About Me

2012/07/30

சொந்தம் எப்போதும்!


கால நகர்வில் சிதையாத- என்
மன தேசத்தின்
மானசீக தேசிய கீதம் நீ!

உன் 
ஞாபகப் பிரகடனங்களிலேயே - என்
இருப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றன!

உன் 
அசைவுகளை மோப்பம் பிடித்தே
என் புலனங்கங்கள்
விருது பெற்றன உளவாளியாய்!

என் 
உணர்வுத்தூறலில் உனை நனைத்து
கவிதையாய்ச் சுமக்க - என்
ரேகைகள் உடன்பட்டன!

உன்னை உச்சரிப்பதால் 
சொந்தமான சுருதி - என்
குருதிக்குள் குடியிருப்பானது!

பனித்துளிக்குள் பதுங்கியிருக்கும் - உன்
நாணம் கண்டு
சூரிய ரேகைகள் குளிரானது!

என் 
இமையோரம் ஒளியுமுன்
மலர் முகம் காக்க 
பூட்டிவைத்தேனுன்னை
என் கவிச்சோலைக்குள்!

உன் 
நளின நடையில்
சுளுக்குக் கண்ட என் இலட்சியம்
இப்போ
உன் ஆணையிலொட்டிக் கிடக்கின்றது!

நீயுன் 
நக முனைகளின் தலை சீவுகையில்
வலிக்கின்றன
என் விரல்கள்!

இவ்வுருளுமுலகின்
மிரளும் யதார்த்தம் கண்டு- உன்
காலடியில் பரவிக் கிடக்க
என் ஆத்மா துடிக்கின்றது
சில கணங்களேனும்
நிம்மதிச் சுகத்திற்காய்!

நரை கண்டாலும்
பிரிவுத் திரை காணா நம் சொந்தம் 
என்றும்
கறை காணா நேசத்தின்
இருக்கை!

ஜன்ஸி கபூர் 

 



அழகி


என் தனிமைச் சாரளமுடைத்த புள்ள
துணிச்சலாய் நெஞ்சுக்குள்ள வந்தாள் மெல்ல!
இனிமையைப் பூசிப்புட்டாள் உள்ளே
இனி தூக்கமும் வராது அல்லோ

மாதுளைச் சாறின் உதடு கண்டாள்
வார்த்தைகளில் மதுவும் தந்தாள்
போர்வையாய் உசிரில் நின்றாள்
பார்வையால் எனைத் தாங்கிக் கொண்டாள்!

தன் செம்பருத்தி விரலிலே
என் ரேகையை பதித்து நின்றாள்
அவள் மெல்லிய ரோசாச் சொண்டில்
என் பெயரை மொட்டாக்கி கோர்த்துப்புட்டாள்!

தன் கால் கொலுசின் ஓசையிலே
என் காதலையும் கொஞ்ச விட்டாள்........
ஆளு யாருமற்ற தோப்பினிலே
ஆறடி கூந்தலால் என்னைக் கட்டிப்போட்டாள்!

காற்றில் தன் சேலை நழுவுகையில்
காட்டி நின்றாள் தன் வெட்கத்தைக் கொஞ்சம்...........
காற்றோடுரசும் நாற்றுக் கண்டு
காதலோடு எனையும் சேர்த்தணைத்தாள்!

ஆற்றில போகுது உன் கண்ணு மீனாய்
என் ஆத்துக்குள்ள எப்ப வாற மீனா
என் பாட்டுச் சொல்லும் சங்கதியென்ன புள்ள
தாளம் போட நீயும்  வாடி மெல்ல!

ஜன்ஸி கபூர் 

கவி தந்து போனவனுக்காய்


பல கவி என்னுள் தந்த
உனக்கான கவித் தூதிது!

எல்லாம் எனக்கே தந்து நின்றாய்
ஏனடா !
என்னை மட்டும் எடுத்துச் சென்றாய்!

உன் எண்ணங்கள் எனக்குள்
ஆவணங்களாகும் பொழுதொன்றில் 
ஓசையின்றி நகர்ந்தாய் - மன
அசைவின் உயிர்ப்பைக் கரைத்த படி!

நெஞ்சுக்குள் உன் ஏக்கங்கள்
இம்சைகள் செய்ய 
ஊனமாகிக் கிடக்கின்றேன்
யாருமற்ற தனிவெளியில்!

உன் தெருக்களில் விழும் - என்
காலடித் தடங்களை உனக்காக
விட்டு வருவேன் 
என் நேசத்தின் நினைவாகச்
சேகரித்துக் கொள்!

அம்சமான உன் முகமும்
அழகானவுன் புன்னகையும்
தொட்டுச் செல்லும் - என்
ஞாபக வேலியை என்றும்
நெசமாய் கட்டியாளும்!

உன் உணர்வுச் சோலையில்
எனைக் கிடத்தி
நீ நெய்த பஞ்சனைக்குள் நானே
தீ வார்த்தேன்
அன்புத் தீவிரவாதியாகி!

பிரிவில் தான்டா புரிதலும் !
முட்களாய் நானுன்னைக் கிழித்து
வழிந்த செந்நீரை 
கண்ணீராய்த் துடைத்தேனோ !

வலி மட்டும் மிஞ்ச
வழி பார்த்து நிற்கின்றேன் - உன்
மீள வரவிற்காய்!


