About Me

2012/12/15

தும்மல்


அவள்.............

இருதயம்
நின்று மீள்கின்றது
ஒவ்வொரு தடவையும்!

அவன்........!

அன்பே!
பார்த்தாயா..........
உன்னை எத்தனை தடவைகள்
நினைக்கின்றேன் என்று!

அவள்............!

புரிகிறது.........
என்னுயிரையே நீதான்
பறிப்பாயென்று!





2012/12/14

கண் வழியே


முகம் காணா  நேசங்களின்
தேசம்!

தொலைதூர நிழல்களின்
சங்கமம்!

மின்னஞ்சல்கள் வழி திறக்க
விழி காட்டும் முகங்களிங்கே!

மின்காந்த  அலையோரம்.......
சலசலக்கும் குசலங்கள்!

வாழ்த்தும்  உள்ளங்கள்..........
தாழ்ப்பாளிடும் பேதங்களை!

நேசமிங்கே இலவசம்தான்............நல்
 நெஞ்சங் கொண்டோர்க்கு!

விழி கசியும் நீருறிஞ்ச- பல
கைக்குட்டைகளிங்கே!

மலரின் மௌனங் கூட
மொழி பெயர்க்கப்படும் நேசமாய்!

இங்கே...........!

இரவின் விழித் திறப்பில்
கிறங்கிக் கிடக்கும் "சட்"கள் !

பாசத்தோடு "மெஸேஜ்"
கோஷமிட்ட லையும்!

"லைக்கும்". "கொமாண்ட்ஸூம்"
சிரிக்கும் அன்பைச் சுமந்து!

காதலும் காமமும் கூட
கழுகாய் காத்திருக்கும்!

 நட்பின் சுகத்தில்
மனசும் திளைக்கும்!

அரசியல் மேடும்
அதிரடி போடும் அந்தரங்களை!

கருத்துக்களும் படிப்பினைகளும்
பின்தொடரும் நம் சுவரோரம்!

குழுக்களின் கும்மாளத்தில்
குஷியாய் எண்ணங்கள் பறக்கும்!

"பேஜ்" எல்லாம்
பேஷாய் நம்மை எட்டிப் பார்க்கும்

பேந்தப் பேந்த முழிக்கும்.........
பேக் ஐடி பழிக்கஞ்சி!

நம் சாம்ராஜ்யத்தில்.......
நாம் தாம்   கிரீடங்கள்!

முகநூல் - நம்
இன்றைய  தோழமை!


ஜன்ஸி கபூர் 



















2012/12/13

காதல் வந்தால்


பருவம் வந்ததில்
கருப்பொருளாய் காதல்.........!

ஆத்மாவின் சரீரங்களில்
அழகான அவஸ்தை!

முட்களின் படுக்கையிலும்
ஆட்கொள்ளும் பஞ்சணைகள்!

காதல்...........
மகிழ்வின் கைத்தடி!

கனவுக்குள் எதிர்பார்ப்புக்களை
ஏற்றி வைக்கும் ஏணி!

உதடுகளின் உல்லாசம்.........
உற்பத்தியாகும் மின்சாரமாய்!

இறக்கைகள் சுமக்கும் சிலுவையாய்
உருமாறும் இதயங்கள் !

செல்லின் சிணுங்கல்களில்- உயிர்
செல்கள் செல்லமாய் முறைக்கும்!

காத்திருப்புக்களில்.........
வியர்த்திருக்கும் கடிகார முட்கள்!

விடியலை இருளாக்கி
இருளை விடியலாக்கும் மந்திரம்!

சுனாமியின் சுழற்சி போல்
தடுமாறும்  மனசு!

கிறுக்கல்கள் கவிதையாகும்
புலம்பல்கள் காவியமாகும்!

நிலவும் விண்ணும்
களவாய் அடிக்கடி கால் தொடும்!

நினைவுகளின் நெருடல்களெல்லாம்.........
கனத்துக் கிடக்கும் போதையில்!

விழித் தேடலில் எப்பொழுதும்
வீழ்ந்து கிடக்கும் ஓர் உருவம்!

நெஞ்சக் கூட்டுக்குள் பத்திரமாகும்- சிதறிய
கொஞ்சல்களும் வருடல்களும்!

அட........இதுதாங்க காதல்!





அவள்


தொலைந்து போன வசந்தங்களுக்காய்
யாகமிருக்கும்
சராசரிப் பெண்!

வறுமைக் கற்பழிப்பால்
வசந்தங்களைத் தொலைத்த 
(அப்) பாவியிவள்!

கண்ணாடிச் சிதறல்களின்
சாம்ராஜ்ஜியத்தில் 
முடி சூட்டிக் கொண்ட ராணியிவள்!

காற்றின் காமத்தில்
மூச்சுத் திணறும் குப்பி விளக்கில் 
எரிந்து கொண்டிருக்கின்றது
அவள் ஆசைகள்!

அவள் மனச் சிதைவுகளின் விம்பங்கள்
 தெறிக்கின்றன 
விரக்தியாய்!

இதழ் சிதைக்கப்பட்ட
ரோசாத் துண்ட மவள் 
வீழ்ந்து கிடக்கின்றாள் அடுக்களையில்!

புகையுறிஞ்சித் தோற்றுப் போன
சுவாசம் 
சுகம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றது!

துரத்திச் சென்ற நாட்களெல்லாம்
உணர்வறுத்து 
கண்ணீருக்குள் அவிந்து போனதில்

விரல்களில் விழுந்து கிடந்த
மருதாணிச் சாறு.கூட 
மூச்சையற்று வெளிறித்தான் கிடக்கின்றன!

உதரக் குழி விட்டுச் செல்லும்
பசி 
அடிக்கடி
அலைந்து கொண்டிருக்கின்றது அனாதையாய்!

கிழிசல்களால்
இளைப்பாறிக் கொண்டிருக்கும் மேனியோ 
பருவத்தைக்  கரைத்துக் கொண்டிருக்கின்றது
காலாவதியாகி !

யார் யாரோ நினைவுக்குள்
எட்டிப் பார்த்துச் செல்கின்றனர் 
அனுமதியின்றி!

சிரிக்கின்றாள் மெதுவாய் 
பூச்சியங்களைத் தொடாதவர்களின்
ராச்சியங்கள் கூட அவள் வசமில்லை!

ஏனெனில் 
அவள்
ஏழ்மை எழுதிச் செல்லும்
புதுக் கவிதை!

ஜன்ஸி கபூர்