About Me

2021/11/09

reface செய்வோம்




Playstore  இல் reface app   பதிவிறக்கம் செய்து அதனைத் திறத்தல் 
- இது பணம் செலுத்திப் பெறும்போது நிறைய அனுகூலங்களைப் பெறலாம் 
- திரையில் தோன்றும் கானொளிகளில் ஒன்றினைத் தெரிவு செய்தல் 
அல்லது வீடியோ பதிவேற்றலாம் 
- கைபேசியில் இருந்து புகைப்படம் தெரிவு செய்யலாம்.  அல்லது செல்பி எடுக்கலாம். 
- நாம் தெரிவு செய்திருக்கின்ற கானொளியின் மேற்பகுதியில் சிறு பகுதியில் தெரிவு செய்த புகைப்படம் காட்சியளிக்கும் 
- அதனை அழுத்தி புகைப்படத்தை தெரிவு செய்தல் 
- முகம் மாற்றப்படும் செயற்பாடு நடைபெறும் 
- அதனை சேமிக்கலாம் அல்லது பிறருக்கு பகிரலாம் 
- சுவாரஸியமான பொழுதுபோக்கு.... 

-அன்புடன் ஜன்ஸி கபூர்


2021/09/21

வாசலிலே பூசனிப்பூ வைச்சுப்புட்டா

தீப்பொறி

இதில் இப்படியும் விடயங்கள் இருக்கின்றன/

சிந்தை மகிழும் சில விளையாட்டுக்கள்

இரவின் மடியில் இதயம் பேசுகின்ற மொழியிது/

பிறப்பிட நிழலிலே இணையவழி நூல் வெளியீட்டின் ஏற்புரை/Jancy Caffoor

முஹர்ரமும் முகக்கவசமும் - கவிதா சாளரக் கவிதை

வாழ்வே மாயம் கவி வரிகளாக/

எங்கெங்கு நீ சென்ற போதும்/என் கவி வரிகளில் சின்னப்பூவே மெல்லப் பேசு /

சுடச் சுட சுவையான பொப்கோன் !

மாற்றம் ஒன்றே மாறாதது

2021/08/27

noolaham.org

 எனது பிறப்பிட நிழலிலே எனும் கவிதை நூலினை noolaham.org எனும் இணையப் பக்கத்தில் பதிவேற்றுவதற்கு ஒத்துழைத்த கவிஞர் மதிப்பிற்குரிய மேமன்கவி அவர்களுக்கும், நூலகத்தின் நிர்வாகி உட்பட நிறுவத்தினருக்கும் எனது நேசமிகு நன்றிகள்.

- Jancy Caffoor -



2021/07/26

கடந்து போன என் இலக்கியத் துளிகளிற் சில – 1


Jancy Caffoor - 26.07.2021

பிறப்பிட நிழலிலே - Waseem Akram கருத்துரைகள்


Jancy Caffoor - 26.7.2021

பிறப்பிட நிழலிலே - கவிதைத் தொகுப்பின் வெளியீடு


Jancy Caffoor - 26.07.2021

கவிதைத் தொகுப்புவெளியீட்டு விழா

 ஜன்ஸி கபூரின் பிறப்பிட நிழலிலே கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா


வெள்ளாப்புவெளி நடத்திய கொடகே நடத்திய  ஆக்க இலக்கியப்  போட்டியில் பரிசு பெற்ற  ஜன்ஸி  கபூரின்  பிறப்பிட நிழலிலே கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா 23.07.2921அன்று ZOOM  வழியாக. மேமன்கவி தலைமையில் நடைபெற்றது.  

இந்த நிகழ்வை  தொகுத்து வழங்கிய  முல்லை முஸ்ரிபா நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். 







26.07.2021

2021/06/24

முரண்பாடுகளுக்குள் உடன்பாடு

மனிதர்கள் தம்முடைய சிந்தனைகளின் பொருட்டே தனித்துவமானவர்களாக மாறுகின்றார்கள். ஒவ்வொரு மனிதரினதும் கைரேகைகள் எவ்விதம் ஒத்திருப்பதில்லையோ அவ்வாறே சிந்தனைகளும் வேறுபடுகின்றன. சிந்தனைகள்   ஒத்திருப்பதில்லையாதலால் முரண்பாடுகள் தோன்றுகின்றன.

வாழ்க்கை என்றால் என்ன?

அந்த வாழ்க்கை எல்லோருக்கும் சுகமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கின்றதா?

ஆனாலும் வாழ்வின் சவால்கள் போராட்டங்களுடன் போராட நம்மில் எத்தனை பேருக்கு தன்னம்பிக்கை இருக்கின்றது.?

நிறைய பேரின் மனதில் இந்த வாழ்க்கை பற்றிய சலிப்பே இருக்கின்றது.

நம் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் பொய்யாக மாறும்போது இயல்பாகவே நாம் நம்மிடமே தோற்று விடுகின்றோம். இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு எழ நமக்கு மன தைரியம் வேண்டும். நேர்ச்சிந்தனைகள் வேண்டும்.

எம்மை நாமே நம் சூழ்நிலைக்கேற்ப தயார்படுத்திக் கொண்டோமானால் நம்மைத் துரத்துகின்ற எந்த முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் சமாளித்து விடலாம்.

நம்மை எதிர்கொள்கின்ற முரண்பாடுகள் நம்மை விழுங்க நாமே அனுமதித்தால் அந்த முரண்பாடுகளிடம் நாம் நம் நிம்மதி கலந்த வாழ்வையே இழந்து விடுகின்றோம்.

வேறுபட்ட இலக்குகள் அல்லது பெறுமானங்களை கொண்டிருக்கும் இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் தோன்றக்கூடிய வெளிப்படையான இயக்கமற்ற தன்மை முரண்பாடு எனப்படும்.' 

முரண்பாட்டுக்கான வரைவிலக்கணத்தை மேற்கண்டவாறு கல்வியலாளர்கள் வழங்கியுள்ளனர். அதாவது நபர்களுக்கிடையில் சிந்தனைகள் வேறுபடும்போது வெளிப்படுகின்ற ஓரு இயக்கமற்ற தன்மையாக இதனைக் கொள்ளலாம்.

நீர் சொல்வதை நான் செய்ய வேண்டுமா அல்லது நான் சொல்வதை நீர் செய்ய மாட்டீரோ என விரிந்து செல்கின்ற மனப்போக்குகளால் விட்டுக்கொடுப்பு இங்கு இடம்பெறாது.

முரண்பாடு என்பது ஒருவரிடத்தே அல்லது இருவருக்கிடையில் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோரின் கருத்து வேறுபாட்டின் அல்லது எதிர்ப்பின் பெறுபேறாகத் தோன்றுவதாகும்.  இந்த முரண்பாடுகள் குடும்ப   உறுப்பினர்களுக்கிடையலோ அல்லது உறவினர்களுக்கிடையிலோ அல்லது தொழில் நிறுவனங்களிலோ ஏற்படலாம்.

