About Me

2021/05/15

கொரோனா அலையும் நிகழ்நிலைக் கற்றலும்

 

கல்வி என்பது குழந்தைகளின் உரிமை. ஆனால் அவற்றை வழங்க இடையூறாகி நிற்கின்றது இன்றைய கொரோனா நிலைமை.

தற்போதய சூழ்நிலையில் நிகழ்நிலைக் கற்றலின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. எதையும் கற்காமல் வெறுமையாக வீட்டில் இருப்பதைவிட, ஏதாவது விடயங்களைக் கற்க, மீட்க இப்பயிற்சி உதவுகின்றது.

ஆனாலும் ஒவ்வொன்றுக்குள்ளும் சாதக, பாத இடர்கள் காணப்படுகின்றன. அவற்றை நோக்கிய சில பார்வையே இது.

சுயமான கற்றல் எம் மாணவரிடம் காணப்படுகின்றதோ, அவர் சிறந்த ஆற்றல் உள்ளவராகக் காணப்படுகின்றார். ஆனால் இன்றைய கற்றல் அவதானிப்பில் சில மாணவர் சுயகற்றலில் ஆர்வமற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

வகுப்பறையில் எப்படித்தான் கற்பித்தாலும், சில மாணவர்களின் கவனக் குவிப்பு கற்றலை விட்டு விலகி  நிற்பதை ஆசிரியர்கள் மறுக்க முடியாது.

பரீட்சையை மையப்படுத்திய இன்றைய கல்விக் கட்டமைப்பில், சுயகற்றல் திறனை மேம்படுத்துகின்ற பயிற்சிகள், மொடியூல்களை வழங்கினாலும்கூட சில மாணவர்கள் அதை முயற்சிப்பதாக இல்லை. 

அந்த சில மாணவர்களைத் தண்டிப்பதால் பயனில்லை. உணர்வுபூர்வமாக சிந்திக்க வைக்க வேண்டும். இவ்வாறான சிந்தனை மாற்றங்களே பெரிதும் பயனடைகின்றன.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் இழக்கின்ற கல்வியை தக்க வைக்க நிகழ்நிலைக் கற்றல் பாடசாலைகளால் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் இம்முயற்சி எதிர்பார்க்கின்ற கற்றல் விளைவைத் தருமா எனச் சிந்திக்கையில் சிறிய பாடசாலைகளில் பல இடையூறுகள் காணப்படுகின்றன.

தெரிந்த அளவில் அவற்றைப் பட்டியல்படுத்துகின்றேன்.

வயதான ஓய்வு நிலையை நெருங்கிய சில ஆசிரியர்களும், தகவல் தொழினுட்ப அறிவும், ஆற்றலும் கொண்டிராத சில ஆசிரியர்களும் இன்னும் நிகழ்நிலை கற்பித்தலை இயக்குவது தொடர்பான அறிவைப்  பெற்றுக் கொள்ளக் காட்டுகின்ற ஆர்வம் குறைவு என்றே சொல்ல வேண்டும்.  அவர்களின் வயது, மனநிலை, சூழல் போன்ற காரணங்களால் இத்தொய்வு ஏற்படலாம். 

ஆனாலும் 2023 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய புதிய கல்விச் சீர்திருத்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகையில், இத்தகைய தகவல் தொழினுட்ப ஆற்றல் கொண்டிராத ஆசிரியர்களை ஆசிரியர்த் தொழில் நிராகரித்து விடும் என்பது கசப்பான உண்மைதான்.  

அதிகளவிலான வறுமைப்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில், மாணவர்களிடம் மேம்படுத்தப்பட்ட தொலைபேசி வசதிகளோ இணைய வசதிகளோ காணப்படவில்லை. அவர்கள் தமது பெற்றோரை வற்புறுத்தும்போது தமது வயிற்றைக் கட்டியோ, கடன்பெற்றோ எப்படியோ தொலைபேசி வாங்கிக் கொடுக்கின்றார்கள். ஆனால் அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படுகின்ற தொலைபேசி எதிர்பார்த்த கல்வித் தேவைக்கு மாத்திரமா பயன்படுத்தப்படுகின்றது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகின்றது.

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் இத்தகைய தேவைக்காக வாங்கப்பட்ட தொலைபேசியில் அம்மாணவியின் விதவிதமான புகைப்படங்கள் ஆக்கிரமித்திருந்தன.

மேலும் நிகழ்நிலைக் கற்றல் இணையத் தொடர்புக்கு தரவு அவசியம். இதற்கான பணம் வறுமைப்பட்ட பெற்றோரின் கடின உழைப்பிலிருந்தே செலவழிக்கப்படுகின்றது.

அன்றொரு மதியப் பொழுது. கொமினிகேசன் ஒன்றில் சற்று சனக் கூட்டம். ஒரு கூலித் தொழிலாளி. வியர்வை வடிய விரைந்து வருகின்றார். அவரால் மூச்சுக் கூட இயல்பாக விடமுடியவில்லை.

'மகள் ஆன்லைன் கிளாஸில நிற்கிறா. கெதியா இந்த நம்பருக்கு ரீலோட் பண்ணுங்க'

அவரின் துடிப்பு அப்பிள்ளைக்கு விளங்கியிருக்குமா? தனது ஏழ்மை பிள்ளையின் கல்வியைப் பாதிக்கக்கூடாது என தனது தொழிலில் இருந்து பாதியில் ஓடி வந்து கற்றலைப் பெற உதவுகின்ற இத்தந்தையைப் போல் பலர் உள்ளனர்.

இன்னுமொருநாள் ஒரு வீட்டிலுள்ள தரம் 7 கற்கின்ற மாணவியின் அழுகுரல் வீதிப் பரப்பில் தெறிக்கின்றது. தாயின் ஆவேசக் கத்தலும், அடியும் அப்பிள்ளையின் கதறலுக்கு காரணமாக இருக்கலாம். தனியார் கல்வி நிலைய நிகழ்நிலையில் பங்கேற்காமல் தூங்கியதற்கான காரணமாகவே அப்பிள்ளை அத்தண்டணையைப் பெற்றிருக்கின்றார்.

கற்றலில் ஒரு பிள்ளையை மற்றைய பிள்ளையுடன் ஒப்பிடாமல் இருக்கவே மதிப்பீடானது கணிப்பீடாக மாறியது. ஆனாலும் வீட்டில் பெற்றோர் தம் பிள்ளையை அடுத்த பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற அவலநிலை இன்னும் மாறவேயில்லை.

மேலும் வீடுகளில் இருக்கின்றபோது, இக்கற்றல் நடைபெறுகையில் வீட்டின் நிலவரம் மாணவர்களின் சிந்தனைகளைக் குழப்பி  மனதை கற்கும் விடயத்திலிருந்து திசை திருப்பி விடுகின்றது.

