About Me

2020/07/11

எதிர்பார்ப்புக்கள் (சித்திரக்கதை)


'பானு... ஏம்மா.....எப்பா பாரு இந்தப் பெட்டியை நோண்டிக்கிட்டுதானே இருக்கிறே.   எனக்கும் வயசாச்சு. இந்த சமையலக் கத்துக்கிட்டாத்தானே நாளைக்கு வாக்கப்படப் போற வீட்டிலும் வாழலாம்'

பாட்டியின் முணுமுணுப்பை காதில் வாங்காதவளாக, பானு மடிக்கணனியில் எதையோ தேடிக் கொண்டு இருந்தாள். அவளின் மௌனம் பாட்டியின் கோபத்தை கொஞ்சம் அதிகரித்தது.  

பானுவும் மடிக்கணனியை நிறுத்தியவளாக, பாட்டி சொன்ன சமையல் உதவிகளைச் செய்யத் தொடங்கினாள். கண்களிலிருந்து இரகஸியமாக கண்ணீர் வழியத் தொடங்கியது.  

வறுமை வழியும் இந்த வாழ்க்கையோடு தன்னை நிலைப்படுத்த பானு ஒவ்வொரு கணமும் போராடிக் கொண்டிருக்கின்றாள். அவளுக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே   விபத்தொன்றில் பெற்றவர்கள் இறந்து போனார்கள். அன்றிலிருந்து இந்த  பாட்டிதான் அவளது உலகம். அயல் வீடுகளுக்குச் சென்று உழைக்கும் பாட்டியின் வருமானமே அவர்கள் இருவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தனது கிராம ஏழை மக்களுக்கு வைத்தியராகச் சேவை செய்ய வேண்டுமென்ற இலக்கோடு பானுவும் கல்விக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். அவளது முயற்சி, திறமை கண்டு அரசு வழங்கும் புலமைப்பரிசிலுடன்  சில தனவந்தர்களும் படிப்பதற்கு உதவி செய்வதனால் அவளுக்கான க.பொ.த.உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கற்பதற்கான வாய்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் பரீட்சையும் நெருங்க இருப்பதனால் அவளது முழுக்கவனமும் படிப்பிலேயே இருந்தது.  

இது கொரோனாக் காலம். திடீர் விடுமுறையிலிருக்கும் பாடசாலைகளில் பரீட்சையை இலக்காக வைத்து இணையவழியிலான வகுப்புகள் நடைபெறுவதால் பானுவுக்கும் அவ்வூர் தனவந்தர் மடிக்கணனியொன்றை அன்பளிப்புச் செய்தார். அவளும் தனது மடிக்கணனி மூலம் தினமும் கல்வியுலகிற்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தாள்.

பாவம் பாட்டி...அந்தக் கால மனுஷி. வீட்டுக்குள்ளேயே உலகமென்று வாழ்ந்து வருபவர். இந்த இணையவழிக் கல்வி பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ எதுவுமே அறிந்திருக்கவில்லை. தனது வயோதிப இயலாமையும் நோய் நிலைமையும் தன்னைச் சார்ந்திருக்கும் பானுவின்மீது கோபப்பட வைக்கின்றது.  

வீட்டுக்கடிகாரம் காலை எட்டு மணி என்பதை தெரியப்படுத்தத் தொடங்கும்போதுதான் பானுவின் மனசும் பதறத் தொடங்கியது.

'பாட்டி..........நான் படிக்கப் போகணும். இப்ப பள்ளிக்கூடம் விடுமுறை என்டாலும் இணையவழியில் படிப்பிச்சு தாராங்க. பொறகு பரீட்சையும் வைப்பாங்க. அதில கூடப் புள்ளி எடுத்தா புலமைப்பரிசிலா காசு கொடுப்பாங்க. என்ட படிப்புக்கும் இந்த உதவி கிடைச்சா நல்லதுதானே பாட்டி..........' 

என்றவளுக்கு, பாட்டியின் அனுமதி கிடைக்கவே சிட்டென பறந்தாள் மடிக்கணனி அருகில்.

அந்த இணையவழி நிகழ் பரீட்சை ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. அவசர அவசரமாக குறித்த கற்றல் இணைய முகவரியைத் தேடி தன்னையும் குறித்த நிகழ் நிலைப் பரீட்சைக்குத் தயாராக்கினாள். கணனித் திரையில் தென்பட்ட வினாக்கள் விழிகளில் வீழ்ந்ததும் மகிழ்ச்சி சிறகடித்தது. அவள் கற்றது வீண்போகவில்லை. எல்லாவற்றுக்கும் திருப்தியுடன் விடையளித்தாள். மனக் கண்ணில் புலமைப்பரிசில் கனவு அழகாய் விரிந்தது. 

'பாட்டி' 

தன்னையுமறியாது மகிழ்ச்சியில் கத்தினாள் பானு.

பாட்டியோ எதுவுமே புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம், எங்கிருந்தோ கூவும் குயிலின் நாதம் அந்த ஏழைக் குடிசைக்குள்ளும் இனிமையை நிரப்பிக் கொண்டிருந்தது. .

