About Me

2014/09/20

அப்சரஸ்



அப்சரஸ் - திரைவிமர்சனம்
---------------------------------------

ஓவியர் ரவிவர்மன்!

வாழ்க்கை வரலாற்றை ஆவலுடன் பார்ப்பதற்காக அப்சரஸூக்குள் நுழைந்தேன்..

ஓவியராய் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்...

அமைதியான பொருத்தமான தோற்றம்.

காதல் வசப்படும்போதும், ஓவியம் வரைதலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தும்போதும் உணர்ச்சி ரேகைகளின் குத்தகை அவர் அங்க அசைவுகளில்!

பிரபல ஓவியர் ரவிவர்மனின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதிதான் அப்சரஸின் கதை. ரவிவர்மன் அழகின் நயங்களை யதார்த்தமாக வரையக்கூடிய மிகச் சிறந்த ஓவியர்.

உண்மையில் ஓவியமானது உள்ளத்துணர்வுகளை உருவங்களாக்கி பரவசம் கொள்ளச் செய்யக்கூடியது.அந்தவகையில். ரவிவர்மனின் ஓவியக்கலையின் ஈர்ப்பானது பல பெண்களின் மனதை ஊடுருவிச் செல்லக்கூடியது. இதனால் ஓவியம் வரைவதற்காக வரும் மாடல் பெண்களை, தன் வசீகரத்துள் வீழ்த்தி அவர்களை ஓவியங்களாக்குவதில்  அவர் கைதேர்ந்தவர்.

அவ்வாறு வரும் மாடலழகிகளுள் ஒருத்திதான் நித்யாமேனன். அவர் வரைந்த ஓவியங்களை பார்த்த நித்யாமேனன் அவர்மேல் ஈர்ப்பு கொண்டு அவருடனேயே மானசீகமாக வாழத்தொடங்குகிறார். அவ்வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தான் ரவிவர்மன் மீதான காதல்..

காதல்........

உணர்வுகளின் சங்கமம். ஈர்மனங்களின் உற்சாகக்கூவல். அன்பின் அலையடிப்பை இருதயத்துடிப்புக்களில் சுமக்கும் அற்புத அலைவு.

ஆனால் ....

ஓவியருக்கோ நித்யாமேனனின் அன்பு பொருட்டாகத் தெரியவில்லை. அழகை ரசித்தார். அவரது கரங்களும் தூரிகைகளும் அவளின் மென்னுடலை ஸ்பரித்துச் சென்றதே தவிர , அவளின் அன்பை ஸ்பரித்துச் செல்லவில்லை. தன்னைக் கணவனாகமனதிலிருத்தி வாழும் அவளை, அவனோ  தனது தேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தும் பாண்டமாகவே கருதினான்.

விளைவு....

வேதனை உணர்ச்சிக் கொந்தளிப்புக்களின் பிராவகம் அலையடிக்க ...
அவளோ சோகத்தில் இறந்து விடுகின்றாள்.

பின்னர் .....

ரவிவர்மன்,  கார்த்திகாவை தற்செயலாக பார்க்கிறார். அவளின் அழகின் ஈர்ப்பில் மயங்கி,  கற்பனையால் தனது தூரிகையை உயிர்ப்பாக்கி பல ஓவியங்களை வரைகின்றார். தான் வரைந்த ஓவியங்களை கார்த்திகாவுக்கு காட்டும்போது, தனது மேனியை நிர்வாணப்படுத்தும் ஓவியத்தை அவள் கண்டதும் கோபத்தில் கொதித்துப் போகின்றாள்..

அவளின் கொதிப்பை ஓவியரோ பல புராணக்கதைகளைக்கூறி சமாதானப்படுத்த  ஈற்றில் இருவருக்கிடையிலும் மெல்லிய காதல் நூலிலழையோடுகின்றது.

இந்நிலையில் .....

