About Me

2012/09/10

கப்பலுக்கு போகல மச்சான்


சனக்கூட்டத்தை திணித்துக் கொண்டு வந்த பேரூந்து, அநுராதபுர புதிய பஸ் நிலையத்தில் தன தியக்கத்தை நிறுத்தியது.

"அன்ராதபுர..அன்ராதபுர......கட்டி ஒக்கோம f பஹின்ட"

பஸ் நடத்துனரின் உரப்பொலியும் ஓய்ந்தொழித்த போது, எல்லோரும் முண்டியடித்தவாறு இறங்க முற்பட்டனர். அந்த அலைக்குள் ராசீதாவும்  நசிந்தபோது, அவள் மார்பில் அணைந்தவாறு கிடந்த ஆறுமாதக் குழந்தையும் வீலென்றழுது தன்னெதிர்ப்பைக் காட்டியது..

"இக்மன் கரண்ட" 

பஸ் நடத்துனர் துரிதப்படுத்திய போது அவளுக்குள் எரிச்சல் முட்டியது...

"சீ..சீ.......எறங்கும் போதாவது அமைதியா எறங்க விடுறாங்களா"

தனக்குள் சலித்தவாறு நிலத்தில் காலூன்றினாள்..........!

அநுராதபுர நவ நகரய...........!

விசாலமாக கரம் நீட்டி அவளையும் வரவேற்றது. தோளோடு ஒட்டிக்கிடந்த சுருங்கிய தோற்பையைத் தொட்டுப் பார்த்தாள்..அந்தப் பைக்குள்தான் அவள் முழு உலகமும் சுருங்கிக் கிடந்தது..

இனிவரும் நாட்களில் அவள் வாழ்வை நகர்த்தப் போகும் சில சில்லறைக் காசுகளும்,  தாள்களும் சிரிப்பை உதிர்த்து தம்மிருப்பை வெளிப்படுத்தின.

புதிய ஊர்......
புதுப் பாஷை....
புதிய மக்கள்.....

என்ன தைரியத்தில் யாரை நம்பி இங்கே வந்தாள்.......படைத்தவன் மட்டுமே அவள்  துணையாக......மனிதர்கள் யாவரும் வேற்றவர்களாக............

கண் கசிந்தது. யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பில் சுருண்டு கிடந்த குழந்தை பசியால்  அழத் தொடங்கியது..
இறைவன் கொடுத்த அந்த இயற்கைத் திரவத்தைத் தவிர வேறெதுவும் இல்லாத நிலையில்  அமர்ந்து கொள்ள ஒதுக்கிடம் தேடினாள்..

சற்றுத் தொலைவில்...........

மூடப்பட்டிருந்த கடையொன்றின் ஓரமாக சிறிய மறைப்பொன்று தெரியவே அதிலமர்ந்து கொண்டாள்...

முந்தனை விலக்கி தன் குழந்தையை நெஞ்சோடணைத்து பாலூட்டத் தொடங்கினாள். தன் பசி நீங்கும் மகிழ்வில் குழந்தை அவளை மெதுவாகத் தடவி புன்னகைத்தது.

"ராசீதா"

மனம் அதுவரை அடக்கி வைத்திருந்த துயரம் பீறிட்டுப் பாய மெதுவாக குலுங்கினாள். அவள் குலுக்கத்தில் குழந்தையும் ஒரு தடவை துடித்து நிமிர்ந்தது.

"அக்தார்"

அவன்தான் அவளுக்கு வாழ்வளித்த உத்தமன். படிக்கும் காலத்தில் அறிமுகமானவன். காதலென்று அவள் பின்னால் ஐந்து வருடம் பின் சுற்றினான். அவளுக்கு இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் பிடிக்காது என்று சும்மா ஒதுங்கினாலும் கூட அவளை விடவில்லை. க.பொ.த (சா/த )படிக்கும் வரை துரத்தினான்.