ஒரு ஆசிரியை தனது அனுபவத்தை பின்வருமாறு கூறுகின்றார்.

'நான் பாடம் எடுக்கையில் மாணவர்களின் முகத்தைப் பார்த்துக் கற்பிக்கவும் பாடத்தில் கவனத்தை நிலைப்படுத்தி வைக்கவும் கேமராவை இயக்கச் சொன்னேன். ஒரு மாணவன் இயக்கியபோது அவனுக்கருகில் அவனது குடிகாரத் தந்தை மேல்சட்டை இன்றி நிலத்தில் படுத்திருந்தார். அவரின் அருகில் உணவுகள் சிதறிக் கிடந்தன. அந்த மாணவனின் சங்கடத்தை நான் அறிந்து, கேமராவை நிறுத்தச் சொன்னோன்" என்றார். 

இந்நிலைதான் பல இடங்களில் தொடர்கின்றது. வசதியற்ற குடும்பங்கள். சிறு வீட்டுக் கட்டமைப்பு. நடப்பது எல்லாம் வெளிப்படும் நிலை. அவர்கள் கதைக்கின்ற ஒலிகள் வேறு குழப்பும். மாணவர்களின் கேமரா, மைக் இவற்றை நிறுத்தி கற்பித்தால் அது சுவாரஸியமற்ற உயிர்ப்பற்ற ஒருபக்கக் கலந்துரையாடலாகவே இருக்கும்.

இன்னுமொரு ஆசிரியர் தன் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்தார்

"ஒரு வகுப்பில் முப்பத்தைந்து மாணவர்கள். வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள் சராசரியாக ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் கற்பிக்கப்படுகிறார்கள். இன்று வரும் குழந்தை நாளை இல்லை. சில குழந்தைகள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பார்க்கிறார்கள் " என்றார்.

இன்னுமொரு ஆசிரியரோ தன் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்தார்.

"பாடம் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் தறுவாயில் ஒரு மாணவி இணைந்தார். காரணம் கேட்டபோது புதிய தரவு அட்டை வாங்கச் சென்ற அம்மா இப்போதுதான் வந்தார்" என்றாள். 

சராசரி வாழ்க்கைநிலைக் குடும்பங்களின் நிலை இதுதான்.

இன்னுமொரு அனுபவம் இவ்வாறு பகிரப்படுகின்றது.

கற்பித்துக் கொண்டிருக்கையில் குறுஞ்செய்தியொன்று....

"மிஸ் எனது தரவு இன்னும் சிறிய நேரத்தில் முடியப் போகின்றது. நீங்கள் தொடர்ந்து கற்பிப்பீர்களா?"

என்ற ஆதங்கத்தினுள் இப்பிள்ளையின் கற்கும் ஆர்வம் தொக்கி நின்றது.

இன்னுமொருவரின் அனுபவமிது

"தொடர்ச்சியான பாடத்தில் பங்கேற்காத ஒரு மகனை கடைசி நாள் அழைத்தேன் ..

மகனே, நீங்கள் ஏன் வகுப்புகளுக்கு வரவில்லை?"

"எனக்கு தொலைபேசி  இல்லை மிஸ். அப்பாவுக்கு ஒரு சிறிய தொலைபேசி உள்ளது .அதிலிருந்து பெரிதாக்க முடியாது மிஸ் .."

இவ்வாறாக பல அனுபவங்கள் அன்றாடம் ஆசிரியர் எதிர்நோக்க நேரிடுகின்றது.

மேலும் நிகழ்நிலைக் கற்பித்தல் நடைபெறுகையில், திடீரென மின்சாரம் நிறுத்தப்படுமானால், மாணவர்களின் மனநிலையும் பாதிக்கப்படும். கற்கின்ற விடயங்களின் தொடர்பு குழம்புகின்றபோது அப்பாடத்தின்மீதான விருப்பும் குறைந்து விடுகின்றது.

இவ்வாறான கற்றலில் சிறிது இடைவேளை காணப்படுகின்றபோது, மாணவர்கள் தொலைபேசி இணையங்களில் வேறு தலைப்புக்களைப் பார்க்க விழைகின்றார்கள்.

பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களுக்காக பாட ஆசிரியர்கள் வாட்ஸ்அப், வைபர் குழுக்களை உருவாக்கி பாட விடயங்களை தரவேற்றம் செய்கையில், சில மாணவிகள் அதனை தமது பொழுதுபோக்கு விடயங்களைப் பகிரும் தளமாகவும் பயன்படுத்துகின்ற நிலை காணப்படுகின்றது.

தற்கால நவீனத்துவ நிலையில் நிகழ்நிலைக் கற்றலானது மேம்படுத்தப்பட்ட கல்வி அமைப்பினை உருவாக்கப் பயன்படக்கூடியது. எனவே கற்றல் சமூகமும், அதனைச் சூழ்ந்திருப்போரும் அதன் பயனை வினைத்திறனாக்கின்ற செயற்பாட்டிலீடுபட்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் நிச்சயமாக நாம் எதிர்பார்க்கின்ற கற்றல்பேறினை அடையலாம் என்பது வெள்ளிடைமலை.

ஜன்ஸி கபூர் -15.05.2021


To Build a Fire

 Jack London எழுதிய  To Build a Fire  எனும் ஆங்கிலக் கதை நிகழ்வினை எனது  பார்வையில் சுருக்கமாக இவ்வாறாக வடிவமைத்துள்ளேன்.

டு பில்ட் எ ஃபயர்' என்பது அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் சிறுகதை. இந்த கதையின் இரண்டு பதிப்புகள் உள்ளன. முதல் பதிப்பு 1902 இலும் மற்றொன்று 1908 இலும் வெளியிடப்பட்டன.  இக் கதை 1908 ஆம் ஆண்டுக்குரியது

------------------------------------------------------------------- 

பெயரிடப்படாத ஆண் கதாநாயகன் யூகோன் பிராந்தியத்தின் சப்ஜெரோ போரியல் காட்டில் இறங்குகிறார். அவரை தொடர்ந்து வருகின்ற ஒரு பூர்வீக நாய் நண்பர்களைப் பார்ப்பதற்காக அப் பாதையில் செல்கிறது.   சல்பர் க்ரீக்கிலிருந்து ஒரு வயதான மனிதரின் எச்சரிக்கைகளை புறக்கணித்து  கடுமையான குளிரில் தனியாக நடைபயணம் மேற்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இக்கதை விளக்குகின்றது ஈற்றில்  கதாநாயகன் மரணத்திற்குள் உறைகிறார்.

தொடர்ந்து வாசியுங்கள் 💓💓💓💓💓💓 

------------------------------------------------------------------ 

 பகல் நேரம், சாம்பல் பூத்து அதிக குளிரால் நிரம்பியிருந்தது.