முரண்பாட்டுச் சிந்தனை நமக்குள் ஏற்பட்டால் சூழ்நிலைக்கெதிரான மனநிலையைக் கொண்டிருப்போம்.

உறவுகளுக்கிடையிலான முரண்பாடுகளின் விளைவு பகைமை

கணவன் மனைவிகளுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் விவாகரத்தில் நின்றுவிடும்.

குடும்பங்களில் ஏற்படுகின்ற முரண்பாடுகளால் ஒருவருக்கொருவர் முகம் பார்க்க முடியாத பாதகநிலை.

தொழில் நிலையங்களில் சந்திக்கின்ற முரண்பாடுகள் நம் வாழ்வில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுகின்றது.

இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகின்றன. வேற்றுமைக்கு வித்திட்டு பற்பல மோதல்களுக்கு வடிகாலாக காணப்படுகின்ற இந்த முரண்பாடுகள் தோன்றாவிடில் இந்த உலகமோ அழகான அமைதிப் பூங்காவாக அல்லவா காணப்படும். மனிதர்களுக்கிடையில் சாந்தியும் சமாதானமும் சேர்ந்த நிம்மதியான வாழ்வும் கிடைக்குமே. முனம் இவ்வாறாக ஆசைப்பட்டாலும்கூட யதார்த்தநிலை நம்மை சிந்திக்க வைக்கின்றதே

மனித எண்ணங்களுக்கிடையில் காணப்படுகின்ற பல்வகைமைகளின் செல்வாக்கு அன்பெனும் உணர்வின் எல்லைகளையும் தகர்த்து விடுகின்றது.

இந்த முரண்பாடு ஏன் ஏற்படுகின்றது எனப் பார்ப்போமா

ஆளுக்காள் தோன்றுகின்ற பக்கச்சார்பு நிலை.

தனிநபர் பிறர்மீது செலுத்துகின்ற செல்வாக்கு

வேறுபட்ட இலட்சியங்கள்

பொருட் தேவைகள்

தவறான தொடர்பாடல்

அந்தஸ்தை வெளிப்படுத்தல்

அதிகமான வேலைச்சுமை

ஆளுமை மோதல்

தெளிவற்ற பொறுப்புக்கள்

வேறுபாடான எண்ணக்கருக்கள். 

இவ்வாறாக பல காரணங்கள் காணப்படலாம்.

இந்த முரண்பாட்டுக்கும் பண்புகள் காணப்படுகின்றன.

குறித்த நபர் அல்லது நபர்கள் தொடர்பில் வெறுப்பை வெளிப்படுதல்.

குறை கூறல்.

தமது கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருத்தல். 

ஒதுக்கி வைத்தல். 

தனித்திருத்தல். 

பேசுவதை தவிர்த்துக் கொள்ளல். 

கண்கள் நேருக்கு நேர் பார்த்து பேசாதிருத்தல். 

இவ்வாறாக மன அவஸ்தைகளைத் தருகின்ற முரண்பாடுகள் நமக்குத் தேவைதானா நிச்சயமாக முரண்படுகின்றபோது நமக்குள் எழுகின்ற சிந்தனைகளால் நாம் நம்மையே திரும்பிப் பார்க்கின்றோம்

முரண்பாடு மூலம் கிடைக்கும் நன்மைகள் 

புதிய கருத்துக்கள் உருவாகும். 

இணக்கமாக வாழக் கற்றுக் கொடுக்கிறது. 

தேவைகளை நிறைவு செய்கிறது. 

நடத்தை கோலங்களை கற்றுக் கொடுக்கிறது. 

பிரச்சனைக்கான தீர்வு தேடித் தரும். 

தொடர்பாடல் திறனுக்கான பயிற்சி. 

உணர்ச்சிவசப்படுவதை தடுக்கும். 

வித்தியாசமான அனுபவங்களைத் தரும். 

புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும். 

உண்மையான பிரச்சனை வெளிப்படும்.

குறைபாடுகளை இனம் கண்டு கட்டுப்படுத்த முடிகிறது. 

இரு தரப்பும் இணங்கும் வெற்றிகரமான தீர்வு. 

புரிந்துணர்வு வளர்ச்சி. 

முரண்பாடுகள் மூலம் கிடைக்கும் தீமைகள் 

சக்தி நேரம் வீணாகும். 

தாமத முடிவு. 

ஆரோக்கியமற்ற சமூகம். 

எரிச்சலூட்டுதல். 

பின்தங்கிய நிலை. 

குழுவினர் விலகுதல். 

குறிக்கோளை அடைய முடியாது.

ஒழுங்கமைப்பினுடாக முரண்பாட்டுக்கான தீர்வுக்காக  கடைபிடிக்கப்படும் பல்வேறு உபாயங்களாவன : -

தவிர்த்தல். 

தீர்வொன்றை விதித்தல். 

மிருதுவாக்குதல். 

ஒழுங்கமைப்பின் குறிக்கோளை நிறைவுபடுத்திக்  கொள்ளல். 

பிரதிநிதியுடன் கலந்துரையாடல்.

கட்டமைக்கப்பட்ட இடைத்தாக்கம். 

பேச்சுவார்த்தையும் பேரம் பேசுதலும். 

மத்தியஸ்தம். 

பிரச்சினை தீர்த்தல். 

ஒழுங்கமைப்பை மறுசீரமைத்தல். 

எனினும் நமக்கு தீங்கினையும் தரக்கூடிய இத்தகைய முரண்பாடுகள் எம்முள் தோற்றம் பெறுவதை நாம் அனுமதிக்கக்கூடாது.

பிரச்சினைகளை இனங்கண்டு அதனைத் தீர்த்தல் வேண்டும். இதற்கு பொறுமையும் பிறரை நேசிக்கின்ற அன்பான குணமும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்ற பக்குவமும் வேண்டும். பிறர் நலத்தின்மீது மதிப்பு வைக்கின்ற மனநிலை வேண்டும். தவறுகளைக் கண்டறிந்து களைந்தெறிதல் வேண்டும். ஒருவரும் பாதிப்படையாமல் தொடர்பாடல்கள் மூலம் குறைகளைக் களைந்தெறிந்து நல்ல விடயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முரண்பட்டோர் கருத்துக்களை 'நேருக்கு நேர் நோக்குதல்' போன்ற நுட்ப முறைகளையும் பயன்படுத்தி பிணக்குத் தீர்க்கலாம் 

ஈகோ நீக்கப்பட்டாலே பாதி முரண்பாடும் மறைந்து விடும்.