இந்தக் காலக் காதலர்களெல்லாம், தம் ஒருதலைக் காதலை நியாயப்படுத்த முன்வைக்கும் ஆயுதம், அவளும் தன்னைக் காதலிக்கிறாளென்று உருவகப்படுத்தி, தன் நண்பர்கள் உலகத்தில் உலவ விட்டு அவள் பெயரை களங்கப்படுத்துவதுதான்!. அக்தர் அதனையும் செய்து பார்த்தான். ஆனால் அவளோ அவனைக் கண்டுகொள்ளவேயில்லை. படிப்பில் முழுக்கவனமும் செலுத்தி  பொதுப் பரீட்சையில் பாடசாலையில் முதலிடத்தில் வர  அவனோ பரீட்சையில் பெயிலாகி நின்றான்.

"ராசீதா" 

ஏழ்மைப்பட்டவள். வடபகுதியிலிருந்து யுத்தத்தால் தாக்கப்பட்டவளாய் தன் தாயுடன் அடைக்கலமாகி, புத்தளத்திற்கு வந்து சேர்ந்தவள். ஷெல்லடியில் வாப்பாவும், காக்காவும் மௌத்தாக  உம்மாவே அவளது சகலதுமாகி நின்றாள். தெரிந்த நாலு வீடுகளுக்குப் போய் பாத்திரம் தேய்த்து கிடைத்த சொற்ப வருமானத்திலும்  கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்ததால் அவளும் காதல் அது இதுன்னு வாலிபச் சேட்டைக்கிடம் கொடுக்கவில்லை. பொறுப்புணர்ந்து படித்ததில் அக்தாரை விலக்க அவனும் அவள் நல்ல மனம் புரிந்தும் விடுவதாக இல்லை.

நம்பிக்கையுடன் உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் காலூன்றியவளுக்கு ஆறு மாதம் கூட போகாத நிலையில் வறுமைப்பட்டு நொந்து போன தாயும் ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகவே ராசீதாவின் கனவுகளும் அறுந்தன. தாய்வழி உறவினர் அவளைப் பொறுப்பெடுத்தாலும் அவர்களைச் சிரமப்படுத்தி கல்வியைத் தொடர அவள் மனம் இடங்கொடுக்கவில்லை. பாதிவழியே படிப்பும் நிற்க அதுவரை சந்தர்ப்பம் பார்த்திருந்த அக்தார் தன் காதல் மிகை வேட்கையில் பெண் கேட்க, அவர்களும் அவள் விருப்பம் கூட அறியாத நிலையில் அவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர்.

அக்தார் அவள் மீது உயிரையே வைத்திருந்தான். தன் காதல் மனைவிக்கு அவனளித்த இல்லறப் பரிசு கர்ப்பமே. திருமணமாகிய முதல் மாதத்திலேயே அவனின் அன்பு, காமம், ஆசை எல்லாமே சிசுவாய் அவள் கர்ப்பத்தை தொட்டது. அவள் தாய்மையும், அவனது கவனிப்பும் அவளை நெகிழச்செய்யவே, அக்தாரின் அன்பு மனைவியாக வலம் வரத் தொடங்கினாள்..

அக்தாரிடமுள்ள கெட்ட பழக்கம், கஷ்டப்பட்ட உழைப்பதில் ஆர்வங் காட்டாதவனாக இருந்தான். பல்கலைக்கழகப் பட்டம் முடித்தவர்களே இக்காலத்தில் தொழிலுக்காக காத்திருக்கையில், கொஞ்சப் படிப்புடன் பெரிய அரச வேலைக்காய் இலவு காத்திருந்தான்.

அவள் எவ்வளவு கூறியும் கூட, அவன் அதனை வாங்கிக் கொள்ளவில்லை. வறுமை அவர்களைக் கொடுமைப்படுத்தியது. வளர்பிறையாகும் வயிற்றுக்குமுரிய தீனி போட அவளால் முடியவில்லை. அவள் படிக்கும் காலத்தில் படித்த தையல்கலை கைகொடுக்கவே, அயலாருக்குத் தைத்து கொடுத்து ஏதோ காலத்தை ஓட்டினாள். அவள் தயவில் அவன் சற்றுக்கூட பொறுப்பின்றி பல மாதங்களை ஓட்டிய நிலையில், அவள் பிரசவ காலமும் நெருங்கியது. தையல் மெசின் அவளை வராதே என விரட்ட, மீண்டும் அவள் வீட்டு அடுப்புக்கும் பசி இரைத்தது..