அந்த பெயரிடப்படாத மனிதர் பிரதான யூகோன் பாதையிலிருந்து விலகி, யூகோன் ஆற்றின் எல்லையில் உள்ள காடுகளின் வழியாக,  வெப்பநிலை −75 ° F (−59 ° C) ஆக உள்ள  நிலைமைகளில் எச்சரிக்கைகளை புறக்கணித்து ஒரு பெரிய உமி  நாயுடன் பயணித்தார். 

 மங்கலான சிறிய பாதையொன்று கிழக்கு நோக்கியதாகக் காணப்பட்டது. உயரமான தரைப் பகுதியில் ஏறினார். அதிகம் மேலே ஏறியதில் மூச்சு வாங்கியது. 

தனது கடிகாரத்தைப் பார்த்தார்.

நேரம் 9 ஐக் காட்டியது.

மேகங்கள் காணப்படாத தெளிவான வானில் சூரியன் காணப்படாமையினால் சற்று இருளாகக் காணப்பட்டது. அந்த நுட்பமான இருள் அவருக்குப் பழக்கப்படாதது.

யூகோன் பாதை பனித்துகள்களால் நிரம்பியிருந்தது. வெள்ளைத் துகள்களின் மத்தியில் கூந்தலைப் போன்று அந்த வீதி தென்பட்டது. அந்தப் பயணப் பாதையின் முடிவில் ஏதோ ஒரு வெளிச்சப் பகுதி இருக்க வேண்டுமென அவரின் உள்ளுணர்வு சொல்லியது. அந்த ஒளிப்பகுதி காணப்படுகின்ற தீவை அடைய இன்னும் சிறு தூரம் ஏற வேண்டியிருந்தது.

சூரியனைக் காணாத இந்தக் குளிர் அவருக்குப் புதிது என்பதால் பூஜ்ஜியத்திற்கு கீழான ஐம்பது பாகை உறைபனி அவருக்கு சங்கடமாக இருந்தது. அது கையுறைகள், காது-மடிப்புகள், சூடான மொக்கசின்கள் மற்றும் அடர்த்தியான சாக்ஸ் ஆகியவற்றால் பாதுகாக்கப்பட வேண்டும்.  அது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. பனிக்குள் துப்பினார். அது காற்றில் வெடித்தது. அதனைப் பார்த்து திடுக்கிட்டார்.

உண்மையில் வெப்பம் அல்லது குளிரின் குறித்த வரையறைக்குள் வாழ வேண்டுமென்ற வறையறை மனிதனின் பலகீனமாகவே காணப்படுகின்றது.  

அவர் கைக்குட்டையில் போர்த்தப்பட்ட மதிய உணவைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்லவில்லை. 

அவர் ஆறு மணிக்கு முகாமுக்கு வருவார்.  அங்கே சிறுவர்கள் இருப்பார்கள், சூடான இரவு, உணவு நெருப்புக் கோளத்தின் மத்தியில் தயாராக இருக்கும்.என நினைத்தார்.  

அவரின் குதிகால்கள் சோர்ந்தன. உறைபனியின் தாக்கத்தினைக் குறைக்க கன்ன எலும்புகளை கைகளால் நன்றாகத் தேய்த்து உஷ்ணமூட்டினார். 

ஒளியைக் காணாத, நீண்ட பயணம்   இனம்புரியாத புதிய அனுபவமாகவே இருந்தது. இருந்தும் பயமும் படர்ந்தது. அந்த இருளின் குளிர்மைக்குள் மனம் நெருப்பை விரும்பியது. 

அவருடன் பயணப்பட்ட நாயும் சோர்வடைந்தது. அச்சுறுத்தலான பயத்தை அனுபவித்தது. நாய்  நெருப்பை விரும்பியது. இல்லையெனில் பனியின் கீழ் புதைத்து அதன் வெப்பத்தை காற்றிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அதன் சுவாசத்தின் உறைந்த ஈரப்பதம், அதன் ரோமங்களில் உறைபனி      குடியேறியது. அதன் முகவாய் மற்றும் கண்கள் அதன் சுவாசத்தால் வெண்மையாக்கப்பட்டன.

நாய்க்கு தெர்மோமீட்டர்கள் பற்றி எதுவும் தெரியாது. அதன் மூளையில் மனிதனின் மூளையில் இருப்பது போன்ற மிகக் குளிரான நிலை குறித்த கூர்மையான உணர்வு இல்லை. ஆனால் கடுமையான குளிரின் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கின்ற உள்ளுணர்வு இருந்தது. இத்தகைய பயமுறுத்தும் குளிரில் வெளிநாடு செல்வது நல்லதல்ல என்று   அறிந்திருந்தும்,  தன் நண்பர்களைச் சந்திக்க  தயக்கமின்றி நாய்   பின்தொடர்ந்து சென்றது.

அவரது   செந்நிறத் தாடிக்குள் பனித்துகள்கள் அப்பியிருந்தன. அவரது வாய் புகையிலையை மென்று கொண்டிருந்தது. 

நாய்க்கும் மனிதனுக்கும் இடையே மிகுந்த நெருக்கம் இருந்தது. அவர் நாயுடன் நீரோடை வழியாக நகர்ந்தார்.

இப்போது மணி பத்து.

அவர் செல்லவேண்டிய ஊருக்குப் போக இன்னும் பத்து கிலோ மீற்றரே காணப்பட்டது. அவர் பன்னிரண்டு மணிக்கு முட்கரண்டிக்கு வருவார் என்று கணக்கிட்டார். அவர் தனது மதிய உணவை அங்கே சாப்பிட முடிவு செய்தார்.

 அன்று மாலை ஆறு மணியளவில் தங்கள் முகாமில் வருங்காலக் குழுவை  ('சிறுவர்கள்') அடைவதே அவரது குறிக்கோள். 

ஆறு மணிக்கு அவர் சிறுவர்களுடன் முகாமில் இருப்பார் என்பதைத் தவிர வேறு எதுவும் யோசிக்கவில்லை. பேச யாரும் இல்லை. இருந்திருந்தாலும்  அவரது வாயில் பனி முகவாய் இருப்பதால் பேச்சு சாத்தியமில்லை. அந்த ஆர்க்டிக் குளிர்காலத்தில் எந்த ஒரு சிற்றோடையிலும் தண்ணீர் இருக்க முடியாது. ஆனால் மலைப்பகுதிகளில் இருந்து குமிழ்ந்து, பனியின் அடியில் மற்றும் பனியின் மேல் ஓடும் நீரூற்றுகள் உள்ளன என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

உறைந்த சிற்றோடையின் போக்கை அவர்கள் பின்பற்றும்போது, ​​பனியால் மறைக்கப்பட்ட மெல்லிய பனியின் திட்டுகளைத் தவிர்க்க கவனமாக இருந்தார். 