ஜன்ஸி கபூர் - 11.07.2020






2020/07/10

வெற்றி நாயகன்

போராளி வென்றிடுவான் மனங்களின் நேசங்களை/
போராட்டத் தளமதை துணிவுடன் நெய்திடுவான்/
பேரிடர் களைந்திட இலக்குகள் வகுத்தேதான்/
பேரொளிச் சூரியனாய் வெற்றிகள் சுமப்பான் /  

ஜன்ஸி கபூர் 

ஈரத்துளிகளின் இன்பம்

மண்ணில் வீழும் மழைத்துளிகளின் வாசம்/
எண்ணம் மகிழ்ந்தே நீர்வார்க்கும் மரங்களுக்கு/
காற்றின் துவாரங்களில் சேரும் ஈரமோ/
நாற்றின் மேனிகளில் முத்துக்களாய் வெடிக்கும்/
சிறகடிக்கும் வண்ணாத்திக்குள்ளும் சிறு கூதலோ/
இயற்கையின் அதிசயங்கள்; ஆனந்தக்கண்ணீர் வடிக்கும்/

ஜன்ஸி கபூர்

2020/07/09

வாழ்க்கைக் கோலங்கள்

இனியவாழ்வு எம்  கல்லூரிப் பருவமாய்
இதய மகிழ்வினில் கனவுகள் உயிர்த்தன
இணைந்திட்ட துணையோ இனிய வரமாய்
காலச் சிறகடிப்பில் காட்சிகள் மாறின
கோலச் சிதைவினில் வனப்பும் கரைந்தது
வறுமைக் கொடுமையினால் மனமும் வெறுத்ததே

ஜன்ஸி கபூர் 

உன்னத வாழ்க்கை

கட்டுப்பாடு துணையாகும் கண்ணிய வாழ்வினில்
தட்டுப்பாடு இன்றி தழுவும் ஒழுக்கமும்
விட்டுக்கொடுத்தே வாழ்ந்திட்டால் தன்னடக்கம் நமதாகும்
தட்டிக்கொடுக்கும் தரணியும் அன்பால் வசப்பட்டே

 ஜன்ஸி கபூர் 

2020/07/08

வெட்டினாலும் வீழாதே


 வெட்டினாலும் வீழாதே வென்றெழவே வேரூன்று
எட்டுத்திங்கெங்கும் வழியிருக்கு எதிர்காலம் உனக்கழகு
விடிந்தேதான் சிதைந்தாலும் விருப்போடு எழுந்தோடு
வாழும்வரை போராட்டம் வாழட்டும் கனவுகளே

சூதும் அண்டிடும் சூரியனாய் துரத்திடு
தீதும் கொளுத்திடும் தீயாய் உளிர்ந்திடு
தீராப் பகையை தீயாய்க் கருக்கிடு
தீரும் குறைகளே செயலாய் வாழ்ந்திடு

தடைகள் அறுத்தெறி தன்னம்பிக்கையே வலிதாம்
உடைந்த நீரோட்டமே உயிர்ப்பாகும் அலையாம்
படைகள் சூழ்கையிலே பகுத்தறிவே அரணாம்
துடைத்தெறி விழிநீரை துயரங்களே துயிலாகும்

தோண்டியெடு சோம்பலைத்தான் தோல்வியது துளைக்காதே
வுண்டியோடும் சக்கரமாய் வாழ்வைத்தான் தேடியோடு
வுhழ்ந்திடத்தான் பிறப்பெடுத்தோம் தாழ்வேது தரணியிலே
புகழ்ந்திடட்டும் மாந்தர்தான் புன்னகையோ உன்னோடு

ஜன்ஸி கபூர் 


குறைவின்றிக் கொடுக்கின்றார் இரையாகும் உயிருக்கே//
கறை படியும் வாழ்வைச் சுமப்பவரெல்லாம்//
மறை கற்றிடவில்லை மாக்களைக் காப்பதற்கே//

- ஜன்ஸி கபூர் -07.07.2020


2020/07/07

செல்வங்கள்

நீலக்கடல் நனைந்தே நீந்தும் அலைகள்/
நீண்டு சென்றே நீளத் துடுப்பாகும்/
ஒய்யாரமாய்த் துள்ளும் ஓடங்களும் அள்ளும்/
ஒவ்வொரு மீனும் மீனவர் வாழ்வாதாரங்களே/

-ஜன்ஸி கபூர் 

தாய்மை

பச்சைப் பசேலென்ற பசுமை  பூமியில்
இச்சையுடன் நனைந்ததே இளம் காற்று
மேகத் திரையும் மெல்ல அசையவே
மோகத்தில் வீழ்ந்தன மழைத் தூறல்கள்
போக விளைச்சலில் குலுங்கின மணிகள்
மகிழ்ச்சிப் புன்னகையில் அன்னை வயல்

 - ஜன்ஸி கபூர்

2020/07/05

காந்தப் புன்னகை

கைவண்ணம் ஒளிரும் தூரிகையின் துடிப்பில்/
ஓவியங்கள் உயிர்த்தெழுமே மனதின் ரசிப்புடன்/
காந்தப் புன்னகையாள் மொனோலிசா அழகும்/
அழகியல் கலையின் அற்புத வார்ப்பே/

ஜன்ஸி கபூர்