About Me

2021/04/20

இலட்சியவாத சிந்தனைகள்

இன்றைய கல்வி அமைப்போடு பொருந்துகின்ற வகை  

அறிவின் திறன் பெருகும் விஞ்ஞான யுகத்தில் வாழும் நாம் சிந்தனைவாதிகளின் கருத்துக்களை புறக்கணிக்க முடியாது. மரபுவழிக் கல்விக் கோட்பாடுகளில் இலட்சியவாதமும் அடங்குகின்றது. கல்வியில் இலட்சியவாதம் எனும் சிந்தனை எம்முடைய தத்துவ உலகிற்கு மிகப் பொருத்தமானது. ஏனெனில் இலட்சியவாதம் தொன்மையான கலைத்திட்டமாகும். இது கல்வி உலகில் மட்டுமல்லாமல் வாழ்வியலிலும் தனது கருத்துக்களைப் பதிக்கும் உயர்ந்த தத்துவமாகும். இவ் இலட்சியவாத எண்ணக்கருக்களுடனும் அதன் கலைத்திட்டத்துடனும் சோக்கிரட்டிஸ்  பிளேட்டோ, அரிஸ்டோட்டில், ஹோர்ன் றொய்ஸ், பெராட்லி, பினோஷா, ஜோன் ஓகஸ்து புறோபல் றஸ்க் ஜோன் ஹென்றி பஸ்டலேசி உட்பட பலர் பங்களிப்புச் செய்துள்ளனர்.

இலட்சியவாத சிந்தனை ஊற்றெடுக்க ஆதாரமாகவிருந்த கிரேக்க மெய்யியலை வரலாற்றுரீதியாக இரு பிரிவாக நோக்கலாம்

1. சோக்கிரட்டீஸூக்கு முற்பட்ட சிந்தனை

2. சோக்கிரட்டீஸூக்கு பிற்பட்ட சிந்தனை

முற்பட்ட சிந்தனை விஞ்ஞானம் சார்ந்ததாகவும், பிற்பட்ட காலச்சிந்தனை விஞ்ஞான விளக்கத்தினை அடியொற்றியதான சமூகம், ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை முறையோடு பின்னிப்பிணைந்ததாகவுமிருந்தது. 

ஸ்பானியர், ஏதென்ஸ் நகர வாசிகளுக்கு இடையில் ஏற்பட்ட போரினால் கலாசார சீரழிவை எதிர் கொண்டிருந்த ஏதென்ஸ் நகரின் மக்களுக்கு கல்வியின் மூலம் நல்லொழுக்கத்தின் குண இயல்புகளைப் பயிற்றுவித்து மக்களை நல்லவர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட சோக்கிரட்டீஸ் மற்றும் அவரின் சீடர் பிளேட்டோ என்பவர்களின் சிந்தனைகள் இலட்சியவாதத்தினுள் அடங்குகின்றது. இப்பிரபஞ்சம் ஆன்மாவினால் ஆக்கப்பட்டுள்ளது என்று கூறும் இலட்சியவாதம், இவற்றை அறியும் திறன் மனதுக்கு உண்டென கூறுகின்றது. ஒரு மனிதனை இயக்கும் சக்தி மனதிலேயே ஊற்றெடுக்கின்றது. எனவே மனதிலே சிந்தனைகளை குவியப்படுத்தி அதனூடாக உடலையும் செயற்படுத்துகின்ற வழிமுறையை இலட்சியவாதம் முன்மொழிகின்றது. 

கிரேக்க மெய்யியலில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய சோக்கிரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகிய மூவரின் சிந்தனைக் கருத்துக்கள் அறிவைப் பெறுதல்  என்ற முக்கியத்துவத்தினடிப்படையிலெழுந்தன.  

சோக்கிரட்டிஸின் 'உன்னையே நீ அறிவாய்' என்ற தத்துவச் சிந்தனை மனிதரிடையே அறிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அறிவைத் தேடும்போது மெய்ப்பொருள் பெறப்படுகின்றது. அறிவினால் கிடைக்கும் இன்பமே மேலானது எனக்கூறும் சோக்கிரட்டீஸ் அறிவையும் உண்மையையும் கொண்ட சமூகத்தை தனது உயர்ந்த சிந்தனையாகக் கொண்டார். மெய்யியல் என்பது உண்மையைத் தேடும் ஒருவகைச் சமூகச் செயற்பாடாகும். அவரவர் உள்ளத்தில் எழும் உண்மை வெளிப்பாடே மெய்யியல் எனக் கருதினார். பிளேட்டோவின் மெய்யியல் உண்மை, அழகு, ஒழுக்கம் பற்றி ஆராய்ந்து நவீன மெய்யியல் ஆராய்ச்சிக்கே அடித்தளமிட்டுள்ளது. தத்துவத்தின் மிக உயர்வான எல்லையாக பிளேட்டோ கருதுவது நன்மை என்பதாகும். இதனை பயிற்சியின் மூலமாக அடையலாம் எனக் கூறுகின்றார். 

உண்மை, அழகு, நன்மை ஆகிய மூன்று விடயங்களையும் ஆன்மீகப் பெறுமானமுள்ள விடயங்களாக இலட்சியவாதம் நோக்குகின்றது. எனவே பிளேட்டோவின் சிந்தனையில் உதித்த சீரிய கல்வி மனிதரை பண்புடையவர்களாக ஞானமிக்கவர்களாக ஆக்கும் கல்வியாகும்.  இத்தகைய கருத்துக்கள் இன்றைய கல்விக் கருத்துக்களிலும் கோட்பாடுகளிலும் மிளிர்வதைக் காணலாம்.

சிந்தனைகளை குவிக்கும் மையமாக கல்வி விளங்குகின்றது. கல்வியானது ஆன்மீகத் தேவையென்றும், பிள்ளையின் பிறப்பிலிருந்து ஏற்படும் மன உந்துதல்களை வழிப்படுத்தி சரியான முறையில் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுப்பதன் மூலமாக பிள்ளை தன்னுடைய ஆன்மாவை அறிய உதவுவதால் அக்கல்வியை சிறந்த முறையில் புகட்ட வேண்டுமெனவும் இலட்சியவாதம் கூறுகின்றது. 

தற்காலத்தில் கல்வி பற்றி பல வரைவிலக்கணங்கள் கூறப்பட்டாலும் கூட, தனிமனிதன் தன் ஆளுமையை வளர்த்து, தனக்கும் நாட்டிற்கும் நலன் பயக்கும் நற்குடிமகனாக உருவாவதற்கு அக்கல்வி உதவவேண்டுமென்பதே கல்வி பற்றிய பொதுக்கருத்தாக அமைகின்றது. எனவே இக்கருத்தோட்டத்தினை நாம் இலட்சியவாத சிந்தனைகளிலும் காணக்கூடியதாக உள்ளது. 

கல்வி பற்றிய கருத்துக்கள்

சோக்கிரட்டிஸ் கல்வி பற்றிக் குறிப்பிடும்போது, 

'கல்வி என்பது வாழ்க்கை. அதை அடையக்கூடிய ஒரே வழி சுய அனுபவமும் அறிவு சேர்க்கும் ஊக்கமும் தளராத அறிவுத் திறமுமாகும்' என்றும் கூறினார். 