அப்பனி அவரின் காலின் தோலை வெடிக்கச் செய்தது. காலை நீரோடையில் நனைத்து ஈரப்படுத்த நினைத்தார். ஆனால் அது பயணத்தைத் தாமதிக்கும் என்பதால் தயங்கினார். அவரின் இப்போதைய தேவை நெருப்பின் அருகாமையில் குளிர் காய்வதுதான். 

வழக்கமாக மறைக்கப்பட்ட குளங்களுக்கு மேலே பனி,  ஒரு மூழ்கிய  மிட்டாய் தோற்றத்தைக் கொண்டிருந்தது. அது ஆபத்தை விளம்பரப்படுத்தியது. 

நேரம் இப்போது பன்னிரெண்டு மணி

சூரியன் வெகு தொலைவில் இருந்தது. 

கை, கால் விரல்கள் விறைத்தன. உணர்விழந்த நிலை. மதிய உணவை உண்ண முயற்சித்தார். ஆனால் கையை வாயிற்கு கிட்டே கொண்டு செல்ல முடியவில்லை.

நெருப்பைப் பற்றாமல் மதிய உணவு உட்கொள்ள முயன்ற தனது முட்டாள்தனத்தை நினைத்துக் கொண்டார். 

அரை மணி நேரத்தில், ஒரு மரத்தின் கீழ் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுற்றியுள்ள தூரிகைக் குவியலிலிருந்து கிளைகளை இழுத்து தீப்பிழம்புகளுக்கு உணவளிதார். 

நெருப்பை மூட்டிய போது, உடலும் உள்ளமும் திருப்தியடைந்தது. தனது கையுறைகளை நீக்கியும் தொப்பியைக் கழற்றி காது மடிப்புக்களை வெளியே இழுத்தும் நன்றாக உஷ்ணமுட்டியபோது மனம் சந்தோசப்பட்டது. நாய் நெருப்பில் திருப்தி அடைந்தது. 

இந்த செயலின்  இறுதியில் கிளைகளில் இருந்து ஒரு பெரிய பனி கீழே விழுந்து தீயை அணைக்க காரணமாகியது. 

பின்னர் மீள புகையிலையை மென்றவாறு பயணத்தைத் தொடர்ந்தார். வழியில் பனி அவரின் பயணத்தை தடைப்படுத்தவில்லை. உரிய நேரத்திற்கு சென்றடையலாம் எண்ணிப் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஈரமான சுவாசமும், பனித்துகள்களால் மூடப்பட்ட வெண்ணிற மீசையும் அவரைச் சங்கடப்படுத்தியது. திடீரென முழங்கால்கள் பனிக்குள் அமிழத் தொடங்கின. விரைவாக  உணர்வை இழக்கத் தொடங்கி, கடுமையான குளிரால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து பற்றிய எச்சரிக்கைகளைப் புரிந்து கொண்டார். 

இப்போது பூஜ்ஜியத்துக்கு கீழே வெப்பநிலை எழுபது. ஆத்திரப்பட்டார். தனது அதிஷ்டத்தை எண்ணிக் கவலைப்பட்டார். தன்னைச் சூழ்கின்ற ஆபத்தினையும் உணர்ந்தார். 

விரைவாகவும் அதே நேரம் பொறுமையாகவும் நிதானமாகவும் இயங்கினார்.

ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படப் போகின்றதே. எப்படியாவது மீண்டும் நெருப்பை மூட்டி குளிர் காய வேண்டும்.

மற்றொரு நெருப்பை எரிக்க,  சுற்றும் முற்றும் நோக்கினார். அருகில் கிடந்த உலர்ந்த மரக்கிளைகள், தடிகளைக் கொண்டு தீமூட்டியபோது அச்சுடர் ஒளிர்ந்தது. 

அவரின் கால்கள் ஈரமாக இருந்தன.  பனிக்குள் கால்கள் ஒட்டிக் கொள்ளுமே. உறைபனிக்குள் விரைவாக ஓடமுடியாது. மனம் பலவற்றை நினைத்துக் கவலைப்பட்டது.

 மீண்டும் தீமூட்ட வேண்டும். மனம் பரபரத்தது. கைகளில் உணர்வின்மை காரணமாக தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.  

ஆபத்தான இவ்வாறான பயணங்களுக்கு தனியே செல்வது தவறு என்பதை உணர்ந்தார். 

மற்றொரு நெருப்பைத் தொடங்க எந்த வழியும் இல்லாமல், நாயைக் கொன்று அதன் உடல் வெப்பத்தை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தார்.  

ஆனால் ...........

அவர் கைகள் மிகவும் கடினமானவை. அவரால் விலங்கின் கழுத்தை நெரிக்கவோ அல்லது தொண்டையை வெட்ட கத்தியை எடுக்கவோ முடியாது. இறுதியாக, அவர் முகாமை நோக்கி ஓடுவதன் மூலம் தனது சுழற்சியை மீட்டெடுக்க முயற்சித்தார். 

ஆனால் தடுமாறி பனியில் பல முறை விழுந்தார்.

இந்தப் பனிப் போராட்டத்தினிடையில் தொலைவில் சிறு புள்ளியாகத் தெரிந்தது அவர் செல்ல வேண்டிய பயணப்பாதை. 

ஆனால் குளிர் படிப்படியாக அவரின் மையப்பகுதியை உறைய வைத்தது.   கை, கால்கள் விறைத்தன. தரையின் தொடர்பறுந்த நிலை. உணர்ச்சியற்றுப் போனது உடல். இதயம் தனது துடிப்பினை இழந்து பலம் குன்றிப் போன பிரமை. 

 இறுதியில் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்துவிடுகிறார் . 

முகாமில் உணவு மற்றும் தங்குமிடம் கண்டுபிடிக்க நாய் இருட்டிற்குப் பிறகு உடலை விட்டு வெளியேறுகிறது.

அவர் தனது உடலைக் காணும்போது 'சிறுவர்களுடன்' நிற்பதை கற்பனை செய்கிறார்.

இவ்வாறாக நீண்டு செல்கின்றது இக்கதை. வித்தியாசமான நகர்வோட்டம். பனிப் பயணப்பாதையில் ஏற்பட்ட சிரமங்கள் இங்கே உயிரோட்டம் பெறுகின்றன.  

To Build a Fire எனும் ஆங்கில கதையினை வாசித்தால் எழுத்தாளரின் முழுமையான உணர்வின் விம்பங்களை நீங்களும் ரசிக்க முடியும்.

ஆங்கிலக் கதைகளில் வித்தியாசமான சுவையொன்று இருப்பதை உணர முடிகின்றது. வாசிப்பின் அனுபவங்கள் அதிகரிக்கின்றபோது நாமும் தரமான ஆக்கங்களைப் படைக்க முடிகின்றது.

