About Me

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

2021/05/01

நித்தம் உன் ஞாபகம்

 

விழிகளின் ஈர்ப்பால் கலந்த காதல்/

தழுவுகின்றதே நெஞ்சில் ஏக்கமும் சுமந்தே/

மெல்லிடை தழுவும் சேலை முடிச்சுள்/

ஒழிந்த வாலிபமும் குறும்பாச் சிரிக்குதே/


உன் கொலுசின் சத்தத்தில் உயிர்க்கும் /

பாதச் சுவடுகளும் பரவுதே உன்னோடு/

ஆசைகள் முடிந்த அத்தான் மனதுள்/

ஏக்கத்தின் ஓசைகள் வெடிக்குதே இமயமாக/


காமம் கிள்ளும் நறுமணக் கனாக்களில்/

உன் வாசம் உணர்வுள் மலருதே/

தேகம் சிலிர்க்க செந்நிற உதட்டின்/

மோக முத்தம் கற்பனைக்குள் உறையுதே/


கன்னக் கதுப்பில் செதுக்கிய வெட்கம்/

பக்கம் வருகையில் திரைக்குள் மறையுதே/

வானவில்லும் மையங் கொள்ளும் உன்னை/

வசந்தமும் மெல்லத் தொட்டுச் செல்லுதே/


உந்தன் புன்னகைச் சாரலில் நனைகையில்/

மெல்ல அழியுதே எந்தன் தனிமையும்/

வாழ்வின் முகவுரையாக உன்னை எழுதுகையில்/

உதிர்கின்றன சோகங்களும் உலகின் காலடியில்/


உள்ளத்தின் நினைவாக நீயும் நிரம்புகையில்/

மெல்லக் கரைகின்றதே சூழ்ந்திடும் தனிமை/

உறக்கத்திலும் உறங்காத உன்னோடு பயணிக்கையில்/

உன் ஞாபகமே மொழியாகிப் போகின்றதே/


ஜன்ஸி கபூர் - 01.05.2021



2021/04/30

உழைக்கும் கரங்கள்

உணர்வுக்குள் உழைப்பேற்றி 
              செய்தொழில் தெய்வமென்றே 
உயிர்த்தே உவக்கின்ற 
              செந்நிறக் கரங்கள்/
வியர்வைத் துளிகளால் 
              உரமேறுகின்றன தினமும் 
விளைச்சல் மேட்டில் 
              வெற்றிகளைக் குவித்திடவே/

தொடுகின்ற வறுமையும் 
              தொடர்கின்ற வலியும் 
மிடுக்குடன் மிரட்டும் 
              போதும் தடுமாறாது 
விடியலைத் தேடி 
             விருப்புடன் பயணிக்கும் 
துடிப்பான மனிதர்கள் 
             வெற்றித் திலகங்கள் 

பொங்கும் வெயிலிலும் 
            பொழுதினை வீணாக்காது 
உழுதே மண்ணையும் 
            பொன்னாக்கும் தங்கங்கள் 
ஊனை உருக்கி 
            உடலை வருத்தி 
தரணிக்குள் தலைகாட்டுகின்ற 
            செல்வங்கள் இவர்கள் 

நித்திரை துறந்து 
             நித்திலம் காத்தே 
சொத்தென வளங்களை 
            நாட்டுக்குள் குவிக்கும் 
முத்தான மனிதர்கள் 
             பெருமையின் வித்தவர்கள் 
சத்தான வாழ்விற்கும் 
           சரிதமாகும் வீரர்கள் 

ஜன்ஸி கபூர் -30.04.2021

எசப்பாட்டு


 💓💓💓💓💓💓💓💓💓💓 

கன்னக்குழி வேர்த்திருக்க 
கருத்தமணி கழுத்திலாட
கருதுமேடும் கலங்கிடவே 
காத்திருக்கும் புள்ள
துடிக்காதே  நீயும் 
சீக்கிரமே வந்திடுவேன்

கத்தரி வெயிலால கருத்திடுவே  
சித்திர விழியும் நொந்திடுமே புள்ள
சத்தியமா உன் நெனைப்புதான்
சாமத்துலயும் அணைக்குதடி மெல்ல  

நெத்தியில பூத்த மச்சம்
வெட்கத்தில சுருங்காதோ 
பக்கத்தில வாரேன் புள்ள
காதோரம் காதல் கொஞ்ச                    
 
ஜன்ஸி கபூர் - 30.04.2021

 

