About Me

2013/04/20

இதோ என் வீடு



இதோ...........

என் வீடு!
வெறும் எலும்புக்கூடாகி...............

என் படுக்கையறையும்
படிப்பறையும்
முட்களின் சேமிப்பாய் உருமாறிக் கிடக்க

சுவற்றில் பதித்த கிறுக்கல்கள்
மழைநீரில் அழுதழிந்து பாசிக் காயங்களாய்
பரிகசித்து வியர்க்க....

வனாந்தரமாகிப் போன - என்
மனையின் கற்குவியலுக்குள்
தடம் பதிக்கின்றேன்

ஐயகோ.............

என் இராஜங்கத்தின் கிரீடங்கள்
கறையான் புற்றுக்களோடு
இம்சித்துக் கிடக்கின்றதே!!

என் கனவுப் புன்னகைகள் எல்லாம்
குருதிப் பிழம்பாகி
சீழ் வடிய.........

என் வீட்டோரக் கற்சிதைவுகள்
கண்ணீரைப் பிழிந்து
பால்யத்தை ஞாபகத்துள் நிரப்புகின்றது!

அம்மா..............
பூக்களின் சுவாசத்தில்
சுவாரஸியமாய் தன்னைக் கரைத்தவர்!

அழகு பார்த்து அழகு பார்த்து
பதியம் வைத்த
சிவப்பு ரோஜாக்கள்........
முற்றத்து மண்ணுக்குள் எச்சமாகியிருக்குமோ!

வீதியோரத்தில் தன் கிளைகளைப் பரப்பி
காற்றுக்குள் வாசம் நுழைத்த - எங்கள்
கறிவேப்பிலை மரங்கள்........
பறிப்பவர் யாருமின்றி ஏக்கத்தில் தன்னை
அழித்திருக்குமோ!

முற்றத்து நிழலாய் தன் முகம் பதித்த
சிறு நெல்லி கூட.......
தன் ஆயுள் குறைத்து ஆழ் துயிலில்!

எங்கள் வீட்டுப்பசுமையின் சுவடுகளிலெல்லாம்
கறைப் படிவுகளாய் சோகங்கள்.............
பெயர்த்தெடுக்க இன்னும் எத்தனை யுகங்கள்!

அம்மா கொஞ்சம் அழட்டுமா...
என் தாய் வீடு சிதைந்த வலியைக்
கரைக்க வேறு வழியின்றி..........

அழுகின்றேன் இன்னும் ஆழமாய்..
என்னுயிர் தன்னிதயம் துறந்து
வலிப்பதாய் உணர்வு........
விழிக் கதவுடைத்து கண்ணீரோ
அழையா விருந்தாளியாய் வெளி நடப்புச் செய்ய!

மீண்டும் அழுகின்றேன்...........
அந்த ஓர் நொடியில்
இவ்வுலகமே இடிந்து என் தலையில்
வீழ்வதாய் பிரமை!

மண் சோறாக்கி மண்குவியல் மட்டும்
இன்னும் மலையாகி குவிந்து.....
எத்தனை பிணங்களின் கல்லறையோ அவை!

குயில்கள் கூத்தாடும்
இளம் வேப்ப மரக் கிளைகள்..........
ஷெல் கண்டு வில்லொடித்திருக்குமோ!

அழுகின்றேன் இன்னும்......
என்னுடன் சேர்ந்து.........
பெற்றவளை வேரறுத்த வலியில்
என் பிறப்பிடமும் கதறுகின்றது...
அந்நியனாய் எனை விட்டு செல்லாதே என.....

எல்லாமே முடிந்து விட்டதா
என் பால்ய நினைவுகளின் பசுமைகள் மட்டும்
என் நினைவுக்குள் பதிவாக......!

எல்லாமே முடிந்து விட்டதா
யுத்தத்தின் எச்சத்தில் எம் வாழ்க்கை நொருங்க
எல்லாமே முடிந்து விட்டதா!

வினாக்கள் மட்டுமே என் வசம்!



2013/04/19

அதுவரை



காதல்................!

அதன் வாசத்தில்

காய்ந்து போன சருகெல்லாம்
புதிதாய் தளிர்க்கும் !

விஷம் கக்கும் கள்ளிப் பாலெல்லாம்
ஓளஷடதமாய்
உயிர் வருடும் மெல்ல!

ஒவ்வொரு அஸ்தமனத்திலும்
சூரிய உதயம்
தன்னை நிலைநாட்டிக் கொள்ளும்!

முட்கள் கூட பேனா முனையாகி
கவி சிந்தும்!

ஆகாய வெளியின் விசாலப் பரப்பில்
நாம் மட்டுமே உலா வருவதாய்
மனசு சொல்லிக் கொள்ளும்!

