About Me

2020/05/30

கொஞ்சிப் பேசும் காதல் சிட்டுக்கள்

 கொஞ்சிப் பேசுமென்  காதல் சிட்டே

நெஞ்சம் ஏங்குதே உன்னைக் காணவே

வட்டக்கண்களில் கசியும் காதல் கண்டு

பட்டுச் சிறகுகளும் மெட்டோடு பாடுதே


காற்றின் கொஞ்சலில் உதிரும் பூக்களால் 

சிறகாடை நெய்தே புன்னகைக்கின்றாய் அழகாய் 

செவ்விதழ்கள் உரசும் அன்பில் நசிந்து

சிந்தை வருடுகின்றாய் மனசும் நெறையுதே


மஞ்சள் மேனி நாண சிரிக்கின்றாய்

நெஞ்சில் நிறைகிறாய் நெசமாய் இனிக்கிறாய்

அஞ்சாதே அன்பே பிரிவில்லை நமக்கே!

பஞ்சமாபாதகம் செய்தே பிரித்திடார் நம்மை


வயலோரம் வயசுப் புள்ள வந்திடாதே

பய புள்ளைங்க கல்லெடுத்து அடிச்சிடுவாங்க....

பட்டுச் சிறகுதான் நமக்கிருக்கே ஆனந்தமாய்

எட்டுத் திக்கெங்கும் பறந்திடலாம் சுதந்திரமாய்!


ஜன்ஸி கபூர் 


காலங்கள் மாறும்

எல்லாவற்றையும் நாம் ஞாபகத்திலிருத்துவதில்லை. மறந்து விட்டதாகத்தான் நினைக்கின்றோம். ஆனாலும் அந்த மறதிகள் சிற்சில சந்தர்ப்பங்களால் உடைகின்றன............. உயிர்ப்படைகின்றன.......புதிய நிகழ்வுகள் போல மீள நமக்குள் நிழலாடுகின்றன....

2015 ......... 

நான் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பெண்கள் கல்லூரிக்கு அதிபராகப் பொறுப்பேற்றுச் சென்ற ஆரம்ப காலம். சோனகதெரு யுத்த வடுக்களால் தன் உருக்களை இழந்திருந்தது. சொந்த ஊரிலேயே அந்நியமான பிரம்மை. மகிழ்வும் கவலையும் கலந்த கலவையாய் நான். 

அந்நாட்களில் சவால்களும் வலிகளுமே நாம் அதிகம் உணர்ந்த மொழியாக இருந்தது. துன்பங்களைத்தான் அதிகம் பரிமாறினோம். சொத்து இழப்புக்களை மீண்டும் ஈடு செய்ய நிறைய பொருளாதார பலம் தேவைப்பட்டது. வெளி உதவிகளற்ற நிலையில் மனதிலும், வாழ்விலும் கௌரவமான வறுமை வாழ்வைப் பின்னடித்துக் கொண்டிருந்தது. பிறப்பிடமே அகதி வலியோடு வாழ வைத்துக் கொண்டிருந்த காலமது.

வளங்கள் எதுவுமற்ற நிலையில் எனது தலைமையின்கீழ் பாடசாலை மீள ஆரம்பித்தல் என்பது கடினமான சவாலானது. அபிவிருத்தி காணாத பாடசாலையின் பெறுமானம் பூஜ்ஜியமாயிருந்தது. பல்வேறு மனக்கஷ்டத்தில் சொந்த வாழ்க்கையையும் அதிபர் பணியையும் சமாந்தரமாகவே நகர்த்திச் சென்றேன். மனம் உடையும்போதெல்லாம் தாய் தந்தையர் துணைக்கு நின்றார்கள்.

சிதைந்த மனை.........!
உருக்குலைந்திருந்த பாடசாலை ..............!

இரண்டினதும் புதிய நிர்மாணத்தில் நான் அதிக சிரமங்களை எதிர்கொண்டேன். இன்றுவரை அச்சுழியிலிருந்து வெளிவரவில்லை.

