-------------------------
******************************************
ஐின்னா வீதி - யாழ்ப்பாணத்திலுள்ள
எமது வீட்டின் முன்புறம்*
******************************************
யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட கரிய நாள்...............
அத் துரோக நாளில் எலும்புக்கூடாய் மாற்றப்பட்ட எங்கள் வீட்டின் படங்களையே இப்பதிவில் இணைத்துள்ளேன்..
அந்த ஞாபகங்களின் பதிப்பிவை .....இவை இனத்துவேசத்தினை யார் மீதும் தூண்டக்கூடியவையல்ல...நான் அனுபவித்த வேதனைகளின் சங்கமம்.என் நட்பினருடன் பகிர்வதில் ஆத்ம திருப்தி. இவ்வாறான இனச்சுத்திகரிப்பு இனி ஒருபொழுதும் எந்த சிறுபான்மைக்கு எதிராகவும் கனவில் கூட நடக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடனேயே இதனை எழுதுகின்றேன்...
யுத்தம் தன்னிரைக்குள் எம் பிரதேசத்தின் வனப்பையெல்லாம் உறிஞ்சிய நிலையில் எஞ்சியிருந்தவை வறுமைப்பட்ட வாழ்வும், அவல மனநிலையும், ஊனப்பட்ட உடல்களும் ,உருக்குலைந்த மனைகளும் தான்............
வெறுமையே தேசியமாய் மாற, மலினப்பட்ட மனசாட்சியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு, யுத்தங்களின் எச்சங்களாய் உதிர்ந்து கொண்டிருந்தோம்..
பீரங்கித் தாக்குதலும், ஆட்லறி ஷெல் வீச்சும், ஹெலிச்சூடும், பொம்பர் குண்டுவீச்சும் பழக்கப்பட்டவையாக எம்மோடு பதிவாகிக் கிடந்தன.
மின்விநியோகம் தடைப்பட்டும், வெகுசனத்தொடர்பூடகங்களின் செல்வாக்குமிழக்கப்பட்ட நிலையில் என் பொழுதுபோக்காக ,உதிர்ந்து விழும் சன்னங்களையும் பொம்பர் குண்டுவீச்சின் எச்சங்களையும் சேகரிப்பதனைக் கொண்டிருந்தேன்.மாணவர்ப்பருவத்திலிருந்த என்னிடம், திரட்டூக்கம் அதிகமாகவே இருந்ததால் என் கவனம் இச் சேகரிப்போடு ஒன்றிக்கிடந்தது.
மக்களில் ஓரிரு குடும்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்க, ஏனையோர் தம் பாதுகாப்புக் கருதி இடம் பெயர்ந்த நிலையில் , யாழ்ப்பாணம் சோனகதெரு வெறிச்சோடிக்கிடந்தது..
அந்த ஓரிரு குடும்பங்களில் நாமும் அடக்கம்...பங்கரோ வேறெந்த பாதுகாப்போ இல்லாத சூழ்நிலையில், இறைவன் துணையுடன் தலைக்கு மேல் கூவும் ஷெல்களை எண்ணுவதில் உயிர் கரைந்தது..
ஒக்டோபர் 30 காலை 6.30 மணியளவில் எமக்கு அறிவிப்பு விடப்பட்டது. சகல முஸ்லிம் மக்களும் யாழ்ப்பாணம் ஐின்னா மைதானத்தில் கூடும்படி................
ஒலிபரப்பு காற்றிலே அலைந்து எமக்குள் பீதியைக் கரைத்துக்கொண்டிருந்தது...எம்மிருப்பிடத்தை இழக்கப் போகின்றோம் என உள்ளம் எச்சரிக்கையுணர்வில் ஆட்பட்டு தவித்தது.
என் கல்விக்காக ஒதுக்கப்பட்ட அறை
***************************************************
நாம் வீட்டிலிருக்க என் தந்தை மட்டும் கூட்டத்திற்குச் சென்றார். அரைமணித்தியாலம் கழிந்து போகாத நிலையில் முஸ்லிம் வீதிகளை மனித அவலங்கள் நிறைத்தன. கூக்குரலும், கண்ணீருமாய் துணி மூட்டைகளை மட்டுமே ஏந்தியவர்களாய் மக்கள் தம் பாரம்பரீய பூமியிலிருந்து வீசியெறியப்பட்டார்கள். நாமும் வெளியேற்றப்பட்டோம் . எம் வீடு, வாசல், சொத்து அனைத்தையும் அந்த ஒரு நொடியில் தாரை வார்த்தவர்களாய் வெறுமையுடன் வெளியேற்றப்பட்டோம்
இந்திய இராவணுத்தினர் எம் தேசத்தைக் கைப்பற்றிய போதெல்லாம் இடம்பெயராத நாம் அன்று எம் சமூகத்தினருடன் ஒன்றாகக் கலந்து வேரறுக்கப்பட்டோம். எங்கள் கடைசிப் பயணச்சுவட்டின் கறை வீதியில் பதிந்து மறையத் தொடங்கியது.