அத்தகைய கருத்தை ஏற்றுக் கொண்ட பிளேட்டோ ஒரு நாட்டின் வளர்ச்சியிற்கு அடிப்படை மூலவளமாக அமையும் கல்வியானது  ஒரு வாழ்க்கை எனவும், அத்தகைய வாழ்க்கையிலிருந்து பெறும் அறிவு அனுபவத்திலிருந்து உதிக்க வேண்டுமெனவும், அந்த அறிவு சிந்தனையைத் தூண்ட வேண்டுமெனவும், அச்சிந்தனைத் தூண்டல் புதுத்தன்மை பெற்று முழுமை பெற்றதாக எல்லோருக்கும் உரிய பொதுச் சொத்தாக மாற வேண்டுமெனவும் கூறினார். 

உண்மையில் கல்வியின் தொடக்கப்புள்ளி அறிவாகின்றது. அறிவே எம் சிந்தனையை வளப்படுத்துகின்றது. சோக்கிரட்டிஸின் கருத்துப்படி ஒவ்வொரு புதிய விடயங்களையும் நாம் அறியும்போது எம்முடைய அறியாமை எமக்கு நன்கு தெளிவாகின்றது. ஆகவே எமக்கு எதுவும் தெரியாது என்ற சிந்தனை ஒவ்வொருவரிடமும் அறிவைப் பெறுவதற்கு எம்மைத் தூண்டுகின்றது. கேட்டல்இ கிரகித்தல், ஏற்ற இறக்கம் எனும் அடிப்படையில் பிள்ளையிடம் கருத்துத் துலங்கல் ஏற்படுகின்றது. கருத்துக்கள் மூலம் நாம் நிறைய விடயங்களை சாதிக்க முடியும். இக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் கருவி மனமாகும். ஆகவே ஒவ்வொருவரும் தன்னிடமுள்ள மனதை அறிந்து கொள்ள கல்வி ஒரு வழியாகின்றது. கல்வியின் மூலம் தன்னைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது என்றார். இந்த இலட்சியவாதச் சிந்தனையானது இன்றைய கல்வியமைப்பிலும் செல்வாக்குச் செலுத்தி நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

சோக்கிரட்டீஸ் கல்விக்கு எல்லையில்லை என்றார். அத்தத்துவத்தின் தொடர்ச்சியாக நம் கல்வி நடைமுறையிலும் கற்றலுக்கு கற்றல் எனும் அத்தியாவசிய தேர்ச்சியானது வாழ்க்கை நீடித்த கல்விக்கு உதவுகின்றது.

பிளேட்டோ தனது இலட்சியவாதத் தத்துவத்தில், கல்வி அரசுக்குரியதாக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார். எமது நாட்டிலும் கல்வியே அரசியல் பொருளாதார உறுதிப்பாட்டைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவதுடன் அரசின் கட்டுப்பாட்டிலே அரசு வழங்கும் மூலதனமாகவே அது விளங்குகின்றது.; கல்விக்கான செலவீனங்கள் யாவும் அரசினால் ஏற்கப்பட்டு இலவசக்கல்வி நடைமுறையிலுள்ளது. கற்பித்தலுடன் மதிய உணவு, பாடநூல்கள் விநியோகம் பாடசாலைச்சீருடை இலவச சுகாதார சேவை போன்றவை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

தொழிற்பாட்டு முறையின் கவர்ச்சியால் உந்தப்பட்ட பிளேட்டோ மக்களை மூன்று தரமாக பிரித்து உயர்தரத்தில் ஆளும் வர்க்கத்தினரையும் அடித்தளத்தில் தொழிலாளி வர்க்கத்தினரையும் இடைநடுவில் இராணுவத்தினரையும் வைத்துள்ளார். ஆளும் வகுப்பினர் சிறந்த அறிவுடையோராக இருக்க வேண்டுமென்றும் பிறந்த நாட்டுக்கு சேவை செய்வது கற்றறிவாளரின் கட்டாயக் கடமை என்றும் குறிப்பிட்டார். பிளேட்டோ கற்பவரை தனது ஆரம்ப காலங்களில் வகைப்படுத்தினாலும்கூட இலட்சியவாதச் சிந்தனைகளில் பொதுக்கல்வியே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. நமது நாட்டிலும் பிளேட்டோ கூறியதைப் போன்று மக்கள் வகைப்படுத்தப்படாமலும் ஆளும் வகுப்பினருக்கு மாத்திரம் கல்வி மட்டுப்படுத்தப்படாமலும் அனைவருக்கும் கல்வி எனும் தாரக மந்திரத்துடனான பொதுக்கல்வியாக அரசு வழங்குகின்றது. அனைவருக்கும் பொதுக்கல்வி என சட்ட வரைபில் காணப்பட்டாலும்  கூட பிள்ளைகள்  பள்ளிக்கூடம் செல்லாமை, இடைவிலகல் போன்ற நடைமுறைகள் காணப்படுகின்றன.

இலட்சியவாதத்தில் கல்வியின் அடிப்படை நோக்கம் தன்னை உணர்ந்து கொள்வதுடன் ஆன்மீக நடத்தையை தூண்டுவதாகவும் அமைகின்றது. அவ் அடிப்படை நோக்கத்தினை அடையும் வழிகளாக 2 வகையான நோக்கங்களை இலட்சியவாதம் முன்வைக்கின்றது. அவையாவன:-

தனிநபருடைய நல்வாழ்க்கை

சமூக நன்மை

இவற்றின் அடிப்படையில் கல்வியானது பிள்ளைகளினுடைய உயர்வு, நடத்தையை நோக்கிய ஆழமான அகக்காட்சியை மையப்படுத்திய முன்னெடுப்பு இலட்சியவாதத்தில் காணப்படுகின்றது. நமது தற்கால கல்விச் சிந்தனைகளிலும் இவற்றை அடியொற்றியதாக கல்வி நோக்கங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. 

  தனி மனித வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களான 

  • ஒழுங்கு, 
  • கட்டுப்பாடு, 
  • சீரிய வாழ்க்கைமுறைகளுக்கேற்ப பிள்ளையைத் தயார்படுத்துவதுடன்  சுக வாழ்வுக்கும் ஆயத்தப்படுத்தல், 
  • அறிவைத்தேடும் ஆர்வத்தையும் விமர்சிக்கும் மனப்பான்மையும் விருத்தி செய்தல், 
  • சூழல், காலம், மனோபாவம், திறமை என்பவற்றிற்கேற்ப வேலைவாய்ப்புக்களை வழங்குதல், 
  • அறநெறிக்கேற்பவும் ஒழுக்கநெறிக்கமைவாகவும் ஒழுங்குபடுத்தும் வாழ்க்கையை அளித்தல் 

போன்ற தனிநபருடைய நல்வாழ்க்கை பற்றியும், தனிமனிதனை சமூகப்பொருத்தப்பாடுள்ள முழு மனிதனாக மாற்றுவதுடன் அவனூடாக சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்யவும், கல்வி மூலம் நீதி, நல்லுணர்வு, ஒற்றுமை என்பவற்றை வழங்கி அதனூடாக நாட்டுப்பற்றை ஏற்படுத்தவும், சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலைப் பெற்றுக் கொடுக்கவும், பிறரின் சொத்துக்கள், கருத்துக்கள், வாழ்க்கைமுறைகள், கலாசாரம், பண்பாடு என்பவற்றை மதிக்கப் பழக்கவும் முடிகின்றது. 

இவ்வாறான சமூக நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதனால் இலட்சியவாதச் சிந்தனைகளின் எண்ணக்கருக்கள் நமது சமகால கல்விக்கான எண்ணக்கருக்களுடன் ஒத்திருப்பதைக் காணலாம். 