ஜன்ஸி கபூர் - 15.5.2021


2021/05/14

திரு ஸ்மித்தின் புதிய மூக்கு (Mr. Smith's new nose)

 

கிறீஸ் ரோஸ் என்பவர் எழுதிய திரு ஸ்மித்தின் புதிய மூக்கு  எனும் ஆங்கில சிறுகதையின் தமிழாக்கம் என் பார்வையில்

இது பிரிட்டிஸ் கவுன்சில் பாட நூலில் உள்ள சிறுகதைதான் ஆனாலும் கதையின் போக்கு நம்மை சிந்திக்க வைக்கின்றது.  

----------------------------------------------------------------------------------

22 ஆம் நூற்றாண்டு காலத்தில் மக்கள் தமது உடல்களை தாம் விரும்பியவாறு புதிய தொழில்நுட்பங்கள் மூலம், வடிவமைத்தால் எவ்வாறு அது அமையும் என்பதை இச்சிறுகதை சுவைபட முன்வைக்கின்றது.

இதோ...கதையின் நகர்வு. சுவையுங்கள். என்னுடன் சேர்ந்து கதை வரிகளை இரசியுங்கள்.

நாகரீக மோகத்தில் நமது சுயத்தை நாம் இழந்து படுகின்ற அவஸ்தையை இக்கதையின் ஒவ்வொரு வரிகளிலும் உணரலாம்

திரு ஸ்மித் எனும் நமது ஹீரோ தனது பெரிய மூக்கினை மாற்றி, அழகான மூக்கு ஒன்றினைக் கொள்வனவு செய்ய கடைக்குப் போகின்றார். கடை உதவியாளரின் இரசனையுடன் சேர்ந்து மிகவும் நாகரீகமானதும், தனக்குப் பொருத்தமானதுமான சிறிய மூக்கினைக் கொள்வனவு செய்கின்றார்.

தனது மனைவியிடம் அதனை தொலைபேசி வீடியோ கால் மூலமாகக் காட்டி "பிடிக்கின்றதா" என சம்மதமும் பெறுகின்றார்.

"நூறு ஆண்டுகளுக்கு முன்பு,  உடலை மாற்றுவது சாத்தியமில்லை. பழைய கால 'பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை' இருந்தது. ஆனால் அது விலை உயர்ந்தது. வேதனையானது மற்றும் ஆபத்தானது. அச்சச்சோ! இப்போது  எங்கள் 22 ஆம் நூற்றாண்டின் மரபணு பொறியியலுக்கு நன்றி. நாம் விரும்பும் போது நம் உடலை மாற்றலாம்!"

என கண்ணாடியில் இருந்த தனது புதிய சிறிய மூக்கைப் பார்த்து, எவ்வளவு நாகரீகமாக இருக்கிறார் என்று யோசித்தார். 

அவர் தனது புதிய மூக்கில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். 

ஆனால் இப்போது ஒரு பிரச்சனை ?

மூக்கிற்குப் பொருத்தமான தலைமுடி வேண்டுமே.!

இணையத்தில் அதனைத் தேடிக் கிடைக்காததால் நேரடியாக கொள்வனவு செய்வதற்காக குறித்த கடைக்குச் செல்கின்றார். 

அவரது பழைய சாம்பல் நிறமான முடியை நீக்கி, இளமையாகக் காட்சியளிக்க வைக்கின்ற, குறுகிய, செந்நிற, சுருண்ட முடிகளை விரும்பி கொள்வனவு செய்தபோது, கடை உதவியாளர்கள் புதிய காதுகளைப் பற்றிச் சொன்னார்.

ஆசை யாரைத் தான் விட்டது. தனது மூக்கு, தலைமுடிக்குப் பொருத்தமான காதுகளைத் தெரிவு செய்ய விரும்பினார். கடை உதவியாளரின் உதவியுடன் இரண்டு காதுகளையும் கொள்வனவு செய்து வெளியேறினார்.

பின்னர் அவரது ஆசைகளின் பட்டியல் நீண்டது. அவரது புதிய உடலில்   ஆர்வம் வளரத் தொடங்கியது.

அவர் புதிய நாகரீகமான, பச்சை  கண்கள்,   புதிய கைகள்,  புதிய முழங்கால்கள் மற்றும் புதிய கால்களை வாங்கினார். 

திரு ஸ்மித்தின் புதிய கால்கள் அவரது பழைய கால்களைப் போல மோசமாக இல்லை. என திருமதி ஸ்மித்  மகிழ்ச்சி  அடைந்தார்.

திரு ஸ்மித் புது வடிவம் பெற்று நாகரீக மனிதன் ஆனார். அது அவருக்குப் பெருமையாக இருந்தது.

ஆனால் மறுநாள் காலை விடிந்ததும் ஸ்மித்தின் மூக்கு இயங்கவில்லை. மனைவியிடம் அவர் இதுபற்றிக் கூறியபோது அவர்;

'ஒருவேளை உங்களுக்கு சளி வந்திருக்கலாம்' என்று   பரிந்துரைத்தார்.

'அது சாத்தியமில்லை! இது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பாடிகோ மூக்கு! சளி வராது! ' என ஸ்மித் கூறினார். 

ஸ்மித்தால் எதனையும் மணக்க முடியவில்லை. எனவே அதே கடையில் இயங்கக்கூடிய இன்னுமொரு மூக்கினை கொள்வனவு செய்ய மீண்டும் அதே கடைக்குச் சென்றார்.

ஆனால் கடை உதவியாளர், நாகரீகமான சிறிய மூக்குகளை ஏற்கனவே வாங்கி விட்டீர்களே எனக் கூறினான். 

 'எனக்கு ஒரு புதிய மூக்கு வேண்டும். ஏனெனில் இது வேலை செய்யாது!'

'அது சாத்தியமற்றது' என்று கடை உதவியாளர் கூறினார். 

'உங்களிடம் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பாடிகோ மூக்கு உள்ளது. அது தவறாக போக முடியாது! '

'ஆனால் அது தவறாகிவிட்டது' என்று திரு ஸ்மித் பதிலளித்தார். 

' என்னால் எதையும் மணக்க முடியாது.' என்றார்.

'மிஸ்டர் ஸ்மித் என்ன செய்ய உங்கள் மூக்கைப் பயன்படுத்தினீர்கள்?' 

கடை உதவியாளர் கேட்டபோது சுவாசிக்கவும், வாசனைக்கும் பயன்படுத்தியதாகக் கூறினார். 

'மிஸ்டர் ஸ்மித், நீங்கள் உங்கள் மூக்கை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், அது சரியாக இயங்காது.' எனக் கடைக்காரர் கூறியபோது,

'அது அபத்தமானது!' என திரு. ஸ்மித் கத்தினார். 

'எனக்கு என் பணம் திரும்ப வேண்டும்! எனக்கு பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்! ' என்றார். 

ஆனால் கடைக்காரரோ ...............................

'திரு ஸ்மித், நாங்கள் பணத்தைத் திரும்ப  வழங்க மாட்டோம்  என்றார்.   