அடுத்தவரின் உணர்வுகள் தேவைகளைப் புரிந்து கொண்டாலே முரண்பாட்டுக்கான பாதைகளும் மறைந்து விடும்.

விட்டுக்கொடுங்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வுலகின் உயர்ந்த மனிதப் பிறவிகள் சமாதானத்தின் மிகச்சிறந்த அடையாளங்களாக மாற்றம் பெறுவார்கள்.

அடுத்தவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பின்தொடர பலர் முன்வருவார்கள்.

பிறரின் குறைகளைக் கண்டுகொள்ளாதீர்கள். உங்கள் நிறைகள் பிறரால் பாராட்டப்படும்.

ஒவ்வொருவரும் தம்மை அடுத்தவர்களை நேசிக்கின்ற மனிதர்களாக மாற்றும்போது இப்பிரபஞ்சத்தின் அன்பின் செழுமைக்கும் குறைவுதான் ஏது.

அன்பு ஆட்சி செய்கின்ற மனிதர்கள் வாழ்கின்ற இப்பூமி மயானங்களல்ல. சொர்க்கத்தின் சுவடுகளால் பாதைகள் செய்யப்பட்ட அழகான பூமியாக மாறும்.

நாமும் மாறுவோம். மற்றவர்களையும் மாற்றுவோம். மாற்றங்களாலேயே வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

ஜன்ஸி கபூர் - 24.06.2021


2021/06/16

வாழ்க்கை நம் கையிலே



 மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியையே தேடுகின்றது. ஆனாலும் அந்த மகிழ்ச்சி நமக்குள்ளேயே இருக்கின்றது என்பதை மறந்து அடுத்தவர்களின் எதிர்பார்ப்பிற்காக நமது வாழ்க்கையை குறுக்குகின்றோம். மகிழ்ச்சியை உணர வேண்டிய மனம் அதை வீணாக இழந்து தவிக்கின்றதே!
---------------------------------------------

-
ஆசைகள் உள்ளத்தில் எழுகின்ற சிறு உணர்வுதான். ஆனாலும் ஆசைகளுக்குள் நாம் நம்மை அடக்கி வாழ முயற்சிக்கும்போதுதான் நம்மைச் சுற்றி வலி கசிகின்றது. கட்டுப்படுத்தப்படாத ஆசைகளின் நீட்சியில் கண்ணீர்க் கசிவு இருக்கின்றது என்பதை நாம் மறந்துதான் போகின்றோம்.
--------------------------------------------------


அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வினுள்  பல எதிர்பார்ப்புக்களை நமக்குள் தேக்கிக் கொள்கின்றோம். நாம் விரும்புகின்ற எல்லாம் நிறைவேற வேண்டுமென முயற்சிக்கின்றோம். போராடுகின்றோம். இருந்தும் ஏமாற்றங்கள் நம்மைத் துரத்துகின்ற போது எல்லாவற்றையும் இழந்ததைப் போல் தனிமைக்குள் சுருண்டு விடுகின்றோம்.

--------------------------------------------------

நமக்குள் அடங்கியிருக்கின்ற ஆற்றல்கள்தான் நமது அடையாளங்கள். பலம் நமது நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். ஆனாலும் நாம் ஏனோ பலத்தை மறந்து பலகீனங்களை நமக்குள் நிரப்பி அப்பலகீனங்களால் சந்தோசங்களை இழந்து விடுகின்றோம். தடுக்கி வீழும்போதெல்லாம் நம்மீது ஏறி மிதிக்காமல் எழுந்திருக்க கை தருவது நம்மீது அன்பு கொண்டவர்கள் மாத்திரமே!
----------------------------------------------------------

இலக்குகள் நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஓவ்வொரு தொலை புள்ளியும் தொட்டு விடும் தூரமெனும் நம்பிக்கையில் முயற்சிக்கின்றோம். ஒவ்வொரு முயற்சிக்குள்ளும் ஒளிந்திருக்கின்ற தன்னம்பிக்கை நமது பயணப் பாதையின் வலியை உறுஞ்சி வழி காட்டி நிற்கும்.
----------------------------------------------------------

நாம் நேசிப்பவர்கள் எல்லோரும் நம்மை நேசிக்கின்ற போது மனதில் புத்துணர்ச்சியுடன் வலிமை பிறக்கின்றது. புன்னகை நமக்குச் சொந்தமாகின்றது. இன்பமோ துன்பமோ நாம் தேடிச் செல்கின்ற செயல்களின் தீர்ப்புக்களே. வெற்றியை தேடும் மனம் சந்திக்கின்ற தோல்விகளையும் வலிகளையும் அக்கணமே மறந்து விடுகின்றது.    

----------------------------------------------------------


தோல்விகளிடம் நாம் தோற்றுவிடும்போது எம்மைத்  தேடி துன்பங்கள்தானே வருகின்றன. ஒவ்வொரு கணமும் நம் நிம்மதியும் தொலைகின்றதுதானே. இருந்தும் கடந்து போன சந்தோசங்கள் உதிர்ந்து போகாமல் கொஞ்சமாவது நமக்குள் நினைவுகள் எனும் பொக்கிசமாக மாறிக் கிடப்பதனால் வாழ்க்கை இன்னும் நமக்காக காத்துக் கிடப்பதாக உணர்ந்து வாழ்கின்றோம். வாழ்க்கை நம் கையிலே வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் நமக்கான வாழ்க்கை அனுபவங்களைக் கற்றபடி வாழ்வோம். வாழ்வை ரசிப்போம்.

- Jancy Caffoor - 16.06.2021


2021/06/15

வெற்றி(யின் இ)லை

உலகினை கொரோனா எனும் நோய் தன் பிடிக்குள் சிக்க வைத்து வாழ்வைக் கசக்கிப் பிழிகின்ற நேரம், அன்றாடம் உழைத்து உண்ணும் பலர் பசியுடன் போராடி வருகின்றனர். ஊதியம் கிடைக்கின்ற வழி உழைப்புத்தானே. நேர்மையான வழியில் உழைக்கின்ற எல்லாத் தொழில்களும் சிறந்தவைதான்.

 சென்ற வருடம் கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் விடுமுறை விடப்பட்டிருந்தன. வீட்டில் இருக்கின்ற அந்நாட்களைப் பிரயோசனப்படுத்துவதற்காக வீட்டுத்தோட்டத்தில் நாட்டம் செலுத்தினேன். அதன் விளைவாகச் சிரிக்கின்றது வெற்றிலைச் செடி. 

சில வீடுகளின் சுவர்களில் இவ்வெற்றிலைச் செடி பரந்து வளர்கையில் அதனை ரசிப்பேன். ஏனோ வெற்றிலைச் செடி வளர்ப்பதென்றால் எனக்கு கொள்ளை ஆசைதான்.

இந்த வெற்றிலையைப் பற்றித்தான் இந்த வீடியோவில் கொஞ்சம் கதைக்கப் போகின்றேன்.