கல்வி தேசிய ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்க வேண்டும் என்பதுடன், முழுமையான ஆளுமைமிக்க சமூகத்தையும் உருவாக்கும் இலட்சியம் பிளேட்டோவிடம் காணப்பட்டது. இவ் இலட்சியத்தை அடைவதற்கான வழிகள் எமது கல்வி நோக்கங்களிலும் காணப்படுகின்றன. சுயமொழியில் கல்வி கற்றல், ஆங்கிலம் இணைப்பு மொழி, இரண்டாம் மொழியாக சிங்களம் அல்லது தமிழ் கற்றல், நல்லிணக்கச் செயற்பாடுகள்,  நாட்டின் வரலாறுகளை பாடங்களினூடாகக் கற்றல், மத வழிபாட்டுச் செயற்பாடுகளும் கொண்டாட்ட நிகழ்வுகளை அனுஸ்டித்தல், தேசிய நிகழ்வுகள் அனுஸ்டிப்பு போன்றவை அவற்றுட் சிலவாகும்.

எனவே கல்வி மூலமாக கிடைக்கும் மிகப்பெரிய பொக்கிஷம் அறிவு. நாம் பெறும் அறிவே நமது நடத்தையைத் தூண்டி வாழ்க்கையைத் திருத்துகின்றது. கல்வி மூலம் அறிவுப்பயிற்சியை வழங்கி அதனூடாக நன்மையை ஏற்படுத்தலாமென்ற பிளேட்டோவின் சிந்தனையானது ஒழுக்கங்களாக, விழுமியங்களாக நமது கல்வி நோக்கங்களிலும் பரவிக் காணப்படுகின்றது. இன்றைய கல்வியமைப்பில் மாணவர் நடத்தையை திருத்தியமைப்பதற்காக வழிகாட்டலும் ஆலோசனைகளும் விழுமியக்கல்விச் செயற்பாடுகளும் நடைமுறையிலுள்ளன.

பிளேட்டோ கல்வியை பிறப்புறுமையிலிருந்து பெறமுடியாது என்று கூறினாலும்கூட, சோக்கிரட்டீஸ் மனிதனிடம் இயல்பான அறிவு இருப்பதை பரிசோதனை ரீதியில் அவர் வெளிப்படுத்தியதன்மூலம் கல்வி மூலமும் கல்விப்பயிற்சி மூலமும் உலக மக்களில் 95 வீதத்தினரை உயர்வடையச் செய்யலாம் என்று கூறினார். எமது கல்வி வழங்கல் நடைமுறைகளின்போதும் பாடசாலை மட்டக் கணிப்பீட்டில் புள்ளியிடலில் ஆகக்குறைந்த புள்ளியாக 30 இடப்படுவதை நாம் காணலாம். செயற்பாட்டு மதிப்பீட்டு நடைமுறையில் பூஜ்ஜியமிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

தன்னை உணர்பவன் இலட்சியவாதி. தன்னைப் புரிந்து கொண்ட மனிதன் அறத்தின் வெளிப்பாடாகத் தோற்றமளிக்கின்றான். தன்னைப்புரிதலென்பது தன்னிடத்திலுள்ள அதி உச்சமான சக்திகளை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றது. பூரண ஆரோக்கியமுள்ள உடலிலே பூரண ஆரோக்கியமுள்ள மனம் இருக்கின்றது என்பது இலட்சியவாதிகளின் நம்பிக்கை. எனவே ஒரு தனி மனிதனுடைய மனதிற்கும் சூழலுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக கல்வி விளங்க வேண்டும் என்பதே இலட்சியவாதிகளின்; கருத்தாகும். நமது கல்வியமைப்பிலும் இவ் எண்ணக்கரு இழையோடிருப்பதைக் காணலாம். 

கல்வித்திட்டம் பாடவிதானம் கற்பித்தல் முறைகள் அனைத்தையும் உள்ளடக்கிய மெய்யியல் அரசு ஒன்றினைப் பற்றியதே அவரது கல்விச் சிந்தனை எனலாம். 

அரசு கல்விக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் கல்வி அரசுக்கு ஆதரவளித்து ஒன்றையொன்று பூரணப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். எனவே அரசின் குறிக்கோளுக்கும் கல்வியின் குறிக்கோளுக்கும் அன்றே ஒற்றுமை கண்டவர். அரசின் உயர்வில் நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. இச்சிந்தனை நமது கல்வியின் பொது நோக்கங்களிலும் பின்வருமாறு அமைந்துள்ளதைக் காணலாம்.

'தனிநபரினதும் தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தை போஷிக்கக்கூடியதும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடியதுமான ஆக்கப்பணிகளுக்கான கல்வியூட்டுதல் மூலமாக மனிதவள அபிவிருத்திக்கு உதவுதல்'

திட்டமிடப்படாத எந்தச் செயல்களும் வெற்றி பெறுவதில்லை. எனவே கல்வி வழங்கலுக்கும் முறையான கல்வித்திட்டமிடல் அவசியமாகின்றது.

பாடசாலைகளின் ஆதரவுடன் சகல அனுபவங்களையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடிய கலைத்திட்டத்தில் பாடவிதான அலகுகள், குறிக்கோள், பாடவிடய உள்ளடக்கம், கற்பித்தல்முறைகள், மதிப்பீடு போன்ற பல விடயங்கள் உள்ளடங்கிய மொத்தச் செயற்பாடுகளும் அனுபவங்களும் நிறைந்ததாகக் காணப்படும். 

கலைத்திட்டச் சிந்தனைகள் இலட்சியவாதிகளாலும் முன்மொழியப்பட்டுள்ளன. பிளேட்டோவும் தாய்நாட்டிற்காக தம்மை கல்விமூலம் அர்ப்பணிக்கும் தன்மையை வளர்ப்பதற்கு ஒழுங்கான கலைத்திட்டமொன்று அவசியமென்பதை வலியுறுத்தினார். நன்கு திட்டமிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி அரசினால் வழங்கப்பட வேண்டுமென்று அவரின் குடியரசு நூலில் குறிப்பிடுகின்றார்.

தெளிவாகக் கற்பித்தல், சிக்கலின்றி கற்பித்தல், ஆளுமை விருத்திக்குரிய கல்வி, சித்த வலுவை மேம்படுத்தும் அறிகைச் செயற்பாடுகள், பண்பாட்டு மேம்பாடு மானிடவியற் பாடங்களுக்கு முன்னுரிமை தருதல் மனிதரிடத்து உட்பொதிந்துள்ள ஆற்றல்களை வெளிக்கொண்டு வருதல் முதலியவை இலட்சியவாதக் கலைத்திட்டத்திலே வலியுறுத்தப்படுகின்றன.

ஒரு குழந்தையின் பதினேழு வருடங்களுக்கு இக்கல்வி பிரேரிக்கப்பட்டுள்ளது.  முறைசார்கல்வி பதினொரு வயதிலேயே ஆரம்பிக்கின்றது. 6 வயது வரையிலான கல்விப்பொறுப்பு குடும்பத்திற்குரியது. சங்கீதம் உடலுறுப்புக்களை வலிமையுடன் வளர்க்கும் உடற்பயிற்சியே இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது. 

உரமான உடலே உறுதியான கல்விக்கு அவசியம் என்பதற்கேற்ப உடல்நலம் பேணும் உடற்பயிற்சியும் உளநலம் பேணும் இசைப்பயிற்சியுமே ஆரம்ப கலைத்திட்டத்தில் உள்ளடங்கியிருந்தது.