2021/04/22

முயற்சியின் பலன்

முயற்சியின் பலனால் முன்னேற்றம் வாழ்விலே/

முடிச்சினை அவிழ்த்தே முழங்கிடும் விவேகம்/

முகங்காட்டும் வெற்றியில் முடியாதது ஒன்றுமில்லையே/

இரும்புத் திரையும் இளகுமே பயிற்சியில்/

இதயத்தின் வலிமையில் இன்பமே செயல்களில்/

இடரினைத் தடுத்தால் இலக்கும் அருகிலேயே/


ஜன்ஸி கபூர்  

மழலையின் சிரிப்பு

 
பிறை உதடுகள் வரைந்திடும் சிரிப்பினில்/
சிந்தையும் நுகருதே மகிழ்வின் நறுமணத்தை/

பஞ்சுக் கன்னமதில் படர்ந்திடும் அழகினில்/
உயிரும் நனைந்தே ரசிக்கிறதே மழலையை/

அன்பின் சுகந்தத்தில் வருடும் குழந்தை/
இன்பத்தின் பேரூற்றே இவ்வுலக வாழ்வினில்/

ஜன்ஸி கபூர்  


மழலையின் சிரிப்பு மந்திரப் புன்னகையோ
மலர்கின்றதே மகிழ்வும் நெஞ்சத்தை நிறைத்து

பஞ்சுக் கன்னத்தில் தேங்கிடும் அழகை
கொஞ்சி ரசிக்கையில் நிறைகிறதே மனதும்

பூவிழிக் கண்களும் உதிர்த்திடும் பார்வையினில்
பூசுகின்றேன் எனையே உயிருக்குள் பரவசமே

Jancy Caffoor

தாலாட்டு

 

பஞ்சுக் கன்னமதை  அன்பால் வருடி/

பிஞ்சு விரல்களுக்குள்  தாய்மையைக் கோர்த்தே/

நெஞ்சத் தூளியாக தன்னையே மாற்றி  

நெற்றியில் இதழ்களால்  முத்தங்களை வரைந்தே/

அன்னையும் இசைத்திடும் பாசத் தாலாட்டில்

அன்பின் சுவைதனை குழந்தையும் அறிந்திடுமே 


ஜன்ஸி கபூர் 

வேடந்தாங்கிகள்

எல்லைக் குறுக்கீடின்றியே எழுகின்ற சிறகுகளெல்லாம்/

தழுவுகின்றனவே தம்மினங்களை தடமாகின்றதே சரணாலயமும்/

வேற்றுமையை வேரறுக்கும் வேடந்தாங்கல் பறவையொலி/

படர்கின்றதே சங்கீதமாகப் பரவசம் மனங்களுக்கே/

அடர்ந்த மரக்கிளைகளில் அழகான உயிர்ப்புக்கள்/

அழகான அன்பினை அகிலமும் ரசிக்குமே/


ஜன்ஸி கபூர் 

பணம்

பாரினை ஆளும் பணமும் நிலையற்றதே/

பத்தும் செய்யும் பஞ்சமாபாதக வித்திது/


பரபரப்பு வாழ்வில் பாசத்தையும் துறக்கும்/

பதுக்கிடும் போதெல்லாம் பறித்திடுமே நிம்மதியை/

 