ஓரிரு நண்பர்களின் ஆலோசனையில் வெளிநாடு செல்ல முயற்சித்தான். அவளிடமிருந்த தோடும் விற்பனையாக, அந்தப் பணமும் ஏஜன்சியை சந்திப்பதில் கரைந்தது.

ஏஜென்சி நடத்துபவன் அவனது தூரத்து உறவுக்காரன். அவனது குடும்ப நிலை தெரிந்தவன். அதுவரை அவனுக்குள் ளுரைக்காத ஆலோசனையை பக்குவமாக எடுத்துக் கொட்டினான்.

"டேய்.கைல அஞ்சு காசில்லாத உனக்கெல்லாம் சீமை சரிப்பட்டு வராதடா...பொண்டாட்டி வீட்டிலதானே இருக்காள். அவள அங்க அனுப்பிட்டு ராசா மாதிரி தின்பியா, நீ மாடா தேய்வியா............டேய் அவ என்ன ஜமீன் வாரிசா. ஒன்னுக்கும் வக்கில்லாம பத்துப்பாத்திரம் தேய்ச்சு வந்த காசில வளர்ந்த பரதேசி. அஞ்சு பைசா வேணாம். நல்ல எடமொன்று இருக்கு அனுப்பு. நான் ஹெல்ப் பண்ணுறன்"

அவன் ஏற்றல் நன்கு வேலை செய்ய பல கனவுகளுடன் வீடுசென்ற அக்தார் தன்னாசையை அவள் முன் கொட்டினான். அப்போது அவள் மகளுக்கு ஒருமாதம் கூட கழியவில்லை..ஆத்திரப்பட்டாள்.

"உங்களுக்கென்ன விசரே.........பச்சப்புள்ள இத விட்டுட்டு, அந்த பாலை வனத்துக்கு நான் போக ஏலா..........."

அவள் பிடிவாதமும் தொடர, அவனது கோபமும் உஷ்ணமடைய....... வாக்குவாதமும், முரண்பாடுகளும் நாளுக்கு நாள் வளர்ந்தது. யாரிடமோ புதிதாக கற்றுக்கொண்ட சிகரெட்டும், மதுப் பாவனையும் அவளை இம்சித்தது. குடித்துவிட்டு அடிப்பதும் சிகரெட்டால் அவள் கைகளை கருக்குவதும் அவன் வாடிக்கையாகி விடவே துடித்தாள். சில காலம் வசந்தம் பூத்த வாழ்க்கை கருகிப் போகவே, விரக்தியோடு நடைப்பிணமானாள்.

ஒருநாள்.......
அவன் கோபம் உச்சமடையவே, சற்று போதையில் அவளை நெருங்கினான். அவள் தலைமுடிக் கொத்து அவன் பிடியில்!

"சொல்லடீ....வெளில போக சம்மதிக்கிறியா.....இல்லையா"

உறுமினான். அவளும் தன் பிடியிலிருந்து தளரவில்லை.

"இந்தப்  பச்சப்புள்ளய விட்டுட்டு  நான் போக மாட்டேன்"


"போக மாட்டே....போக மாட்டே"


தன் முழு ஆத்திரத்தையும் ஒன்று திணித்து, அவளை உதைக்க அவள் சுருண்டு போய் குழந்தையுடன் சுவரில் மோதுப்பட்டு  விழுந்தாள். குழந்தை அழுதது விறைத்தது.

அவள் நெற்றி சுவருடன் உரசியதில், லேசாய் இரத்தம் கசிந்தது. வலியை விட, அவனது வார்த்தைகள் வலித்தன. மௌனத்தில் இறுகிக் கிடந்தாள்...........