6 வயதின் பின்னரான கல்விப் பொறுப்பை அரசு பொறுப்பேற்க வேண்டுமென பிளேட்டோ கூறுகின்றார். சட்டதிட்டங்களை மதித்து நெறியான அரசிற்கு கீழ்படியும் குடிமகனை உருவாக்குவதே பிளேட்டோவின் கல்விக் குறிக்கோளாகும். ஆரம்பகல்வி கட்டாயமானது. ஆண் பெண் வேறுபாடின்றி சமமான கல்வி கிரேக்க சிந்தனையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

இடைநிலைக்கல்வி

20 – 30 வயது வரை காணப்படும் இப்பாடவிதானத்தில் கணிதமும் விஞ்ஞானமும் முதன்மை பெறுகின்றது. எண்கணிதம், கேத்திர கணிதம், வான சாஸ்திரம், இசை வாதத்திறன் போன்ற பாடங்கள் உள்ளடங்கும். இடைநிலைக்கல்வி உயர்ந்த வளர்ச்சியும் தர்க்கிக்கும் திறனும் ஏற்படுத்தப்படுகின்றது. 

உயர்கல்வி

30 வயதில் தத்துவவியலும் தர்க்கவியலும் உள்ளடக்கிய ஆழ்ந்த சிந்தனைக்கான பயிற்சி வழங்கப்படுகின்றது. ரையாடல்கள், விவாதங்கள், கலந்துரையாடல்கள் ஆகிய திறன்கள் பயிற்றுவிக்கப்படும். கருதுகோள்களைப் பயன்படுத்தி கற்பிக்கப்படும். ஆழ்ந்த தர்க்கவாத அடிப்படையில் உயர்மட்ட கற்பித்தல்முறைகள் மூலம் கல்வி புகட்டப்படும்.

சமூக விளைபொருள் என அழைக்கப்படும் இக்கலைத்திட்டம் இலட்சியவாதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதைப் போன்றே  மனதை சிந்தனைகளினூடாக ஆள்வதன் மூலமாக நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் நமது கல்வி அமைப்பிலும் புலமை சார்ந்த தொழில்சார்ந்த சமூகக் சார்ந்த தனியாள் சார்ந்த குறிக்கோள்களை கொண்டதாக கலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரப்பட்ட பாடத்தலைப்புக்களை பாடநூல்களின் உதவியோடு தழுவி முடித்து வைத்தலும் மாணவர்களை மனப்பாடம் செய்விப்பதும் மரபுவழிக் கலைத்திட்டத்தின் அம்சங்களாகின்றன.

மரபு வழிக்கலைத்திட்டத்தையும் நவீன கலைத்திட்டத்தையும் வேறுபடுத்தும் பண்பு 'கற்றல் வெளிவருகை' அடிப்படையாகக் கொண்டுள்ளது.  மாணவர்கள் எவற்றைக் கற்க  வேண்டும் என்பதும், எவற்றை அடைய வேண்டும் என்பதும் இங்கு குவியப்படுத்துகின்றது. கலைத்திட்டம், கற்பித்தல், கற்றல் ஆகிய மூன்றினதும் இணைப்பு மாணவரின் வெளிப்பாடுகளை ஏற்படுத்துவதற்குரிய அடிப்படை மூலங்களாகின்றன. எனவே மாணவரின் புத்தாக்கங்களை கலை திட்டம் வெளிப்படுத்தாத பட்சத்தில் மாணவர் வெளிப்படுத்துகை வினைத்திறனுடன் அமையாது.

புதிய கலைத்திட்டப் பண்புகள்

  • மாணவரின் தனியாள்   வேறுபாடுகளுக்கேற்ற விதத்தினாலான பரந்த பண்புகள், சமநிலைப்பண்புகள், பொருத்தப்பண்புகள் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும் நெகிழ்ச்சியான கலைத்திட்டம்.
  • மாணவர் பல துறைகளிலும் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கலைத்திட்டம்.
  • கற்றல் - கற்பித்தல், கணிப்பீடு, கணனித் தொழினுட்பம் விரைந்து மாற்றமுறும் சமூக பொருளாதாரச் சூழல், சமூக நோக்கு முதலியவற்றுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய கலைத்திட்டம்.

புதிய கலைத்திட்டத்தின் பரிமாணங்கள்

  • முதலாவது- கலைத்திட்டத்தினூடாக வென்றெடுக்கப்படக்கூடிய இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ள்ன.
  • 2வது 3வது- எந்த அளவுக்கு பாடத்தையும் அறிவையும் விரிவுபடுத்தியும் பரவலாகவும் வழங்க வேண்டும்.
  • 4வது- நீள்முக ஒருங்கிணைப்பும் ( குறித்த ஒரு பாடம் ஒவ்வொரு தர உயர்வுக்கும் ஏற்றவாறு தொடர்புபட்டுச் செல்லல்) குறுங்கிணைப்பும் (குறித்த ஒரு வகுப்பு மட்டத்தில் குறித்த பாடம் ஏனைய பாடங்களுடன் தொடர்பு பட்டுச் செல்லல்) ஆகும். 
  • 6வது- வெவ்வேறு ஆற்றலுள்ள மாணவர்களின் தேவைகளுக்கேற்ப கலைத்திட்டம் தொழிற்படல்
  • 7வது- பொருத்தப்பாடு தனிமனிதர் சமூகம், பொருளாதார இயல்பு, தொழினுட்ப இயல்பு, எதிர்காலத்தேவைகள், பண்பாட்டுத் தேவைகள், அழகியல் சார்ந்த தேவைகள், அரசியல் தேவைகள் என்பவற்றுடன் கலைத்திட்டம் பொருத்தப்பாட்டினை காட்டுகின்றது.
  • தனியாள மேம்பாட்டை வளப்படுத்தவும், தன்னியல் நிறைவை ஏற்படுத்தும் விதமாகவும் கலைத்திட்டம் அமைய வேண்டும். அத்துடன் மீள்கட்டுமானத்தை உருவாக்கக்கூடிய வகையிலும் சமூக நீதியைப் பராமரிக்கும் விதத்திலும் சமூகச்சுரண்டலை இனங்காணும் விதத்திலும் ஏற்புடைய கட்டுமானங்கள் கலைத்திட்டத்திற்கு அவசியமாகின்றன.

  • உடல்விருத்தி, உளவிருத்தி, மனவெழுச்சி விருத்தி, மொழிவிருத்தி, சமூகவிருத்தி, ஒழுக்க விருத்தி ஏற்படும் விதத்தினாலான மாணவரின் ஆளுமைப்பரிமாணங்களை ஏற்படுத்தும் விதத்தினாலான தலைமைத்துவத்தை கலைத்திட்டம் வளர்க்க வேண்டும்

நவீன கலைத்திட்ட ஆக்கத்தில் மாணவர்கள் சுயமாக தொழிற்படக்கூடிய இதய வடிவ பண்புகளும் ஆசிரியரின் துணையுடன் தொழிற்படக்கூடிய இறுவடிவப் பண்புகளும் ஒருங்கே இணைந்திருத்தல் வேண்டும்.

ஒரு செயலை அல்லது காட்சியை புதிய வழியிலும் மாற்று வழியிலும் காண்பதற்குரிய ஏற்பாடுகளை கையாளச் செய்தலே அழகியற்கல்வியின் முன்னெடுப்பாகும். அவற்றை அடியொற்றி அழகையும், அழகுணர்வையும் பங்குபற்றலையும் தூண்டும் பாடங்கள் கலைத்திட்டத்தில் ஒழுங்கமைக்கடுகின்றன. 

