About Me

2020/09/12

சமாதானம்


மனசுக்குள் போர்ச் சூழல் அலைகிறது

கொந்தளிக்கின்ற உணர்வுகளால் உதடுகள் துடிக்கின்றன

சிவக்கின்றது அவளது மலர் முகம்

மௌனத்தில் கரைந்து வழிகின்ற விழிநீரும்

சினத்தில் ஆவியாகி கன்னத்தில் உறைகிறது.


கரையை அரித்துச் செல்லும் அலையாக

என் விழிகளை உற்றுப் பார்க்கிறாள்

சிவப்பின் தெறிப்பில் அது துடிக்கிறது

சிந்திய வார்த்தைக்குள் பொய் கண்டாளோ

சினக்கிறாள் சிதறிய வார்த்தைகளைப் பொறுக்குகின்றேன்

சில்லறைகளாக உதிர்ந்திருக்கின்றதே; ஊடலும் சிறிதளவு


பொறுக்குகின்றேன் உடைந்திருக்கின்ற அவளின் சினத்தை

பொங்கும் கண்ணீர் ஈரத்தில் புதைகின்ற

என் தவற்றினையும் நான் பரிசீலிக்கின்றேன்

என்னை மீள நியாயப்படுத்துகையில் மீண்டும்

உலகப் போரொன்று வெடிக்கலாம் வீட்டுக்குள்


அவள் உலகம் எனக்குள் விரிந்திருக்கின்றது

அணுதினமும் உணர்த்துகின்றாள் தன் அன்பால்

இருந்தும் தளிர்க்காத ஆசைகளின் ரணம்

அவளுக்குள் ஊற்றுகின்றது அமிலத்தினை செறிவுடன்


வேகமான வேலையுலகின் கீற்றுக்களாக நேரமின்மை

நெருடுகின்ற போதெல்லாம் துடிக்கின்றாள் தனக்குள்

எதிர்பார்ப்புக்கள் வெடிக்கின்றதே நிறைவேறாத வலியினில்

மனம் துகிலுரிக்கின்றதோ அவள் கனவுகளை

கல்லெறிகின்றேனே உழைப்பு எனும் முகமூடியால்


மனம் உறுத்துகின்றதுதான் மலரைக் கசக்குகின்றேனென்று

கசக்கினாலும் மடிப்பு அவிழாத அற்புதமவள்

சினத் தீக்குள் கருக்காதவள் அவள்

நம்பிக்கை இருக்கின்றது நாடி யறுக்காதவள்

பிறப்புடன் இசைந்திட்ட அவள் பண்பினை

அறிகின்றேன் தினமும் தனிமைக்குள் ரசித்தாலும்கூட

கலைக்கின்றேனே அவள் கூட்டையும் சுயநலத்தினால்


அவள் அடங்காத பேராற்றுக் கிளையல்ல

அணைத்தால் அடங்குகின்ற தேனாறுதான் எனக்கு

இருந்தும் விட்டுப் பிடிக்கிறேன் நீளமாக

இதயத்தின் அன்பின் வலிமை பெரிதென்று

வலிந்து சொல்லிடுவாள் வலியையும் மறைத்தே


வாழ்க்கைப் பகிர்வில் விட்டுக்கொடுப்பு நானாக 

அன்பிடம் தோற்பதில் அடம் பிடிக்கக்கூடாதுதான்

அவளின் எதிர்பார்ப்பு உடைந்தது என்னால்தானே

காற்று வாங்கி கடலில் நனைந்திட

நேற்றுக் கொடுத்த உறுதியும் கரைந்ததில்தானே

அனல் கொட்டுகிறாள் இன்றும் எரிமலையாகி


சமாதானம் அவளுக்கான உணர்வு தானம்

காதலின் வருடலும் அவள் உயிருக்குள்

துளையிடும்போது தூக்கியெறிவாள் கோபத்தை தன்னில்

துன்பத்தில் கரைந்து கொண்டிருக்கின்ற மனதும்

துவளாதிருக்க ஏந்துகின்றேன் சமாதானப் புறா

அவள் கண்களிலோ ஏக்கங்கள் மீள

அணைக்கையில் அடங்கி விடுவாள் குழந்தையாக


ஜன்ஸி கபூர் = 12.09.2020

 


Kesavadhas

ஜன்ஸி கபூர் இதனை விட உணர்வுகளை விண்டு உரைக்கும் நவீன கவிதையினை மொழிநீர் ஊற்றி வரைய முடியாது!