பாதாளம் பாய்ந்து பண்பதனை மாற்றும்/

பலவழிகளிலும் தேடிடவே பம்பரமாகச் சுழற்றுமே/


 ஜன்ஸி கபூர்  

உழைப்பை உறிஞ்சும் அட்டைகள்

 சுட்டெரிக்கும் வெயிலும்  தேகத்தைப் பருகிட/

வாட்டமே வாழ்வாகத் தேயிலைத் தோட்டத்தில்/

பறித்திடும் கொழுந்தும் சிவக்குதே ஏழ்மையில்/

அறிந்திடாக் கபடத்தில் வாழ்வும் பலியாகுதே/

பஞ்சத்தில் வெந்திடும் நெஞ்சத்தின் ஏக்கத்தை/

அஞ்சாமல் சுரண்டிடுதே  வஞ்சக முதலைகள்/

தொழிலாளி நலத்தை விழுங்கிடும் முதலாளித்துவம்/

தொல்லைமிகு அட்டையாக  உழைப்பையும் உறிஞ்சுகிறதே/ 

ஜன்ஸி கபூர்  

வண்ணக் காதல்


பசுமை நினைவுகளின் இதமான அணைப்பினில் 

பரவுகின்றதே மகிழ்வும் தேகமும் சிலிர்த்திட 

கொஞ்சும் விழிகளின் காதல் பார்வையில் 

பஞ்சு மேனியும் நாணத்தில் சிவக்கிறதே/


தழுவுகின்ற சிறகினில் உரசுகின்ற தென்றலும் 

மஞ்சள் முகத்திலே முத்தங்களைப் பொறிக்கையில் 

வட்டக் கருவிழிதனில் மொய்த்திருக்கும் அன்பினைச்

சூடுகின்றதே கனவும் சூழுகின்றதே வனப்பும்/


இரகசியச் சந்திப்பில் இசைகின்ற உயிர்களில் 

இரேகைகளாகப் படிகின்றதே ஊடற் சுகமும் 

இதயம் குளிர்கின்றதே  உதயத்தின் அலைவினில் 

இரசிக்கின்றேன் வண்ணங்களைத் தெளிக்கின்ற காதலையே 


ஜன்ஸி கபூர்  

அன்னப் பெடையே நாணமேனோ


பிறை நெற்றியில் படர்ந்திடும் கூந்தலைப்//  

பின்னியதோ கார்மேகமும் கற்பனையும் சுவைக்கின்றதே//


கசிகின்ற அன்பினால் உனையே மீட்டுகின்றேன்//

கரும்பினைப் பிழிகின்றாய் மனதின் ஓரங்களில்//


கூர் விழிகளும் வீழ்த்திடும் மோகத்தில்//

சூடினேன் உனையே செதுக்குகின்றாய் நினைவுக்குள்//


சிரிக்கின்றாய் உதிர்கின்றனவே பௌர்ணமித் துகள்கள்//

பறிக்கின்றேன் தென்றலே உனையே சுவாசத்துள்//


விரலும் தீண்டா மென் காதலால்//

உரசினேன் உன்றன் உயிரினை அன்பே//


சிவக்கின்றாய் சிந்தைக்குள் எனையும் சிறைப்பிடித்தே//

ரசிக்கின்றேன் அன்னப் பெடையே நாணமேனோ//


ஜன்ஸி கபூர் 

பசுமை நினைவுகள்

பால்ய வயதின் பசுமை நினைவுகள்/

படர்கின்றதே மனதில் பரவசமும் துளிர்க்கிறதே/

பள்ளி வாழ்வில் துள்ளிய நட்புக்கள்/

பனித் தூறல்களே நெஞ்சம் ரசித்திட/


அழகிய கிராமத்தின் ஆனந்த உயிர்ப்பாக/

சிறகு விரித்தேன் சிதறும் மழையினில்/

அலைப்பூவில் ஈரம் பிழிந்தே நனைந்த/

அந்த நாட்களும் அணைக்குதே சுகமாக/


ஜன்ஸி கபூர்  

இருமுகம்

அகமும் புறமுமென 

அலைகின்ற முகத்தினில்/

அதிரும் உணர்வுகள் 

அணைக்குதே வாழ்வினில்/


உதட்டுப் புன்னகைக்குள் 

உறைகின்றதே வன்மமும்/

உள்ளத்தின் சோகம்

உறவுக்குள் பூவாகின்றதே/


மெய்க்குள் மூழ்கும் 

பொய்களை மறைத்தே/

சாய்வார் வேலிபோல் 

சாய்த்திடுவார் வேட்டையினில்/


சீற்றத்தை மறைத்தே 

சிரிப்பார் அன்புபோல்/

தோற்றமும் மறைத்தே 

ஏற்றிடுவார் மறுமுகத்தை/


ஜன்ஸி கபூர்  


மறந்தால்தானே

மறந்தால்தானே பிரிவுக்குள் மூழ்கும் உறவும்/
உறவின் அணைப்பே சுகமாகும் வாழ்க்கையில்/
வாழ்விற்கும் அர்த்தமானதே உன்றன் துணையே/
துணையாகித் தொடர்கின்றாய் என்றன் நிழலிலும்/

நிழலும் நிஜமாகுமே பூக்கின்ற மெய்யன்பில்/
மெய்யன்பும் தழுவுகின்ற நினைவுகள் அழியாதே/
அழியாத ஓவியமாக உயிர்க்கின்றாய் உயிரினில்/
உயிரினில் படர்கின்றாய் தினமும் நீயே/