 பாடங்களினூடாக நிரந்தரப் பெறுமானமுள்ள அறிவு வழங்கப்பட வேண்டுமென்பதே இலட்சியவாதத்தின் சிந்தனையாகும். மாணவனுக்கு வழங்கப்படுகின்ற செயற்பாடுகள்  அவருடைய ஆன்மீக வாழ்விற்கு பொருத்தமானதாக கலை, கலாசாரம், அறநெறி, வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்ற பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

 விஞ்ஞானம், கணிதம், தொழினுட்பம் போன்ற பாடங்களுக்கு இலட்சியவாதிகள் எதிர்ப்பு காட்டுகின்றார்கள்.  மாணவர்கள் மனிதராக மாறிய பின்னரே இப்பாடங்களைக் கற்க வேண்டும். மாணவர்களுடைய மனவெழுச்சிகள், உடற்செயற்பாடுகள், புத்திக்கூர்மை போன்றவைகள் எல்லாவற்றிற்கும் பொருந்தும் வகையில் கல்வி வழங்கப்பட வேண்டும்.

மரபுவழிக் கலைத்திட்டத்தில் மாணவரின் உள்ளம் கொள்கலனாக கருதப்பட்டு அதற்கேற்ப கற்றற் செயன்முறைகள் இடம்பெற்றன. ஆனால் நவீனத்துவத்தில் மாணவரின் உள்ளம் கட்டுமானம் செய்யும் உள்ளமாகக் கருதப்பட்டு அதற்கேற்றவாறு கலைத்திட்டம் மாற்றம் பெறும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இச்செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்பவர்கள் ஆசிரியர்களாவார்கள். 

ஆசிரியர்கள் பாடசாலை இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் முகாமையாளர்கள். தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாகப் பகிர்வதன் மூலம் சக்திமிக்க நிறுவன கலாசாரத்தை உருவாக்கிக் கொடுக்கும் மானிட சக்தியின் முதன்மையாளர்களான இவ் நல்லாசிரியர்கள் பற்றி இலட்சியவாதச் சிந்தனையாளர்களுள் ஒருவரான சோக்கிரட்டிஸ் கொடுத்த வரைவிலக்கணம் பின்வருமாறு-

'ஆசிரியர் என்பவர் ஞான விளக்குகள.; ஆசிரியர் பொருளுக்காக தம் அறிவை விற்கக்கூடாது. எவர் பணம் கொடுத்துக் கேட்பினும் அறிவை விற்பவர்கள் ஞான விளக்குகள் அல்லர். பொருளின் பொருட்டு அறிவை விற்பவர்கள் அறிவுப் பரத்தைகள் ஆவார்கள்.'

இலட்சியவாத சிந்தனையில் ஆசிரியருடைய நிலைப்பாடு உறுதிவாய்ந்ததாகக் காணப்படுகின்றது. கல்விச் செயற்பாடுகளின் திறவுகோல் ஆசிரியராவார். பிள்ளைகள் கற்பதற்கும் தம்மை விருத்தி செய்து கொள்வதற்கும் ஆசிரியர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கல்வி கற்பதற்கான சிறப்பான சூழலை ஏற்படுத்துவதுடன் பாடவிதானங்களையும் சரியான முறையில் திட்டமிடுபவராகவும் ஆசிரியர் திகழ வேண்டும். ஆசிரியர் தன்னிடமுள்ள அறிவு வளர்ச்சியின் காரணமாக மாணவருடன் அறிவுச்சமர் புரிகின்றார். வேறெந்த தத்துவத்திலும் ஆசிரியர் தொடர்பான உயர்ந்த சிந்தனைகள் காணப்படவில்லை.

ஆசிரியர் ஒரு தோட்டக்காரன் எனும் புரபலின் கருத்தை இலட்சியவாதமும் முன்வைக்கின்றது. ஆசிரியர் தனது நடத்தைகளிலிருந்தே மாணவரிடமிருந்து கௌரவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர வலிந்து அல்ல. தன்னுடைய நடத்தைகளையும்; கவனிக்கும் ஆசிரியர் நிபுணராகவும் அறிவொளியின் இருப்பிடமாகவும் சிறந்த படைப்பாளியாகவும் விளங்குகின்றார். ஆசிரியரின் கற்பித்தல் நடத்தையானது கற்போனின் அடைவு மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 

ஆசிரியரின் கற்பித்தல், போதனை எனும் இரண்டு எண்ணக்கருத்துக்களும் கற்பித்தலோடு ஒன்றிணைந்துள்ளது. ஆசிரியர் என்பவர் மாணவனை வழிப்படுத்துகின்ற இயக்கத்திறனுடைய ஒருவராவார்.

ஆசிரியர் கற்பித்தலுக்குப் பொருத்தமாக பாடத்திட்டத்தை தயார்படுத்தும் அதேவேளை கற்போனை கற்றல் தொடர்பாக எவ்வாறு செயற்பா வைக்கலாமெனவும் திட்டமிடுவது அவசியமாகும்.

சுயவிளக்கத்தை மாணவர் தாமாகவே தொடுப்பதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டியாகவும் மாணவர்கள் தங்கள் அறிவை மேற்பார்வை செய்ய உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆசிரியர்ப்பணி நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. எனவே கற்பித்தலுடன் மாத்திரம் நின்று விடாமல் மாணவரின் சுகாதாரம், உடற்பயிற்சி, மதிய உணவு போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு ஆசிரியர்களுக்குண்டு.

ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்படும்போதே புதிய மாற்றங்களை வெளிப்படுத்தும் அடையாளங்களாகச் செயற்படமுடியும். ஆசிரியர்கள் கல்வி தொடர்பான தொழினுட்பத்தை பயன்படுத்தும்போதே கற்றச் செயன்முறைகள் முழுமை பெறுகின்றன.

ஆசிரியர் விளைதிறன் கொண்டவராக இருக்கும்போதே தனியாள் தொடர்பான தரத்தையும் அது தொடர்பான அடிப்படையையும் மாணவர்களை மகிழ்வாக வைத்திருக்கும் தன்மையையும் கொண்டிருப்பார்கள். கற்றலானது கட்டுருவாக்கச்சிந்தனையைக் கொண்டது. அதன்போது கற்போன் தனது முந்திய

அனுபவங்களோடு புதிய அனுபவங்களையும் இணைத்துக் கொள்வான்.

ஓர் ஆசிரியன் அர்ப்பணிப்புடனான தனது பணியை தன் மனதளவில் உளப்பூர்வமாகச் சிந்தித்து ஆசிரியத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து செயற்பட்டால் மாத்திரமே ஒரு சமூகம் கல்வி மூலமாக விழிப்பு பெறும்.

இலட்சியவாதம் மாணவனை தன்னமைவுள்ள ஓர் ஆன்மீகவாசியாகவே நோக்குகின்றது. உரிய முறைப்படி கல்வி கற்கும்போது அவன் வளர்ச்சியடைகின்றான் என்பதை இலட்சியவாதம் ஏற்கின்றது. ஆசிரியர் மாணவர் இருவரும் ஆன்மீகப் பண்பு பொருந்தியவர்கள் என்பதால் இலட்சியவாதம் இவர்கள் இருவரையும் சமமானவர்கள் எனக் கருதுகின்றது.