உளந்தொட்ட சில வரிகளை மட்டும் தொட்டுக் காட்டுகிறேன்!

'வழிகின்ற விழிநீரும் சினத்தில் ஆவியாகி கன்னத்தில் உறைகிறது- கண்ணீரின் கறையை இதைவிட அழகாக சொல்வதெப்படி?

பார்வை அலையாகி படிமம் காட்டுவது அழகு!

சிதறிய வார்த்தைகளை சில்லறைகளாகப் பொறுக்கிறேன்!

உடலும் உதிர்ந்திருக்கிறது!

அவள் உலகம் எனக்குள் விரிந்திருக்கிறது-

தோன்றாத கற்பனை உணர்வு!

உழைப்பெனும் முகமூடி கல்லெறிகிறது!

சினத்தீக்குள் கருகாதவள்!

அணைத்தால் அடங்கும் தேனாறு

கசக்கினாலும் மடிப்பு அவிழாத அற்புதம்!

இந்த சொல்லாடல்கள் சிறப்பு!

வாழ்த்துக்கள்!


நவீன கவிதைகளில் ஒரு நிகழ்விற்கு கவிஞனின் உணர்வுகள் எவ்வாறு அமைகிறது என்பதுதான் பார்க்கப் படுகிறது.அதனால் தான் நிகழ்வு நிலையில் பேசப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது.அதனால் தன்மை நிலையில் உணர்ந்து எழுதுவது இதில் முக்கியமான யோக்கியதாம்சமாக கருதப்படுகிறது.

.ஒரு குறிப்பிட்டச் சூழலில்(நிகழ்வில்) என்ன நிகழ்வுகள் உளவியல் ரீதியாக மற்றும் செயல் ரீதியாக அமையும் என்பது தான் தன்மை உணர்வு. அதற்காக நான் என்பது ஒரு பாத்திரமாக மாறவேண்டிய அவசியமில்லை.

அவ்வாறு எழுதுவது உணர்வுகளைப் பிரதிபலிப்புச் செய்திட வசதியாக அமையலாம்.. சமாதானம் தலைப்பில் சில கவிதைகள் அந்நிகழ்வினைத் தாண்டி கதாபாத்திரங்களின் வாழ்வினைப் பற்றிப் பேசியிருந்தார்கள்.பொதுமைப் படுத்தி எழுதியிருந்தார்கள்;

அது நவீன கவிதை அல்ல;

'சமாதானம்' கவிதையில் ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ளக் கவிஞர்கள் நவீன கவிதை உத்திகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தி கவிதை செய்துள்ளார்கள்; இஃது

வழிகாட்டலுக்கு உதவும்.

 

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

 


அச்சாணியாகப் பற்றிடும்  தலைமையே சக்தியாகிப்

பற்றிடுமே காரியங்களின் வெற்றி உயர்விற்கே

வழிகாட்டல் இல்லாத வாழ்வின் செயல்கள்

வழுவிழந்து வீழ்கின்றதே பெறுமதியும் இழந்து

தழுவிடும் தலைமையும் படிக்கட்டே நமக்கு

வாழ்ந்திடுவோம் காரியங்களும் சிறப்பாக ஆற்றியே


ஜன்ஸி கபூர்- 12.09.2020





காக்கைச் சிறகினிலே

 பாரதி புலமையும் பன்மொழியில் முழங்கியது 

முழங்கியது உணர்வும் காக்கையின் சிந்தனையில்

சிந்தனையில் சீர்திருத்தம் உயிர்த்தனவே கவிதைகள்

கவிதைகள் வாழ்வாக வாழ்ந்தாரே பாரதி


ஜன்ஸி கபூர் 


ஊசலாடும் உயிர்த்துளிகள்

துளியேனும் வீழ்ந்திடாதோ  நீரும் பருகிட/

அழிகின்ற பசுமையால் பாலைவனமாகின்றதே தேசமும்/

பழிவந்து சேருமோ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கே/

தெளிகின்ற சிந்தனைகளால் காத்திடுக இயற்கைதனை/

பொழிகின்ற மழையும் பொக்கிசமே எமக்கு/

விழுகின்ற நீரினைச் சேமிப்போம் வாழ்வதற்கே/

ஜன்ஸி கபூர்  

 