மலேசியாவில் தோன்றிய இச்செடி மருத்துவ மூலிகையாகும். அத்துடன் இந்துக்களின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளமாகவும் திகழ்கின்றது. வயிற்றுக்கோளாறு நீங்கவும் வெற்றிலை பயன்படுத்தப்படுகின்றது. இது மிளகுக் குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். வெற்றிலையை பாக்குடன் மென்றோ அல்லது பீடாவாகவோ சாப்பிடுவார்கள். சிலர் வெற்றிலை ரசம் வைத்துச் சாப்பிடுகின்றார். 

தாய்ப்பால் சுரப்பிற்கும் வெற்றிலை பயன்படுகின்றது. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வெள்ளை வெற்றிலை   காரம் இல்லாததும், வெளிர்ப்பச்சை நிறமாகவும் இருக்கும். கருப்பு வெற்றிலை  காரம் உள்ளதாகவும், நல்ல பச்சை நிறமாகவும் இருக்கும். வெற்றிலையில் நடுக்காம்பிலிருந்து ஒரு புள்ளியில் இருந்து நரம்புகள் பிரிந்து இருந்தால் ஆண் என்றும், பல புள்ளிகளில் இருந்து பிரிந்து வந்தால் பெண் என்றும் கூறப்படுகிறது. 

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. 

வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள் வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். 

வெற்றிலையும், பாக்கும் ஒற்றுமைக்கு உகந்தது. ஒன்றோடு ஒன்றை இணைத்துதான் கொடுக்க வேண்டும். 'வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை'  என்பது பழமொழி. 

வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி ஆகியவற்றை சேர்த்து வாய் மணக்கஇ மணக்க தாம்பூலம் தரிப்பது தமிழர்களின் வழக்கம். 

இவ்வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

  • உடல் பருமனை குறைக்கும் மருந்து

2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.

  • நரம்புகளை பலப்படுத்தும் மருந்து
  • மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • மூச்சுதிணறல், நெஞ்சக சளியை போக்கும் மேல்பூச்சு மருந்து
  • நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது

ஆனாலும் நன்மையின் மறுபக்கமாக தீமையும் உள்ளது. வெற்றிலை மென்று சிலர் வழி வழியே துப்பும்போது சூழலின் அழகு கெடுகின்றது. அது மாத்திரமல்ல தொடர்ந்து மெல்லும்போது பற்களில் கறைகளும், புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.

இருந்தபோதும் மங்களகரமான அச்செடியை வீட்டில் வளர்த்து மன சந்தோசம் பெறுவோமாக!

உங்கள் அன்பின் ஜன்ஸி கபூர் - 14.06.2021


2021/06/08

கொரோனா சிதைத்த ஓவியம்



பிறக்கின்ற எல்லோரின் நாமங்களையும் இவ்வுலகம் உச்சரிப்பதில்லை. திரும்பியோ, விரும்பியோ பார்ப்பதில்லை. வாழ்த்துப் பூக்களுடன் ஆற்றலும், ஆளுமையும் கொண்ட சாதனையாளர்களுக்கென தனியிடத்தினை   எப்பொழுதும் வைத்தேயிருக்கின்றது.  

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பார்கள்.

சித்திரம் வரைகின்ற உணர்வு ஆன்மாவுடன் ஒருங்கிசைந்தால்தான், உயிரோவியங்கள் பிறக்கும். 

வெறும் வண்ணக் கலவையுடன் படிந்த தூரிகைகளின் அசைவுக்குள்ளும் இரசனை இருந்தால்தான் தத்ரூபமான ஓவியங்கள் கிடைக்கும். 

இவ்வாறான தத்ரூபமான ஓவியங்களை வரைந்த கலைஞன் திரு இளையராஜா அவர்கள் கொரோனாத் தொற்றுக் காரணமாக இறந்திருக்கின்றார்.

விரல் தூரிகைகளின் உயிர்ப்பான கவி வரிகளை

வண்ணங்கள் குலைத்து 

விழிகளுக்குள் ஓவியமாக 

உயிர்ப்பித்த கலைஞனின் இழப்பு 

கலையுலகிற்கான பேரிழப்புத்தான்.  

43 வயதான ஓவியர் இளையராஜா இன்று இப்பிரபஞ்சத்தின் காற்றின் பிம்பங்களுக்குள் வண்ணங்களாக கரைந்திருக்கின்றார்.

இசைக்கோர் ராஜாவென்றால்

ஓவியத்திற்குள்ளும் இந்த அற்புத ராஜா ஒளிந்திருக்கின்றார்.

இவர் சென்னை கும்பகோணம் அருகே செம்பிய வரம்பில் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்து அண்ணா, ஐந்து அக்காக்களைக் கொண்ட பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி ராஜா.

ஆரம்ப காலத்தில் தான் வரைகின்ற அழகிய ஓவியங்களை இணையத்தில் பதிவேற்றி வந்தார். 2010 ஆம் ஆண்டு முதல் ஆனந்தவிகடன் தனது இதழின் சிறுகதை, கவிதைகளுக்காக இவரது ஓவியங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தபிறகு உலகம் இவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. பல எழுத்தாளர்களின் கற்பனைக்கு தனது ஓவியத் திறமையால் உயிர்ப்பூட்டினார். இவரது பொருளாதார நிலையும் உயர்ந்தது. பல விருதுகள் இவரது ஓவியங்களைக் கௌரவித்தன.

கிராமத்துப் பெண்களின் அழகை தனது தூரிகையால் வண்ணங் குலைத்து பேரழகாக்கினார். இவரது ஓவியங்கள் வெறும் ரேகைகளும், வண்ணங்களும் கலந்த வரைபடங்களாக இருந்ததில்லை. வாழ்வியல் கலைகளாகவே பிரதிபலித்தன. 

இவரது ஓவியங்களுக்காக எழுத்தாளர்கள் கதைகளை எழுதியிருக்கின்றார்களென்றால் அவ்வோவியங்களின் ஈர்ப்புசக்தி பற்றி நாம் கூறத்தேவையில்லை.

தன் கண்முன்னால் காணும் காட்சிகளை உருச் சிதறாமல் வரைவதுதான் ஓவியப் பண்பு. அத்தகைய ஓவியனாக, கண்முன் காணும் தரிசனங்களை மாற்றமின்றி,   தனது தூரிகைகளுக்குள் சிறைப்பிடித்த இளையராஜா இன்று புகழின் அமயத்துக்குள் தன்னை நிரப்பிக் கொண்டுள்ளார்.

