About Me

2020/09/25

கவிதாஞ்சலி

 

மரண ஊர்வலம் கீதமும் உயிர்ப்பிற்கோ

மகிழ்ந்த விழிகளில் மழையும் பூக்கின்றதோ

இசைக்குள் இசைந்த செவிகளும் சுருங்கியே

ஓசையிழந்தே வலியில் துடிக்கின்றனவே இப்போ


ஏழிசைச் சுரவரிசை ஏக்கத்தின் அதிர்வில்

ஏந்திடுமோ மனமினி காந்தக் குரலினை

சிந்திய புன்னகைகளினி கசிந்திடுமோ தகனத்தில்

சிந்தையின் கலக்கத்தில் வலியும் படர்கின்றதே


தலைமுறை கடந்தும் தளிர்த்திடுமே குரலும்

கலைக்கு இல்லையே முதுமையும் இறப்பும்

தழுவிய கொரோனா தகர்த்ததோ இனிமைக் குரலை

தவிக்கின்ற நெஞ்சங்களின் சோகங்களும் காற்றலையில்


இதயம் கனத்திடும் இரங்கல் மொழியிது

உதய கீதம் இசைத்த சோதரனுக்கே

உறங்கிடும் நீண்ட வாழ்வுக்குள் இனி

உலவட்டும் ஆன்மாவும் சாந்தி வெளியில்


ஜன்ஸி கபூர்  - 25.09.2020



 

கண்ணீர் அஞ்சலி
-------------------------------
நலம் வாழ வாழ்த்திய குரல்/
அழ வைத்ததோ நெஞ்சும் கலங்கிட/
உளப் பண்பால் உலகமே உறவாக/
உயர்ந்த அன்பால் விழிகள் நனைகிறதே/

மூச்சுக்காற்றில் மென்னிசையை வார்த்தே வாழ்ந்த/
முழு நிலாவுக்குள் திரையோ மரணத்தில்/
முதுமை அறியாத இனிமைக் குரலை/
முழு உலகமும் ஏந்துமோ செவியினில்/ 

தங்கத் தமிழில் பாடல்களைச் செதுக்கியே /
சங்கீத இசையால் தேனும் தெளித்த/
காந்தக் குரலோன் வசீகரித்த மனதில்/
கலக்கின்றதே கலியின் துளிகளும் கலங்கி/

அறுந்ததோ மூச்சும் அதிர்கின்றதே மனமும்/
வருந்தச் செய்ததே கொரோனாவின் வலிமையும்/
ஓரக் கண்ணில் துளிர்க்கும் கண்ணீர்/
ஓராயிரம் பாடலிசைத்த நிலாவுக்கு சமர்ப்பணமே/

 
ஏனோ விதியும் அழைத்ததோ மென்னிசையை/
தேனைச் சுவைத்த செவிகளில் இன்று/
வீழ்ந்ததே சோகமும்  விழியோரம் கண்ணீரே/
வாழுமே பல்லாண்டு இறவாப் பாடல்களும்/

 
கண்ணீர் அலை 
 
வானம்பாடி இசைத்த கானம் மனதிலே
உயிர்த்ததே தமிழ் மொழியும் பிசைந்தே
உணர்வில் தனிமை விரட்டும் மென்னிசையால்
உறவாகியதே நெஞ்சும் நறவுக்குள் செவியே
பல்லாயிரம் பாடல்கள் செதுக்கிய குரலும்
ஓர விழிகள் அழுதிடப் பறந்ததே



பாடு நிலாவுக்கு கவிதாஞ்சலி
 
இசையால் மயங்க வைத்த குரலுக்கு/
இன்று இரங்கலோ விழிகளில் கண்ணீரே/
இனி ஏந்துமோ செவியும் கீதத்தை/
இல்லையே இறப்பும் வானம்பாடியின் குரலுக்கே/

இதழோரப் புன்னகையை உறிஞ்சியதோ மரணமும்/
இனித்திடும் தேனிசைகள் உறங்கிடுமோ காற்றினில்/
மௌனம் ஏந்தும் விண்ணுலகப் பயணத்தில்/
மெல்லத் தவழ்கிறதே வலியின் வீரியம்/