திரு ஸ்மித் மிகவும் கோபமடைந்தார். அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் கடையிலிருந்து வெளியேறினார். எதுவும் பேசவில்லை.

ஆனால் இப்போது அவருக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது. 

பயனற்ற மூக்கு. 

நாகரீகம் என நினைத்தது பயனற்றுப் போனது.  

துரதிர்ஷ்டவசமாக, அவரது பிரச்சினைகள் வளர ஆரம்பித்தன. மறுநாள் காலையில் அவர் எழுந்தபோது அவருக்கு எதுவும் கேட்க முடியவில்லை. பின்னர் அவரது புதிய இளஞ்சிவப்பு முடி நரைத்தது. புதிய முழங்கால்கள் நகரவில்லை. அவரது அசாதாரண பச்சைக் கண்களால் ஒரு விஷயத்தைப் பார்க்க முடியவில்லை. விரல்கள் ஒவ்வொன்றாக விழுந்தன. நடக்கவும் முடியவில்லை.

இறுதியில்  திருமதி ஸ்மித் அவரை அவர்களின் ஏர்காரில் வைத்து அவற்றைக் கொள்வனவு செய்த கடைக்குப் போனார்.  

'குட் மார்னிங், மிஸ்டர் ஸ்மித்"  கடை உதவியாளர் கூறினார்.

 'இன்று நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்? 

என்றபோது அவரது மனைவியோ "இன்று அவர் எதையும் புதிதாக விரும்ப மாட்டார். ஆனாலும் அவர் தனது பழைய உடலை மீளப் பெற விரும்புகின்றார்" எனப் பதிலளித்தார். 

'திருமதி ஸ்மித், நாங்கள் பணத்தை  திரும்ப வழங்க மாட்டோம்" எனக் கடைக்காரர் கூற,   

'நான் பணத்தைத் திரும்பப் பெற விரும்பவில்லை' 

என்று திருமதி ஸ்மித் விளக்கினார்.

 'என் கணவரின் அசல் உடலை மீண்டும் விரும்புகிறேன்! இந்த புதியதை விட எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது! ' என்றபோது,

 கடை உதவியாளரோ,

  'நாங்கள் சுற்றுச்சூழல் நட்பு நிறுவனம். எங்கள் பழைய உடல்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. ' என்றார்

ஆனால் திருமதி ஸ்மித்தோ தனது கணவருக்காக கடை உதவியாளரிடம் மீண்டும் வாதாடினார்

'ஆனால் நீங்கள் விற்ற புதிய உடல் பாகங்கள் வேலை செய்யாது! அவர் இப்போது என்ன செய்ய முடியும்? ' என்றபோது, 

கடை உரிமையாளரோ, 

'அவர் மறுசீரமைக்கப்பட்ட உடலை வாங்க முடியும்.' என்றார்.

''மறுசீரமைக்கப்பட்ட' உடல் என்றால் என்ன?' என அவர் மனைவி மீளக் கேட்டபோது, 

கடை உதவியாளர் கணனி உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட ஸ்மித்தின் உடலைக் காட்டினார்.

  "அது மிகவும் பழக்கமான உடல். பெரிய மூக்கு மற்றும் நரை முடி"

திருமதி ஸ்மித்    "அது என் கணவர்!" எனக்  கத்தினார். '

அதுதான் அசல் மிஸ்டர் ஸ்மித்!' கடை உரிமையாளரும் அதனை அங்கீகரித்தார்.

'தயவுசெய்து அவர் தனது பழைய உடலை மீண்டும் வைத்திருக்க முடியுமா?' என திருமதி ஸ்மித் கேட்க அது 100,000 யூரோ எனப் பதிலளித்தார்.

ஆனால் திருமதி ஸ்மித் விலை அதிகமாக இருக்கின்றது என முணுமுணுத்தாலும் மீண்டும்,  அதனை வாங்கினார்.  

 திரு ஸ்மித் தனது சொந்த உடலைத் திரும்பப் பெற்றார். 

திருமதி ஸ்மித் அவரை விமானக் காரில் வீட்டிற்கு பறக்கவிட்டார்.

'நான் மீண்டும் நானே!'   ஸ்மித் கத்த,  

  திருமதி ஸ்மிதோ 'நீங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளீர்கள்.' என்றாள். ஏனெனில் உங்களிடம் தற்போது பயனுள்ள புதிய மூளை வந்துள்ளது என்றாள்.

ஸ்மித்தும் புன்னகையுடன் 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன், அன்பே,'  என்றார்

கிறிஸ் ரோஸ் எழுதிய இக்கதையை வாசித்தபோது, இதென்ன மூக்கு பற்றிய வித்தியாசமான தலைப்பாக இருக்கின்றதே என யோசித்தேன். ஆனாலும் கதையை முழுமையாக உள்வாங்கிய பின்னர், அதில் இழைக்கப்பட்டிருக்கின்ற படிப்பினை பெரிதாக இருக்கின்றது.

அலங்காரமின்றி எளிமையாக நகரும் இக்கதை எனக்குப் பிடித்திருக்கின்றது. உங்களுக்கு. ...............?

ஜன்ஸி கபூர் -14.05.2021


 

மன(ரத்)தின் வலி

 

இந்த மரத்திற்குள்ளும் வலி இருக்கின்றது. அந்த வலியினை என் உணர்வுகளால் உள்வாங்கியதால் அதனை இங்கு பகிர்கின்றேன்.

அன்று...........வைகாசி............முதல் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை

வீட்டின் கொல்லைப்புற நுழைவாயிலில், இந்த ஐந்து வருட தென்னை மரம் வரவேற்பாளர்போல காற்றில் அசைந்து கொண்டிருக்கும். திடீரென ஒரு நாள் அந்த மரத்தின் அருகில் குளவிக் கூடொன்று தொங்குவதைக் கண்டேன். அது சற்று பெருத்துக் காணப்பட்டதால், அம்மரத்தைக் கடக்கும்போதெல்லாம் குளவி பற்றிய கிலி பற்றிப் பிடித்துக் கொள்ளும்.

இப்போதுள்ள பிரச்சினை அக்குளவிக் கூட்டைக் கலைப்பது எப்படி?

ஒருவாறு இப்பிரச்சினைக்கான தீர்வாக பக்கத்து வீட்டு ஐயாவைத் தெரிவு செய்தோம். அவர்தான் எங்கள் வீட்டு சிறு சிறு தோட்ட வேலைகள் செய்து தருவார்.  அதற்கேற்ற கூலியைக் கொடுப்போம். 

ஐந்து வருடங்களுக்கு முன்னர் எங்க வாப்பா அவர் மூலமாகத்தான் அந்தத் தென்னை மரத்தை அவ்விடத்தில் நட்டியிருந்தார். 