போகும் வழி தெரியவில்லை.....
எதிர்காலம் பற்றிய நம்பிக்கையேதுமில்லை..
அலையோடு அடிபட்டுச் செல்லும் படகுகளாய் மக்கள் போகும் திசை நோக்கி எம் கால்களும் பயணித்தன.
மரண மிரட்டல்களும், துப்பாக்கிக் கரங்களும் எம்மை வழி நடத்திச் செல்ல எமது வீதியான ஐின்னாவீதிச் சந்தியிலுள்ள அவர்களின் சோதனைச் சாவடிக்குள் நாங்கள் உடல் சோதனைக்காகத் தள்ளப்பட்டோம்.. துப்பாக்கியேந்திவர்களாய் எம் உடல்களை அழுத்தி சோதித்தனர். பெண்களிடமிருந்த தங்க நகைகளும் பணங்களும் பறித்தெடுக்கப்பட்டன.....
இருப்பிடத்தை இழந்து வெளியேறும் இந்நிலையில் அவர்களின் எஞ்சிய வாழ்வின் நம்பிக்கையாகக் கொண்டு செல்லும் சிறு தொகைப்பணமும் ,நகைகளும் மீண்டும் பறிக்கப்படும் அந்தச் சிறுமைத்தனம் கண்டு பல பெண்கள் கதறி மயங்கி விழுந்தனர்...
கூட்டத்தில் 1 பவுண் நகை கொண்டு செல்லலாம் என அறிவிப்புச் செய்து விட்டு கையில், காதில், கழுத்தில் இருப்பவற்றையெல்லாம் பிடுங்கிக்கொண்டிருந்தனர் அந்த சுதந்திரவாதிகள்...
ஒரு சிறுபான்மையினருக்காக குரல் கொடுப்போர் தம்மையண்டியிருந்த வேறொரு சிறுபான்மையினரை வேரறுப்பதென்பது எவ் வகையிலான நியாயம் எனும் வினா மட்டும் எனக்குள் தொக்கிக் கிடந்தது இரகஸியமாய் !
******************************
* எங்கள் வீட்டின் பின்புறம் *
******************************
நான் சோதிக்கப்பட்ட போது என் கையிலிருந்த தங்க வளையல்களும், சல்வாருக்குள் மறைந்து கிடந்த தங்கச் சங்கிலியும் பென்ரனும் இரக்கமின்றி கழற்றியெடுக்கப்பட்டது........மனமோ விறைத்த நிலையில் எதையோ இழந்த நிலை.
அந்த ஆயுதக்கரங்கள் முன்னிலையில் நாங்கள் வலுவற்றவர்கள்...எங்களால் அவர்கள் மீது சபிக்கத்தான் முடிந்தது...இறைவனிடம் எங்கள் மனக்கவலையை ஒப்படைத்தவர்களாய் நாங்கள் கைகாட்டிய பாதையில் பயணிக்கத் தொடங்கினோம்..
தண்ணீர் கேட்டுத் துடித்த மூதாதையருக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கப்பட்டது.. இளைஞர்கள் தாக்கப்பட்டனர். வயதானவர்கள் கேலி வார்த்தைகளால் இம்சிக்கப்பட்டனர். ஒரே மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களின் பண்பாட்டுச் சிதறல்களை அன்றுதான் நான் கண்முன் கண்டேன். சிலரின் அலட்சியங்களால் அவர்களின் இலட்சியங்களின் கனம் குறைந்து கொண்டிருந்தது எம்மவர்கள் முன்னிலையில்.
எம்மை மனோகராத் தியேட்டரில் 2 நாட்கள் தங்க வைத்தனர். பசியும் நுளம்புக்கடியும் எங்கள் அன்றைய பொழுதைப் பேரம் பேச நண்பர்கள் இரக்கத்தில் கொண்டு வந்து தந்த பாண் துண்டுகள் சோர்வைக் கொஞ்சம் போக்க தயாரானோம் அகதி வாழ்வுக்குள் நுழைய !
அன்று அந்த இருளான வாழ்க்கைக்குக் காரணம் நாங்கள் முஸ்லிம்களாய் பிறந்தமையே! தவறு சிலர் செய்திருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு சமூகத்தின் பாரம்பரீயத்தையே உயிரறுப்பது ஆகாத, தண்டனைக்குரிய, கண்டிக்கத்தக்க செயலே !