மூங்கில் துளையினில் மூச்சினைப் புகுத்தியே/
தங்கத் தமிழில் வார்த்த குரலோசை/
தலைமுறை கடந்தும் வாழுமே ரசிப்பில்/
தரணியில் செழித்து தடமாகுமே அற்புதமாக/

உறவினைப் பிரிந்த வலியில் உணர்வுகள்/
உறங்கிடாத செவிக்குள் அதிர்கின்றதே பாடல்களும்/
சிரிக்கின்ற கன்னத்தைச் சிதைத்ததோ மரணமும்/
வரிகளில் புதைக்கின்றேன் நிலாவுக்கு கவிதாஞ்சலி/

Jancy Caffoor 






குழந்தை

 


பஞ்சுக் கன்னத்தில் புன்னகை/

பிஞ்சு விரல்கள்/

சிரிக்கின்ற கண்கள்/

சிந்தையைத் தொடுகின்றதே கவிதைகளாகி/


ஜன்ஸி கபூர் - 25.09.20




2020/09/24

தணியாத தாகம்

தொண்டையும் நனைத்திட ஊற்றிடும் நீர்தான்/

எண்ணத்தின் துடிப்பை குளிர்த்துமோ தினமும்/

திரையும் உண்டோ தணியாத தாகத்திற்கே/

நரையில்லா வாலிப மிடுக்கில் தாகமே/


மலரும் தழுவும் நறுமணத்தின் ஈர்ப்பில்/

கலையாத கனவுகளும் நீளுமே இலக்கில்/

அமிர்தத் தமிழின் கிரீடமாக அவனியும்/

அழகாகுமே அறிவைத் தேடும் பயணத்திலே/


கற்கும் கல்வியும் நற்குடியாக மாறிட/

பற்றுமே அறிவும் ஆளுமையும் சிந்தைக்குள்/

கறை நீக்கி சுதந்திரத்தினை ஆளவே/

மறை தரும் ஒழுக்கத்தைத் தேடுவோமே/


ஜன்ஸி கபூர் - 24.09.2020








தள்ளாடும் தாயுள்ளம்

 


தாய்மையின் அணைப்பும் மொழிகின்ற அன்பை

சேயும் உணருமே பாசத் துடிப்பிலே

வறுமைப் பிணியிலே தள்ளாடும் தாயுள்ளம்

வழி தெரியாது தவிக்கின்றதே தரணியிலே

அழுகின்றதே நெஞ்சும் பிள்ளையைக் காத்திடத்தானே 

ஜன்ஸி கபூர் - 24.09.2020

 

2020/09/23

வான வீதியில்

 


வானவீதியில் உலாவும் மேக ஊர்வலத்தில்/

ஊர்வலத்தில் பன்னீரைத் தூவுதே மழையும்/

மழையும் பொழிகையில் மண்வாசம் மூச்சுக்குள்/

மூச்சுக்குள் பின்னிடுமே இயற்கையின் நேசமே/


நேசமே செழிக்கையில் வாழ்ந்திடுமே தேசமும்/

தேசமும் மகிழ்ந்திடுமே சுயநலமற்ற அன்பினால்/

அன்பினால் ஆளலாம் அகிலத்தின் மாந்தரை/

மாந்தரையும் வாழவைக்கும் ஆதவனும் வான்வீதியில்/


 

வான வீதியில்

 ---------------------

வான வீதியில் பறக்கின்றதே சிறகுகள்/

சிறகின் வருடலில் மயங்குதே மனதும்/


மனதை வருடுகின்றதே தென்றலும் சுகமாக/

சுகத்தின் சுவையினை இரசிக்கின்றதே விழிகளும்/


விழிகளை ஈர்க்கின்ற மதியும் அழகே/

அழகின் கோலங்களை பிசைகின்றதே இயற்கையும்/


இயற்கையும் வரைகின்றதே அற்புத ஓவியங்களை/

ஓவியங்களைத் தீட்டிடுமே வானவில் தூரிகையும்/


தூரிகையும் வரைகின்றதே ஏழு வர்ணங்களை/

வர்ணக் கலவைதானே  வான வீதியும்/





2020/09/22

கண்ணீரால் எழுதாதே

கருத்தரிக்கும் கனவுகளுக்குள் கானலை ஊற்றாது

கருத்தினில் வலிமையேற்றி முயற்சியோடு செயலாற்று


வீழ்கின்ற சருகெல்லாம் உரம்தானே மண்ணுக்கும்

அழுகின்ற வாழ்வும் அவலத்தின் உறைவிடமே


வெற்றியைக் காணவே பற்றிடு இலக்கையே

அன்பின் புன்னகையால் மனங்களை வென்றிடு

 