அந்த ஐயா குடிகாரர் என்பதால் வேலைக்கு அவராக வரும்வரை  காத்திருப்போம்.

ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அந்த ஐயா குளவிக்கூடு உடைப்பதாக அன்றுதான் வந்திருந்தார்.  குளவிக்கூடெல்லாம் மாலையில்தான் கலைக்க வேண்டும் என்ற தோரணையில் ஆறு மணிக்கு பந்தத்துடன் ஆயத்தமாக வந்திருந்தார்.  

ஆனாலும் அவரிடம் சாராய நொடி வீசவே வேண்டாம் என்றோம்.

ஆனாலும் அவர் வலுக்கட்டாயமாக குளவிக் கூட்டை கலைக்கின்ற வேலையில் இறங்கினார்.

உயரமான தென்னை மரத்திலுள்ள குளவிக்கூடினை விரட்ட சிறு தடியினுள் தனது புது சேர்ட்டை சுற்றிக் கட்டியிருந்தார்.

"ஐயோ.........ஐயா.! இது உங்க புது சேர்ட் போல இருக்கு. கழற்றுங்கோ. உங்க மனுசி கண்டா எங்களைத்தான் ஏசுவா"

என்றவாறு பழைய துணி கொடுத்தோம். அதனைக் கழற்றி விட்டு நாங்கள் கொடுத்த தடியில் புதுத் துணியைச் சுற்றிக்கட்டி எரியூற்றினார்.

மெது மெதுவாக மரத்தை நோக்கி தீப்பந்தம் ஏற்றிய அவர் கைகள் உயர்ந்தபோது, 

குளவியும் கலையும் எனும் பீதியில் நாங்கள் மறைந்து கொண்டோம்.

சில நிமிடங்கள் சென்றன. ஆனால் குளவிகள் வெளியே பறப்பதாகக் தெரியவில்லை.

குளவிக்கூடு தொங்கிக் கொண்டிருக்கின்ற மரத்தை அண்ணார்ந்து பார்த்தேன்.

காற்றில் குளவிக்கூடு இன்னும் அசைந்து கொண்டுதான் இருந்தது. 

ஆனாலும் தென்னை மரத்தின் உச்சிப் பகுதியில் வேகமாக தீப்பந்தம் பரவிக் கொண்டிருந்தது.

"ஐயோ தென்னை மரம் எரியுதே ஐயா"     கத்தினேன்

சிரித்தார். 

"இல்ல ரீச்சர். அந்த நெருப்பில குளவி கலைஞ்சிடும்"

 என்றார் பொறுமையாக.

எனக்குள் ஆத்திரம் தலைக்கேறியது 

"தென்னை மரம் பற்றி எரியுது. உங்களுக்கு தெரியவில்லையா. முதலில் தண்ணீரை ஊற்றி அணையுங்கோ." 

எனது சப்தம் கேட்டு மச்சானும் அந்த இடத்திற்கு வரவே,

பெரிய போராட்டத்தின் பின்னர் நீர் ஊற்றி மரத்தின் தீயை அணைத்தோம். தீயில் தென்னை மரம் உஷ்ணமேறிய அந்த அரை மணித்தியாலம் எனக்குள் உயிர் பறிபோன உணர்வு.

இழப்புக்கள்தானே இருப்பின் அருமையை உணர்த்துகின்றன.

இன்னும் முதல் காயே அறுவடை செய்யப்படாத அந்த தென்னை மரம், தீப்பற்றி எரிகையில் நானே எரிவதைப் போன்ற உணர்வு. மனது முழுதும் வலி நிரம்பிக் காணப்பட்டது. தீக்காயங்களுடன் கீழே விழுந்த குறும்பைகளைக் கண்டதும் ஏதோ ஒரு வலி. வேதனையுடன் பொறுக்கிக் கொண்டேன்.

நல்லவேளை மரம் பெரியளவில் சேதப்படவில்லை. ஆனாலும் அதனின் தாக்கம் எதிர்காலத்தில்தான் வெளிப்படும்.

தீயுடன் தென்னை மரம் போராடிய அந்தக் கணங்கள் இன்னும் என்னுள் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

ஜன்ஸி கபூர் - 14.05.2021


இணைந்த கரங்கள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். 

உண்மையில் ஒவ்வொரு ஆசானும் தான் உருவாக்குகின்ற மாணவர்களின் உயர்வான முன்னேற்றம் கண்டு தனக்குள் பெருமை கொள்கின்ற தாய்மைக் குணத்தை தமது  உணர்வுக்குள் தேக்கி வைத்திருக்கின்றார்கள்   என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இச்சம்பவம் முகநூல் வாயிலாக அறியக் கிடைத்த விடயம். இச்சம்பவக் கருவினை எனது பார்வையில் பதிவிட்டுள்ளேன்.  

அது......

கேரளா மல்லாபுரம் புகையிரத நிலையம்.

பரபரப்பு மிக்க அந்த பொழுதொன்றில் அவளும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றாள். எதிரே வயதானவர் ஒருவர் அவள் கவனத்தை சற்றுக் கலைக்க நிதானித்து நிற்கின்றாள்.

'அம்மா...தாயீ...ஏதாவது ...தாம்மா...பசிக்குது'

அந்தக் குரல் எங்கோ........எப்போதோ கேட்ட குரல்...

யோசித்தாள். தனது கணித ஆசிரியையின் சாயல். தனது கணித ஆசிரியர் இரயில் நிலையத்தின் அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை அவளால் நம்ப முடியவில்லை.

அவரா....

இருக்காது. அந்த அன்பும் நொடிப் பொழுதில் தோன்றி மறைந்தது.

அந்தக் குழப்பம் வீடுவரை தொடர்ந்தது.

வீட்டுக்குச் சென்றதும் தனது பாடசாலைப் பருவ புகைப்படங்களை ஆராய்ந்தாள். அதே முகம்தான்.. இப்போது வறுமையும் முதுமையும் முழுமையாக நிரம்பியிருந்தன.

மறுநாள் அவரைத் தேடி அதே புகைவண்டி நிலையம் சென்றாள் மாணவி.

ஆனால் அந்தப் பெண்ணால் மாணவியை அடையாளம் காணமுடியவில்லை. இருந்தும் தன்னைப் பற்றிய விபரங்களை மாணவியிடம் பகிர்ந்து கொண்டார்.

 "நான் ஓய்வு பெற்ற பிறகு எனது குழந்தைகள் என்னை  விட்டு விலகி  போய் விட்டாங்க. அவர்கள் எனது வாழ்வாதாரத்தைப் பற்றி எந்த வகையிலும் கவலைப்படவில்லை.   அதனாலேயே  நான் இந்த முடிவுக்கு வந்தேன்" என்றார்.

