About Me

2012/12/07

அவஸ்தை



நிசப்தத்தின் கூடலில்
விழுந்து கொண்டிருக்கின்றது நம்
வார்த்தைகள்!

ஒளிக்கலவை
விழுங்கிக் கொண்டிருக்கும் - நம்
நிழல்களைத் தவிர.......................

இருளின் மயக்கத்தில்
பூவுலகம் சாய்ந்து கொண்டிருக்கின்றது!

பனித் துளிகளின் பரவசத்தில்
வியர்த்துப் போன என் விரல்களுக்கு..........

உன்னிதழ் ஒத்தடம்
மூச்சுத் திணற வைக்கின்றது லேசாய்!

விழிகளை மூடுகின்றேன்
முறுவலிக்கும் உன் பார்வைக்கு
திரை விரித்தபடி!

இருந்தும்..............எனை
வருடி யுன்னில் பதியமிடுகின்றாய் என்னை!

அறிவாயா...................

என் ஞாபகத்தின் மொழிபெயர்ப்பில்
உள்வாங்கிக் கிடக்கும் உன்னிடம்.........

எனை நிரப்ப வரும் போதெல்லாம்
இரக்கமின்றி நாணம் துவம்சம் செய்கின்றதே!

தம் இடைவெளியறுக்க மனமின்றி
சுவற்றில் தடுமாறும் பல்லிகளின் ஸ்பரிசத்தில்

 மன சஞ்சலங்கள் விழித்துக் கொள்ள..............
புகைமூட்டங்களாய் விலங்கிடுகின்றது
காமம் சூழ்ச்சியுடன்!

"ஏதாவது பேசடீ"

உரிமையோடு உறவாக

தவிப்பில் உறையும் உன் குண்டுக் கண்கள் ..............
துகிலுரிக்கின்றன என் உதடுகளை!

என் மௌனக் கதவுடைக்கும்
உன் காதல் போர் கண்டு மிரண்டு போகின்ற
என் பெண்மை....................

இடையின் இடைவெளியைக் கூட
விரட்டுமுன் ஆதிக்கம் கண்டு
இரகஸியமாய்
இரசிக்கின்றது மனசும் உன்னை உள்வாங்கியபடி!

அணைக்கின்றாய் கன்னத்தில்
கன்னம் வைத்து..................
படர்கின்றேன் முல்லையாய்
திரண்ட வுன் மார்பினில் !

ஆச்சரியம்தான்......................
உன்னைச் சேமிக்கவா தனித்திருந்தேன்!

தென்றல்


அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களின் வெளியீடான தென்றலை, கவிதாயினி உள்வாங்கிக் கொள்கின்றது விமர்சனமாய்.......!

சஞ்சிகையின் பெயர் - தென்றல்
சஞ்சிகை ஆசிரியர் - நேகம பஸான்
விலை - 200 ரூபா
பக்கங்களின் எண்ணிக்கை 58

உணர்வுகளின் ஆளுகையை வெளிப்படுத்துவது மனம். அந்த மனதின் அருட்டல்கள் வரிவடிவமாகும் போது , அவையே இலக்கியத்தின் அஸ்திவாரக் கற்களாக மாற்றப்படுகின்றன. அந்தவகையில்  பேசப்படும் இலக்கியங்களே காலத்தையும் வென்று நிற்கின்றன என்பது கண்கூடு.

"தென்றல்" சஞ்சிகை .............!

மாணவர்களின் உணர்வுகள் சங்கமிக்கப்பட்ட தளம்.........

கன்னிச் சஞ்சிகை..........மாணவர்களுக்கான முன்னோடிச் சஞ்சிகை! அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட முதல் கனவு..................இலக்கிய வருடல்!

எப்போதும் நம் எல்லோர் மனங்களையும் "தென்றல்" நனைத்துச் செல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பில்,  சஞ்சிகையின் நாமம் தென்றலாகி , நம்மை எட்டிப்பார்க்கின்றது. 

முகப்பட்டையை பார்க்கும் போது, கடற்கரையோரமொன்றில்  வளைந்து நிற்கும் தென்னை மரமொன்று, மானசீகமாக தென்றலை உறிஞ்சி மகிழ்வோடு இலயித்துக் கொண்டிருப்பதைப் போன்ற  பிரமிப்பு நமக்குள் முகிழ்க்கின்றது...........

என்னையுமறியாமல் மாணவர் ஆக்கங்களை விழிகளுக்கு விழ வைக்கும் எதிர்பார்ப்புடன் தென்றலின் ஒவ்வொரு பக்கங்களையும் மெதுவாகப் புரட்டுகின்றேன். அடடா.......கனாதியான வரிகள்........அழகான சிந்தனைப் புரட்டல்கள். தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களின் கலை அறுவடைகளலல்லவா அவை!