2020/09/11

நேர்மறை - எதிர்மறை

நேர்மறை

நரைக்காத அன்பு

---------------------------------

உதிர  வழிப் பூவின் வாசத்தில்

உவகையும் கொள்ளுதே பாட்டியின் மனதும்

இறுக்கி அணைத்திடும் சுருக்கத் தேகத்தினிலும்

இதமான சுகமும் பேத்தியின் உணர்வுக்குள்

நரைத்திடாத இளமை அன்புக்குள் இருவரும்


எதிர்மறை

சினத்தின் துடிப்பு


கண்டதும் காதலால் மகளவள் தாய்மைக்குள்

காழ்ப்புணர்ச்சி கொண்டாளே கிழவியும் தனக்குள்

உதறிய மகளுக்குள் உருவான உறவினால்

உணர்வுகளுக்குள் தீப்பந்தம் பந்தமதை சுட்டெரிக்க

தவிக்கின்றாளே தங்கக் குழந்தையும் துயரத்தோடு


ஜன்ஸி கபூர்  - 11.09.2020




மனம் ஒரு குரங்கு


ஆசைகள் நீள்கின்ற அடங்கிடாத மனதின்/

ஓசையாக பெருந் துன்பமும் இசைகின்றதே/

காசும் ஆள்கின்ற மனித வாழ்வுக்குள்ளே/

தாவுகின்றதே மனம் ஒரு குரங்காக/

காண்பனவற்றில் அலைந்திடும் திருப்தியற்ற உணர்வினால்/

கானலுக்குள் கரைகின்றதே வனப்பான எதிர்காலம்/


ஜன்ஸி கபூர் - 11.09.2020



வீரம் விளைந்த மண்

வீரம் விளைந்த என் மண்ணிலே

விழுந்தன உடல்கள் எழுந்தன விதைகளாய்

விழுமியம் சிதைந்திடாத அறப் போரின்

அழகிய தடமாக உருமாறியதே தேசமும்


வெந்த ரணங்களின் வடுக்கள் எழுச்சிகளாய்

வெற்றியின் முரசினில் இசைந்ததே வரலாற்றில்

பகைதனை விவேகத்துடன் விரட்டிய துணிவும்

வாகையின் வாசத்தில் தாயகத்தின் வாசலோரம்


நெஞ்சின் வலிமையில் வஞ்சகப் பகையினை

அஞ்சிடாமல் துரத்திய தீரத்தின் விளைநிலமாக

சிந்திய உதிரமும் சிந்தையின் விடுதலையாக

சிரிக்கின்றதே எந்தன் மண்ணும் பாரினுள்


ஜன்ஸி கபூர்  




2020/09/10

இன்றைய சூழலில் மாணவர்களுக்குத் தேவை

 பொன் -7

------------------

தலைப்பு - இன்றைய சூழலில் மாணவர்களுக்குத் தேவை

----------------------------------------------------------------

உட் தலைப்பு –

இ. தன்னம்பிக்கை

--------------------------------

தமிழ் வணக்கம்

-----------------------------

அமிர்தம் வழிந்திடும் இன்பத் தமிழே/

அகிலத்தின் மொழிகளுக்குள் முகிழ்த்தாய் முத்தாக/

