About Me

2020/06/13

விழி மொழி

விழி மொழியில்/
இதழோரக் கவிதைகள் சுவையாக/
காதல் மனதை வருடுகையில்/
மயக்கத்தில் மயிலிறகு/

ஜன்ஸி கபூர் - 13.06.2020
 

வறுமை

எட்டிப் பார்க்கும் குட்டிப் பொண்ணு/
வாட்டம் தீர்க்க நோட்டமிடுது கண்/
எட்டா உயரக் குப்பைத் தொட்டி/
கொட்டிக் கிடக்குமோ ரொட்டித் துண்டு/

நாற்றம் சகித்து தவிக்குது பசி வயிறு/
தொற்றுக்கள் வாழும் உணவுக்கு ஏங்குது மனது/
வறுமை இளமையில் கொடிது கொடிது/
சிறு மலருக்குள் படியுது வலி/

ஆகாரம் இல்லாத வாழ்வின் துயர்/
ஆதாரம் தெருவோர குப்பைத் தொட்டி/
சிறகறுந்த சின்னச் சிட்டின் ஒலியில்/
வருந்துதே மனம் கண்ணீரும் கசியுதே/

ஜன்ஸி கபூர்
13.06.2020

2020/06/12

மாசில்லா சூழல்

மண்ணில் விதைத்த பயிர்கள்//
பொன்னாய் விளைந்திருக்கு//
மனித சக்தி உழைப்பால்//
மாசில்லா சூழல்//

ஜன்ஸி கபூர் 

(ஏ)மாற்றம்

கூறுபோட்டு கொள்ளை
இலாபம் அடித்தே//
வயிறு கழுவுதே
பெருங் கூட்டம்//

பொருளைப் பதுக்கியே
விலையை ஏற்றியே//
தவறுகளால் ஆளுதே
வணிக மோகம்//

வறியோர் வருந்தும்
துன்பம் நீங்க//
ஏமாற்றிப் பிழைப்போரின்
அநீதியை வெல்வோம்//

ஜன்ஸி கபூர்  

உறவைத் தேடும் உயிர்கள்


இறைவன் செதுக்கும் உயிரின் உணர்வாய்//
தரிக்கும் உறவும் பெருஞ் செல்வமே//
அன்பில் அலைந்து மகிழ்வுள் நுழைந்து//
பந்தச் சிறப்பில் வாழ்தல் சுகமே// 

இருந்தும் நவீன மாயத் தாக்கம்//
இடைவெளி நீள தொலைவாகின்றோம் அந்நியமாய்//
உதட்டு வார்த்தைகள் மெல்லச் சுருங்க//
உதிர்க்கின்றோம் வெறும் புன்னகைத் துளிகளை// 

தொல்லை நோயில் தாங்கும் அணைப்பாய்//
அல்லல் தீர்க்கும் சொந்தம் சொர்க்கமே//
மரண நொடியில் தோள்கள் தாங்கி//
கண்ணீர் தெளித்து விடை யனுப்பும்// 

பாச மதை தனிமை வென்றிடுமோ//
இதயங்கள் உடைந்திட வேண்டாம் பிரிவில்//
இனித்து மகிழ்ந்திடலாம் இன சனங்களுடன்//
இரண்டறக் கலந்தே குதுகலிப்போம் குவலயத்தில்// 

ஜன்ஸி கபூர்  


2020/06/11

அகிம்சைப் போராட்டம்



நவீனத்தின் அத்துமீறலால் கானகம் சிறைப்பட//
குவியும் மாசுக்களால் பசுமை குற்றுயிராக//
இயற்கைச் சமநிலையும் வெடித்துச் சிதற//
இருப்பிடமின்றி அலையும் உயிர்களாய் விலங்கினங்கள்//4

அறநெறி மறந்த மானிடக் கூட்டம்//
வேட்டையில் வேட்கை நிதம் வன்மத்துடன்//
அழிக்காதீர் உயிரினங்களை சிதைக்காதீர்கள் உணர்வுகளையெனும்//
வலி முனங்கலின் அகிம்சைப் போராட்டம்//8

மரங்களைத் தரித்து நிழல்களைப் பிடுங்கி//
மாக்களின் வாழ்வைப் பறித்திட்ட பின்னர்//
உயிர்ப்பிச்சை கேட்டே தெருமுனை எங்கும்//
அரங்கேற்றப்படும் விழிப்புணர்வு ஆட்டம் இது//12

