About Me

2012/12/19

தஞ்சை பெரிய கோயில்



சரித்திரங்கள் புரட்டப்படும் போதுதான், நம்மை விட்டு விலகிப் போன, மறைந்திருக்கின்ற பல விடயங்களை அறிய முடிகின்றது. இவ்வாறான
ஒவ்வொரு சரித்திரங்களின் பின்னாலும் பல உயிர்களின் ஆற்றல்களும், உழைப்புக்களும், புதுமைகளும் இருக்கும். அவற்றைத் தேடியறிதலே சுவாரஸியமான ஓர் கலைதான்.

அந்த வகையில் என்னை வியப்புக்குள்ளாக்கிய தஞ்சாவூர் பெரிய கோயில் தொடர்பான சரித்திரங்களைத் தேடியறிவதற்காக வலம் வந்த இணைய உலா வில்  பெற்றுக் கொண்ட தகவல்களையே உங்களுடன் பகிரப் போகின்றேன்.

தஞ்சாவூர் காவிரி சமவெளிப் பகுதியில் 15 தளங்களைக் கொண்ட சுமார் 60 மீற்றர் நீளமான கோயிலே தஞ்சை பெரியார் கோயிலாகும். சோழர்களின் சிறப்பை வெளிப்படுத்தக் கூடிய இக்கோயிலில் பல சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.



இது  10ம் நூற்றாண்டில் (கி.பி 985 - 1070 வரை)  சோழர்கள் தமிழ்நாட்டை ஒரே குடையின் கீழ் ஆண்ட    பொற்காலத்திலேயே,   சோழ மன்னனாகிய இராஜ இராஜசோழனால்   கட்டப்பட்டது. அரசனின் சிவபக்தியுடன் 1006 ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க 7 ஆண்டுகள் சென்றனவாம்.  இன்று இக்கோயிலின் வயது 1002 ஆகும். இராஜ இராஜ சோழன் மன்னன் கோயில் கட்டும் கலையில் பல புதுமைகளை ஏற்படுத்திய மன்னனாவான். இக்கோயில் கட்டடக் கலையானது, தென்னிந்திய கட்டடக் கலைகளுக்கு சிறந்த அத்திவாரமாக விளங்குகின்றது.


இக்கோயிலானது, இராஜ இராஜ சோழன் மன்னன் காலத்தில் இராஜ இராஜேஸ்வரம் என்றும், நாயக்கர்கள் ஆண்ட காலத்தில் தஞசை பெரியார் கோயில் என்றும்,  மராட்டியர் காலத்தில் பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டது.

இதன் நீளம் 150 அடியாகும். கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்துள்ள கூர்நுனிக் கோபுரமாக இதன் விமானம் அமைந்துள்ளது. இதன் இராஜ கோபுரம் மிகவும் அழகிய கலைநயத்துடன் காணப்படுகின்றது.

உண்மையில் தமிழர்களின் சாதனையாக இக்கோயிலைக் குறிப்பிடலாம். இங்குள்ள சிற்பங்களில் மகரங்களும், போர் வீரர்களும், வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும், அவற்றின் மீதேறி பயணம் செய்பவர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிருந்ததாக கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. நாயக்கர் காலத்தில் ஒரே கல்லால் கட்டப்பட்டுள்ள நந்தியானது, 14 மீற்றர் நீளமும், 7 மீற்றர் அகலமும்,3 மீற்றர் உயரமுமானதாகும்.


1987ம் ஆண்டு  ஐக்கிய நாட்டு கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், இக்கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்திய மத்திய அரசானது 1954ம் ஆண்டில் ஆயிரம் ரூபாய்த் தாளையும் ,1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜ ராஜ சோழன் உருவம் பதித்த இரண்டு ரூபாய் முத்திரையையும் , ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு 2010 ம் ஆண்டு 5 ரூபாய்முத்திரையும் நாணயத்தையும் நினைவாக வெளியிடப்பட்டது.

                               Tanjai1000.jpg

இத்தகைய சிறப்புமிகு கோயிலில், 2 வித்தியாசமான உருவங்களுள்ளன. அவற்றிலொன்று தலையில் தொப்பியுடன் காணப்படும் மேலைத்தேசத்தைச் சேர்ந்தவனின் உருவச் சிலையாகும்.
மற்றைய உருவம் இப் பெண்ணின் சிலையாகும்.


