About Me

2012/06/10

நீ


என் கனவு நதியின்
குளிர் நீரோட்டம் நீ!

என் ஆத்மா சரீரத்தின்
சுவாசப் படிமங்கள் நீ!

என் சிந்தனை இராக்களின்
விடியல் நீ!

என் உதடு உச்சரிக்கும்
தமிழ்மொழி நீ!

என் மனப்பை சுமக்கும்
அழகிய கர்ப்பம் நீ!

இருந்தும் 

நிழல்களின் இருக்கையில்
கையசைக்கும் சமாந்திரங்கள் நாம்!

நினைவுப் புள்ளிகளில் மாத்திரமே
தொட்டுக் கொள்கின்றோம் ரகஸியமாய்!

ஜன்ஸி கபூர் 

காதலித்துப் பார்


காதலித்துப் பார் 
முட்களில் படுத்தாலும்
ரோஜாவுன் மடியாகும்!

கண்ணாடியில் உன் விம்பங்கள்
அடிக்கடி அழகு பெறும்!
விழிகள் காதலில் கசிந்து
இதய மொழிகள் புன்னகையில் வடியும்
காதலித்துப் பார்!

உனக்கு அவள் 
அவளுக்கு நீ 
சரித்திரங்களில் உங்கள் பெயர்கள்
பொறிக்கப்படும்!
உயிரோ கனவின் தித்திப்பில்
மயங்கிக் கிடக்கும்
காதலித்துப்பார்!

நண்பர்கள் அந்நியமாவார்கள்
அந்நியமான அவளோ அன்பாவாள்!
மௌனங்கள் மனசைக் கிள்ளும்
மனசோ காதலில் நனையும்
காதலித்துப் பார்!

ஜன்ஸி கபூர் 

நிலா நிலா ஓடி வா


நிலாவே
உன்னை பல நாட்களாய்
கண்காணிக்கின்றேன்!
ஏனின்னும்
உன்னால் அடைகாக்க முடிவதில்லை
குஞ்சு நிலவொன்றை - என்
பிஞ்சு விழியினுள் நுழைத்திட!

சேவலின் சிறகடிப்போடு
ஒளிந்து கொள்ளும் நீ
பகற்பொழுதின் வறட்சியில்
மறைந்து கொள்வதும் ஏன்!

உன் பருக்கன்னங்களை
ஒற்றியெடுக்க சேலை தருகின்றேன்!
பூமியின் செல்லப்பிள்ளையே
நாளையென் கையசைவு கண்டு
தரையிறங்கி வா வேகமாய்
எனக்கும் சேவகம் செய்திட!


- Jancy Caffoor-

திறந்து பார்க்காதே



துருப்பிடித்த என்னிதயத்தை
திறந்து பார்க்காதே அடிக்கடி!
இற்றுப் போன காதலின் எலும்புக்கூடுகள்
அங்கே மரண ஓலமிடுகின்றது !

நகரும் ஒவ்வொரு நிமிடங்களோடும்
போராடும் எனக்குள் 
முட்கம்பிகளின் சாம்ராஜ்யம்
 காவல் காக்கின்றது வேலி விரித்து 
யாரும் நுழையாமல்!

விடியல் துசு தட்டும் கருமை
அப்பிப் பிடிக்கின்றது என் வாலிபத்தில்
ஆக்ரோஷமாய்!
உயிரோ 
தன் கயிரறுக்க நினைத்து
வெம்மைக்குள் தியானித்துக் கிடக்கின்றது!

கார்கால முரசொலியால் 
விழிக்குளங்கள் விறைத்துக் கிடக்கின்றது!
வெள்ளம் வழியும் தருணங்களுக்காய்- என்
கன்னங்கள் தவித்துக் கிடக்கின்றது!

அரிதாரம் பூசும் முகமகிழ்வோ
காலாவதியாகிப் போகின்றது- என்
கவனிப்பாரற்ற உயிர்த்துடிப்போ
மௌனிப்புக்களுடன் அலைந்து போகின்றது!

திறந்து பார்க்காதே என்னை நீயும்
திறந்து பார்க்காதே- உன்னால்
இறந்து போன என்னிருதயத்தை- மீள
திறந்து பார்க்காதே!

ஜன்ஸி கபூர்