பாடசாலை அதிபர், பிரதி அதிபர், இதழாசிரியர் நேகம பஸான், விடுதி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எல்.மிஸ்கீன் ஆசிரியர் ஆகியோரின் ஆசிச் செய்திகளுடன் தனது கன்னி, இலக்கியப் பயணத்தை ஆரம்பிக்கும் தென்றல், தனது இறுதிப் பக்கத்தில் தன்னுடன் ஒட்டியுறவாடிய விடுதி மாணவர்களின் பெயர் விபரங்களை இணைப்புச் செய்துள்ளது.

கவிதைகள், கட்டுரைகள், நம் சிந்தனையைத் தொட்டு நிற்கக் கூடிய தகவல்கள், உரையாடல்கள், வரலாற்றுத் தகவல்கள்,சிறுகதை, மருத்துவத் தகவல் போன்ற மகுடங்களில் நிமிர்ந்து நிற்கும் மாணவ ஆக்கங்கள்  தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிகளோடு உறவாடிக் கொண்டிருந்தன.

கட்டுரைகளும் நம் சிந்தனையோட்டத்துக்கு வாய்க்கால் நீட்டுகின்றன."உலக ரீதியில் முஸ்லிம்களின் நிலை", "இளைஞர்கள்","விண்வெளிப் பயணங்களின் பலாபலன்கள்", "மருத்துவத்தில் முஸ்லிம்களின் பங்கு", "அறிவியலும் குர்ஆனும்", "கல்வி" எனும் தலைப்புக்களில் தலைகாட்டும் பதிவுகள் சிறந்த கருத்துக்களை நம்முள் தூவி நிற்கின்றன.

மாணவர்களின் சிந்தனைத் தூண்டல்கள் பெரும்பாலும் கல்வியைச் சுற்றி நிற்பது ஆரோக்கியமான விடயமே. அவர்கள் வித்தியாசமான பார்வைகளில், கோணங்களில் கல்வி பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

"இரகஸியம்" உரைநடைச் சிறுகதை வித்தியாசமான கதையமைப்பு.

"நட்புக்காக ஒரு நண்பன்"  எனும் தலைப்பின் கீழ் பதிவாகியுள்ள இந்த வரிகளின் ஆழத்தைப் பாருங்கள்.

 "மனிதன் திகதி குறிக்கப்பட்ட மரண தண்டனை கைதியாவான், ஆதலால் உன் வாழ்வை இம்மைக்காக செலவிடுவதோடு நின்று விடாமல், மறுமைக்காகவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்.."

உயர்தரம் கலைப் பிரிவில் கற்கும் இம் மாணவனின் சிந்தனையின் உயிர்ப்போட்டம் ஆழ்மனதை லேசாய் வருடிச் செல்கின்றது.

கல்வி, தாய்மை, இயற்கை, யதார்த்தமான வாழ்வியலின் படிநிலைகள் போன்ற அம்சங்கள் கருக்கட்டப்பட்டுள்ளன கவிதைகளுக்காக

"தாயின் துயரம்" எனத் தலைப்பிட்டு, அன்னையின்  நிகரற்ற பாசத்தைக் கவி யாத்த ரஸ்மியின் கவியுடன் , தென்றல் தன் பக்கங்களை மெதுவாக வருட ஆரம்பிக்கின்றது.

மேலும் சப்ரான்,

"மறை தந்த இறைதூதர் குறையிலா நபி நாதர்
உலகெல்லாம் புகழ் பாடும் நிகரில்லாப் பணியாளர்
எம் பெருமான் முஹம்மது நபி"

என நபி (ஸல்) அவர்களின் புகழ்  பாடுகின்றார்.

தொடர்ந்து வருகின்ற சில கவிதைகளில் என் பார்வையைச் செலுத்திய போது, பின்வருவன என கருத்துக்களாக இங்கு உறைந்து நிற்கின்றன..

இந்த மாணவ மனங்களை பாலஸ்தீனக் கதறல்களும் உலுக்கியுள்ளன என்பதை "பாலஸ்தீனுக்கான உனது அர்ப்பணிப்பு என்ன" எனும் கவிதை வலிப் போடு பின்வருமாறு ஒலிக்கின்றது.

"இஸ்லாமிய இளைஞனே- இனி
               பாலஸ்தீனுக்கு விடிவு பிறக்க - உன்னால்
ஆயுதம் எந்த முடியவல்லை- தினம்
               இரு கை ஏந்தியவாறு பிரார்த்தித்து விடு!"

