About Me

2013/05/21

எனக்குள் தாயாகி



உன்னை இழக்கும் போதுதான் வலிக்கின்றது
கண்கள் சாட்சியாய் உன் முன்னால்!

சட்டத்திற்கு தெரிவதில்லை மனசு - உன்
இஷ்டத்திற்கு வீசிச் செல்லும் பட்டாசாய்
சுடும் வார்த்தைகள்!

வேதங்கள் சொல்லும் சத்தியங்கள்
உனக்குள்ளும் உண்டு ஆழமாய்!

எரி புழுக்களாய் மேனியூர்ந்து
பறந்து திரியும் அழகான வண்ணத்துப் பூச்சியாய்
உன் காதல்!

தினமும் அமிலமூற்றும் உன் பார்வையும்
காதலும்
வலிக்கின்றது வாழ்க்கையைப் பிசைந்து!

எனக்குள் பூ போர்த்துமுன் மனசும்
அன்பும்
வம்பு பண்ணுமுன் காதலும்!

 கிள்ளிச் செல்கின்றதென்னை
கள்ளமாய் ரசிக்கும் உன் கைகளால்
ஸ்பரித்தவாறு!

எனக்குள் தாயாகி
என்னைக் காக்கும் அன்பே

உன் குண்டுக் கன்னத்தில் சிரிப்பை நசித்து
பாசச் சாறூற்று எனக்குள்!


- Jancy Caffoor-
      21.05.2013

மறைந்து கொள்


உன் குரலென்னைத் தொடுகின்ற
பொழுதெல்லாம்
என் விடியல்களுக்குள்ளும் இசை பிறக்கின்றது
கேட்டுப்பார்!

சந்தனம் பூசி பந்தியிலமரும் தென்றல் கூட
வந்தனம் செய்கின்றது நம் மன்பிற்கே!
கேட்டுப்பார்!

அன்பின் மஞ்சத்தில் அழகான பட்டாம்பூச்சியாய்
நம் மனங்கள்
சிறகடிக்கின்றது தினமும்!

வா!

உதடுகளைத் தாளிட்டு காத்திருக்கும் நாணத்திடம்
மெல்லக் கேட்போம் அனுமதி
ஒரு நிமிடம் திரையிட்டு மறைந்து கொள் என்று!

- Jancy Caffoor-
      21.05.2013

பொய்த்துப் போன வாழ்க்கை



வாழ்க்கையில் மிகக் கொடுமையான விடயம் வறுமை. சென்ற வாரம் அண்மையூரில் (வவுனியா) நடைபெற்ற விடயமொன்று இன்னும் எனக்குள் உழல்கின்றது.........

அவள்.......

இளந்தாய்......

மூன்று பிள்ளைகளின் தாய்......

இளமையில் ஏற்படும் வறுமை கொடுமையென்பதற்கு மேலாக அவள் வாழ்க்கையும் அந்த வறுமையால் சிதைந்தது. சுயநலக்கார கணவன், வெறும் சுகநலன்களுக்காக அவளைக் கைவிட்டு வேறு பெண் பின்னால் போய் குடும்பம் நடத்த அவளும் அவளது குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். பத்துப் பாத்திரம் தேய்த்தும் உழைக்க முடியாத சூழ்நிலையில் அவள். காரணம் மூன்று பிள்ளைகளும் பச்சிளம் பாலகர்கள்...........

பலரிடம் கையேந்தி வாழும் இந்த வாழ்க்கை வெறுத்துப் போக அவள் எடுத்த முடிவு..........

தற்கொலை!

தன் வீட்டு ஆழ் கிணற்றில் ஒவ்வொரு குழந்தையாக வீசினாள் அந்த இதயமற்ற பெண். பச்சிளங் குழந்தைகள் மூவரும் துடிதுடித்து  இறந்ததை அந்தத் தாயவள் எப்படித்தான் சகித்தாளோ.......

இனி தனது நேரம்..............

தானும் கிணற்றினுள் பாய்ந்தாள்.. ஆனால் உயிர் பறிபோகும் கடைசி நிமிடத்தில் உயிர் வாழ ஆசைப்பட்டு அருகில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து காயங்களுடன் அப்பெண் உயிர் தப்பினாள்............

கணவன் மனைவிக்கிடையிலான கோபத்தின் உச்சநிலையில் பறிபோனது 3 பிஞ்சுக் குழந்தைகள்தான்!

அந்தப் பெண் இப்போது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். மனநிலை பாதிக்கப்பட்டவள் எனும் முத்திரையுடன்!

3 கொலைகளை செய்து விட்டு அப்பெண்ணால் உயிர் வாழ முடியுமா என்ன...............?

அவள் உலகம் இனி சிறைக்கம்பிகள்தான் என அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கும் அப் பெண்ணின் அவசரமும் , கோபமும் எல்லோருக்கும் ஒரு பாடம்!

2013/05/20

தடையில்லையினி


யாரறுத்தார் நம் சிறகுகளை
உயிரறுந்து கிடக்கின்றது - நம்
பட்டம்பூச்சி!

இரவின் வெம்மையில்
உஷ்ணம் சொறிந்த உன் வெண்ணிலா கூட
சாம்பராகிக் கிடக்கின்றதென் மெத்தையில்!

உனக்கான என் கவிதைகள் கூட
இப்பொழுதெல்லாம்
கல்லறைக்குள் தனித்து முணுமுணுக்கின்றது!

நேற்று
கற்றுத் தந்தேன் காதலை
இன்று நீயோ
இன்னொருத்தியின் உணர்வாய்!

உன் மாற்றம்
எனக்குள் ஏமாற்றம்!
உயிர் வதைக்கும் தடுமாற்றம்!

விடை பெறுகின்றேன்
மடையுடைக்கும் கண்ணீர்த்துளிகளுடன் !
தடையில்லையினி உனக்கு நான்!

அன்பும் பொய்த்தது
ஆசைக் கனவுகள் உடைந்தும் போனது!
இன்னலை என் ஜன்னல் கன்னம் வைக்க
இன்னொருத்தியின் வாசமாய் நீ!

- Jancy Caffoor-
      20.05.2013