யாழ் வலயக் கல்வித் திணைக்களத்தில் இணைந்திருந்த ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிபர் நானே!  இந்த மனநிலையில் மாதந்தோறும் நடைபெறும் அதிபர் கூட்டங்களுக்குச் செல்வேன்.. நூற்றுக்கணக்கான தலைமைகள் இருக்கும் அந்த மண்டபத்திலும் நான் தனித்திருக்கும் வெறுமை...

பல முகங்களுடன் வெற்றுப் புன்னகை!
அருகிலிருப்போருடன் சில சம்பிரதாய வார்த்தைகள்..!!

பல காலம் இந்த சுழற்சியிலிருந்து  என்னால் மீள முடியவில்லை. இயல்பிலேயே நான் யாருடனும் அதிகம்  கதைப்பதில்லை. 

பெரும்பான்மை சிங்கள மொழி பேசும் அநுராதபுரச் சூழலில் பல வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த என்னால், தமிழ்மொழி பேசும் யாழ்ப்பாணச் சூழலுடன் உடனேயே ஒன்றித்துப் போக முடியவில்லை. அநுராதபுர நிழல்களின் அலைவுகள் என்னை அதிகம் ஆக்கிரமித்திருந்ததால், யாழ்ப்பாண நிகழ்வுகளில் மாறுதல்கள் தெரிந்தன.  இவ்விரண்டு ஊர்களின் வேறுபாடுகளின்  வெடிப்பிலிருந்து நான் மீண்டெழ சில காலம் தேவைப்பட்டது.

அதிபர் பதவி ...........வெறும் பணியல்ல...... வாழ்க்கை.......!

சொந்த வாழ்க்கைக்குள் அந்தக் கடமைகளையும் பிணைத்து  வாழ கற்றுக் கொண்டபோது சில சவால்கள் உடைந்து காணாமல் போயின. 

இருந்தும்......... 

எனக்கும் இங்குள்ள ஏனைய பாடசாலை அதிபர்களுக்கும் இடையிலான இடைவெளிகள் நீண்டு கொண்டே இருந்த சமயத்தில்...

அப்போதைய யாழ் வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த திரு தெய்வேந்திரராஜா சேர் அவர்கள், யாழ் வலய பாடசாலை அதிபர்கள் பங்குபற்றும் 3 நாள் கல்விச்சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில் நானும் பங்குபற்றினேன்...

பல மனிதர்கள்........... பல பாடங்கள்....அனுபவங்களாகி என்னுள் நிறைந்தன. 
நாங்கள் தலைவர்கள் எனும் முடியையிறக்கி சுதந்திரமானோம். சுவாரஸியங்களும் வேடிக்கைகளும் மெல்ல மெல்ல.......... அந்த இடைவெளியைக் குறைத்தபோது என்னையும் யாழ் மண் உரிமையுடன் உள்ளிழுத்துக் கொண்டது. அதுவரை மனதில் இறுகிக் கிடந்த 'அந்நியம்' காணாமல் போனது. 

அந்த சுற்றுலாவில் பல நல்லதிபர்களை நான் அடையாளம் கண்டேன். கடமைசார் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். அதிபர் பதவிக்குள் சிறு மழலையாக இருந்த நான் என்னை நானே இயக்குமளவிந்கு அனுபவங்களையும்,  தற்றுணிவையும் பெற்றுக் கொண்டேன்.