ஜன்ஸி கபூர்  




உன் நினைவுகளில்

மயக்கம் விழிகளில் மௌனம் மொழியினில்//
தயக்கம் ஏனோ அன்பே துணையாக//
இயங்கும் இதயம் உன் நினைவுகளில்//
வியக்கும் உலகம் நீ அருகென்றால்//

ஜன்ஸி கபூர் 




அமைதியான வாழ்வில்



காலம் மாறும் அவலம் தீரும்//
ஞாலச் சமர் அழிந்தே போகும்//8

இரக்கம் உயிர்த்து மனிதம் சிறக்கும்//
பேதம் ஏது உணரும் மனமே//16

அழகு  அன்பில் உறவுகள் மணக்க//20
அமைதியான வாழ்வும் இனிதாய் கனிந்திடுமே//24

ஜன்ஸி கபூர் 



ஆணுக்கு நிகராக


பசுமை வயலோரம் நெல்மணிகள் விளைந்திருக்கு//
நாற்றுக்கள் எல்லாம்  நீரால் வியர்த்திருக்கு//
சேற்றில் விரல் வரைந்த கோலங்கள்//
சோறாகி பசி தீர்க்கும் அமுதே// 4

வியர்வை வாசமே மண்ணுக்கு நேசமாம்//
அயராத உழைப்பில் அறுவடையே முத்துக்களாகும்//
வரப்போரம் கூடி இயற்கைக்குள் கசிந்து//
வயிறாற உண்ணுகையில் மனசும் நிறையும்//8

விண் ஒளி வெப்பத்தில் கரைந்து//
மண்ணுக்குள் பொன் விளைவிக்கும் மாந்தர்//
ஆணுக்கு சரிநிகராய் நெஞ்சுரத்துடன் தாமும்//
தரணியில் உழைக்கும் அழகைப் பாரீர்//12

ஜன்ஸி கபூர்  










2020/06/10

ஒளியாய் அன்னை



வழித்துணை என்றே ஒளியாகும் அன்னையே
பழி இன்றி நெறியோடு வளர்த்தீரே
அழிவில்லா கல்வியால் உயர்ந்தே மகிழ்ந்திடவே 
வழிகாட்டியாய் மனச் சோலையில் படர்ந்தீரே

ஜன்ஸி கபூர்  

தாயுமானவன்

கரு உதிரத்தில் பூத்த மலர்
அருமைத் தாய் முகம் காணவில்லை
பொல்லாத நோய் வந்ததால் - அன்னை
பொன் உலகில் வாழ வழியுமில்லை

சின்னச் சிட்டின் விழி நீரில்
கன்னம் துடிக்குதே பசி ஓலமோ
அன்புத் தாத்தா பாலூட்டும் அழகில்
வண்ணக் குழந்தை மெல்லச் சிரிக்குதே

மண் குடிசை பளிங்கு மாளிகையாம்
தளர்ந்த கைகளே பஞ்சு மெத்தைகளாம்
குளிர் தீண்டும் வலியின்றி நெஞ்சக்
களிப்புடனே அணைத்திடுவார் தங்கத் தாலாட்டால்

பெற்றவர் போல் பரிவோடு உருகி
எண்ணத்தில் மழலையின் எதிர்காலம் தேக்கி
நெறி வாழ்தலில் இசைந்து போக
கற்றுக் கொடுக்க காத்திருக்கும் தாயுமானவன்

ஜன்ஸி கபூர்  

 

பழைமைக்குள் நவீனம்



ஓளிர்ந்த நீ அழியவில்லை இன்னும்/
பழமைக்குள் நவீனம் பிசைந்து/
புன்னகைக்கின்றாய் கிராமிய (சு)வாசத்தில்//

ஜன்ஸி  - 10.06.2020


சுமையில்லா சுகங்கள்


அன்னைக்குப் பிள்ளை அன்பான வரமே
அரவணைக்கும் கரங்களில் அடங்குதல் சுகமே
பரவசத்தில் தாய்மை நெகிழ்தலும் அழகே
இறைவன் படைப்பில் உயிர்கள் ஒன்றே

இருப்பிடம் திரும்புகின்ற அந்தி நேரம்
விரும்பி அணைந்து வருடுகின்ற சேய்கள்
அருகிலிருந்து பசியாற்றும் தாய்ப் பாசத்திற்கு
தெருவோரம் திரை இங்கு விரிக்குமோ

