2013/04/10
உன்னுள் நானாய்
என் தேசம் தொலைத்து வந்தேன்
திசையெட்டும் மறந்து நின்றேன்
உணர்வறுந்தும் நின்றேன்
உடமையும் இழந்து நின்றேன்
அகதி நானென்றே
ஆர் ஆரோரா
இதிகாசம் தேடுகையில்
வந்தாய் - என்னைத்
தாலாட்டும் அன்னையாய்!
காமம் தேடும் காதலிலே
நீயோ என் பாசத் தாயாய்!
என் இழப்புக்களுக்கீடாய்
இறை பரிசு நீயென்றே அறிவிக்கின்றேன்
என் வாழ்வியல் பயணத்தில்!
- Jancy Caffoor-
09.04.2013
நினைவுகளில்
காதலித்தால் கவிதை வரும்
காதலழிந்தால்
கவிதையுடன் கண்ணீரும் வரும்!
நேற்று கவிதையாய் பூத்த நான்
இன்று
கண்ணீரில் கரையும் ஓவியமாய்!
அவன்
மாற்றம் தந்த ஏமாற்றம்
தடுமாற வைக்கின்றது என் மனதை!
வலிக்கிறதடா
உன் மௌனத்தின் இம்சையில்
சிதைகின்றதடா என் மனசு!
நிமிடத்திற்கு நிமிடம்
பெயரழைத்தே
சீண்டினாய் ஊடல் குலைத்து!
இனி காண்பேனோ
அன்பால் வருடுமுன்
காதல் மனதை!
- Jancy Caffoor-
09.04.2013
புரிதலும் பிரிவும்
குதுகலங்களும் குறும்புகளும்
உன் வாழ்வியலின் விசிறிகள்
புரிய வைத்தாய் எனக்கு
புளாங்கிதமாய் விடிந்த விடியலை
இருளாக்கி!
இருந்தும் உன்
மெய்யின் அரங்கத்துக்குள்
எத்தனை பொய்கள்!
மறைத்தாயா
உன்னை எனக்கு மறைத்தாயா!
அலட்சியங்களும் அவமானங்களும்
வாழ்வோரத்தின் கற்களல்ல
அவை - என்
புதுப் பாதையின் தடங்கள்!
உன்னை நான் சபிக்க மாட்டேன்
என்னை எனக்கே
அடையாளப்படுத்திய ஆன்மா நீ!
நேற்றுதிர்ந்த உன் வார்த்தைகள்
இன்னும் ஈரம் துடைக்க முன்னர்.
நீயோ வெம்மைக்குள்
கருகிக் கிடக்கின்றாய்!
அழகும் காமமும்
வாலிபத்தின் நோட்டங்கள்!
தீர்ந்த பின்னர்தான் தேடலில் வீழும்
அன்பின் சிலிர்ப்புக்கள்!
இனி
உனக்காய் அழவே மாட்டேன்!
என் கண்ணீரைக் கூட - உனக்கான
புன்னகை வரமாய் விட்டுச் செல்வதால்!
என்னை ஓர் கணம் சிந்தி!
உன் வாலிபக் கடலின்
சஞ்சலங்களை கரையொதுக்கி
ஒரு கணம் சிந்தி!
கண்ணீரின் ஈரம் ஒரு துளியாவது
எனக்காய் சேரும்!
வரும் வரை
இருள் கடந்து சென்ற பின்னர் - நீ
இறங்கி வருவாய் என்று!
நிலவுக்காய் நீ
உன்னை விட்டுக் கொடுக்கலாம்
தவிப்பது நான்தானே!
ஆயிரம் அரவணைப்புக்கள்
மடி சேரலாம் இருந்தும்
என் உச்சம் தலை வருடும்
தாய்மையாய் நீ!
என்னுள் விட்டுச் சென்ற - உன்
கனவுகளுக்காகவேனும்
நான் வாழ்ந்தாக வேண்டும்
நீ வரும் வரை!
- Jancy Caffoor-
09.04.2013
Subscribe to:
Comments (Atom)