 "விரும்பிச் செயலாற்று" எனும் தலைப்பிலிடம் பெற்ற ஹாகாசின் சிந்தனையோட்டம்...இவ்வாறு அலைகின்றது நம்முள் !

" நாளும் வாழ்ந்திட நீ விரும்பு
                  நாட்டில் நீயொரு செங்கரும்பு
காலம் என்பதை பொன்னாக்கி
                  கல்வி என்பதை பொருளாக்கி"

மப்ராஸ் எனும் மாணவனின் கல்வி பற்றிய கவிதையில், காணப்படும் இவ்வரிகளும் என்னைக் கவர்ந்தன.

"திரையிட்டு இருந்த - என்
திரையைக் கிழித்து
சமூகத்தினுள் என்னையும்
பூச்சியாய் மாற்றியது
இப் புனித கல்வியே!"

தமிழை நேசிக்கின்ற, வாசிக்கின்ற அனைவருமே இலக்கியம் புனைந்து மனம் மகிழ துடிக்கின்றவர்கள். அந்த வகையில் " விடியலை நோக்கிய விவரணம்" எனும் தலைப்பில் விடியலை புது விதமாய் நிரோஷ்கான் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.

" காலை தரிசனத்தில்
பறவைகளின் முத்தம்
பிழிந்து
எச்சங்களின் மிச்சம்
பனித்துளிகளின் மேல்
பாயின்றி படுத்துக் கிடக்கும்"

(விடியலை  நோக்கிய விவரணம், சிரம் தாழ்த்துவோம் எனும் இரண்டு கவிதைகளும் 49ம் பக்கத்திலும் 53ம் பக்கத்திலும் தவறுதலாக இடம் பிடித்து விட்டன . இயற்கை எனும் கவிதையும் இரண்டு பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது.)

இந்த பதினாறு வயது மாணவனின் புதுக்கவிதையாற்றல் மன மகிழ்வு தருகின்றது.

கல்லூரிக் காலமென்பது யாவருக்கும் மறக்க முடியாத இனிய காலம். அதிலும் விடுதி வாழ்க்கையென்பது அலுப்பும், சலிப்பும், குறைகளும் கூட குதுகலமாக, வேடிக்கையாக மாற்றப்படுகின்ற காலமென்பதை அர்ஷாத் எனும் மாணவன் தனது "வீடா? விடுதியா" எனும் கவிதையில் பதிவிட்டுக் காட்டுகின்றார்.

இவ்வாறு பல மாணவர் ஆக்கங்கள். அவற்றுள் இவை சிறு துளிகளே!

இவை மாணவர் ஆக்கங்கள்.......அவர்களது ஆர்வத்தின் உந்தமே இப்படைப்புக்கள். சகல ஆக்கங்களிலும்  இங்கு இலக்கிய வரம்புகளைத் தேடுவது பொறுத்தமற்றது. எனினும் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் நம்மை மறைந்தும், முகம் காட்டியும் எட்டிப் பார்க்கின்றன. எதிர்காலங்களில் இவ் வெழுத்துப்பிழைகளைத் தவிர்ப்பது நலம்..மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதனால், இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் அதிகரித்து வருவதை நாம் காணலாம்.

மிகச் சிறப்பான முயற்சியே இச் சஞ்சிகை.....ஆனால் இனிவரும் வெளியீடுகளில் படங்களை சிறிதாக்கி, பதிவுகளின் எழுத்துக்களின் அளவை சற்று அதிகரியுங்கள். இது தென்றலின்  செழுமையை சற்று குறைத்து விடலாம் என்பது என் பார்வை...

குறுகிய காலத்தினுள், நிறைவுடன் வெளி வர முயற்சித்த தென்றலே, காலப்போக்கில் நீ சிறு சிறு கீறல்களைக் கலைந்து நிறைவு பெறுவாய் என்பது என் நம்பிக்கை.......வாழ்த்துக்கள் விடுதி மாணவர்களுக்கும் சஞ்சிகை ஆசிரியருக்கும்! !

தென்றல் ஆசிரியர் பதிப்பித்த என் விமர்சனம் காண


2012/12/06

புரிந்து கொள் மனமே



இரச விம்பங்கள்
வாந்தி எடுக்கின்றன இப்பொழுதெல்லாம்
என்னைப் பார்த்து..................

முட்களுக்குள் நிழல் தேடிப் போனதில்
ஆணிகளின் கூடாரங்கள்
அடம்பிடித்தன என் இருப்புக்காய்!

நனைந்த காகிதத் துண்டுகள்
களவாய் என் பெருமூச்சுறுஞ்சி...................
உலர்ந்து கிடக்கின்றன மேசையின் மேல்!