குக்கிரமம் பூர்வீகம். அப்பா தச்சுத் தொழிலாளி. அவர் செய்கின்ற சக்கரவேலைகளை ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தபோதே, விரல்களும் தூரிகைகளாக மாற ஆரம்பித்தன. ஏழு வயதிலேயே வரைய ஆரம்பித்து விட்டார். தொலைக்காட்சியில் வருகின்ற நடிகர்களைப் பார்த்து வரைந்து தன்னாற்றலை சுயமாக வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

பள்ளிக்குப் போக விருப்பமில்லை. இராணுவத்தில் சேர்கின்ற முடிவோடு வாழ்க்கையில் நகர்ந்தவரை, ஓவிய ஆசிரியர்கள் இவரது திறமைக்கேற்ற பாதையைக் காட்டினார்கள்.

பெற்றோர் மறுப்பினையும் பொருட்படுத்தாது, கும்பகோண ஓவியக்கல்லூரியில் இணைந்து முழுமையான ஓவியராக மாறினார். ஆசானால் வழங்கப்படுகின்ற ஓவிய நுட்பங்களை இலகுவில் புரிந்து கொண்டு பிறருக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். நமக்கு கிடைக்கின்ற அறிவினைக் கொண்டு அனுபவங்கள் எழும்போதே திறமையான சாதனைப் பக்கங்கள் நமது இருப்புக்காகக் காத்திருக்கத் தொடங்குகின்றன.கண்களை அளவுத்திட்டமாகக் கொண்டு மனித உடலை அழகாக வரையக் கற்றுக் கொண்டார். பின்னர் சென்னை ஓவியக்கல்லூரியில் முதுகலை கற்றார். 

அக்காமார், அண்ணிமார் எனப் பெண்களைச் சூழ வாழ்ந்த பின்னணியால் இவரது ஓவியத்திற்கான கரு பெண்களாகவே இருந்தது. அழகான மண்ணியல் வாழ்வினை தத்ரூபமாக ஓவியங்களின் ஊடாக வெளிப்படுத்தினார். உடன்பிறப்புக்கள் திருமணமாகிச் செல்ல, கிடைத்த தனிமையின் காத்திருப்பு இவரது  ஓவியங்களில் பிரதிபலித்தன. இவரது ஓவியங்கள் பெண்களின் அழகினை பேரழகாக்கின. வியப்படையச் செய்தன. இவை ஓவியங்களல்ல. புகைப்படங்களே எனப் பார்ப்போரை வியப்படையச் செய்வதே இவரது பாணியாக இருந்தது.

வண்ணங்களினூடாக வாழ வேண்டிய கலைஞனை தன் எண்ணத்துள் சிறை பிடித்ததோ கொரோனாவும்.

   ஏற்பட்ட சளி நுரையீரலின் உயிர்ப்பினை அறுத்து மாரடைப்பென அறிவுப்புச் செய்ததுவோ.

சிறு அலட்சியம்கூட பெறுமதியான உயிரைப் பிளந்து விடுகின்றது.

ஓவியர் கொரோனாவால் உயிரிழந்தாலும்கூட, அவரின் தூரிகையின் மொழி இவ்வுலகம் அழியும் வரையும் தத்ரூபமான அவரது கலையாற்றலின் அடையாளத்தினை பரப்பிக் கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை

கலைஞன் இறப்பதில்லை. 

என்றும் கலைகளினூடாக வாழ்ந்து கொண்டேயிருப்பான்.

ஜன்ஸி கபூர் - 08.06.2021   


2021/06/06

விதியின் கோர முகம்


மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு நிமிட வாழ்வும்

விண்ணில் தங்குகின்ற நிரந்தர வாழ்விற்குத் தானோ?

எண்ணற்ற கனவுகளும், ஆசைகளும், ஏக்கங்களும்

புண்ணாகி ரணத்துடன் புதையுண்டு போவதுதான் விதியா?

ஆம்...

விதியின் முகம் இயற்கை அழிவாகி, மண்ணுக்குள் இழுத்துத் தள்ளிப் புதைத்த, மண்சரிவின் கோரப் பிடிக்குள் நேற்று சிக்குண்ட ஒரு குடும்பத்தின் கதையை இன்று என் விரல்கள் கண்ணீர் நனைத்து எழுதுகின்றன.

ஓன்றா.........இரண்டா...............

எத்தனை உயிர்கள் ஊனமாக, ஊமையாக இயற்கை அழிவுக்குள் தம் முகம் புதைக்கும் கோரங்களின் அகோரங்கள் நம் செவியை அவ்வவ்போது அதிரச் செய்கின்றன.

யாரை யார் குற்றம் சொல்வது?

இயற்கையை அழிக்க, இயற்கை தன் சினத்தைக் கொட்ட, இதயங்கள் கிழிந்து போகின்றன. குருதியின் வெந்தணலில் மூச்சுக்கள் கருகுகின்றன.

வெள்ளம், புயல், மண்சரிவு, சுனாமி என, இயற்கை அனர்த்தங்கள் அவ்வவ்போது உயிர்களை பலி கொண்டு வருகின்றன. இவ் அனர்த்தங்களின்போது காவு கொள்ளப்படுகின்ற உயிர்களின் இழப்புக்களை பார்க்கையில், வெளியே நிற்கின்ற வெளித்தரப்பினருக்கே மனக்கஷ்டங்கள் ஏற்படுகையில், உண்மையில் உறவுகளின் வலிக்கு வார்த்தைகள் ஏதுமில்லைத்தான்.

நாளைய வாழ்வு எப்படி இருக்கும் என நமக்கு முன்கூட்டியே அறிந்து கொள்ளுகின்ற சக்தியிருந்திருந்தால், ஒவ்வொருவரும் அதற்கேற்ப தம்மை தயார்படுத்துவார்களோ என்னவோ!...

தாய், தந்தை, மகன், மகள் என நான்கு உயிர்கள், குடும்ப உறவுகள் நேற்று 05.06.2021 ஆம் திகதி   இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிர்நீத்த செய்தியினைக் கேட்கின்றபோது இனம், மதம், சாதி எனும் புறவேறுபாடுகளையெல்லாம் தகர்த்தெறிந்து, மனிதாபிமானமுள்ள நெஞ்சங்கள் கண்ணீர் சிந்தும்.

மகள் ஆசிரியை. கல்விப் பணிபுரிந்த அந்த சகோதரியை மண் விழுங்கியபோது எத்தனை மாணவ நெஞ்சங்கள் கதறியிருப்பார்கள். எத்தனையோ ஆசைகள், கனவுகளைச் சுமந்து எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்போடு வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளம் உள்ளங்கள் தமக்கு நேரப் போகின்ற அனர்த்தங்களை அறிந்திருந்தால் உதடுகளில் விரிகின்ற அந்தப் புன்னகை மலர்ந்திருக்குமா என்ன?