மானிடர் பேதங்களால் திசை மாறிடுகையில்
தன்னலம் கருதாது பரிவைப் பகிர்ந்திட
உறவுகள் தேவையில்லை உணர்வுகள் போதுமே
ஐந்தறிவின் மேன்மை  பாடமாய் நமக்கு

ஜன்ஸி கபூர்  







சுயமற்ற மனிதர்கள்

அழகிய வார்த்தைகளில் பொய்களை அணிந்தே
பழகும் வம்பர்கள் பழிபாவம் அஞ்சாதவர்கள்
இழிவான சிந்தனைகளால் உணர்வுகளை முறித்தே
அழிகின்ற தேகங்களுள் இழிகுணங்கள்
சுமப்பவர்கள்

பொல்லாத வாழ்வுகளுக்காக சுயநலங்களைத் தரித்து
நல்லோர்கள் நலன்களை வெட்டிச் சாய்ப்பவர்கள்
உள்ளத்தில் ஊக்கமின்றி சீர்கெட்ட மனிதர்களாய்
கள்ளத்துடன் வாழ்ந்தே கருணையைச் சிதைப்பவர்கள்

அகங்களின்  ஊற்றுக்களாய் கள்ளம் கபடம்
முகங்களின் கவசங்களாய்   ஏமாற்றுக்களும் துரோகங்களும்
தெம்புடன் சுற்றித் திரிவார்கள் சுற்றத்தார்களுடன்
தம் இஷ்டப்படி உலகத்தையே உருட்டிடுவார்கள்

சுடுகாடு தேசத்தின் முட் புதர்களே
அடுத்தவர் சுகங்களை அனலில் வேகவிட்டு
படுபாவிகளாய் நிதம் அலைதல் தகுமோ
தடுமாறும் வாழ்வுதனை ஒழுங்காக்கி வாழுங்கள்

 ஜன்ஸி கபூர் 

2020/06/09

வீணோட்டம்

சிந்துவதோ சிறு துளியோட்டம்/
சிந்தையால் தடுப்போம் வீணோட்டம்//

ஜன்ஸி கபூர்


  •  

இருளில் ஒளியாக

விடியலே வா இருளில் ஒளியாக//
அன்பிருந்தும் மௌனச் சிறைக்குள் உறவுகள்//
உழைப்பிருந்தும் வறுமைக்குள் சிதைகின்றதே வாழ்க்கை//
கற்றும் கல்லாதாராய் அறியாமைக்குள்  முடக்கம்//
நோய்த்தொற்றின் வீரியத்தில் உதிர்கின்றனதே உயிர்கள்//
புதிர்களை அவிழ்த்திட என்னோடு விடைதேடு//

ஜன்ஸி கபூர் 

உதவும் கரங்கள்

உதவும் கரங்கள் அன்பின் தளங்கள்//
ஆதரித்தே அழகாகும் உயிரின் உரங்கள்//
அவனியின் அவலம் துடைக்கும் இரக்கம்//
எதிர்பார்ப்பு ஏதுமின்றி உயர்த்தும் கரங்கள்//4

மனிதம் வாழ்ந்திடும் அருளைக் கண்டு//
இன்னல் துடைத்திடும் அறமே நன்று//
வறுமை ஒழித்திடும் மனதில் மாண்பு//
மரணம் வென்றும் ஈகை வாழும்//8

கதிகலங்கி நிற்கையில் அரணாய்த் தாங்கிடும்//
பிணி வாட்டுகையில் தாயாய் அணைத்திடும்//
விளம்பரம் தேடாமல் கண்ணீர் துடைத்திடும்//
கொடுக்கும் போதெல்லாம் சிவந்தே சிரித்திடும்//12

அனாதைகளின் ஊன்றுகோலாய் நிற்பதும் நலமே//
முதுமைக்கும் ஆறுதலாய் அருகிலிருத்தல் சுகமே//
உதவிகள் செய்தல் மனிதாபிமானத்தின் அழகே//
உறுதுணையாய் இருந்து உயர்வதும் சிறப்பே//16

ஜன்ஸி கபூர் 

சிந்தனை செய் மனமே

 சிந்தனை மனதை நிதமும் ஆண்டால்//
எண்ணங்கள் யாவும் பண்பாடு பேணும்//
அறிவோடு அனுபவங்கள் ஒன்றாகிப் போகும்//
செயல்கள் யாவும் வெற்றியாய் மாறும்//