இன்பத்தின் வாழ்க்கைக்குள் சுற்றமும் இணைகையில்

இல்லையே தோல்வியும் தொட்டதும் துலங்குமே

 

விதியினை நீதானே கண்ணீரால் எழுதாதே

விடியல் தேடலில் அழுதல் பாவமே


ஜன்ஸி கபூர்  






கற்பூரவல்லி

 


கற்பூரவல்லி கை வைத்தியம் நமக்கே/

நற்பலன் தந்திடுமே வளமான வாழ்விற்கே/

தண்டும் இலையும் மருந்தே நமக்கு/

தணியுமே காய்ச்சலும் தலையிடியும் போகுமே/


கண் அலற்சிக்கு பூச்சு மருந்தாம்/

கரைந்திடுமே கட்டிகளும் இலைச் சாற்றிலே /

மனக்கோளாறும் மறைந்திடுமே ஓமவல்லிச் செடியிலே/ 

மனமும் சுகத்தில்  மருத்துவத்தின் மாண்பில்/


இரத்தத்தின் சுத்திகரிப்பால் இதயத்திலே மகிழ்வோட்டம்/

இலைச் சாற்றிலேதான் சளியுமே கரைந்திடுமே/

அழகிய செடியிலே அகன்றிடுமே நோய்களுமே/

குழந்தைகளைக் குணமாக்கும் குடிமனை  மருத்துவமே/


ஜன்ஸி கபூர் - 22.09.2020







2020/09/21

நிலா

 

சிந்துகின்ற வெள்ளொளி படர்ந்திடும் பந்தலிலே

சிதறிக் கிடக்கின்ற அஞ்சனமும் பேரழகே

வெண்மேகத் தாவணிக்குள் மறைத்திடும் முகமதைக்

காண்போரும் கண்படுவாரே எழில் கண்டே 


காற்றும் உதைத்திடாத உருளைப் பந்தைக்

காட்டியே சோறூட்டுவாரே அன்பின் அன்னையும்

ஆழ்கடலும் பொங்கியே உமிழ்ந்திட்ட நுரைக்குள்

விசும்பும் மேனியினை நனைத்தே மகிழ்ந்திடுமே 


பூமிப் பசிக்கு பரிமாறப்பட்ட தோசையைப்

பகிர்ந்திடுமோ சிறகடிக்கும் வான் பறவைகள்

சிதறிய விண்மீன்களின் ஒளி விளக்கினை

சிதைத்திடுமோ ஆதவனின் மறை விரிகதிரும்


இருண்ட காட்டினில் அலைந்திடும் தேவதையை

இதய அன்பால் வாழ்த்திடுமே அல்லியும்

ஆகாய வீதியில் யாரெறிந்தார் வெள்ளியை

அண்ணார்ந்து பார்க்கையில் அதிசயிக்கிறதே விழிகள்

ஜன்ஸி கபூர் - 21.09.2020

    




மனித நேயம்

மனதை வருடுகின்ற

---- மனிதநேயப் பேரொளியில்/

மகிழுமே உறவுகள்

---- மலருமே கூட்டுறவும்/


உள்ளத்தின் அன்பே

---- உணர்வின் மொழியாம்/

உயிரில் நனைந்தே

---- உரித்திடும் துயரத்தை/


இளகிய இதயத்தில்

---- இரங்கிடும் துன்பத்தில்/

இசைந்திடும் வாழ்க்கையே

---- இவ்வுலகத்தின் மேன்மையே/


ஜன்ஸி கபூர் - 21.09.2020





சிசுக்கொலை

பெண்ணழிப்பும் பெருஞ்சாபமே மானுட வாழ்விலே/

இன்னுயிர் அழித்திடும் இழி செயலதே/

கற்ற கல்வியும் சுவீகரித்த நாகரிகமும்/

கள்ளிப்பால் பிழிந் தூற்றுகின்ற கலியுலகில்/

அழுகின்றதே விழி திறக்காத சிசுவும்/

பழி வேண்டாமே காத்திடுவோம் பெண்மையினை/


ஜன்ஸி கபூர் - 21.09.2020




 