ஜன்ஸி கபூர்  

கூடை மேல கூடை வைச்சு



கூடை மேல கூடை வைச்சு/
ஓடையோரம் அசைந்து போற புள்ளே/
கடைக்கண் பார்வைக்குள்ள என்ன சிக்கவச்சு/
நடக்கிறீயே வாடையாத் தழுவுறேன்டி நானே/

காலில கட்டின ஒன்னோட கொலுசு/
காதோரம் சிணுங்குதடி காதலச் சொல்லுதடி/
காத்திருக்கும் நேரமெல்லாம் அனலும் வீசுதடி/
கனிந்த மனசுக்குள்ள நெனப்பும் தழுவுதடி/
 
நெற்றியில முத்துக்கள் வெளஞ்சிருக்கு புள்ள/
நெஞ்சுக்குள்ள முத்தத்தோட ஈரம் செவந்திருக்கே/
நெசத்தில நாம சேர்ந்திருக்கும் காலம்/
நெருங்கியே வரணுமே  நேசப் பைங்கிளியே/

ஜன்ஸி கபூர்   

காரைக்கால் அம்மையார்

தனதத்தன் மகளாக தரித்தாரே காரைக்காலில்/

தரணியும் புகழ்ந்திட தந்தாரே திருவந்தாதி/

புனிதவதி இயற்பெயராம் புகழானார் அம்மையாராக/

புனிதமான தெய்வமுமாகி புகுந்தாரே மனங்களில்/


சிறுவயது சிவபக்தையின் சிந்தைக்குள் சிவநாமம்/

சிவபெருமான் சிறப்புக்களை சிறப்பாக யாத்தாரே/

இசைத்தமிழின் அன்னை இசைத்தாரே பனுவல்களை/

இறைவனைப் பாடியே இணைந்தாரே திருப்பதிகத்துள்/


கயிலை மலைதனை கைகளினாலே நடந்தே/

கண்ணியமும் பெற்றார் களித்தாரே சிவனும்/

மாங்கனித் திருவிழா மாண்பாக்கும் அம்மையாரை/

மக்களும் தொழுதே மனநிறைவும் பெற்றிடுவார்/


திருக்கோயில் சிற்பங்களில்  திருமேனியைப் பதித்திட்டார்/

திருவடியின் கீழ்ப்பேற்றை திருவருளாகப் பெற்றிட்டார்/

திருவாலங் காட்டில் விதைக்கப்பட்டே உரமானார்/

திருவுருவம் கொண்டே சிறக்கின்றார் வரலாறுகளில்/

அறன் வலியுறுத்தல்

 குறள் - 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கு இயன்றது அறம்.

பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல்

பொருத்திடுமே குற்றத்தில் வருத்திடுமே பாவத்தில் 

திருந்திடலாம் அறத்துள் வாழ்வினைப் பிணைத்தே 

சிறந்திடலாம் மனிதத்துள் நமையும் இருத்தி 


 குறள் - 39

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

அறத்தோடு இசைந்து வாழ்வதே பேரின்பம் 

அன்றில் பறந்தோடுமே உள்ளத்தின் இன்பம் 

உளக் குற்றத்தால் மறைகின்ற புகழும் 

உணர்வினைச் சிதைத்து துன்பத்தில் வீழ்த்துமே 

 

அறன் வலியுறுத்தல்
-------------------------------------
மனதின் நேர்மை அறத்தின் மகுடம்/
தனக்கெனச் செய்கையில் இன்பமும் தளிர்க்கும்/

குற்றம் குறைகளைக் களைந்திடும் பண்பே/
சுற்றம் எங்குமே சிறப்பினை வார்க்கும்/

புகழும் வந்திடும் அகத்தின் தூய்மையால்/
இகழ்ந்திடுவார் அறம் மறந்து வாழ்வோரை/

வாழ்நாள் பலனை உணர்ந்திடும் தருணம்/
வாழ்த்துமே புவியும் நற்பண்பினை மதித்தே/
 
ஜன்ஸி கபூர்  

 

மன வலிமை

 
மண்ணில் பிறப்பெடுத்த உயிர்கள் அனைத்துமே/
தன்னைத் தாழ்த்துவதில்லை அற்புத வாழ்வினிலே/

தளர்ந்திடாத தன்னம்பிக்கையை மனதில் ஏந்தி/  
தலைநிமிர்கின்றேன் நானும் உக்கிரம் கொண்டே/ 

