About Me

2014/07/25

அன்பனுக்காய்



அன்பு!

என்
ஒவ்வொரு இரவுகளிலும்
உன் னன்பு காற்றில் நசிந்து
சுவாசமாய் விட்டுச் செல்கின்றது!

அன்பால்
நீ
கொடுத்த எண்ணங்கள்
தினமும்
என்னைச் செதுக்கிக் கொண்டிருக்கின்றன!

அன்பை
மாத்திரமே போதிக்கு முன்
வழிப் பயணத்தில் - என்
காலடித் தடங்கள்
சங்கமித்துக் கிடக்கின்றன!

அன்பு
நம்முள்
காதலாய்
நட்பாய்
பாசமாய்
வாழ்கின்றது!

ஒரு
குழந்தையாய்
குமரியாய்
மனைவியாய்
தாயாய்

உன்னைச் சுமக்கும் என்
ஒவ்வொரு பொழுதுகளும்
கரைந்தே போகின்றது - நம்
அன்பில்!

காதலுக்கு வயதில்லை
சொல்லித் தந்தாய் அழகாய்!

அதனாற்றான் என்னவோ- இப்
பிரபஞ்ச மேடை
காத்திருக்கின்றது
நம்மைச் சுமக்க - அதன்
எல்லைப்புள்ளி வரை!

- Jancy Caffoor-
      24.07.2014







2013/06/19

தந்தைக்கோர் கடிதம்


தந்தையே
உங்களுக்கான என் முதல் கவிதையிது!

நீங்கள்!

என் மன விடியலின்
மறக்கப்படாத சூரியன்!

என் இலக்கியப் பயணத்தின்
முன்னோடிச் சுவடு!

வெம்மையாய்
தென்றலாய்
குழந்தையாய்

உங்களுக்குள்
எத்தனை பண்பு முகங்கள்!

தந்தையே

உங்கள் பிடிவாதமும் இறுக்கமும்
முன் கோபங்களும்
என்னை அழ வைத்தாலும் கூட

நீங்கள் ஓவியராக
நடிகராக
எழுத்தாளராக
பாடகராக
பொறியியலாளராக
வைத்தியராக
அதிபராக
எல்லாம் தெரிந்தவராக

உங்கள் அறிவாற்றல் கண்டு
பிரமித்த பல கணங்கள் - இன்னும்
நெஞ்சின் பதிவுகளாகிக் கனக்கின்றன!

மழலைப் பருவத்தில்
உங்கள் தோளேற்றி பாட்டிசைத்து
 தூங்கவைத்த அந்தக் கணங்கள்
இன்னும் ஏக்கத்தில் கசிகின்றன!

என் வாழ்க்கைச் சாலையில்
நீங்கள் பரப்பிச் சென்ற அனுபவங்கள்தான்
இன்று
இணையம் வரை  - என்
முகவரியாகி நிற்கின்றது!

என் கையெழுத்து அழகாம்!
சூழவுள்ளோர் புகழுரைக்கையில்
தந்தையே
நானறிவேன்
என் எழுத்துக்களின் ஆதாரம்  உங்கள்
நிறமூர்த்தங்கள்தானே!

நீங்கள்
வித்தியாசமான தந்தை
கண்டிப்பான தந்தை
இருந்தும்
உங்கள் நெகிழ்வுகளிலெல்லாம்
பனித்துளிகளாய் படர்ந்து கிடக்கின்றது பாசம்!

என் ஒவ்வொரு நகர்வையும்
கண்காணிக்கும் உங்கள் பார்வைகள்
என் வாழ்வைப் பாதுகாக்கும்
 சட்டவேலிகள்!

கல்வி
உங்கள் வழிகாட்டலில் நான் பெற்ற வரம்!
தைரியம்
நீங்கள் எனக்கூட்டிய ஊட்டம்!
தன்னம்பிக்கை
உங்கள் அனுபவங்களால் கிடைத்த வெகுமதி!

வாப்பா!
அழகான மொழிதான் அன்பை உணர்கையில்!
தந்தை
சிந்தைக்கு பூட்டப்பட்ட பாதுகாப்புத்தான்!

பெண்ணடிமைத்தனத்தில் உருளாமல்
"ஜான்சி ராணியாய்" நான் வாழ
நீங்கள் காணும்  கனவுகள்
இப்பொழுதுதான் மெல்ல விரிகின்றன
என் நிஜப்படுத்தலில்!

நாட்கள் உதிர்கின்றன
தேகமும் நோய்க்குள் கரைகின்றன
வாப்பா
உங்கள் ஆரோக்கியம் தளிர்த்திட
பிரார்த்திக்கின்றேன் வல்லோனிடம்!

போலியான இவ்வுலகில்
வேலியாய் பொய்மைகள்!
இருந்தும்
பெற்றவர்கள் உங்கள் உண்மையன்பில்
என்றும்
நெகிழ்ந்து கிடக்கும் பாச மகளாய் நான்!

- Jancy Caffoor-
      19.06.2014
                                                         

எல்லாம் முடிந்து போனது


நேற்றிரவுக் காற்றில்
உதிர்ந்து பறந்தன சருகாய் கனவுகள்!
உறங்கமறுத்த விழிகளோ
இறந்து கிடந்தன விரக்தியில்!

சில காலம் சிறகடித்த ஆசைகள்
சின்னா பின்னாமாகியதில்
கண்ணீர்க் கசிவுகள் முட்கம்பிகளாய்
கன்னங்களைச் சிதைத்தன!

"நீயா பேசியது"
பாடலிப்போ
எனக்கும் பிடிக்கும்

உனக்குப் பிடித்த என் மௌனம்
இனியென் பாஷையாகிப் போனதில்
ஊமையாகி நிற்கின்றேன்
உன்னைத் தொலைத்தவளாய்!

உன் தேவதை நானென்றிருந்தேன்
நம் இடைவெளிகள் மறந்து
தவறுகள் உணர்த்தப்பட்டதில்
பறக்கின்றன துன்ப விட்டில்கள்
என்னைச் சுற்றி!

- Jancy Caffoor-
      19.06.2014