அச்சுற்றுலாவில் நான் கண்டு கொண்ட இன்னொரு முகத்தின் சொந்தக்காரர் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் அதிபர் வணக்கத்திற்குரிய திருமகன் சேர்தான் ...அவர் தன் மதம் கடந்து பிற மதங்கள் மீதான கூர்மையான அறிவைப் பெற்றிருந்தார். ஆச்சரியப்பட்டேன். என்னுடன் இஸ்லாம். குர்ஆன் பற்றிய நிறைய விடயங்களைப் பகிர்ந்தார்;. இஸ்லாமிய நாகரிகம் பாடத்திலுள்ள பல விடயங்களைக்கூட ஞாபகப்படுத்தினார். புல்லரித்துப் போனேன். ஒருவரின் கலாசார ஆடைகளை அடிப்படையாக வைத்து அவர் தன் மதத்தை சார்ந்தே அறிவை உள்வாங்குகின்றார்  எனும் எனது எண்ணம் முதன் முறையாக உடைந்து போனது. மரியாதை கலந்த பெருமதிப்பேற்பட்டது அவரில்...

சுற்றுலா நிறைவுற்ற பிறகு...............பல நாட்கள் !

எல்லாம்  தொலைவாகிப் போனது.. வாழ்க்கையுடன் ஒன்றித்துப் போன கடமைகளுக்காக வெவ்வேறு திசைகளில் அதிபர்கள் நாங்கள் உழைத்துக் கொண்டிருந்தோம்.

ஒருநாள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான மேற்பார்வைப் பணியின் பொருட்டு அவர் பாடசாலைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. பாடசாலையின் காட்சிப்புலங்களிலிருந்து நிறைய அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டேன்.

அந்த நீண்ட இடைவெளியின் பின்னர்........ 

24.05.2020 அன்று .........நோன்புப் பெருநாள் தினத்தில் வணக்கத்திற்குரிய திருமகன்  சேரின் பெருநாள் வாழ்த்துக்களை என் கைபேசி உவகையுடன் உரத்து வாசித்தது.

அவர் ஆளுமையுள்ள அதிபர் மாத்திரமல்ல. பிற மதங்களை கண்ணியப்படுத்தும், நேசிக்கும் சிறந்த மனிதர். மதம் கடந்த சகோதரர்.........    
அவர் வாழ்த்துக்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டிருக்கின்ற நேரம் தனியார் தொலைக்காட்சியொன்றில் .................

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பாகிஸ்தான் அரசின் கற்றல்சார் உதவிகளை அந்நாட்டு அதிகாரி வழங்கும் காட்சியும், திருக்குமரன் சேரின் உரையும் பதிவாகிக் கொண்டிருந்தன. அக்காட்சியில் மனம் நிறைந்தது. 

மதம் கடந்த மனிதாபிமானங்கள் தொடர்ந்து கொண்டே இருக்குமானால் இப்பூமியில் வசந்தமே மொழியாகும்.

இவ்வாறாக மதங்களைத் தாண்டிய   ஈர்ப்புக்கள் இவ்வுலகைப் பிணைத்து வைத்திருக்குமாயின்......வன்முறையற்ற வாழ்க்கை மனிதர்களுக்கான சிறந்த பொக்கிசமாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

[d;]p fG+u; - 31.05.2020


Aj;jj;jhy; rpijtile;jpUe;j kid - 2015


Gjpjhf mikf;fg;gl;bUf;Fk; ghlrhiy - 2020


- ஜன்ஸி கபூர் -
- 31.05.2020

அனுபவப் பகிர்வு -1


'அம்மா .........அம்மா'

வாசலோரம் அந்த ஐயாவின் குரல் கேட்க கதவைத் திறந்தேன்.

அவருக்கு என் வாப்பாவின் வயதிருக்கும். முதுமையிலும் தான் உழைத்து வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றார். எமது வீட்டுக்கு அருகிலுள்ள சந்தையொன்றுக்கு தினமும் பழங்கள், மரக்கறிகள் கொண்டு சென்று விற்பார். இவை விற்காமல் மிஞ்சியிருந்தால் எமது வீட்டிற்கு கொண்டு வந்து தருவார். பொருளுக்காக இல்லாவிட்டாலும் அந்த வயோதிபத்தின் உழைப்புக்காக ஏதாவது வாங்குவோம்.

அன்றும் வந்திருந்தார்......................