மண்சரிவு நடைபெற்ற பின்னர், இருந்த வீடு முற்றாக மறைந்து விட்டது என்பது வேதனைதான். அதிலும் புதையுண்டவர்களை எங்கு தேடுவது? அத்தடுமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது அவர்கள் வளர்த்த பாச நாய்தான்;. பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள் செல்ல  அந்த நாயும் சம்பவ இடத்திற்கு வந்தபோது விரட்டினர். ஆனால் அது திரும்பி வந்து, அதன் முன் பாதங்களால் சேற்றைத் கிளறத் தொடங்கியது. ஒரு துப்பு கொடுத்தது. இதன்போது சடலங்கள் அந்த இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.

வாழ்க்கை அற்பமானது, சொற்பமானது ஆனால் நாம் அதை உணர்வதாக இல்லை. ஒவ்வொரு மரணங்களும் நமக்கு உணர்த்திச் செல்கின்ற தத்துவங்கள் அவைதானே!

ஜன்ஸி கபூர் - 06.05.2021

2021/06/05

உன்னில் என்னைக் காண்கின்றேன்.

 

இவ்வுலகின் அற்புத சக்தியாக காதல் இருப்பதால்தான்   தமக்கிடையேயுள்ள எந்த வேறுபாடுகளையும் அது கண்டுகொள்ளாமல் அன்பை நோக்கியே பயணிக்கின்றது. உண்மையான அன்பு இதயங்களாக வாழும் இந்த சனா – தவூத் தம்பதியினரை எனக்குப் பிடித்ததால்  அவர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்துகின்றேன். நன்றி பீபீசி - தமிழ்

தவுத் சித்திக்கி  சனா முஷ்டாக் இருவரும் உறவினர்கள். சந்தித்த சந்திப்பு காதலாகப் பூக்க இருவரும் காதல் வானில் பறந்து திரிந்தார்கள். ஒரு வருடக் காதல் மகிழ்ச்சியாகக் கழிந்தது. ஒன்றாகவே இருவரும் வெளியே சுற்றுமளவிற்கு  காதலும் உறுதி பெற்றிருந்தது. இருவரும் ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை எனும் அளவிற்கு மனதாள் வலுப் பெற்றார்கள்.

தவுத் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோது உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து பாய்ந்த மின்சாரம் காரணமாக ஏற்பட்ட விபத்தால் அவனது இரண்டு கைகளும் காலும் பறிபோனது. எட்டு மணி நேர சத்திரசிகிச்சை உடல் உறுப்புக்களை இழக்கச் செய்தாலும் உயிரைக் காப்பாற்றியது. 

ஆனால் உள்ளங்கள் சம்பந்தப்பட்ட காதல் புறத்தோற்றங்களால் மாறுபடுமா? செய்தி கிடைத்ததும் சனா கலங்கியவாறு ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள். கண்ணீரில்  கரைந்த காதலால் அந்த வைத்தியசாலையும் வலி சுமந்தது.

தாவுத் நினைவு திரும்பவில்லை. ஆனாலும் சனா அவனது காதினருகே போய் முணுமுணுத்தாள். அந்த ஒலிச் சப்தம் அவனது உணர்வுகளை மெல்ல வருடியிருக்க வேண்டும். கண்களைத் திறந்தான். பூக்களாக மலர்ந்திருந்தாள் காதலி சனா.

தவுத்தோ அவள் தன்னைப் பார்க்க வருவாள் என்று நினைக்கவேயில்லை. இந்த விபத்தால் அவள் தன்னை வெறுப்பாள் என்றே எண்ணினான். இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். ஊனமுற்ற தன்னுடன் அவளை வாழக் கட்டாயப்படுத்துவது தனது அன்புக்குப் பொருத்தமில்லை என்றே எண்ணினான். அவள் பிரிவிற்கேற்ப வாழ தன்னை தயார்படுத்த நினைத்திருந்தான். 

ஆனால் அவள் அன்பு அவனைக் கைவிடவில்லை. அவனுடன் கூடவேயிருப்பதாக ஆறுதலளித்தாள். அவனது இழந்த உறுப்புகளுக்குப் பதிலாக தனது கை கால்கள் இருப்பதாகவும் அவற்றால் உதவுவதாகவும் உணர்வுபூர்வமாகக் கூறினாள். 

தவுத்திற்கு சனாவை கஷ்டப்படுத்த விருப்பமில்லை என்பதால் அந்த திருமணத்திற்கு அவன் சம்மதிக்கவில்லை. தம் பிள்ளைகளின் வருங்காலம் தொடர்பாக ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆசைகளும் கனவுகளும் இருக்கும்தானே.  உன் பெற்றோர் நன்மைக்குத்தானே சொல்கின்றார்கள். அதனால் பெற்றோர் விருப்பப்படி வாழ்க்கைத் தெரிவு செய்யும்படி கூறினான். 

விபத்தின் பின்னர் சனாவின் பெற்றோரும் இக் காதலை விரும்பவில்லை.     அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதும். அவள்; வீட்டை விட்டு வெளியேறி தனது மாமி; வீட்டில் தங்கியிருந்;தாள். தவுத்துடன் தொடர்பு கொண்டாள். உன்னுடன் வாழ்வதற்காக எல்லாவற்றையும் இழந்து வந்திருக்கின்றேன் ஏற்றுக் கொள் என்றாள். அவளது விருப்பத்திற்கு தவுத் ஆரம்பத்தில் உடன்படாவிடினும் ஈற்றில் அவளது அன்பின் பலம்; வென்றது. தனது வாழ்க்கை அவனுடன்தான் என அவள் எடுத்த முடிவு உயிர் பெற்றது. தவுத் பெற்றோர் ஆதரவுடன் அவனைத் திருமணம் செய்தாள்.

அடுத்தவர் உதவியின்றி நம் வேலைகளை நாமே செய்வது பெரும் அதிஷ்டம்தானே. அவனோ தான் எப்பொழுதும் பிறரை நாடி இருப்பதை எண்ணிக் கலங்கி நிற்கும்போதெல்லாம் மனைவி அவனை ஆறுதல்படுத்துகின்றாள். இறைவன் தன்னை இப்படிக் கலங்க வைத்ததை எண்ணி வேதனைப்படும்போதெல்லாம் சனா   உணர்வுகளால் தன்னம்பிக்கையூட்டுகின்றாள். உற்சாகப்படுத்துகின்றாள்.  அவனுக்காகவே அவள் பிறந்திருப்பதாக நேசத்தைப் புதுப்பிக்கின்றாள். ஒரு தாயாக தாரமாக மாறி அவனை தன் உள்ளத்தில் பதிவேற்றி வாழ்ந்து வருகின்றாள்.

 அவள் தனது சோகத்தை வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே காட்டிக் கொள்வாள்.