"என்னடி திமிரா.......இனி இந்த வீட்டில உனக்கிடமில்லை"

தரதரவென்று அவளையும், அவள் பிடியில் இறுகிக் கிடந்த குழந்தையையும் வெளியே இழுத்துப் போட்டவனாக கதவை மூடினான்....

இப்பொழுதெல்லாம் காதல் அன்பில் எழுதப்படுவதில்லை. அவசரத்திலும் வெறும் உணர்ச்சியிலும் தானே எழுதப்படுகின்றது..

அவளை நோக்கி வீசப்பட்ட, அயலாரின் அனுதாபப் பார்வைகளைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை. வீதியில் வேகமாக இறங்கினாள்...!

"ராசீகா.." நில்லடி!

பக்கத்து வீட்டு கசீனா ராத்தா விம்மலுடன் அவளிடம் ஓடி வந்தாள்..."

எங்கேயடி போவே.............பச்ச ஒடம்பு........இன்னும் நாப்பது கூட போகல........என் வூட்டுக்கு வாடி நான் ஒனக்கு சோறு போடுறன்"

பாசத்தில் கரைந்தாள் யாரோ ஒருத்தி..........!

"இல்ல ராத்தா......நான் போறன்.....அந்த மனுஷன் மூஞ்சில முழிக்க எனக்கு இஷ்டமில்ல...அவனெல்லாம் மனுஷனா....சீ"

ஆத்திரத்தில் நா குளற, அவ்விடத்தை விட்டு நகர முயன்றாள்..

அவள் பிடிவாதமும், அவனின் முரட்டுத்தனமும் கசீனாவுக்குப் புரியும் என்பதால் எதுவுமே பேசல......

தான் கொண்டு வந்த சீலைப்பையையும், சில தாள் நோட்டுக்களையும் அவளிடம் திணித்தாள்.

 "இதுல புள்ளக்கு பால்போச்சியும் மாவும் இருக்கு, "

" ராத்தா.......உங்களுக்கு நான்..............." 

ராசீதாவின் வார்த்தைகள் அற அழுதவளாக வேகமாக எப்படித்தான் புத்தளம் பஸ் நிலையத்தையடைந்தாளோ!

எங்கே போவது..............யாரைத் தெரியும்..................!

பயங்கரம் மனசுக்குள் பிறாண்டும் நேரம், அநுராதபுர பஸ்ஸின்  வருகை அவள் சிந்தனையை அறுக்கவே, அவசரமாக அப் பேரூந்தில் தொற்றிக் கொண்டாள்...

பக்கத்து ஊர்...
யாராவது நல்லவங்க இல்லாமலா போவாங்க.........
நம்பிக்கையுடன் அவளும் பஸ் உள்ளிடத்தை நிறைத்தாள்.

"ஒயா கவுத"

குரலொன்று சிந்தனையை அறுக்க பார்வையை அவசரமாக உயர்த்தினாள். கடை முதலாளி போல் கடை திறக்கணும் அப்பால போ எனப் பார்வையால் விரட்டுவதை உணர்ந்தாள்.

எங்கே போவது.........யாரைத் தெரியும்.............இந்த ஊரில்!
படைத்தவனைத் தவிர!

பல சிந்தனைகளுடன் வீதியில் நடக்கத் தொடங்கினாள் யாராவது அவளுக்கும் அவளது குழந்தைக்கும் அடைக்கலம் தருவார்களென்ற மலையளவு நம்பிக்கை மட்டும் அவள் யாசக வாழ்வின் முதலீடாகிக் கிடந்தது

(கரு நிஜம்)


3 comments:

  1. Idi.. Minnal.. Mazhai.. puyal.. Vellam.. Poogambam.. ethu nadanthalum east.. west.. north.. south..enga irunthaalum, entha sim pottirunthaalum ennoda sms suma gilli...gilli....gilli maathiri vanthu GOOD Morning sollum..Hava a nice Day...

    ReplyDelete
  2. மனதை வருத்திய சிறுகதை... நிஜம் என்று அறியும் போது இன்னும் வலிக்கிறது...வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!