பருத்த சூரியன் கூட
இளைத்துப் போனதோ......தன்
வெம்மையை என் தேகத்துள் திணித்தே!

கடிகாரங்களின் தவிப்பில்- என்
மௌனம் உரசிச் செல்கின்றது
தியானங்களை மறுத்து!

கண்ணா...............
தோற்றுத்தான் போனேன் ......
என் வலிக்குள்
உன் வழிப்பாதையை அமைத்த
உன்னிடம்!

அமிலங்களுக்குள் என்
விழிநீர் தேய்த்து விளையாடுமுன்னிடம்
யாசகம் கேட்கிறேன் என்னுயிரை
திருப்பித் தா!

என்றோ வரைந்த சிறுபுள்ளிக்குள்
உன்னுலகத்தைச் சுருக்கி...............என்
நெஞ்சுக்குள் முகடு வரைகின்றாய்
அடிக்கடி!

பரிவோடு சொல்கின்றேன்...........
புரிந்துகொள் மனமே!
கறைபடிவுகளின் சாம்பரில்
வரையப்பட வேண்டாம் நம்காதல்!



பிஞ்சுக் காதல்



அவன்................!

இன்னும் பதினான்கு வயது நிரம்பாதவன்...பருவ வயதுக்குள் உள்நுழைய விளிம்பில் நிற்பவன்.. அரும்பி நிற்கும் மீசையை ரகஸியமாக தடவித் தடவி இன்பம் காணும் பருவத்தினுள் வாசம் செய்பவன்...........

ஒருவாரமாக அவனை அவதானிக்கின்றேன்.....சற்று பரபரப்புடன் காணப்பட்டான். அவனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். பாடசாலை முடிவடைந்ததும் வீட்டுக்கு செல்ல முதல் பல தடவைகள் "பொயிட்டு வாரேன்  மிஸ் " என்பான்.... ஆனால் போகாமல்  என்னையே சுற்றிச் சுற்றி வலம் வருவான்.

அவனது தாய் கூறிய பின்னரே, அவனுக்கு என்னை அதிகம் பிடிக்கும் என்பதை நான் அறிந்தேன்..........

"எப்ப பார்த்தாலும் மிஸ் உங்களைப் பற்றியே கதைப்பான் "

அவன் தாய்  என்னைச் சந்திக்கும் போதெல்லாம் இதனைக் கூறிச் சிரிப்பார்.

அவன் சற்று முரட்டு மாணவன்...அந்த முரட்டுத் தன்மையை என் அன்பு நெகிழ வைத்ததில் எனக்கும் சந்தோஷமே!

"உன் மனசுல ஏதோ பிரச்சினை  இருக்கு, சொல்லுடா ராஜா........"

ஒருநாள் என் துலாவுகைக்குள் அவன் பிடிபடவேயில்லை.....ஒரு வார என் முயற்சி பலனளிக்காமல் போகவே, என் வேலைப் பளுவில் அவனை நான் மறந்தே போனேன்...

நேற்று......

எல்லா மாணவர்களும், வகுப்பறையை விட்டு வெளியேறிய பின்னர் என்னிடம் வந்தான்... தன் மனதிலுள்ள விடயத்தை சொல்வதற்கு துடிப்பதை உணர்ந்தேன்...சொல்லும்படி தூண்டினேன்....

"யாருக்கும் சொல்லாதீங்க, மிஸ்"

அவன் பீடிகை என்னுள் ஓரளவு விடயத்தை ஊகிக்க வைத்தது. இருந்தும் அவன் வாயால் அதைக் கேட்க நினைத்து அமைதியானேன்..........

என்னிடம் பெற்ற சத்தியத்தின் வலிமையால் தன் மௌனம் உடைத்தான்......

நாணம் கலந்த புன்னகை அவனுள் இறுகிக் கிடந்தது........

"மிஸ்.......நான் ஒரு ஆள லவ் பண்ணுறன்"

அப்பாடா.....போட்டுடைத்தான் தன் மனதைக் குடைந்திருக்கும் காதல் ரகஸியத்தை!

அவள்................அவன் வயதுக்காரிதான்...........பெயர் சொன்னான்....

அவளுக்கும் நான் பாடம் எடுக்கிறேன்...நல்ல பிள்ளை....எப்போதும் அவள் மொழி புன்னகைதான்.....என்னை அவளுக்கும் ரொம்பப் பிடிக்கும்...

"அட................அப்ப டீப்பான லவ்வுதான்..எப்ப இருந்துடா"

நான் ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல் கேட்ட போது, முகத்தில் பிரகாசம் குன்றாமல் 3 வருஷம் என்றான் பட்டென்று!