வளப்பகிர்வு சீராக இன்மையால் ஆசிரியர்கள் நூல்கள் கருவிகள், சாதனங்கள் என்பவற்றிற்கும் பொறுப்புக்கூற வேண்டிய தேவை எழுகின்றது. ஆசிரியர்கள் தம்முடைய தற்படிமத்தை மேலோங்கச் செய்ய வேண்டும். தமது அறிவாற்றலை உயர்த்தி கற்பித்தலை விடாமுயற்சியுடன் வழங்குவதுடன் தமது ஆளுமைப்பண்புகளையும் தலைமைத்துவப் பண்புகளையும் விருத்தி செய்வதுடன் நேரத்தையும் உச்ச அளவில் பயன்படுத்த  வேண்டும்.

கலைத்திட்டம், கற்றல் தொழினுட்பம், பாடசாலையின் ஒழுங்கமைப்பு, கட்டுமானங்கள் என்பவற்றிற்கிடையே சிக்கலான தொடர்புகளும் இணைப்புக்களும் காணப்படுவதால் அடைவினைகளும் குறைவாகவே காணப்படுகின்றன.

 பாரம்பரிய ஆசிரியத்தில் காணப்பட்ட பல்வேறு செயற்பாடுகள் ஒடுக்கப்பட்டு தற்போது கற்பித்தலில் மட்டும் குவியப்பட்டுள்ள்ன.

இலட்சியவாதக் கலைத்திட்டத்தில் ஆசிரியரது முக்கியத்துவம் அதீதமாக வலியுறுத்தப்படுகின்றது. கற்பித்தலில் நெட்டுருச் செய்யும் முறைக்கு ஒப்பீட்டளவிற் கூடிய முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. தகவல்களை சேர்த்துக் கொள்ளும் திரட்டல் செயன்முறைக்கு முன்னுரிமை தரப்படுகின்றது.

சிந்தனை விருத்தியில் எண்கணிதம் பயனுடையது. கேத்திர கணிதம் உண்மை ஆற்றல் என்பவற்றை வளர்க்கிறது.

உயர்கல்வி அவரளித்த முக்கியத்துவத்தின் தன்மை அக்கடமி எனும் செழுங்கலை நிறுவனத்தின் மூலம் அறியலாம். கேத்திர கணிதம் அறியாதவன் இங்கே நுழையாதிருப்பானாக எனக் கூறியதிலிருந்து கலைக்கும் விஞ்ஞானத்திற்கும் அவரளித்த முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

சமகால விஞ்ஞானக்கல்வியில் விஞ்ஞான முறைகள், விஞ்ஞான கற்பித்தலியல் என்பவற்றுடன் சமூக விஞ்ஞானங்களும் தொடர்பாடல் விஞ்ஞானமும் உள்ளடக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானமும் கணிதமும் வேறுபிரிக்க முடியாதவை

சூழலுடனும் பொருட்களுடனும் கருத்துக்களுடனும் அனுபவங்களுடனும் இடைவினை கொண்டு ஒவ்வொருவரும் அறிவை தமது மூளையில் கட்டுமை செய்வதனை விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே அனைவருக்கும் விஞ்ஞானக்கல்வி என்ற கருத்தாக்கம் அவசியமானது.

சோக்கிரட்டீஸ் உலகின் தலைசிறந்த ஆசிரியர். அவரின் வினாவிடை முறையும் உரையாடல் முறையும் காலத்தால் அழியாத கற்பித்தல் அணுகுமுறையாகத் திகழ்கின்றன. உரையாடல் சிறந்த கல்வியூட்டும் அணுகுமுறையாகவே திகழ்ந்தது. 'ஒவ்வொரு புதிய விடயங்களைப் பற்றி அறியும்போது எனது அறியாமையே எனக்குப் புலனாகின்றது. தனக்கு எதுவுமே தெரியாது என்ற சிந்தனையே அறிவைப் பெற உந்துதலாக அமைகின்றதென எண்ணினார்.

எழுத்து வடிவில் இருக்காத சோக்கிரட்டீஸின் சிந்தனைகளை உரையாடல் வடிவ நூல்களில் பிளேட்டோ தொகுத்து வெளியிட்டமையினால் பிளேட்டோவின் கருத்துக்கள் சோக்கிரட்டீஸின் சிந்தனையின் விரிவாக்கம் எனக் கொள்ளலாம். எனினும் பிளேட்டோ சில இடங்களில் முரண்பட்டுள்ளார்.

கருத்துக்களை மையமாகக் கொண்ட கற்பித்தல்முறைகளை இலட்சியவாதம் முன்வைக்கின்றது. மனித வாழ்க்கையின் இலக்குகளையும் நோக்குகளையும் அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல்முறைகளே இடம்பெற வேண்டுமென்பது இலட்சியவாதிகளின் சிந்தனையாகும். ஆசிரியர்கள் கற்பிப்பதுடன் மாணவர்களின் சுய கற்றலுக்கும் கற்றல் சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்.  பிள்ளைகள் பார்த்தல், கலைகளை நயத்தல் போன்றவைகள்கூட சுய வெளிப்பாடுகளே. பிள்ளைகள் விரும்பிக் கற்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கற்போன் எப்போதும் கற்றலில் ஆர்வம் காட்டக்கூடிய புதியனவற்றைத் தேடும் இயல்புள்ள இயங்குநிலையிலான வகுப்பறையே கற்றலின் உளவியல் அம்சமாகக் காணப்படுகின்றது. ஆசிரியர் மேற்கொள்கின்ற செயன்முறை சார்ந்த செயற்பாடே கற்பித்தலாகும். அதில் ஆசிரியரும் கற்போரும் முறைசார்ந்த தொடர்பாடல் தொழிற்பாட்டிற்கு உள்ளாகின்றனர். இத்தொடர்பாடல் வினைத்திறனுடையதாக இருக்கும்போதே கற்றலும் உயர்ந்த பெறுபேறு உள்ளதாக அமைகின்றது. ஆட்களுக்கிடையிலான வாண்மைத் தொடர்பாக இத்தொடர்பாடல் கருதப்படுகின்றது.

போதனைமுறைமையில் ஏற்படும் சிறு மாற்றம்கூட கற்பித்தலில் பெரும் தாக்கம் செலுத்துகின்றது. குழு முறையினூடாக போதனைக் கற்றல் பயனுறுதி வாய்ந்தது. போதனையை வினைத்திறனுடையதாக மாற்ற வகுப்பறை முகாமைத்துவம் அவசியமாகின்றது. எனவே பொருத்தமான போதனை நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும்.  மாணவரை சிந்திக்க வைப்பதற்கு பிரச்சினை தீர்த்தல் நுட்பம் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. போதனையானது குறித்த இலக்கினை அடையபட பெறுவதாக இருக்க வேண்டும்.

உரையாடல் முறையினாலான போதனைமுறை பெரிதும் கடைப்பிடித்தார். நேரடி அனுபவம் மூலம் பெறும் அறிவே உண்மை அறிவு என்பது இவரது கருத்தாகும். தர்க்கரீதியில் சிந்தித்துணரும் பகுத்தறிவு பெற இளைஞரைப் பயிற்றுவிப்பதே இவர் அவாவாக இருந்தது. எனவே பிளேட்டோவின் கருத்திலுதித்த மக்களாட்சிக் குடியரசில் கல்விமூலம் நாட்டுப்பற்றை உருவாக்கி உண்மை நேர்மை அழகு என்னும் பண்புகளை வளர்த்து சீரிய சமுதாய அமைப்பை உருவாக்கும் தன்மை உடையதாக காணப்படுகின்றது.