சில எலுமிச்சம்பழங்களை எமக்கு விற்று அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டார். 

துருப்பிடித்த பழைய சைக்கிளின் முன்புறம் மரக்கறி மூட்டையைக் கட்டிக் கொண்டு வருவார். கால்களில் செருப்புக்கள் இருக்காது. சுட்டெரிக்கும் யாழ்ப்பாண வெயிலில்கூட சைக்கிளை உருட்டிக் கொண்டே வெறுங் காலுடன் செல்வார்.

அந்தக் காட்சி............

என்னுள் கசிவைக் கொடுக்க ஒரு நாள் "போடுங்கள் ஐயா" என்று புதிய செருப்புக்களை வாங்கிக் கொடுத்தேன்.

'வேண்டாம் புள்ள...............'

மறுத்தார். 

"செருப்பைப் போட்டா சைக்கிள் ஓட முடியாதும்மா."

 அவர் பக்க நியாயம் ஜெயித்தது.

அந்த ஐயாவை எனக்கு ஐந்து வருடங்களாகத் தெரியும்.   வாப்பா அவரின் வாடிக்கையாளர். எந்நாளும் அவரிடம் வாப்பா பழங்கள் வாங்குவார். சில நேரங்களில் அவரின் இந்த தினசரி விற்பனையால் எமக்கு கோபம் வரும்.   அதிக விலைக்கு விற்கின்றாரோ என நினைப்பதுமுண்டு. சில நேரங்களில் வாப்பா அறியாமலே எதுவும் வேண்டாமென்று அவரை விரட்டி விடுவேன். அந்த நாட்களில் அந்த ஐயா மீது எனக்கு கோபம் கொப்பளித்து வரும். அடக்கிக் கொள்வேன்.

காலவோட்டத்தில் எங்கள் வாப்பா மௌத்தாகிய பின்னர் அந்த ஐயா வீட்டுக்கு வந்தார். வாப்பா மரணித்த செய்தி அவரைத் துன்பப்படுத்தியிருக்க வேண்டும். அழுதார். நிறைய அழுதார். வாப்பாமீது அவர் வைத்திருந்த பாசத்தை அன்று நான் கண்டு கொண்டேன். அவரின் கண்ணீர் எங்களை ஈரப்படுத்தி அவர் மீதான கோபத்தையும் கரைத்தது.

அன்றிலிருந்து அவரைக் கண்டால் வாப்பா நினைவுக்கு வருவார். வாப்பாவின் நினைவாக ஏதாவது பழங்களை ஐயாவிடம் வாங்குவோம். புணத்தை கையில் வாங்கும்போது 'சரி புள்ள' புன்னகைப்பார். 

தள்ளாடும் நடை ............. முதுமையில்கூட அவரின் புன்னகையில் கபடமற்ற பாசம் தெரிந்தது.

வைகாசி 2020 ...... 

கொரொனா ஊரடங்கு நீங்கி அன்றும் வீட்டுக்கு வந்திருந்தார். வியாபாரியாக அல்ல. அறிந்த மனிதராக!

'கனநாள் வரல புள்ள............அதான் உங்கள எல்லாம் பாத்துட்டு போகலாமென்று வந்தேன். சுகமாக இருக்கிறீங்களா'

கேட்டார். அதே மாறாத புன்னகை! இன்னும் அவரிடம் அப்பிக்கிடந்தது.

'ஓம் ஐயா' 

நலங்களைப் பரிமாற்றிக் கொண்டோம். விடைபெற்றார்.

'நில்லுங்கள் ஐயா' 

வீட்டுக்குள் சென்று என்னாலான சிறு பணத் தொகையை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் அவரின் கஷ்டம் துடைக்க சிறு பங்களிப்பாவது செய்ய நினைத்தேன். வாங்கிக் கொண்டார் மகிழ்ச்சியுடன்....