"அப்போ சின்ன வயதுக் காதலோ..........ஆமா, அவளும் உன்னை லவ் பண்றாளா" அப்பாவித்தனமாய், நான் அறியாதவளாய் கேட்ட போது, சிரித்த அவன் முகம் சற்று வாடியது......மீண்டும் மௌனித்தான்...........

"இல்ல மிஸ், இன்னும் நான் என் விசயத்தச் சொல்லல, ஆனா அவள 9ம் வகுப்பு பெடியனும் லவ் பண்ணுறான் " என்றவாறு அந்தப் பையனின் பெயரை அவசரமாக வெளிப்படுத்த, அருகில் நின்ற அவன் நண்பன் மேலும் ஒரு ரகஸியத்தை என் காதில் போட்டுடைத்தான்...

"மிஸ்.நேற்று, அவனுக்கும், இவனுக்கும் பெரிய பைட் போச்சு, இவன்தான் நல்லா அடி வாங்கினான்"

"ஓ.........இவ்வளவு நடந்திருக்கா..ஏன்டா அவன் உன்ன அடிச்சான்"
நானும் விடவில்லை.

"இல்ல மிஸ், அவனும் அவளக் காதலிக்கிறானாம், விட்டுக் கொடுடா என்று அடிச்சான். நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்"

"ம்ம்.....சினிமாவ பார்த்து ரொம்பத்தான் கெட்டாச்சு.........இல்லையா!"

நான் சற்று அழுத்திக் கேட்ட போது அழுதே விட்டான் அவன்,  "அவள எனக்கு ரொம்பப் பிடிக்கும் , இங்க பாருங்க மிஸ், 3 நாளா இத அவளக்குக்  கொடுக்க ட்ரை பண்ணுறன்.....தனிய போகாமல் ப்ரெண்ட்ஸோடத்தான் சேர்ந்து போறாள்..."

என்றவாறு தன் காற்சட்டைப் பைக்குள்ளிருந்து சில டொபி, கன்டோஸ், 2 பேனாக்களை வெளியே எடுத்தான்...

" ஏதடா காசு இதுக்கு"

நானும் விடவில்லை........

"மிஸ்.......நான் வீட்டில ஆசையா வளர்த்த மீன்கள எல்லாம் அவளுக்காக வித்துட்டேன்.அந்த காசிலதான் இத வாங்கினேன்"

அவன் காதல் ஆழம் புரிந்தது.. ஆனாலும் அது ஒரு தலைக் காதல்..அந்தப் பெண்பிள்ளை சற்று வசதியான பிள்ளை....இவன் காதலுக்கு முதல் தடையாக அந்தஸ்தே வாய் பிளந்து நிற்பதை அவன் உணரவில்லை,

"நான் ஒன்னு சொல்லட்டுமா.....அவள் பணக்காரிடா"

"பரவால மிஸ், எனக்கு அவள்ர காசு வாணாம்....அன்பு போதும்...அன்பா  ரெண்டு வார்த்தை பேசினாப் போதும்.........."

அவனும் அவளை விட்டுக் கொடுப்பதாக இல்லை.

"சரிடா................பர்ஸ்ட், அவள்ர போய் உன் காதலைச் சொல்லு..........சரின்னா நீ கனவ வளர்க்கலாம், ஆனால் இந்தக் காதல் அவஸ்தையில நீ படிக்காம விட்டா, அப்புறம் என் கூடப் போசக் கூடாது சரியா"

"ம்ம்"

தலையாட்டினான்... அன்றைய தினமே அவளுக்காக காத்திருந்தான் தன் காதல் சொல்ல!

மாணவர்களுக்கான இலவச புத்தக விநியோக வேலைப் பளுவில் நான் அவன் காதலை மறந்து போக, மீண்டும் இன்று என் பின்னால் சுற்றினான்..........

"மிஸ்...மிஸ்"

"என்னடா........."

"அவள் எனக்கு வாணாம் மிஸ்"

" என்னடா திடீரென்று லைன் மாறிட்டே"

"நான் நேத்து அவள்ட என்ட லவ்வச் சொன்னேன்.  ஓவென்று அழுதிட்டாள்..சேரிட்டயும் என்ன மாட்டிட்டாள்" அந்த சேர் பெயர் சொன்னான்..

"ஓ......அந்த சேர் அடிச்சாரா"

"இனி அவள தொந்தரவு பண்ணாத என்று சொல்லிட்டார்.............அவளுக்குத்தான்  என்னைப் பிடிக்கலயே............."

சொல்லும் போது, அவனது கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் தெறித்தன.