இலட்சியவாதமானது தனி மனிதனூடாக சமுதாயக் கல்வி வழங்கலுக்கு மாணவரைத் தயார்படுத்துகின்றது. ஆன்மீகம் சார்ந்து வழங்கப்படுகின்ற கல்வியின் மூலமாக சமுதாய நன்மை பெற மாணவன் பயிற்றுவிக்கப்படுகின்றான். எனவே அதனையொற்றியதாக தற்காலத்தில் வழங்கப்படும் சமுகமயமாக்கலை ஏற்படுத்தக்கூடிய குழு முறையினூடாக போதனைக் கற்றல் பயனுறுதி வாய்ந்தது. போதனையை வினைத்திறனுடையதாக மாற்ற வகுப்பறை முகாமைத்துவம் அவசியமாகின்றது. போதனைமுறைமையில் ஏற்படும் சிறு மாற்றம்கூட கற்பித்தலில் பெரும் தாக்கம் செலுத்துகின்றது. போதனையானது குறித்த இலக்கினை அடையப் பெறுவதாக இருக்க வேண்டும். எனவே பொருத்தமான போதனை நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதே கற்போன் எப்போதும் கற்றலில் ஆர்வம் காட்டக்கூடிய புதியனவற்றைத் தேடும் இயல்புள்ள இயங்குநிலையைப் பெறுவான். 

சமகால சிந்தனையில் பாடசாலை தொழிற்சாலைக்கு ஒப்பிடப்படுகின்றது. பிள்ளைகளின் நடத்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் கல்விக்கான திட்டமிடுதலும் அவற்றினூடாக கற்றச்செயன்முறைகளின் திட்டமிடுதலும் நடைபெறுகின்றன. ஆசிரியர்கள் தகவல்களை வழங்குபவர்களாகச் செயற்படுவதனால் மாணவர்கள் தமது அறிவைத் தகவல்களாகவே பெறுகின்றனர். இதனால் இவர்கள் பெரும் அறிவு மட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் இலட்சியவாதத்தில் கற்போன் பெறும் அறிவுக்கான சந்தர்ப்பம் பரந்ததாகக் காணப்படுகின்றது. கற்பித்தலின் இறுதி இலக்கு சுதந்திரமானதும் சுய இலக்குள்ள கற்போனை உருவாக்குவதாகும். கற்போன் எப்படிக் கற்க வேண்டுமென்ற முறை கற்பித்தலில் அவசியம். எனினும் இது கற்போனுக்கு அறிமுகப்படுத்தப்படாதது இலட்சியவாதத்தில் காணப்படும் பெருங் குறையாகும்.

போதனை என்பது தான் திட்டமிட்ட விடயத்தை ஒழுங்காக்கி கற்போனுக்கு முன்வைப்பதாகும். பாடத்தை திட்டமிடும்போதே இம்முன்வைப்பு சிறப்பானதாக மாறுகின்றது. அத்துடன் வகுப்பறைச்சூழலை முன்கூட்டியே திட்டமிட்டு ஒழுங்காக்கி கற்பிக்கும்போது கற்றலின் விளைவு பயனுறுதியாகின்றது. ஊக்கல் உத்திகள் கற்போனை கற்கத் தூண்டும். எனவே ஆசிரியர் அதனை அறிந்து பொருத்தமான ஊக்கல் உத்திகளைப் பயன்படுத்தும்போது போதனைக் கவின்நிலை சிறப்பானதாக மாறும். பாராட்டு ஊக்கல் போன்ற முறைகள் இலட்சியவாதத்தில் பெரிதாகக் காணப்படவில்லை.

தற்காலத்தில் கல்வித் தொடர்பாடல் நுட்பங்கள்இ ;செயற்றிட்ட நுட்பங்கள் அரங்குவழிக்கற்பித்தல்இ நுண்கற்பித்தலியல் (விரிவுரை) இணைக்குழுக் கற்பித்தல் நுட்பங்கள் ஒப்படை நுட்பம் வினா நுட்பம் போன்ற பல்வேறு நுட்பங்கள் மூலம் மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகின்றது. அத்துடன் மாணவரை சிந்திக்க வைப்பதற்கு பிரச்சினை தீர்த்தல் நுட்பம் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. 

ஒரு செயலை அல்லது காட்சியை புதிய வழியிலும் மாற்று வழியிலும் காண்பதற்குரிய ஏற்பாடுகளை கையாளச் செய்தலே அழகியற்கல்வியின் முன்னெடுப்பாகும். அவற்றை அடியொற்றி அழகையும் அழகுணர்வையும் பங்குபற்றலையும் தூண்டும் பாடங்கள் கலைத்திட்டத்தில் ஒழுங்கமைக்கப்படுகின்றன. இசைஇ ஓவியமஇ; நடனம் நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கும் நுண்கலையே பிளேட்டோவால் இசைக்கல்வி எனக்கூறப்படுகின்றது. கல்வியை சமநிலைப்படுத்துவதற்கு இவ் இசைக்கல்வி அவசியமென வலியுறுத்தப்படுகின்றது. இசையும் இலக்கியங்களும் மனத்தை வளப்படுவதற்கு துணை செய்யக்கூடியது. இசைப்பயிற்சியே முதன்மையானது. ஏனெனில் அது ஆன்ம வளர்ச்சிக்குத் துணை போகும். எனவேதான் சங்கீதம் ஆன்ம வளர்ச்சிக்கும் உடற்பயிற்சி உடல்வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் கற்பிக்கப்பட வேண்டுமென பிளேட்டோ கூறினார். இதனடிப்படையில் இசையும் அசைவும் இணைந்த உடற் தொழிற்பாடுகளை உள்ளடக்கிய உடல் வளர்ச்சி பற்றிய கருத்தூன்றிய கல்வி இலட்சியவாதத் தத்துவத்தின் ஆரம்பக்கல்வி நிலைக் கலைத்திட்டத்தில்; காணப்படுகின்றது. தற்கால கலைத்திட்டத்திலும் அழகியற்கல்வி பாடம் மாணவர்களுக்குப் போதிக்கப்படுகின்றது.

கற்பித்தல் சாதனங்கள்

புலன்கள் வாயிலாக சூழலில் பெறும் அனுபவம் தருகின்ற அறிவானது சிக்கார்ந்த அமைப்பைக் கொண்ட அறிவுத் தொகுதியை கட்டியெழுப்புகின்றது.- என அரிஸ்ரோட்டில் கூறியுள்ளார். எனவே கற்றல் சாதனங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும்போது அனுபவம் கிடைப்பதனால் மாணவர் கற்றலில் ஆர்வம் காட்டுவார். புரந்த அளவில் நோக்குபவராதலால் சமூகம் தொடர்பான கற்றலிலும் ஆர்வம் காட்டுவார். எனவே கற்பித்தல் உபகரணப் பயன்பாடு இலட்சியவாதச் சிந்தனையில் காணப்பட்டதைப் போன்றே தற்காலத்திலும் கல்விச்செயன்முறைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