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வாகனங்களில் நாம் நிறைத்து ஏற்றப்பட்டு கேரதீவு கடலருகே இறக்கப்பட்டோம். பலர் தம் உறவுகளைப் பிரிந்தார்கள். கேரதீவிலிருந்து "பரிசில்களில்" ஏற்றப்பட்டோம். சிலர் பழக்கமற்ற தன்மையால் கடலில் வீழ்ந்தார்கள். சிலரோ தாம் கொண்டு வந்த உடுப்பு பொட்டலங்களை கடலில் தவறுதலாக வீழ்த்தினார்கள். யாரை யார் ஆறுதல்படுத்துவது.
* எமது வீட்டு அறையொன்று *
*********************************
எங்கள் பயணம் அக்கரையை அடைந்த போது வாகானங்கள் பயணிக்க முடியாத காடுகள் தென்பட்டன. சேறும், சகதியும், முட்களும், கற்களும் எமைச் சூழ்ந்திருக்க ஈர் தினங்கள் கால்நடைகளாகப் பயணித்தோம். வயதானவர்களை அவர்கள் ஆண் மக்கள்கள் தோளில் சுமந்து சென்ற காட்சிகள் கண்ணுக்குள் இரும்பைக் காய்ச்சியூற்றின. கர்ப்பிணிகளும், சிறுவர்களும், ஊனமடைந்தவர்களும் பயணிக்கமுடியாத அந்த அந்தரிப்பு நிலை பார்ப்பவர் நெஞ்சக்குழியில் கண்ணீரைத் தேக்கக்கூடியவை.
இவ்வாறாகப் பயணித்த ஐந்து நாட் பயணத்தின் முடிவில் வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் எம்மை அரவணைத்தது. கொடுமையான பசியின் இரைச்சலுக்குத் தீனியாக கிடைத்த பாணும் சோறும் பருப்பும் கரட் கறியும் எமக்கு வழங்கப்பட்ட அமிர்தங்கள் அன்றைய நிலையில் !
***********************************
* எங்கள் வீட்டின் நடுக்கூடம் *
***********************************
எம் வருகையறிந்த அநுராதபுரத்தில் வசித்து வந்த என் மாமா, சாச்சி குடும்பத்தினரின் ஆதரவுக்குள் நாம் ஒன்றிக்கொண்டோம். எம் உடமைகளைப் பறித்தெடுத்தவர்களால் எமது கல்வியறிவைச் சுரண்ட முடியவில்லை. எமது இன்றைய வாழ்க்கை அத்தியாயத்தின் தொடக்கவுரையைப் பதிவு செய்த பெருமை நாம் கற்ற கல்விக்கே சேரும் !
இரண்டு தசாப்தம் கழிந்து விட்ட நிலையில் புதிய நேசங்கள், புதிய ஊர், புதிய வாழ்க்கை என சுழலும் யதார்த்தங்களின் நிழலில் நாம் ஒதுங்கத் தொடங்கிவிட்டோம்.
************************************
* சமையலறையின் ஓர் பகுதி *
************************************
இருந்தபோதிலும் எம் பாரம்பரிய தேசத்தில் எமக்கான விடியல் எப்போது . என் பிறப்புத் தாயகத்தில் எனக்கேற்ப தாக்கத்தின் வலியைத்தான் பகிர்ந்தேன்.
அப்பாவிகளின் வாழ்வோடு விளையாடி, தமது அற்பத் தேவைகளுக்காகத் தவறிழைக்கும் மனிதர்களை நாம் தண்டிக்கத் தேவையில்லை. படைத்தவன் அவர்களுக்கான கூலியைக் கொடுப்பான். அதனை சரித்திரம் சுமக்கும்.
வன்முறைகள் எமது முகமூடிகளல்ல. ஆனால் எம் சாபம், எம் குடியிருப்புக்களை அங்கறுத்து அகதிகளாக இத்தனை வருடங்களும் மனக்குறைகளுடன் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்றுமுண்டு..
இது தனி மனிதக் கதையல்ல.......திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு சமுகத்தின் கதை. கண்ணீர்க்கதை. அன்று நாம் சிறியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள். இன்றோ காலம் எம்மையும் பேச வைத்து விட்டது.! நிறைய பேசுவோம்.
தமிழ் எங்கள் தாய்மொழி. கறை படிந்த அந்த இறந்த காலம், நெஞ்சுக்குள்ளின்னும் வலிக்கத்தான் செய்கின்றது. நாங்கள் மரணிக்கும் வரை, அந்த வலியிருக்குமோ!
இவை தொடர்பாக கண்டெடுத்த யூரியூப் வீடியோ பதிவுகளையும் சற்று அழுத்திப் பாருங்கள்..
இது யாழ்ப்பாணத்திலுள்ள மஸ்ஜிதுகள் பற்றிய பார்வை......