ஆனாலும் அவனது மனம் அவளுக்கு தான் பாரமாக இருப்பதை ஏற்கவில்லை. அவளுக்காக தானும் வாழ வேண்டுமெனும் நோக்கில் செயற்கை அவயங்களைப் பொருத்த எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் இப்புரிதலில் காதல் தினமும் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் அவளுக்குள் இன்னுமொரு வலி. அவளது பெற்றோர் தவுத்தை இனனும்; மருமகனாக ஏற்கவில்லை.

காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை. மாற்றங்களுடன் கூடியதே வாழ்க்கை. பணம் பதவி அந்தஸ்து என மாய வலைக்குள் சிக்குண்டு அல்லல்படும் பலரின் மத்தியில் இவர்களது காதல் நெஞ்சம் நமக்கு தடைகளையும் வலியினையும் கடந்து வாழ கற்றுத் தருகின்றது.

சோர்வல்ல வாழ்வு. சோகத்தையும் தூசாக்கி துணிவுடன் கடந்து போக கற்றுத் தருவது. இக்காதல் தம்பதியினரின் வாழ்க்கை வளம்பெற நாமும் வாழ்த்துவோம்.

ஜன்ஸி கபூர் - 05.06.2021

  

2021/06/02

இட்லி பாட்டி

நாகரீகத்தில் மையங் கொண்ட நவ உலகத்தில் நாலு சுவர்களுக்குள் வாழ்கின்ற பல நல்லுள்ளங்களைப் பற்றிய பார்வைகள் பலருக்குப் புரிவதில்லைதான். எந்தவொரு செயலும் நேர்மையாகச் செய்கின்றபோது நாம் பிறரின் நேசத்திற்குள் ஈர்க்கப்படுகின்றோம்.

உணர்வுகளால் ஆளப்படுகின்ற மனித மனங்கள் ஆளாளுக்கு வேறுபடுகின்றன. இப்படித்தான் வாழ வேண்டுமென சிலரும், எப்படியும் வாழலாம் என சிலரும் தமது வாழ்வை அடுத்தவர் பார்வைக்கு நகர்த்துகின்றார்கள்.

அடுத்தவர்களைச் சுரண்டி தனது பணப் பையை நிரப்புகின்ற பலரின் மத்தியில் இவரின் தயாள குணம் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இவர் ....இட்லி பாட்டி..........என செல்லமாக அழைப்போம்.

கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலயாம்பாளையம் எனும் பசும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார். நாற்பது வருடங்களாக தனது வியாபாரமாக இட்லி சுட்டு விற்கின்றார். அன்று முதன் முதலாக இட்லி விற்ற விலையான ஒரு ரூபாவையே இன்றும்  இவர் பெற்றுக் கொள்கின்றார்.

இன்றைய விலைவாசியில், உழுந்து விற்கின்ற விலையில் ஒரு ரூபாவிற்கு இட்லியா?

கேட்பவர்கள் ஆச்சரியத்தில் விழிகளை உயர்த்தும்போதும், அவரின் மெல்லிய புன்னகை உண்மையை ஒத்துக் கொள்கின்றது.

சுருங்கிய தளர்ந்த தேகம். இருந்தும் அவர் தளர்ந்து விடவில்லை. தன் வாழ்வையும், இட்லி வியாபாரத்தையும் நேர்த்தியாகவே கொண்டு செல்கின்றார். 

இன்றைய உலகியல் வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு ஆசைகளே காரணமாக அமைகின்றன. ஆனால் இப்பாட்டியின் ஆசையற்ற நடைமுறை வாழ்வியல் பலரின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

செய்கின்ற தொழில் தெய்வம் என்பார்கள். ஆனால் இப்பாட்டியின் தயாள குணத்தால் பலர் இவரைத் தெய்வமாகப் பார்க்கின்றார்கள்.

பசியுடன் தன்னை நாடி வருகின்றவர்களுக்கு ஆவி பறக்க பரிமாறும் இட்லிச் சுவையில் அன்பும் கலந்திருப்பதாக பசியாறுபவர்கள் மகிழ்வுடன் குறிப்பிடுகின்றார்கள்.

சூரியன் முற்றத்தை முத்தமிடுகின்ற அந்த அதிகாலைப் பொழுதிலே அடுப்பில் விறகேற்றி பசியெனும் இருளை விரட்டுகின்ற பாட்டியின் கடுமையான உழைப்பால் பல வயிறுகள் சுவை காண்கின்றன.

கையில் காசு இல்லாதவர்களுக்கு கூட அழைத்து இட்லி பரிமாறுகின்றார். காசு கையில வரும்போது தரும்படி கூறுகின்ற அவரின் அன்பு மனம் கொடுத்த இட்லிகளை கணக்குப் பார்த்து கடதாசிகளில் குறித்து வைப்பதில்லை.

முதுமையின் தோற்றத்தை உடல் பெற்றாலும்கூட சுறுசுறுப்பாக தானே உழைத்து தன்னைக் காக்கின்ற உழைப்பும் அடுத்தவர்களை மனிதாபிமானமாக நோக்கும் பண்பும் இப்பாட்டியின் சிறப்பான அடையாளங்கள்.

உண்ண வருகின்றவர்களுக்கு பாட்டியின் அன்பான உபசரிப்பு  வயிற்றுடன் மனதையும் நிறைக்கின்றது.

பசுமையான மனதின் பிரதிபலிப்புத்தானே இது!

தேடி வருகின்ற பசியாளிக்கு இல்லையென்று சொல்லாமல் பசியாற்றுகின்றார். கொடுக்கும் இட்லிக்கு கணக்குப் பார்ப்பதில்லை. கொடுக்கும் பணத்தை மனதாரப் பெற்றுக் கொள்கின்றார்.

பசித்தவன்  புசிக்க இலவசமாக உணவளிக்கும் தர்மத்தையும் செய்கின்றார்.

கலப்பமிடமில்லாத சுவையான இட்லி இவரது கைப் பக்குவம்தான்.

சுவையான இட்லியென உண்பவர் வாயாரப் புகழும் வார்த்தைகள் இவரின் மனதை  நிறைக்கின்றன.

இணையத்தில் கண்டெடுத்த பாட்டியின் இட்லிகள் எனது வரிகளில் இங்கு பரிமாறப்படுகின்றன.

ஜன்ஸி கபூர் - 02.06.2021


MV X- Press Pearl

                                       

தற்போது இலங்கையில் பேசப்படுகின்ற விடயம் MV X- Press Pearl  எனும் சிங்கப்பூர் கப்பலைப் பற்றியதாகவே இருக்கின்றது. இது சுமார் 186 மீற்றர் நீளமானது. இது 2021 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இயக்கப்பட்டது. இக்கப்பல்   எக்ஸ் பிரஸ் பீடர் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 
 
இது போர்ட் கிளாங் துறைமுகத்திலிருந்து (மலேசியாவிலிருந்து) சிங்கப்பூர் வழியாக ஜெபல் அலி (UAE) மற்றும் போர்ட் ஹமாத் (கத்தார்), துபாய் வரை மத்திய கிழக்கு சேவைக் கப்பலாக அனுப்பப்பட்டது. 

