முகநூல்!
நவீனத்தும் போஷிக்கும்
இயந்திரம்!
ஒரு நொடியில்
உலகம் தொட்டு வர - நமக்கு
அனுமதிக்கப்பட்ட விசா!
விண்ணப்பிக்கும் முகங்களை
தெரிவு செய்ய வுதவும்
தேர்வு மையம்!
படிக்கப் படிக்க
அலுக்காத புத்தகம்!
இங்கே!
தொலை நிழல்கள் கூட
நிஜங்களாய்
வார்த்தை பேசிச் செல்லும்
பாசத்துடன்!
நட்பு
காதல்
பொழுதுபோக்கு
போராட்டம்
பகைமை
என எல்லாமே கிடைக்கும் தாராளமாய்
இலவசமாய்!
இங்கு
உணர்வுகள்தான் பேனா மொழி!
கிண்டல்களும் பாசங்களும்
போதனா மொழி!
வாருங்கள் இங்கே!
இலக்கியம் வளர்க்கலாம்
புதுமைகள் பகிரலாம்
பழகிப் போகும் உள்ளங்களுடன்
அன்பைச் செலுத்தி
பொழுதையும் நகர்த்தலாம்!
முகவரிகளும்
முகமூடிகளும்
வேள்வி நடத்தும் இவ் யாகத்தில்
புத்திசாலிகள் பிழைத்துப் போவார்!
அப்பாவிகள்
அழிந்தும் போவார்!
முகநூல் பாதுகாப்புக் கடவையில்
தரித்து நின்று
பின்னூட்டங்களும் விருப்புக்களும்
படைப்புக்களில் சேகரித்துக் கொள்ள
இதோ கணனிப்
பயணம்!
வாருங்கள் கை கோர்ப்போம்
நல்ல நண்பர்களாய்!
- Jancy Caffoor-
10.04.2013
2013/04/10
ஒரு காதல் கடிதம்
அன்புள்ள......................!
நான் உன்ன நேசிக்கிறது உனக்கு தெரிஞ்சும் கூட ஏன்டி என்னக் காயப்படுத்துற. உன் மேல எவ்வளவு ஆச வைச்சிருக்கிறேன். உனக்காக உசிரய தருவேன்டி அது உனக்கு தெரிஞ்சும் உன் மௌனத்தால கொல்றீயடி.....சத்தியமாச் சொல்றன்.....நீயெனக்கு கெடக்கலைன்னா செத்துப் போய்டுவேன்டீ"
இப்படிக்கு ..........................
இது எனக்கு நேற்று கிடைத்த காதல் கடிதமொன்று......
(அட.....வெயிட்.....எனக்கல்லப்பா....மொறைக்காதீங்க)
இத எழுதினது 16 வயது மாணவன், (தரம் 1 1) எங்க ஸ்கூல்தான் படிக்கிறான். அவனுக்கு நான் சயன்ஸ் பாடம் படிப்பிக்கிறேன். ரவுடித்தனத்தில பர்ஸ்ட்.. படிப்பில சத்தியமா அவனுக்கு மண்டைல ஒன்னுமே ஏறாது. தினம் தினம் என்னட்ட ஏச்சு வாங்கும் போது மண்டைய மண்டைய ஆட்டுவானே தவிர அதில ஒன்னுமே ஏறாது.
அவள் தரம் 9 படிக்கும் மாணவி. கெட்டித்தனம், அழகு, அமைதி, செல்வம் எல்லாம் ஒரே இடத்தில குவிந்திருக்கும் பிள்ளைதான் .. இவன் தொடர்ந்து 2 வருஷமா அவளை ட்ரை பண்ணிட்டு வாறன்,. அவளோ அவனத் திரும்பிக் கூடப் பார்க்கல. கடைசில அவர் பொறுமை இழந்தவராக தன் நண்பியிடம் இக் கடிதத்தைக் கொடுத்து தூதனுப்ப, அவள் இதை வாங்க மறுத்து வீசியெறிய.................
அக்கடிதம் ஆல் ரவுண்டராகி கடைசியில் அந்தப் பெண் பிள்ளையின் வகுப்பாசிரியையான என்னிடமே திரும்பி வந்து சேர்ந்தது. விசாரணையை நான் தொடங்கி விட்ட போது, அந்தப் பிள்ளை தனக்கு நடந்ததை சொல்லி அழ, அவனைத் தேடினேன்.
எப்படியாவது ............ அவன் திங்கட்கிழமை என்னிடம் மாட்டுவான்தானே .அப்ப இருக்கு..........!
இதுகள் எல்லாம் லவ் பண்ணி........கருமம் கருமம்....
படிக்கிற வயசில நாசமாக போகத் துடிக்கிறவன அடி கூடத் திருத்தாது!
தளிர்கள் - 7
கவிதைகள் புனைகின்றேன்
இருந்தும்
நீயென் ரசிகனாய் இல்லை!
கடந்து செல்கின்றாய்
என்னுள் தனிமைகளை நிரப்பி தாராளமாய்!
நேற்றைய தீர்மானங்கள்
இன்று மாற்றப்படலாம்!
இன்றைய எண்ணங்கள்
நாளை புதுப்பிக்கப்படலாம்
மாற்றங்களுடன் கூடியதே வாழ்க்கை!
உண்மையை ஏற்போர் தடைகளைச் சந்திக்காமல் வாழ்வில் வெற்றி பெறுகின்றார்.
வருந்தாதே!
நிறுத்தி விடுகின்றேன் - உன்
காதலை அல்ல
உன்னுடனான சந்திப்பை!
- Jancy Caffoor-
10.04.2013
நம் பூமி
சூரியனை யின்னும் கீழ்வான்
விரட்டவேயில்லை
இருந்தும் விடியல் மறுக்கப்பட்ட
கைதிகள் இவர்கள்!
கனவுகளால் நெய்யப்பட்ட
வாழ்க்கைக் கூடாரங்கள்
தரிக்கப்பட்டன அரக்கர்களால்
திட்டமிடப்பட்டு!
இவர்களின் பூமியிலேனோ
விதைக்கப்படாத மனிதாபிமானம்
விட்டுச் செல்கின்றது இறப்புக்களை!
உறக்கத்திற்காக தாழிடப்படும்
விழிகளினி
திறக்கவே போவதில்லை
கண்ணிமைகளை வருடியபடி!
இங்கே
ஆயுத விளைச்சல்களின் அறுவடைகள்
தாராளமாய்
ஊற்றிக் கொண்டிருக்கின்றன
இறப்புக்களை!
மூடிவிடுங்கள் யுத்தக் குழிகளை
பிணங்களால்
ரணமாகாமலிருக்கட்டும் நம் பூமி!
- Jancy Caffoor-
10.04.2013
Subscribe to:
Comments (Atom)