சிந்தனை செய் மனமே

சிந்தனை செய்தல் பகுத்தறிவின் ஆளுகை/

நிந்தனையை விலக்கிடும் தாரக மந்திரம்/

மாற்றத்தின் மூலவேர் மனதின் அலாரம்/

ஏமாற்றம் வீழ்த்திடும் சக்தியின் ஆதாரம்/ 

 

வருடுகின்ற கனவுகள் கண்ணாடிச் சிதறல்கள்/

வருந்துமே மனமும் எதிர்பார்ப்பின் உடைவில்/

தேடிய பொருளும் அழிவின் ஆழிக்குள்/

நாடிய செல்வமாக அரணாகும் அறமே/ 


ஒளிர்கின்ற தன்னம்பிக்கை ஒழித்திடும் சோர்வினை/

களிப்பின் இசைவினில் கலியும் கழறுமே/

இலக்கில்லா செயலுக்குள் இல்லையே வெற்றியும்/

இணைகின்ற கூட்டுறவில் இதயமது வலிமையில்/


சுற்றிடும் பூமிக்குள் பற்றிடும் பந்தங்கள்/

வெட்டினாலும் சிதைந்திடாத உன்னத உறவுகள்/

அற்ப பூமிக்குள் அனலெடுக்கும் ஆசைகள்/

அவலப் பிழம்பினுள் எதிர்காலம் புதைத்திடும்/


உதட்டின் தீ உருக்கிடுமே உயிரை/

உன்னத தேகத்தினுள் துளையிடுமே மரணம்/

உயிரை உருக்கும் துயரைப் பிடுங்க/

உள்ளத்தில் உறைந்திருக்கு அற்புத எண்ணங்களே/


ஜன்ஸி கபூர் - 21.09.2020


2020/09/20

எழுச்சியில் மலர்ச்சி

வானம் சிந்திடும் மழைத்துளிகளே மண்ணில்

தேனாய் இனித்திடுமே வறள் பூமிக்கே

பானமாக உறிஞ்சிடும் ஆழியின் எழுச்சியில்

வீணின்றி மீண்டிடும் விண்ணுக்கே நீராவியாக


ஜன்ஸி கபூர் - 20.09.2020




ரதமாடிய மகிழ்வில் ரதியோ

 

சலங்கையின் அதிர்வினில் எழிலும் இசைந்திட/

விழிகளின் அசைவினில் ஓவியமும் உயிர்த்திட/

செவ் விதழ்களின் புன்னகைச் சாற்றினில்/

செதுக்கிய கன்னத்தில் கலையின் மேன்மை/


நாடியில் உரசிடும் விரல்களின் நளினத்தில்/

நாடித்துடிப்பும் நயத்துடன் சிந்தும் இசைத்திட/

ஆடிய பாதங்களின் பரதச் செழிப்பினில்/

ரதமாடிய மகிழ்வில் ரதியோ பேரழகோ/


ஜன்ஸி கபூர் 



அன்பு என்றும் அழியாதது

 உள்ளத்தின் பிணைப்பில் உருவான இணைப்பு/

உயிரில் நனைந்து உறவில் கலந்ததே/

ஆனந்தக் கனவுகள் விழிகளின் மொழியாக/

அன்பின் தவத்தில் மலருதே இல்லறமும்/


நற்றுணை அருகில் புன்னகை அழகில்/

இன்புற்று வாழ்தலுக்கு திரையோ முதுமை/

அல்லல் துடைக்கும் ஆருயிர்க் கரங்களின்/

அணைப்பில் தவழ்வதும் அற்புத வரமே/


ஜன்ஸி கபூர்