இச் சிலைகளுக்கும்  சோழ மன்னனுக்கும் என்ன தொடர்புண்டு? 
இவை புலப்படுத்தும் கருத்துக்கள் என்ன?

எனும் வினாக்கள் நம்முள் தொக்கி நிற்கின்றன. இச்சரித்திரத்தை இன்னும் ஆழமாகத் துளாவினால் நமக்குரிய விடை கிடைக்குமா! பொறுத்திருந்து பார்ப்போம்!

- Jancy Caffoor-

2012/12/17

ஏனடா !


நாட்காட்டிக்  கிழிசல்களில்
எட்டிப் பார்க்குமென்  நினைவுகள்..........
சோரந்தான்  போயின
உன் வில்லத்தனத்தில்!

நினைக்கவேயில்லை............
அணைத்தவுன் கரங்களே
என்னுள்.........................
அக்கினி யாகம் நடத்துமென்று!

வெறுமை வெளியில்........
அந்தரிக்கின்றேன் -
என்னையே உன்னிடம்
இழந்தவளாய்...........

உன்னை உச்சரித்த என்னுதடுகள்
இப்போ................
உலர்ந்தே உயிரறுந்து போனது
உன் பொய்மையன்பில்!

நீ..............நல்லவனா கெட்டவனா!
காலத்தின் காலடியில்
வினா குவிந்து கதறுகின்றது
என்னைப் போல் அனாதையாய்!

வலிக்கிறதடா............
என் மார்பிலுன் தடம் பதித்து
இன்னொரு மதியுடன் இணையவே........
என் நெஞ்சில் குருதி பிடுங்கினாய்!

மலையேறி மாலை கொண்டவுன்
மனதில்..................ஏனடா
இல்லையென்றாய் எனக்குமொரு
மாலை தர!

என்னில் பற்றென்றே - லேசாய்
கற்புமுறிஞ்சி களி கொண்ட
கலியுக நாயகனே - ஏனடா
 கலி வார்த்து காணமற் போனாய்!

"போய்த் தொலைகிறேன்"
உன் வார்த்தைகளினி எனதாக.............
சமுத்திரம் வாய் பிளக்க
நடக்கின்றேன் மரணம் தேடி!

நாளையென் கல்லறையில்- உன்
நிழலைக் கூடத்தொடுக்காதே!
என் கண்ணீர் ஈரம் .........
உன் பாதம் பட்டு உலர்ந்து விடலாம்!

ஜன்ஸி கபூர் 

கனவே கலையாதே!


இருள்ச் சலனத்தில்
விழிக்கின்றாய் கனவாய்....!
அல்லி மோகித்த நிலாவில்......
அலைகின்றாய் ஒளியாய் !

நாணத்தில் மூடிக் கிடந்தவுன்
பார்வைகள்....................
மெல்லத்  துடிக்கின்றன
எனுள் படரும் வரமாய்த் தாவ..........

வெண்முகில்களால்
துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விண்மீன்கள்........
அவசரமாய் விழுகின்றன - உன்
முத்தத்துக்குள் மின்னொளி பாய்ச்ச!

சேலையவிழ்த்த மரவிடுக்கில்- உன்
விரல் நுழைத்து நீ வரையும்
நம் பெயரோ................
தரை தொடும் காற்றில் தள்ளாடிக் கிடக்க!

விழி நிமிர்த்திப் பார்க்கின்றேன்- ஏக்க
மொழி சற்றுப் பிசைந்து..........
சிம்பொனியாய் நழுவுகின்றாய்
என் மூச்சுக்குள் உன்னை நிறைத்து!

இருள் இன்னும் கவிழ்ந்துதான்
கிடக்கின்றது- நீயோ
விடியலுக்கஞ்சி மெல்ல விழி நழுவுகின்றாய் - என்
கனவிலிருந்து விலகி!


ஜன்ஸி கபூர் 



வானவில்லாய்











தினம்



எப்பொழுதும்
வீட்டில் இடிமுழக்கம்
அப்பாவால்!

மழையாகிப் போவார்
அம்மாவும்!

நானோ காற்றாகத் துடிப்பேன்
வெளியேற.............!

இயற்கையே எங்கள் வீட்டில்தான்
தினம்

வாருங்க ளுங்கள்
இதயம் துறந்து ..............!

தருகின்றோம் எங்கள் சோகம்
கொஞ்சம் வடித்து!


ஜன்ஸி கபூர் 





தோற்றங்களும் தொழில்களும்......