அதனைக் கேட்டதும் அம்மாணவியின் மனம் வருந்தியது. பின்னர் ஆசிரியரின் எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிடுவதற்காக தான் படித்த மற்ற எல்லா நண்பர்களையும் தொடர்பு கொண்டார். மேலும் அன்பான ஆசிரியருக்கு சுதந்திரமாக வாழ ஒரு சிறந்த இடத்தையும் தயார் செய்து, ஆசிரியரை தனது சொந்த தாய் போலவே நடத்தினார்.   

பெற்ற  பிள்ளைகள் கைவிட்டாலும்கூட கற்பித்த குழந்தைகள் அவர்களை விடவில்லை. 

இது ஆசிரியர்- மாணவர் தலைமுறையின் சிறப்பின் பிரதிபலிப்பாகும்.

தேவைப்படுகின்றபோது செய்கின்ற சின்னச் சின்ன உதவிகளுக்கான பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சிறு புள்ளிகள்தானே கோலங்களாகின்றன. அவ்வாறே பல தனிக் கரங்கள் ஒன்று சேர்கையில் வலுவான நம்பிக்கையை உருவாக்கக்கூடிய எதிர்காலங்கள் உருவாகின்றன.

ஜன்ஸி கபூர் - 14.05.2021


2021/05/11

உம்மா

 

தாயே

எனது கைவிரல்கள் தொட்டு நீங்கள் பழக்கிய வாழ்க்கைக் கோலச் சுவடுகளைப் பார்த்து இவ்வுலகம் பிரமித்து நிற்கின்றது.

பிறர் அறியாது என்னுள் முகிழ்த்த வலிகளை நீங்கள் இரகஸியமாக உங்கள் கண்ணீரால் பொறுக்கியெடுக்கையில், என் தாயின் சுவர்க்க நிழலின் அருகாமை என் வேதனைகளைக் குறைத்திருப்பதை நீங்கள் அறிவீர்களா?

என் ஏற்றத்தின் ஏணியான உங்கள் தாய்மையின் மானசீக ஆசிர்வாதமும் படைத்த வல்லோனின் அருளும் என் பயணப் பாதையை எவ்வித இடையூறுகளுக்கு மத்தியிலும் தொய்வின்றிக் கொண்டு செல்கின்றது.

தாயே....

உங்கள் அருகாமையுடன் நான் வாழ்கின்ற பிரமாண்டமான உலகம் அழகாக இருக்கின்றது. ஆறுதலாகவும் இருக்கின்றது.

நான் தோள் சாய்கின்ற உங்கள் மடியின் மானசீக விசாலம் யாருக்குப் புரியும்?

உங்கள் அன்பின் மொழியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

என் சாதனைகளின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் நீங்கள்தான் தன்னம்பிக்கையின் ஊற்று.

அன்னையர் தின வாழ்த்துக்களை என் அன்பின் மொழி கொண்டு வரைகின்றேன். இனித் தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு நாட்களும் உங்கள் ஆரோக்கியப் பேணுதலுடன் தொடரட்டும்.

அன்னையர் தின வாழ்த்துக்கள் உம்மா....

ஜன்ஸி கபூர் -09.05.2021


2021/05/09



 

கொவிட் தொற்றும் கர்ப்பிணித் தாய்மாரும்

இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வருகின்ற கொவிட் மூன்றாம் அலையின் பாதிப்பில் தற்போது கர்ப்பிணித் தாய்மாரும் உள்ளடங்கி வருகின்றனர். ஒருவர் மரணித்துள்ள நிலையில் 130 இற்கும் மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிசுவின் துடிப்பினை தன்னுள் ஏந்திக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு தாயும் கொரோனாவின் பிடியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய தேவைப்பாடு உள்ளது.

எனவே கூறப்பட்டுள்ள பின்வரும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

  • அத்தியாவசிய காரணங்களை தவிர வேறு எச்சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். 
  •  காற்றோட்டமற்ற இடத்தில் தரித்திருப்பதை இயன்றளவு தவிர்த்தல்.
  • எப்பொழுதும் உரியவாறு முகக்கவசத்தை அணிதல்.
  • நபர்களுக்கிடையான தூரத்தை உரியவாறு பேணல்.
  • மரண உற்சவம் போன்ற சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்லாதிருத்தல்.
  • எப்போதும் சவர்க்காரம் இட்டு இரு கைகளையும் கழுவி சுத்தமாக வைத்திருத்தல்.
  • உரியவேளைகளில் கிளினிக்கிற்கு செல்வதிலும் மற்றும் சிகிச்சைகளைப்  பெறுவதிலும், ஏற்படுகின்ற தாமதம்  காரணமாக கர்ப்பிணித் தாயினதும் கருவிலுள்ள சிசுவினதும் ஆரோக்கியத்திற்கு இடையூறு ஏற்படலாம்.

  • கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற காய்ச்சல், குருதிப்பெருக்கு, கடுமையான தலையிடி, மூச்செடுப்பதில் கஷ்டம், பார்வைக் குறைவு, வலிப்பு, நெஞ்சில், வயிற்றில் ஏற்படுகின்ற வேதனை, சிசுவின் துடிப்புக் குறைவு, உடல் வீக்கம், அத்துடன் வேறு ஏதாவது கடினமான அசௌகரிக நிலை ஆபத்து சமிக்கைகளாக அடையாளம் காணப்பட முடியும். இவ்வாறான ஆபத்தான சமிக்கை தோன்றினால் உடன் வைத்தியசாலைக்கு செல்வது கட்டாயமாகும். அது தொடர்பில் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
  • கர்ப்பிணியான உங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக,கொவிட் நோய்த் தொற்றிலிருந்து உங்களை  தவிப்பதற்குரிய உரிய சகல ஏற்பாடுகளும்  வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அவசிய வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவேண்டாம்.
  • உங்களுடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் நோயாளி என சந்தேகிக்கப்படும் நபரொருவர் உங்கள் வீட்டில் வசித்தால் அது தொடர்பாக உடனடியாக உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முடிந்தவரை   அவரிலிருந்து விலகி இருங்கள்.
  • தற்செயலாக, உங்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோணா நோய் அறிகுறி உள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக உங்கள குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
  • அவசிய சிகிச்சைகளை உடனடியாகப்பெறுங்கள். வைத்தியசாலைக் கட்டமைப்பு உங்களுக்காக தயார் நிலையில் 
  • இச்சகல நிகழ்வுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல் தோன்ற முடியும். அதை தவிர்ப்பதற்காக, மனதை எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் வைத்திருக்க  முயற்சி செய்யுங்கள்.
  • தேவைப்படும் எந்தநேரத்திலும் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை அல்லது 1999 சுவசெரிய தொலைபேசி சேவையினூடாக வைத்தியரொருவரை தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சனை தொடர்பான காரணங்களை கலந்தாலோசிக்கவும் முடியும்.

- பகிர்வு- 09.05.2021