
காரிகையின் விழிக்கேணியில் வீழ்ந்திடரும்
உன் பார்வையில் மொய்க்கும்
நேசமும் காமமும் மருகி
உயிரோடிணையும் நயனமாய்!

காத்திருப்புக்களை விழுங்கிவிட்டு
நமக்காய் 
வீழ்ந்து கிடக்கும் நிழல்களில் கூட
மௌனித்துக் கிடக்கும் நிஜம்
சேரத்துடிக்கும் அருகாமைக்காய்!

உனை நானும் எனை நீயும்
நம் இதழோரங்களில்
ஒத்திகை பார்க்கையில் 
நேசம் மெல்லச் சிணுங்கும்
நெஞ்சம் சிலிர்த்து வியர்க்கும்!


 ஜன்ஸி கபூர் 






2012/06/05

பிறப்பிட நிழலிலே



90.....ஒக்டோபர்....30 !

இனவாதச் சுனாமியில் - எம்
சுகமழிக்கப்பட்ட நாள் !
அந்த இரண்டு மணி.........
எம் மூச்சுப்பூக்களின்
பேச்சையறுத்த தீக்கணங்கள்!

எம் இயல்பு வாழ்வும்
வனப்புக்களும்
வல்லுருக்களின்
செந்நீர்த் தேசத்தின் குடியிருப்பாய்
உரு மாறியதில்
தவிப்புக்களும் ஏக்கங்களும்
தாவிக்கொண்டன
அகதி வாழ்வுக்குள் !

பிரமாண்டமான தேசத்தில்
எம் பிறப்பிடம் பிடுங்கி
நாடியறுத்த - அந்த
ஆயுதக்கரங்கள்
உறிஞ்சிக் கொண்டன- எம்
பாரம்பரியங்களை!

கள்ளிப்பால் தந்து
முள்வேலிக்குள்
தள்ளிவிட்ட - இனச்
சுத்திகரிப்பின் வேரூன்றலில்
மனசும்
மரத்துப் போனது!
சேமிப்போ விழிநீரானது!

அந்தரித்த அந்த அகதிப்
பொழுதுகளின்
ஞாபகங்கள் இன்னும்
பிரமிட்டுக்களாய்
பிரமிப்புக் காட்டும்
சாகாவரம் பெற்றவை!

சிலர் வரைந்த
தீர்ப்புக்களால்...........
வெட்டவெளியும்
சுட்டெரிக்கும் வெயிலும்
கொட்டும் மழையும்
ஒட்டியுலர்ந்த தேகமும் - எம்
பொழுதுகளின் விதியாய்
பிரகடனமானது!

நிவாரண செலவளிப்புக்களிலும்
நிழல் வெளிகளிலும்
நிதர்சனமான- எம்
காத்திருப்புக்களின்
வேரூன்றல்கள் - இன்னும்
மௌனித்துத்தான்
கிடக்கின்றன- மீள
முடியாத சோகத்தில்!

சொந்தங்கள் தொலைவாக
சுற்றம் வெறும் செய்தியாக
வார்க்கப்பட்ட - எம்
வாழ்வின் வசந்தங்கள்
இன்னும் மயானவெளிகளில்
சயனித்துக் கொண்டுதானிருக்கின்றன!

பள்ளிகளும்
பள்ளிவாசல்களும்
வாழ்ந்த மனைகளும்
வாழ்க்கை தந்த மரபணுக்களும்
மடியேந்தி.....
காத்துக்கிடந்தோம் - எம்
வெளிகளைத் தொட்டுநிற்க!

சீறிப்பாயும் ஷெல்கள்
செந்நீர் தேடும் சன்னங்கள்
வட்டமிடும் தும்பிகள்
மிரட்டும் யந்திரப் பறவைகள்
காவு கொள்ளா- எம்முயிரை
ஏப்பமிட்ட பயங்கரவாதம்
இன்று..........
மரணித்த பொழுதுகளில்
மனமேனோ துடிக்கின்றது
மீளத் தாயக நிழல் சேர!

நினைவகத்தின் கருவறையில்
அப்பிக் கொண்ட அவலங்களை
அறுத்தெறிந்து.........
வேரூன்றும் கணங்களுக்காய்
வாழ்வின்னும்
தனித்துத்தான் கிடக்கின்றது!

வடுக்களின் மிரட்டலில்
தடுமாறிய
நேற்றைய பொழுதுகள்......
ரணம் தந்த கண்ணீர்
இன்று.........
ஆவியாக- மீண்டும்
செதுக்குகின்றோம்
பிறப்பிடக் கனவுகளை!

கறைபடிந்த அவலங்கள்
கண்ணீர்த் திரவங்கள்
யுத்தத்தின் எச்சங்கள்
கரைந்த எம் பொழுதுகளில்
விடியல் வரைய
விருப்போடு நகர்கின்றோம்
எம் இருப்பிடம் தேடி!

உருக்குலைந்த மனைகள்
உலர்ந்த பொருளாதாரம்
இன்னும் எட்டிப் பார்க்கா
நிவாரணம் - இருந்தும்
சிதைவுகளைப்
பொறுக்கியெடுத்து
மீளச் சேகரிக்கின்றோம்
எம்மை- எம்
தெருக்களில் மீண்டும்!

அன்று அந்நியமான - எம்
தேசத்தின் மூலை முடுக்குகளில்
இன்றோ.......
தடம் பதித்து தாவுகின்றோம் !
புதுக் குழந்தையாய்
புளாங்கிதத்துடன் !