'வாரன் புள்ள'

எல்லோரிடமும் விடைபெற்றார். அவரின் அந்தப் புன்னகை மட்டும் மாறவேயில்லை.ஒளிர்ந்து கொண்டே இருந்தது.

மனிதர்களின் அன்பைச் சம்பாதிப்பதே மிகச்சிறந்த செல்வம்.   திருப்தியில் மனதை நிரம்பிக் கொண்டேன்.

- ஜன்ஸி கபூர்  

2020/05/29

அன்பில் உயிர்த்து



இளமைக் கனவில் விழிகள் மயங்க/
உள மொழியில் காதல் கசியும்/
உயிர்வெளியில் அன்பை விதைக்க/
இதயம் சுகமாகி வருடும் நினைவுகளை/
வசந்தம் இசைக்கும் பாக்கள் நாங்கள்/
எங்கள் சாலையிலும் மகிழ்ச்சிப் பூக்கள்/


ஜன்ஸி கபூர் 



புரியாத உலகம்



புரியாத உலகம் புதிரான வாழ்க்கை/
அறிவைத் தேடி அழிவைக் கொடுக்கும்/
கானல் பிரித்து விம்பம் தேடும்/
விஞ்ஞான வெடிப்பில் மெஞ்ஞானம் ஒளிரும்/

நுண்ணங்கி ஆட்சி மரணம் பேசும்/
துரோக வலியில் மனசாட்சி விறைக்கும்/
புன்னகைக்குள்ளும் விசப் புழுக்கள் நெளியும்/
புரியாத உலகம் கலிகால வளையம்/

வறுமையும் கண்ணீரும் தொடராகிப் போகும்/
பூக்கள் முகங்களில் பூகம்பம் பூக்கும்/
மதங்களும் வன்முறைகளும் வாழ்வாகிப் போகும்/
புரியாத உலகில்  வசமாகிப் போகின்றோம்/

அழகெல்லாம் பேரழிவாய் சிதைந்து போகும்/
பழகும் மனிதர் அணியாவார் எதிரில்/
இருந்தும் புரியாத உலகில் நிலைத்து/
வாழ்ந்துதான் பார்ப்போமே/

ஜன்ஸி கபூர்  


நான் நானாக

கொரோனா............

நீண்ட விடுமுறை!

எதிர்பாராத வாழ்க்கை மாற்றம்!

எதனையும் எதிர்கொள்ளும் மன தைரியம்!

இவை நமக்குள் வரவான சில விடயங்கள்!

இக்கொரோனாக் காலம் நிதானமாக நம்மை நாமே திரும்பிப் பார்க்க களம் அமைத்துத் தந்துள்ளது. வழமை எனும் ஒரு பொறிக்குள் நம்மைத் திணித்து நாம் வாழ்கின்ற அந்த வாழ்க்கை வட்டத்தை மெல்லக் கலைத்து நிதானத்துடன் மீள நம்மைத் திருப்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆரோக்கியம் தேடும் இலக்கில் நாம் ஓடிக்கொண்டிருக்கின்றோம். இருந்தும் நம்மை விரட்டுபவை நம்மோடு பயணித்திருந்த நமது பிம்பங்களே !

கடமை ........ கடமை

எனும் சுழியிலிருந்து மெல்ல விலகி நான் இயற்கையோடு இணைந்து கொண்டேன் இந் நாட்களில்....! இயற்கையின் பிரமிப்பில் சிந்தையுருகி கற்பனைகளும் மீளக் கருக்கட்டத் தொடங்க எழுதுகோல் என் கரம் பற்றுகின்றது!

நீண்ட நாட்கள்.........!