கண்ணாடியின் விம்பத்தில் பூனைத் தோற்றமே/
எண்ணத்தின் வடிவமாய் வலிமைச் சிதறல்களே/

அறிந்திடுவாரோ அகமேந்தும் முரணின் நாட்டத்தை/
புரிந்திடுவாரோ பதுமை ஏந்தும் தீப்பிழம்பை/

உருவம் பார்த்து எடை போடுவோரே/
உணர்ந்திடுவீர் வேற்றுமை கொண்ட மனதினை/

ஜன்ஸி கபூர்  
 

குறள் கவிதைகள்


(குறள்  - 65) 
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
 
இல்வாழ்வும் தந்திடும்    குழந்தைச் செல்வமே/
இனித்திடும் இன்பமாம்   இவ்வுலக வாழ்வில்/

குழந்தையின் தழுவலில்  துளிர்க்குமே மகிழ்வும்/
மழலையின் மொழியினைச்  சுவைத்திடுமே செவியும்/4

உளத்தையும் உடலையும்  அணைக்கின்ற மக்களால்/
உணர்கின்ற இன்பமே துன்பத்திற்கான மருந்தே/

சேயின் மெய்தீண்டலில் வழிந்தோடும் வலியும்/
சேர்த்திடுவர் களிப்பினை  மக்கள் செல்வத்தினர்/ 8
                                                                                              
   (குறள்  - 68) 
 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
 மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
 
பிறப்பின் பயனாம்  பெற்றோருக்கும் நன்மக்களாவது/
சிறப்பான உயர்வும்  தந்திடுமே இன்பமே/

அறிவின் உயர்ச்சிக்குள்  உயிர்த்திடும் பிள்ளையால்/
ஆனந்தமே துளிர்க்கும்  பெற்றவர்கள் நெஞ்சுக்குள்/4

 தன் பிள்ளையின்  உயர்வின் மலர்ச்சியில்/
துன்பம் கரைத்து  மனமும் களிப்பிலாடும்/  

அறம்தானே அகிலத்தின்  உயிர்களுக்கும் இன்பமளித்தல்/
அகமகிழ்ச்சிக்குள் அனைவரையும்  இசைத்திடுமே அறிவுடைமை/ 8

ஜன்ஸி கபூர்  

  குறள் 971:

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.

 

குறள் 972:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

 

#ஒளிஒருவற்கு_உள்ள_வெறுக்கை_இளிஒருவற்கு

#அஃதிறந்து_வாழ்தும்_எனல்.

ஊக்கத்தின் உயர்வினில் பெருமை


பிறர் செய்திடாத நற்செயல்களை நானும்/

செய்திடுவேனெனும் ஊக்கம் கொண்டோரே தம்முள்/

பெற்றிடுவார் பெருமையெனும் நற்பண்பினைச் சிறப்பாக/

அன்றேல் அவ்வூக்கமின்றி வாழ்தலே போதுமென்று/

சிந்தைக்குள் கருத்தினைப் பெற்றே இழிந்திடுவோர்/

இணைத்திடுவார் உளத்தில் உளக்குமுறலெனும் மாசினை/


  


 



 


 

கஸ்தூரி மஞ்சள்

அற்புத பயன்களை அள்ளித் தருமே/

அழகின் மகுடம் அருமையான கஸ்தூரி/

அழற்சி எதிர்ப்பும் அகன்றே போகும்/

அழுக்கின்  ஒவ்வாமை அதிர்ந்தே ஓடும்/


அணுகாதே புற்றுநோயும் அழியுமே பாக்றீரியாவும்/

அவசியம் நமக்கே அறிவோம் பயன்களை/

அரைத்த மஞ்சள் அகற்றுமே வடுக்களை/

அடிபட்ட வலியின் அருமருந்தும் இதுவே/


தோலின் நோய்கள் தோற்றே போகும்/

தேமல் வந்தால் தேடியே போவோமே/

தேனுடன் கலந்தால் தோன்றாதே வயிற்றுவலியும்/

தேவை மஞ்சளே சருமம் பொலிவிற்கே/ 


சித்த வைத்தியம் சொல்லும் இரகசியம்/

சிந்தை மகிழவே தூளைப் பூசுவோம்/

இளமை முகம் இதய சுகம்/

இன்றே பயனடைவோம் இனிய மஞ்சளால்/

ஜன்ஸி கபூர்