காலம் - 16.12.12
இடம் - வவுனியா, தனியார் பஸ் நிலைய அருகிலுள்ள சைவ உணவகம்

கடிகாரம் 8.30 இனை தொட்டு நின்றதும், வியர்வைத்துளிகள் உடலை நனைத்தன. 9 மணிக்கு B,Ed வகுப்பு.....அதுக்குள்ள சாப்பிட்டுட்டு, ஆட்டோ பிடிச்சு பூந்தோட்ட கல்விக் கல்லூரிக்குப் பறக்கணும்...

வேகத்தை விரைவுபடுத்தி, சைவ உணவகத்தையடைகின்றேன்.விடுமுறை நாளென்பதால் உணவகம் முழுதும் தலைகள் நிறைந்திருந்தன. இருக்கை தேடிய போது, தனித்திருந்த யுவதியொருத்தியின் மேசை அகப்பட்டது. அருகே சென்றேன்..

"யாராவது இருக்கிறாங்களா"

சிங்களத்தில் கேட்டேன்........இல்லையென முறுவலித்தார். அமர்ந்தேன்....சொற்ப நொடிகளில் சினேகப் பார்வைகளும் புன்னகைகளும்  இடமாறின. ஆடர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்திருந்தோம்.

எங்கள் மௌனத்தை நானே உடைத்தேன் மெதுவாக.........

"இங்கதான் வர்க் பண்றீங்களா" - நான்

"நான் ஆமி, கிளிநொச்சி காம்ல இருக்கிறேன், லீவுக்கு குருணாகல் வீட்டுக்கு போறேன்"  - என்றார்  புன்னகையைச் சற்றும் குறைக்காதவாறு.........

நானும் என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது எமக்கான உணவுகளும் மேசைக்கு வந்தன....

இரண்டு தோசைகளை பீங்கானிலிட்டு சாப்பிடத் தொடங்கினார். நானும் இடியப்பத்தை காலி பண்ணத் தொடங்கினேன்....

"காம்ல எப்பவும் சோறுதான், இப்பதான் இத சாப்பிடுறேன்" என்றார் அந்தச் சிங்கள சகோதரி...

"ம்ம்......வடையும் சாப்பிடுங்கள்......ருசியா இருக்கும்" - நான்,

"ம்ம்....ரஸயி , இந்த "பொல் சம்பல்"     கிரைண்டர்ல அரைக்கிறதா "   மீண்டும் மலர்ந்தார்.

இவ்வாறு தொடர்ந்த சம்பாஷணை, எங்கள் உணவுத்தட்டு நிறைவடையும் போது முடிவுக்கு வந்தது.

அந்த இராணுவப் பெண், கைகளை கழுவதற்காக எழுந்த போது, பக்கத்தில் காலியாக இருந்த மேசையை நிரப்ப நான்கு வாலிபர்கள் வந்தார்கள். அவர்களின் பார்வையும் இந்தப் பெண்ணின் மீதுதான் மொய்த்துக்கிடந்தது. அவர்களும் இராணுவத்தினர்தான். விடுமுறைக்காக ஊர் செல்ல பஸ்ஸிற்கு வந்தவர்களாக இருக்க வேண்டும்.

அந்தப் பெண் தங்களைப் பார்க்கட்டுமென்ற நப்பாசையில் கிசுகிசுத்தார்கள். ஆனால் அவளோ அவர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. என்னிடம் விடைபெற்றுச் சென்றார்............

அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த, அவர்களில் ஒருவன் மெதுவாகச் சொன்னான்

"டேய்.....அவள் ஆமிடா"

அவளைப் பற்றி எதுவுமோ தெரியாத நிலையில், அந்த இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெற்ற அவள் உடலமைப்பைக் கொண்டு அவளைச் சரியாக "ஆமி"யாக இனங்கண்டது ஆச்சரியமாக இருந்தது. தன் தொழிலை இனத்தை சரியாக இனங்கண்ட திருப்தி அவர்கள் முகத்தில்.........

"ரீச்சர்............"

கையில் பில்லுடன் நின்று கொண்டிருக்கும் சர்வரைக் கண்டதும், மனதுக்குள் சிரித்தேன்....

"தோற்றத்தைக் கொண்டு தொழிலை எடைபோடும் நம்மவர்கள் புத்திசாலிகள் தான்"

பணத்தைக் கட்டுவதற்காக வெளியேறினேன்!