ஜன்ஸி கபூர் 

பச்சைக் கம்பளங்கள்

 பசுமை அழகு விழிக்கு குளிர்ச்சி//
வறட்சி உறிஞ்சி குளிர்த்தும் நீரோடை//
இயற்கை உவந்தளிர்த்த பூமியின் பூங்காவனம்//
மண்வளம் காக்கும் பச்சைக் கம்பளங்கள்//

ஜன்ஸி கபூர்

வரமாய் பெற்ற புது உலகு


அன்பு மொழி ஆட்சிக்குள் உருளும்/
அழகிய பூழியில் புதுமைகள் செய்வோம்/
கொரோனாவும் விரட்டாத ஆரோக்கிய தேசமாய்/
வார்த்தெடுத்தே சந்ததி நலம் காப்போம்/4

வன்முறை தீண்டாத நேசங்கள் மணக்கும்/
சமாதானச் சோலைக்குள் அறம் விதைப்போம்/
நிறவெறி உருகி உயிரது அஞ்சும்/
வேற்றுமையிலும் ஒன்றுபடும் மனிதங்களாய் கூடுவோம்/8
 
நெஞ்சத்துக் கறையாம்  வஞ்சனை அகற்றியே/
புன்னகையோடு இசைந்தே வாழக் கற்றிடுவோம்/
வரமாய் பெற்ற புது உலகை/
கரங்கள் வலிதே பிணைத்தே காப்போம்/12

ஜன்ஸி கபூர் 

2020/06/08

பேசும் புகைப்படங்கள்


இருள் மேகம் தொலைவில் அலையும்
ஓளி கொஞ்சம் சிரித்துச் சிதறும்
விழி கூர்ந்து பார்க்கும் நீட்சியில்
இயற்கை கொஞ்சம் எழிலோடு கெஞ்சும்

வாழ்க்கை  நினைவுகளை மீட்ட வைக்கும்
நிழல் ஓவியங்களும் தொடர்பாடல் மொழியே 
தொலைநோக்கும் இலக்கும் உத்திப் பார்வைகளும்
காணும் காட்சிகளைப் பேச வைக்கும்

தரிசிப்பில்  மன எண்ணங்கள் பிசைந்து
தன் அறிவோடு கனவுகளைக் கலந்து
கருத்தோடு உயிரோட்டமான புகைப்படங்களைக் கலையாக்கும்
கலைஞன் காலம் வென்ற வரலாகின்றான்

ஜன்ஸி கபூர் 

2020/06/07

வெற்றிப்படிகள்

 மண் துளைக்கும் வேரின் பலத்தால்/
விண் முகம் நோக்கும் மரங்கள்/
பாறைகளில் மோதும் காற்றின் உற்சாகம்/
பூகோளத்தின் உயிர்கள் வாழும் நிலமாகும்//

குழிகளும் நிமிர்ந்தால் சிகரம் தொடும்/
கடலும் எழுந்தால் மழையாய் பூக்கும்/
அன்றில்கள் முயன்றால் மேகங்கள் பறிக்கும்/
இலக்குடன் உழைத்தால் முன்னேற்றம் வசமாகும்//

உணர்வாகும் அனுபவங்கள் வழிகாட்டும் சாதிக்க/
ரணமாகும் காயங்கள் உரமாகும் முயற்சியால்/
சறுக்கும் உதைப்புக்கள் ஏற்றும் கரங்களாகும்/
உடைந்த தோல்விகளே வெற்றிகளாய் சேரும்//

தடைகளை உடைக்கும் உறுதியும் வலிமையும்/
மனதின் போராட்டங்களை மாற்றங்களாய் மாற்றும்/
வலிகளை அறுத்திடும் சக்தியுண்டு புன்னகைக்கே/
தன்னம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றிப்படிகள் அருகில்//

ஜன்ஸி கபூர்

பண்பாட்டுக் கோலங்கள்

முன்னோர் பண்பாட்டுக் கோலங்களின் குறிகாட்டிகள்/1
சிந்தையில் மனிதம் மொழிந்த பாசக்காரர்கள்/
இயற்கையோடு இசைந்து வாழ்ந்த அனுபவசாலிகள்/
நம்மை நலப்படுத்த வழிகாட்டும் முதுசொம்கள்/4

ஜன்ஸி கபூர்
 

# அழகே அன்பே அமுதே

அறிவே அறமே அரணே/
அநீதி அலையா அகமே/
அக்கு அணல் அழகே/
அலர் அதம் அமுதே/
அருகே அமர் அருளே/
அவதி அச்சு அண்டா/
அமைதி அருமை அன்னை/
அழியா அன்பு அவளே/

ஜன்ஸி கபூர்