. அவனாகவே தன் தவறை உணர்ந்தது எனக்கு மகிழ்வு தந்தது...

"அப்பாடா......................"

பெருமூச்சு விட்டேன்.............அந்தப் பெருமூச்சு உலர முதல் இன்னுமொரு குண்டைத் தூக்கிப் போட்டானே.............

"அவள் வாணாம் மிஸ்...அவளுக்கு வாங்கின டொபி, கண்டோஸ நானே தின்றுவிட்டேன்.........இப்ப நான் இவள லவ் பண்ணுறன்"

அவன் புதுக் காதலி பெயர் சொன்னான்.......!

அவள் 6ம் வகுப்பில் படிப்பவளாம்........நண்பன் வகுப்பைப் பற்றிச் சொன்னான்

இது காதல் இல்ல கண்ணா.......பருவக் கிளர்ச்சி...............

சொன்னேன். ஆனால் நிச்சயம் அதை அவன் உணரப் போவதில்லை. அவனுக்கு புத்தி சொன்னால் அதைக் கேட்கும் வயதில்லை அவனுக்கு. இவளும் சலிச்சுப் போய் விரைவில், அவனாகவே இன்னுமொருத்தியின் பெயர் சொல்வான்.......


2012/12/05

வியப்பின் எல்லையில்!


சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறும் வொயஜர் - 1 விண்கலம்
------------------------------------------------------------------------------------------
வாழ்க்கை!

எல்லோருக்கும் படைத்தவனால் வகுக்கப்பட்ட ஓர் ஒப்பந்தம். வாழும் வரை எப்படியே நம்மைச் சூழவுள்ள உறவுகள், இயற்கை என்பவற்றை அனுசரித்தே நாம் வாழ வேண்டியவர்களாக இருக்கின்றோம். அப்போதே வாழ்வு நமக்குள் நெருங்கி நின்று, நிறைய பல விடயங்களைக் கற்றுத் தருகின்றது.

வாழ்க்கையை நாம் கற்றுக் கொள்ளும் போதுதான், நமது தேவைகளும் அதிகரிக்கின்றது. அத்தேவைகளை நிறைவேற்ற, அவற்றினை வெற்றி கொள்ள பல முயற்சிகளுடனான தேடல்களில் நம்மை நனைத்துக் கொள்கின்றோம். அவ்வாறான ஓர் முயற்சியில், சிந்தனையோட்டத்தின் பயனாக பெறப்பட்ட விளைவே அறிவியல் விஞ்ஞானம்! இவ்விஞ்ஞானம் இயற்கையை நாடி பிடித்து சகல விடயங்களுக்கும் ஆருடம் தெரிவிக்கின்றது. விளக்கமளிக்கின்றது. இவ்வாறான விஞ்ஞான செயற்பாட்டினை வழிநடத்தும் ஆற்றலும் சக்தியும் படைத்தவனாலேயே வழங்கப்பட்டதென்பதை நாம் மறுக்க இயலாது.

"அவனின்றி அணுவும் அசையாது"

அவ் அணுக்களைப் பிரித்துப் போடும் அறிவை, சக்தியை  விஞ்ஞானம் வழியாக மனிதன் கற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்தவனும் இறைவனே!

விஞ்ஞானமானது, இயற்கையை, உயிரினங்களின் படைப்பை படம் பிடித்துக் காட்டி,  விளக்கமளிக்கும் போதுதான்,  இறைவனின் அற்புதங்களைக் கண்டு, நாம், வியந்து போகின்றோம்.

மண்ணில் நிலையூன்றப்பட்ட மனிதன், தனக்கு அருளப்பட்ட அறிவை தக்க விதத்தில் பகுத்தாராய்ந்து இவ்வுலகையே தனக்குள் அடக்க முயலும் சாகசங்களை விஞ்ஞானம் பறைசாட்டி நிற்கின்றது.

அழகான நிலாதான் அருகே சென்று பார்க்கும் போது கற்களும் குழிகளும் நிறைந்த தளமாகக் காணப்படுகின்றது. அருகில்  இருக்கும் போது முக்கியத்துவம் பெறாத பல விடயங்கள் தொலைவாகும் போதுதான் அருமையாகின்றன. அதிசயங்களாக நம் விழிகளை ஈர்க்கின்றன. இதுவே மானுடத்தின் மனசின் ஆளுகை...

