About Me

2012/07/30

விதவை


கருக்கலைக்கப்பட்ட கனாக்கள்
கல்லறைச் சுவருக்குள்
நசுங்கிப் போகும்!

ஓட்டை விழுந்த வாழ்க்கைக்குள்
ஒட்டடைகள் தொங்கிக் கிடக்கும்
வெள்ளைக்குள் விழுந்தவுடலும்
மங்களம் துறந்து வாடும்

முரண்பட்ட விதியால்
விரண்டோடும் பௌர்ணமிகள் 
அமாவாசைகள் மட்டுமே
அப்பாவியாய் எட்டிப்பார்க்கும்!

சகுனங்கள் சரித்திரம் பேசும்
தரித்திரங்கள் உடன்பிறப்பாகிப் போகும்!
பரிவில்லாத் தேசத்தில்
வாழ்வும்
இற்றுப் போகும்  !

நாங்கள் 
வாழ்வைத் தொலைத்தவர்கள்!
மயானங்களில் மௌனம் தேடும்
மானசீகவாதிகள்!

ஜன்ஸி கபூர் 

புகைவண்டி தரும் சிந்தனை


புகைவண்டியில் பயணிக்கும் போதெல்லாம் எனக்குள் எழும் சிந்தனையிவை
-----------------------------------------------------------
நாம் அனுபவங்கள் வாயிலாகவே அனேகமானவற்றைக் கற்றுக் கொள்கின்றோம். பாடசாலைக் காலத்தை விட, ஏனைய வயதுகளில் கற்றுக் கொள்ளும் விடயங்கள் தான் அதிகம். ஒவ்வொரு காட்சிகளும், சம்பவங்களும் நமக்குள்  புதுப்புது விடயங்களைக் கற்றுத் தருகின்றது..அந்த வகையில் புகைவண்டிப் பயணங்களின் போது  நான் கற்றுக்கொண்டவை,,,

*புகைவண்டியை எதிர்பார்த்து ஒரு குறித்த இடத்திலிருந்தே தரித்து பயணித்தல்.- நமக்குள்ளும் வாழ்க்கை தொடர்பான இலக்குகள் இருத்தல் வேண்டும்.

* ஒரு குறித்த நேரத்தில் பயணித்தல் - ஒவ்வொரு செயல்களையும் நாம் குறித்த நேரத்திலேயே செய்தல் வேண்டும்.

*பல பெட்டிகள் இணைக்கப்பட்டிருத்தல்- பிறருடன் எப்போதும் நாம் ஒற்றுமையுடன் செயலாற்றி வாழ்வை நகர்த்துதல் வேண்டும்.

* ரயில் ஸ்நேகம் - அவ்வவ்போது மனதை அரிக்கும் பிரச்சினைகளையும், துன்பங்களையும் உடனுக்குடன் நீக்குதல்.

* ஓர் பெட்டியில் பலரிருத்தல்- பலருடன் நட்புமுகம் பேணல்

*வேகமாகப் பயணித்தல் - செய்யத்தொடங்கும் வேலைகளையும், கருமங்களையும் விரைவாக நேர்த்தியாகச் செய்தல்.

* நிலையக் கட்டளைகளுக்குக் கட்டுப்படுதல்_ பிறரின் நல்ல அறிவுரைகளுக்கு கட்டுப்படுதல்.

* ஓர் குறித்த பாதை வழியே இயங்குதல் - ஒவ்வொரு வேலைகளையும் திட்டமிட்டே செய்தல்.

*அதன் பயணப்பாதையின் அருகாமையில் யாரும் நிற்காமை- கெட்ட விடயங்களை நம் வாழ்விலிருந்து நீக்குதல்.

*அது வீதியை குறுக்கிடும் போது ஏனைய வாகனங்கள் வழிவிட்டுக் காத்திருத்தல் - பிறருடன் புரிந்துணர்வுடன் பேணி செயல்கள் நிறைவேற ஒத்துழைத்தல்.

* அபாயச்சங்கிலி காணப்படல் - எப்பொழுதும் விழிப்புடனிருத்தல்.

