கோபம் என்னை புதைக்கும் போதெல்லாம்
அடுத்தவர் பகைக்குள் புதைந்து விடுகிறேன்!
கோப மின்சாரத்தில் கருகிறது
என்னுள் தரித்து நிற்கும் நிம்மதி!
கோபம் என்னுள் திரை விரிக்கும் போதெல்லாம்
இருள் பார்வையை மறைக்கின்றது!
என் மௌனப்பாறை உடைந்து
கோபம் வார்தைகளாகும் போதெல்லாம்
மனம் பயணிக்கிறது வெறுமை வெளியில்!
கோபம் கண்ணை மூடும் போதெல்லாம்
வார்த்தைகள் வலி!
கோப வெள்ளத்தில் மனசு மிதக்கும் போதெல்லாம்
வலி எல்லாம் தீ !
கோபம் என்னுள் கர்ப்பம் தரிக்கும் போதெல்லாம்
நான் யாராகவோ மாறுகின்றேன்!
கோப மண்டலத்தில் நான் நுழையும் போதெல்லாம்
உறவுகள் தூரமாகின்றன
- Jancy Caffoor -
2019/06/15
பூக்கள்
பூக்கள்
முட் தேசத்தின் முகவரி!
வண்டுகளின்
இராஜதந்திரி!
தேன்களின்
சேமிப்பகம்!
வீசும் காற்றின்
மேலாடை!
மகரந்த உச்சரிப்பின்
வாசம்!
வண்ணங்கள் பல வீசும்
வானவில்!
மரங்களின் விழிப்பை
அழகூட்டும் தூரிகை!
- Jancy Caffoor-
உன் நிழல் வீழ்த்த
என் தனிமை காத்திருக்கின்றது
துணையாக நீ!
மூங்கிலாக நான்
துளையாக நீ!
என் மனபாத்திரத்தில் - உன்
நினைவு வழிகிறது மதுவாக !
நான் மேகமாக மாறி - உன்னை
சுமந்து கொண்டிருக்கின்றேன் தினமும் !
என் குரல்வளை நாணுகின்றது
உன் பெயர் சொல்லும் போதெல்லாம்!
என் மூச்சு தினமும் வாசிக்கின்றது
உன் பெயரை அழகாக !
என் விழி திறந்தே இருக்கிறது
உன் நிழல் வீழ்த்த!
- Jancy Caffoor -
2019/06/11
எதிர் மறை எண்ணங்கள்
கையில் அழகான ரோசா!
இருந்தாலும்
காயம் தந்த முள்ளையும்
ஓரப் பார்வையில் விழுத்தி விடுகிறது மனம்
இவ்வாறே வாழ்க்கையும் எப்போதும் எதிர்மறை எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் அலை மோதுகிறது.
- Jancy Caffoor-
11.06.2019
யதார்த்தம்
இந்த உலகம் எப்போது உருவாக்கப்பட்டதோ, அன்றே மனித வர்க்கமும் சுயநலம் என்ற வலையை தன்னைச் சுற்றி பின்னத் தொடங்கி விட்டது। வஞ்சகம், பொறாமை, கள்ளம், கபடம் போன்ற நச்சு விதைகளின் இருப்பிடம் அவனது மனமாக மாறி விட்டது। தான், தன் குடும்பம் முதனிலை பெற, அடுத்தவர் தூரமாகினர். ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் பொதுநலம் மறைந்து போனதில் முரண்பாடுகளின் விளைச்சல் அவனது வார்த்தைகள் மூலமாக உருவாகத் தொடங்கிவிட்டது. அழகான குறுகிய கால வாழ்க்கையில் சந்தோசம் துளியளவு கிடைக்காத மன நிலை நிரந்தர சொத்தாக மாறி விட்டது! உள்ளே குமுறி வெளியே சிரிக்கும் நடிகனாக மனிதன் மாறத் தொடங்கி விட்டான். இயந்திரமயமான இவ் உலகம் இன்று இதயம் இல்லாத மனிதன் கையில்!
- Jancy Caffoor-
11.06.2019
Subscribe to:
Posts (Atom)