About Me

2013/05/04

என் இரவாய்


இப்பொழுதெல்லாம் - என்
ஒவ்வொரு இரவுகளும் விழித்திருக்கின்றன
என்னைப் போல
உன் நினைவுகளையும் சுமந்து!

வெட்ட வெளியாய் பரந்த வானில்
கொட்டக் கொட்ட முழித்திருக்கும்
நட்சத்திரங்கள் கூட
உன்னையே சுமந்து காத்திருக்கின்றன
என் வெறுமை நீக்க!

யன்னல் திறந்து உள் நுழையும் காற்றுக் கூட
நள்ளிரவில் குளிர் களைந்து
வெப்பப் பிரளயத்தில் என் மேனி நசிக்குது
இதமாக!

இருள் வெளியின் குரல்வளைச் சத்தமாய்
ஒலிக்கும் ஆந்தை அலறல் கூட
உன் கைபேசி அழைப்பாய்
என்னை முட்டிச் செல்கின்றது ஆர்வமாய்!

உனக்காக காத்திருப்புக்கள் சுகமானதுதான்
உன் குரல் வயலில் எனை நாட்டத்துடிக்கும்
உனக்கான காத்திருப்பு சுகமானதுதான்!

உனக்குத் தெரியுமா
உன் காத்திருப்பு மட்டுமல்ல
உன் முத்தவோசை இன்றிக் கூட - என்
இரவுகள் விடிவதில்லை!

- Jancy Caffoor-
     04.05.2013

ஏன் தானோ


வேர் தந்த பெற்றோர் மறுத்து
நேற்று முளைத்த காதலோடு சரசமாடி
உற்றார் வெறுத்து நிற்போர் மனசு
பாழடைந்த கல்லறைச் சாலை!

தொப்புள் நாண் அறுத்தெறிந்து - தமக்கென
தொட்டில் குழந்தை தான் வார்ப்போர்
பாவத்தின் சிலுவைதனை போர்த்துகின்றனர்
தம் பரம்பரைக்கே!

மலர் வாசம் வீசும் பாசம் - என்றும்
நமக்குள் அழகான பசுமைக் கோலம்
வளமான வாழ்க்கை வாழ
பெரியோர் ஆசி வேண்டுமென்றும்!

- Jancy Caffoor-
      04.05.2013

2013/05/02

சட்டம்


சிறுபான்மைக்கு அநீதி விளைப்பார்
உரிமை மறுக்கும் பெரும்பான்மை!
எதிர்த்துக் குரல் கொடுப்போர் பயங்கரவாதியாம்!
ஏக்காளமிடுகின்றதய்யா இனவாதம்!

கண்கொத்திப் பாம்புகள்
தன்னினத்திற்கு கரி பூசுவார் சொகு வாழ்விற்காய்!
காட்டிக் கொடுக்கும் வல்லுறுக்கள்
வந்தமரும் உயர் பதவிகளில்!

சட்டத்தில் அறைகின்றனர் அதர்மங்களை!
ஏட்டளவில் சத்தியம் கதறுதைய்யா - நம்
மன எரிமலைக் குழம்பின் அகோரத்தில்
கருகிப் போகுமோ சட்டத்தின் ஓட்டைகள்!


- Jancy Caffoor-
      02.05.2013

யாரோ


வெடிக்கின்றது மேகம்
வெற்றி பெறப் போவது
விண்ணா மண்ணா!

புவிக்குள் மின்சாரம் பாய்ச்சி
வேவு பார்க்கின்றது மின்னல்
தோற்றது யார் காற்றா நாற்றா!

புழுதிக்குள் கூத்தடித்த மலர் மேனி
குளிருக்குள் விறைத்துக் கொள்ளுது
அழுக்குக்காகவா அழகுக்காகவா !

இங்கோ மழையோ மழை!
எட்டு திக்கெங்கும் முரசறையும்
கொன்றல் சத்தத்துடன்!

- Jancy Caffoor-
      02.05.2013