காதல் இனிமைதான்
எல்லோரும் சொல்வதைப் போல்
கனவுக்குள் அமிழ்ந்து கிடக்க!

வாழ்வை நன்கு உணர்ந்தபின்!
காதல் செய்யலாம்
வசந்தம் நம் வசமாகும்!

அதுவரை காத்திருப்போம்
உனக்கு நானாய்
எனக்கு நீயாய்!

- Jancy Caffoor-
     19.04.2013

வானவில்


தன்னைக் கருக்கி, மெழுகுதிரிக்கு ஒளியூட்டும் தீக்குச்சி!
தீக்குச்சியின் தியாகத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும் மெழுகுதிரி!

அன்பும் இவ்வாறே..........இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து நேசத்தைப் பகிரும் போதே, அது ஆயுள் முழுதும் நீள்கின்றது!
-------------------------------------------------------------------------------------------


பயமென்ற ஒரு சொல்லே போதும். இயக்கமுள்ள நம் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வரும்.
----------------------------------------------------------------------------------

சவால்களுடன் நாம் போராடும் போராட்டக்களமே வாழ்க்கை. துணிவு, விவேகம், முயற்சி எனும் ஆயுதங்கள் நம்மை வெற்றி என்னும் பக்கம் தள்ளிச் செல்லும்.
---------------------------------------------------------------------------------------

பூமியைப் பிளந்து செல்லும் வேர்களால்தான் தண்டுகளும் உறுதியாகத் தாங்கப்படுகின்றன. அதனைப் போல் மனதைப் பிளக்கும் கஷ்டங்கள் வந்தால்தான் நம் மனதிலும் வாழ வேண்டுமென வைராக்கியமும் வளர்க்கப்படும். வாழ்க்கையில் நம்பிக்கை கொள்வோம். அவ் வாழ்வையும் வெற்றி கொள்வோம்.
-----------------------------------------------------------------------------------------


சந்தர்ப்பவாதங்களே நம்மைக் குற்றவாளியாக்குகின்றன. அப்பொழுதெழும் விமர்சனங்கள் கூட  நம்மை நோக்கி பிறரைத் திசை திருப்புகின்றன.
-------------------------------------------------------------------------------------------


ரசிக்கும் மனதிருந்தால்
இயற்கை கூட பேரழுகே!
ரசனை  நம் வசமானால்
சோகம் கூட வெறுந் தூசே!

 ------------------------------------------------------------------------------


உணர்வோடு, உயிரோடு
மனதோடு , வாழ்வோடு
என்னோடு, உம்மோடு
உலகத்தின் இயக்கத்தோடு
இரண்டறக் கலக்கும் எம் தமிழுக்கு
என்றும் வீர வணக்கம்!

- Ms. Jancy Caffoor -



நீ காதல் சொன்ன போது

முதன் முதலாய்
உணர்வுக்குள் ஏதோ பிசைவு!

கண்களை இறுக்கிக் கொள்கின்றேன்
காதோர ஒலியதிர்வுகள் மெலிதாய்
சிணுங்குகின்றன உன் பெயர் சொல்லி!

இருண்ட கானகத்திலிருந்து ஓர்
ஒளிப்பிழம்பாய்
நீ என்னை ஊடுறுவுகின்றாய்
பட்டாம் பூச்சியாய் சிறகடித்து!

நீ எனக்குத்தான்............
உள்ளுணர்வுகள் சேமிக்கப்படுகின்றன
மனதுக்குள் ரகஸியமாய்

எனக்காக வாழ்ந்த நான்
முதன் முதலாய் உனக்காய் வாழ்வதாய்
உணர்கின்றேன் தனிமை துறந்து!

உறக்கமும் பசியும் துக்கமும்
துறந்து போக...........
பறக்கின்றேன் சிறகடித்து உன்னுடன்
வரம் நீயான சந்தோஷிப்பில்!

உன்னிழல் பற்றும் நிஜங்களுடன்
ஊர்கோலம் போகும் நம் நினைவுகள்
வர்ணக் கலவையாய் - நம்
வாலிபத்தின் சுவரேறி குந்தியிருக்கின்றன!

ஒருவரை ஒருவர் அறியாது
இத்தனைநாள் எங்கிருந்தோம்.......
வினாக்கள் நெஞ்சுக்குள் முகிழ்க்கும் போது
உன்னிடம் என் உதடுகள் குவிகின்றன!

உன் அழகுப் பார்வையில் எனை மேய்ந்து
இறுக்கி அணைக்கின்றாய்.......
இனி பேசுவது நாமல்ல...
நம் உணர்வுகளும் உதடுகளும் தான்!

காதலைச் சிதறியவாறு
திரும்பிப் பார்க்கின்றாய் என்னுள் மின் பாய்ச்சி!