About Me

2013/05/02

யாரோ


வெடிக்கின்றது மேகம்
வெற்றி பெறப் போவது
விண்ணா மண்ணா!

புவிக்குள் மின்சாரம் பாய்ச்சி
வேவு பார்க்கின்றது மின்னல்
தோற்றது யார் காற்றா நாற்றா!

புழுதிக்குள் கூத்தடித்த மலர் மேனி
குளிருக்குள் விறைத்துக் கொள்ளுது
அழுக்குக்காகவா அழகுக்காகவா !

இங்கோ மழையோ மழை!
எட்டு திக்கெங்கும் முரசறையும்
கொன்றல் சத்தத்துடன்!

- Jancy Caffoor-
      02.05.2013

2013/05/01

புரிதலின்றி


பேசித் தீர்த்துவிடு
நம் வாழ்வை நம் முன்றலில்!
இல்லையென்றால்
பிளவுபடுவது நாமல்ல - நம்
வளமான குடும்பம்!

சமாந்தரங்களாய் நாம் பயணிக்கையில்
நம் குழந்தைகள்
எதிர்காலம் முடிவிலியில்!

மனசு பார்த்து இணைந்த நாம்
இன்று
சட்டம் பேசி நிற்கின்றோம்
வாழ்வை சிறைப்பிடுத்த!
வனப்பைச் சிதைக்க!!

விவாகத்திலிருந்து விமோசனமா
இல்லை
விவாகரத்திலிருந்து விடுதலையா!
புதிராகி நீ எனக்குள்!

சொல்லிவிடு
நல்ல பதிலை!
என் மரணத்திற்காய்  நாள் குறிக்கும்
உன்னிடம்தான் கேட்கின்றேன்!


- Jancy Caffoor-
     30.04.2013

இம்சை



மொழி மறந்து விழி கிறங்கி
உள்ளத்தை ...........
அழகின் இம்சைக்குள் ஆழ்த்தும் காதல்
அற்புதமானது!

உண்மைக் காதல் உருவம் பாராது
உணர்ச்சிக்குள் காமம் தேடாது......
உலகம் உருளும் வரை
உயிர் விட்டும் போகாது!

காதலின் காத்திருப்புக்களும்
வியர்வைத் துளிகளும் கூட.....
நாணத் தாழ்ப்பாளிட்டு
மௌனத்துள் இம்சித்துக் கொண்டிருக்கும்!

இருதயங்கள் சங்கமித்தால்
இருளில் கூட ஒளிப் பிழம்பு தோன்றும்
கரு விழிகளில் மின்னும் காதல் பார்வைகளை
உருத்துலக்கி உயிரேற்ற!

காதல் அழிவதில்லை
காலமுள்ளவரை உணர்வோடு வாழும்!

உன்னில் நான்


உன் கால்கள் பதிந்திருப்பது வயலல்ல
நம் காதல்!

நீ ஏறியது மரமல்ல
என் வாழ்க்கை!

நீ பறித்தது கொடுக்காப் புளியங்காயல்ல
என் மனசு!

உன் கைகளின் ஸ்பரிசத்தில் காய்களல்ல
நான்!

நீ சுவைப்பது பழங்களல்ல
என் நினைவுகள்!

உன் ஒவ்வொன்றிலும்
உன்னை நான் காண்பேன்

இதுதான் அன்படா
உண்மையான அன்படா!


- Jancy Caffoor-
     30.04.2013

2013/04/30

தொழிலாளி



ஒவ்வொரு நாட்களும்
வியர்வையின் முகவரிக்குள்
தேகம் அடங்கிக் கிடப்பவர்!

வயிற்றோர தசைகளின் வருடல்களில்
மயங்கிக் கிடக்கும் உதரத்திற்கு
மெல்ல மனுக் கொடுத்து பசி விரட்டுபவர்!

இவர்கள்
கனவு வாழ்க்கைக்குக்குள் கூட
ஒதுங்கத் தெரியாத அப்பாவிகள்!

விடியலும் இரவும் மாறி மாறி வரும் உலகில்
இவர்களேனோ
அந்தகரத்துக்குள் வேரூன்றிக் கிடப்பவர்கள்!

தினமும் வாழ்க்கைப் போராட்டத்தில்
வலிகளை மட்டும் பதியமாக்கும்
உற்பத்தியாளார்கள்!

ஒன்றிக் கிடக்கும் உறவுகளின்
நேசங்களிலில் கூட வசந்தங்ளை நெருங்கிடாத
அபாக்கியசாலிகள்!

வாழ்க்கைச் "சீவனத்தில்"
ஜீவனோபாயமாய் வறுமையைத் தேர்வு செய்யும்
தேர்வு நாடிகள்!

உரிமைகள் மறுக்கப்படும் போதுதான்
விலங்குகள் உடைக்கப்படுகின்றன
இவர்களும் வாழ்க்கையை  கற்றுக் கொடுக்கின்றார்கள் பலருக்கு!

இவர்களின்
நாளைய வாழ்க்கை வெறும்
ஏக்கங்களின் சேமிப்பு!

கண்ணீர்கூட காய்ந்து போனதில்
வரண்டு போன திட்டுக் கன்னங்கள்
சரிதம் எழுதுகின்றன எலும்பின் கூட்டணியுடன்!

இவர்கள்
தின உழைப்பில் வாழ்வேங்கும்
சராசரிக் கூலிகள்!

முதலாளித்துவ முடக்கலில்
மூச்சடங்கி
சுகபோகங்களை பறி கொடுக்கும் அப்பாவிகள்!

தேய்ந்து போன கை ரேகைகளில் கூட
உழைப்பைச் சின்னமாக்கும்
கடின உழைப்பாளிகள்!

விண் நட்சத்திரங்களை
வீசி விட்டுச் செல்லும் வானம் கூட
ஒரு கணம் தரித்து கண்ணீர் சிந்துகின்றன

புழுதி படிந்த வாழ்வுக்குள்ளும்
ஓர் நாள்
முழு உலகுமே வாழ்த்தி நிற்கும்!

நாளை
நாமும் வாழ்த்துவோம்
உழைப்பின் உரிமைகளைப் போற்றி!

- Jancy Caffoor-
     30.04.2013