சதை மேனிகளின்
சமாதியில்.............
சங்கமமான சமாதானம்.......
கைகுலுக்கும் விடியலுக்காய்
கரமேந்தி உருகுகின்றோம்
படைத்த வல்லோனிடம் !

இன்று தனித்துவமிழக்கும் - எம்
தெருக்கள்- நாளை
சுவடுகள் மறக்கும் பாதைகள்!
இழப்புக்கள் தொடராமல்
மீண்டும் விதையாவோம்
எம் தேசமதில் !

கடல் கடந்த பயணங்கள்
புரியாத பாஷைகள்
கறை படிந்த அந்தரிப்புக்கள்
முரசறையும் துன்பங்கள்
போதுமிவையினி!

கல்வெட்டான துரோகங்களின்
முணுப்புக்களை
கத்தரித்த தொடர்வோம்
புதுப்பயணம் - எம்
வாழ்வை
கௌரவிக்கவாவது !

கறைபடிந்த சுவடுகளை
காலம் கழுவட்டும்- இனி
விடியலின் திசைக்குள் - மட்டும்
மடி தேடுவோம் - இந்த
இருபத்தோராம் ஆண்டு
நிறைவுகளிலாவது!



(யாழ் முஸ்லிம்களின் 21வது ஆண்டு நிறைவையொட்டி (2011.10.31)
யாழ் முஸ்லீம் இணையத்தளம் (www.Jaffna Muslim) வெளியிட்ட 'வேர் அறுதலின் வலி' எனும் கவிதை நூல் தொகுப்பில் இடம்பெற்ற எனது கவிதையிது!)


















கவிதாயினி





இன்று பொசன் போயா தினம்.......(2012. 06.04)

நிலவின் ஒளிக்கசிவுகள் மெலிதாக வானில் கோடுகள் கிழித்துக் கொண்டிருந்தன. இருளோடு களைத்துப் போராடிக் கொண்டிருக்கும் சில்வண்டின் ரீங்காரம் வன்காரமாய் செவியை துளைத்துக் கொண்டிருந்தது. ஈரலிப்பான இருளின் கனத்தை உலர்த்திக் கொண்டிருந்தது காற்று..ரோசா .முற்களுடன் மோதிக் கொண்டிருந்த பனித்துளிகள் தம் வலிதற்ற போராட்டத் தோல்வியால் திரவமாய் உருகிக் கொண்டிருந்து..........
கண்களை வலுக்கட்டாயமாக இறுக்கினேன்.....உறக்கம் தொலைத்த விழிகள் பல மணி நேரப் போராட்டத்தினுள் தன்னை அடக்கிக் கொண்டிருந்தது......

" காற்றின் சிறகினிலே"....!

என் கவிதைகளை பலருக்கு அடையாளப்படுத்திய எனது வலைப்பூ....ஓரிரு நாள் இடைவெளியின் பின்னர் மீண்டும் அதனுள் சில பதிவுகளை இட நானின்று முயற்சிக்கும் போது வலிதான தோல்வியின் ரேகைகள் என்னை ஆட்கொண்டன...அதனை திறக்க முடியவில்லை.............காரணமும் என்னால் அறியமுடியவில்லை........

மனசு வலித்தது...சோகங்களின் பிறாண்டலால் கண்களுக்கும் அமிலம் சுரந்தது.......முடியவில்லை....பல நாட்களாக என் மனதில் புரண்ட கவிதைகளின் தடங்கள் தானாகவே அழிக்கப்பட்டு விட்டன.....உணர்வுகளுடன் பேசிய கவிதைகள் காயம் தந்து மறந்து, மறைந்து விட்டன.......

கனவுகளுடன் கைகுலுக்கி இனிமையும், மயக்கமும் தந்த அந்தக் கவிதைகள் இனி எனக்குச் சொந்தமில்லை....உள்ளத்தின் வேதனையில் உயிரும் தன்னை நனைத்து விம்பத் தொடங்கிவிட்டது.......

இருளை மிரட்டியபடி எங்கிருந்தோ அலறும் வாகனச் சத்தங்களின் ஓசையில்  அடிக்கடி தடுமாறிக் கொண்டிருந்த சிந்தை ஈற்றில் இரவின் அமைதியில் அடங்கிப் போனது..

தோல்விகளால் அடிக்கடி ரணப்படும் என் வாழ்வில் நான் இன்றும் வழமைபோல் தன்னம்பிக்கையுடனான முனைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை என் கரங்கள் தொட்டு விடும் தூரத்தை ஓரளாவது முட்டிக் கிடக்கும்............

ஏதோ நினைத்தவளாக புதிய வலைப்பூவை உருவாக்கும் முயற்சியில் மானசீகமாக என்னை ஈடுபடுத்தத் தொடங்கினேன்

"கவிதாயினி மெதுவாய் என்னுள் எட்டிப் பார்க்கத் தொடங்கினாள்"

கவிதாயினி..............

என் உணர்வுகளை நேசிக்கப் போகும் புதிய வலைப்பூ...........

மீண்டுமொரு வலைப்பூ தன்னப்பிக்கையுடன் கூடிய தன் பயணத்தை ஆரம்பித்து விட்டது...இதோ.........உங்களுடன் இணைந்து கொள்ள கவிதாயினியும் புறப்பட்டு விட்டாள் !