என் இயல்பிலிருந்து நான் விலகியிருக்க வேண்டும். மறை எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் அடங்கிக் கிடந்திருக்க வேண்டும். பலத்தை மறைத்த பலகீனங்களால் நான் தொலைந்திருக்க வேண்டும். சுருங்கிப்போன இயலுமையானது இயலாமைக்குள் மூடப்பட்டிருக்க வேண்டும். மூச்சடைந்து கிடந்தேன் பணிச் சுமையும் விதிச் சுமையும் ஓர் நேர்கோட்டில் பயணித்ததால்  

இந்த நீண்ட விடுமுறை 

ஆசுவாசித்தது என்னை! வெந்நீர் கசிவுகளுக்கு ஒத்தடம் தந்தது. மீளத் திரும்பிப் பார்க்கின்றேன்!

மனசுக்குள் நிம்மதிப் பெருமூச்சு!

காற்றின் மொழி  
அரும்புகளின் வளர்ச்சி
இயற்கையின் சுவை 
பொழுதுகளை மீட்டும் வினோதங்கள்  

என அனைத்தையும் நுகர்ந்தே மனசை நிரப்பிக் கொள்கின்றேன் ரம்மியமாய்!

Jancy Caffoor
 

இயற்கை


இயற்கை இறைவனின் கொடை | Radio Veritas Asia

இயற்கைச் சாளரத்தினூடு மெல்ல அலைகின்றேன்
பிம்பங்களாய் பேரழகு கரைகின்றது அதில்
காற்றில் கசங்கும் மரங்களின் மொழியில்
பசுமைப் புழுதி பாய்ந்தோடுகிறது விழியில்

தரை  மோதி நுரை கக்கும் அலையில்
கரைந்தோடும் வெய்யோன் பொன்னிறக் கதிர்கள்
பாய்ந்தோடி கூதல் கோர்க்கும் நீர்வீழ்ச்சியில்
சாய்ந்தாடும் விழிகள்  கனவுகள் சேர்க்கும்

விண் துளைக்கும் கார் மேகங்கள்
தூறல்களாய் வீழ்கையில் மழை பூக்கும்
இறைவன் வரையும் இயற்கை ஓவியம்
ரசிக்கையில் உணர்வெங்கும் உருவாகும் அற்புதங்களே

Jancy Caffoor 

ஏழையின் குடிசையில் காதல்

வறுமைக் கசங்கலில் சுருங்கிக் கொள்ளும்
ஏழைக்குடிலில் மூட்டங்களாய் ஏக்கங்கள்...
முதுமை அழகு பூச்சொரிகின்றது முத்தங்களால்
வாழ்க்கை  மீள வாசிக்கின்றது இளமையை!

நரை இமையோரம் திரையாய் காதல்
பரிவை வசப்படுத்தி ஒளிரும் தேகம்
கனவுகளின் கருத்தரிப்பில் வாசம் வீசும்
தள்ளாடும் வயதிலும் துணையாய் வாழும்

வறுமை முடிச்ச விழ்க்கவில்லை உறவினை
வாலிப வசந்தங்களை இன்னும் வீழ்த்தவில்லை
அன்பின் மலர்ச்சியில் இணைந்த உறவுகளாய்
இவ்வையம் சுமக்கு மிவர்களை பல்லாண்டு!

Jancy Caffoor

சுகமான காத்திருப்பு




காற்று விரிக்கும் தாமரையிலை மிதித்து
நீரலைக் கசங்கலில் தன்முகம் பார்த்து
காத்துக் கிடக்கும் நாராய் யுன்தேடல்
சுகமான சுமைதான் தளராத முயற்சிதான்!
.
வண்ண மீன்களின் கன்னம் உரச
வாசனை பிழியும் வெண் டாமரையுடன்
ஒப்பந்தம் வரைகின்ற வெண்நாரையுன் னழகில்
உணர்வுகள் கலந்து கரைகின்றன சுகமாய்!
.
கரை நின்றால் இரை வாராதேயென்றே
நரையுடல் நகர்த்தி நீரில் மிதக்கும்
உன் எழில்கோலத்தில் முளைக்கின்றது தத்துவமொன்று
என்றும் சந்தர்ப்பங்களைத் தேடி ஓடென்று!
.
ஜன்ஸி கபூர்