About Me

2012/07/29

பிரிவில்


என் வாலிபக் கனாக்களில்
உனை நிறுத்தி
உலா வந்தேன் - நீயோ
சிறகொடித்து
வேர் முளைக்கின்றாய்
வேறொரு பூமியில் !

என் ஜனனத்தின் பதிவில்
உனைப் புகுத்தி
இறுமாந்திருந்தேன் - நீயோ
இரக்கமின்றியென்
இதயம் பிடுங்குகின்றாய்!

என்
மனச்சிறகுகளில் உனை
மணிக்கணக்காய் தைத்து
பயணிக்கத் துடித்தேன் - நீயோ
வெற்றுவெளியொன்றின்
கற்பாறையாய்
இறுமாந்திருக்கின்றாய் !

நம் சந்திப்புக்களின்
சிலிர்ப்புக்களிலெல்லாம் - இப்போ
நீயோ
சினம் தடவி தீப்பிழம்பாகின்றாய்!

சந்தோஷம் விரட்டி - நம்
வசந்தங்களை மிரட்டி
நீயறைந்த ஆணி - என்
தனிமைச் சுவருக்குள்
என் சிறையிருப்பை
உறுதிப்படுத்துகின்றது!

கானாமற் போன கனாக்களைத்
தேடித் தேடியே - நாம்
கோணலானோம்
நடைப்பிணமுமானோம்!

இப்போ
ரணமாகிப் போனவுன்
பிரிவின் கணங்களுக்காய்
பிரார்த்தித்து பிரார்த்தித்தே - என்
உதடுகளும்
முடமாகிப் போகின!


- Jancy Caffoor-

உன்னால்


என் மதிமுகத்தின்
மேடு பள்ளங்கள் - உன்
ஞாபகங்களால் நிரப்பப்பட்டுக்
கொண்டிருக்கின்றன !

இலையுதிர் காலத்தின்
வெக்கைக்குள்ளும் - உன்
ஞாபகங்கள்
ஈரலிப்புக்குள் தான் உறைந்து கிடக்கின்றன!

பிறர் கண்படாது
பூமி ரேகைக்குள்  உனைப்
பத்திரப்படுத்தியே
என் கைரேகைகள் பாறையாகின!

உணர்வுகளால் - நீ
வரையும் ஓவியம் - என்
கனவு முகத்தின் விம்பமாய்
அழகு காட்டும் !

ஊடலில் அடிக்கடி என்
விழிச்சாறு பிழியும் வில்லன்
நீயென்றாலும்
மனசேனோ - உன்
மானசீக நெருடலில் தானின்னும்
அப்பிக் கிடக்கின்றது !


- Jancy Caffoor-


விதியின் காலடியில்


அன்றோ நாம்
நேசத்தைச் சுருக்கிக் கொண்டோம்
மூன்று  முடிச்சுள் !
இன்றோ
நம் வாழ்வின் ஸ்பரிசம்
தூக்குக் கயிற்றில்!

போலியான வாழ்விற்கு
வேலியெதற்கு தங்கத்தால்!

நேச வார்த்தைகளால்- நம்
நெஞ்சை நிரப்பி
நாமீன்ற கனாக்கள்
வீழ்ந்து கிடக்கின்றன
ஞாபகவறையில்
வெறும் செல்லாக் காசாகி!

மனப் பொருத்தமென்று
மணம் கண்டோம்
பணப் பொருத்தமின்றி
கானலில் தடம் பதித்தோம்!

குடும்ப விழுதுகளில்
உலாக் காணத் துடித்து நின்றோம்!
நீயோயின்று - எனை
அக்கினிக்குள் சிறைப்படுத்த
துடிக்கின்றாய்!

ஓ!
கண்ணீரில் காணாமற் போன
சொப்பனம் தேடி
கன தூரம் நடக்கின்றேன்
தனிமையில் !
நீயோ
வேற்று மனிதனாய்
நெருஞ்சியில் விழி நெய்து
பழிக்கின்றாய் என் விதி மீது!

- Jancy Caffoor-
    29.07.2012








ஆதவன்


பகல் நேர வான் முட்டையின்
மஞ்சட்கரு!

நீலப் பட்டாடையில்
பதிக்கப்பட்ட  தங்கக் கற்கள்!

பால் வீதியைக் காவல் காக்கும்
ஒளி வீரன்!

வானில் தவறிவிடப்பட்ட
தங்க நாணயம்!

ஒளித் தூரிகையால்
வரையப்பட்ட  ஓவியம்

தன் முகம் பார்ப்போரைச்
சுட்டெரிக்கும் தீப்பந்தம்!

அகில உற்பத்திக்கு
படைத்தவனிட்ட கரு!

இருளானின் நெற்றியில்
யாரிட்டார்  இச் சந்தனம்!


-Jancy Caffoor -