About Me

2013/03/08

சீ தனம்


பெண் மலர்களுக்கிடப்படும்
முள்வேலி!

வாழ்க்கை வியாபாரத்திற்கான
முதலீடு!

பெண்மை ஸ்பரிசங்களுக்கான
நுழைவுச் சீட்டு!

ஏழைக் கன்னியரின் சுயம்வர
கைவிலங்கு

திருமணத்தின் வருங்காலத்திற்கான
உத்தரவாதம்!

ஆணின் வாழ்வியலுக்காக
பரிந்துரைக்கப்படும் நன்கொடை!

பணத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படும்
பண்டம்!

சொகுசு வாழ்விற்காக வழங்கப்படும்
அனுமதி!

ஏழைகளின் கனவுகளுக்கு விதிக்கப்படும்
அபராதம்!

சோம்பேறிகள் கணக்கில் வைக்கப்படும்
அதிஷ்டலாபச் சீட்டு!

"சீ" தனம் சொல்லாதோர்
கையேந்தும் பிச்சை!













ஓடு மகளே ஓடு



நிமிடங்கள் யுகங்களாய் மாற்றிய யுத்தம்
உன்னை..........
வாசித்துச் சென்றதில் வலிப்புடன்
வீழ்ந்து கிடக்கின்றாய் அகதியாய்!

சுகம் மறந்த சுவாசம்
விட்டுச் சென்ற சோகங்களின் வரலாறாய்.......
விரல் பிடிக்கின்றாய் - உன்
வெற்றுடல்களில் பீதியை நிரப்பியவாறு!

யுத்த டயறிக்குள் வரிகளான - உன்
வாழ்வின் தொடக்கத்தில்.....
கழுகுகளும் காட்டேறிகளும் காவல் காக்கின்றன
உன் னிரத்தத்தை உறிஞ்சியவாறு!

வாழ்வை இன்னும் நீ
தொடங்கவேயில்லை
ஆனால்..........
முடிவுரைகளின் விண்ணப்பங்கள்
குவிகின்றன உன்னிடம்!

இன்னும் நீ பூக்கவேயில்லை
முட்கள் குதறுகின்றன - உன்
அழகான மேனியை
சாம்பர் மேட்டில் புதைக்க!

உன் பிள்ளைச் சரிதத்தில்
கறைகளாக்கப்பட்ட அகதி வாழ்வில்
வேரறுக்கப்பட்ட வசந்தங்களின் வலியே
உன் பேச்சொலியாய் உருளுது உலகில்!

மகளே............
உன் பிஞ்சு விழிக் கனாக்களில்
விசம் தடவுமிந்த சாத்தன்கள்
இருந்தென்ன ..இறந்தென்ன
அழிந்தே போகட்டும் ஓர் நாள்!

இந்தப் பிரபஞ்சம்
ஓர் நாள் வாய் திறக்கும் அகோரமாய்.......
இவர் மெய்யேந்திய குண்டுகளும் சன்னங்களும்
தீக்குளிக்கு மிவர்கள் பாவங்களை!

ஓடு மகளே ஓடு
மண்டைகளால் பதிய மிடப்படுமிந்த
பூமிக்குள்..........
நாளை விடியலொன்று எட்டிப் பார்த்திட
நீயும் முகவுரையெழுதிட

ஓடு மகளே ஓடு!



இவர்கள்



சோலைக்குள் தீச் சுவாலைகள்
வேலியாய் முளைத்திருக்க..............
வறுமையின் முகவரியாய் இவர்கள்
வாழ்க்கை அடிக்கடி

தோற்றுப் போன வசந்தங்கள்
இவர்களுக்கு....................
வேரறுந்து போனதில்
கண்ணீர்ச் சந்ததியினராய் - தம்மை
அறிவிப்புச் செய்கின்றனர்!

ஒட்டியுலர்ந்த மேனியில்
எட்டியுதைக்கும் என்புகளும்
ஏக்கம் நிறைந்த வாழ்வும்.......
இவர்களின்
உரிமைகளாய் பிசைந்து கிடக்க!

புறப்பட்டு விட்டனர்
பசியின் நிழல்களில் கோலம் போட்டே........
தம்முயிர் அணுக்களில் மரணம் தேக்கி!










2013/02/01

விஸ்வரூபம்


இனவாதக் களையொன்று கலையாகி
அலைகின்றது வரவேற்புக் கோஷங்களுடன்!

அரபெழுத்தணிச் சாயலுடன்
முகங் காட்டுதிந்த விஸ்வரூபம்!

தளிர்க்கரங்களின் சுமைகளாம்
அனல் பறக்கும் துப்பாக்கிகள்!

இறைகூடத் தளமிங்கே - பாவக்
கறை சுமக்கும் பள்ளிகளாம்!

சாந்தி மார்க்க போதனைகளிங்கே
உயிரறுக்கும் வேதனைகளாம்!

இறைவசன உயிர்ப்போடு  - உயிர்
பறிக்குமாம் சன்னங்கள் வீரியமாய்!

கொலைக்களமாம் எம் மறைவேதம்
கல கலக்கின்றது கலைக்கூடம் கைக்கூலியாய்!

திருமறையின் அருள் மொழிகள்
இறை நிராகரிப்போரால் அரிதாரம் பூசப்படுகின்றது
அழகாய்!

தீனுல் இஸ்லாம்.........
தீவிரவாதமெனும் பிரச்சாரமாய்
தீ கக்குகின்றதிந்த விஸ்வரூபம்!

விலைக்காய் கலை சேர்க்கும் கமல்.....
வீரியமாய் விட்டுச் செல்கின்றார் இனவாதத்தை!

ரவைகளின் ஏடென இஸ்லாம் பரப்பி
புரட்சி செய்கின்ற கமலின் சாகஸம்..........
சரிதமாகி விட்டுச் செல்கின்றது பாவக் கறையை!

விஸ்வரூபம் வில்லத்தனம்........நம்மை
வில்லங்கத்துடன் கடந்து செல்லும் மூர்க்கத்தனம்!