தித்திக்கின்ற தமிழே வணங்கினேன் உன்னையே /

தலைமை வணக்கம்

-------------------------------------

கவிபாடி மனங்களை ஆளுகின்ற தலைவா/

கருத்தினில் நடுநிலையுடன் மொழியுடன் மணக்கின்ற/

கவியரங்கத் தலைவரே வணங்குகின்றேன் உங்களை/

அவை வணக்கம்

-------------------------------

மனங்களும் குவிக்கின்ற கருத்தினைக் கேட்டே/

மகிழ்ந்தே செவிமடுக்கின்ற இனிய சபையோரே/

மனமார்ந்த வணக்கங்கள் உங்கள் சிந்தைகளுக்கே/

இன்றைய சூழலில் மாணவர்களுக்குத் தேவை #தன்னம்பிக்கை

------------------------------------------------------------------- 

பெற்றிடும் கல்வியே பேறாகித் தொடரும்/

நற்றவ வாழ்வினில் நன்மைகளும் விளைவிக்கும்/

தற்றுணிவும் முயற்சியும் வெற்றிக்குத் துணையாம்/

தரணியில் இசைந்திட தன்னம்பிக்கையே அரணாம்/


விஞ்ஞானத்தின் விளைவுக்குள் அஞ்சாத தொற்றுக்களும்/

தஞ்சமாகி மேனிக்குள் நலத்தினை பஞ்சமாக்குகையில்/

பள்ளிகளோ உறக்கத்தில் மாணவரோ சுயகற்றலில்/

படிக்கின்ற ஆர்வத்துடன் தன்னம்பிக்கையும் வேண்டுமே/


அனுபவக்கல்விதனை முறையாக சிந்தைக்குள் ஏற்றிட/

அகற்றிடல் வேண்டுமே தடுத்திடும் தடைகளை/

மாணவர் விருப்புடன் கற்றிடும் கல்வியே/

பண்பான வாழ்வுக்குள் ஆளுமையை வளர்த்திடுமே/


நன்றி நவில்தல்

------------------------------

வாய்ப்புக் கொடுத்து கருத்தினை வளப்படுத்த/

களம் தந்த நடுவருக்கும் குழுமத்திற்கும்/

நன்றிகளை நவில்கிறேன் நெஞ்சமும் மகிழ/


ஜன்ஸி கபூர் - 10.09.2020





நிழலே துணையாக


கனவுகளும் கசிகின்றனவே கண்ணீர் ஈரலிப்பில்/

நினைவுகளும் உயிர்க்கின்றனவே இறந்த தடத்தினிலே/

அனலின் வெம்மைக்குள்ளே நிழலே துணையாக/

அலைகின்றதே மனதும் துடிக்கின்றதே உணர்வுகளும்/

நிலையில்லாத வாழ்வுக்குள்ளே நிம்மதிதான் ஏதோ/


ஜன்ஸி கபூர்  





2020/09/09

இரட்டைக் கிளவி - மரங்கள்


நெடுநெடுவென வளர்ந்த பசுமை மரங்கள்/

சிலுசிலுவென வீசிய காற்றில் அசைகையில்/

கமகமவென மலர்களும் நறுமணம் சிந்த/

கீசுகீசுவென குருவிகளும் சிறகடித்தனவே வானில்/

ஜன்ஸி கபூர் 

2020/09/08

பண்படும் வாழ்க்கை

 

