About Me

2012/10/12

உனக்கான கவிதைகள்


நாட்காட்டி கிழிக்கப்படுகின்றது
நாடி நரம்புகளில்
மின்சாரம் பாய்ச்சுது உனக்கான
என் நினைவுகள்!

உதடுகளை நசித்து
வெளியேற்றப்பட்ட  என் வார்த்தைகள்.......
மொழிபெயர்க்கப்படுகின்றன
அழகானவுன் பெயராய்!

உன் சுயம் நானானதில் - என்
சுற்றுப்புறங்களெல்லா முன் தேடலில்
வீழ்ந்து முரண்படுகின்றன
உன் காதலின் ஆழம் புரியாமல்!

மனசைத் தட்டிப் பார்க்கின்றேன்.........
தரிப்புக்களாய் உன்
அந்தரிப்புக்கள் ................
ஏக்கத்தையும் பிணைந்தபடி!

இரவின் மௌன வாசிப்புக்களில்
எனை நீயுறிஞ்சி
கனவுகளால் மோகிப்பதால்
நிதமும்
கருத்தரிக்கின்றேன்
உன் கவிக்குழந்தைகளைப் பிரசவித்தே!

என்............
விரல் பற்றி
நீ பயணிக்கும் சாலையெங்கும்.........
காற்றின் துளைகளிலும்
காதலின் சுகமப்பிச் செல்கின்றது
நம்மை அணைத்தவாறு!

என் வாழ்க்கைப் பிரமிட்டுக்களின்
ஒவ்வொரு அணுக்களும்....................
அணு அணுவாயுன்னைச் சேமித்தே
ரசிப்பில்
உறைந்து கிடக்கின்றது
உன்னுடன் வாழ்ந்தபடி!

நினைவுகளில்
மிருதுவாய் யென்னைத் தழுவி..............
ஸ்பரிசங்களால்............
செல்களை புல்லரிக்கும் நீ!

செல்களிலுன் குரலை
நிரப்புகையில்.........
பல நிமிடங்கள் மறந்து
காற்றலைகளுடன் மோதல் செய்கின்றேன்
நம் சமுத்திரங்களின்
எல்லைச்சுவரை கரைக்கும்படி!

உனக்கான என் கவிதைகளை
கவர்ந்தெடுத்து வா!
தாஜ்மஹாலின் படிவுகளாய்
நாமும் வீழ்ந்து கிடக்கலாம்
காலத்தின் மடிகளில்!






2012/10/11

இமைக்க மறுத்த விழிகள்


சூரிய தீப்பந்தமொன்று
மெதுவாய் அணைந்த பிரமை
எனக்குள்!

வெட்ட வெளிகளின் பசுமையில்......
ஒட்டிக்கொண்டது வெம்மையின்
பிசுபிசுப்பொன்று!

என் பேனாக்கள்
பயணித்த வரம்போரங்களெல்லாம்.........
முள்வேலியாய்
ஈரம்சொட்டுதுங்கள் மௌன யாகம் !                          

வண்ணச்சிட்டுக்களுக்காய்
பா விசைத்து ...........
களிப்பால் பறக்க வைத்த வுங்கள்
சிறகுகளில்  யாரிட்டது மரணச்சிலுவை !

எழுத்தணியில்
அழுத்தமாய் முற்போக்கு நுழைத்து.........
இலக்கிய வேள்விக்குள்
இரசனையோடு யதார்த்தம் நுழைத்த
நீங்களின்று..............
இரகஸியமாய் சுவாசமறுத்தே
மீளாத்துயிலுக்குள் நிரம்பிக் கொண்டீர்கள்!

வெள்ளிச்சிறகடித்த வுங்கள்
வெண்புறாவோ..............
இன்று
சுதந்திரமாய் தேசம் தொடுகையில்.........
தொலைதூரத்தி லும் வுரு துறந்து
ஏதுமறியாத குழந்தையாய் நீங்கள்!

தினகரன்
புதுப்புனலில் தடம் நெய்து - எனை
புதுவுலகில்   நிலைநாட்டிய
உங்கள் ........
பேனாக்களின் ஈரலிப்பினை
உலர்த்தியது யாரோ!

எனை வார்த்த வுங்கள்
இலக்கியச்சாளரம்
சாய்ந்துதான் போனாலும் - என்
விழிச்சாரளத்தின்
விம்ப வெளியெங்கும்..........
உலா வருகின்றதே - உங்கள்
ஆசிபெற்றவென்
இலக்கிய நீரோடையின்று !

உதிர்ந்து விட்ட பல வருடங்கள்
இன்னும் நேற்றுப் போல்...................
நெஞ்சிலாணி யறைந்தே செல்கின்றது
உங்கள் ஞாபகங்களை
இலக்கியங்களாய்ப் பரப்பி!

உங்கள்.........
மரணத் தூரிகையின் வடு
இன்னும் என்னுள்
உலராத மேடுகளாய் வலிப்புடன்
விட்டுச் செல்கின்றது வெடிப்புக்களை!

மீள வரமாட்டீர்கள்!
புரிகிறது - இருந்துமென்
பதிவுகளின் ஸ்பரிசிப்பெல்லாம்.........
குருதாட்சணையாய்
உங்கள் ஞாபகத்தில் தொக்கி நிற்கும்
நல்ல மாணவராய்!

- Ms.A.C.Jancy -


(காலம் சென்ற எழுத்தாளர்  ஸம்ஸ் சேர்..............அவர்கள்!

முன்னர் தினகரன் பத்திரிகையில் (சனிக்கிழமையில் )பிரசுரிக்கப்பட்ட  புதுப்புனல் இலக்கிய சோலையில் என்னையும் உட்பதித்தவர்....அன்று துணிச்சலாக அவர் ஏற்றுக்கொண்ட என் கதைகளும், கவிதைகளும் தான் இன்று எனக்குள் ஓர் அடையாளத்தைப்பதித்து சர்வதேசத்தில் என்னையும் உலாவ , எழுத வைக்கின்றது!)

2012/10/10

விரல் தொடும் தூறல்


கோடை விரண்டோட
கொடை வள்ளலாய் - சிறு தூறல்
நடைபயில்கின்றது
என் மண்வெளியில்!

படையாய் இறங்கு மின்னலும்
குடைந்தெடுக்கும் இடியும்..........
தடையின்றி யெமக்குச் சொந்தமாக
விடை தர மனமின்றியே

கரைந்து வழிகின்றது மண்வாசம் - சுவாசம்
நிறைத்தே சுகமாய்!


-Jancy Caffoor -

உன்னோடு ..........


சிறகு நெய்தேன் - உன்
உணர்வோடு பறந்து வர !

உன்......
காதல் விரல்களில்
ரேகையாகிப் படர்ந்தேன் - நீ
செல்லும் பாதைகளில்
விழி விரித்துக் கிடக்க!

உன்..........
பெயர் உச்சரித்தே
பழக்கப்பட்ட என்னுதடுகளின்று
உரிமையோடு நடைபயில்கின்றன - உன்
ஸ்நேக வெளிகளில் உல்லாசமாய்!