ஒழுக்கக்கல்வி

இலட்சியவாதத்தில் ஒழுக்கம் தொடர்பான சிந்தனைகள் வலியுறுத்தப்படுகின்றன. ஒழுக்கமானது புகழ்ச்சி, தண்டனை எனும் வெளிக்கட்டுப்பாடுகளை விட அகக்கட்டுப்பாடு மூலமே சிறந்த ஒழுக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பது இலட்சியவாதிகளின் கருத்தாகும். உலகின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அறியாமையாகும். அறியாமையைக் களைவதே உண்மையான கல்வி. 'அறிதொறும் அறிதொறும் என் அறியாமை தோன்றும்' எனச் சோக்கிரட்டீஸ் கூறியது உண்மையை நோக்கி அழைத்துச் செல்லும் நிலையாகும். ஒழுக்கத்தின் உச்சநிலையே அறமாகும். அறம் பற்றிய உள்ளுணர்வினை கல்வி மூலமாக வழங்க முடியும். இப்படித்தான் வாழ வேண்டுமென்ற குறிக்கோளை அறத்தை தழுவியதாக ஏற்படுத்த முடியும். உள்ளத்தினுள் காணப்படும் நேர்மையை எச்சந்தர்ப்பத்திலும் இழக்கக்கூடாது என்ற கருத்தே தலைசிறந்த கல்வி எண்ணமாகும். இதன் மூலமாக மன ஒழுக்கம் வளர்க்கப்படுகின்றது. ஒழுக்க வளர்ச்சியானது இறைபக்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை முக்கியப்படுத்தப்படுகின்றன இலட்சியவாதக் கருத்துக்களின் செல்வாக்கு தற்கால கல்வி நடைமுறைகளிலும் காணப்படுகின்றது. சமயக்கல்வி விழுமியக்கல்வி வாயிலாக ஒழுக்கக்கல்வியின் முக்கியத்துவம் அண்மைக்காலமாக கல்விச்செயற்பாடுகளில் அதிக அளவில் வலியுறுத்தப்பட்டாலும்கூட நடைமுறையி;ல் பாடசாலைகளில் பாடங்கள் கற்பித்தலில் செலுத்தப்படும் கவனம் ஒழுக்க மேம்பாட்டில் அதிகம் காட்டப்படுவதில்லை என்றே கூறலாம்.

சமூகமேம்பாடு ஓர் ஆசிரியன் அர்ப்பணிப்புடனான தனது பணியை தன் மனதளவில் உளப்பூர்வமாகச் சிந்தித்து ஆசிரியத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து செயற்பட்டால் மாத்திரமே ஒரு சமூகம் கல்வி மூலமாக விழிப்பு பெறுகின்றதெனலாம்.

கதை சொல்லுதல் பிளேட்டோவின் பிரதான கற்பித்தல்முறை ஆகும். மெய்ப்பொருள் சார்ந்த கதைகளாக அவை சொல்லப்பட வேண்டுமென்றார். ஏனெனில் பிள்ளைகள் பெரியவர்களைப் பின்பற்றுவதால் அவர்களின் தவறான செயல்களால் பிள்ளையின் ஆளுமை தாக்கத்திற்கு உள்ளாகும். அது அவர்களின் நடத்தையையும் பாதிப்பதால் சமூகம் நெறிபிறழ்வானவர்களையும் ஆரோக்கியமற்றவர்களையுமே சந்திக்கின்றது. எனவே சமூகத்தின் நுழைவாயிலாகிய பாடசாலையில் கற்பிக்கப்படும் கல்வியால் ஒரு சமூகத்தினை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவேர் அச்சமூகத்தினை உயர்நிலை பெறச் செய்யவோ முடிகின்றது.

மெய்யியலில் தேர்ச்சி பெற்ற கல்வி மெஞ்ஞானி ஒருவரை ஆட்சியாளராக உருவாக்குவதன் மூலமாக ஒரு நாட்டின் சுபீட்சம் அமையும் என பிளேட்டோ நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் காணவிருந்த இலட்சிய அரசே குடியரசு. ஒரு நாட்டிற்கு தொழினுட்பவியலாளர்கள் உழைக்கும் திறனாளிகள் நாட்டின் வளத்தை உற்பத்தி செய்யும் அடிப்படைத்திறனை வாய்ந்த சமூகம் ஒன்று கல்வியினால் நெறிப்படுத்த வேண்டும் என அவர் எண்ணினார்.  நியாயமான மக்கள் நலன் பேணும்  அரசு ஒன்று மெய்யியல் அறிவு படைத்த ஆட்சியாளரை உருவாக்குதன் மூலமே நிறைவு செய்ய முடியும் என்பது அவர் சிந்தனை. 

'தனிநபரினதும் தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தை போஷிக்கக்கூடியதும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடியதுமான ஆக்கப்பணிகளுக்கான கல்வியூட்டுதல் மூலமாக மனிதவள அபிவிருத்திக்கு உதவுதல்' எனும் அவரின் சிந்தனையொற்றிய தேசம் பற்றிய எண்ணக்கருக்கள் தற்கால கல்விச்சிந்தனையிலும் காணப்படுகின்றது.

இலட்சியவாதம் சமூகம் சார்ந்தது. இலட்சியவாதிகளின் செயற்பாடு பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைகின்றது.  இலட்சியவாதமானது தனிக்குழந்தையினூடாக சமூகத்தை நோக்குகின்றது. ஒரு சமூகம் தன்னை வெளிப்படுத்தும் ஊடகமே பாடசாலையாகும். பாடசாலைச்சூழலானது சமூகத்தின் மனவெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதுடன் பிள்ளைகளின் அறநெறி சார்ந்த, ஆன்மீகம் சார்ந்த விருத்தியில் செல்வாக்குச் செலுத்துவதாக அமைய வேண்டும். இதற்காக பாடசாலையானது தனக்கென பொருத்தமான பண்புகளையும் கலாசாரங்களையும் கட்டியெழுப்ப வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம், நீதிஇ, சுதந்திரம் இவற்றைப் பண்புகளாக கொண்ட பரிபூரணமான சமூகத்தை உருவாக்குவது இலட்சியவாதிகளின் இலக்காகும். வேற்றுமையுடைய சமுதாயத்தில் ஆன்மீகப் பண்புகளை உருவாக்குவது ஜனநாயகமாகும். அதற்கேற்ற வகையில் கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது இலட்சியவாதிகளின் கருத்தாகும். இவற்றை அடியொற்றியதாகவே நமது கல்வியின் பொது நோக்கங்களிலும் சமூகம்சார் தேசம்சார் எண்ணக்கருக்கள் பொது நோக்கங்களாக வகைப்படுத்தப்பட்டு பாடவிதானங்களினூடாகச் செயற்படுத்தப்படுகின்றன.

மேற்கூறப்பட்டவாறு இலட்சியவாத சிந்தனைகள் இன்றைய கல்வி அமைப்போடு பொருந்தி நின்றாலும்கூட, இலட்சியவாதச் சிந்தனைகள் விஞ்ஞானம் தொழினுட்பத்திற்கு முக்கியத்துவம் தரப்படாமை, ஆசிரியரை அதீதமாக மையப்படுத்தல், ஆதர்ஸமான இலக்குகள் சிறப்புத் தேர்ச்சியை வலியுறுத்தாது அகன்ற கற்றற்பரப்பை முன்னெடுத்தல் போன்ற கலைத்திட்டத்தின் மட்டுப்பாடுகளால் சற்று பலமிழந்து காணப்படுகின்றது. ஆயினும் உலக அறிவுப் பரப்பில் தொடர்ந்து நீடித்து வரும் அறிகை விசையாக அமைந்துள்ள இலட்சியவாதம் பற்றிய அறிவு எமது கல்வி பற்றிய கருத்தூண்டலில் செல்வாக்குச் செலுத்தி நிற்கின்றதெனலாம்.

கல்வி முதுமாணி கற்கைக்காக எழுதிய கட்டுரை

ஜன்ஸி கபூர் - 20.04.2021

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!