About Me

2013/04/11

குறத்தி மகன்



சென்ற மாதம் ஒரு நாள் , காலை நேரம்...........

இடம் : வவுனியா பேரூந்து நிலையம், இலங்கை

பிச்சை எடுப்பதை தன் தொழிலாகக் கொண்ட குறவர்க் கூட்டமும் அந்த பகுதியிலுள்ள பிரபல்ய ஹோட்டலொன்றுக்கு அருகிலுள்ள தரையொன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக பதினைந்துக்கும் மேற்பட்ட தலைகள்..............!

பெண் குறத்திகள் , தமது முதுகில் தொங்க விடப்பட்டிருந்த சேலைத் துணியை நிலத்தில் பரப்பி, தாம் பிச்சையெடுத்த சில்லறைக் காசுகளை அதில் கொட்டி விட்டு மீண்டும் தமது சிறு குழந்தைகளை இடுப்பில் செருகியவாறு பிச்சைத் தொழிலுக்குத் திரும்ப, கணவன்மார்கள் அந்தச் சில்லறைகளை எண்ணி எண்ணி தமது பைகளுக்குள் நிறைத்தார்கள்.

நானோ, அவர்கள் அறியாமல் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். எனது கல்லூரிக்குப் போக வேண்டிய முச்சக்கர வண்டியின் தாமதம் எனக்கு வசதியானது.

எல்லாப் பணமும் எண்ணி முடிந்ததும், அவ் ஐந்து ஆண்களும் தமது மனைவிமார் கொடுத்த பொற்காசுகளுடன், அப் பஸ் நிலையத்திற்கு எதிராகவுள்ள கடையொன்றை நோக்கி வேகமாகச் சென்றார்கள்....


அந்தக் கடை "சாராயக் கடை"

இவனுகளுக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி, குட்டி குடும்பம்....................நானாக இருந்தால் காசு கொடுத்திருக்க மாட்டேன். தலையைச் சீவி காக்காக்கு போட்டிருப்பன்..

உழைப்பறியாத மாக்கள் இப்படித்தான் பணத்தைச் சீரழித்து நாசமாகிப் போவார்கள் போல!





உளிகள்



மன எண்ணங்கள் வேறுபடும்போது முரண்பாடுகள் தோன்றி எதிரிகளாக உருவாக்கப்படுகின்றனர்.

எதிரிகளை நாம் சமாளிக்கும் போது, வாழ்வில் பல சவால்களை எதிர்கொள்ளும் அனுபவங்கள் கிட்டும்.
--------------------------------------------------------------------------------------------

பனை உரசும் காற்றின் சுகந்தத்தில் பால்யம் கரைத்த மங்கை நான்

--------------------------------------------------------------------------------------------



அன்புக்கு முன்னால் அறிவியல் கூட தோற்றுப் போய் விடுகின்றது.

காந்தத்தின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளும் என்பது அறிவியல் உண்மை. இது நான் கற்றது. கற்றுக் கொடுப்பது!

ஆனால் ............!

ஒத்த மன எண்ணமுடையோர் ......................

( அவர்கள் காதலராக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி )

வாழ்வில் ஒருபோதும் வேறுபடாமல் பிரியால் இணைந்தே இருக்கின்றனர். இவர்களுக்கிடையிலான வலிமையான அன்புசார் கவர்ச்சி விசைகள் காலவெளியில் ஒருபோதும் விரயமாவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------


உன் அருகாமையில் உறைந்திருக்கும் ஒவ்வொரு நொடிகளுமே, புதிதாய்ப் பிறப்பெடுக்கின்றேன். உன் பேரை மட்டும் உச்சரிக்கும் உன்னவளாய்!
-------------------------------------------------------------------------------------------------

நீ பூவையென்பதால்..........
தினமுன்னை பூக்களால் அர்ஜிக்கவா!

நீ பாவை என்பதால்.........
தினமுன்னை பாக்களால் பரவசமூட்டவா!
--------------------------------------------------------------------------------------------


காதல் செய்து ஊடல் தந்தே
காக்க வைத்தவர் காணாமல் போய்
தாமதித்து நம்முன் வருகையில்......!!

அடடா...........

ஆத்திரம் கூட அழகான அன்புதான்.........!!
----------------------------------------------------------------------------------------

மறதிதான் கவலைகளுக்கான மருந்து


- Ms. Jancy Caffoor -

2013/04/10

பவகேசன்

திருமண வாழ்த்து
2013.04.11



 எமது   ஸாஹிராச் சமூகத்தைச் சேர்ந்த  யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியங்காட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் பவகேசன் நாளை வியாழக்கிழமை (2013.04.11) திருமண பந்தத்தில் இணையவுள்ள பவகேசன், பிரகாசினி தம்பதியினர் தம் இல்லறத்தை நல்லறமாக்கி, குடும்பம் தளிர்த்து பல்லாண்டு வாழ  வாழ்த்துகின்றேன்.






முகநூல் பயணம்

முகநூல்!

நவீனத்தும் போஷிக்கும்
இயந்திரம்!

ஒரு நொடியில்
உலகம் தொட்டு வர - நமக்கு
அனுமதிக்கப்பட்ட விசா!

விண்ணப்பிக்கும் முகங்களை
தெரிவு செய்ய வுதவும்
தேர்வு மையம்!

படிக்கப் படிக்க
அலுக்காத புத்தகம்!

இங்கே!

தொலை நிழல்கள் கூட
நிஜங்களாய்
வார்த்தை பேசிச் செல்லும்
பாசத்துடன்!

நட்பு
காதல்
பொழுதுபோக்கு
போராட்டம்
பகைமை

என எல்லாமே கிடைக்கும் தாராளமாய்
இலவசமாய்!

இங்கு
உணர்வுகள்தான் பேனா மொழி!
கிண்டல்களும் பாசங்களும்
போதனா மொழி!

வாருங்கள் இங்கே!

இலக்கியம் வளர்க்கலாம்
புதுமைகள் பகிரலாம்
பழகிப் போகும் உள்ளங்களுடன்
அன்பைச் செலுத்தி
பொழுதையும் நகர்த்தலாம்!

முகவரிகளும்
முகமூடிகளும்
வேள்வி நடத்தும் இவ் யாகத்தில்

புத்திசாலிகள் பிழைத்துப் போவார்!
அப்பாவிகள்
அழிந்தும் போவார்!

முகநூல் பாதுகாப்புக் கடவையில்
தரித்து நின்று
பின்னூட்டங்களும் விருப்புக்களும்
படைப்புக்களில் சேகரித்துக் கொள்ள

இதோ கணனிப்
 பயணம்!

வாருங்கள் கை கோர்ப்போம்
நல்ல நண்பர்களாய்!

- Jancy Caffoor-
     10.04.2013