ஜன்ஸி கபூர் 





கண்ணீர்ச்சிலை

ஓ  

வாழ்க்கைத் தேசம் !!
அழகான வாழ்க்கைத் தேசம் ..!!!
தோற்றுப் போனதில்
கண்ணீர்வார்ப்புக்கள்
தாரை தாரையாய்
தரையை ஆக்கிரமிக்கும்!

கனவுகளின்
தழும்புகளில் விசிறப்பட்ட
ஏக்கங்கள் 
முத்திரையாய்
முகங் காட்டும்!

இருட்டடிப்புச் செய்யப்பட்ட
சந்தோஷங்களைத் தேடி தேடி
அனல்வெளியில் 
யாகங்கள் தொடரும்!

முட்வேலிக்குள் 
நாட்டப்பட்ட இதயமோ
மண்டியிட்டுக் காத்துக் கிடக்கும்
மரணத்தின் சைகைக்காய் !

விழியோர நீரினால் 
விம்பம் காட்டும் கண்ணாடி கூட
ஈரமாகும்
இரசத்தையும் விரட்டி மிரட்டி!

ஒவ்வொரு நொடிகளும்
ஒவ்வொரு யுகங்களாய்
மிரளுகையில் 
வாலிபமும்
தாலியறுந்து போகும்!

விதியின் நகர்வலத்தில்
நசுங்கும் 
சுதந்திர இறக்கைகள் - தன்
உயிர்ப்பை மறந்து
வெந்து போகும்!

அண்டம் விறைக்கும்
உஷ்ணம் வார்த்தைகளாகி
மனதை உருக்கும் 
சோகங்களின் அட்டகாசத்தில்
சகாராக்களும்
சகபாடிகளாகும்!

விடிவின் தொடுகைக்காய்
காத்திருக்கும்
காத்திருப்புக்கள் மட்டும் 
நீளமாகும் - என்
நிதர்சன வெளியில்!


ஜன்ஸி கபூர் 




பெண் அவலம்


(2011 ஆகஸ்ட் மாதம்- இலங்கைத் தீவின் பல பகுதிகளில் உடலில் கிறீஸூம், விரல் நகங்களில் ஆணியும் பதித்தவாறு பெண்களை மாத்திரம் சித்திரவதை செய்து அவர்களின் இரத்தம் ரசிக்கும் மர்ம மனிதர்களின் அட்டகாசம் அதிகரித்த அந்தப் பொழுதினில் எழுந்த கவிதையிது)

மனிதம்..............!
மரணத்தை உரசும் !
பெண்மையோ.............
நச்சுத் திராவகத்தில்
வியர்த்துச் சாகும்!

விரலிடுக்கில் ஆணி பூட்டி
விழியோரம் வன்மை காட்டும்
கிறீஸ் நிழற் படுக்கையில்
இம்சை பூத்துக் கிடக்கும்!

முகமூடிகளின் மூச்சிரைப்பில்
பெண் தசை பிளந்து.............
வெட்ட வெளியை
குருதி எட்டிப் பார்க்கும்!

அட்டகாசச் சிறகுகளை
அறுத்தெறியாக் கரங்களோ.............
பூதங்களின் சுவாசிப்பால்
ஆதங்கக் குழிக்குள் சமாதியாகும்!

அரசியல் உமிழ்நீரால்
அழுக்காகுமிந்த - ஒளிப்
பௌர்ணமிகள்
விண்ணப்பிக்காமலே
மடி தரக் காத்துக் கிடக்கும்
மயானங்கள்!

தாய்மையின் தரணிச்சோலை
தரிசாகும்.........
நிதமிந்த அரக்கர்களின்
அராஜகத்தால்!

முட்வேலிப் படுக்கைக்குள்
குருதிப்பூச் சிந்தி - எங்கள்
வண்ணத்துப்பூச்சிகளை
வனப்பழிக்க
வட்டமிடுமிந்த வல்லுறுக்கள்!

அஹிம்சை தொலைந்து
இம்சை நிரப்பும் - இந்த
குண்டூசிக் கரங்களுக்கு- மலர்ச்
செண்டு தரக் காத்திருக்கும்
ஆயுதங்கள்!

புல்லரித்துப் போகும் - எம்
ஷெல்களின் நகங்களில்........
விசம் தடவும் நாகங்களை
தலை தடவும் இனவாதம்!

அதர்மப் படையெடுப்பில்
பெண்ணுரிமை மௌனிக்க..........
ஈரம் தொலைத்த பிசாசுகள்
ரணங்களில் ஆட்சியமைக்கும்!

தளிர் விட்ட மௌபியாக்களின்
தலையறுக்க ஆளின்றி............
வெந்நீர்க் குளியலாய் - பெண்
செந்நீர் வழிந்தோடும்!

கலியுக பூகம்பத்தில்
பலியாகும் மன நிம்மதி- எம்
கிலியூன்றலில்
வலியே வாழ்வாகும்!

சித்திரவதை வெம்மைக்குள்
நசுங்கிப் போகும் எம் விடியலில்
ஆதவன் அனுமதியின்றி
இருளே ஆட்சியமைக்கும் !

வேலியே பயிரை மேய
வேவு பார்க்கும் சாலைகள்..........
வெட்கித் தலை குனியும்
தன் வெற்று மேனியில் பதிந்த
அக்கிரமச் சுவடு கண்டு!

ஓர் நாள்...............
குருதியுறிஞ்சு மிந்த
மர அட்டைகளை நசுக்க..............
வலிய கரங்கள் தானாய் வரும் - எம்
வலியும் தொலைந்து போகும் !


ஜன்ஸி கபூர்