இப்புவியில் நிலையூன்றப்பட்ட மனிதன் தன்னுள் பல யுகங்களை உருவாக்கி,
வாழ்ந்த, வாழ்கின்ற வரலாறு நாம் கற்றவுண்மையாக உள்ளது. இரும்பு யுகத்தில் பல தொழினுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்திய விஞ்ஞானம் தான், விண்ணுக்குள்ளும் மனிதனின் தடத்தைப் பதித்து விண்ணியலின் பார்வைக்குள்ளும் உலகை வீழ்த்தியுள்ளது.

விஞ்ஞானம் நான் கற்பிக்கின்ற பாடம். இதன் பல விந்தைகளை விரித்து மாணவர்களுள் உட்செலுத்தும் போது, அவர்களுக்கு பாடம் மட்டுமல்ல, கற்பிக்கும் ஆசிரியையும் பிடித்து விடுகின்றது. காரணம் விஞ்ஞானத்தின் விந்தையின்பால் ஏற்பட்டுள்ள ஈர்ப்புத்தான்.

வானம் ஏன் நீல நிறமாக உள்ளது?
வானவில் ஏன் வளைந்து காணப்படுகின்றது.?
நாம் எவ்வாறு நிமிர்ந்து நிற்கின்றோம்?
ஏன் பழுத்த இலை மஞ்சளாகக் காணப்படுகின்றது?
எவ்வாறு சுனாமி ஏற்பட்டது?

இவ்வாறு பல வினாக்கள் மாணவருள் அடுக்கடுக்காக வெளிப்படும் போது, அவற்றுக்களிக்கும் விடையின்பால் சுவாரஸியமுற்றவர்களாக மறு வினாவைத் தொடுத்து விடுவார்கள்.

சிந்தனை என்பது மனிதனுக்கு இறைவன் அளித்த கிரீடம்.ஏனெனில் சிந்திக்க மறந்தவனும், மறுத்தவனும் தனது பெறுமதியான வாழ்வை இழந்து தவிக்கின்றான். தனது சிந்தனையை நல்ல விதமாக வலுவூட்டி, பயனடையச் செய்பவர்கள் காலத்தின் கரங்களில் வெற்றியாளர்களாக அரவணைக்கப்படுகின்றனர். வரலாற்றின் இதழ்களில் இவர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டு, சந்ததி சந்ததியாக பல காலம் மக்கள் மனதில் நிலையூன்றப்படுகின்றனர்.

விஞ்ஞானம் கண்டறிந்தவற்றை புனித திருக்குர்ஆனும் அழகாக விளக்கிக் கூறியுள்ளதும் நோக்கற்பாலது.

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களுடனும், செயலுடனும் பிணைந்துள்ள விஞ்ஞானத்தின் விண்சாதனைகளுள் ஒன்றைப் பற்றி பதிவிடுவதே என் நோக்கமின்று.

நாசா...........!

(அல்லது தேசிய வானூர்தியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் Or National Aeronautics and space Administration)

கற்றோருள் அறியாதோர் இலர். அமெரிக்கா வடிமைத்த விண்வெளி ஆய்வு மையமே இதுவாகும். "அனைவரின் நலனுக்காக" எனும் குறிக்கோளுடன் 1958ம் ஆண்டு ஜூலை மாதம் 28ந் திகதி உருவாக்கப்பட்டது. எனினும் இதன் செயற்பாடு அதே ஆண்டு ஒக்டோபர் 1லேயே மேற்கொள்ளப்பட்டது.. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இவ் வானியல் மையத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது.

விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்திகளின் ஆராய்ச்சிகளின் முன்னோடியாக விளங்கும் இம் மையம், வானின் கால் பதிக்காத இடங்கள் அரிதாகவேயுள்ளது. முயற்சி, சிறந்த பயிற்சி, அர்ப்பணிப்பு, அதிக முதலீடு போன்ற பல்வேறு தூண்களால் நாசாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு வானியலின் சாகசம் பல புரியும் விண்வெளி ஆய்வு மையமான
நாசா, 1977 ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் திகதி வியாழனை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய விண்கலமே "வொயஜர்-1 " ஆகும்.

 8 ஜிகாபைட் சிறிய ரக ஜபோட்இன் தொழினுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ள இவ் விண்கலமே, முதன் முதலாக, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்களை  படம் பிடித்து அனுப்பியதும், செவ்வாயில் மண் உள்ளதா என்பதை ஆராய்ந்ததுமாகும்.


          செவ்வாயில் மண் உள்ளதா என ஆராய அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி            இயந்திரம்

காபன், சல்பர், குளோரின், நீர் என்பன செவ்வாய் மண்ணில் காணப்பட்டாலும் கூட, இம் மண்ணிலுள்ள காபன் சேர்வைகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களை அதிகளவு கொண்டிருக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.