இது 30 நாள் சுற்றுப் பயணத்தின் பின்னர், திரும்புகையில் ஹசீரா (இந்தியா) கொழும்பு (இலங்கை) வழியாக மீண்டும் மலேசியாவை சென்றடைய வேண்டும். 

நைத்திரிக்கமிலத்தின் கொள்கலன் கசிவு காரணமாக கப்பலை கத்தார், இந்தியா துறைமுகத்தில் நிறுத்த முயற்சித்தபோது, கசிகின்ற அமிலத்தைப் பராமரிக்க வசதியில்லை எனும் காரணத்தினால் குறித்த கொள்கலனை இறக்குவதற்கு அனுமதி கிடைக்காததால் கப்பலை கொழும்பு வழியாக செலுத்தியதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இக்கப்பல் 25 தொன் நைத்திரிக்கமிலம், பிற இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் நிறைந்த 1468 கொள்கலன்களுடன் 2021 மே 2 ஆம் திகதி இந்தியா ஹசிரா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, மே 19 ஆம் திகதி கொழும்பை அடைந்தது. 

மே 20 கொழும்பு துறைமுகத்தின் வடமேற்கே 17.6 கி.மீ தூரத்தில் கப்பல் இருக்கையில் தீ பிடித்தது. இக்கப்பலில் காணப்பட்ட கொள்கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த இரசாயனப் பொருட்களின் தாக்கத்தினாலேயே இத்தீ பரவல் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக தீப்பரவல் அதிகரித்தது. தீப்பற்றிய கப்பலில், கப்பலின் உரிமையாளரும் ஆபரேட்டருமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் உள்ளிட்ட பன்னிரெண்டு பணிக்குழுவினர் மற்றும் 12 தீயணைப்பு படையினர் உள்ளிட்ட 25 பேர் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

21 மே 2021 அன்று, இலங்கை கடற்படை, இரண்டு கடல் ரோந்து கப்பல்கள்,  சாகரா மற்றும் சிந்துராலா போன்ற கடற்படைக் கப்பல்களையும், தீயணைப்பு மீட்புப் பணிகளில் ஒரு விமானத்தையும் அனுப்பியது.  


மே 22 அன்று, இலங்கை விமானப்படை மீட்புப் பணிகளில் பெல் 212 ஹெலிகாப்டரை நிறுத்தியது.
  
அமிலக் கசிவினில் ஏற்பட்ட   கட்டுப்படுத்தப்பட முடியாத தீயின் காரணமாக மே 25 ஆம் திகதி கப்பலில் வெடிப்பு ஏற்பட்டது. அப்பொழுது இரு இந்தியக் குழு வீரர்கள் காயமடைந்ததால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஏனையோர் பாதுகாக்கப்பட்டனர். 

கொள்கலன்கள் கடலில் விழுந்தன.  தீயணைப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு கடலோர காவல்படை கப்பல்கள், ஒரு இழுபறி மற்றும் டோர்னியர் கடல்சார் உளவு விமானம் ஆகியவற்றை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா அனுப்பியது. 
 
மே 29 அன்று, எக்ஸ்-பிரஸ் முத்தில்  தீப்பிழம்புகள் குறைந்தாலும், கப்பல் புகைத்துக் கொண்டேயிருந்தது. கடல் பாதுகாப்பு ஆணையத்தால் மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். எண்ணெய்க் கசிவுடன் கலக்கப்பட்ட கடல் சுற்றுப்புறம் மாசடைந்துள்ளதால் நைத்திரிக் ஒட்சைட்டு வளியுடன் கலந்து அமில மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரிகள் இறந்துள்ளனர். குறித்த பகுதிக்கு மீனவர்கள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கரையொதுங்கின்ற பொருட்களை கடற்படையினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்துகின்றனர். 


 மே 27, 26,000 கிலோ எடையுள்ள மூன்று பிளாஸ்ரிக் கொள்கலன்களிலிருந்து    பிளாஸ்ரிக் பொருட்கள் கடலில் சிந்தப்பட்டு கரையொதுங்கியுள்ளன. இத்தகைய மாசுக்கள் கடலின் அழகை குறைத்துள்ளன. இப்பேரழிவால் மில்லியன் கணக்கான கடல்வாழ் உயிரினங்களும், பவளப்பாறைகளும் அழிந்துள்ளன என்பது வலி தருகின்ற விடயமாகின்றன. ஒரு பவளப்பாறை  மூன்று அங்குலம் வளர ஒரு வருடம் தேவை. அப்படியாயின் இப்பவளப்பாறைகள் மீள உருப்பெற இன்னும் எத்தனை வருடங்கள் செல்லுமோ?

                               

ஐரோப்பாவிலிருந்து  தருவிக்கப்பட்ட தீயணைப்பு உபகரணங்கள் உள்ளிட்ட இலங்கை அரசின் கடற்படை, விமானப்படையினரின் பெரும் முயற்சியின் பின்னர் கப்பலின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 


கொழும்பு துறைமுகத்திலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் கப்பலானது இழுத்துச் செல்லப்பட்டது. சேதத்தின் தன்மை மற்றும் கடல் வளத்தின் பாதிப்பு பற்றி தற்போது ஆராயப்படுகின்றது. கடலின் மரணம், இயற்கை வள அழிவுக்கான சோகம். கப்பலிருந்து பெறப்படுகின்ற கறுப்பு பெட்டியின் தகவல்கள் விசாரணைகளுக்கு உதவக்கூடும்.

தற்போது இக்கப்பல் கௌரவ ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடுக்கடலில் விடப்படவுள்ளது.

பேரழிவின் அளவு மற்றும் இலங்கை கடலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முறையான சுற்றுச்சூழல் சேத மதிப்பீட்டைப் பெற குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என்று தேசிய திட்டத்தின் நிறுவனர் டாக்டர் அஜந்தா  கூறியுள்ளார்.


தற்போது கப்பலில் இருந்து 80 கிலோமீட்டர் பகுதியில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

கப்பலிலிருந்து வெளியாகியுள்ள மாசானது கற்பிட்டியிலிருந்து காலி கடல் போன்ற நீண்ட தூரங்களுக்கு பரவி, கடல்வளத்தை சேதப்படுத்தியுள்ளது. எதிர்பாராமல் ஏற்படுகின்ற இத்தகைய விபத்துக்களால் இயற்கை வளங்கள் மட்டுமல்ல, நாமும் தீதால் சூழப்படுகின்றோம்.

ஜன்ஸி கபூர் - 02.06.2021