அப்பாவி பெண்களை மயக்கி நிர்வாணப் படம் வரைந்து விற்பனை செய்வதாகவும், வேசி பெண்களின் மாடல்களைப் பயன்படுத்தி கடவுள்களின் உருவங்களை வரைந்து விற்பனை செய்வதாகவும் அவர்மீது போலீஸில் புகார் செய்யப்படுகிறது.

கூறப்பட்ட புகாரில் இருந்து சந்தோஷ் சிவன் தப்பித்தாரா?
காதலி கார்த்திகாவை கைப்பிடித்தாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஓவியருக்குரிய அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை சந்தோஷ் சிவனுக்கு வௌிப்படுத்த, மறுபுறமோ கார்த்திகாவின் கவர்ச்சி அதிரடி!

எனினும் ஓவியத்திற்கு போஸ் கொடுக்கும்போது கார்த்திகா தரும் முகபாவனைகள் ரசிக்கும்படி உள்ளது.

இது ரவிவர்மனின் கதைதான்  எனும் எதிர்பார்ப்பில் விழிகள் திரைப்படத்தை மேயும்போதுதான் நாம் ஏமாற்றப்படுவதை உணர்கின்றோம்...

ஏனெனில் .....

கதையை விட கவர்ச்சியின் பின்னனியில்தான் கதை நகர்கின்றது என்பதை இயக்குனர் லெனின் ராஜேந்திரன்மறைமுகமாகச் சொன்னாலும்கூட,
மது அம்பாட்டின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்!

அப்சரஸ்...

ஓவியப் பெண்களின் மேனியழகை ஆண்கள் மனதில்  கொளுத்தும் வெடி !
ஆண்களை அசர வைக்கும் கவர்ச்சி அதிரடி!

- ஜன்ஸி-

தூறல் - 2

கூடு விட்டு தாண்டி வந்தேன்
உன் நெஞ்சவீடும் எனக்கில்லையே
குழந்தையாய் நானிருந்தால்
குற்றம் நீயும் காண்பாயோ!
---------------------------------------------------------- 

உதயத்தில் ஓர் அஸ்தமனமாம்..
உன்னால்
உருக்குலைந்த என் னுணர்வுகள்
இன்று
நடைபயில்கின்றன மயானம் தேடி!
----------------------------------------------------------- 
முற்றுப்புள்ளிகள் வெறும் நிறுத்தமல்ல
அடுத்த தொடரை ஆரம்பிப்பதற்கான அழைப்பு!
---------------------------------------------------------- 

சிலரது ஏமாற்றம் தரும் தடுமாற்றம்கூட
நல்லதோர் வாழ்வுக்கான மாற்றமாகலாம்!
-------------------------------------------------------- 

ஒருவர் நம்மீது கொள்ளும் மரியாதை யினளவை
நாம் பேசும் வார்த்தைகள்தான் தீர்மானிக்கின்றன!


- Jancy Caffoor-




வலி



மனதை திறந்த புத்தகமாகத்தான் வைத்திருந்தேன். அதனாற்றான் காற்றின் சீண்டல்களாய் நம் வார்த்தைகள் உரசிச் சென்றதில் உரிமை கோருகின்றன சண்டைகள்!

சண்டைகள் சாக்கடைகள்தான்!
இருந்தும்.........
திரும்பிப் பார்க்க வைக்கின்றன அன்பை!
-----------------------------------------------------------------------------------------

வார்த்தைகளின் போதுதான்
மௌனத்தின் மதிப்பு தெரிகின்றது!

மௌனத்தின் போதுதான்
வார்த்தைகளின் அருமை புரிகின்றது!!