வொயஜர்-1 விண்கலத்தில்,1988 ம் ஆண்டில் நெப்ரியூன் கோளைக் கடந்த நிலையில், சக்தியை சேமிக்கும் விதமாக கமெராவொன்றும் பொருத்தப்பட்டது.

இவ் விண்கலம் தற்போது பூமியிலிருந்து 18 பில்லியன் கிலோ மீற்றரில் உள்ளது. இதனால், இவ்விண்கலத்தில் இருந்து பூமிக்கும் அனுப்பப்படும் செய்திகள் நம்மை வந்தடைய 17 மணித்தியாலம் பிடிக்குமாம் .(யப்பா...........எவ்வளவு தூரம்)

 35 வருடங்களுக்கு முன்னர் சூரிய குடும்பத்துள் உளவு பார்க்க அனுப்பப்பட்ட இவ் விண்கலம் தன் கடமையை கச்சிதமாக நிறைவு செய்து விட்டு வெளியேறவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மனிதன் ஏவிய விண்கலத்துள், சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறும் விண்கலம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் காந்தப்புல எல்லைக்கும், அதற்கு அப்பாலுள்ள விண்வெளியின் எல்லைக்கும் இடையில் இது உள்ளது. அதாவது இது சூரியனின் விளிம்பில் உள்ளது. சூரியனிலுள்ள மின்னூட்ட துகள்களை விட வெளி மண்டலத்திலுள்ள அதிக ஆற்றலுள்ள துகல்களையே இது அதிகமாக பதிவு செய்துள்ளதாம். இந்நிலையையே தற்போது இதன் வெளியேற்றத்தை ஊர்ஜிதம் செய்துள்ளது.

வயது அதிகரிக்கும் போது, நமது செயற்றிறனும் குன்றி விடுகின்றது என்பது போல், வொயஜர்- 1 உம்  மனிதன் கண்டுபிடித்த கலமாகையால் 35 வயதானதும் அதற்கு ஓய்வளிக்கும் காலமும் வந்து விட்டது என நாம் முடிவுக்கு வருவோமா!!


-Jancy Caffoor-










2012/12/03

உலகம்தான் அழிந்திடுமோ!



விஞ்ஞானத்தின் எதிர்வு கூறல் கேட்டு - நம்
விலா என்புகள் சுளுக்கிட்டுக் கொள்கின்றன
சுவாசப்பையை லேசாய் நசுக்கி...............

நாடிகளில் பதியமிட்டு
ஓடிக் கொண்டிருக்கும் குருதித் துளிகள்.........
துடிப்பை மிகையாக்கி
ஒட்டுக் கேட்கின்றன விண்ணக அதிர்வை!

மாயன் கலண்டரில்................
மறக்கப்பட்ட டிசம்பர் 22
உலகின் மூச்சுக்காற்றை
மெல்ல நசுக்குகின்றன விமர்சனமாகி !

மதங்கள் மௌனிக்கின்றன
இறுதி நகர்வின் தடங்கள் இவையென.............!
விஞ்ஞானமோ விண்ணகம் தாவிக் குதிக்கின்றது
விழப் போகும் விண் கல்லையெண்ணி!

நெஞ்சக்குழிக்குள் இறக்கி வைக்கப்பட்ட
கனாக்கள்.......................
அஞ்சிக் கிடக்கின்றன
இருளப் போகும் அந்தப் பகல்களை எண்ணி!

ஆசியா.......................!
ஆச்சரியமாய் விழி பிதுக்க- நம்
பகிடிகளும் பதைபதைப்பும்
மையங் கொண்டலைகிறது அந் நாளை நோக்கி!

இயற்கைச் சீற்றங்கள் தரும்
மாற்றங்களுக்காய்................
ஏமாற்றம் தரப் போகும் விடியல்கள்
தடுமாற்றத்துடன் இருண்டிடுமோ.....
மனசும் லேசாய் பதைபதைக்கின்றது!!

அண்ட முடைந்து - புவிப்
பிணங்களை கணக்கிடுமா............
கண்டங்கள் தோறும் செந்நீர்க் குழம்புகள்
பாய்ந்திடுமோ!
காய்ந்த சருகுகளாய்
மனசும் அலைகிறது விடை தேடி!

ஆரூட வார்த்தைகள் செய்திகளாய்- காதை
வருடி உள்ளிறங்க...............
மருளும் மனம் ஆர்ப்பரிப்புடன்
காத்திருக்கின்றது
அந்த அவஸ்தை நொடிகளைச் சந்திக்க
தெம்பின்றி!

அசராதீர் என் கவி கண்டு பீதியில்
வரப் போகும்  டிசம்பர் 21 .!

அட...............உலகம்தான் அழிந்திடுமோ!