ழுத்தறிவின் பண்படுத்தலில் நம் வாழ்வும்/

வளர்த்திடுமே அறிவையும் தகுதியையும் என்னாளும்/

கருத்தையும் சுதந்திரமாக முன்வைத்திடுமே எழுத்தும்/

வருந்தும் மானிடத்தையும் காத்திடுமே ஆயுதமாக/


ஜன்ஸி கபூர் 


2020/09/07

என் தமிழே

 என் தமிழே

----------------------

சங்கே முழங்காக முழங்குகின்ற நற்றமிழே/

சிங்கத் தமிழனின் மூச்சே தாய்மொழிக்காக/ 

மங்காத் தமிழுக்கே ஆற்றிடும் தொண்டுதனில்/

தேங்குதே இன்பமும் மனதினை நிறைத்தே/


அமிழ்தும் தமிழைப் படித்தேன் தினமும்/

அற்புத இலக்கியத்தின் வரிகளைச் சுவைக்கையில்/

சொற்பத அழகில் சொருகின இன்பமும்/ 

கற்பதும் சுவைத்திட உணர்வுக்குள்ளும் அதிர்வே/ 


என் தமிழே ஆழ்மனதின் முரசே/

செந்தமிழின் புத்துணர்வால் விளைந்திட்ட காவியங்களில்/

சிந்திய மொழிப் புலமையின் அற்புதத்தினில்/ 

சந்திரப் பேரொளியும் நனைத்ததே மனதினை/ 


தமிழின் உயர்ச்சியில் மலையெனவே அறிவும்/

கமழ்கின்றதே அறமும் புதுப் பொலிவாகி/ 

தழுவுகின்றேனே தினமும் தமிழையே வாழ்வாக/

வாழ்கின்றேனே முத்தமிழையும் பற்றும் நற்குடியாக/  


ஜன்ஸி கபூர் - 7.09.2020



கழனிகளின் இதயம்

கிராமம் உயிர்க்கின்றது பண்பாடுகளின் சுவடாய்

இயற்கை எழிலும் கொஞ்சிடுதே ஆனந்தமாக

கழனிகளின் இதயமாகி பசுமையாகப் பூக்கையில்

களித்திடுமே மனமும் மாசில்லாத வாழ்வுக்குள்ளே


ஜன்ஸி கபூர்  


நீ வருவாயென


நீ வருவாயென காத்திருக்கிறதே மனதும்//

நீங்காத நினைவுகளால் போர்க்கின்றதே சுகமும்//

தூங்காமல் பூக்கின்றதே விழிகளும் தினமும்// 

ஏங்கிடும் மனதுக்குள் உலாவுதே கனவும்//


முட்படுக்கைத் தலையணையும் மோகனப் பஞ்சனையாய்//

ஆட்கொள்ளுமே உன் மடி சாய்கையிலே//

வெட்கத்தை ரசித்திடும் உந்தன் புன்னகையைத்//

தொட்டு அணைக்கின்றேனே நிதமும் என்னுள்ளே//


ஜன்ஸி கபூர்  








மது விலக்கு

மனிதனை மெல்லக் குடிக்கும் மது/

இனித்திடும் முதலில் அழித்திடும் உயிரை/

உணர்வதை உறிஞ்சுகையில் பணமதும் கரையுதே/

கணப்பொழுது மயக்கத்தில் நோய்களின் ஆதிக்கம்

முளையில் கிள்ளாவிடில் மூளையும் சிதையுமே/

முத்தான வாழ்வுக்குள் சொத்தாகச் சோகமே/


ஜன்ஸி கபூர் 




2020/09/06

பண்பாட்டு வாழ்க்கை

தலைமுறை தந்த சொத்தாக/ 

பண்பாட்டு வாழ்க்கை எனக்குள்/

நல்லறத்தின் நற்பயனால்/

நற்குடியாக வாழ்கிறேன்./


ஜன்ஸி கபூர் - 06.09.2020



 

மூன்று சொல் முத்து


இயற்கை எழில் கொஞ்சுகின்ற மலைகளில்/

இசைக்கின்றதே அருவியும் தென்றலில் நசிந்து/


அசைகின்ற விழிகளாய் சிறகடிக்கும் பூச்சிகள்/

அலைகின்றதே மலர்களின் இதழ்களை நுகர்ந்தே/


சந்தனத்தை பிசைகின்ற வானோரத்தில் புன்னகை/ 

துள்ளி ஓடுகின்ற வெண்மேகங்கள் கண்டே/

அள்ளிச் சொருகுகின்றதே பரவசமும் எனக்குள்ளே/


வெண் தாவணி நழுவுகின்றதோ அருவியில்/

வெட்கத்தில் சிரிக்கிறதே நீரின் துடிப்புக்களும்/


வெடித்திடும் பூக்களின் நறுமணச் சுவையினில்/

உள்ளம் தித்திக்கின்றதே தரிசனங்களின் லயிப்பில்/

உவகையின் ஆளுகையில் கழிகின்றதே பொழுதும்/


ஜன்ஸி கபூர்