ஆகவே.....
சந்தர்ப்பங்களும்  சூழ்நிலைகளும்தான்  நம்மை பேச வைக்கின்றன!
-------------------------------------------------------------------------------------------
மௌனம்
தனிமையின் மொழி!
தனிமையோ
வலிகளின் வழி!
--------------------------------------------------------------------------------------------

மொழியும் ஒலியும்
மௌனம் கொள்ளும் நேரம்...
தனிமை எனக்குள்
இனிமையின்றி!
-------------------------------------------------------------------------------------------

பிரச்சினைகளைப் புரிந்து விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் வலி இருந்தாலும்கூட, அடுத்தவர் சந்தோஷம் உணர்தலும் ஒர் இன்பமே!
--------------------------------------------------------------------------------

அவமானங்கள் தரும் வலிகூட கடும் உழைப்பால் முன்னேற்றத்திற்கான வழியாகலாம்!


- Jancy Caffoor -




தூறல்

கலைஞனுக்கு....
நம்பிக்கை இன்னும் இருக்கின்றது
நடைபாதையோரம் வீழ்ந்து கிடக்கும் கற்களைச் செதுக்க
உளிகள் கிடைக்குமென்று!

தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்போது
கற்கள்கூட
சிலைகளாய் நிமிர்ந்து நிற்கும்!



-------------------------------------------------------------------------------------

உருச் சிறிதுதான் சிலந்திக்கு...
இருந்தும்......
விடா முயற்சியின் விழுதுகளாய்
அதன் கரங்கள்!

நானும் சிலந்திதான்...

தோற்றுப்போகும் வலைகளுக்குள்ளும்
தொட்டுக் கொள்ளத் துடிக்கின்றேன்
வெற்றிச் சாயல்களை!

------------------------------------------------------------------------------------

உருவம் தேடா உணர்வின் தொகுப்பாய் - மனதுள்
உருண்டோடும் சந்தோஷ சிலிர்ப்புக்கள்தான்
பெயர் கொண்டதோ

 "அன்பென்று"!
-------------------------------------------------------------------------------------

வலி...........

பலருக்கு
கண்ணீர் தெறிக்கும் வழி!
சிலருக்கோ
தன்னம்பிக்கை செதுக்கும் உளி!
--------------------------------------------------------------------------------------

மனம் வெறும் இரும்பல்ல இறுகிக் கிடக்க..
உணர்ச்சிகளின் கலவை!

அதனாற்றான்

அறியாமை, அவசரம் தரும் பல முடிவுகளை நமது சிந்தனை மாற்றி விடுகின்றது!


- Jancy Caffoor -

சாரல்


எப்படியும் வாழலாம் என்பதை விட,
இப்படித்தான் வாழ வேண்டும் எனும் வாழ்வில்தான் நமக்கான
அழகான வாழ்க்கை காத்திருக்கின்றது!


---------------------------------------------------------------------------------------------

இரவின் புன்னகை
அழகாககத்தான் தெரிகின்றது நிலவினில்...
இருந்தும்....
உன் மௌனச் சாம்பலி லென்னைப் புதைத்து
நிசப்தத்தின் முணுமுணுப்பில் - மூச்சுக்
காற்றின் விசுவாசத்தை
மோசமாக்கத் துடிக்கின்றாய்.........
நானொரு
பீனிக்ஸ் பறவையென்பதை யறியாமல்!


----------------------------------------------------------------------------------

காலத்தின் மடியில் நமது கனவுகள், காயங்கள், சோகங்கள் ஏமாற்றங்களை பரப்பி விட்டு வலியில் துடித்து நிற்கின்றோம்.

ஆனால்

அதே காலம்தான் அவற்றை மறக்கச் செய்து நமக்குள் புது நினைவுகளை முகிழ்க்கச் செய்து நடைபயிலச் செய்கின்றது இயல்பாய் வாழ!
----------------------------------------------------------------------------------------------------

கீழ்திசை!

தொட்டுச் செல்லும் சூரிய விரல்களில் தோய்ந்த என் நிழலும், தூசு துடைத்து ஔிரத் தொடங்கியுள்ளது லேசாய்

இருள் நிரந்தரமல்ல

இயற்கை விட்டுச் செல்லும் நியதியினில்!
இறையருள் போதும்
உறைந்து கிடக்கும் சோகங்கள் உருக்க!

- Jancy Caffoor -