* அதன் வருகையை அயல் வாசிகளுக்குணர்த்தல்- நமது நல்ல செயல்கள் பற்றி அடுத்தவருக்கு அறியச் செய்தல்.

ம்ம்......

என் சிந்தனை உங்களுக்குப் பிடித்திருக்கா. இன்னும் சிந்திப்போம்

- Ms. Jancy Caffoor -

அன்பு வந்தது


அன்பு கொள்ளுவதும் , அன்பால் ஆட்படுவதும் இவ்வுலகில் பணம் கொடுத்து வாங்க முடியாத இனிமையான உணர்வு. பிறரின் நல்ல குணங்களால் ஈர்க்கப்பட்டு மானசீகமாய் நட்புக்குள், அன்புக்குள் நாம், நம்மை வீழ்த்தும் போது சந்தோஷம் சங்கீதம் பாடும்.

நாம் பிறரை நேசிக்கும் ஒவ்வொரு கணங்களும் நாமும் அவர்களால் நேசிக்கப்படுவோம். நேசிக்கப்படுகின்றோம். குடும்பம் , நட்பு, உறவுகள், காதல் என விரியும் இவ்வன்பின் எல்லை முடிவிலியே! அன்பின் சுகந்தத்தில் வசந்தங்கள் நம்மோடு ஒட்டியுறவாடும்.

அன்பான வார்த்தைகளுக்கு அடிபணிதல் கூட ஆனந்த மயக்கமே! மனித இயக்கம் மட்டுமல்ல, இவ்வுலகின் நகர்வு கூட அன்பின் ஆதிக்கத்திலேயே அழகு மொழி பேசுகின்றது.


நம்மை நாம் அன்பு கொள்ளும் போதுதான் பிறரையும் நாம் நேசிக்கத் தூண்டப்படுகின்றோம். அன்பின் வலிமை அதிகம். அன்பால் எதையும் சாதிக்கலாம். அந்தச் சாதனையின் வெற்றிக் களிப்பில் சோகங்களையும் விரட்டப்படலாம்.


"நேசிப்போம்...........!
நேசிக்கப்படுவோம் !! "

- Ms. Jancy Caffoor -






சொந்தம் எப்போதும்!


கால நகர்வில் சிதையாத- என்
மன தேசத்தின்
மானசீக தேசிய கீதம் நீ!

உன் 
ஞாபகப் பிரகடனங்களிலேயே - என்
இருப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றன!

உன் 
அசைவுகளை மோப்பம் பிடித்தே
என் புலனங்கங்கள்
விருது பெற்றன உளவாளியாய்!

என் 
உணர்வுத்தூறலில் உனை நனைத்து
கவிதையாய்ச் சுமக்க - என்
ரேகைகள் உடன்பட்டன!

உன்னை உச்சரிப்பதால் 
சொந்தமான சுருதி - என்
குருதிக்குள் குடியிருப்பானது!

பனித்துளிக்குள் பதுங்கியிருக்கும் - உன்
நாணம் கண்டு
சூரிய ரேகைகள் குளிரானது!

என் 
இமையோரம் ஒளியுமுன்
மலர் முகம் காக்க 
பூட்டிவைத்தேனுன்னை
என் கவிச்சோலைக்குள்!

உன் 
நளின நடையில்
சுளுக்குக் கண்ட என் இலட்சியம்
இப்போ
உன் ஆணையிலொட்டிக் கிடக்கின்றது!

நீயுன் 
நக முனைகளின் தலை சீவுகையில்
வலிக்கின்றன
என் விரல்கள்!

இவ்வுருளுமுலகின்
மிரளும் யதார்த்தம் கண்டு- உன்
காலடியில் பரவிக் கிடக்க
என் ஆத்மா துடிக்கின்றது
சில கணங்களேனும்
நிம்மதிச் சுகத்திற்காய்!

நரை கண்டாலும்
பிரிவுத் திரை காணா நம் சொந்தம் 
என்றும்
கறை காணா நேசத்தின்
இருக்கை!

ஜன்ஸி கபூர்